ஜூன் 30, 2010

கால் சென்டர் V

கால் சென்டரின் அமைப்பை பற்றி இந்தப் பதிவில்  பார்ப்போம். கடைநிலையில் இருந்து தொடங்குவோம் .

L1 ஏஜெண்ட்ஸ்:

 வரும் அழைப்புகளை ஏற்று அந்த வாடிக்கையாளரின் குறையை நிவர்த்தி செய்வதுதான் இவர்களின் முக்கியப் பணி. என்ன பேசுகிறார்கள், வாடிக்கையாளரின் விவரம், அவர்களின் குறை என்ன அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள் போன்றவற்றை அதற்கான  மென்பொருளில் பதிந்து வைக்க வேண்டும். இந்த வேலையையும்  அவர்கள் பேசும்பொழுதே முடிக்க வேண்டும். தங்களால் முடியாத பொழுது அந்த அழைப்பை அடுத்த கட்ட ஏஜெண்ட்ஸ்க்கு மாற்ற வேண்டும். அல்லது அவர்களின் உதவி கொண்டு அந்த வாடிக்கையாளரின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.

 இவர்களுக்கு எந்த மாதிரி அழைப்புகள் வரும் ,அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நாலேஜ் பேங்க் உண்டு. அதில் குறிப்பிட்டபடி இவர்கள் செயல்படுவர். சில சமயம் ஒரு குறிப்பிட பிரச்சனை பற்றி அதில் எந்த தகவலும் இல்லை என்றால் கூகிள் உதவியோ அல்லது அடுத்த கட்டஏஜெண்ட்ஸ் உதவியோ நாடலாம். ஆனால், கூகுளில் வரும் யோசனைகள் சரியாக  இருக்குமா என்று உறுதி படுத்தி கொள்ளவேண்டும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம்.

L2 ஏஜெண்ட்ஸ்:

  முதல்கட்ட ஏஜெண்ட்ஸ்க்கு உதவி புரிவதே இவர்களின் முக்கிய வேலை. ஒரு குழுவில் இரண்டு L2 ஏஜெண்ட்ஸ் இருப்பார்கள்(அணியில் உள்ள முதல்கட்ட ஏஜெண்ட்ஸ் எண்ணிகையை பொருத்து மாறுபடும் ) .L1 ஏஜெண்ட்ஸ் தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்ப்பதும் , அவர்களுக்கு உதவி செய்வதுமே இவர்களது முக்கியப் பணி. இது மட்டுமன்றி, தங்களை அழைத்த வாடிக்கையாளர்களை திரும்ப அழைத்து அவர்களுடைய பிரச்சனை சரியாகிவிட்டதா என்று சரி பார்க்க வேண்டும். பல சமயங்களில் வாடிக்கையாளர்கள் கோபப் படும்பொழுது அவர்களை சமாளிக்கும் பொறுப்பு இவர்களுடையதே.

முன்பு குறிப்பிட்ட வாடிக்கையாளார் திருப்தி குறியீட்டு எண் சதவீதம் குறையும் பொழுது அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது இவர்களே. அந்த சமயங்களில் இவர்கள் அதிக நேரம் வேலை செய்து தீர்க்கப் படாத பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

குழுத் தலைவர் (Team Leader)

 இவருடைய முழு வேலை, இவருக்கு கீழ் உள்ள குழுவை நிர்வகிப்பது. பொதுவாக ஒரு குழுவுக்கு பத்து முதல் பதினைந்து பேர் வரை இருப்பார்கள். அவர்களுடைய தினசரி வேலைத் திறனை கண்காணிப்பது மற்றும் அவர்கள் வேலை செய்யும் விதத்தில் ஏதேனும் குறை இருப்பின், எதனால் அவர்கள் இவ்வாறு இருகிறார்கள் என்று கண்டறிந்து அதை சரி செய்வது, தினசரி ரிப்போர்ட் அனுப்புவது போன்றவை இவர்களுடைய பணி.

மேலும், இவர்கள் கீழ் வேலை செய்பவர்களின் வருடாந்திர அப்ரைசல் (appraisal) செய்ய வேண்டியது இவர்களின் முக்கிய பணி. இந்த இடத்தில்தான் இவர்களுக்கு அதிக பிரச்சனை வரும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட அளவுக்கு மேல் சம்பள உயர்வு தரவேண்டாம் என்று மேனஜ்மென்ட் கூறி இருப்பார்கள். இவர்கள் அதை கடைபிடிதுதன் ஆக வேண்டும். இதனால், இவரின் கீழ் உள்ளவர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும்.  அந்த சமயங்களில் இவர்களின் நிலை மத்தளத்திற்கு இரண்டு புறமும் இடி போன்றதாகும்.

இவருக்கு மேல் டீம் மேனஜர் இருப்பார், ஒரு இரண்டு அல்லது மூன்று டீம் லீடர்கள் இவரின் கீழ் வருவர். இவருக்கு மேல் ப்ராஜெக்ட்  மேனஜேர் இருப்பார். இதுதான் ஒரு கால் சென்டரின் அமைப்பு. இது மட்டும் அல்லது, க்வாலிட்டி டீம் , ஆபரேசன் டீம் இவையும் உண்டு. க்வாலிட்டி டீம் பற்றி ஏற்கனவே ஓரளவு பார்த்து இருக்கிறோம்.

ஒரு நாளைக்கு எத்தனை பேர் பணியாற்ற வேண்டும், யார் யாருக்கு வாரந்திர விடுப்புத் தரலாம் போன்றவை ஆபரேசன் டீம் செய்ய வேண்டிய பணிகள். பொதுவாக, வரும் அழைப்புகளில் 90% மேல் ஏற்கப்படவேண்டும். அதற்கு கீழ் போகும் பொழுது இவர்களுக்கு பிரச்சனை. எனவே, இவர்கள் எப்பொழுதும் டென்சனில் இருக்கும் நபர்கள். ஏஜெண்ட்ஸ் எடுக்கும் இடைவேளைகளை குறைப்பதும் இவர்களே.


With Love LK

ஜூன் 29, 2010

காஞ்சி - II

நாங்கள் கிளம்பும் சமயம் ஒரு முதியவர் என்னை அழைத்தார். பார்ப்பதற்கு ஒரு அறுபது வயதை தாண்டியவர் போல் தென்பட்டார். நெற்றி நிறைய திருநீறும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் அணிந்து பார்பவர்கள் வணங்கும் வண்ணம் இருந்தார்.

நான் அருகில் சென்றவுடன், என் குழந்தையை அழைத்து வரசொன்னார். திவ்யா வந்தவுடன் அவள் கையில், ஸ்ரீலட்சுமி உருவமும் தாமரையும் பொறித்த ஒரு சிறு தங்கக் காசை கொடுத்து ஆசிர்வதித்தார். எதிர்பாராமல் நடந்த இச்சம்பவம் என் பெற்றோருக்கு மகிழ்ச்சியை (எங்களுக்கும்தான்)  அளித்தது.

ஒரு வழியாக  சென்னைக்கு கிளம்ப பேருந்து நிலையம் வந்தோம்.அப்ப மணி இரண்டை தாண்டி விட்டது. எனவே எல்லோரும் பழச்சாறு குடித்துவிட்டு , சென்னை சென்று உணவருந்த முடிவு செய்தோம். சென்னையும் வந்து சேர்ந்தோம்.எப்பொழுதும் காஞ்சி சென்று திரும்பும்பொழுது மிகக் கடினமாக இருக்கும். பேருந்து கிடைப்பதில் தாமதம்
ஆகும். அன்று எல்லாம் நல்லபடியாக ஆனதே என்று நினைத்தோம்.

 ஒரு நான்கரை மணி அளவில். கோயம்பேட்டில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து நூறடி ரோட்டில் SRM university அருகே இறங்கவும், கனமழை துவங்கவும் சரியாக இருந்தது.வீட்டருகே வந்தும், வீட்டிற்க்கு செல்ல இயலாமல் மாட்டிக் கொண்டோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், அங்கிருந்த பள்ளி ஒன்றில் நின்று கொண்டிருந்தோம் . இதில் வேறு, அந்த பள்ளி அருகே இருந்த ட்ரான்ஸ்பார்மர் தீடிர் என்று மத்தாப்பு மழை பொழிந்தது. ஒரு பயத்துடனே அங்கு நின்று கொண்டிருந்தோம்.

ஆறு மணி அளவில் மழை நின்றவுடன் ,முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து வீடு திரும்பினோம். மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் விரைவில் சந்திக்கிறேன்

 With Love LK

ஜூன் 28, 2010

காஞ்சி


கடந்த  வெள்ளியன்று   எனது பெற்றோர் மற்றும் எனது தந்தையுடன் எங்கள் கடையில் இருப்பவர் குடும்பத்துடன்  சென்னை வந்திருந்தனர். எனது தந்தை அம்பத்தூரில் இருக்கும் ஒரு ஹோமியோ மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதால் மாதம் ஒரு முறை வருவார். இந்த முறை வெள்ளி சனியாக அமைந்ததால், சனியன்று காஞ்சி செல்லலாம் என்று வெள்ளி இரவு முடிவு செய்தோம். சனி இரவே அவர்கள் சேலம் திரும்ப வேண்டி இருந்தது. எனவே மதியம் காஞ்சியில் இருந்து திரும்பினால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து சனி காலை ஆறு மணிக்கு கிளம்பினோம்.

முதலில் காமாட்சி அம்மனையும் பின் ஈஸ்வரனை தரிசித்து நேரம் இருப்பின் மற்ற கோவில்களுக்கு செல்லலாம் என்பது பிளான்.  சென்னையில் இருந்து கிளம்பி ஸ்ரீபெரும்புதூரை தாண்டும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீபெரும்புதூரை கடந்தப்பின் வழியில் ஒரு விபத்து. லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனால் முக்கால் மணி நேரம் தாமதமாக காஞ்சி சென்றடைந்தோம்.

அப்பொழுதே ஒன்பது மணி ஆகிவிட்டது. எனவே காலை உணவை முடிப்போம் என்று ஒரு ஓட்டலில் நுழைந்தோம். ஏன்டா போனோம்னு ஆகிடுச்சி. அவங்க கொடுத்த வடைய வச்சி ஒரு போராட்டத்தை கலைக்கலாம். அவ்வளவு அருமை . நம்ம தங்கமணியோட இட்லியே நல்லா இருக்கும்னு நினைக்கற அளவுக்கு மோசம். எதோ சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டு கிளம்பினோம். அந்த ஓட்டல்ல உருப்படியான ஒரு விஷயம் பெண்களுக்கு கொடுத்து இருந்த இட ஒதுக்கீடு. கல்லா பெட்டி தவிர மற்ற இடங்கள் முழுக்க பெண்கள்தான்.

ஏற்கனவே முடிவு பண்ண மாதிரி, முதலில் அம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கு எங்களை வரவேற்க கணபதியார் காத்திருந்தார். எங்களை கண்டவுடன் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

அவருக்கு இரண்டு வாழைபழங்களை குடுத்து விட்டு அங்கிருந்த அம்மன் சந்நிதி நோக்கி சென்றோம். இந்த கணபதியார் மிக குறும்புக்காரர். கோவிலுக்கு நுழைவோர் அவரை கண்டுக்கொள்ளாமல் சென்றால், தன் துதிக்கை மூலம் அவர்களை இழுத்து அவரை பார்க்க செய்துவிடுவார்.

அம்மன் சந்நிதியில் வழக்கம் போல் கூட்டம் அதிகம். இங்கு சிறப்பு தரிசனம் இல்லை. (இப்பொழுது இல்லை முன்பு இருந்ததாக எனக்கு நினவு இல்லை ). எனவே வரிசையில் அனைவருடன் இணைந்து மெதுவாக சென்றோம். சரியாக அம்மனை தரிசிக்கும் வேலையில் , மின்வெட்டு. அதனால், சாதாரண விளக்கு ஒளியில் அம்மன் முகம் ஜொலிக்க ஆனந்த தரிசனம். அன்று என்னவோ , மக்களை விரட்டும் ஆட்கள் அங்கு இல்லை. எனவே நின்று நிதானமாக ஒரு ஐந்து நிமிடம்  தரிசித்தோம். பின்பு வரிசையில்  இருந்து அகன்று, அம்மன் சந்நிதி எதிரே இருக்கும், மண்டபத்தில் இருந்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் தரிசனம். பின்பு அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் வெளியே வந்தோம். தங்க விக்ரகமாக காமாட்சி இருந்ததை சொல்லப்படும் பங்காரு காமாட்சி சந்நிதியும்  பார்த்து கிளம்பும் தருணத்தில், திவ்யா மீண்டும் யானை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

கோவிலின் வெளிப் பிரகாரத்தில் யானைகள் இருக்கும் கொட்டடிக்கு சென்றோம். அப்பொழுது யானையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். எங்களை கண்ட மகிழ்ச்சியில் ஒரு கணேசர் பாதம் தூக்கி ஆடத் துவங்கி விட்டார். உச்சி வெயில் கால்களை பதம் பார்க்கத் துவங்கியதால், அங்கிருந்து ஒரே ஓட்டமாக கோவிலுக்கு வெளியில் வந்தோம். அப்பொழுதே மணி நடுப்பகலை எட்ட அரைமணிநேரம் இருந்தது. காஞ்சியில் உச்சிவேலைக்கு பிறகு கோவில்கள் சாத்தப்படும். எனவே அங்கிருந்து கிளம்பி ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தோம்.

எப்பொழுதும் அம்மன் கோவிலில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு கூட்டம் குறைவாக இருக்கும். அன்றும் அப்படியே. இங்கும் நல்ல தரிசனம். பின்பு இந்தக் கோவிலின் புகழ்பெற்ற மாவடியை வலம் வந்து கிளம்பினோம். அப்பொழுது மணி பன்னிரண்டாகி விட்டது. எனவே அதற்கு மேல் எந்த கோவிலையும் பார்க்க இயலாது.

பின், காஞ்சி சங்கரமடம் சென்றுவிட்டுக் கிளம்பலாம் என்று அங்கு சென்றோம். நாங்கள் அங்கு செல்லவும், சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடியும் நேரமும் சரியாக இருந்தது. எனவே சிறிது நேரம் அங்கு காத்திருந்து பிரசாதம் பெற்றோம்.

கிளம்பும் தருவாயில் அங்கிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார்.

-தொடரும்
With Love LK

ஜூன் 25, 2010

கால் சென்டர் IV

விதூஷ் அவர்கள் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களின்  விடுமுறைகளை பற்றி கேட்டிருந்தார். அதை பற்றி இன்று பார்ப்போம்.

பொதுவா இந்தியாவில், அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு நிறைய விடுமுறைகள் உண்டு. விடுப்பு எடுக்கவேண்டும் என்றாலும், அதிலும் பல வகை உண்டு, உதாரணமா, கேசுவல் விடுப்பு , சிக் (sick) விடுப்பு என்று உண்டு. தனியார் துறைகளிலும் இத்தகைய விடுப்புகள் உண்டு. ஆனால் கால் சென்டர்களில் இத்தகைய பிரிவுகள் இல்லை. இருப்பது ஒரே வகைதான், கேசுவல் விடுப்பு மட்டுமே. வருடத்திற்கு இத்தனை நாள் என்று உண்டு. அதற்கு மேல் எடுத்தால் அந்த நாளுக்கு சம்பளம் இல்லை.


அடுத்து வார விடுமுறைகள். மக்களிடம் உள்ள எண்ணம் என்றால், கால் சென்டர்கள் வார இறுதியில் செயல்படுவது இல்லை. அது தவறு. இது அனைத்து கால் சென்டர்களுக்கும் பொருந்தி வராது. நுகர்வோருக்கு சேவை அளிக்கும் அத்தனை கால் செண்டர்களும் வார இறுதியில் மிக பரபரப்பாக இருக்கும். அன்று வேலை அதிகமாக இருக்கும். கம்பெனிகளுக்கு (corporate support) சேவை அளிக்கும் கால் சென்டர்களுக்கு மட்டுமே வர இறுதி விடுமுறை சாத்தியம்.

வாரம் இரண்டு நாட்கள் விடுப்பு என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஒரு வாரம் வெள்ளி , சனி இருக்கும் பிறகு திங்கள் செவ்வாய் என மாறும். எனவே கால் சென்டரில் வேலை செய்பவர்கள் வார இறுதியில் என்ஜாய் செய்கின்றனர் என்று எண்ணினால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.

சில சமயம், இந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதும் மாறும். பொதுவாக டிசம்பர் ,ஜனவரி மாதங்களில் அதிக அழைப்புகள் இருக்கும். காரணம், வெளிநாடுகளில் அப்பொழுது விடுமுறை அதிகம். எனவே இதற்காக விடுமுறைகளில் கைவைப்பார், வாரம் ஒரு நாள் விடுமுறை என மாற்றுவர் . ஒரு முறை, நான் மாதம் முழுதும் விடுமுறை இல்லாமல் உழைத்தேன்.முடியாது என்று சொன்னால் வெளியே போ என்று சொல்லி விடுவர். எனவே வேறு வழி இல்லை.

அடுத்து பொது விடுமுறைகள்.அனைத்து நிறுவனங்களும் அவர்கள் நிறுவனத்தின் பொது விடுமுறைகள் தினத்தை அறிவிக்க வேண்டும். இது சட்டம். எனவே இவர்களும் அறிவித்து இருப்பார். ஆனால், அந்த தினங்களில் விடுப்பு கிடைக்காது. அதற்கு பதில் ஒரு தினத்திற்க்கான சம்பளமோ இல்லை அன்று வேலை பார்த்ததற்காக வேறு நாட்களில் விடுப்போ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக பண்டிகை தினங்களில் விடுமுறை என்பது அணிக்கு அணி மாறுபடும். அந்த அணித் தலைவர் அனுமதித்தால் ஒருவரோ அல்ல இருவரோ விடுமுறை எடுக்க முடியும். வருடம் முழுவதும் உழைத்துத்தான் ஆக வேண்டும். பண்டிகையாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டும். வேறு வழி இல்லை.

அடுத்து பேறு கால விடுமுறை. அதை பற்றி அனந்யா அவர்கள் பின்னூட்டத்தில் மிக விரிவாக எழுதி இருந்தார். அதை அப்படியே இங்கு போடுகிறேன்.

"அன்பு விதூஷ், ஆமாம், என்னுடைய ப்ராஸஸ் ட்ரெயினர் சவிதா, கர்ப்பமா இருந்தபோது தான் எங்களுக்கு பயிற்சி எடுத்தாங்க. அப்புறம் அவங்க டெலிவரி முடிஞ்சு வந்து வேலையை தொடர்ந்தாங்க. அது பெர்ஃபாமன்ஸை பொறுத்த விஷயம்ன்னாலும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுறது!நீங்க சொல்ற மாதிரி கட் த்ரோட் காம்பட்டிஷன் இருக்கறதுனால அந்த வேலையை செய்ய நூறு பேர் ரெடியா காத்துண்டு இருப்பாங்க. இருந்தாலும் இது முழுவதும் கம்பெனி, ஹெச்.ஆர், ப்ராஸஸ் மேனேஜர், ஆப்பரேஷன்ஸ் மேனேஜர், டீம் லீடர் இவர்களின் கலந்தாலோசிப்பு முடிவைப் பொறுத்த விஷயம்"


இதை விட சிறப்பாக என்னால் சொல்ல இயலாது. எனவேதான் அதை அப்படியே இங்கே போட்டேன்.


அடுத்த பதிவில் கால் சென்டரின் அமைப்பு(company structure)  எப்படி பட்டது என்பதை பார்ப்போம். 

ஜூன் 24, 2010

திவ்யாவின் பக்கம் II

நான் : குட்டிமா , அப்பாக்கு எத்தனை கை ?
திவ்யா: ரெண்டு கை
நான்  : பாப்பாக்கு எத்தனை கை
திவ்யா : மூணு கை
நான் : இல்லடா செல்லம், இது ஒரு கை, அது ஒரு கை, ஆக மொத்தம் ரெண்டு கை
திவ்யா : இல்ல மூணு கைதான் ..
நான் :??
(இதுக்கு பேருதான் நான் பிடிச்ச முயலுக்கு மூணு  கால்னு சொல்றதா??)

ஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு
என்னிடம் ,அப்பா , கோபப் படாதப்பா. சாரிபா . பாப்பா இனிமே  குறும்பு பண்ண மாட்டேன் . சாரிப்பா .....


இதேபோல், மற்றொரு நாள், அவள் அம்மாவிடம் எதோ கேட்டு இருக்கிறாள். வேலை மும்முரத்தில் அவள் கண்டுகொள்ளவில்லை, உடனே "ப்ளீஸ்மா , பாப்பா பாவம், ப்ளீஸ்மா , கொடுமா " என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள். இதை நாங்கள் சொல்லி தந்தது இல்லை. அவளாகவே கற்றுக்கொண்டு இருக்கிறாள்.

அவள் மிக குஷியாக இருக்கும் பொழுது, எங்களை அவள் தோள் மேல் சாய்த்துக் கொண்டு , "செல்லம் நீ, வைரம் , தங்கம், நீ பாப்பாவோட செல்லம் " என்று கொஞ்சுவாள். இதே அவளுக்கு விருப்பம் இல்லையென்றால், அவளை தூக்கக் கூட விடமாட்டாள் , பாப்பாவ தூக்காத விட்டுது என்று சொல்லி விட்டு ஓடி விடுவாள்.


மீண்டும் திவ்யாவின் குறும்புகளோடு திவ்யாப் பக்கத்தில் சந்திக்கிறேன்

ஜூன் 23, 2010

கால் சென்டர் III

குவாலிட்டி மேனஜ்மென்ட் டீம் நீங்கள் பேசுவதை எப்பொழுது கேட்கிறார்கள் என்று தெரியாது. நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதுகூட அவர்கள் அதை கேட்கலாம் . இதை கால் பார்ஜிங் (call Barging) என்று சொல்லுவார்கள். உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப் படும். எனவே அவர்கள், நீங்கள் அழைப்பை பேசி முடித்த பின் கூட அதை கேட்டு நீங்கள் எவ்வாறு அந்த அழைப்பில் பேசியுள்ளீர்கள் என்று சரி பார்ப்பார். அவர்களிடம் இருந்து உங்களுக்கு குவாலிட்டி ரிப்போர்ட் வரும்பொழுதுதான் உங்கள் கால் பார்ஜ் செய்யப்பட்டது என்று உங்களுக்குத் தெரியவரும்.


இவர்கள் மட்டும் இல்லாமல், மொழி நிபுணர்கள் குழு ஒன்று இருக்கும். இவர்கள் வேலை  நீங்கள் பேசும்பொழுது எவ்வாறு பேசுகிறீர்கள். வாடிக்கையாளரிடம் பணிவாக பேசுகிறீர்களா இல்லை கோபமாக பேசுகிறீர்களா உங்களுடைய மொழி ஆளுமை எவ்வாறு உள்ளது போன்றவற்றை கண்காணிப்பது. தவறு செய்தால் குவாலிட்டி மேனஜ்மென்ட் டீம் கிட்ட இருந்துகூட தப்பிக்கலாம் ஆனால் இவர்களிடம் இருந்து தப்பிப்பது கடினம். ஒரு முறை ஒரு வாடிக்கையாளரிடம் கொஞ்சம் கோபமாக பேசியதற்காக என்னை மறுபயிற்சிக்கு அனுப்பினார்கள் இந்த குழுவினர்.


ஒரு அழைப்பில் பல விசயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதில் தொடங்கி எப்படி பேசுகிறீர்கள், எப்படி அழைப்பை முடிகிறீர்கள் என்பது வரை அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு துறைக்கான கால் சென்டர்களில் பேசும் நேரம் மாறுபடும். சராசரியாக எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதே முக்கியம். ஒரு சில அழைப்புகள் ஐந்து நிமிடங்களில் முடியலாம். ஒரு சில அழைப்புகள் ஒரு மணி நேரம் கூட நீடிக்கும்.  எனவே சராசரி நேரம் கணக்கு செய்யப்பட்டு அதுவே கவனிக்கப் படும். பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு முக்கியத்துவம் தருவார்கள். நீங்கள் அதிக நேரம் பேச பேச அவர்களுக்கு செலவு அதிகம்.


தொழில் நுட்ப சேவை வழங்கும் கால் சென்டர்களில் அவர்கள் மையத்தை அழைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சர்வே படிவம் மின்னஞ்சலில் அனுப்பப்படும். அனைத்து வாடிகையாலர்களுக்கும் இது போகாது. ஒரு வாடிக்கையாளர் எந்தக் காரணத்திற்காக அழைக்கிறாரோ அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது என்று நீங்க அங்கு உள்ள மென்பொருளில் குறிப்பிட்டால் மட்டுமே இந்த சர்வே படிவம் செல்லும். அதை அவர்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தொழில் நுட்ப சேவை வழங்கும் கால் சென்டர்களில் இது ஒரு முக்கிய அங்கம் ஆகும். வார இறுதி நெருங்க நெருங்க இந்த டென்சன் அதிகம் ஆகும். காரணம் எந்த ஒரு நாளிலும் இந்த வாடிக்கையாளர் திருப்தி குறியீட்டு எண் 90% இருக்க வேண்டும் . வாடிக்கையாளர் உங்கள் சேவையை 1-10 வரை உள்ள அளவீட்டில் மதிப்பிட்டு அனுப்பி இருப்பார். 6 அல்லது அதற்கு மேல் என்றால் பிரச்சனை இல்லை. அதற்கு கீழ் என்றால் அது எதிர்மறையாக எடுத்துக் கொள்ளப் படும். வெள்ளிவரை நன்றாக இருக்கும், அதன்பின்  இரு எதிர்மறை சர்வே வந்தால் போதும். வாடிக்கையாளர் திருப்தி குறியீட்டு எண் இறங்கி விடும். இதை பற்றி மேலும் விவரங்கள் அடுத்தப் பதிவில் சொல்கிறேன். 


விளக்கம் 


ஜலீலா அவர்கள் சத்யராஜ், வடிவேலு நடித்த ஒரு படத்தை பற்றி சொல்லியிருந்தார்கள். அதில் வருவது போல், அனைத்து கால் சென்டர்களிலும் அமெரிக்க பெயர்கள் உபயோகிக்கப் படுவது இல்லை. அப்படியே உபயோகித்தாலும், அந்தப் பெயர் வாடிகையாளர்களுக்கு மட்டுமே. உங்கள் அலுவலத்தில் உங்களுடய நிஜப் பெயரிலே மட்டுமே அறியப்படுவீர்கள். நான் முதலில் இருந்த ப்ராஜெக்டில் ஜான் என்றப் பெயர் உபயோகித்தேன். அந்த ப்ராஜெக்டை பொறுத்தவரை நாங்கள் அமெரிக்காவில் இருந்து பேசுவதாக சொல்ல வேண்டும். அதனால் அந்தப் பெயர். பிறகு ஒரு முன்னணி கணிப்பொறி நிறுவனத்திற்காக வேலை செய்தேன் அப்பொழுது எனது நிஜப் பெயரான 
"கார்த்திக்" என்பதையே உபயோகித்தேன்.டிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்ஜூன் 22, 2010

கால் சென்டர் II

கால் சென்டரில் வேலை கிடைத்த உடன், நீங்கள் அத்துறைக்கு புதியவராக இருப்பின் குறைந்த பட்சம், இரண்டு மாதங்கள் பயிற்சி இருக்கும். முதலில் ஆங்கில பயிற்சி. ஏற்கனவே ஆங்கிலம் தெரியுமே எனக்கு எதுக்கு பயிற்சி என்று கேட்பவர்களுக்கு, இது முழுக்க முழுக்க நீங்க எந்த நாட்டு மக்களுக்கு உதவி புரிய உள்ளீர்களோ அந்த நாட்டு ஆங்கிலத்திற்கான பயிற்சி.


 அடிப்படை ஆங்கிலம், பிறகு அங்கு பேசப் படும் ஆங்கிலம், அவர்களின் பொதுவான உரையாடல் தன்மை போன்றவை அதிக அளவில் சொல்லித் தரப்படும். இதுமட்டும் இல்லாது, அந்த நாட்டின் கலாசாரம், எந்த மாதிரி வார்த்தைகளை நீங்க உபயோகிக்கக் கூடாது போன்றவையும் சொல்லித் தரப்படும். இந்தப் பயிற்சியின் இறுதியில் ஒரு தேர்வு இருக்கும். உங்களை ஒரு அறைக்கு அனுப்பி விடுவார்கள், அங்கு ஒரு தொலைபேசி இருக்கும், நீங்கள் உள்ளே சென்றவுடன் அதில் அழைப்பு வரும். உங்களுக்கு பயிற்சி கொடுத்தவரே பேசுவர் . நீங்கள் அப்பொழுது நன்றாக தெளிவாக பேசவேண்டும். அப்பொழுதுதான் இதை தாண்டி அடுத்தகட்ட பயிற்சிக்கு செல்ல முடியும். (இங்க பிட் , காப்பி அடிக்க வாய்ப்பே இல்லை ). இந்த கட்டத்தில் ஒரு சிலர் கழட்டி விடப் படுவர்.


அடுத்த கட்டம், நீங்க எதற்கு சேவை அளிக்கப் போகிறீர்களோ அதை பற்றிய பயிற்சி, அதாவது, கணிப்பொறி ,மென்பொருள் இப்படி எதற்கு சேவையோ அது சம்பந்தப் பட்ட பயிற்சி இருக்கும்.  இது முடிந்தப் பிறகு மறுபடியும் ஒரு தேர்வு இருக்கும். (இங்க காப்பி அடிக்க முடியும் ). இங்கும் சிலர் வடிகட்டப் படுவர்.


இதற்கு அடுத்த கட்டம்தான் நீங்கள் அழைப்புகளை பேசும் சமயம். இரண்டு கட்டப் பயிற்சி முடிந்து வந்தாலும், அடுத்ததாக ஒரு பயிற்சி இருக்கும். ஏற்கனவே அங்கு வேலை செய்பவர்கள் அருகில் அமர சொல்லி, அவர்கள் பேசுவதை கவனிக்க சொல்லுவர். உங்களுக்கும் ஒரு ஹெட் செட் தரப் படும். இது ஒரு இரண்டு அல்லது மூன்று தினம் நடக்கும். அதன்பிறகுதான் நீங்கள் நேரடியாக வாடிக்கையாளரிடம் பேசத் தொடங்குவீர்கள்.


என்னதான் பயிற்சி இருந்தாலும், முதல் அழைப்பை பேசுகையில் ஒரு வித நடுக்கம் இருக்கும். பல பேருக்கு முதல் கால் மிகபெரிய சவாலாக இருக்கும். நான் பேசிய முதல் வாடிக்கையாளர் இரண்டு நிமிடங்களில் வேறு ஒருவரிடம் பேச வேண்டும் என்று கத்த ஆரம்பித்துவிட்டார். இந்தத் தருணத்தில், நீங்கள் பயப்படுவது சகஜம். நீங்கள் இருக்கும் குழுவில் உதவி புரிவதற்கு என்று ஒருவர் இருப்பார். அவரிடம் நிலையை சொல்லி அவருக்கு அந்த அழைப்பை மாற்றிவிடுங்கள். இந்த நிலை முதல் இரு நாட்களில் சகஜம். இதனால் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. ஆனால் பலர் இந்த கட்டத்திலேயே பயந்து வெளியேறுகின்றனர்.


இதற்கு முக்கிய காரணமே, கால் சென்டரை பற்றி செவி வழியாக பரப்பப்படும் தவறான தகவல்கள். எந்த ஒரு வேலையும் எளிது அல்ல. பொதுவாக கால் சென்டர் என்பது எளிதான வேலை போல் வெளியில் பரப்பபட்டுள்ளதே இதற்கு காரணம். வேலையில் இருக்கும் எட்டு மணி நேரமும் உங்களுடைய முழு கவனமும் அதில் இருக்க வேண்டும், இல்லையெனில், அதுவே நீங்கள் பணியை இழக்கக் காரணம் ஆகி விடும்.


நீங்கள் செய்யும் சிறு தவறும் கவனிக்கப் படும். நீங்கள் செய்யும் தவறுகளை கவனிக்கவே ஒரு குழு உண்டு. அவர்கள் குவாலிட்டி மேனஜ்மென்ட் டீமை சேர்ந்தவர்கள். இவர்கள் வேலையே நீங்கள் செய்யும் தவறை கண்டுபிடிப்பதே. ஒரு சில தவறுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு சில தவறுகள் பேடல் எர்ரர் (Fatalerror ) என்றழைக்கப் படும். அத்தகையத் தவறுகள் செய்தால் உடனடியாக திரும்பவும் பயிற்சிக்கு அனுப்பப் படுவீர்கள்.


டிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்

ஜூன் 21, 2010

கால் சென்டர் I

 நம் அனைவருக்குமே நாம் செய்யும் வேலை எத்தகையதாக இருந்தாலும்,அவரவருக்கு செய்யும் தொழிலே தெய்வம். சில வாரங்களுக்கு  முன் வலைப்பூக்களை படித்து கொண்டிருந்த பொழுது "கால் சென்டரை " பற்றிய ஒரு பதிவு தென்பட்டது. அதில் ஒரு சில விஷயங்கள் சரியாக சொல்லப் பட்டிருந்தாலும் பெரும்பான்மையாக தவறான விஷயங்களே கூறப்பட்டு இருந்தது. சரி , விஷயம் தெரியாம எழுதி இருப்பாங்க போல அப்படின்னு, இது தப்பு, மத்திகோ அப்படின்னு ஒரு பின்னூட்டம் போட்டேன். ரெண்டு நாளைக்கு பிறகு சென்று பார்த்தேன். அதை அவங்க போடலை. சரின்னு விட்டுட்டேன். அப்புறம் போன வாரம், அந்தப் பதிவோட அடுத்த பாகம் போட்டாங்க. இப்பவும் சொன்னேன், அவங்க கேக்கறதா இல்லை. சரி இவங்க கிட்ட சொல்றத, நேரடியா நாமே ஒரு பதிவா போடலாம்னு முடிவு பண்ணேன். இப்பவே சொல்லிடறேன் இது எதிர் வினை அல்ல . ஒரு விளக்கம் மட்டுமே.இப்ப நீங்க ஒரு பொருளை விக்கறீங்க, அதை வாங்கும் வாடிகையாளர்களுக்கு உதவி புரிய  (விற்பனைக்கு பிந்திய சேவை ), அப்புறம் புதுசா அதை வாங்க நினைப்பவர்களுக்கு  அந்தப் பொருளை பற்றி சொல்ல (விற்பனைக்கு முந்திய சேவை), பொருட்களை விற்க , இப்படி பல தரப் பட்ட சேவைகளை நீங்க கால் சென்டர் மூலம் பண்ணலாம்.

கால் சென்டர் வகைகள் 

 பொதுவா வெளிநாட்டு  சேவை மற்றும் இந்திய சேவை என்று இரண்டு வகை இருக்கு. முதலில், வெளிநாட்டு  சேவையை பற்றி பார்ப்போம். இது முழுக்க முழுக்க அயல்நாட்டு வாடிக்கையாளர்களுக்கானது. இப்ப ஒரு உதாரணத்துக்கு ABC நிறுவனம் இருக்கு . அவங்க எதோ ஒரு நாட்டில் பொருட்களை தயாரித்து விற்று இருப்பார்கள். அதற்கு உரிய சேவையை தர அதற்கென்று ஒரு தொலைபேசி எண் இருக்கும் .பொதுவா அந்த எண் 1 -800 என்று துவங்கும்.(இது மாறுபடலாம் ). அந்த எண் அவர்களுடைய  சேவை மையத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் .அந்த சேவை மையத்தில் இருந்து அந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் அவர்களுடைய கால் சென்டருக்கு அனுப்பப் படும் . ஒரு நிறுவனத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் கால்சென்டர்கள் இருக்கலாம். அப்பொழுது அதற்கென்று உள்ள கணக்கீட்டின் படி அழைப்புகள் ரௌட்(route ) செய்யப் படும் .

பணிபுரிய என்ன தகுதி தேவை

 ஒரு இளங்கலை பட்டமோ அல்லது பட்டயப் படிப்போ இதற்க்கு போதுமான கல்வித்தகுதி. கணிப்பொறி அறிவு கண்டிப்பாக  தேவை.நீங்கள் ஆங்கிலத்தில் இலக்கண, உச்சரிப்பு பிழையின்றி பேசுபவராக இருக்க வேண்டும். மற்றபடி பொதுவாக அனைவரும் நினைப்பது போல் நுனி நாக்கு ஆங்கிலம் தேவை அல்ல.எந்தவித நாட்டு சாயலும் நீங்கள் பேசும்பொழுது வரக் கூடாது. அதுதான் முக்கியம். எப்படி தமிழில் ஒவ்வொரு ஊருக்கு ஒரு வகை உள்ளதோ அதைப் போல் ஆங்கிலத்திலும், நாட்டிற்கு நாடு மாறுபடும். எனவே எந்த வித நாட்டின் உச்சரிப்பும் கலக்காமல் பேசுவதுதான் முக்கியம். இப்படி நீங்க பேசறத சரிபார்க்க இதற்கென்று தனியாக ஒரு சிலர் இருப்பார்கள் . அவங்க பண்ற லொள்ளு தாங்காது. அதை பத்தி பின்னாடி பார்ப்போம்.

இந்த தகுதிகள் மட்டும் இல்லாமல், தன்னம்பிக்கை அதிகம் வேண்டும். அது இல்லாட்டி கால் சென்டரில் அதிக நாட்கள் பணிபுரிய இயலாது.


அடுத்தப் பகுதியில், இத்தகைய கால் சென்டர்களில் பணி புரிபவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் என்ன, எதனால் அவர்களுக்கு அதிக சம்பளம் போன்ற விவரங்களைப் பார்ப்போம்.

டிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

ஜூன் 20, 2010

தந்தையர் தின வாழ்த்துக்கள்


நான் விழிக்கும் முன்
நீ
சென்றிருப்பாய் வேலைக்கு.

நீ திரும்பும் முன்
நான் உறக்கத்தில் ...

விடுமுறை நாள் அன்றே
நமது விளையாட்டு ...

நீ கல்லாதது எனைப்
பயில வைத்தாய் ..
இவ்வுலகை எனக்குப்
புரிய வைத்தாய். ..

சிறு வயதில் ஆசானாய்
வாலிப வயதில் தோழனாய்.

அந்நேரத்தில் புரியவில்லை
உனது வார்த்தைகள்- இன்றோ
அவை எனது  தாரக மந்திரம்..

அன்னையர் தின வாழ்த்தில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன்.. தனியாக ஒரு  தினம் வைத்துத்தான் நமது அன்பை  வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து தந்தையர்களுக்கும்  எனது தந்தையர்  தின வாழ்த்துக்கள் .

ஜூன் 19, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இணைய உலகில் நல்ல நட்பு கிடைப்பது மிக அரிதான ஒரு விஷயம். அப்படி கிடைக்கும் நட்பும் நீண்ட நாள் நீடிப்பது கடினம். அவ்வாறு எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழி ஹரிணி.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எனக்கு ஹரிணியை தெரியும். நான் கடந்த வருடத்தில் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபொழுது எனக்கு உறுதுணையாய் இருந்தவர். அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியாது.

இன்று ஹரிணிக்கு பிறந்தநாள். அவர் எல்லா நலன்களும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரிணி .


ஜூன் 18, 2010

சிரிக்க மட்டும் III

இன்னிக்கு அரசியல்ல ஒரு அடைமொழி இல்லாதவங்களே இல்லை . அதாவது பெயருக்கு முன்னாடி சிங்கம், புலி, யானை அடச்சீ தானைத் தலைவர் இப்படி எதாவது ஒண்ணு வச்சிருப்பாங்க. இப்ப நம்ம பதிவுலகம் கூட கிட்டத்தட்ட அரசியல் மாதிரி ஆகிடுச்சி. அதனால நம்ம பதிவர்கள் ஒரு சிலருக்கு இந்த மாதிரி ஒரு பெயர் வச்சா என்னனு யோசிச்சேன். அதன் விளைவே இந்த பெயர் சூட்டும் விழா.

மங்குனி அமைச்சர் (நம்ப மங்குனி இல்லீங்க . இது வேற ): மன்னா ..

அரசர் : என்ன ?

ம.அ : இன்றைக்கு பதிவர்கள் சிலருக்கு பெயர் சூட்டும் விழா. நீங்கள் தான், உங்கள் வாயால் பெயர் சூட்ட வேண்டும்.

அரசர்: அப்படியா ? செய்துவிடலாமே .. எங்கே ஒவ்வொருவராக சொல் பார்ப்போம்

ம.அ : முதலில் அனந்யா மகாதேவன் . இவர் பல பிரபல பதிவுகளை எழுதி உள்ளார். அதில் குறிப்பிடத் தக்கது பன்னீர் சோடா பற்றிய பதிவு.

அரசர் : அப்படியானால் இனி வர " சோடா " அனந்யா என்று அழைக்கப் படுவார்.

ம.அ : அருமை மன்னா. அடுத்து வருவது வாணி. இவர் பல சிறுகதைகளை எழுதி இருந்தாலும் , கெட் டுகெதர் வைத்து பதிவர்களை அழைத்து அசத்தியவர்.

அரசர் :  ஹ்ம்ம். இவர் இனி "கெட் டுகெதர்" வாணி என்றே அழைக்கப் படுவார் .


ம.அ : அந்த பதிவர் விருந்தில், முக்கிய இடம் பெற்றது அப்பாவி தங்கமணியின் இட்லி 


அரசர் : அப்படியா ? அவ்வளவு நன்றாக இருக்குமா அது ?


ம.அ : இல்லை மன்னா. அதை கண்டாலே பதிவர்கள் பல மைல்கள் ஓடிவிடுவார்கள்.


அரசர்:  இனி அப்பாவி தங்கமணி "இட்லி" தங்கமணி என்று அழைக்கபடவேண்டும். 


ம.அ : ஆஹா அருமையான பெயர் மன்னா. அடுத்து தக்குடு பாண்டி . கதை எழுதுகிறேன் என்று பெண்களின் மூக்கை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார் இவர்.


அரசர் : அப்ப இவர் இனி "மூக்கைய" பாண்டி என்றழைக்கப்படட்டும். 


ம.அ : அடுத்து வருபவர் இவர்களுக்கு எல்லாம் தலைமை பதிவர் போன்றவர். அவர் பெயர் கீதா பாட்டி இல்லை இல்லை கீதா மாமி. 


அரசர் : இவர் அருமயான பதிவுகள் இடுபவர் ஆயிற்றே. இவர் "கிர்ர்ர் " கீதா மாமி என்றழைக்கப் படட்டும்.


ம.அ : இவர் சமையல் நிகழ்ச்சிகளை ஒலி பரப்புபவர் . இவர் பெயர் ஜெய்லானி


அரசர் : யார் அந்த சுடுதண்ணி புகழ் ஜெயிலானியா?


ம.அ :: அவரே தான் மன்னா .


அரசர் : அவர் பலருக்கும் விருதுகள் அளித்திருகிறார் எனவே "விருது வள்ளல் " என்றழைக்கப் படட்டும். 


ம.அ : அடுத்து வருவது கௌசல்யா. இவர் திருமண வாழ்விற்கு பல நல்ல குறிப்புகளை தந்துள்ளார் .


அரசர்: இவருக்கு "கவுன்சுலிங்" கௌசல்யா என்ற பெயர் சூட்டுகிறேன் .


ம.அ : மன்னா, இவர் பல தொடர்களை எழுத ஆரம்பிப்பார். ஆனால் முடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்ட மாட்டார் . இவர் பெயர் தேவா .


அரசர்: அப்படியானால் "தொடரா " தேவா என்றழைக்கப் படட்டும் .


ம.அ : கடைசியாக இந்த கவிதா கதை என்று பல விசயங்களை எழுதி வரும் கார்த்திக். 


அரசர் : நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த அவருக்கு எதற்கு அடைமொழி ? வேண்டாம் .


டிஸ்கி : கொஞ்ச நாளா கொலை கதை எழுதி போர் அடிக்குது. மாறுதலுக்காக இந்தப் பதிவு. இதை படிச்சிட்டு யாரும் எதிர்வினைலாம் எழுதக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன். 

ஜூன் 17, 2010

பாவத்தின் பரிசு இறுதி


ஊருக்கு வந்த அஞ்சலி, தனது சகோதரியிடம் எதுவும் கூறவில்லை. அவளிடம் எப்பொழுதும் போல் இருக்க முயன்றாள். தாயாக இருந்து வளர்த்த அவள் சகோதரி ரஞ்சனிக்கு இவளின் நிலை சந்தேகத்தை அளித்தது. அஞ்சலியிடம் சந்தேகத்துடன் இதை பற்றி துருவ ஆரம்பித்தாள். முதலில்  மறுத்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் சோகமும், கோபமும் ஒன்றிணைய , நடந்ததை ரஞ்சனியிடம் கூறினாள்.

தனது தங்கைக்கு நடந்த துரோகத்தை கேட்ட ரஞ்சனியின் உள்ளம் கொதித்தாலும், தங்களால் அப்பொழுது எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து ஆற்றாமையில் உள்ளம் குமைந்தாள். சோகத்துடன் இருவரும் நாட்களை கடத்த, ஒரு நாள் காலை ரஞ்சனிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அஞ்சலி தற்கொலை செய்துகொண்டாள்.

                                             ***********************************
அதிர்ச்சியுடன் அலைபேசி அழைப்பை துண்டித்த வேலனைப் பார்த்து புன்னகைத்த விஜய், "என்ன சார், ஜெய் கொலை செய்யப் பட்டனா?"

"ஆமாம். நீ இங்க இருக்க . அப்ப அவனை கொலை செய்தது யார்  ?? "

"உங்களுக்கு அதற்கான விடை கொஞ்ச நேரத்துல தெரியும் சார். நீங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்."

அவன் கூறியதைப் போல் சிறிது நேரத்தில், அங்கு வந்தப் பெண் வேலனிடம், தான்தான் ஜெய்யை கொன்றதாக் கூறினாள்.

"உன் பெயர் என்ன ?"

"ரஞ்சனி......"

"உனக்கும், விஜய்க்கும் என்ன தொடர்பு? நீ கொலை செஞ்ச அவங்களுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை ?"

"சொல்றேன் சார்."

பின் ரஞ்சனி தன் தங்கைக்கு நடந்தவற்றை கூறினாள்.  அஞ்சலி தற்கொலை செய்துகொண்டப் பின் தான் கோவைக்கு வந்ததாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினாள்.புகார் அளித்தும் எந்தப் பயனும் தராததால் அவர்களைப் பழிவாங்க முடிவெடுத்ததாகவும் அதற்க்கு உதவிப் புரிந்தது தனதுக் காதலன் விஜய் எனவும் சொன்னாள்."அவர்களின் பலவீனம் எனக்குத் தெரியும் . எனவே அதைக் கொண்டே அவர்களை கொன்றோம். பாஸ்கர் சதா சர்வகாலமும் சாட்டில் இருப்பவன். அதன் மூலம் பெண்களை பிடித்து அவர்களை அனுபவிப்பவன். மேலும், அவனுக்கு போதை மருந்து இல்லாமல் தூக்கம் வராது. எனவே , ரஞ்சனி அவனிடம் சாட்டில் பழக ஆரம்பித்தாள். அவனை அவசரப் படுத்தி மும்பையில் இருந்து சீக்கிரம் வரவழைத்ததும் ரஞ்சனிதான். தன் தங்கையின் மரணத்திற்கு பழி வாங்க தன்னையும் இழந்தாள். அவனுக்கு போதை மருந்தில் விஷத்தை கலந்து கொடுத்தாள். விக்டர் எப்படி இறந்தான் என்பது உங்களுக்கே தெரியும். "

"அப்ப ஜெய் ??"

"ஜெய்க்கு கெட்டப் பழக்கங்கள் இருந்தாலும், அவன் ஒரு சில தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வான். அதனால், இன்று தொண்டு நிறுவன பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன். என் நேரம், அவன் தனியாகத் தான் இருந்தான். காசோலை எடுத்துக் கொண்டு அவன் வந்த நேரம், அவனது உயிரை இந்தத் துப்பாக்கி குடித்தது "  இது ரஞ்சனி.

அவள் நீட்டிய துப்பாக்கியை வாங்கிக் கொண்ட வேலனிடம், நீங்க என்னை அரெஸ்ட் பண்ணாமல் இருந்திருந்தாலும் கூட, ஜெய்யின் மரணத்திற்குப் பிறகு , இருவரும் சரணடைந்து இருப்போம் " என்று ரஞ்சனி கூறினாள்.

இரண்டு  கொலைகள் செய்திருந்தாலும், அவள் செய்த கொலைக்கு அவள் கூறிய காரணத்தினால் , அவளுக்கும் , விக்டரை கொலை செய்த காரணத்தினால், விஜய்க்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது.

- முற்றும்
                                             ***********************************
இந்தக் கதையை தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு இரட்டை பாதையில் கதை பயணிப்பது புதிது அல்ல. "அலை பாயுதே " படத்தில் இதே பாணியை மணிரத்னம் உபயோகித்திருந்தார். அதை போன்றே இந்த கதையையும் அமைத்தேன்.

கதையில் குறைகளை சுட்டி காட்டினால் திருத்திக் கொள்வேன்.

அனைவருக்கும் நன்றி.

ஜூன் 16, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் X


மாலையில் ஜெய் அழைத்த உடன்,  அன்று வாங்கிய வெண்ணிற உடை அணித்து தேவதை போல் வந்த அஞ்சலியை கண்ட ஜெய் ஒரு கணம் அவள் அழகில் தன்னை மறந்து நின்றான். பின் அவளை நெருங்கி, அவள் காதில், மிக மெல்லமாக, " யூ லுக் கிரேட் இன் திஸ் டிரஸ் " என்று கிசு கிசுத்தான். பின் அவளின் கரங்களை பற்றியவாறு , வெளிவந்து தனது நண்பனின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்களது கார் விரைந்து கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் , பக்கத்தில் அதிகம் வீடுகள் இல்லாத ஒரு பங்களாவின் உள் நுழைந்தான் ஜெய். அந்த வீட்டில் நுழையும் பொழுதே அஞ்சலியின் மனதில் எதோ ஒரு பயம் படர்ந்தது. இருந்தாலும், ஜெய் அருகில் இருக்கும் தைரியத்தில் அதை வெளிகாட்டாமல் வீட்டிற்குள் சென்றாள்.

உடன் வந்த ஜெய், தனது நண்பர்களை அஞ்சலிக்கு அறிமுகப் படுத்தினான்.

"விஜய் எங்க ??"

"இல்லடா . அவன் எதோ வேலை இருக்கு . முடிஞ்சா வரேன்னு சொன்னான் ".

"சரி. விடு. "

"அஞ்சலி, கூல் ட்ரிங்க்ஸ் ??"

"பெப்சி ப்ளீஸ் .."

அங்கிருந்து அறைக்குள் சென்ற ஜெய், பெப்சி பாட்டிலில் இருந்து மூன்று க்ளாஸ்களில் பெப்சியை நிரப்பினான். பின், அந்த க்ளாஸ்களில் ஒன்றில்  மட்டும் எதோ இரண்டு சிறிய புட்டிகளில் இருந்து மேலும் இரு திரவங்களை நிரப்பினான்.பின் அவற்றை எடுத்துக் கொண்டு முன்னறைக்கு சென்று அஞ்சலிடம் அந்த க்ளாசை கொடுத்து , மற்ற இரண்டை தனது நண்பர்களிடம் கொடுத்து , அவன் பாட்டிலை எடுத்துக் கொண்டான்.

                                             ***********************************
தனது தீர்மானத்தை உறுதி செய்யும் அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினார் வேலன். உடனடியாக, ஆர்.டி.ஓ அலுவலகம் சென்ற வேலன், அந்த காரின் உரிமையாளர் விலாசத்தைப் பெற்றார். அடுத்து சைபர் கிரைம் அலுவலகம் சென்ற வேலன், ஜிக்கு வந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று அறிந்துக் கொண்டு அந்த பிரௌசிங் சென்டர் சென்றார்.

அங்கு அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர்களின் பெயர்களை  அங்கிருந்த குறிப்பேட்டில் சரிபார்த்த வேலன், தான் எதிர்பார்த்த நபரின் பெயர் இல்லாததால் , அந்த சென்டரின் உரிமையாளரிடம், விசாரிக்க தொடங்கினார். பின் அங்கிருந்து கட்டுபாட்டு  அறைக்கு தொடர்பு கொண்ட வேலன், உடனடியாக, ஒரு டீமை விஜயின் வீட்டிற்கு அனுப்ப சொல்லிவிட்டு தானும், அங்கு விரைந்தார்.

                                             ***********************************
தனக்கு நேரப் போகும் விபரீதத்தை அறியாமல், குளிர்பானத்தை பருகிய அஞ்சலி , மெதுவாக தன்னிலை இழக்கத் துவங்கினாள். இதற்காகக் காத்திருந்த ஜெய் , அவளை மெதுவாகத் தாங்கி , உள்ளறைக்கு தூக்கி சென்றான். அவன் பின் அவன் நபர்கள், விக்டர் மற்றும் பாஸ்கரும் சென்றனர்.

மறுநாள் காலை கண்விழித்த அஞ்சலி, புயல் வந்தழித்த நந்தவனமாய் இருந்தாள். முந்திய இரவு என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்த்த அவளுக்கு குளிர் பானம் குடித்தது மட்டுமே நினைவிற்கு வந்தது. அதன் பின் தன்னை யாரோ தூக்கியது போன்ற உணர்வு இருக்கவே , அதன் பின் என்ன நடந்தது என்பதை யோசிக்க ஆரம்பித்தாள். அவளின் உடல் உணர்ச்சிகள் என்ன நடந்து இருக்கும் என்பதை அவளுக்கு உணர்த்தவே , நிலைகுலைந்தாள்.

அப்பொழுது அங்கு வந்த ஜெயிடம் அவள் சண்டையிட்டாள், கதறினாள். இந்த நிகழ்வுகளை எதிர்பார்த்த ஜெய், அவளை மிரட்டத் துவங்கினான்.

"இங்க பார். இரவு எடுத்தப் புகைப்படங்களும், வீடியோவும் இருக்கு . நீ அமைதியா இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லை. இதை இன்டர்நெட்டில் போட்டால் என்ன ஆகும் என்று தெரியும் அல்லவா ??"

அவனது மிரட்டலை கேட்ட அஞ்சலி, வேறு வழியின்றி வாய் மூடினாள். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு தான் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டுப் பிறகு வருவதாகக் கூறி கிளம்பினாள் .
                                             ***********************************
விஜய் வீட்டை அடைந்த வேலன், அங்கு அவரது துறையை சேர்ந்த டீம் ரெடியாக இருப்பதை கண்டு புன்னகையுடன் அவனது வீட்டில் நுழைந்தார்.

காவல் துறை தனது வீட்டை முற்றுகை இட்டதையும், வேலன் புன்னகையுடன் உள் நுழைவதையும் கண்ட விஜய் ,

"சார் என்ன நடக்குது இங்க ? எதுக்கு இத்தனை போலிஸ். ?"

"விஜய், நீங்க நல்லாவே நடிக்கறீங்க . ஆனால் பாருங்க ஒரு சில இடத்துல கோட்டை விட்டுடீங்க."

"சார் என்ன சொல்றீங்க. ?"

"நான் சுத்தி வளைக்க விரும்பல விஜய், சொல்லுங்க, எதுக்கு பாஸ்கரையும் , விக்டரையும்  கொலை பண்ணீங்க ?"

அவரது நேரடி தாக்குதலை எதிர்பார்க்காத விஜய் நிலைகுலைந்து சோபாவில் அமர்ந்தான் .

"விக்டர் அடிபடும் வரை, எனக்கு உன் மேல் சந்தேகம் இல்லை. . முதல் சந்தேகம், நீங்கள் ஊரில் இருந்து திரும்பியது வேறு யாருக்கும் தெரியாது. அதனால் அவனுக்கு போன் செய்து வரவழைத்தது நீ அல்லது ஜெய் இருவரில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மருத்தவமனையில் உங்களிடம் பேசிய பொழுது, உன் முகத்தில் , ஒரு வித செயற்கை அதிர்ச்சி  இருந்தது. அதுதான் எனக்கு உன் மேல் சந்தேகத்தை வரவழைத்தது. அடுத்தது, அங்கிருந்து கிளம்பிய உன்னை கண்காணிக்க சொல்லி இருந்தேன். நீ நேராக, ஒரு பிரௌசிங் சென்டருக்கு சென்றாய். சென்ற ௧௦ நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி இருக்கிறாய்.

இது உன் மேல் என் சந்தேகத்தை மேலும் வலுப் படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, விக்டரை கொலை செய்ய உன் அலுவலகக் காரை உபயோகித்து இருக்கிறாய். கார் தொலைந்து அரைமணி நேரம் கழித்து நீ தந்தப் புகாரில் , கார் சாவிகள் உன்னிடம் இருப்பதாகவும் , யாரோ கார் பூட்டை உடைத்து திருடியதாகவும் சொல்லி இருக்கிறாய். அது மட்டும் அல்ல, கார் காணமல் போன நேரம் காலை ௮ மணி என்று குறிப்பிட்டு இருக்கிறது. உனது காரில், அலாரம் வசதி உண்டு, அதை அணைக்காமல் யாரும் காரை தொட முயன்றால் அது சத்தமிடும் . இந்த விஷயங்கள் உன்னை காட்டிக் கொடுத்து விட்டன விஜய். "


"ஓகே இன்ஸ்பெக்டர். எஸ் நாந்தான் பண்ணேன். "

அவனை கைது செய்து ஸ்டேசனுக்கு வேலன் வரவும், அவரது அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. எதிர்முனை சொன்னத் தவகல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

-பரிசு தொடரும் .

பி.கு. அடுத்த பாகத்தில் முடியும் ஜூன் 15, 2010

கவிஞர் விருது

போன வாரம், நம்ம அன்புடன் மலிக்கா ஒரு கவிதைப் போட்டி வச்சிருந்தாங்க. ஒரு படத்தை கொடுத்து அதற்கு கவிதை எழுத சொன்னாங்க. அதுல கலந்துகொண்ட அனைவருக்கும் "கவிஞர் விருது " கொடுத்தாங்க.  அதற்கு அவர்களுக்கு ஒரு நன்றி .ஒரு விருது வந்தால் அதை மத்தவங்கக் கூட பகிர்ந்துக்கணும். அதுதான் முறை. நான் படிச்சு ரசிச்ச சில கவிதைகளின்  சொந்தக்காரர்களுக்கு இந்த விருதை நான் அளிக்கிறேன்.

அன்புடன் ஆனந்தி
முபீன் ஷாதிகா
பனித்துளி ஷங்கர்
அப்பாவி தங்கமணி
அமைதி சாரல்
விதூஷ்
தேவா 

ஜூன் 14, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் IX


மருத்துவமனையில் வேலன் நுழைந்த தருணம் , விக்டர் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தான். மருத்துவர்களை அணுகிய வேலன், அவனது நிலையை பற்றி கேட்டார். அவருக்கு சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பின், அவனின் மற்ற இரு நண்பர்களான விஜய் மற்றும் ஜெய்யை தனியே அழைத்து அவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார். அவர்களிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவர்களை யாரோ கண்காணிப்பதைப் போன்றுணர்ந்த வேலன், அவர்கள் போக அனுமதித்தார். அவர்கள் அங்கிருந்து சென்ற அதே சமயம், அவர்களுக்கு அருகே இருந்த அறையில் எதோ நடமாட்டம் கேட்டது. உஷாரான வேலன், அங்கே எட்டிப் பார்க்க, அங்கு யாரும் இல்லை. வேலனின் முகத்தில் தீவிர யோசனைக்கு அறிகுறிகள் தென்பட்டது.

 அந்த மருத்துவமனையின், தலைமை மருத்துவர் அறைக்கு சென்ற வேலன், அவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். வெளியே வரும்  பொழுது அவரிடம், சில காகிதங்கள் அடங்கிய பைல் இருந்தது. அங்கிருந்து கிளம்பிய வேலன், ஜீப்பில் ஏறும்பொழுது முகத்தில் தெளிவு இருந்தது.

                                      **************************************
 ஜெய் மிகுந்த குழப்பத்தில் இருந்தான். யார் இவ்வாறு தனது நண்பர்களை கொலை செய்வது?? புதிதாக தொடங்க இருக்கும் பிஸ்னசில் யாரேனும் எதிரிகளா இல்லை நாம் செய்த எதோ தவறுக்காக நம்மை பலி வாங்குகிறார்களா ?? மருத்துவமனையில் வேலன் சொல்லிய செய்தி அவனை மேலும் பயமுறுத்தியது. தனது பயத்தை போக்கிக் கொள்ளவும், மாற்றத்திற்காகவும் கணிப்பொறியை உயிர்ப்பித்து, தனது மின்னஞ்சலை பார்த்தான்.  அவனுக்கு புதியதாக வந்திருந்த மின்னஞ்சலை கண்டு உறைந்துப் போனான்.
அதில் இருந்த ஒரே ஒரு வரி " பாவத்திற்கான பரிசு விரைவில் உனக்குக் கிட்டும் ".

அதே நேரம் , அவனது தொலைபேசியில் விக்டரின் பெற்றோரிடம் இருந்து அழைப்பு வர, நடுங்கிய குரலுடன் பேசிய அவனின் செவியில் விழுந்த வார்த்தைகள் " விக்டர் கர்த்தரிடம் சென்று விட்டான் ".


                                      **************************************
மருத்துவமனையில் இருந்து திரும்பிய வேலன், முன்பு தனக்கு ஏட்டு கொடுத்த பைலை மீண்டும் எடுத்தார். அதை மீண்டு படிக்கத் தொடங்கிய வேலனின் , முகத்தில் பல வித உணர்ச்சிகள். அதில் இருந்த முகவரியை மட்டும் குறிப்பெடுத்துக் கொண்ட வேலன், உடனடியாக அந்த முகவரியை பற்றி விசாரிக்க கட்டுபாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.

விக்டரின் இறப்பு பற்றிய தகவல் வர, அதை எதிர்பார்த்த வேலன் ஏட்டை மருத்துவமனைக்கு அனுப்பி மற்ற விசயங்களை முடித்துக் கொண்டு வர சொன்னார். 

அதே நேரம், அவரது அலைபேசியில், ஜெய்யின் அழைப்பு. தனக்கு வந்த மின்னஞ்சலை பற்றிய விவரத்தை நடுக்கத்துடன் அவருக்குக் கூறினான். தான் உடனடியாக அவனது வீட்டிற்கு வருவதாகக் கூறினார் வேலன்.

                                      **************************************
தனது நண்பர்களிடம் பேசிவிட்டு மிகத் தாமதமாக அறைக்குத் திரும்பிய ஜெய், மிகுந்த உற்சாகத்துடன் உறங்கினான். காலையில் அஞ்சலியிடம் "இன்று மாலை , எனது நண்பனின் வீட்டில் ஒரு விருந்து உள்ளது" அதற்கு நாம் இருவரும் செல்கிறோம் " என்று கிட்டத்தட்ட உத்தரவாக கூறினான்.

அன்றுடன் அந்த பயணம் முடிவதால், அஞ்சலி மனதில் ஒரு சோகம் இருந்தது. கோவைக்கு திரும்பிப் பின்னர், ஜெய்யுடன் தனிமை கிடைக்குமா என்று தெரியாதக் காரணத்தினால்.இதனால் அவன் கூறியவுடன் அன்று இரவு விருந்துக்கு செல்ல மிக மகிழ்வுடன் தயாரானாள்.

ஜெயிடம் கூட கூறாமல், தனியாக சில உடைகளை வாங்க சென்றாள். அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சித் தரவேண்டும் என்ற எண்ணத்தில், மிக நவநாகரீக உடைகள் விற்கும் கடைக்கு சென்றாள். அங்கு அவளுக்கு மிகப் பிடித்த வெண்ணிறத்தில் ஒரு உடையை தேர்ந்தெடுத்தாள்.

அவள் அறைக்குத் திரும்பவும், அவளது அக்கா அலைபேசியில் அழைக்கவும் சரியாக இருந்தது. அவளது அக்காவிடம் பேசிய அவள், தான் சென்னையில் இருந்து திரும்பியவுடன், ஊருக்கு அவளை பார்க்க வருவதாகக் கூறினாள். ஊருக்கு சென்றவுடன் ஜெய்யின் பெற்றோர் அனுமதி வாங்கி தனது அக்காவிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்று மனதில் எண்ணக் கொண்டாள்.
                                      **************************************
ஜெய்யின் வீட்டை அடைந்த வேலன், அவனுக்கு வந்த மின்னஞ்சலைப் படித்து உடனடியாக அதை சைபர் கிரைமுக்கு அனுப்பிவிட்டு அவர்களுக்கு அலைபேசியில் தகவலும் கொடுத்தார்.

அப்பொழுது அவருக்கு அலைபேசியில், விக்டரை கொலை செய்யப் பயன்படுத்திய காரின் தகவல்கள் வந்தன. அதைக் கேட்ட வேலன், தனது தீர்மானம் சரி என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.

-பரிசு தொடரும்

ஜூன் 13, 2010

வீடு வாடகைக்கு

நம்ம முன்னோர்கள் தீர்க்கதரிசிங்க. அப்பவே சொல்லி வச்சிட்டாங்க ,"வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப்பார்". ஆனால், இப்ப வீடு வாடகைக்கு கிடைக்கறதே பெரிய விசயமா இருக்கு, இதுல எங்க புது வீடு கட்டறது??

இப்ப எந்த எரியால வீடு வேணும்னாலும், பத்து மாச வாடகை அட்வான்சா  தரணும். இது என்ன சட்டம்னு தெரியல . சரி இதையாவது ஒத்துக்கொள்ளலாம். வருசத்துக்கு ஒரு முறை வாடகைய அதிகரிக்கறாங்க. ஆபிஸ்ல வருசத்துக்கு ஒரு முறை சம்பளம் ஏறுதோ இல்லையோ இங்க வாடகை ஏறிடும். அப்படி ஏத்த எதாவது உருப்படியா காரணம் சொல்றாங்களா அதுவும் இல்லை . கேட்டா , நீங்க வந்து ஒரு வருஷம் ஆச்சு, அதனால ஏத்தறோம். என்னையா காரணம் இது?  இவங்களுக்கு அந்த ஒரு வருசத்துல ஏதாவது அதிகபட்ச செலவு இருக்கானு பார்த்தா  அப்படி எதுவும் இல்லை. அப்புறம் எதுக்கு ஏத்தணும்?


அதேமாதிரி, நீங்க காலி பண்ணிட்டு போனா  அடுத்து அங்க குடி போறவங்க நீங்க கொடுத்ததை விட அதிகமாகத்தான் தரணும் . இதுவும் எழுதப் படாத விதி.
அப்புறம் நீங்க குடிபோறது அபார்ட்மென்ட் வீடா இருந்த சரி, இல்லாட்டி, உங்களுக்குன்னு தனி மீட்டர் இருக்காது, சப் மீட்டர்தான் இருக்கும், ஒரு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் மூணு ரூபால இருந்து அஞ்சு ரூபா வரைக்கும் கொடுக்க வேண்டி இருக்கும்.

அதுக்கப்புறம், மாசா மாசாம், ஒரு தொகையை பராமரிப்பு தொகையா வாங்குவாங்க. இது இல்லாம, ஒரு சில இடத்துல, முறை வாசல்னு கோலம் போடறதுக்கு ஒரு நூறு ரூபா ..(நாங்களே போட்டுப்போம்னு சொன்னாலும் கேக்க மாட்டாங்க ). அப்படி இப்படின்னு, நீங்க வாங்கற சம்பளத்துல கணிசமான ஒரு பகுதி இவங்களே புடுங்கிடுவாங்க.
முன்பெல்லாம், கல்யாணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பது கடினம். இன்னிக்கு நிலைமை, தலைகீழ். கல்யாணமாகாத , வேலைக்கு போறவங்களா இருந்தா சீக்கிரம் வீடு கிடைச்சிரும். குடும்பமா இருக்கவங்களுக்குதான் வீடு கிடைகிறது கஷ்டமான ஒரு விஷயமா இருக்கு.அப்புறம், இந்த தரகர்கள் இருக்காங்களே , அவங்களோட தொல்லை தாங்காது. அவங்கதான் இன்னிக்கு வீடு வாடகை தாறுமாறா ஏறி இருக்க முக்கிய காரணம். ஒரு சில பகுதில, இவங்க அனுமதி இல்லாம யாரும் வீட்டை பார்க்கக் கூட முடியாது. அந்த அளவுக்கு இவங்க செல்வாக்கு இருக்கும். நீங்க இவங்க காமிக்கற வீட்டுக்கு குடி போறதா இருந்தால், அவர்களுக்கு ஒரு மாத வாடகை கமிஷன் தொகையா தர வேண்டி இருக்கும். அதே மாதிரி, வீட்டு உரிமையாளரிடம் ஒரு தொகையை வாங்கிடுவாங்க.

அரசாங்கம், இந்த வீட்டு தரகர்கள் விஷயத்திலாவது தலையிட்டு இதை சரி செய்யணும்.

டிஸ்கி : என்னடா இவன், திடீர்னு இப்படி வீட்டை பத்தி எழுதரான்னு யோசிக்கறவங்களுக்கு, இதை நான் எழுதி வச்சி ரொம்ப நாளா ஆச்சு. போடாம இருந்தேன். இன்னிக்கு ரெண்டு வீடு பார்த்தேன். அதன் விளைவு இந்தப் பதிவு.

 

ஜூன் 12, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் VIII

அடுத்த நாள் காலை , பாஸ்கரின் நண்பர்கள் வந்துவிட்டதாகவும், மாலைக்குள் அவரைப் பார்க்க வருவதாகவும் வேலனுக்கு செய்தி வந்தது. அதற்குள், அவருக்கு சைபர் கிரைம் அறிக்கையும் கிடைத்தது.

அதில் அவருக்கு கிடைத்த தகவல் , " மொபைல் போனை இணைய இணைப்பிற்கு உபயோகப் படுத்தி உள்ளனர். குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் இரண்டு சிம் கார்டுகளில் இருந்துதான் அனைத்து இணைய பரிமாற்றமும் நிகழ்ந்துள்ளது என்றும், அந்த  சிம் கார்ட் IMEI  எண்களும் குறிப்பிடப் பட்டிருந்தது.

உடனடியாக அந்த  நிறுவனத்திற்கு தொடர்புக் கொண்டார் வேலன். தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு  சிம் கார்டுகளை பற்றி சொல்லி விவரங்கள் கேட்டார். அந்த இரண்டு எண்களுமே ப்ரீ பெய்ட் எண்கள் என்றும், அவற்றை வாங்கியவர்கள் முகவரியும் கொடுத்தனர். மேலும், அந்த இரண்டு எண்களும் இரு நாட்களாக உபயோகப் படுத்தப் படவில்லை என்ற தகவலும் கொடுத்தனர்.அந்த இரண்டு கார்டுகளை விற்ற முகவர் விலாசத்தையும் கேட்டு வாங்கிக் கொண்டார் வேலன்.


எப்படியும் அவர்கள் கொடுத்துள்ள முகவரி தவறாக இருக்கும் என்பது வேலனின் எண்ணம். அது அந்த முகவரிக்கு சென்ற பொழுது உறுதியானது. அந்த முகவரின் கடைக்கு சென்று விசாரித்தப் பொழுது , ஒரு ஆண்தான் இந்த இரண்டு கார்டுகளையும் வாங்கியதாகவும், அவரை அதற்கு முன்பு பார்த்ததில்லை எனவும் கூறினார்.

அங்கிருந்து ஸ்டேசனுக்கு திரும்பிக் கொண்டிருந்தபொழுது , நூறடி ரோட்டில் ஒரு விபத்து. விபத்தில் அடிப்பட்டவரின் முகத்தை பார்த்த வேலன் அதிர்ந்தார்.  காரணம் அங்கு விபத்தில் அடிபட்டவன் , பாஸ்கரின் நண்பன் விக்டர்.

  "எவ்ளோ நேரம் ஆச்சு ? எப்படி நடந்தது ? யாரவது பார்த்தீங்களா ?"

 "இப்பதான் சார் ஒரு பத்து நிமிஷம் இருக்கும் .ஒரு வெள்ளை கலர் குவாலிஸ் இடிச்சிட்டு பறந்திருச்சு சார். "

"வண்டி நம்பர் யாரவது நோட் பண்ணீங்களா ? ஆம்புலன்ஸ் இன்பார்ம் பண்ணியாச்சா??"

" வண்டி  நம்பர் நோட் பண்ணா முடியலை சார். ஆம்புலன்ஸ் இன்பார்ம் பண்ணியாச்சு "

அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து  சேர, விக்டரை அதில் ஏற்றி முதல் உதவி செய்தவாறே , அலறிக்கொண்டு பறந்தது . மத்தியக் கட்டுபாடு அறையை அழைத்த வேலன், நூறடி ரோட்டில் இருந்து வரும் அனைத்து வெள்ளை நிற குவாலிஸ் கார்களையும் நிறுத்தி விசாரிக்க சொன்னார்.

இதை முடித்து விட்டு, விக்டரின் வீட்டிற்கு செய்தி சொல்லி அவர்களை, குறிப்பிட்ட மருத்துவமனைக்கு செல்ல சொன்னார். அதன் பின் அவரும் மருத்துவமனைக்கு சென்றார். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த விகடர் உயிர்வாழ போராடிக்கொண்டிருந்தான். அதற்குள் அவனது பெற்றோரும் , மற்ற இரண்டு நண்பர்களும் வந்து சேர்ந்தனர். சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த அவனது பெற்றோரிடம் வேலன் கேட்டக் கேள்வி "வீட்டில் கார் இருக்க, விக்டர் எதற்கு பைக்கில் சென்றான் ?"

"வீட்ல கார்  இருந்தாலும் அவன் தனியா போறதா இருந்தா பைக்லதான் போவான். காலைலதான் வந்து சேர்ந்தான். அதுக்குள்ள எதோ போன் வந்துச்சு . சீக்கிரம் வரேன்னு போனான். இப்படி ஆகிடுச்சி ."

வேலனின் மொபைலுக்கு கட்டுபாட்டு அறையில் இருந்து அழைப்பு  வர , அவர்கள் சொன்ன செய்தி கேட்டு , "சரி உடனடியா அதைப் பத்தி விசாரிக்க சொல்லுங்க. நான் இப்ப அங்கப் போறேன் ".

                                                              *****************************
 முதல் நாள்  நிகழ்ச்சிகளின் விளைவாய், தூக்கம் தொலைத்த விழிகளுடன்  அலுவலகம் செல்ல தயாரானாள் அஞ்சலி.

அன்று அலுவலகத்தில், முதல் நாள் நிகழ்ச்சிகளை மறந்தவனாய் ஜெய் பணியாற்றினான். இவளிடம் அதைப் பற்றி எதையும் பேசாமல் , வேலை சம்பந்தப்பட்ட விசயங்களை மட்டுமே பேசினான். மனதிற்குள் "இந்த ஆண்களே இப்படிதான் , வேணும்னா மட்டும்தான் பேசுவாங்க " அவனை திட்டியவாறே தனது வேலையில் மும்முரமானாள்.

மாலை கிளம்புமுன் அவளை அழைத்த ஜெய், "அஞ்சு, இன்னிக்கு கொஞ்சம் வெளில போற வேலை இருக்கு. நான் அறைக்கு வர லேட் ஆகும். எனக்காக காத்திருக்க வேண்டாம். நீ சாப்பிட்டு விட்டு தூங்கு " என்று சொல்ல, அதற்கு மறுமொழி கூற விளைந்த அஞ்சலியை இடை மறித்த ஜெய் " நீ கிளம்பலாம் " என்று கூறினான்.

கோபத்துடன் அங்கிருந்து சென்றாள் அஞ்சலி . அவள் கோபத்துடன் செல்வதைப் பார்த்து புன்னகையுடன் அங்கிருந்து அகன்றான் ஜெய்.
                                          

                                              *****************************
 மேட்டுபாளையம் ரோட்டில் ஒரு ஓரமாக நின்ற அந்த காரை கவனித்த வேலன், "நம்பரை செக் பண்ணீங்களா ?" அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் கேட்டான்.

"ஆர்.டி.ஓ ஆபீஸ்க்கு இன்பார்ம் பண்ணி இருக்கோம் சார். பத்து நிமிசத்துல மறுபடியும் கூப்பிடறேன்னு சொன்னாங்க "

"யாரு உங்களுக்கு இன்பார்ம் பண்ணங்க இந்த காரை பத்தி ?"

"கண்ட்ரோல் ரூம்ல இருந்து நியூஸ் வந்துச்சு சார். இந்த ரோட்ல வழக்கமா ரோந்து போற நேரத்துல இந்த கார் நின்னுகிட்டு இருந்துச்சி . உடனே சந்தேகப் பட்டு இங்க பக்கத்தில விசாரிச்சப்ப யாருக்கும் இதை பத்தி   தெரியலை. யாரோ ஒரு ஆள் இறங்கி காரை பூட்டிட்டு போறதப்  பார்த்திருக்காங்க. யாரும் நெருக்கதிலப் பார்க்கல. காரை பூட்டினவன், இங்க இருந்து நடந்து போயிருக்கான். "

"சரி. இந்த கார் இங்கயே இருக்கட்டும். இது அவனோட காரா இருந்தா கண்டிப்பா வருவான். இங்க கண்காணிப்பு இருக்கட்டும் வெளில தெரியாத அளவுக்கு. "

திரும்பவும் மருத்துவமனைக்குத் செல்லத் துவங்கிய வேலன் மனதில் கண்டிப்பாக இது ஒருவர் சம்பந்தப் பட்ட விஷயம் அல்ல. இரண்டோ அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட நபர்களோ சேர்ந்துதான்  பண்ணி இருக்கணும். அவர்கள் யாராக இருந்தாலும், இந்த நால்வரால் பாதிக்கபட்டவர்களாகத்தான் இருக்க வேண்டும்.   அதேப் போல், அவர்களுடைய அடுத்த குறி , மீதமிருக்கும் இருவரில் ஒருவராக இருக்கவேண்டும் . அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்கணும் என்று எண்ணியவாறே சென்றார்.

                                          *****************************
அறையில் கோபமும் , சோகமும் கலந்து இருந்த அஞ்சலியின் அலைபேசி விடாமல் அலறிக் கொண்டிருந்தது. அவள் இருந்த மனநிலையில் யாரிடமும் பேச இஷ்டப் படவில்லை.  தொடர்ந்து அது அலற, ஒரு கட்டத்தில் அலைபேசியை எடுத்து அதில் வந்த எண்களைப் பார்த்தாள். எதுவும் பழகிய என்னாகத் தெரியாததால் அலைபேசியை அணைத்து ஒருபக்கம் வைத்தாள்.

ஜெய்யின் அன்றைய  நடவடிக்கைகளை எண்ணிப் பார்த்தாள். பின் தனக்தானே சமாதானம் சொல்லிகொண்டாள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எத்தனையோ கவலைகள் உண்டு. நம்மை மட்டுமே எண்ண  வேண்டும் என்று நினைப்பதுத் தவறு என்று எண்ணியவாறே, சாப்பிட சென்றாள்.

அதே சமயம், ஜெய், தனது நண்பர்களுடன் மிக மும்முரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தான்.


-பரிசு தொடரும்

ஜூன் 11, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் VII


அழகுத் தேவதையாக வந்த அஞ்சலியை மொய்க்காத கண்களே அந்த அலுவலத்தில் இல்லை. அன்று  ஜெய் சொல்ல வந்தது என்னவாக இருக்கும் என்ற எண்ணம் அஞ்சலியின் மனதில் ஒரு பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

தான் நினைத்தது உண்மையெனில் தன்னை விட அதிர்ஷ்டஷாலி  யாரும் இல்லை என்ற எண்ணமும் அவள் மனதில். இதனால் மனதை மகிழ்ச்சி ஆட்சி செய்துக் கொண்டிருந்தாலும், ஒரு மூலையில் இனம் புரியா கவலை ஒன்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன யோசித்தும் அவளுக்கும் அதன் காரணம் புரியவில்லை.

 இந்த சிந்தனையால்  இருமுறை ஜெயின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது. அதனால் அதை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு வேலையை பார்க்க முயன்றாள். இருந்தும் ஏனோ மனம் வேலையில் லயிக்க வில்லை. மாலை அறைக்கு திரும்பியவுடன் கட்டிலில் சோர்வுடன் விழுந்தாள்.  தான் தோழியுடன் பேசினால் மனம் ஓரளவு சரியாகும் என்று அவளது தோழிக்கு போன் பண்ண எண்ணும்பொழுது , ஜெயின் அழைப்பு.

"இரவு சாப்பாட்டிற்கு வெளியில் போகிறோம். ரெடியா இரு "

மறுத்து சொல்ல எண்ணி பேச ஆரம்பித்த அஞ்சலி, இறுதியில் ஒத்துக்கொண்டாள்.

மனம் சோர்வாக இருந்ததால் பெரிதாக அலங்காரம் பண்ண பிடிக்கவில்லை. மிக சாதாரணமாக கிளம்பினாள். அறையில் இருந்து கிளம்பி ஹோட்டலை அடையும் வரை இருவரும் பேசவில்லை. ஹோட்டலில் வண்டியை பார்க் செய்யும் பொழுது ,

"அஞ்சலி, உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னேன்ல "

"ம்ம்." சுவாரஸ்யம் இல்லாமல் அஞ்சலி.

"அது என்னனு தெரிஞ்சிக இஷ்டம் இல்லையா?"

"எப்படியும் நீங்க சொல்லுவீங்கன்னு தெரியும் ஜெய். சொல்லுங்க என்ன விஷயம் அது ?"

"இன்னும் கொஞ்ச நேரம் பொறு,. உனக்கே தெரியும் "

"ஹ்ம்ம். "

                                                           *******************************

ஸ்டேசனுக்குள் நுழைந்த வேலன் , மிகுந்த குழப்பத்தில் இருந்தார். இந்த கேசில் உருப்படியாக எந்த விதத் தகவல்களும் கிடைக்க வில்லை. கிடைக்கும் தகவல்களும் எந்த வித முடிவுக்கும் நம்மை இட்டு செல்லவில்லை.  அப்பொழுதுதான் அவருக்கு அந்த ரிப்போர்ட் கண்ணில் பட்டது.  அதில் இருந்த தகவல்தான் அவரை அதிர்ச்சிக்குள்ளாகியது.

பாஸ்கரின் வீட்டில் இவர் எடுத்த அந்த ஊசியில், போதை மருந்தும், விஷமும் கலந்து உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த ஊசியில் உள்ள கை ரேகை, பாஸ்கரின் கைரேகை அல்ல.

இதை மீண்டும் மீண்டும் படித்த வேலனின் மனதில், குற்றவாளி அந்தப் பெண்தான் என்பது ஊர்ஜிதமானது . அந்தப் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும். அந்தப் பெண்ணை பார்த்த ஒரே சாட்சி அந்த வாட்ச்மேன். அவனோ சரியாகப் பார்க்கவில்லை என்று சொல்கிறான்.

"யோவ் ஏட்டு, அந்த பாஸ்கரோட பிரெண்ட்ஸ் மும்பைல இருந்து வந்த உடனே  இங்க வர சொல்லுயா "

"சரிங்க அய்யா ".

                                      *******************************************
"அஞ்சலி , எனக்கு எதையும் சுத்தி வளைச்சு பேசத் தெரியாது . நேரடியா சொல்றேன். ஐ லவ் யூ ".

இதை சொல்லி அஞ்சலியின் முகத்தைப் பார்த்தன் ஜெய். அதில் மகிழ்ச்சியும் குழப்பமும் சேர்ந்த உணர்ச்சி தண்டவமாடிக்கொண்டு இருந்தது.

"ஏன் அஞ்சலி? என் மேல நம்பிக்கை இல்லையா? வழக்கமா பணக்கார பசங்க பண்ற மாதிரி பண்ணிடுவேன்னு பயமா? "

"இல்லை ஜெய். உங்கமேல நம்பிக்கை இல்லாட்டி நான் தனியா உங்க கூட வந்திருப்பேனா ?. என்னனு தெரியாத ஒரு கவலை மனசில ஜெய். எனக்கு சொல்லத் தெரியல "

"கவலைப் படாத. இதப் பார்த்தா உனக்கு கவலை ஓடிடும் " சொல்லிக்கொண்டே சிறு பாக்சை அவளிடம் கொடுத்தான் .

அதை வாங்கி திறந்த அஞ்சலியின் கண்கள் வியப்பில் விரிந்தன. அதனுள் அழகிய சிறு வைர மோதிரம் நட்சத்திரத்தைப் போல மின்னிக் கொண்டிருந்தது. மோதிரத்தை அதில் இருந்து எடுத்த ஜெய், அவளது சிவந்த விரல்களை மெதுவாகப் பற்றி அதில் அணிவித்தான்.

அவனது முதல் தீண்டலில் அவள் மெய்சிலிர்த்த அஞ்சலி, தன்னிலை அடையும் முன் , அவள் எதிர்பாராத அந்தத் தருணத்தில், அவனது இதழ்கள் அவளது கைகளில் பதிய அவள் கண்கள் அனிச்சையாக மூடின. அவளது உடல் சிலிர்த்தது. தன்னை மறந்து இருந்தவளை ஜெயின் குரல் இவ்வுலகிற்கு அழைத்தது.

"என்ன அதுக்குள்ள கனவா ?"

"இல்லை." வெட்கத்தில் அவளது குரல் மெலிதாக ஒலித்தது.

"ஜெய், கண்டிப்பா என்னை ஏமாத்த மாட்டீங்களே ?" கவலை தோய்ந்த குரலில் கேட்டாள்.

"முட்டாள் மாதிரி பேசாத . உன்னை ஏமாத்த நினச்ச , எதுக்கு நான் காதலிக்கறேன்னு சொல்லணும். அதுக்கு எத்தனையோ வழி இருக்கு . என்னை நம்பு. எங்க வீட்ல என்னை மீறி எதுவும் நடக்காது. ஊருக்கு போன உடனே அப்பாகிட்ட பேசி சம்மதம் வாங்கிடறேன் ".

"இருந்தாலும் மனசுல ஒரு பயம் இருக்கு ஜெய் " சொல்லியவாறே அவனது தோள்களில் சாய்ந்துக் கொண்டாள் அஞ்சலி.

"டோன்ட் வொரி அஞ்சலி. எல்லாம் நல்லபடியா நடக்கும் " அவளது தலையை அணைத்தவாறு சொன்னான் ஜெய்.

கனவில் மிதந்தவாறே சாப்பிட்டு அறையை அடைந்த அஞ்சலி , நான்கு மாதங்களில் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தாள். தான் அன்று இருந்ததற்கும் இன்று இருப்பதற்கும் இருந்த வித்யாசத்தை எண்ணியவாறே தூங்கி போனாள்.

தூக்கத்தில் வந்த கனவுகள் அவளது குழப்பமான மனதை பிரதிபலித்தது. காதல் வயப்பட்ட பெண்ணின் மனதை பிரதிபலிக்கவில்லை அவளது கனவுகள்.

ஒரு சிலருக்கு பின் நிகழப்போவது கனவில் வரும். ஒருவேளை அவளது கனவுகள் அதை சொல்கின்றதோ ??

-பரிசு தொடரும்

ஜூன் 10, 2010

திவ்யாவின் பக்கம்

என் வீட்டு ராஜகுமாரி செய்யும் ஒரு சில குறும்புகளை சொல்லவே இந்தப் பக்கம்

திவ்யாவின் புது பாட்டு

நிலா நிலா ஓடி வா 
பாப்பாவை பாக்க வா 
நில்லாமல் ஓடி வா 
பாப்பாவை பாக்க வா 
மலை மீது ஏறி வா 
பாப்பாவை பாக்க வா ...

இது எப்படி ??

எதோ குறும்பு செய்தால் என்று என் மனைவி அடிக்கப் போவது போல் கையை ஓங்க
அதற்கு திவ்யா "ஆனாம். அடிக்காத . பாப்பா பாவம் " என்று சொல்லுகிறாள். இதற்குப் பிறகு அவளை அடிக்க மனம் வருமா ???

"நாய் எப்படி கத்தும் ??"
"பவ் பவ் "
"பூனை எப்படி கத்தும் ?"
"மியாவ் "
சரி. திவ்யா எப்படி கத்துவா ?
"ஆனாம் (நல்லா சத்தமா இதை சொல்லுவா )"
நேற்று மாலை கண்ணில் எதோ தூசி விழுந்து கண்ணில் லேசாக கண்ணீர் வந்தது. அதைப் பார்த்த திவ்யா " அப்பா அழாத. தொடச்சிக்க. " என் தங்கமணியிடம் போய் " அப்பா பாவம் "
அப்ப என் தங்கமணியோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும் ?????மீண்டும் திவ்யாவின் குறும்புகளோடு திவ்யாப் பக்கத்தில் சந்திக்கிறேன்

ஜூன் 09, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் VI


"அஞ்சலி நாம் போறது ஒரு பன்னாட்டு நிறுவனம். அதுக்கேத்தமாதிரி  உன்  டிரஸ் இருக்கணும். புரிஞ்சதா ??"

"எஸ் சார், புரிஞ்சது ".

"ஓகே குட்.  அப்ப நீ ஒரு மூணு மணிக்கு கிளம்பிடு. வீட்ல போய் ரெடியா இரு . நான் ஒரு 7.30க்கு வந்து பிக்கப் பண்ணிக்கறேன். "

"ஓகே சார் ."

கனவில் மூழ்கியே அன்றைய தினத்தை முடித்தாள். மதியம் மூணு மணிக்கு வீட்டிற்கு சென்ற அவள், தன்னிடம் இருந்த உடைகளில் சிறந்த உடைகளை தேர்ந்தெடுத்து பேக்  செய்து வைத்தாள். பின் தனது சகோதரிக்கு போனில் விசயத்தை சொன்னாள்.

அவள் குளித்து விட்டு, அப்பொழுதுதான் மலர்ந்த மல்லிகை போல், உடையணிந்து ஹாலுக்கு வருவதற்கும், வாசலில் ஜெயின் கார் ஒலி கேட்பதற்கும் சரியாக இருந்தது.

உள்ளே வந்த ஜெய் அவளைப் பார்த்து பிரமித்து நின்றான்.

"வாவ். யூ லுக்  கிரேட்  அஞ்சலி "

"தேங்க்ஸ் சார். கிளம்பலாமா?'

"ஹ்ம்ம் யா."

அவர்கள் கிளம்பி தெருவை கடப்பதற்கும் , மழை ஆரம்பம் ஆவதற்கும் சரியாக இருந்தது. மழையின் நடுவே, மிக மெதுவாகத்தான் கார் சென்றது.

"அஞ்சலி, நான் ஒண்ணு சொல்லனும்னு நினைக்கிறன் "

"சொல்லுங்க ஜெய். "

" வேண்டாம், அது சஸ்பென்சா இருக்கட்டும். சென்னைக்கு போனப்புறம் சொல்றேன் "

"ஓகே உங்க இஷ்டம். "

இதற்குள் அவர்கள் ரயில்வே ஸ்டேசனை நெருங்கி இருந்தார்கள். காரிலிருந்து இறங்கி ஸ்டேசனுக்குள் செல்வதற்குள் இருவரும், முழுவதும் நனைந்து இருந்தார்கள். பிளாட்பார்மை இருவரும் அடைவதற்கும், ரயில்  வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஏ.சி கம்பார்ட்மெண்டை தேடி ஏறினார்கள்.

"அஞ்சலி, போய் டிரஸ் மாத்திருங்க. இல்லாட்டி காய்ச்சல் வந்திரும். ஈர உடைல ஏ.சில ட்ராவல் பண்ணா "

உடை மாற்றிக்கொண்டு , டிஷர்ட் மற்றும் முக்கால் பேண்டில் வந்த அஞ்சலியை பார்த்த ஜெயின் முகத்தில் மீண்டும் அந்தப் புன்னகை.

ரயில் புறப்பட்டு  சென்னையை நோக்கி ஓடத் துவங்கியது . அஞ்சலியின்  வாழ்க்கையும் அதனுடனே ஓடத் துவங்கியது. இதை உணராமல், சிறு குழந்தைப் போல் உறங்கிக் கொண்டு இருந்தாள்.

காலை ஆறு மணிக்கு சென்னையை அடைந்தனர். ஏற்கனவே அவன் நட்சத்திர ஹோட்டலில் ரூம் புக் பண்ணி இருந்ததால், அங்கிருந்த கார் வந்து காத்து இருந்தது. இருவருக்கும் தனித்தனி  ரூம் புக் பண்ணி இருந்தான். தனது அறையில் நுழைந்த அஞ்சலி, ஜெயின் குணத்தை எண்ணி மகிழ்ந்து கொண்டு இருந்தாள். அவன் சொல்ல வந்தது என்னவாக இருக்கக்கூடும் என்று எண்ணி கொண்டு இருந்தவளை, இன்டர்காம் இந்த உலகக்கு இழுத்தது.

"அஞ்சலி, சீக்கிரம் ரெடி ஆகிடுங்க. நாம அந்த கம்பெனிக்கு ஒன்பது மணிக்கெல்லாம் போகணும் . நான் சொன்னத மறக்க வேண்டாம் "

"கண்டிப்பா   மறக்க மாட்டேன் சார்."

"குட்".

குளித்து முடித்து தனது அலங்காரங்களை முடித்து கண்ணாடியில் பார்த்த அஞ்சலி திருப்தி அடைந்தாள் . லேசாக தனது அழகைக் கண்டு கர்வமும் கொண்டாள். வழக்கம் போல் உடலைக் கவ்வும் ஜீன்ஸ் பேண்ட்டும், ஸ்லீவ்லெஸ் டாப்சும் அணிந்து கிளம்பினாள்.

                                        ***************************
பழைய கேஸ்களை படித்த வேலன்  , குழப்பத்தில் இருந்தப் பொழுது , மருத்துவமனையில் இருந்து அவருக்கு போன் வந்தது. 

அவர்கள் சொன்ன விஷயம் இதுதான். பாஸ்கரன் உபயோகப் படுத்தியது மிகக் கொடிய விஷம், போதை மருந்தில் கலந்து அதை உபயோகப்படுத்தி உள்ளார் . இது அவ்வளவு எளிதா வெளில கிடைக்காது.

"அப்ப , இது கொலைதான் . பண்ணவங்க யாராக இருந்தாலும் மருத்துவத் துறைல சம்பந்தப் பட்டவங்களாகத்தான் இருக்க முடியும் . எதுவாக இருந்தாலும், சைபர் கிரைம் டீமோட அறிக்கை கிடைக்கற வரைக்கும் இதுல ஒன்னும் பண்ணா முடியாது " இவ்வாறு முடிவுக்கு வந்த வேலன், பாஸ்கரோட மொபைல ஆராய முற்பட்டான்.

அவனுக்கு அதில் எந்த வித உபயோகமான தகவலும் இல்லை. அதில் இருந்த எண்கள் முழுதும் அழிக்கப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த மொபைல் கம்பெனிக்கு கிளம்பினார். அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பாஸ்கருக்கு கடைசியாக வந்த அழைப்புகளின் எண்களைப் பற்றிய விவரங்களைப் பார்த்தார். அதில் இருந்தவை அனைத்தும் தொலைபேசி (லேண்ட்லைன்) எண்களே.

வேலனுக்கு மேலும் அயர்ச்சியே ஏற்பட்டது. பொதுவாக, லேண்ட்லைன் எண்கள் எல்லாம் பொது தொலைபேசியாகவே இருக்கும். எதற்கும் முயற்சி பண்ணிப் பார்ப்போம் என்று, அந்த எண்களை சம்பந்தப் பட்ட துறைக்கு அனுப்பி விட்டு, ஸ்டேசனுக்கு சென்ற வேலனுக்கு அங்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

-பரிசு தொடரும்

ஜூன் 07, 2010

நன்றி சொல்லவே .... நூறாவது பதிவு

 பதிவு எழுத ஆரம்பித்து இரண்டு வருடத்தில்  நூறு பதிவு எழுதுவது  என்பது மிக மிக சாதாரணமான விஷயம். நான் அதிகமாக எழுதுவது கடந்த மூன்று மாதங்களாகத்தான்.பெரும்பாலும் மொக்கை பதிவுகள் எழுதினாலும், ஒரு  சில நல்ல பதிவுகளும் எழுதியுள்ளேன் என்று எண்ணுகிறேன்

என்னை பின்தொடர்ந்து வந்து எனக்கு பின்னூட்டம் இட்டும், ஓட்டுப் போட்டும் என்னை ஊக்குவிக்கும் 96  பேருமே என் நன்றிக்கு உரியவர்கள்தான். அவர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தைதான் என்னால் சொல்ல முடியும். நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கமே நான் இந்த அளவுக்கு எழுதுவதற்கு  காரணம் ( ஏன்டா ஊக்கம் கொடுத்தோம்னு யாரோ கேக்கறது காதில விழுது. அவங்களுக்கு நம்ம அப்பாவியோட இட்லி அனுப்புங்க   ).


இங்க நான் குறிப்பா ஒரு சிலருக்கு நன்றி சொல்லணும். நான் பதிவுலகத்தில் அறியப்படாத காலத்தில் இருந்து என் பதிவுகளைப் படித்து எனக்குப் பின்னூட்டம் இட்டு வரும் ஹரிணி , பூஷா மற்றும்  பின்னூட்டம் இடாவிட்டாலும் எனது அனைத்துப் பதிவுகளையும் படித்து என்னை ஊக்குவிக்கும் அனு இந்த மூணு பேருதான் அது.இவர்கள்தான் நான் தொடர்ந்து எழுத ஆரம்பத்தில் ஊக்குவித்த நபர்கள்.

நீங்கள்  எழுதிய அனைத்துப் பின்னூட்டங்களும் முக்கியமானவைதான். இதுவரை எனக்கு கிடைத்தப் பின்னூட்டங்களில் நான் மிக மிக முக்கியமாகக் கருதுவது திருமதி கௌசல்யா எனக்கு அனுப்பிய பின்னூட்டம்தான் . "உங்கள் எழுத்துக்களை நான் வாசிக்கவில்லை , சுவாசிக்கிறேன் " என்ற அந்த பின்னூட்டம் எனக்கு கிடைத்த மிக முக்கியமான ஒரு பரிசாகக் கருதுகிறேன்.


.  அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள். உங்களுக்காக செய்யப்பட்ட கேக்.

பாவத்தின் பரிசு அத்தியாயம் V


"எதுக்குயா இழுக்கற ? சொல்லு "

"இல்லீங்க, அந்த பையன் அவ்வளவு நல்லவன் இல்லீங்க. நிறைய பொண்ணுங்க விசயத்துல பிரச்சனை ஆகி இருக்குங்க."

"இது வரைக்கும் எதாவது கேஸ் புக் ஆகி இருக்கா?

"இல்லீங்க. எல்லாத்தையும் காசு கொடுத்து விசயத்தை மூடிருவாங்க. ஆனா ஒரே ஒரு கேஸ்ல மட்டும் அப்படி பண்ணமுடியல. ஆனா அப்புறம் அந்த புகாரை கொடுத்தவங்க காணாமல் போய்ட்டாங்க. அதனால மேற்கொண்டு எதுவும் பண்ணமுடியலை. "

"சரி. எனக்கு அதை பத்தின விசயம் முழுக்க மதியம் வேணும்"

"சரிங்க ."

:"நான் மறுபடியும் அந்த பாஸ்கர் வீட்டுக்கு போய் ஒரு முறை அந்த அறையை சோதனை பண்றேன் . எதாவது விசயம் கிடைக்கும்"
    
                                              ******************************
பாஸ்கரின்  அறை  முழுதும் அலசி ஆராய்ந்த வேலன், எதுவும் உருப்படியாக கிடைக்காத எரிச்சலில் இருந்தார்.  கடைசியாக அங்கு இருந்தக் கணினியை  இயக்கினார்.

அதை நோண்ட நோண்ட , அவரின் முகம் , சூரியனை கண்ட தாமரையாய் மலரத் துவங்கியது. அதே சமயம், அவரின் அலைபேசி அவரை அழைக்க, அதில் அவரது ஏ.சி .

"அந்த பாஸ்கர் கேஸ் என்ன ஆச்சு ? வெறும் தற்கொலைதான ?"

"இல்லீங்க . இது கொலை. "

"என்னயா உளர்ற?

"உளறல சார் . இப்பதான் மறுபடியும் அந்த பாஸ்கர் அறைய தேடிகிட்டு இருந்தேன், அப்ப அவனோட கணினில சில முக்கிய விஷயம் கண்டுபிடிச்சேன்.  எனக்கு இன்னும் கொஞ்சம் டைம் குடுங்க சார். இந்த கேசை முடிச்சிடலாம். அது வரைக்கும் இது கொலைன்னு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் சார் ."

"சரி ஓகே. ஆனால் கவனமா இருங்க. இது பெரிய இடத்து விஷயம். "

"கண்டிப்பா சார் ".

                                    ******************************

"பாலா, இதுதான் நான் சொன்ன சி.டி. இதுல அந்த கணிணி, அதில் இருந்த  மெயில் எல்லாம் இருக்கு"

"ஓகே சார். நீங்க கேட்ட விவரம் எல்லாம் இன்னும் நாற்பத்தெட்டு  மணி நேரத்தில உங்ககிட்ட  இருக்கும்  "

"நன்றி . இது ரொம்ப முக்கியம்,  வெளில விஷயம் தெரியக் கூடாது ".

"கண்டிப்பா. நீங்க கவலைப் படவேண்டாம். "

                                                 ******************************
  "அய்யா, நீங்க கேட்ட விவரம் முழுக்க , இதுல இருக்கு "

  "குட்"

 அதைப் படிக்க படிக்க , அவருக்கு அந்த கேஸ் மேலும் பல குழப்பங்களை உண்டு பண்ணுமோ என்று தோணியது .

"எங்கே சென்றாள் அந்தப் பெண் ?  காணவில்லை என்றால்  ஏன் யாரும் புகார் குடுக்க வில்லை ?"

"ஏட்டு, இந்தப் பொண்ணு நமக்கு புகார் கொடுத்த வாரத்தில இருந்து ஒரு ரெண்டு வாரத்திற்குள் , சிட்டில எதாவது , தற்கொலை, கொலை கேஸ் இருக்கானு விவரம் வேணும், உடனடியா கண்ட்ரோல் ரூம்க்கு போன் பண்ணி விவரம் வாங்கு."

அதிலும் எந்த உருப்படியான தகவலும் கிடைக்கவில்லை.

அப்பொழுது. ....

-பரிசு தொடரும் 

ஜூன் 06, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் IV

காலை பத்து மணி. என்ன முடிவு வருமோ என்று எதிர்பார்த்து செல்போனை நொடிக்கு ஒருமுறை பார்த்துக் கொண்டு இருந்தாள் அஞ்சலி.

அறையின் நிசப்தத்தை கொன்று அலறியது  செல்போன்.

மிகுந்த டென்சனுடன் அதை உயிர்பித்த அஞ்சலி ,"சொல்லுங்க சார்" என்றால் நடுங்கும் குரலுடன்.

"நீங்க வேலைக்கு  தேர்வு ஆகி இருக்கீங்க . வாழ்த்துக்கள் " எதிர் முனையில் பிரகாஷ்.

" தேங் யூ சார்".

"நீங்க நாளைக்கு வேலையில் சேர வேண்டி இருக்கும் . தயாரா இருங்க "

"ஓகே சார். கண்டிப்பா "

போனை துண்டித்த அஞ்சலி, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள்.

உடனடியாக அக்காவிற்கு போன் செய்து விசயத்தை சொன்னாள். அவள் அக்காவும் இவளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாள்.

தனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசாக அந்த வேலையை நினைத்தாள் அஞ்சலி. பாவம் அப்பொழுது அவளுக்குத் தெரியவில்லை விதியின் போக்கு.

                                               **************************
மறுநாள் காலை . முதல் நாள் வேலைக்கு செல்லும் உற்சாகத்தில் அஞ்சலி.  உடலுடன் இரண்டாம் தோலாய் ஒட்டிய ஜீன்சும், அதற்கு பொருத்தமான ஒரு குட்டை டாப்சும் அணிந்து , அலுவலகத்தில் நுழைந்த பொழுது, அவளை கண்டு பெருமூச்சு விடாதோர்  சொற்பம்.

தனது அறையில் அமர்ந்து இருந்த ஜெய், இவளைக் கண்டவுடன் மகிழ்ந்தான்.  உடனடியாக இன்டர்காமில் பிரகாசை அழைத்த ஜெய் "பிரகாஷ், அந்த அஞ்சலியை என் அறைக்கு அனுப்புங்கள் ".

ஜெய், பணத்தில் புரளும் இளைஞன் என்றாலும், படிப்பும், நிர்வாகத் திறமையும் உள்ளவன் . அவன் நிர்வாகத்தில் அவர்களது தொழில் முன்னேற்றம் கண்டதால், அவனது தந்தை அவனது சொல்லுக்கு அதிகம் மறுப்பு சொல்வது இல்லை.

"மே ஐ காம் இன் சார்?"

"வாங்க அஞ்சலி. உக்காருங்க. உங்களுக்கு  என்ன வேலை ? எவ்வளவு சம்பளம்? விவரம் தெரியுமா ?"

"இல்லை சார். இப்பதான் வந்தேன். நீங்க இங்க வர சொன்னதா சொன்னாங்க"

"ஓகே. உன்னோட வேலை காரியதரிசி . எனக்கும் என் அப்பாவுக்கும். சம்பளம் மத்தவிவரம் உங்களுக்கு பிரகாஷ் சொல்லுவார் "

"அடிக்கடி நீங்க வெளியூர் போக வேண்டி இருக்கும். பிரச்சனை ஒன்னும் இல்லையே ?"

"இல்லை சார். நான் ஹாஸ்டல்லதான் தங்கி இருக்கேன். அதனால பிரச்சனை இல்லை."

"இனிமே ஹாஸ்டல் வேண்டாம். நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸ் இருக்கு . அங்கேயே தங்கிக்கலாம். சில சமயம், நைட் லேட்டா போக வாய்ப்பு இருக்கு,. அப்ப ஹாஸ்டல்ல உனக்கு பிரச்சனை வரக்கூடாது. "

"ஓகே சார். நீங்க எப்படி சொல்றீங்களோ . அப்படியே பண்ணிக்கறேன்".

"ஓகே நீங்க போகலாம். மத்த விவரம் எல்லாம், பிரகாஷ் சொல்லுவார்".

" தேங் யூ சார்"

அஞ்சலி  செல்ல இருந்த அந்தத் தருணம் ,
"அஞ்சலி ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே ?"

"இல்லை சார் சொல்லுங்க. "


"'இந்த டிரஸ் உங்களுக்கு நல்லா இருக்கு . உங்க வேலைக்கும் இது சரியா பொருந்தி இருக்கு."

 " தேங் யூ சார்"  வெட்கம் படர்ந்த புன்னகையுடன் அங்கிருந்து வெளியில் சென்றாள் அஞ்சலி.

 அவள் செல்லுவதே பார்த்துக் கொண்டு இருந்த ஜெயின் முகத்தில் மீண்டும்ஒரு குரூரப் புன்னகை.
                                             **************************

அஞ்சலி வேலையில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஓடின. அந்த நான்கு மாதங்களும் அஞ்சலிக்கு  மிக வேகமாக சென்றது போல் ஒரு நினைப்பு. ஜெய் அவளிடம் காட்டிய நெருக்கம் அவளுக்கு பெருமையாக இருந்தது. தன்னைப் போன்ற புதியதாக சேர்ந்த ஒருவரிடம், அந்த நிறுவனத்தின் வாரிசு நெருக்கமாக பழகுவது தனக்கு கிடைத்தப் பரிசு என்று எண்ணினாள் விவரம் அறியா அந்தப் பேதை.

அன்றும் வழக்கம் போல் ஜெய் இன்டர்காமில் " அஞ்சலி , இன்னிக்கு நைட் நாமசென்னை போறோம் . ஒரு முக்கியமான விசயத்துக்காக . தயார இருங்க "


"ஓகே சார், நான் ரெடி ஆகிடுவேன் ."

அவளுடைய வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் பயணத்துக்கு தயாரானாள் அவள்.

-பரிசு தொடரும் 

ஜூன் 05, 2010

பாவத்தின் பரிசு அத்தியாயம் III


"அய்யா ஒரு நிமிஷம் இதைப் பாருங்க "

ஏட்டின் குரல் கேட்டு திரும்பிய வேலன் , அவன் காண்பித்த பொருளை கவனமாகப் பார்த்தான்.

"சரி. இதை கவனமா எடுத்து வச்சிகோங்க. இந்த கேஸ்க்கு யூசாகும். "

"சரிங்க அய்யா".

"நீ சொல்லுயா. அந்த பொண்ணு போனப்ப அவர் வெளில வந்தாரா.??"

"இல்லீங்க அய்யா நான் சரியா பார்க்கலை. "

"சரி விடு. எப்பவும் இந்த மாதிரி பொண்ணுங்க வருவாங்களா ?"

வாட்ச்மேன் தெய்வ நாயகத்தை  பார்க்க , வேலன்,

"இங்க பதில் சொல்லுயா "

"ஆமாங்க . எப்படியும் வாரத்துக்கு ஒரு முறையாவது பொண்ணுங்க வருவாங்க."

"இது உங்க பெரிய அய்யாவக்கு  தெரியுமா ?"

"இல்லீங்க. இந்த விஷயம் எல்லாம் அவருக்கு தெரியாது ."

"யோவ் ஏட்டு , எல்லா விசயத்தையும் முடிச்சிட்டு ஸ்டேசனுக்கு வந்து சேரு. போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்தப்புறம் சொல்லு "

"சார்கிட்ட ஒரு ஸ்டேட்மென்ட்  எழுதி கையெழுத்து வாங்கிட்டு வந்திரு,. அதை இங்க கொண்டா. 

வெளியில் வந்த வேலன், தான் அலைபேசியில் யாரையோ அழைத்தார் .

"கொஞ்சம் அவசரமான வேலை. உடனடியா வர முடியுமா?"

"அரை மணி நேரத்துல நம்ம வழக்கமான இடத்தில் சந்திப்போம் "

"ஓகே "
                                        **************************

"இதை பாரு . இதைப் பத்தி உன் கருத்து என்ன ??"

"இது உங்களுக்கு எங்க கிடைச்சது வேலன் ? " , ப்ரியா வேலனின் தோழி. போதைக்கு அடிமையானவர்களை திருத்தும் மறுவாழ்வு மையம் நடத்தி கொண்டு இருப்பவள்.

"இன்னிக்கு ஒரு தற்கொலை பத்தி விசாரிக்க போன இடத்துல இது இருந்தது. இது அங்க வர வேண்டிய அவசியம் என்ன ? "

"என்ன வேலன் ? இது ரொம்ப சிம்பிள்.  அவன் போதை மருந்து உபயோகிக்கறவனா இருக்கலாம். "

"சரி . எதுக்கும் இதை செக் பண்ண லேப்க்கு அனுப்பறேன், அப்ப தெரியும் ".

"அதுவும் சரிதான் வேலன். இதுல உனக்கு எதாவது சந்தேகம் இருக்கா ?"

"ஆமாம் ப்ரியா. ஒரு இடத்துல மட்டும் தான் கணக்கு இடிக்குது, தற்கொலை பண்ணிக்கப் போறவன் எதுக்கு ஒரு பொண்ணை கூட்டிட்டு வரணும்.??

"ஹ்ம்ம். சரியான சந்தேகம்தான். . "

"சரி வேலன் நான் கிளம்பறேன் . அப்புறம் எதாவதுனா கால் பண்ணுங்க"

                                           ***************************
"அய்யா நீங்க இல்லாதப்ப ஒரு போன் கால் வந்துச்சி "

"என்ன விசயமா?"

"அந்த பாஸ்கர் செத்தது தற்கொலை இல்லை . கொலைன்னு "

"என்னது? அந்த நம்பர கண்டுபிடிச்சீங்களா??

"அது இந்த ஒரு ரூபா போட்டு பேசற போது தொலைபேசிங்க"

"பேசினது ஆம்பளையா பொண்ணா ?"

"ஆம்பளைதாங்க"

"என்ன வயசு இருக்கும் ? எதாவது கணிக்க முடிஞ்சதா ??"

"நடுத்தர வயசு இருக்கணும் ".

"சரி. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் எப்ப வருமாம்?"

"மதியம் தரோம்னு சொல்லிருக்காங்க "

"சரி. அப்படியே இதை லேப்க்கு அனுப்பி செக் பண்ண சொல்லிடு "


"அய்யா, நான் கேள்வி பட்ட இன்னொரு விஷயம் ...."

"எதுக்குயா இழுக்கற ? சொல்லு "

- பரிசு தொடரும்