நவம்பர் 30, 2010

விருதுகள்


வாணி அவர்கள் எனக்கு இந்த விருதை அளித்துள்ளார். அவருக்கு எனது நன்றிகள். இந்த விருதை அவர் பிரத்யேகமாக தயாரித்து இருப்பதால் அதை மற்றவர்களுடன் பகிர விரும்பவில்லை.

எனவே கீழே இருக்கும் இந்த விருதை நம் நண்பர்களுக்கு அளிக்கிறேன் .

கல்பனா ராஜேந்திரன், சாதாரணமானவள்,நித்திலம், பிலாசபி பிரபாகரன்,  தீராத விளையாட்டுப் பிள்ளை ஆர்வீ எஸ் ,பாலாஜி சரவணன், கோவை2டில்லி,சைவக்கொத்துபரோட்டாஹரிஸ்பிரியமுடன் ரமேஷ், ப்ரியா, அருண்பிரசாத்,வெறும்பய ஜெயந்த், யாவரும் நலம் சுசி  ,சித்ரா,ஆசியா ஓமர், தேனம்மை லெக்ஷ்மணன் , சௌந்தர், அப்பாவி தங்கமணி, ஹேமா,வானதி,சசிகுமார், ஆனந்தி,சக்தி,கலாநேசன், தேவா, செல்வக்குமார்,

அனைவருக்கும்  எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்    
    

அன்புடன் எல்கே

பேக் அப் எடுப்பது மற்றும் திரட்டிகளில் இணைப்பதுகூகிள் பஸ்ஸில் சின்னம்மிணி பதிவுகளை பேக்கப் எடுப்பதை பற்றி ஒரு பதிவு போட சொல்லி இருந்தார்கள். மேலும் ஒரு புதியப் பதிவரிடம் பேசிக் கொண்டிருந்தபொழுது எப்படி திரட்டிகளில் நம் வலைப்பூவை சேர்ப்பது என்று கேட்டார். அந்த இரண்டு விஷயங்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்

பேக் அப் எடுப்பது :

 பதிவுகள் எழுத மெனக்கெட்டு நேரம் செலவழிக்கிறோம் . சில சமயம் சில புத்தகங்கள் ,இணையத் தளங்களை தேடி விஷயங்கள் சேகரிக்கிறோம். திடீரென்று உங்கள் வலைப்பூ ஹேக் செய்யப் பட்டாலோ அல்லது கூகிள் ஸ்பேம் என்று உங்கள் வலைப்பூவை தடைசெய்தாலோ  மீண்டும் அந்தப் பதிவுகள் கிடைக்காது . அந்த நிலையில் நீங்கள் அது வரை எழுதிய பதிவுகளை மீண்டும் எழுதுவது என்பது கடினம். எனவே வாரத்திற்கு ஒருமுறையோ இல்லை உங்கள் விருப்பம் போல் எப்பொழுது வேண்டுமோ அப்பொழுதோ பேக்கப் செய்துக் கொள்ளலாம் .


முதலில் உங்கள் பதிவின் தேஷ்போர்ட் சென்று அங்கிருந்து செட்டிங்க்ஸ் (settings) செல்லுங்கள். பிறகு அங்கு அதில் blog tools இருக்கும் அதன் அருகில் மூன்று ஆப்ஷன்ஸ் இருக்கும். அதில் export blog என்பதை கிளிக் பண்ணுங்கள். பின், கீழ்க்கண்ட ஸ்க்ரீன் உங்கள் திரையில் வரும். அதில் டவுன்லோட் ப்ளாக் என்ற பட்டனை கிளிக் செய்தால், உங்கள் கணிணியில் அதை எங்கு சேமிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கும். நீங்கள் எங்கு சேமிக்க விரும்புகிறீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்து, "save" பட்டனை கிளிக் செய்தால் உங்கள் வலைப்பூவின் பேக்கப்  உங்கள் கணிணியில் இருக்கும்(பின்னூட்டங்களுடன்) . 

பின் எப்பொழுதாவது உங்கள் வலைப்பூவிற்கு மேலே சொன்ன சோதனைகள் எதாவது வந்தால், செட்டிங்க்ஸ் சென்று import blog கிளிக் செய்தால் கீழ்க்கண்ட மெசேஜ் வரும்.
அதில் உங்கள் நீங்கள் ஏற்கனவே உங்கள் கணிணியில் சேமித்து வைத்துள்ள வலைப்பூவின் பிரதியை ஓபன் செய்து பின் வோர்ட் வெரிபிகேசன் பூர்த்தி செய்து  import blog கிளிக் பண்ணினால் உங்கள் பழைய பதிவுகள் அனைத்தும் மீண்டும் வந்து விடும். 

திரட்டிகள் :

உங்கள் பதிவை பலர் படிக்க வழி செய்பவை இந்தத் திரட்டிகள்தான். திரட்டிகளில் இணைப்பது மூலம் பலர் உங்கள் பதிவை பற்றி அறியும் வாய்ப்பு ஏற்படும். தமிழ் வலைபூ  திரட்டிகளில் முதன்மையாக இருப்பது தமிழ்மணம். இதில் நீங்கள் வலைப்பூவை  இணைக்க கீழே கொடுத்துள்ள லிங்கை உபயோகப் படுத்தவும். 
 இதில் நீங்கள் உங்கள் கணக்கை துவக்கி , பின் இந்த லிங்க் சென்று
http://tamilmanam.net/user_blog_submission.php உங்கள் வலைப்பூ விவரங்களை கொடுத்தவுடன் இரண்டில் இருந்து மூன்று நாட்கள் காத்திருக்க சொல்லும். அதன்பின் நீங்கள் கொடுத்த மின்னஞ்சலுக்கு உங்கள் வலைப்பூ ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா இல்லையா என்ற தகவல் வரும். அதன்பின் தமிழ்மண ஓட்டுப் பட்டையை நீங்கள் உங்கள் வலைப்பூவில் நிறுவலாம். ஒட்டுப்ப்பட்டை நிறுவ கீழ்க்கண்ட லின்க்கிர்க்கு செல்லவும் .

http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html


இதன்பின் ஒவ்வொரு பதிவு போட்டபின்பும் உங்கள் பதிவை "submit to tamilmanam " என்ற பட்டனை கிளிக் செய்வதன் மூலம் தமிழ்மண தளத்தின் முகப்பு பக்கத்தில் கொண்டு வரலாம். உங்கள் வாசகர்களும் ஓட்டு இட முடியும்.

தமிழ்மணம் உங்கள் பதிவின் ஆர்.எஸ்.எஸ் பீட் செட்டிங்கை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. எனவே அதில் நீங்கள் மாற்றம் செய்தால் தமிழ்மணத்தை தொடர்புகொண்டு அங்கும் மாற்றம் செய்ய வேண்டும்.

இன்ட்லி என்ற தமிழ் வலைப்பூ திரட்டியில் இணைப்பது இன்னும் எளிது .
http://ta.indli.com/register என்ற தளத்திற்கு சென்று புதிய பயனர் கணக்கை துவங்கவும் . பின் கீழே உள்ள இணையத் தளத்திற்கு சென்று அங்கு சொல்லப் பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்

http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

இதன் பிறகு உங்கள் ஒவ்வொரு பதிவிலும் இன்ட்லி ஓட்டுப் பட்டை இருக்கும் அதில் submit பட்டனை கிளிக் செய்து பதிவுகளை இணைக்கலாம். இன்ட்லி உங்கள் பதிவின் உரலை (லிங்க்) வைத்து வேலை செய்கிறது.

அன்புடன் எல்கே

நவம்பர் 29, 2010

ஜகத்குரு - முன்னுரை


தேடலை பற்றி எழுதிக் கொண்டிருந்தபொழுது குருவின் முக்கியத்துவத்தை சிலர் கேட்டிருந்தனர். அதே சமயத்தில் எதேச்சையாக திரு பாலகுமாரன் எழுதிய "காலடித் தாமரை " என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகம் ஜகத்குரு ஆதி சங்கரர் அவர்களை  பற்றிய புத்தகம்.


பலமுறை படித்திருந்தாலும் , பாலகுமாரன் எழுத்துகளும் அவர் சொல்லும் முறையும் கொஞ்சம் மாற்பட்டு இருந்தன மற்றவர்களிடம் இருந்து. ஒரு சில இடங்கள் பலமுறை படித்தப் பின்தான் புரிந்தது.

அதை படித்து முடித்தப் பின், ஆதி சங்கரரை பற்றியும் அவர்  தனது குறுகிய வாழ்நாளில் செய்த சாதனைகளை பற்றியும் எழுத வேண்டும் என்று ஒரு வாரமாக மனதில் ஒரு ஆசை.  ஒரு பக்கம் பயம் இருந்தாலும் ,மறு பக்கம் எப்படியும் எழுதிவிடலாம் என்று ஒரு நம்பிக்கை. வாரம் இரண்டு பதிவுகளில் ,ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிகிழமைகளில் இந்தத் தொடர் வரும்.


இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ மகான்கள் பற்பல காலக் கட்டங்களில் அவதரித்துள்ளனர். அப்படி அவதரித்தவர்களில் , சாட்ஷாத் அந்த பரம்பொருள் உமா மகேஸ்வரனின் அவதாரமாகவே கருதப்படுவர் ஆதி சங்கரர். கடவுளின் தேசமாகக் கருதப் படும் கேரளாவிலே காலடி என்னும் சிறு கிராமத்திலே பிறந்து இந்த தேசம் எல்லாம், பிரயாணித்து , ஹிந்து மதத்தின் பெருமைகளை பரப்பி, அன்றைய காலகட்டத்திலே பலவித மூடப் பழக்கங்களுக்கு மக்களை அதில் இருந்து விடுவித்து ஆறு வித பக்தி மார்க்கங்களை நிறுவினார். அவை கணாபத்யம்(கணபதி வழிபாடு) சைவம் ,வைணவம், சாக்தம் (ஷக்தி வழிபாடு),கௌமாரம்(முருகன் வழிபாடு), சௌரம்(சூரியன்  வழிபாடு ).

இவர் அத்வைத சித்தாந்தை நிலை நிறுத்தி, வேறு மார்கத்தில் இருந்த பலரையும் வாதத்தால் வென்று அத்வைத கொள்கைகளை பரப்பினார். இது மட்டுமில்லாது பல்வேறு சுலோகங்களையும் இயற்றி உள்ளார். இவை அத்தனையும் செய்து இவர் சமாதி அடைந்த பொழுது இவருக்கு வயது வெறும் முப்பத்தி இரண்டு தான்.

இனி வரும் பகுதிகளில் ,அவரது வாழ்க்கை வரலாற்றையும் அவரது சித்தாந்தமான அத்வைதத்தை பற்றியும் பார்ப்போம்.

இந்தத் தொடருக்கு நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அன்புடன் எல்கே

நவம்பர் 27, 2010

டெம்ப்ளேட் மாற்றம்

"பிலாசபி பிரபாகரன் " டெம்ப்ளேட் எப்படி மாற்றுவது  ? எங்கிருந்து தரவிறக்கம் செய்வது என்று கேட்டிருந்தார். அவருக்காகவும், இது  பற்றி தெரியாத மற்றவர்களுக்காகவும்  இந்தப் பதிவு .

இரண்டு வகையில் டெம்ப்ளேட்கள் நமக்கு கிடைக்கின்றன. ஒன்று ,ப்ளாக்ஸ்பாட் தரும் டெம்ப்ளேட்கள். இதை மாற்றுவது பற்றி அனைவருக்கும் தெரியும் என்று எண்ணுகிறேன். இன்னொன்று மற்ற தளங்களில் வலைப்பூக்களுக்கு என்று கிடைக்கும் டெம்ப்ளேட்கள். இத்தகைய டெம்ப்ளேட்கள் எப்படி நம் வலைப்பூக்களில் எப்படி கொண்டுவருவது என்றுப் பார்ப்போம்.

கீழ்க் கண்ட தளங்கள் நமக்கு பலவித டெம்ப்ளேட்களை தருகிறது.
http://www.templatesblock.com/
http://www.raytemplates.com/
http://compartidisimo.blogspot.com/

உதாரணத்திற்கு http://www.templatesblock.com/ சென்று ஒரு டெம்ப்ளேட் எப்படி டவுன்லோட் செய்வது என்று முதலில் பார்ப்போம். இந்ததளத்திற்கு  சென்றால் கிட்டத்தட்ட இருபது பக்கங்கள் இருக்கின்ற. உங்களுக்கு எந்த டெம்ப்ளேட் பிடித்து இருக்கிறதோ  அதன் கீழ் உள்ள ரீட் மோர் என்ற பட்டனை அமுக்கினால், டெமோ மற்றும் டவுன்லோட் என்ற இரு ஆப்சன்களை பார்க்கலாம். டெமோ பட்டன் மூலம், அந்த டெம்ப்ளேட் போட்டப்பின் ஒரு வலைத் தளம் எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

ஒரு டெம்ப்ளேட் தேர்வு செய்தாகிவிட்டது . அதை நீங்கள் உபயோகப் படுத்தவேண்டும் என்றால், முதலில் டவுன்லோட் பட்டனை  கிளிக்  செய்து அந்த டெம்ப்ளேட்டை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள். இப்பொழுது தரவிறக்கம் செய்த பைல் ஜிப் (ZIP ) செய்யப் பட்டிருக்கும். எனவே, அதை உங்கள் வலைப்பூவில் உபயோகப் படுத்தும் முன் அன்ஜிப்(UNZIP ) செய்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது உங்கள் வலைப்பூவிற்கு சென்று டாஷ்போர்ட் செல்லுங்கள். பிறகு டிசைன் . அதன் பிறகு எடிட் ஹெச் டி எம் எல் செல்லுங்கள். பின் இப்பொழுது நீங்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட் பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு டவுன்லோட் புல் டெம்ப்ளேட் என்ற இணைப்பை கிளிக் செய்து உங்கள் கண்ணினியில் வைத்துக் கொள்ளவும்.டெம்ப்ளேட் மாற்றும் பொழுது எதாவது பிரச்சனை என்றால் பழைய டெம்ப்ளேட்டிற்கு மீண்டும் வந்து விடலாம்.

பிறகு, "Upload a template from a file on your hard drive"  இதற்க்கு அருகில் இருக்கும் "browse"  பட்டனை கிளிக் செய்து உங்கள் கணிணியில் தரவிறக்கம் செய்த புதிய டெம்ப்ளேட்டை தேர்வு செய்து கொண்டு,  upload பட்டனை கிளிக் செய்யவும்.

இதற்கு அடுத்த கட்டமாக கீழ்க்கண்ட படத்தில் உள்ளவாறு ஒரு ஸ்க்ரீன் வரும். இப்பொழுது நீங்கள் வைத்துள்ள விட்ஜெட்ஸ் வேண்டுமா இல்லை வேண்டாமா என்று கேட்கும். இங்கு "keep widgets" என்ற பட்டனை சொடுக்கினால் போடும். உங்கள் வலைப்பூ புதிய டெம்ப்ளேட்டில் காட்சியளிக்கும்.

டெம்ப்ளேட் மாற்றியப் பிறகு நீங்கள் எந்த எந்த திரட்டியின் ஓட்டுப் பெட்டிகளை வைத்து இருந்தீர்களோ அவற்றின் நிரல்களை மீண்டும் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் ஓட்டுப் பெட்டி வரும்.

உங்களுக்குப் புதிய டெம்ப்ளேட் பிடிக்கவில்லை மீண்டும் பழைய டெம்ப்ளேட் வேண்டும் என்றால், மேலே சொன்ன அதே வழிகளைப் பின்பற்றி பழைய டெம்ப்ளேட்டிற்கு சென்று விடலாம்.

அன்புடன் எல்கே

நவம்பர் 26, 2010

சிரிக்க மட்டுமே

என்ன பதிவு எழுதலாம்னு யோசித்து கொண்டு இருந்தேன். அப்பொழுது எப் எம் ரேடியோவில் பாட்டு டெடிகேட் செய்யும் நிகழ்ச்சி ஒலிப் பரப்பாகிக்  கொண்டிருந்தது . 


 அதைபோல் நமது பதிவர்களுக்காக ஒரு சில பாடல்கள் இங்கு நான் டெடிகேட் செய்கிறேன் .(பேச்சு பேச்சா இருக்கணும், இதை படிச்சிட்டு யாரும் ஆட்டோ, இட்லி பார்சல் இதெல்லாம் அனுப்பக் கூடாது இப்பவே சொல்லிட்டேன் )

அமீரக சிங்கம் "தேவா" அவர்களுக்கு நான் டெடிகேட் செய்யும் பாடல் "சேது" படத்தில் வரும் "எங்கே எங்கே செல்லும் இந்தப் பாதை ". இதற்கு நான் காரணம் சொல்லனுமா ????

அடுத்து வருவது பிரபாகரன். இவர் தனது ஐடியில் தத்துவத்தை வைத்திருப்பதால் இவருக்காக நாம் டெடிகேட் செய்யும் பாடல் "சட்டி சுட்டதடா ,கை விட்டதடா ".


அன்புத் தம்பி சௌந்தருக்கு நான் பிரியமுடன் டெடிகேட் செய்யும் பாடல் கண்ணதாசனின் "நான் கவிஞனும் இல்லை ,நல்ல ரசிகனும் இல்லை" என்றப் பாடல்.

 அடுத்து நம்ம சோழப் பரம்பரையில் வந்த எம் எல் ஏ விற்க்காக மைக் மோகன் நடித்த இரட்டைவால் குருவிப் படத்தில் இடம் பெற்ற "ராஜ ராஜ சோழன் " என்றப் பாட்டு.

 யாருப்பா அங்க , வெறும் ஆண் பதிவர்களுக்கு மட்டுதான் டெடிகேட் செய்வீர்களா என்றுக் கேட்பது , இதோ அடுத்து வருவது

நமது இட்லி புகழ் "அப்பாவி தங்கமணி ".  இவருக்காக நான் டெடிகேட் செய்யும் பாடல் சித்தி தொடர் மூலம் பிரபலம் அடைந்த "கண்ணின் மணி கண்ணின் மணி நிஜம் கேளம்மா  " என்றப் பாடல். இவரது மைன்ட் வாய்சை இவர் கேட்பது இல்லை என்பதால்.

" காதோடுதான் நான் பாடுவேன்,மனதோடுதான் நான் பேசுவேன்" என்றப் பாடல், இது "மனதோடு மட்டும் " கௌசல்யாவிற்க்காக.

அடுத்தப் பாடல் "just for laugh" காயத்ரிக்காக . அவருக்கு டெடிகேட் செய்யும் பாடல் "சிரிப்பு வருது சிரிப்பு வருது " என்ற மிகப் பழையப் பாடல் .

இதோட நிறுத்திக்கறேன். இதுக்கு மேல எழுதினா , பல விபரீதங்கள் நடக்க வாய்ப்பு இருக்கு .(இட்லி வராம என்னை காப்பாத்து முருகா )


அன்புடன் எல்கே

நடவடிக்கை எடுக்குமா ????

இன்றோடு இரண்டு வருடங்கள் முடிந்து விட்டன அந்தக் கோர சம்பவம் நடந்து முடிந்து. சம்பவம் நடந்த இடங்களும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுவிட்டன. சில,பல மாதங்கள் பரப்பரப்பு செய்தியாய் கத்திய மீடியாக்களும் தங்கள் கேமராவை வேறு பக்கம் திருப்பி விட்டன.

நீதிமன்ற விசாரணையும் முடிந்து விட்டது,தீர்ப்பும் தரப்பட்டு விட்டது ஆனால் ,குற்றவாளி இன்னும் உயிரோடு, நமது வரிப் பணத்தில் . இன்னும் இருபது நாட்களில், நமது பார்லிமென்ட்டை தாக்கி ஒன்பது வருடங்கள் முடிவடைய போகின்றது. அதிலும் தீர்ப்பு தரப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. ஆனால் ,குற்றவாளி இன்னும் உயிரோடு ....

கேட்டால், ஜனாதிபதி இன்னும் கருணை மனுவை பற்றி முடிவு சொல்லவில்லை என்கிறார்கள். அவரிடம் கேட்டால், நான் உள்துறைக்கு அனுப்பி இருக்கிறேன் என்கிறார். உள்துறை அமைச்சரோ புது டெல்லி அரசாங்கத்திடம் இருந்து பதில் வரவில்லை என்கிறார் . அப்பொழுது இதற்கு யார் பொறுப்பு ??

தங்கள் இன்னுயிரை கொடுத்த ராணுவ வீரர்களுக்கு என்ன பதில் ? மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களின் குடும்பத்தினருக்கு என்ன சொல்லப் போகின்றனர் ஜனாதிபதியும் அரசாங்கமும் ??

கருணை மனுவிற்கு பதில் அளிக்க காலக் கெடு இல்லையா ? நாட்டை தாக்கும் தீவிரவாதிகளுக்கு எதற்கு நாம் கருணை காட்ட வேண்டும் ? எதற்கு விசாரணை நடத்த வேண்டும் ?

இதன் மூலம் தீவிரவாதிகளுக்கு என்ன சொல்ல வருகிறார்கள் ? நீங்கள் வந்து குண்டு வையுங்கள் யாரையும் கொள்ளுங்கள் நாங்கள் உங்களை எதுவும் செய்ய மாட்டோம் என்று சொல்லாமல் சொல்லுகின்றனரா ??

மும்பை தாக்குதல் நடந்து கொண்டிருந்தபொழுது பாதுகாப்புப் படையின் ஒவ்வொரு நடவடிக்கையையும் பத்திரிக்கை தர்மம் என்ற பெயரில் நேரடி ஒளிபரப்பு செய்து தீவிரவாதிகள் எளிதில் நமது பாதுகாப்பு படையினரின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்ள வழி செய்த பர்க்கா தத் இன்று எங்கே சென்றார் ? இல்லை பிரானாய் ராய் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? பரப்பரப்பு உண்டு பண்ணு செய்திகளில் மட்டுமே ஒரு சில வாரங்களுக்கு ஒளி பரப்புவதுதான் பத்திரிக்கை தர்மமா ??

இனியாவது அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா ???

மும்பை தாக்குதலில் உயிர் இழந்த மக்களுக்கும், தீவிரவாதிகளை கொல்லும் முயற்சியில் தங்கள் உயிரை துறந்த பாதுகாப்பு படையினருக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள் ...


அன்புடன் எல்கே

நவம்பர் 25, 2010

என்றுத் தணியும் ?

குஜராத் மக்களை தொடர்ந்து, பீகார் மக்களும் வளர்ச்சி பணிகளுக்கு ஆதரவாக ஓட்டு போட்டுள்ளனர். பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி ஓரளவு எதிர்ப்பார்க்கபட்டதே என்றாலும், இவ்வளவு பெரிய வெற்றியை யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது.

ஆம், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 206 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்றால் அது அங்கு போட்டியே இல்லை என்பதை காட்டுகிறது. ஜாதி, மதம் முக்கியம் இல்லை, வளர்ச்சிதான் என்று பீகார் மக்கள் ஆணித் தரமாக சொல்லி உள்ளனர்.


இதே போன்றுதான் கடந்த குஜராத் தேர்தலிலும் நடந்தது. அனைத்து மீடியாக்களும் மோடி தோற்று விடுவார் என்று சொன்னார்கள் . ஆனால் என்ன நடந்தது ? சமீபத்தில் அங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள ஆறு மாங்கரட்சிகளையும் மோடி வென்றார். பாஜகவின் சார்பில் போட்டியிட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். முஸ்லிம் அதிகம் உள்ள தொகுதியில் போட்டியிட்ட ஹிந்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

அங்கு மக்கள் இலவசங்களுக்கோ இல்லை ஜாதி,மத உணர்வுகளுக்கோ முக்கியம் அளிக்காமல் வளர்ச்சி பணிகளுக்கே முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் தமிழகத்தில் ????

எனக்கு தெரிந்த நண்பர், பீகார் அரசாங்கத்தின் e-governance ப்ராஜெக்டில் ஈடுபட்டுள்ளார் ,அவர் சொன்னது "நிதிஷ் இன்னும் ஐந்து வருடம் ஆட்சியில் நீடித்தால் , வளர்ச்சியில் தமிழகத்தை பின்னுக்குத் தள்ளும் ". என்ன கேக்கறதுக்கு அதிர்ச்சியா இருக்கா ?? உண்மை அதுதான். வன்முறைகளை பெருமளவு குறைத்துள்ளார். அரசாங்க பணிகளில் லஞ்சத்தை பெருமளவு குறைத்துள்ளார். முக்கியமாக , அடிப்படை கல்வியிலும், பெண்கள் முன்னேற்றத்திலும் அதிக கவனம் செலுத்தினார். விளைவு ,இன்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.


ஆனால் , இங்கு என்ன நடக்கிறது,? ஊழல் குற்றச்சாட்டில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சருக்கு ஆதரவாய் ஒரு கூட்டம் , அவர் ஜாதியின் காரணமாக அவரை இந்தக் குற்றச்சாட்டில் சிக்க வைத்துள்ளனர் என்று கூறுகின்றது.

தமிழக மக்கள் என்று ஜாதியையும், இலவசங்களையும் மறந்து வளர்ச்சி பணிகளுக்கு மட்டும் ஓட்டுப் போடுகின்றனரோ அப்பொழுதுதான் தமிழகம் முன்னேறும் .

பீகாரும், குஜராத்தும் முன்னேறி வருவதை பார்த்தல் , அங்கு சென்று விடலாமா என்று தோன்றுகிறது .


அன்புடன் எல்கே

நவம்பர் 24, 2010

தேடலின் தொடர்ச்சி V

சென்ற பதிவில் நண்பர் வேலு "தியானம்" என்றால் என்ன என்று கேட்டிருந்தார். சுருக்கமாக சொல்வதென்றால் "உங்களை நீங்கள் அறிவது " இதுதான் அதன் பொருள். அதாவது, வேறு வேலைகள் செய்யாமல் ,மனதில் வேறு எந்த என்ன ஓட்டமும் இல்லாமல் அமைதியில் ஆழ்ந்து இருக்கும் பொழுது , உங்களை பற்றி நீங்கள் அறிய முடியும். இந்த இடத்தில் "உங்களை " என்ற சொல் ஆன்மாவை குறிக்கிறது.

நான் படித்த ஒரு ஜென் கதையில் , தியானம் என்றால் என்ன என்று கேட்கும் சீடனுக்கு "கவனித்தல் " என்று பதில் சொல்லுவார் குரு. இங்கு கவனித்தல் என்பது எதை குறிக்கிறது ? "தன்னை கவனித்தல் " என்பதே இதன் அர்த்தம் .

பொதுவாக, தியானத்தின் முதல் நிலையில் "உங்கள் மூச்சுக் காற்றை கவனியுங்கள் " என்று சொல்லுவார்கள். அது சீராக இருக்கவேணும். எந்த விட படபடப்போ இல்லாமல் இருக்கவேண்டும்.

பாலாஜி சரவணன், ஆரம்ப நிலை தியானத்திற்கு குரு அவசியமா என்று கேட்டார். ஆம் அவசியமே என்பதுதான் என் பதில். ஏனென்றால், ஆரம்பக் கட்டத்தில்தான் மனம் நம் வசம் அடங்க மறுக்கும். அதற்குண்டான வழிமுறைகளை முறைப்படி ஒரு குருவிடம்தான் கற்றுக் கொள்ளவேண்டும்.

அதுமட்டுமில்லாது, எந்த ஒரு கலையாக இருந்தாலும், குரு மூலம் கற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. எனவே தகுந்த குருவின் வாயிலாக தியானத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் மாறலாம். எனவே நான் ஒரு குறிப்பிட்ட நபரிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று யாரையும் நான் சிபாரிசு செய்யமாட்டேன். உங்களுக்கான குருவை நீங்கள் தான் தேட வேண்டும். அவரிடம் முறையாக தியானம் பழகுங்கள்.

இதனுடன் தியானத்தை பற்றி முடித்துக் கொள்கிறேன்.

தேடல் தொடரும்

அன்புடன் எல்கே

நவம்பர் 23, 2010

தேடலின் தொடர்ச்சி IV


சென்ற தேடலில் , செல்வா தம்பி மனதை கட்டுப் படுத்தினால், புகழ் அடையலாம் என்ற ஆசைதானே, மனதை கட்டுப் படுத்தக் காரணம் என்று சொல்லி இருந்தார். அவருக்கு விரிவான பதில் முதலில் பார்ப்போம்.

மனத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது ஆசையினால் அல்ல. அது நாம் செய்ய வேண்டிய கடமை ஆகும். ஒரு சின்ன உதாரணம். இராவணன் மிக சிறந்த வீரன்,நல்ல பக்திமானும் கூட. அதுமட்டுமில்லை, அவன் வீணை மீட்டுவதில் வல்லவன். இப்படி பல இருந்தும், அவன் மனதை கட்டுப்படுத்த தவறியதால் , அவன் போரில் இறந்தான். ஒருவன் நல்லவனாக வாழவும்  மனக் கட்டுப்பாடு அவசியம் ஆகிறது .

திரு எம். எஸ். உதயமூர்த்தி எழுதிய "எண்ணங்கள்" புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டிருப்போம். அதில் அவர் சொல்லி இருப்பதும் இதுதான். மனதை அடக்கப் பழகுங்கள். அதற்கு உங்கள் நோக்கம் , குறிக்கோள் என்ன என்பதை சொல்லுங்கள். அதை நீங்கள் மனதிற்கு சொல்லி அதற்கு பயிற்சி கொடுத்தால் ,உங்களை அது உங்கள் குறிக்கோளை நோக்கி அழைத்து செல்லும். 

உபநிஷத்தில் ஒரு சிறு கதை வரும். நசிகேதன் என்னும் சிறுவனின் கதை. எமன் அவனுக்கு மூன்று வரங்களை தருவார். அவற்றில் ஒன்றாக ஆத்மாவை பற்றிய அறிவு எனக்கு தர வேண்டும் என்று கேட்பான். எமனும் எவ்வளவோ போராடுவர், வேறு என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று. ஆனால் நசிகேதன் ஸ்திரமாக எனக்கு அது மட்டும்தான் வேண்டும் என்று குறிக்கோளில் வெற்றி பெறுவான். தான் கொண்ட குறிக்கோளில் உறுதியாக மனதை செலுத்தி அதிலேயே ஒன்ற வேண்டும். அவ்வாறு ஒன்றினால் நீங்கள் எந்தக் குறிக்கோளை அடைய விரும்புகிறீர்களோ அதை அடையலாம்.

 எதை அடைய வேண்டுமானாலும், மனதை கட்டுபடுத்தும் திறன் வேண்டும். அது இல்லையேல் எந்த ஒரு உயரிய இலட்சியத்தையும் அடைதல் மிகக் கடினம். இல்லாத ஒன்று என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். அவர் எதை சொல்ல வருகிறார் என்று புரியவில்லை. அவர் இந்தப் பகுதியில் அதை சொன்னால், அதை பற்றியும் நாம் பார்ப்போம்.

மனதைக் கட்டுபடுத்த சிறந்த வழி தியானம். இதை பயிலும் முன் நாம் உற்சாகமாகத்தான் இருப்போம். புதிய விஷயத்தை கற்கும் ஆவலில். நாம் நினைப்பது போல் இது எளிதான விஷயம் அல்ல. ஆரம்பத்தில் நம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் தோன்றும். பிறகு மீண்டும் தனது சுய ரூபத்தை காட்டும்.

தியானம் என்றால் ஒரு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ ,கண்ணை மூடிக் கொண்டு அமருவது அல்ல. அந்த நேரத்தில், மனதை அலைபாய விடாமல் வேறு எதை பற்றியும் நினையாமல் ஒருமுகப் படுத்த வேண்டும். ஆரம்பக் கட்டங்களில் , கண்ணை மூடி அமர்ந்தவுடன் அன்று செய்யாமல் விட்ட வேலையும் , தொலைகாட்சியில் அந்த நேரத்தில் வரும் மெகாத் தொடரும் நம் மனதில் வரும். அவற்றை புறம் தள்ளி, ஒரு புள்ளியில் நம் மனதை நிறுத்த பயில வேண்டும்.

யோகமோ இல்லை தியானமோ ஒரு குருவிடம் முறையாக  பயில வேண்டும்.  புத்தகத்தை பார்த்தோ இல்லை இணையத் தளத்தை பார்த்தோ பயில வேண்டாம். எந்த ஒரு விஷயமும் ஒரு குரு மூலம்தான் கற்றுக் கொள்ளவேண்டும். இன்று தியானம் பற்றி பலர் பலவித வகுப்புகள் எடுக்கின்றனர். எனக்கு தெரிந்து பல பெரிய மென்பொருள் நிறுவனங்கள் இதற்காக வெளியில் இருந்து ஆட்களை அழைத்து வகுப்புகள் எடுக்கிறார்கள் தங்களது ஊழியர்களுக்காக.

முறையாக பயின்று ,தியானம் செய்து பாருங்கள். அதன் அற்புதத்தை உணருவீர்கள்

-தொடரும்


அன்புடன் எல்கே

நவம்பர் 21, 2010

கிரிக்கெட்டும் மற்ற விளையாட்டுகளும்


ஆசியப் போட்டிகள் பற்றிய பதிவுக்கு பின்னூட்டம் அளித்த பலர் சொன்னது கிரிக்கெட்டினால் மற்ற விளையாட்டுகள் பாதிக்கப்படுகின்றன. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும்., அது மட்டுமே காரணம் இல்லை. இதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

முதலில் கிரிக்கெட்டை இந்தியாவில் நிர்வகிப்பது சுயேச்சை அதிகாரம் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம். மற்ற விளையாட்டுகளுக்கு அவ்வாறு இல்லை. அதை மத்திய அரசாங்கமே நிர்வகிக்கிறது. இதனால், வருடம்தோறும் அதற்கென்று ஒதுக்கப் படும் தொகை சரியான அளவு இல்லை. தனியார் நிறுவனங்கள் ஊக்கம் தர தயாராக உள்ளன. ஆனால் ,அவை நேரடியாக வீரர்களுக்குத்தான் செலவு செய்ய தயாராக உள்ளன. இந்திய விளையாட்டு வாரியத்திடம் பணம் கொடுக்க அவை தயாராக இல்லை. காரணம் ஊழலே. 

இந்தியாவின் புகழ்பெற்ற டாடா நிறுவனம், கால்பந்துக்கென்று தனியாக ஒரு பயிற்சி பள்ளியே நடத்தி கொண்டுள்ளது. இந்திய கால்பந்து லீகில் அந்த அணியும் விளையாடுகிறது. மற்றொரு  நிறுவனமான சஹாரா ஹாக்கி அணிக்கு ஸ்பான்சர் செய்கிறது. ஆக , நிறுவனங்கள் தயாராக உள்ளன உதவி செய்ய, ஆனால் நமது ரெட் டேப் விதிமுறைகள் காரணமாக அவை களம் இறங்க யோசிக்கின்றன . 
 


அதேபோல், மற்ற விளையாட்டு போட்டிகளுக்கு தகுதிவாய்ந்த வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிப்பதிலும் பிரச்சனை உள்ளது. புது பயிற்சியாளர் வந்தவுடன் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக யாரையும் மாற்ற இயலாது. அவர் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கவேண்டும். கொஞ்சம் பொறுமையாக இருந்தால் நடக்கும். ஆனால் அவருக்கு போதுமான நேரம் தராமல் அவரை நீக்குவது உடனே மற்றொருவரை நியமிப்பது என்று இருந்தால் நிலைமை மாறவே மாறாது.

கால்பந்தில் ஹக்டன் என்பவரை நியமித்தார்கள். ஆரம்பத்தில் எந்த வித மாற்றமும் தெரியவில்லை. ஆனால் அவரே தொடர்ந்து இருந்த காரணத்தினால், ஆசிய கோப்பை கால்பந்தாட்ட போட்டிக்கு (2011 ) இந்தியா பல வருடங்கள் கழித்து தகுதி பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் ஒரு உலகக் கோப்பையை பெற்ற பின்னே ,மக்களின் கவனம் அதில் திரும்பியது. மேலும் அது ஒரு நாள் அல்லது ஐந்து நாட்கள் நடக்கும் போட்டி என்பதால் அதன் மூலம் தொலைகாட்சி வருவாய் அதிகம். அதிக விளம்பரங்கள் போடலாம் . அதனால்தான் நிறுவனங்கள் கிரிக்கெட்டில் அதிகப் பணத்தை கொட்டுகின்றன.

பல்வேறு விளையாட்டு வாரியங்களையும் சுய அதிகாரம் உள்ள அமைப்பாக மாற்ற வேண்டும்.அதன் பொறுப்புகளில் ஒய்வு பெற்ற வீரர்கள் இறுகக் வேண்டும். அரசியல்வாதிகள் அதில் எந்த விட குறுக்கீடும் செய்யக் கூடாது. வீரர்களுக்கான உபகரணங்கள் சரியான நேரத்தில் அளிக்கப்படவேண்டும். (படகுப் போட்டியில் பத்து வருட பழையப் படகை வைத்தே பதக்கம் வென்றுள்ளனர் நமது வீரர்கள் ).

இவற்றை செய்தால், மற்ற விளையாட்டு போட்டிகளிலும் கிரிக்கெட் அளவு ஜொலிக்க முடியும். அன்புடன் எல்கே

நவம்பர் 20, 2010

ஆசிய போட்டிகள்

தலைநகரில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கங்களை  குவித்து (சரியா சொல்லனும்னா 101 ) இரண்டாவது இடத்தை பிடித்தது,அதில் நடந்த ஊழல்களை ஓரளவு மறக்க வைத்தது இந்தப் பதக்க வேட்டை. அதைத் தொடர்ந்து ஆசிய போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எப்பவும் நான் பெரிய அளவில் எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் இந்த முறை நம்பினேன். ஆனால் வழக்கம் போல ஏமாற்றி விட்டனர்


தில்லியில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை குவித்த நம் வீரர்கள் , இப்பொழுது குறி தவறி விட்டனர் . மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர்கள் அவர்கள்தான். இதற்கடுத்து டேபிள் டென்னிஸ் ,அவர்களும் சொதப்பல். பேட்மின்டனில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஆன சாய்னா நேற்று தோற்று விட்டார்.

இதில் ஒரே சந்தோசம், நீச்சலில் வெகு நாட்களுக்குப் பிறகு பதக்கமும், ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கமும் தான். குத்துசண்டை நம்பிக்கை அளிக்கும் போல் இருக்கிறது. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதை நான் எழுதும் சமயத்தில் பதக்கப் பட்டியலில் பதினொன்றாவது இடத்தில் உள்ளது இந்தியா.

நமக்கு வரும் சந்தேகம் , ஒரே மாதத்தில் எப்படி இவ்வளவு மோசமாக மாறுவார்கள் நமது வீரர்கள்? இல்லை அவர்கள் மாறவில்லை என்றால் உண்மை என்ன ???

காமன்வெல்த் போட்டிகளில் , போட்டியின் தரம் அவ்வளவு அதிகம் இல்லை என்பதே உண்மை. பல வீரர்கள் இதில் கலந்துக் கொள்ளவில்லை. அதேப்போல் ஆஸ்திரேலியா மட்டுமே அதில் ஜாம்பவான். ஆனால் ஆசிய போட்டிகள் என்று வரும்பொழுது, சீனா,ஜப்பான், கொரியா ,சிங்கப்பூர் போன்றவை இந்தியாவை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.

அடுத்து, ஆசிய போட்டிக்கும் ,காமன்வெல்த் போட்டிக்கும் இருந்த மிகக் குறுகியக் கால இடைவெளி. எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் போட்டிகளில் பங்கேற்கும் பொழுது , அதிகபட்ச மன அழுத்தம் எதிர்பார்ப்புகளினால் உண்டாகும். அதில் இருந்து விடுபட்டு அடுத்த போட்டியில் கலந்துகொள்ள கால இடைவெளி தேவை. காமன்வெல்த் போட்டிகள் இன்னும் கொஞ்சம் நாள் முன்னால் நடத்தி இருக்கலாம்.

இதில் இன்னொரு கொடுமை , வாட்டர் போலோ அணிக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லையாம். ஆனால், அங்கு சென்று நன்றாக கோல் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம் .

சென்றமுறை ஐம்பது மூன்று பதக்கங்கள்  வாங்கினர் நமது வீரர்கள் . இந்த முறை அவ்வளவு வாங்குவார்களா???

 பி.கு. இன்று எனது அக்காவிற்கு  பிறந்த நாள் . அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அன்புடன் எல்கே

நவம்பர் 19, 2010

அன்றே...

நேற்று சாதாரணமானவள் என்பவர் எழுதிய இந்த இடுகையை படித்தப் பின் எனக்கு என் வீட்டில் நடந்த சம்பவம் நினைவிற்கு வருகிறது.


நான் ஐந்து வயதாக இருந்த பொழுது நடந்த சம்பவம் இது. என் பாட்டி (அப்பாவின் அம்மா ) வயிற்றுப்போக்கினால் அவஷ்தைப் பட்டார். வழக்கமான மருந்துகள் கொடுத்ததும் சரியாகாத காரணத்தால் ,எங்கள் குடும்ப மருத்துவரின் அறிவுரைப் படி அப்பொழுது சேலத்தில் பிரபலமாய் இருந்த இரண்டெழுத்து மருத்துவனை ஒன்றில் உள் நோயாளியாக சேர்த்தோம்.


என் பாட்டி அறுபது வயதை கடந்தவர். மருந்துகள் எதுவும் தராமல், நான்கு  பாட்டில் க்ளுகோஸ் ஏற்றத் துவங்கினர். இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் என்று ஒரே சமயத்தில். அவர் என்ன துன்பம் அடைந்து இருப்பார் அந்த வயதில் ?


அந்த பாட்டில்கள் முடிந்தவுடன் அடுத்த முறை மறுபடியும் க்ளுகோஸ் செலுத்தத் துவங்கினர். அங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது.அளவிற்கு அதிகமாய் க்ளுகோஸ் ஏற்றியதால் அதிகபட்ச அளவை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டிய சிறுநீரகம் பழுதடைந்து விட்டது. இவ்வளவு நடந்தும் வழக்கம் போல் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள் எவரும் இதை எங்களுக்கு சொல்லவில்லை. 
இரவுப் பணிக்கு வந்த மருத்துவர் ஒருவர், கொஞ்சம் வயதானவர். அவர்தான் பரிசோதனை பண்ணிவிட்டு, அவர் இறந்துவிட்டார். வேண்டுமானால் பாருங்கள் என்று ஆக்சிஜன் குழாயை அகற்றினார் . பிறகுதான் எங்களுக்கு அவர் உயிர் நீத்தது தெரிந்தது. இன்னும் ஒரு பத்து வருடங்களாவது வந்து இருக்க வேண்டிய அவர் தவறான சிகிச்சையால்   உயிரிழந்தார். இன்று லட்சக் கணக்கில் வாங்கினால் அன்று ஆயிரக் கணக்கில் வாங்கினர்.அது அன்ற்டைய தேதிக்கு எங்களுக்கு பெரியத் தொகை .

இது நடந்து இன்று இருபத்தைந்து வருடங்கள் ஆகி விட்டது. பல விஷயங்கள் மாறி விட்டன. ஆனால் இந்த மாதிரி பணம் கொள்ளை அடிப்பவர்கள் மட்டும் மாறவில்லை. நண்பர்களே, வெறும் பேரை கொண்டு அந்த மருத்துவமனையில் சென்று பரிசோதித்துக் கொள்ளாதீர்கள். 

எந்த எந்த மருத்துவமனைகள் நல்ல சிகிச்சை தருகிறார்கள் என்று விசாரித்து ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக் கொண்டால் அவசர காலத்தில் உபயோகம் ஆகும்.

அன்புடன் எல்கே

நவம்பர் 18, 2010

ஸ்டோரேஜ் மீடியா பற்றிய சில விளக்கங்கள்

இது  ஸ்டோரேஜ் மீடியா( இன்டெர்னல்/எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் ,பென் டிரைவ் )எல்லாவற்றிற்கும் இது பொருந்தும் .

சென்ற பதிவின் பின்னூட்டத்தில் நவீன் என்பவர் ஒரு கேள்வி கேட்டு இருந்தார் . அவர் வாங்கிய 1 TB  டிரைவ் 900  GB  மட்டுமே காட்டியதாக சொல்லி இருந்தார். இது அவருக்கு மட்டும் அல்ல. அனைவருக்கும் எழும் நியாயமான சந்தேகம். விண்டோஸ் ஹார்ட் டிஸ்க் அளவை தவறாக காட்டுவதாக எண்ண வேண்டாம். அது சரியாகத்தான் காட்டுகிறது. முதலில் கீழ் உள்ள படத்தை பாருங்கள். 


இது 2 GB பென் டிரைவின் ப்ராபெர்ட்டீஸ் பக்கம். இதில் வலது பக்கம் பார்த்தால் 1.87 GB மட்டுமே காட்டி இருக்கும். பலரும் இதை பார்த்துவிட்டு , அந்த பென் ட்ரைவோ இல்லை ஹார்ட் டிஸ்க்கோ பிரச்சனை உள்ளது என்று எண்ணுகின்றனர். 

அதில் வலது பக்கம் பார்த்தால் சரியான கொள்ளளவு காட்டப்பட்டிருக்கும். ஏன் இந்த மாறுபாடு. இடது பக்கம் இருப்பது டெசிமல் கணக்கீடு ,வலது பக்கம் இருப்பது பைனரி கணக்கீடு . இரண்டுமே சரிதான் . அதனால் உங்களுக்கு கிடைக்கும் கொள்ளளவில் எந்த மாறுபாடும் இல்லை. 

நவீன் மற்றொன்றையும் கேட்டிருந்தார். இப்பொழுது அதே 1 TB டிரைவ் 600 GB மட்டுமே காட்டுவதாக. இது ஹார்ட் டிஸ்க்கில் பிரச்சனை உள்ளதை காட்டுகிறது. எதற்கும் ஒரு முறை டிஸ்க்கை defragmentation செய்துப் பாருங்கள் . அப்படியும் சரியாகவில்லை என்றால் அதை சர்விஸ் சென்டருக்கு எடுத்து செல்லவேண்டும். 

சென்ற பதிவை படித்துவிட்டு திருமூர்த்தி அண்ணா, கூகிள் பஸ்ஸில் ஹார்ட் டிஸ்க் அல்லது பென் டிரைவை சர்வீசுக்கோ இல்லை வேறு ஒரு நபருக்கு விற்கும் முன்னோ செய்ய வேண்டிய பாதுகாப்புகளை பற்றி கேட்டிருந்தார். 

உங்கள் ஹார்ட் டிஸ்க் / பென் டிரைவ் விற்பதாக இருந்தால் அதில் உள்ள டேட்டாவை அழித்து விட்டு ,பார்மெட் செய்துவிடுங்கள். 

சர்விசுக்கு கொடுப்பதாக இருந்தால் ,உங்களால் டிரைவை திறந்து (கணிணி வழியாக )அதில் உள்ள டேட்டா பார்க்க முடிந்தால் அவற்றை உங்கள் கணினியிலோ இல்லை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கிலோ பேக்கப் எடுத்துக்கொண்டு பிறகு சர்விஸ் சென்டரில் கொடுக்கவும். ஏற்கனவே சொன்னமாதிரி டேட்டாவிற்கு யாரும் வாரண்டி தருவது இல்லை. சர்விஸ் செய்யும்பொழுது டேட்டா அழிய வாய்ப்பு அதிகம். 

உங்களால் டேட்டாவை பார்க்க இயலவில்லை அல்லது கணிணியில் டிரைவை ஓபன் செய்ய இயலவில்லை என்றால் நீங்கள் ஒன்றும் செய்ய இயலாது. அப்படியேதான் தரவேண்டும். இந்த இடத்தில் நீங்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் வைத்துள்ள  டேட்டாவை சர்விஸ் சென்டரில் உள்ளவர்கள் பார்க்க இயலுமா அதை வைத்து ஏதாவது செய்வார்களா என்று கேட்டால், அங்கீகரிக்கப் பட்ட சர்விஸ் சென்டரில் உள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் என்றுதான் சொல்லுவேன். 

அவர்களுக்கு இவ்வாறு பார்க்க நேரம் இருக்காது. மேலும் அந்த நிறுவனத்தின் உடன் போடப்பட்டுள்ள  ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் இவ்வாறு பார்ப்பது ஒப்பந்தத்தை மீறுவது. இது மிகப் பெரிய குற்றம். 

மற்றப் படி நீங்கள் உங்கள் ஹார்ட் டிஸ்க்கை ஒரு எஞ்சினியரிடம் கொடுத்து அவர் சர்விஸ் செய்து கொண்டு வருவார் என்றால் அதில் ஆபத்துகள் அதிகம்.  எனவே நீங்கள் கணிணியை பழுதுப்பார்க்க அழைக்கும் நபர் நன்கு தெரிந்தவராக உங்கள் நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் அவசியம் ஆகிறது. 

மேலும் இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள். அடுத்தப் பதிவில் விளக்குகிறேன்.


அன்புடன் எல்கே

நவம்பர் 17, 2010

பென் டிரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் -II

 சென்றப் பதிவில் பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கும் முன் செய்ய வேண்டியவற்றைப் பற்றி பார்த்தோம். இதில் வாங்கியப் பிறகு செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்களை பார்ப்போம்.


நீங்கள் வாங்கிய பொருளுக்குத் தரும் ரசீதை பத்திரமாக வைக்கவும். பின்னால், வாரண்டி காலம் பற்றிய பிரச்சனை வந்தால் உதவும். ஒரு சில நிறுவனங்கள் வாரண்டியில் ரிப்பேர் செய்வதற்கு ரசீது கட்டாயம் என்றும் சொல்கின்றன. அதே போல் பென் டிரைவ் ,மெமரி கார்டு வரும் பேக்கிங் தொலைத்து விடாதீர்கள் . அவற்றில் சில எண்கள் இருக்கும். அவை தேவைப்படும். 

அடுத்து ,பெரும்பாலான நிறுவனங்கள்  தங்கள் இணையத் தளத்தில்,வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய பென் டிரைவ் /ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை பதிவு செய்ய வசதிகள் வழங்கியுள்ளன. குறிப்பாக இதை சொல்லுவதின் காரணம், iomega ஹார்ட் டிஸ்க் பொதுவாக ஒரு வருட வாரண்டி மட்டுமே. ஆனால் நீங்கள் அவர்கள் இணையத் தளத்தில் பதிவு செய்தால் மூன்று வருட வாரண்டி கிட்டும் .

இது மட்டுமில்லாது, நீங்கள் வாங்கும் பென் டிரைவ் போலியா என்பதையும் அவர்களது இணையத் தளத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். பென் டிரைவ் மார்க்கெட்டில் நிறைய போலிகள் உலவுகின்றன.

பென் டிரைவ்,எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் இவற்றின் மேல்புறத்தை முடிந்தவரை கீறல் விழாதவாறு பார்த்துக் கொள்ளவும். பெரும்பாலான சமயத்தில் கீறல் விழுந்த பென் டிரைவ்கள் ரிப்பேர் செய்து தரப்படுவது இல்லை. அவை வாரண்டி விதிமுறைகளில் வராது. 

எனக்குத் தெரிந்த சில நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்களை பகிர்ந்துக் கொள்கிறேன். உங்களுக்கு உபயோகமாக இருக்கும் .

seagate -   1-800-425-4535
iomega  -  1-800-425-9888
beetel   -   1-800-10-23456
Gigabyte- 1-800-425-4945
Lacie     - 1-800-425-3969

அன்புடன் எல்கே

நவம்பர் 16, 2010

பென் டிரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் -I

கணினியின் தேவை பெருகி வரும் இன்றைய சூழலில் ,நம்மில் பெரும்பாலோனோர் பென் ட்ரைவ்களையும்,எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்களையும் அதிகம் உபயோகப் படுத்துகிறோம். இன்று பென் டிரைவ்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதே போன்றுதான் எச்டேர்னல் ஹார்ட் டிஸ்க்களும்.

இவற்றை வாங்கும் முன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னவென்பதை பற்றிப் பார்ப்போம்.ஏனெனில் சில கடைகளில் ஒரு சில விஷயங்களை குறிப்பிடுவது  இல்லை. வாடிக்கையாளர் ஏமாற்றப் படுகின்றார். இந்த விஷயத்தில் பல வாடிக்கையாளர்கள் ஏமாற்றப் பட்டிருப்பதை பார்த்து இருக்கிறேன். அதைத் தவிர்க்கவே இந்தப் பதிவு.

முதலில் உங்களுக்கு தேவை பென் டிரைவா இல்லை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கா என்று முடிவெடுங்கள். அலுவலக வேலைகளை வீட்டில் கொண்டு வந்து செய்பவராய் இருந்தால் நீங்கள் அதிகபட்சம் எவ்வளவு பெரிய பைல்களை கொண்டுவருவீர்கள் என்ற கணக்கு போடுங்கள். இன்று 64 GB  வரை பென் டிரைவ்கள் கிடைக்கின்றன. இதை கொண்டு செல்வது எளிது. உங்கள் பேன்ட் பாக்கெட் இல்லை ஷர்ட்டில் போட்டு கொண்டு வந்து விடலாம். எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்களை விட விலை குறைவுதான்.

அடுத்தது, வாங்கும் முன் மார்கெட்டில் விலை விவரங்களை சேகரியுங்கள். பல நிறுவனங்கள் இப்பொழுது மார்கெட்டில் உள்ளன. உதாரணத்திற்கு seagate,transcend,iomega,buffalo,western digital,lacie போன்றவை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் ஆகும்.அதே போன்று பென் டிரைவ் விற்பனையில் Kingston,HP,transcend,sandisk,verbatim,moserbear   போன்றவை முன்னணியில் உள்ளவை.

உங்களுக்கு எத்தகைய கொள்ளளவு உள்ள ஹார்ட் டிஸ்க்/பென் டிரைவ்  தேவை படும் என்று முடிவெடுத்து அதன் விலைகளை கேட்டாயிற்று. அடுத்து என்ன பண்ணுவது.  அதன் வாரண்டி காலம் பற்றி விசாரியுங்கள். அதே போல், நீங்கள் வாங்கும் கடையிலேயே மாற்றி தருவேன் என்று சொல்லுவார்கள். இருந்தாலும், நீங்கள் நிறுவனத்தின் நேரடி சர்விஸ் சென்டர் எங்குள்ளது, அதற்கு கஸ்டமர் கேர் எண் உள்ளதா என்று விசாரித்து கொள்ளவும். நேரடியாக சர்விஸ் சென்டரில் சென்று மாற்றுவதே சிறந்தது. ஒரு சில நிறுவனங்கள் உங்கள் வீட்டில் வந்து கூட ரிப்பேர் ஆன எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்குகளை பெற்று சென்று பிறகு சர்விஸ் செய்த ஹார்ட் டிஸ்க்கை கொரியரில் அனுப்பி வைக்கின்றனர். எனவே நீங்க அலைய  வேண்டிய அவசியம் இருக்காது.

நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று. இன்றைய பொருளாதார சூழலில் பெரும்பாலான நிறுவனங்கள் உங்கள் பென் ட்ரைவோ இல்லை எக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க்கோ பழுதடைந்தால் புதிய பொருள் தருவது இல்லை, நீங்கள் கொடுத்த பொருளையே சர்விஸ் செய்து கொடுப்பார். இன்னும் சில நிறுவனங்கள் வேறு ஒரு ஹார்ட் டிஸ்க்கோ இல்லை பென் ட்ரைவோ தருவார்கள். ஆனால் அதன் மேல் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருக்கும் "refurbished product".  இதன் அர்த்தம் இது சர்விஸ் செய்யப் பட்ட பொருள் என்பதே.

நீங்கள் வேலை நிமித்தம் வெளிநாடு செல்பவராக இருந்தால் வாங்கும் பொருளுக்கு இண்டர்நேசனல் வாரண்டி உள்ளதா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ளவும். இன்று பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய வசதி தருவது இல்லை.

 எந்த நிறுவனமும் பென் ட்ரைவுக்கும்/ஹார்ட் டிஸ்க்கிற்கும் மட்டுமே வாரண்டி அளிக்கும். அதில் நீங்கள் வைக்கும் டேட்டாவிற்கு இல்லை. உங்கள் பொருள் பழுதடைந்தால் அதை மட்டுமே மாற்றியோ இல்லை சரி செய்தோ தருவர். நீங்கள் அதில் வைத்த டேட்டா காலி. டேட்டா திரும்ப எடுப்பது என்பது தனி வேலை. அதை எந்த நிறுவனமும் இலவசமாக செய்வது இல்லை. அதற்கென்று தனி நிறுவனங்கள் உள்ளன. அவற்றையே  நீங்கள் நாட வேண்டும். எனவே எக்ஸ்டெர்னல் மீடியா எனப்படும் இவற்றில் வைக்கப்படும் டேட்டாவின் ஒரு பேக் அப் உங்கள் கணிணியில் இருக்கட்டும். இந்த மாதிரி தருணங்களில் அது உபயோகப் படும்.

அதே போல் எத்தனை நாட்களில் ரிப்பேறோ இல்லை மாற்றியோ தருவார்கள் என்பதையும் அந்த நிறுவனத்தின் கால் சென்டருக்கு போன் செய்து உறுதி படுத்திக் கொள்ளுங்கள். கடையில் விற்பனைக்காக உடனடியாக மாற்றி தரப்படும் என்று பொய் சொல்ல வாய்ப்புண்டு.

இவ்வாறு நீங்கள் அனைத்து விஷயங்களையும் தெளிவு  செய்து கொண்டு பின்பு வாங்கவேண்டும். விலை கம்மியாக உள்ளதே என்று சரியாக சர்விஸ் இல்லாத நிறவனத்தின் பொருட்களை வாங்கி பின் அவஸ்தை பட  வேண்டாம்.

-தொடரும்

அன்புடன் எல்கே

நவம்பர் 14, 2010

200வது பதிவு

 ஜூன் மாதம் நூறாவது பதிவு எழுதினேன். அடுத்த ஐந்து மாதங்களில் இப்பொழுது இருநூறாவது பதிவு. தொடர்ந்து நான் எழுத ஊக்கம் தரும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். பின்னூட்டம் இடும் மற்றும் இன்ட்லி, தமிழ்மணத்தில் வாக்களிக்கும் அனைவருமே எனது நன்றிக்கு உரியவர்களே.

நூறாவது பதிவில் நான் குறிப்பிட்ட மூன்று நண்பர்கள் எனக்கு துவக்கத்தில் ஊக்கமளித்தவர்கள்.  எனது பெரும்பாலான பதிவுகளில் முதலில் பின்னூட்டம் இட்ட கௌசல்யா, பின்னூட்டங்கள் மூலம் பல பதிவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சித்ரா, ஆனந்தி, திருத்தங்கள் மூலம் என்னை சரி செய்து கொள்ள உதவும் கீதா சாம்பசிவம், என்னை பத்திரிக்கையில் எழுத ஊக்கம் அளித்த சகோதரி தேனம்மை, வித்யாசமான பதிவுகள் மட்டும் இன்றி வித்யாசமான பின்னூட்டம் அளிக்கும் அன்பு நண்பர் தேவா , பின்னூட்டங்களில் நகைச்சுவையை இழைத்து தரும் சௌந்தர் ,அருண் பிரசாத் ,நான் தமிழில் எழுதத் துவங்கியதில் இருந்து தவறாமல் வருகை புரியும் அமைதிசாரல், சகோதரி ஆசியா ஓமர் ,முதல் விருது  அளித்த நண்பர் ஜெய்லானி , அன்பு நண்பர் சைவகொத்து பரோட்டா , வெங்கட் நாகராஜ் ,பாலாஜி சரவணன்,அனந்யா , தக்குடு,காயத்ரி மணி , (இட்லி புகழ் )அப்பாவி தங்கமணி    மற்றும் எனை பின்தொடர்ந்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகளை மீண்டும் ஒருமுறை தனியே சொல்லிகொள்கிறேன்.

இருநூறு என்பது ஒரு எண்ணிக்கையே என்று நன்கு தெரிந்திருந்தாலும், சென்ற வருடம் இதே சமயத்தில் எழுதும் எண்ணம் கூட எனக்கு இல்லை.அப்படி இருக்கையில் இன்று இவ்வளவு பதிவுகள் எழுதி உள்ளேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. பல பதிவுகள் விஷயம் இல்லாமல் மொக்கையாக இருந்தாலும், ஒரு சிலப் பதிவுகளிலாவது சில விஷயங்களை சொல்லி உள்ளேன் என்பதில் மகிழ்ச்சியே.உங்கள் அனைவருக்கும் இதோ இந்த சுடப்பட்ட கேக்.அன்புடன் எல்கே

நவம்பர் 13, 2010

சொந்த மண் XV

தீமிதி பற்றி சென்றப் பகுதியில் இருவர் கேட்டு இருந்தனர். செவ்வாய் பேட்டையில் தீமிதி பழக்கம் இல்லை . குகை மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் பழக்கம் உண்டு. அதேபோல் நண்பர் ஆரூரான் அவர்கள் வண்டி வேடிக்கை பற்றி சொல்லி இருந்தார்.  குகை பகுதியில் மாரியம்மன் பண்டிகையின் ஒரு பகுதியாக வண்டி வேடிக்கை எண்ணும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் அலங்கார ஊர்திகளும், பல்வேறு கடவுள் வேடம் இட்டவர்களும் அணிவகுப்பாக வருவார்கள் . இந்த நிகழ்ச்சியைக் காண நகரத்தின் பலபகுதியில் இருந்தும் மக்கள் கூடுவார்கள். சுருங்க சொல்லப் போனால், குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு போல் இருக்கும். இதில் சிறந்த ஊர்திக்கு பரிசும் கிடைக்கும்.

சொல்ல மறந்த சில இடங்கள்/விஷயங்கள்

௧. கோட்டை பெருமாள் கோவில் , இது நகரப் பேருந்தை ஒட்டி அமைந்துள்ள ஒன்று. வைகுண்ட ஏகாதசி அன்று சேலம் நகர  மக்கள் இங்கு குவிவர்.

௨. சென்னைக்கும் சேலத்திற்கும்  ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு நகரங்களிலுமே நதியாய் ஓடி இன்று கழிவு நீர் மட்டுமே செல்லும் சாக்கடையாய் மாறிய ஆறுகள் உண்டு. சென்னைக்கு கூவம் என்றால் சேலத்திற்கு திருமணி முத்தாறு. ஒரு காலத்தில் நல்ல தூய நீர் ஓடு நதியாய் இருந்ததாம். எனது தந்தை சொல்லி கேட்டிருக்கிறேன்.

௩. நான்கு ரோடு அருகே குழந்தை இயேசு பேராலயம் உண்டு.

௪. மிக விரைவில் சேலத்தில் டைடல் பார்க் முழுமை பேரும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு முடிந்து அங்கு நிறுவனங்கள் இயங்கத் துவங்கினால், சொந்த ஊருக்கே செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணமே இந்த எதிர்பார்ப்பிற்கு காரணம் .

௫. தொடர்ந்து சேலத்திற்கு விமானப் போக்குவரத்து இருந்தால் மிக நன்றாக இருக்கும். துவங்குவதும் பின் நிறுத்துவதுமாக  விளையாடிக் கொண்டுள்ளனர். பாப்போம் எப்பொழுது இதற்க்கு ஒரு முடிவு வருகிறது என்று.

இந்தப் பகுதியுடன் சொந்த மண் தொடர் நிறைவு பெறுகிறது. சேலத்தை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி விட்டேன். தெரியாத விஷயங்கள் ஒரு சில உள்ளன. அவற்றை பற்றி அறிந்து கொண்டப் பின் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பயணத்தில் உடன் வந்த அனைவருக்கும் என் நன்றி.

ஏற்காட்டில் இருந்து சேலம் நகரத்தின் அழகிய இரவு நேர தோற்றத்துடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன் ..


அன்புடன் எல்கே

நவம்பர் 12, 2010

கண்கெட்டப் பின்

நகரமும் இல்லாது கிராமமும் இல்லாத ஒரு டவுன். அங்கு பிரதான சாலையில் அவனது தேனீர் கடையும் ,அதனுடன் இணைந்த சிறு பெட்டிக் கடையும் அமைந்திருந்தது. அது சிறு நகரம் அதனால் கடைக்கு வருவோரை நன்கு பரிச்சியம் உண்டு. காலையில் சுறுசுறுப்புடன் காசை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டிருந்த அவன் ,கடைக்கு வந்த ராஜுவை பார்த்து புன்னகைதான். வழக்கம் போல், ஒரு கோல்ட் பில்டரை எடுத்து நீட்ட , ராஜு அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு "டீ மட்டும் போதும் "என்றான் .டீ குடித்துக் கொண்டிருந்த ராஜுவையே பார்த்துக் கொண்டிருந்த அவனுடைய மனதில் பழைய நினைவுகள் ஓடத் துவங்கின . ராஜு, கல்லூரி காலத்தில் இருந்தே அந்தக் கடைக்கு தினசரி வருபவன். முதலில் வேலைக்கு ஒன்றாக துவங்கிய புகை பின் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்றளவிற்கு போனது. புகையை தவிர

வேறு கெட்டப் பழக்கம் இல்லாத இளைஞன் ராஜு.கல்லூரி முடித்து நல்ல வேலை பின் திருமணமும் முடிந்தது. திருமணம் முடிந்த பின்னும் மாறவில்லை ராஜுவின் பழக்கம். குழந்தைப் பிறந்த பின்னும் பழைய ராஜுவாக புகை மன்னனாக வலம் வந்தான்.

பழைய நினைவில் மூழ்கி இருந்தவனை உலகுக்கு கொண்டு வந்தது ராஜுவின் குரல் .

"அண்ணே, இந்தாங்க டீக்கு காசு "

"சரி ராஜு".கடையில் இருந்து சென்றவனை பார்த்தவண்ணம் மீண்டும் பழைய நினைவில் மூழ்கினான் . அந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் இருக்கும் . ஒரு ஞாயிறு . மாலை நேரத்தில் விடுமுறைக்கான சோம்பலில் மூழ்கிக் கிடந்தது வீதி. தன் நான்கு வயது மகளுடன் வந்த ராஜு, மகளை வீதியின் மறு பகுதியில் நிறுத்தி விட்டு வீதியை கடந்து கடைக்கு வந்தான் ."ஏம்பா , குழந்தையை அந்தப் பக்கம் விட்டுட்டு வர . ஒண்ணா, இங்க கூட்டிகிட்டு வந்திருக்கணும். இல்லாட்டி வீட்டிலேயே விட்டு வந்திருக்கணும் ""ஒன்னும் ஆகாது அண்ணே. நீங்க சிகரட்டை கொடுங்க ".வாங்கி பற்றவைத்து திரும்பியவன், தன் மகள் ரோட்டை கடக்க முயல்வதைப் பார்த்து ,பதற்றத்துடன் அந்தப் பக்கம் போக முயல, அதற்குள் நெரிசல் இல்லா சாலையில் வேகத்துடன் வந்த கார் அந்த சிறுமியை மோதி வீசியது.

அதிர்ச்சியில் ராஜு சிலையாய் உறைந்தான்.நிகழ்காலத்திற்கு திரும்பியவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டான் "சிலருக்கு பட்டால்தான் உறைக்கிறது".

அன்புடன் எல்கே

நவம்பர் 11, 2010

சொந்த மண் XIV


ஆனி மாத இறுதியிலேயே சேலத்தில் ஒரு வித பரப்பும் எதிர்பார்ப்பும் ஏற்படும். ஆடி மாத மாரியம்மன் பண்டிகையை எதிர்பார்த்தே இந்த பரப்பரப்பு. ஒரே சமயத்தில் சேலத்தில் எட்டு இடங்களில் பண்டிகை களைகட்டும். சேலம் கோட்டை மாரியம்மன், செவ்வாய்பேட்டை,அன்னதானப்பட்டி, குகை, டவுன் சின்ன மாரியம்மன் ,ஆட்டையாம்பட்டி ,அம்மாபேட்டை ,தாதகாப்பட்டி   ஆகிய கோவில்களில் ஒரே சமயத்தில் பண்டிகை நடைபெறும்.

இங்கு நான் விவரிக்கப் போவது  செவ்வாய் பேட்டையில் நடைபெறும் பண்டிகையை பற்றியே. நான் அருகே இருந்து ரசித்தது இங்குதான். ஆடி மாத முதல் செவ்வாய் கிழமை அல்லது இரண்டாவது செவ்வாய்கிழமை பூச்சாட்டல் நடைபெறும். அன்று நகரின் முக்கிய வீதிகளில் கோவில் சார்பாக பூக்கள் மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டு ,பின் கோவிலில் அம்மனுக்கு அந்த பூவை சமர்பிப்பார். அதற்கு அடுத்த நாள், கம்பம் நடுதல். இதற்காக ஏற்கனவே  வெட்டி ,பால் மார்க்கெட் அருகில் உள்ள ஒரு கிணற்றில் இறக்கி வைத்திருப்பர். அங்கிருந்து எடுத்து வந்து அம்மன் சந்நிதிக்கு நேராக நடப்படும். அன்றிலிருந்து பக்தர்கள் தினமும் அந்த மரத்திற்கு காலையில் தண்ணீர் ஊற்றலாம். அதாவது மரத்தை அம்மனாக உருவகித்து அம்மனுக்கு தாங்களே அபிஷேகம் செய்வது போல்.


இதற்கு அடுத்த திங்களில் இருந்து அம்மன் பவனி துவங்கும். தினமும் இரவு புறப்படும் பவனிக்காக மாலையில் இருந்தே அம்மனுக்கும், அந்த ஊர்திக்கும் அலங்காரம் துவங்கும். தினமும் ஓவ்வொரு வடிவில் அலங்காரம் நடக்கும். சில சமயம் முப்பெருந்தேவியாகக் கூட அலங்காரம் செய்து பெரிய ஊர்தியில் எடுத்து வருவர். அம்மனின் வாகனத்திற்கு முன்பு பெரும்பாலும் தவில் நாதஸ்வர வித்வான்களின் வாசிப்பு இருக்கும். சில நாட்களில், கரகாட்டமும் நடைபெறும்.


அம்மன் பவனி ஆரம்பித்த நாளில் இருந்து தினமும் கச்சேரியும், சில சமயம் சொற்பொழிவுகளும் நடைபெறும். தமிழகத்தின் புகழ்பெற்ற பாடகர்கள் பலர் இங்கு வந்து பக்தி பாடல்களை பாடியுள்ளனர். சமீப காலமாக சினிமா பாடல்களுக்கே முக்கியத்துவமும்,வரவேற்பும் அதிகமாக உள்ளது வருந்த வேண்டிய ஒரு விஷயம். மறைந்த திரு காளிமுத்து அவர்கள் குகையில் நடைபெறும் பேச்சரங்கம் நிகழ்ச்சியில்  வருடந்தோறும் தவறாமல் வந்து கலந்துக் கொண்டவர்.

வீதி உலா துவங்கிய வாரத்திற்கு மறுவாரம் செவ்வாய் கிழமை காலை, அலகு குத்தி வருவார்கள். சாதரணமான வேல் அலகில் இருந்து காவடி அலகு, வண்டியில் தொங்கியப் படி அலகு குத்தி வருவது போன்று தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அலகு குத்திவருவார்கள். மாலையில் பூஞ்சட்டி ஏந்தி வருவார்கள்.

இதன் பின் சக்தி அழைப்பு நடைபெறும். அருகில் உள்ள மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து சக்தி அழைத்து வருவார்கள். ஒரு குதிரையில் மஞ்சள் மூட்டை வைத்து அழைத்து வருவார்கள். சக்தி அழைப்பு கடந்து சென்றவுடன் அந்த வீதியில் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இது ஒரு வித்யாசமான நிகழ்வு என்று எண்ணுகிறேன். இது போல் வேறு எங்கும் உள்ளதா என்றுத் தெரியவில்லை. அதாவது, தங்கள் வேண்டியக் காரியம் நிறைவேறி இருந்தால், தெருவில் சூறைக் காய் உடைப்பார்கள். யாரவது ஒரு பத்து பேர் அப்படி செய்வார்கள் என்று எண்ணாதீர்கள். அந்த வீதி முழுவதுமே தேங்காய் ஓடுகளாய் நிறைந்திருக்கும்.

சக்தி அழைப்பு முடிந்தவுடன், அடுத்து கோவிலில் அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும். கோவிலின் வெளி ப்ரகார மார்பிள் தரையில் தான் இது நடைபெறும். சக்தி அழைப்பு முடிந்து பூஜைகள் முடிய நள்ளிரவை தொட்டுவிடும். பின்புதான் அங்கப் பிரதக்ஷணம். இதற்காக, ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் நிற்பார்கள். சில சமயம் இந்த வரிசை, கடைத்தெருவை தொட்டுவிடும். விடிய விடிய அங்கப் பிரதக்ஷணம் நடைபெறும்.

காலை ஆறுமணி அளவில் பொங்கல் வைப்பவர்கள் அதற்கான வேலைகளை துவங்குவார்கள். அங்கு பொங்கல் வைத்து படைப்பவர்கள் ஒருபுறம் இருக்க, வீட்டில் மாவிளக்கு மாவு போட்டு கோவிலுக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைப்பவர்கள் மறுபுறம். அன்று அம்மன் பல வித ஆபரணங்களில் ஜொலித்துக் கொண்டிருப்பாள். இங்கு உயிர் பலி கிடையாது.

இதற்கு அடுத்த நாள் ஊஞ்சல் உற்சவம். வெள்ளிகிழமை அம்மன் தேரோட்டம் நடைபெறும். வெள்ளிக் கிழமை அதிகாலையிலேயே அம்மன் விக்ரகம் தேருக்கு எடுத்து செல்லப்படும். பின் ஒன்பது மணியளவில், முதலில், லீபஜார் தொழிலாளர்கள் வடம் பிடித்து இழுக்க அம்மன்  செவ்வாய்ப்பேட்டைமக்களுக்கு தரிசனம் அளிப்பாள். முக்கிய பெரிய வீதிகளான பாத்திரக்கடை வீதி, பின் சின்ன எழுத்துக்கார தெரு வழியாக சென்று அங்கிருந்து சந்தைபேட்டை ரோடு வழியாக முக்கோணம் பகுதி சென்று கடைவீதி வழியாக தேர் நிலைக்கு வர நடுப் பகல் ஆகிவிடும். அன்று மாலை வரை அம்மன் தேரில் இருந்தே மக்களுக்கு காட்சி அளிப்பாள். இப்பொழுது இங்கு இருப்பது சமீபத்தில் செய்யப்பட புதியத் தேர். பழையத் தேர் சில வருடங்களுக்கு முன் எரிந்து சாம்பலாகிவிட்டது.

இதோடு பண்டிகையின் முக்கியப் பகுதிகள் முடிவடைந்துவிடும். தேரோட்டம் முண்டித அடுத்த வாரம், கம்பம் அகற்றப்பட்டு விழா முடியும். பண்டிகையின் ஒரு பகுதியாக, நகரப் பேருந்து நிலையத்தை ஒட்டிய மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறும்.

படம் : கூகிள் உதவி


அன்புடன் எல்கே

நவம்பர் 10, 2010

தேடலின் தொடர்ச்சி IIIமனிதன் வாழ்நாள் முழுவதும் எதன் மேலாவது பற்று வைத்துதான் வாழ்கிறான்.ஒரு பொருளின் மீது மட்டும்தான் பற்று வைக்கிறானா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றின் மீது.  கல்லூரியில் படிக்கும்பொழுது எதிர் பாலினத்தின் மீதும்,போகப் பொருட்களின் மீதும், பின் திருமணம் முடிந்தப் பின் தான் துணையின் மீது. பின் குழந்தைகள் மீது. இடையில் பணத்தின் மீது.

இந்தக் கட்டத்தில்  நம் குழந்தைகளின் மீது வைக்கும் பற்றே வயதான காலத்தில் அவர்கள் நம்மை கவனிக்காத பொழுது ஏமாற்றமாய், ஆதங்கமாய் வெளிப்படுகிறது. நம் குழந்தைகளை வளர்ப்பதோடு நமது கடமை முடிந்தது என்று எண்ணி செய்யுங்கள். பின் உங்களுக்கு ஏமாற்றம் இருக்காது. 

இதையெல்லாம் விட, உயிரின் மீதான பற்று மனிதனுக்கு அதிகம். உயிரை காப்பாற்ற எதுவும் செய்வோம். பற்று அதிகரிக்க அதிகரிக்க அதை நாம் இழக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்றே எண்ணத் துவங்குகிறோம். வேறு எண்ணங்கள் நமக்கு வருவதில்லை. அந்தப் பொருளை இழந்துவிடுவோமோ என்ற பயமும் அதிகரிக்கும். 

ஒரு பொருளின் மீது பற்று வைப்பதற்கும் , பற்றை அகற்றுவதற்கும் நம் மனதே காரணம். மனதை கடிவாளம் போட்டு அடக்க ஆரம்பித்தால் நாம் செல்லும் பாதை சரியான பாதையாக இருக்கும். எனவே நாம் முதலில் சரி செய்ய வேண்டியது நமது மனதையும் எண்ணங்களையும். 

"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா
?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?"

இது வாலி அவர்கள் இயற்றிய ஒரு திரைப்பாடல். எவ்வளவு உண்மை உள்ளது இதில். நம் மனம் போன போக்கில் வாழ்வதா வாழ்க்கை ? அப்படிப் பட்ட வாழ்க்கை வாழ நமக்கு எதற்கு ஆறறிவு ??மனதை கட்டுபடுத்தி வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஆரம்பக் கட்டங்களில் நமக்கு கட்டுபடுவது போல் இருக்கும் , நாம் அசந்தால் மீண்டும் துவக்கப் புள்ளிக்கே சென்று விடுவோம்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம். இதை நான் எழுத துவங்கிய பொழுது தொடர்ந்து இதை மட்டுமே ஒரு சில வாரங்கள் எழுத வேண்டும் என்று நினைத்து துவங்கினேன். நான்கு பகுதிகள் எழுதினேன். பின்பு மனம் வேறு பக்கம் சென்று விட்டது.

அடுத்தப் பகுதியில் மனதை கட்டுப் படுத்தும் வழிமுறைகளை பார்ப்போம்

டிஸ்கி : நானும் மனதை கட்டுப் படுத்தும் விஷயத்தில் துவக்க நிலையில் உள்ளவனே. ஏதேனும் தவறு இருந்தால் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

அன்புடன் எல்கே

நவம்பர் 09, 2010

திவ்யாவின் பக்கம் VIII

திவ்யாவுடன் இது மூன்றாவது தீபாவளி. முதல் வருடம் அவள் ஆறு மாதக் குழந்தை. அப்பொழுதே வெடிகளுக்கு அதிகம் பயப் படமாட்டாள். சென்றவருடம் கோவையில் தீபாவளி கொண்டாடிய பொழுது, விடிய விடிய பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அடம் பிடித்தாள்.

இந்த வருடம் சேலத்தில். மத்தாப்பு, சக்கரம் போன்றவற்றுக்கு பயப் படாத திவ்யா, சர வெடிகளுக்கு மிக பயந்தாள். சரத்தின் சத்தம் கேட்டவுடன் அருகில் இருப்பவரை கட்டி பிடித்துவிடுவாள். வளர வளர பயம் அதிகரிக்குமோ ??

தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் சரியாக சொல்லுகிறாள். கூடவே, தமிழ் மாதங்களும். ஒரு முறை சொல்லி தருவதே போதுமானதாய் இருக்கிறது. ஆங்கில எழுத்துக்கள் பத்து சொல்லித் தந்து இருக்கிறோம். மேடம் நல்ல மூட்ல இருந்தா சொல்லுவாங்க இல்லையென்றால் ஏ, பி ,சி சொல்லிட்டு ஓடிடுவாங்க.

அதே போல் இரவு தூங்கும் முன் "good nite ,sweet dreams " சொல்ல பழக்கப் படுத்தி இருந்தேன். அவளும் "good nite, seemis " சொல்லுவாள். sweet dreams தனித் தனியா சொன்னால் ஒழுங்கா சொல்லுகிறாள். ஒன்றாக சேர்த்து சொல் என்றால் "ஒகே தேங்க் யூ " என்று சொல்லி சிரிக்கிறாள். அவளுக்கு எது சொல்ல வரவில்லையோ அதை சொல்லச் சொன்னால் இவ்வாறுதான் செய்கிறாள்.

அதே போல் ஒரு புதிய வார்த்தை முதல் முறை சொல்லும் முன் , மிக நிதானமாக சொல்லுவாள். அதற்கு நம்முடைய ரியாக்சன் எப்படி இருக்கிறது என்று பார்த்து அவள் சொல்லுவது சரி என்றுத் தெரிந்தால் மட்டுமே சத்தமாக பேசுவாள். இப்பவே எவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிறாள் ???


அன்புடன் எல்கே

நவம்பர் 08, 2010

நான் ,ஷங்கர் மற்றும் கந்தாஸ்ரமம்

சொந்த மண்ணில் உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள் என்று அமீரக சிங்கம் தேவா கேட்டிருந்தார். அவர் கோரிக்கைக்கு ஏற்ப இதோ ஒரு கொசுவர்த்தி பதிவு.

இன்னும் அந்த சம்பவம் நன்றாக நினைவில் இருக்கிறது. நானும் எனது மாமா பையன் சங்கரராமனும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் ஒரே வயது என்பதால் ஒட்டுதல் அதிகம். அவன் சென்னையில் படித்து வந்தான். நான் சேலத்தில்.

1997 ஆம் வருடம் மே மாதம் இரண்டாம் தேதி. எனது அக்காவின் நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாள். இருவரும் எனது சைக்கிளில் கந்தாஸ்ரமம் செல்ல முடிவெடுத்தோம். போறப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை. அங்க போய் நிதானமா சாமி கும்பிட்டு கொஞ்ச நேரம் உக்காந்த கதை அடிச்சபின்னாடி கிளம்ப முடிவெடுத்தோம்.


அப்பதாங்க ஆரம்பிச்சது பிரச்சனை. சின்ன குன்றாக இருந்தாலும், இறக்கம் அதிகம். எனவே நான் சைக்கிளை தள்ளிக் கொண்டு போகலாம் என்றேன். காரணம், ப்ரேக் கொஞ்சம் மக்கர் பண்ணும். அவனோ , இல்லை மச்சி பார்த்துக்கலாம் வா என்று சொல்ல, சரி அவன் பேச்சை கேப்போம்னு, அந்த முருகனை வேண்டிக்கிட்டு கிளம்பினோம்.

முதல் இரண்டு வளைவுகள் நல்லாத்தான் போச்சு. அப்புறம்தான் அது நடந்தது, சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே அடுத்த வளைவில் வேகமாக திரும்ப, எதிரில் ஒரு வாகனம் வந்தது. அதன் மேல் இடிக்ககூடாதே என்று இடது புறம் சைக்கிளை திருப்பினேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அடுத்த நிமிஷம், ஆளுக்கு ஒரு புறம் கீழ விழுந்து கிடந்தோம்.எழுந்த பிறகுதான் பார்த்தோம், எத்தனை பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தோம் என்று. தடுப்பு சுவருக்கு அந்தப் பக்கம், முட்புதரும் பள்ளமும் இருந்தது. அந்தப் பக்கம் விழுந்திருந்தால் ????

அவனுக்கு அதிகம் அடி இல்லை. எனக்குதான் காலிலும் உள்ளங் கையிலும் நல்ல அடி. பிறகு , மெதுவாக சைக்கிளை தள்ளிக் கொண்டு அடிவாரம் வந்தோம். அதன் பிறகு வீடு வரை அவனே ஒட்டிக் கொண்டு வந்தான். வீட்டுக்கு வந்தப் பிறகு சகஸ்ரநாம அர்ச்சனை கிடைத்தது என்று சொல்ல வேண்டுமா ??

இன்றைக்கும் கந்தாஸ்ரமம் சென்றாலோ, அதை பற்றி படிதலோ, இந்த நிகழ்ச்சிதான் எனக்கு நினைவிற்கு வரும்.அன்புடன் எல்கே

நவம்பர் 07, 2010

சொந்த மண் XIII

 ஊரில் இரண்டு நாட்கள் தீபாவளியை கொண்டாடி விட்டு வந்தது மனதிற்கு புத்துணர்ச்சி அளித்துள்ளது. பல இடங்கள் உருமாறிவிட்டன. பல வருடங்கள் கழித்து எங்கள் தெருவிற்கு ரோடு போட்டுள்ளனர் . அதேப் போல், பல வருட கோரிக்கையான போர் போட்டுத் தந்துள்ளனர். இதனால் தெருவில் தண்ணீர் பிரச்சனை குறைந்துள்ளது. மேட்டூர் தண்ணீர் வாரம் ஒரு முறையே வருகிறது. இத்தனைக்கும் மேட்டூர் அருகில் இருக்கிறோம் என்றுப் பெயர்தான். சென்னையே பரவாயில்லை என்பதுப் போல் தோன்றுகிறது இந்த விஷயத்தில்.

அதேப்போல் ஆட்டோ கட்டணம். சேலத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு ஆக்கும் கட்டணத்தை விட அதிகமாக ரயில்வே ஸ்டேசனில் இருந்து எங்கள் வீட்டிற்கு செலவதற்கு கேட்கிறார்கள் .

சென்றப் பதிவில் சொன்னது போல் முதலில், வெங்காய வெடியை பற்றிப் பார்ப்போம். ரொம்ப பெருசால்லாம் இருக்காது, ஒரு கல், கொஞ்சம் வெடிமருந்து அதை சுற்றி ஒட்டப்பட்ட கலர் காகிதம் . இதுதான் வெங்காய வெடி. "மூர்த்தி சிறிதானாலும், கீர்த்தி பெரிது" என்பார்கள். அதுபோன்றுதான் இது. இதை ஓங்கி சுவரிலோ ,தரையிலோ அடித்தால், பயங்கர சப்தத்துடன் வெடிக்கும். இதில் ஆபத்து அதிகம், சுவரில் தரையிலோ இது படும்போது, உள்ளிருக்கும் கல் மிகுந்த வேகத்துடன் வெளியில் வரும் அது எந்தப்பக்கம் சென்று யாரை தாக்கும் என்றுத் தெரியாது. நான் சேலத்தில் இருக்கும் பொழுது  ஒரு பட்டாசு கடையில், விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த வெங்காய வெடிகள் உரசி ,பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதற்குப் பிறகுதான் அரசு இதை தடை செய்ததாக ஞாபகம்.

சேலத்தில் அமைந்துள்ள மற்றொரு கோவில் ,கந்தாஸ்ரமம். சேலம் நகரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீ சதானந்த பிரமேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கட்டப்பட்டுள்ளது. சிறிய குன்றில் அமைந்துள்ள கோவிலுக்கு செல்லும் முன் கன்னிமார் ஓடையை கடந்து செல்லவேண்டும். மழை காலத்தை தவிர மற்ற நாட்களில் காய்ந்து வற்றி போய் இருக்கும். குன்றில் ஏறினால், அங்கிருக்கும் அத்தனை சுவாமி சிலைகளும் பிரம்மாண்டமாய் காட்சி அளிக்கும். முருகன் மட்டும் இன்றி, ஸ்ரீ புவனேஸ்வரி அம்மனும், பஞ்சமுக ஆஞ்சநேயரும்,தத்தாத்ரேயா சுவாமிகளுக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு .


மாம்பழத்திற்கு  அடுத்து சேலத்தில் புகழ் பெற்றது சேலம் ஸ்டீல் பிளான்ட். சேலம் நகரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆலைகளையும் விட இது புகழ் பெருக காரணம், இந்தியாவின் ஸ்டெயின் லெஸ் ஸ்டீல் தேவையின் பெரும்பான்மையை சேலம் ஸ்டீல் பிளான்ட் தான் தீர்க்கிறது.
 ISO 9001:2000 தரக் கட்டுபாடு சான்றிதழும், ISO140001:2004 சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு சான்றிதழும் தரப்பட்டுள்ளது சேலம் இரும்பாலைக்கு.


அடுத்து வருவது சேலம் மாரியம்மன் பண்டிகை

அன்புடன் எல்கே

நவம்பர் 06, 2010

தீபாவளி மலரில் என் படைப்பு

"நான் இறந்து போயிருந்தேன்" என்ற எனதுக்  கவிதை "கார்த்திகை : என்ற தலைப்பில் லேடிஸ் ஸ்பெசல் தீபாவளி மலரில் வந்துள்ளது

அந்த புத்தகத்தின் இணையப் பதிப்பில்  89 வதுப் பக்கம் இந்தக் கவிதை உள்ளது. சிறுப் பெயர் குழப்பத்தின் காரணமாக எனது தந்தையின் பெயரில் வந்துள்ளது. அன்புச் சகோதரி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

"லேடிஸ் ஸ்பெசல் " புத்தகத்தை இணையத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்


அன்புடன் எல்கே

நவம்பர் 03, 2010

தீபாவளி வாழ்த்து(க்)கள்

இதோ வந்து விட்டது தீபாவளி . இன்னும் இரண்டு நாட்களே உள்ளது . எனக்கு பண்டிகை மகிழ்ச்சியை விட ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் சேலம் செல்லவிருப்பதே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் தருகிறது.

இது கூட ஒரு சிறு விடுமுறையே . இரண்டு நாட்கள் மட்டுமே அங்கு இருக்க இயலும். சனிக் கிழமை அலுவலகம் உள்ளதால் உடனே திரும்பியாகவேண்டிய சூழ்நிலை.  தீபாவளிக்கு முந்தைய வாரத்தில்தான் சென்னையில் வேலை கிடைத்து, தீபாவளி முடிந்த இரு தினங்களில் சென்னை வந்து சேர்ந்தேன். இது நடந்து ஏழு வருடங்கள் முடிந்து விட்டது. அதற்குப் பின் சில வருடங்கள் தீபாவளி சேலத்திலும் சில முறை சென்னையிலும், ஒரு முறை கோவையிலும் கொண்டாடி இருக்கிறேன்.

சேலத்தில் இருந்த பொழுது, அதிகாலை ஐந்த மணிக்கு எழுந்து ஒரு ஆயிரம் வாலா பட்டாசை வெடித்து தெருவையே எழுப்பி விடும் இன்பம் இருக்கிறதே .. அதில் உள்ள சந்தோசம் வேறு எந்த ஊரிலும் கிடைக்காது.அதிலும் சென்னையில் வாய்ப்பே இல்லை.அதே போல் வெங்காய வெடி வெடிச்ச நாட்கள். அது திரும்பவும் வராது. வெங்காய வெடி இப்ப தடை பண்ணியாச்சு. அதை பத்தி ஊருக்கு போயிட்டு வந்து எழுதறேன். .

இந்தத் தீபாவளி பல கொசுவர்த்திகளை கொளுத்தி விடும். சேலம் பயணத்தை மிக எதிர்பார்க்கும் இன்னொரு காரணம் எங்கள் கடை டிபன். ரொம்ப நாள் ஆச்சு சாப்பிட்டு.

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து(க்)கள் . நல்லா பட்டாசு வெடிச்சு, விபத்து இல்லாமல் இனிப்போட கொண்டாடுங்கள் ..


அன்புடன் எல்கே

நவம்பர் 02, 2010

எனக்குப் பிடித்த ரஜினி படங்கள் டாப் 10 - தொடர் பதிவு

சூரியனுக்கே வலை வாசல் வச்சிருக்கற அருண் பிரசாத் "எனக்குப் பிடித்த ரஜினி படங்கள்  டாப் 10 " என்ற தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறார். எந்திரன் வெளி  வந்துள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் மத்தியில் இது எந்த இடத்தில் உள்ளது என்று கணிக்க இதை ஆரம்பித்து இருக்கிறார்.


இனி எனது பட்டியல்

10 ஸ்ரீ ராகவேந்திரர்

 ரஜினியின் நூறாவது படம். எந்த வித ஆர்பாட்டமும் இன்றி மிக அமைதியாக நடித்திருப்பார். ரஜினியின் வழக்கமான ஸ்டைல்கள் இல்லாமல் படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் எடுபடவில்லை. இருந்தாலும் எனக்குப் பிடித்த ரஜினி படங்களில் இதுவும் ஒன்று9 16 வயதினிலே
வில்லன் கேரக்டரில் பரட்டையாக அசாத்தியப் படம். இவரும் கமலும் இந்தப் படத்தின் வெற்றியில் சம பங்கு வகித்தனர். ஒவ்வொரு முறையும் கமலை கிண்டலடித்து "இது எப்படி இருக்கு " என்று சொல்லும் விதம் கலக்கல் ...

8 படையப்பா

ரஜினிக்கு பிரம்மாண்ட வெற்றி தேடித் தந்த படம். ரஜினியின் மகளை ரம்யா கிருஷ்ணன் ஏமாற்றும் வரை நிதானமாக போகும் படம், பின் டாப் கியரில் பறக்கும் . இதில் ரம்யா கிருஷ்ணன் சொல்லும் "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகலை ", நிஜத்திலும் இது எவ்வளவு உண்மை !!!!
7  தில்லு முல்லு

தலைவரின் எல்லாப் படங்களிலும் நகைச்சுவை இயல்பாக இருந்தாலும், முழு நீள நகைச்சுவை படமான இதில் தேங்காய் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து நம்மை படம் முழுவதும் சிரிக்க வைத்து இருப்பார். ரஜினியின் வெற்றிக்கு அவருக்கு இயல்பாய் வரும் நகைச்சுவையும் ஒரு காரணம்.6 மூன்று முகம்

தந்தை , மகன்கள் என்று  மூன்று வேடங்களில் ரஜினி அட்டகாசப்படுத்தியப் படம். மூன்று வேடங்களில் நடித்து இருந்தாலும், இன்றளவும் அனைவராலும் பேசப் படும் வேடம் அலெக்ஸ் பாண்டியனாக வரும் தந்தை வேடமே. இன்றும் ரஜினி நடித்த பாத்திரங்களில் சிறந்த ஒன்றாக பேசப் படுவது. "தீப்பெட்டிக்கு ரெண்டு பக்கத்தில உரசினாதன் தீப் பிடிக்கும். இந்த அலெக்ஸ்பாண்டியனை எங்க உரசினாலும் தீப் பிடிக்கும் " ரஜினியின் மறக்க முடியாத வசனங்களில் ஒன்று
 5 எந்திரன்

 சிவாஜியின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் வந்தப் படம். ஷங்கர், சுஜாதா, சன் மூவீஸ் என்று ஒரு மிகப் பெரிய கூட்டணி ரஜினியுடன் இணைந்து கொண்டுவந்தப் படம். வழக்கமான ஸ்டைல், பன்ச் வசனங்கள் இல்லாமல் மிக சாதரணமாக தலைவர் நடித்தப் படம். ஆனால் , பல இடங்களில் தனது பழைய நடிப்பை காட்டி இருப்பார். வசீகரனை தேடும் இடத்தில் வசன உச்சரிப்பு அமர்க்களம்.4 புவனா ஒரு கேள்விகுறி

இந்தப் படம் வந்த சமயத்தில் இருந்த ஒரு நடைமுறையை துணிச்சலாக மாற்றி எடுக்கப் பட்டது. அந்த காலத்தில், ரஜினி அதிகமாக வில்லன் வேடத்தில்தான் நடித்துக் கொண்டு இருந்தார். சிவக்குமார் ஹீரோவாக இருந்தார். அதை அப்படியே மாற்றி இந்தப் படத்தில் ஹீரோவாக ரஜினியும் வில்லனாக சிவக்குமாரும் நடித்தப் படம். ரஜினியின் நடிப்புத் திறமைக்கு ஒரு சான்று இந்தப் படம்
3 தளபதி

மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடித்த முதல் படம் (தப்பா இருந்த சொல்லுங்க ). மம்முட்டி ,அரவிந்த்சாமி போன்றோர் இருந்தாலும் இதில் தனித்து தெரிந்தார் ரஜினி. முதலில், மமுட்டிக்கு பயப் படாமல் அவரை எதிர்ப்பதாகட்டும்  அவருடன் இணைந்தப் பிறகு, யாருக்காகவும் அவரை விட்டுக் கொடுக்காமல் பேசுவதாகட்டும் ரஜினி ஜொலித்து இருப்பார்.

2 முள்ளும் மலரும்

சிவாஜிக்கு ஒரு பாசமலர் போல, ரஜினிக்கு முள்ளும் மலரும் .உமச்ச்சந்திரன் எழுதி கல்கியில் வந்த நாவலை மையமாக வைத்து மகேந்திரனால் இயக்கப் பட்ட படம். பாசத்தில் உருகும் அண்ணனாக ரஜினி கலக்கிய படம் . கை இழந்தப் பின், சரத்பாபுவிடம் அவர் பேசும்பொழுது "ரெண்டு கை கால் போனாலும் பொழைச்சுப்பான் சார் காளி. கெட்டப் பையன் சார் " என்று சொல்லும் இடத்தில் அவரது முக பாவனைகள் அருமையாக இருக்கும்.1 பாட்ஷா
தலைவர் படங்களில் அல்டிமேட் படம் பாட்ஷாதான். நிழல் உலக டானாக இருக்கும் பொழுது அசத்தலான மிரட்டும் நடிப்பை வெளிப்படுத்தும் ரஜினி, முதல் பாதியில், சாதாரண ஆட்டோக்காரராக அமைதியான நடிப்பை காட்டுவார். இதில் வரும் பல வசனங்கள் புகழ் பெற்றவை. இதில் வரும் முதல் சண்டைக் காட்சிஇதைத் தொடர நான் அழைப்பது தினேஷ் (முகிலன் ), சித்ரா இருவரையும்

அன்புடன் எல்கே

நவம்பர் 01, 2010

எறும்பின் தொல்லை

 "பொண்ணுங்க இருக்கற இடத்துக்கு பசங்க போவாங்க. இனிப்பு இருக்கற இடத்துக்குதான் எறும்புங்க போகும் " இதுதான் வழக்கம். ஆனால், எங்க வீட்ல இந்த எறும்புங்க பண்ற தொல்லை தாங்க முடியலை. 

கொசுவாது பரவாயில்லை, மழை காலத்தில் வரும் , அதுவும் கொசுவர்த்தி , பேட் எல்லாம் இருக்கு. இந்த எறும்பு எல்லா சீசன்லையும் வருது . இதை என்ன பண்றதுனே புரியலை. அப்படி என்ன பிரச்சனைன்னு கேக்கறீங்களா ? இதோ சொல்றேன் பாருங்க.

இப்ப இருக்கற வீட்டுக்கு வந்த அடுத்த நாள் , ஆபிஸ்க்கு லீவ் போட்டுட்டு தூங்கலாம்னு படுத்தேன். கொஞ்ச நேரத்துல, கையில் சுர்ரீர்னு எதோ வழி. என் தங்கமணி இந்த மாதிரி எல்லாம் கிள்ள மாட்டாளேன்னு முழிச்சு பார்த்தா, நல்லா பெரிய சைஸ் சிவப்பு எறும்புகள் போயிட்டு இருக்கு. இதென்னட வம்பா போச்சுன்னு, வீட்ல இருந்த எறும்பு, பூச்சிக் கொல்லி ஸ்ப்ரேயை எடுத்து அந்த அறையில் இருந்த இரும்பை ஒழிச்சேன். 

அதான் முடிஞ்சுடுசுன்னு நினைக்கறீங்களா , அதுதான் இல்லை, அதுக்கப்புறம் ஒரு வாரம் கழிச்சு , கோவை போய்ட்டோம். வந்து பார்த்த மறுபடியும் எறும்பு ...அட அது பாட்டுக்கு வந்துட்டு போயிட்டு இருந்தா கூட பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு பக்கம் மண்ணை வேற குமிக்குது. இது எலியா இல்லை எறும்பா ???

இந்த முறை ஸ்ப்ரே அடிச்சும் அது சாகலை . (ஒரு வேலை தடுப்பு ஊசி போட்டுட்டு வருதோ ???) சரின்னு , எறும்பு பவுடர் கடைல வாங்கிட்டு வந்து அதை போட்டேன். இந்த எறும்பு பவுடர் போடறதுல ஒரு பிரச்சனை. வீட்டில் குழந்தை வேறு இருக்கிறாள். நாம் கவனிக்காத  பொழுது அதை போய் தொட்டுவிட்டால் அப்புறம் பெரிய பிரச்சனை. 

இப்படி ஒரு வழியா எறும்பை ஒழிச்சிட்டோம்னு நிம்மதியா இருந்தேன். நேத்து மதியம் வரைக்கும் எல்லாம் சரியாதான் போயிட்டு இருந்துச்சி. அப்புறம் என்ன பழைய கதைதான் . மறுபடியும் ஸ்ப்ரே, எறும்புப் பவுடர். 

இதுல ஒரு வேடிக்கை , சமையல் அறை பக்கம் மறந்தும் கூட இந்த எறும்பு வரது இல்லை. (அதுக்குக் கூட என் தாங்க்ஸ் சமையல் பத்தி தெரியுது ). முதல் முறை எங்கள் படுக்கை அறை. இந்த முறை, என் கணிணி அறை. இப்படி இருக்கலாமா , நான் ரொம்ப ஸ்வீட்னு எறும்புக்குத் தெரிஞ்சிடுச்சோ ???

இதை ஒரேடியாக ஒழிக்க வழி இருக்கா? தெரிஞ்சா யாரவது சொல்லுங்களேன்.