செப்டம்பர் 30, 2010

வாய்ச் சொல்லில்

இன்றுள்ள மன நிலையில் வேறெதுவும் போடத் தோன்றவில்லை. அதற்கு பதில் இந்தப் பாரதியார் பாடல் பொருத்தமாக இருக்கும்


நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! - கிளியே!
பேசிப் பயனென் னடீ

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! - கிளியே!
செய்வ தறியா ரடீ!

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!
நம்புத லற்றா ரடீ!

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் - கிளியே
பேணி யிருந்தா ரடீ!

தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் - கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!

அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ - கிளியே
ஊமைச் சனங்க ளடீ!

ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் - கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?

சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! - கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்

பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! - கிளியே!
பாமர ரேதறி வார்!

நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
சிறுமை யடைவா ரடீ!

சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
செம்மை மறந்தா ரடீ!

பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!

தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா - கிளியே!
வந்தே மாதர மென்பார்!

அன்புடன் எல்கே

செப்டம்பர் 28, 2010

இந்த நாள்


என்னடா இவன் கேக் படம்லாம் போட்டு இருக்கான் . என்ன விஷயம்னு பாக்கறீங்களா? முதல்ல எல்லாரும் ஆளுக்கு ஒரு பீஸ் கேக் எடுத்துகோங்க. எல்லாருக்கும் இருக்கு. இன்றைக்கு எனது பிறந்த நாள். இன்றும் வேறு ஒரு பதிவு போட்டு உங்களை கொடுமைப் படுத்த விரும்பவில்லை.டிஸ்கி : நான் எனது பிறந்த நட்சத்திரத்தின்  அடிப்படையில் பிறந்த நாளை கொண்டாடுவேன், பிறந்த தேதியை வைத்து  அல்ல


அன்புடன் எல்கே

செப்டம்பர் 27, 2010

காமன்வெல்த் போட்டிகள் சில சந்தேகங்களும் அதற்கு பதில்களும்..

கேள்வி 1 : வீரரின் அறையில் பாம்பு இருந்தது
பதில் : ஏங்க சரியாப் பாருங்க . அதுவும் ஏதாவது போட்டியில் பங்கேற்க வந்திருக்கும்

கேள்வி 2 : மிதியடியில் கால்தடம் படிந்து இருக்கு
பதில் : இதெல்லாம் ஒரு பிரச்சனையா? இதெல்லாம் இல்லாட்டி அப்புறம் எப்படி நாங்க சர்வதேஷ புகழ் பெறுவது ? இப்ப பாருங்க அந்த நபர் சொல்லிக்கலாம் என் கால் தடம் சர்வதேசப் புகழ் பெற்றதுன்னு

கேள்வி 3 : பளுதூக்கும் அரங்கத்தின் மேல்கூரையில் இருந்து டைல்ஸ் கீழே விழுந்தது?
பதில் : அவ்ளோ எடையை தூக்கறாங்க? தம்மா துண்டு டைல்ஸ் தூக்கி அப்படி போட்டுட்டு
விளையாட மாட்டாங்களா ??

கேள்வி 4 : மைதானத்திற்கு செல்லும் வழி தண்ணீரால் சூழப் பட்டுள்ளது
பதில் : தப்பா நினைச்சிடீன்களா ?? நீச்சல் வீரர்கள் பயிற்சி பெற வசதின்னு அப்படியே விட்டு வச்சிருக்கோம் அவ்ளோதான். வேற ஒன்னும் இல்லை.

கேள்வி 5 : விளையாட்டு வீரர்கள் தங்கும் இடத்தில் சரியான வழிகாட்டிகள் இல்லை
பதில் : இதுவும் ஒரு விளையாட்டுதான். ட்ரெசர் ஹன்ட் கேள்வி பட்டது இல்லை ?? அந்த மாதிரித்தான் இது உங்க இடத்தை சரியா கண்டுபிடிக்கரீங்கலானு பாக்கத்தான் ..

கேள்வி 6 : இன்னும் ஒரு வாரம் கூட இல்லை . எதுவும் தயார் ஆகவில்லை
பதில் : இது தீவிரவாதிகளை ஏமாத்த . எதுவும் ரெடி ஆகாட்டி கேம்ஸ் இல்லைன்னு ஏமாந்துடுவாங்க. நாங்க கடைசி நேரத்துல எல்லாம் ரெடி பண்ணிடுவோம் ..

இதுவே சென்னையில் நடைபெற்று இருந்தால், எவ்வாறு இந்தக் கேள்விகளுக்கு பதில் வரும் ...எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான்.

கழக ஆட்சியில் சீரும் சிறப்புடனும் இந்தப் போட்டிகள் நடைபெற்றால் , எங்கே எனக்குப் பெயர் கிடைத்துவிடுமோ என்று பயந்து , சில பார்ப்பன விஷம ஏடுகள் செய்யும் சதியே இந்த செய்திகள். இதில் எள்ளளவும் உண்மை இல்லை.

டிஸ்கி : சிரிக்க மட்டுமே


அன்புடன் எல்கே

செப்டம்பர் 26, 2010

திவ்யாவின் பக்கம் V

கொஞ்ச நாளா திவ்யாவை பத்தி எழுத முடியலை. புதிய வீட்டில் அவளது குறும்புகள் அதிகரித்து விட்டன. அவள் விளையாட இடம் அதிகம் ஆகி விட்டது. எனவே அவளை சமாளிக்கவே நேரம் சரியாக உள்ளது.

முன்பை விட இப்பொழுது அதிகம் பேசுகிறாள். சில வார்த்தைகள் தெளிவாக வரா விட்டாலும், பல வார்த்தைகள் மிக அழகாக சொல்லுகிறாள். அதில் ஒன்று "அப்பா, டாட்டா போலாமா ???". இது இரவு நான் படுக்க போலாம்னு சொல்றப்ப அவள் என்னிடம் கேட்கும் மறு கேள்வி.

அதே போல், உரிமை எடுத்துகொள்வதும் அதிகம் ஆகி விட்டது. பக்கத்து வீட்டு குழந்தைகள் எதையும் நாங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் குறிப்பாய், அவளது மாமா வேறு குழந்தைகளை தூக்கக் கூடாது.

கிருஷ்ணா ஜெயந்திக்கு அடுத்த நாள், சமையல் மேடையில், வாணலியில் என்னை கொஞ்சம் மிச்சம் இருந்தது. எனது மனைவி வேறு எதோ வேலை செய்து கொண்டிருக்க, திவ்யா சமையலறையில் நுழைந்து, வாணலியை கீழே இழுத்து எண்ணை முழுவது கொட்டியாச்சு.  நான் வீட்டுக்கு வந்தப் பின் "ஏன்டா இப்படி பண்ண ?" கேள்வி கேட்ட ,"கிச்சா தான் பண்ண சொன்னாநு பதில் வருது .

 இவள் பண்ணும் குறும்பிற்கு சில சமயம் கிச்சா(கிருஷ்ணர்) சில சமயம், அவளது மாமா இருவரும்தான் பொறுப்பேற்க வேண்டுமாம். இப்பவே எப்படி யோசிக்கறா  பாருங்க ??

அதே மாதிரி, விளையாடிகிட்டே இருப்ப, திடீர்னு ஓடி வந்து , பாப்பாக்கு முடியலைப்பா , தூக்கிகோப்பா.. இல்லாட்டி பொம்மைக்கு கால் வலிக்குதுப்பா என்னை தூக்கிகோப்பாநு அடம் பிடிப்பாள். எப்படில்லாம் யோசிக்கறா பாருங்க ..

அன்புடன் எல்கே

செப்டம்பர் 25, 2010

உங்கள் பதிவு பிரபலம் ஆகணுமா

உங்கள் பதிவு பிரபலம் ஆகணுமா ... இது ரொம்ப சிம்பிள் . கீழ்க்கண்ட மாதிரி பதிவுகளை போடுங்க ஒரே வாரத்தில நீங்க பிரபலம்..

முதலில் புர்சிகர எழுத்துக்கள் எழுதணும். அதாவது எல்லோரும் எதை செய்யறாங்களோ அது தப்பு அதுக்கு பதிலா இதை பண்ணுங்கனு (அது எதுவா இருந்தாலும் சரி) அப்படின்னு எழுதணும். அப்படி எழுதினா அதுதான் புர்சிகர எழுத்து ..

அடுத்து பதிவுலகில் யாரவது ஒரு ரெண்டு பேர் மேல (அவங்க ஆணாக இருக்க வேண்டியது மிக அவசியம் ) குற்றசாட்டு வச்சி ஒரு பதிவு போடுங்க. (குற்றசாட்டு உண்மையா இருக்கனுமாங்கறது முக்கியம் இல்லை ). அதுல மேல சொன்ன மாதிரி சில புர்சிகர சிந்தனைகளை தூவிடுங்க.

அப்புறம், ரஜினி பத்தி தப்பா எழுதியே ஆகணும். ரஜினியை எதிர்க்காம நீங்க புர்சியாலரா ஆக முடியாது.

அமரிக்க ஏகாதி"பத்திய" குழம்பு வைத்து சாப்பாடு போட்னும்

ஆளும் கட்சியை எவன் ஆண்டாலும் திட்டனும்

அவன் குரூப்பிலே எவன் திருந்தினாலும் அவனை போலின்னு சொல்லனும் அது யாரா இருந்தாலும்...

உங்க மனைவியைக் கூட டோலர்னு கூப்பிடனும்...

இரைச்சல் இசையை அடச்சீ, தவில் நாதஸ்வரத்தை கேக்கக் கூடாது ...

படிக்காம பிச்சை எடுத்து பழகனும், குழந்தைகளையும் அதிலே பழக்கனும்

பேரக்ஸ் டப்பாவில் உண்டியல் செஞ்சு பார்ப்பதை கைத்தொழிலா வச்சுக்கனும்

பெண்பால் ஆண்பால் வித்யாசம் இல்லாம மொழிக்கொலை செய்யனும்

அமரிக்கா போனவன் எல்லாம் அயோக்கியன் என அமரிக்காவில் இருப்பவனை விட்டே பிரைன் வாஷ் செஞ்சு எழுத வைக்கணும் ...

தன் மூஞ்சிய கண்ணாடில பார்க்காமலேயே பஞ்சாயத்து பண்ண ஆசைப்படனும்

எவன் முன்னேறினாலும் வயித்துல அடிச்சுகிட்டு ஒப்பாரி வைக்கனும்.

அடுத்தவன் குடி கெடுக்கனும். அவனுக்கு குழந்தை இருந்தா கூட பொண்டாட்டிய பிரிச்சுடனும்.

ஒரு முதலாளிக்கிட்ட வேலைப் பார்த்துக்கிட்டே அவரை திட்டி எழுதணும்.

கண்ட கண்ட பேர்ல (ஆச்சர்யக் குறி ,%குறி இப்படிலாம் ) ஐடி ஸ்டார்ட் பண்ணி கள்ள ஓட்டு போட தெரியனும்.

தலைமறைவு வாழ்க்கை மட்டுமே வாழ்க்கைனு நினைக்க தெரியனும்.

ஆண்கள் என்ன எழுதினாலும் அது ஆணாதிக்கம்னு பேசத் தெரியனும்..

இதெல்லாம் பண்ணிட்ட நீங்க பிரபல புர்ச்சி பதிவர் ஆய்டலாம்.. என்ன நீங்க பிரபலமாக ரெடி ஆயாச்சா ??


அன்புடன் எல்கே

செப்டம்பர் 22, 2010

சொந்த மண் VI


நான் பள்ளி சென்ற பொழுது மிகக் குறைந்த அளவு பள்ளிகளே இருந்தது. இன்றோ தெருவுக்கு ஒரு பள்ளி என்ற அளவில் மாறி விட்டது. அந்த அளவுக்கு கல்வி ஒரு வியாபாரம் ஆகி விட்டது. நான் படித்த வாசவி உயர்நிலைப் பள்ளி இன்று மேல்நிலைப் பள்ளியாகி விட்டது. ஆனால் தரமோ மிகத் தாழ்ந்து விட்டது என்று அங்கிருப்பவர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நகரத்திலும் புகழ்பெற்ற சிலப் பள்ளிகள் உண்டு. சேலத்தில் அவ்வாறு பழமை வாய்ந்தப் பள்ளிகள் என்றால், மரவனேரி பகுதில் உள்ள பாரதி வித்யாலயா, டவுன் ரயில்வே ஸ்டேசன் ரோட்டில் அமைந்திருக்கும் கோகுல்நாதா பள்ளி , ராமகிருஷ்ணா பள்ளி ஆகியவை பல ஆண்டுகளாக சேலத்தில் இருப்பவை. இதன்பின் வந்தவைகளில் பல, கிருத்துவ மிஷனரிகளால் நடத்தப் படும் க்ளூனி, செயின்ட் பால், செயின்ட் ஜோசப் ,செயின்ட் மேரி பள்ளிகளும் இன்று அதிகம் மக்களால் விரும்பப் படுகிறது. இவை தவிர்த்து, மத்தியப் பாட திட்டத்தை பின்பற்றும் வித்யா மந்திர் பள்ளிகளும் உள்ளது. ஒரு சிலப் பள்ளிகளைத் தவிர்த்து மற்றப் பள்ளிகளில் கொள்ளைதான் அடிக்கப் படுகிறது என்று சொல்லவேண்டுமா என்ன ?? இன்னும் கொடுமை என்னவென்றால் , ஒரு சிலப் பள்ளிகளைத் தவிர்த்து வேறு எதிலும், உடல் கல்விக்கோ, விளையாட்டுகளுக்கோ முக்கியத்துவம் அளிக்கப் படுவதில்லை.

நான் பள்ளி முடித்து கல்லூரி சேர வேண்டிய சமயத்தில் சேலத்தில் இருந்தது நான்கு கலைக் கல்லூரிகள் மட்டுமே. இப்பொழுதோ எனக்குத் தெரிந்து கிட்டதட்ட பத்து கல்லூரிகள் உள்ளன. அனைத்தும் பணத்தை நோக்கமாக கொண்டு துவங்கப் பட்டவையே.

ஒரு காலத்தில் சேலம் அரசுக் கல்லூரியில் வேதியியல் படிக்க இடம் கிடைக்காதாம். அவ்வளவு சிறப்பாக செயல் பட்ட கல்லூரி. இன்றோ அப்பெயரை சொன்னாலே, அங்கு நடைபெறும் சண்டைகளும், அடிதடிகளும் மட்டுமே மக்களுக்கு ஞாபகம் வருகிறது.

கலைக் கல்லூரிகளைப் போலவே , பொறியியல் கல்லூரிகளும் அதிகரித்து விட்டன. முன்பு , அரசுக் கல்லூரியும் வினயாகா மிஷன் கல்லூரியும் மட்டுமே இருந்தது. இன்றைக்கு தேவைக்கு அதிகமாகவே உள்ளது .

என்ன மருத்துவக் கல்லூரி மட்டும் இரண்டோடு நிற்கிறது. அதற்கு மேல் இன்னும் துவங்கவில்லை. அதுவரை சந்தோசம் ..

அடடே ஒண்ணு மறந்து போச்சு. சேலத்தில் ஒரு பல்கலைகழகம் இருக்குங்க .அதற்கு பெயர் பெரியார் பல்கலைக் கழகம். நாங்கதான் அதன் முதல் மாணவர்கள். எதுக்கு ஒண்ணு தனியா துவங்கினாங்கனு இன்னும் புரியலை. மொத்தத்தில் அது வேஸ்ட் ...


அன்புடன் எல்கே

செப்டம்பர் 21, 2010

கடத்தல் மன்னர்கள் ஜாக்கிரதை


வர வர இணையதளங்களில் பாதுகாப்பு மிகக் குறைந்து வருகிறது. வலைத்தளங்கள் ஹேக் செய்யப் படுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. அதை ஹேக் செய்தவன் அதை அழிக்காவிட்டால்
பிரச்சனை இல்லை. ஆனால் அழித்து விட்டால் ??

சகப்  பதிவரும் எனது தோழியும் ஆன சந்தியாவின் மின்னஞ்சலும் ,அவரது வலைப்பூவும் ஹேக் செய்யப் பட்டுவிட்டது., ஹேக் செய்தது யார் என்றுத் தெரியவில்லை. ஹேக் செய்தவன் அவரது மின்னஞ்சல் கணக்கை அளித்துவிட்டான் என்று நினைக்கிறேன் .  அவரது மின்னஞ்சலுக்கு அனுப்பப் படும் மெயில்கள் பவுன்ஸ் ஆகின்றன. அவரது வலைப்பூவும் சரியாக வரவில்லை. sandhya-myfeelings.blogspot.com என்ற அவரது வலைப்பூவும் அழிக்கப்பட்டுவிட்டது.

எனக்குத் தெரிந்த வரையில், மின்னஞ்சல் அழிக்கப் பட்டால் அதனுடன் அந்த வலைப்பூவும் அழிந்து விடும் என்று எண்ணுகிறேன்.அவரது வலைத் தளத்தையும், மின்னஞ்சல் முகவரியையும் மீட்க இயலுமா? விவரம் அறிந்தவர்கள் உதவும் . 

முடிந்தவரை , உங்களது கடவுசொல்லை கடினமாக அமைக்கவும். உங்கள் பெயரோ, உங்கள் மகன்,மகள்,கணவர்/மனைவி/காதலன் பெயர் வைப்பதை தவிர்க்கவும்.

அன்புடன் எல்கே

செப்டம்பர் 19, 2010

விருதுகள்


 கொஞ்ச நாளுக்கு முன்னாடி சகோதரி ஆசியா உமர் இதை எனக்கு கொடுத்தாங்க. இதை மற்றவர்களுடன் பகிர கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. தாமதம் ஆனா என்ன , இதோ இதை இப்ப கீழ்க்கண்ட நண்பர்களுக்கு பகிர்ந்து அளிக்கிறேன்.

"அஞ்சாநெஞ்சர்" ஜோதி , நம்ம சேட்டைக்காரன்சங்கவி, மல்லிகை ஸ்ரீ அகிலா ,வெறும்பய,இளம்தென்றல் ,கோகுலசாய்,புவனேஸ்வரி ராமநாதன்,செல்வக்குமார்.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் .   


அன்புடன் எல்கே

செப்டம்பர் 18, 2010

தேடல் சந்தேகமும் தெளிவும்

தேடலின் பதிவுகளை படித்துவிட்டு ஒருவர் என்னிடம் கீழ் கண்ட கேள்வியை கேட்டார்

"பற்று இருக்கக் கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால், ஒரு தாய் தன் குழந்தை மேல் பாசமும் பற்றும் இல்லையெனில் எவ்வாறு வளர்க்க இயலும் "

பற்று பாசம் இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது. இதற்கும் உதாரணம் உண்டு. அத்வைத சித்தாந்தத்தை தோற்றுவித்த ஆதி சங்கரர் சன்யாசம் வாங்கினார். ஆனால் தனது தாயாருக்கு ஒரு உறுதி மொழி அளித்தார் . உனக்கு நான்தான் அந்திமக் காரியங்கள் செய்வேன் என்று. இங்குதான் அந்த வேறுபாடு உள்ளது. அவருக்கு பற்று இருந்தால், சந்நியாசம் வாங்கி இருக்க இயலாது. அப்படியே சந்நியாசியாக சென்றிருந்தாலும் அவரால் இவ்வளவு சாதித்து இருக்க இயலாது. அவருக்கு இருந்தது பாசம் மட்டுமே. ஒரு பொருளின் மீது பற்று வந்தால், மனம் அதை பற்றியே சதா சர்வ காலமும் நினைக்கும்.

ஒரு குழந்தையை வளர்க்க பாசம் இருந்தால் போதும், பற்று தேவை இல்லை. ஒரு உதாரணம் (உதாரணம் மட்டுமே ) அந்தக் குழந்தைக்கு உடல் நலம் குன்றினால், பற்று அற்றவர்கள் எதனால் உடல் நலம் குன்றியதோ அதை சரி செய்ய மட்டுமே விளைவர், தேவை இன்றி அழுது புலம்புதல் இருக்காது. ஏன் என்றால் அவர்களுக்கு தெரியும் இதுவும் ஒரு மாயை என்று .("காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா")
பற்று இருந்தாலோ, அழுது புலம்பி வேறு விஷயங்களில் கவனம் இல்லாமல் அதை மட்டுமே யோசிப்பர்.இங்கு வேறு ஒன்றையும் சொல்ல வேண்டும். நம்மை போல் சம்சார வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு இந்த பற்றை கடந்து செல்லுவது மிகக் கடினம். இதற்க்கு ராமயாணத்தில் வரும் ஒரு இடம் சிறந்த உதாரணம், மாரிசன் பொய் மானாக உருவெடுத்து வரும் பொழுது, ராமருக்கு அது அரக்கர்களின் சூழ்ச்சியோ என்ற சந்தேகம். இருந்தாலும், தன் மனைவி முதல் முறையாக ஒன்றை கேட்டு விட்டாலே அதை தர வேண்டாமா ? என்ற மனைவியின் மேல் இருந்த பற்றுதான் அவரை அதை துரத்தி செல்ல வைத்தது. அதுவே பின் நிகழ்ந்த சோகத்துக்கும் காரணம்.

அடுத்தக் கேள்வி " இவ்வாறு எதிலும் பற்று இல்லாமல் இருந்தால் சமூகம் கேலி செய்யாதா ??"

பற்று அறுத்தவர்களுக்கு மற்றவர்களின் தூஷனை பற்றி கவலை இல்லை. எப்பொழுது அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்று நினைக்கிறோமோ அப்பொழுது நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது என்றே அர்த்தம் . அடுத்தவர்கள் வார்த்தை நம் மனதை பாதிக்கக் கூடாது. அந்த அளவுக்கு மனம் பண்பட வேண்டும்.

வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் , கேளுங்கள் பதில் அளிக்கிறேன்


அன்புடன் எல்கே

செப்டம்பர் 17, 2010

எந்திரன் படம் பார்ப்பேன்

முதல் முதலாக என் தளத்தில் சினிமா சம்பந்தப் பட்ட பதிவைப் போடுகிறேன். சினிமா பத்தி எழுதறதுன்னு முடிவு பண்ணவுடனே , முதலில் யாரை பற்றி எழுதுவது என்ற கேள்வியே வரலை .. நம்ம தலைவரை பத்தி எழுதாம வேற யாரை பத்தி எழுத முடியும்.

கொஞ்ச நாளா டல் அடிச்சிட்டு இருந்த கோடம்பாக்கம் வட்டாரமே இப்ப பரபரப்பில இருக்குனா அதுக்கு தலைவரோட எந்திரன் படம்தான் காரணம்.

முக்கியமா, காசு கொடுத்து படத்தை பார்க்க வரவங்க யாரையும் அவர் படம் ஏமாத்தாது. கொடுத்த காசுக்கு முழு வசூல் இருக்கும். யாரெலாம் அவரோட ரசிகர்கள் ?? ஒரு குறிப்பிட வயதை சார்ந்தவர்களா இல்லை எல்லாருமா ? அப்படின்னு கேட்டா மூன்று வயது குழந்தை முதல் அறுபது வயது முதியவர்கள் வரை எல்லோரும் அவர் படத்தை ரசிக்கறாங்க. அதுக்கு என் அப்பாவும் என் இரண்டரை வயது பெண்ணும் சிறந்த உதாரணம் . பொதுவா சினிமா பார்க்காத என் தந்தை ரஜினி படமா இருந்தால் உக்காந்து முழுசா பார்ப்பார்.


எந்திரன்ல ரஜினி கூட்டு சேர்ந்து இருக்கறது ஷங்கர் மற்றும் ஐஸ்வர்யா . ரஜினி மட்டும் இருந்தாலே பிரம்மாண்டம் இதில் ஷங்கர் வேற ? கேட்கனுமா படம் , இது வரை தமிழ் படங்களை விட பல மடங்கு பிரம்மாண்டமாய் இருக்கப் போவது நிச்சயம். ரசிகர்கள் தலைவரோட அடுத்த பிரம்மாண்ட படைப்பை பார்த்த திருப்தியில் மகிழப் போகின்றனர்.

நான் வெகு நாள் கழித்து பார்க்கப் போகும் படமும் இதுவே. கண்டிப்பா குடும்பத்தோட போய் பார்க்கப் போகிறேன். அது உறுதி. இதில் எந்த மாற்றமும் இல்லை. தலைவர் படம் வெளியானா எல்லாருக்கும் மகிழ்ச்சிதான், ஒரு சிலரை தவிர்த்து.

வருடத்தில் ஒரு மாதம் , ஒரு நாள், ஒரு வேளை எந்திரன் பார்ப்பதால் எனது குடும்பப் பொருளாதாரம் தாழப் போவது இல்லை. படம் பார்க்காம இருந்த அந்த நேரத்தில நான் பெருசா புரட்சி ஒன்னும் பண்ணிடப் போறதும் இல்லை. வீட்ல சும்மா இருக்கறதை விட, குடும்பத்தோட ஒரு மூணு மணி நேரம் நல்லா பொழுது போக்கலாம் படத்துக்குப் போனால். தினம் தினம், நமது இயந்திர வாழ்க்கையில் வெந்து கொண்டு இருப்பதற்கு தலைவர் படம் ஒரு மாறுதல் தரும் , குறைந்தபட்சம் அந்த மூணு மணி நேரமாவது.

சமூகத்தில் ஒரு சிலர் இருக்கின்றனர். அடுத்தவங்களை குற்றம் சொல்லியே பெயர் வாங்கற ஆட்கள். அடுத்தவன் என்ன செஞ்சாலும் குற்றம் சொல்லும் ஆட்கள் இவர்கள். இவர்களை திருத்த முடியாது

எந்திரன் படம் பார்ப்பேன் என்போர் அனைவரும் இந்தப் பதிவில் இருக்கும் படத்தை தங்கள் வலைத்தளங்களில் இணைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன் ..

ரஜினியை பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் . எனவே இதை ஒரு தொடர் பதிவா மாத்தறேன். இதை தொடர நான் அழைப்பது முகிலன், சேட்டைக்காரன் மற்றும் சித்ரா


அன்புடன் எல்கே

செப்டம்பர் 16, 2010

காமன்வெல்த் போட்டிகள்

1930 ஆம் வருடம் தொடங்கப் பட்ட இந்த போட்டி ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நாடுகள் மட்டுமே இதில் பங்கு பெறுகின்றன என்பது முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும்.

அதவாது, இதை காலனி ஆதிக்கத்தை நினைவு கூறுவதாக உள்ளது . சரிதானே நான் சொல்வது ?? ஒலிம்பிக்கை விட இதில் இந்தியா அதிகம் மெடல்கள் பெறும் என்பதே ஒரே லாபம். இதை தவிர வேறு ஒன்றும் உருப்படியாக இல்லை. சரி இந்த முறை இந்தியாவில் நடைப் பெறப் போகிறது இந்தப் போட்டிகள். இது சம்பந்தமா எனக்கு சில கேள்விகள் ...

1 இந்தியாவில் வேறு எந்த நகரமும் இல்லையா போட்டிகளை நடத்த? ஏற்கனவே போக்குவரத்து நெரிசலினால் டெல்லி திணறுகிறது என்பது ஒரு பக்கம் இருக்க, அங்கு புது மைதானங்களை கட்டவும் இடம் அதிகம் இல்லை என்பது முக்கிய விஷயம். இதை ஏன் மும்பை, பெங்களூரு ,சென்னை அல்லது ஹைதராபாத்தில் நடத்தக் கூடாது ?? இவை அனைத்துமே நல்ல உட்கட்டமைப்புகள் கொண்ட நகரமாகும்.

2 போட்டி நடத்த அனுமதி கிடைத்து பல வருடங்கள் ஆகிறது. அப்படி இருக்க இன்னும் ஏன் இவர்களால் மைதானங்களை கட்டி முடிக்க இயலவில்லை ?? விலைவாசி உயரும் என்பதும், ஆரம்பத்தில் குறிப்பிட செலவை விட அதிகம் ஆகும் என்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம் அப்படி இருக்க முடியவில்லை என்றால் போட்டி நடத்த ஒத்துக் கொண்டிருக்கக் கூடாது . இப்பொழுது இந்தியாவின் மானம் பறக்கிறது .. இனி சர்வதேசப் போட்டிகளை இந்தியாவில் நடத்த அனுமதி கிடைக்குமா என்பதே கேள்வி குறிதான்.

3 எதற்க்கெடுத்தாலும் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு, கிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை வளர விடவில்லை என்று சொல்லும் இந்த விளையாட்டு வாரியம் ஏன் கட்டமைப்புகளை உருவாக்குவதில் கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பிடவில்லை ?? அடுத்த வருட உலகக் கோப்பைக்கு பெருவாரியான மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் , காமன்வெல்த் போட்டிகளுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மீடியாவில் வரும் செய்திகள் உற்சாகம் தரும் நிலையில் இல்லை.

4 இந்தியாவில் உள்ள பல வீரர்களுக்கு எந்த மருந்துப் பொருட்கள் தடை செய்யப் பட்டவை எவை அனுமதிக்கப் பட்டவை என்ற விவரமே இல்லை. அதை செய்ய வேண்டிய விளையாட்டு அமைப்புகளோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் தடை செய்யப் பட்ட வீரரை மட்டும் மீடியா தாக்குவது தவறு. முதலில் விளையாட்டு வாரியங்களுக்கு அதைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும்.

ஏன் விளையாட்டு வாரியங்களுக்கு சுய அதிகாரம் அளிக்கக் கூடாது ?? அரசாங்கத்தையே ஒவ்வொரு தேவைகளுக்கும் எதிர் பார்க்க வேண்டி இருப்பதால் பல பிரச்சனைகள் . இந்தியா விளையாட்டுத் துறையில் முன்னேற வேண்டுமெனில், சம்பந்தப் பட்ட அமைப்புகளுக்கு அரசாங்கக் கட்டுப்பாடு விலக வேண்டும், அவற்றின் பொறுப்புகளில் அரசியல் கட்சியில் உள்ள யாரும் இருக்கக் கூடாது .

சரியா ??


அன்புடன் எல்கே

செப்டம்பர் 15, 2010

தேடலின் தொடர்ச்சி II

எப்படி பற்று அறுத்தல் பிறவாமையின் முக்கிய நிலையோ அதே போல் , நான் என்ற அகந்தையை நீக்கலும் முக்கியமே.

அது என்ன நான் ??? அதை எப்படி நீக்குவது ?? நடக்கும் செயல்கள் என்னால்தான் நடக்கின்றன . நான் இல்லாவிடில் இங்கு எதுவும் நடக்க இயலாது. இந்த வெற்றிக்கு நானே காரணம் என்ற எண்ணம் வரக் கூடாது.

இந்த உலகில் நடக்கும் அனைத்திற்கும் காரணம் இறைவனே. அதனால்தான் "அவனின்றி ஓர் அணுவும் அசையாது" என்று சொல்லுவார்கள்.இதற்கு சிறந்த உதாரணம் "ஹனுமான் ". அவர் தனக்கென்று எந்த பலமும் இருப்பதாக என்றும் எண்ணவில்லை. ராமநாமமே பலத்தை தருவதாகவும், அதுவே வெற்றி பெறுவதாகவும் கருதினார். அதுதான் அவரது புகழுக்கு காரணம்.

பாரத யுத்தத்தின் பொழுது கிருஷ்ணர் சொன்ன கீதையிலும் இதைதான் அவர் சொல்லுவார். அதன் சாரம் நான் என்ற அகந்தையை அழிக்க வேண்டும் என்றே அமைந்திருக்கும் (தவறாக இருந்தால் திருத்தவும் ).

இது தொடர்பாக ஒரு சிறிய கதையை பார்ப்போம். மகாபாரதத்தில் வனவாச சமயத்தில், அர்ஜுனன் தீர்த்த யாத்திரை செல்கிறான். அப்பொழுது ராமேஸ்வரம் வருகிறான். அங்கிருந்த ஹனுமாரிடம் " உங்கள் ராமர் சிறந்த வில்லாளி என்றால், அம்பால் பாலத்தை அமைத்திருக்கலாமே " என்று கேலி பேசுகிறான். அதற்கு அவர் "அப்பா! பலம் வாய்ந்த பலர் நடந்து செல்ல வேண்டுமே , அம்பால் அமைத்த பாலம் எப்படி தாங்கும் " என்று பதில் கேள்வி எழுப்புகிறார்.

"ப்பூ ! இதென்ன பிரமாதம். இப்பொழுது பாருங்கள் . நான் நொடியில் அம்பால் பாலம் அமைக்கிறேன். நீங்களே அதில் நடந்து சென்று சோதியுங்கள் என்று சொல்லி கண்ணிமைக்கும் நேரத்தில், அம்புகளால் கோர்த்து பின்னப் பட்ட பாலம் அமைக்கிறான் . ஹனுமாரும் அதில் நடக்கிறேன் என்று முதலில் தனது கட்டை விரலை மட்டுமே வைக்கிறார் . அவ்வளவுதான் , மொத்த பாலமும் நொறுங்கி விழுகிறது கீழே. பாலம் மட்டுமா நொறுங்கியது , அர்ஜுனனின் அகந்தையும் தான்.

நாம் செய்யும் அனைத்தும் அவனால் செய்யப் பட்டதே. அது போலவே அதன் விளைவுகளும் அவனையே சேரும். அது நல்லதோ கேட்டதோ அது அனைத்தும் அவனுக்கே போய் சேரும்.


போற்றுவார் போற்றலும்,தூற்றுவார் துற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! என்ற வாக்கியத்துக்கு ஏற்ப நாம் செய்யும் கடமைகளின் பலனை எதிர்பார்க்காமல் நமது பணிகளை தொடர வேண்டும். அவர் பாராட்டவில்லையே,,இவர் திட்டுவரோ என்று எண்ணக் கூடாது.

இங்கு மேற்குறிப்பிட்ட மூன்று நிலைகளும் மிகக் கடினமான ஒன்றாகும். அடுத்தப் பகுதியில் இது தொடர்பாக ஒருவர் கேட்ட சில சந்தேகங்களும் விளக்கங்களும்.

பி.கு : இங்கு எழுதப் படும் எதிலாவது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். சரி செய்துக் கொள்கிறேன்.


அன்புடன் எல்கே

செப்டம்பர் 14, 2010

சொந்த மண் V

செவ்வாய்பேட்டையின் வணிகப் பகுதிகளை பார்த்தோம். வெல்ல பஜாரின் முடிவில் அமைத்திருப்பது வண்டிப் பேட்டை. முன்பு வெளியூரில் இருந்து வண்டிக் கட்டிக் கொண்டு வணிகம் செய்வ வருவோ தாங்கள் வண்டிகளை நிறுத்தும் இடமாக இருந்தது. இப்பொழுது லாரிகளும், வேன்களும் நிறுத்தும் இடமாக மாறி விட்டது.

இதை தொடர்ந்து அமைந்திருப்பது, ஒரு காலத்தில் ஊர் பெயர் வரக் காரணமாக இருந்த செவ்வாய் சந்தை நடந்த இடம். இப்பொழுது குடோன்களாக மாறி விட்டது. இன்று பெயரளவிலேயே சந்தை நடை பெறுகிறது வேறு ஒரு இடத்தில் வெறும் துணி சந்தை மட்டும் கூடுகிறது. காலத்தின் ஓட்டத்தில் அழிந்த ஒரு நிகழ்வு இது.

சேலம் நகரத்தில் இருந்து உள் நுழையும் எல்லையில் நின்று நகரை காப்பது மாரியம்மன் என்றால், அதன் மறுபுறம் இருந்து காப்பது காளியம்மன். செவ்வாய்பேட்டையில் இருந்து , கொண்டலாம்பட்டி பைபாஸ் சாலை செல்லும் வழியில் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது . உள்ளே நுழைந்த உடன், இடது புறம் அரச மரத்து விநாயகரும், அதன் பின் புற்று கோவிலும் உள்ளது. அவர்களை வணங்கி விட்டு உள்நுழைந்தால் காளியம்மன் நடுநாயகமாக வீற்று இருக்கிறாள். பொதுவாக பார்ப்போர் அச்சப் படும் வண்ணம் காளியம்மனின் உருவம் இருக்கும். ஆனால் இங்கு சாந்த ஸ்வரூபியாக அம்மன் இருக்கிறாள். அம்மனின் முக லாவண்யத்தைப் பார்க்க கண் கோடி வேண்டும். அம்மனை வணங்கி விட்டு வெளி வந்தால், தன்னை தேடி வருபவர்களை காக்கும் ராமா பக்தன் ஆஞ்சநேயர் குடி கொண்டிருக்கிறார். இந்தக் கோவில் லீபஜார் வணிக சங்கத்தால் நிர்வகிக்கப் படுகிறது

பஜாருக்கும், காளியம்மன் கோவிலுக்கும் இடைப்பட்ட தூரத்தில், மாத கோவிலும், அதன் அருகே பெருமாள் கோவிலும் அமைந்துள்ளது. காளியம்மன் கோவிலின் பின் பக்கம், நான் படித்த வாசவி பள்ளிக்கூடம் உள்ளது. நான் பயிலும் பொழுது மாரியம்மன் கோவில் அருகே இருந்தது. இப்பொழுது அதை விஸ்தரித்து , மேல்நிலைப்பள்ளியாக மாற்றி இங்கே வந்துவிட்டனர். இதுவும் செவ்வாய்பேட்டை வணிகர்களால் நிர்வகிக்கப் படும் ஒன்றாகும்.

செவ்வாய்பேட்டையில் இருந்து சேலம் ரயில் நிலையம் செல்லும் வழியில் அமைத்து இருப்பது லீ பஜார். அனைத்து விதமான உணவு தான்யங்களும் இங்கு மொத்த விலையில் விற்கப் படுகிறது. இது பொதுவாக, குடோன்கள் அமைந்தப் பகுதி. மிகப் பெரிய பரப்பளவில் அமைத்துள்ளது .

இதன் அருகே, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் டெப்போ இருந்தது. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு லீபஜரில் ஏற்பட்ட தீ விபத்துக்கு பின் அதை இங்கிருந்து மாற்றி சங்ககிரிக்கு மாற்றி விட்டனர். இப்பொழுது அந்த இடம், மொத்த சரக்கு ஏற்றும் தளமாக ரயில்வே உபயோகிக்கப் படுகிறது.

அடுத்தப் பகுதியில் , சேலத்தில் உள்ள பள்ளிகளை பற்றி பார்ப்போம்

டிஸ்கி : என்னிடம் கைவசம் எந்த போட்டோக்களும் இல்லை. கிடைத்தப் பின் தனியாக அதை போடுகிறேன்
அன்புடன் எல்கே

செப்டம்பர் 13, 2010

தேடலின் தொடர்ச்சி I

நம் வாழ்வே பொதுவாக தேடலை மையமாக வைத்துதான் அமைந்துள்ளது. அனைவரும் பொருளை தேடி ஓடிக்கொண்டே இருக்கிறோம் . நீங்கள் நான் யாரும் இதற்கு விதி விலக்கில்லை . நம் முன்னோர்களின் வாழ்கையை பார்த்தால் அவர்களிலும் சிலர் பொருளை தேடி ஓடியவர்கள் இருப்பர்கள். ஆனால் நன்கு கற்றுணர்ந்தோர் பொருளை தேடி ஓடவில்லை. போதுமென்ற மனமே போன் செய்யும் என்று இருப்பதை வைத்து திருப்தியாக இருந்தார்கள். அவர்களும் ஒன்றை தேடி ஓடினர். அது எது அல்லது யார் ?? பரம்பொருளை தேடினர், பிறவாமை வேண்டின் என்ன செய்ய வேண்டுமென்று தேடினர். அதனால் செம்மையான வாழ்வு பெற்றனர்.

நம்மிடம் அனைத்து வசதிகளும் இருக்கலாம். ஆனால் சில தருணங்களில் வெறுமையை நீங்கள் உணரக் கூடும். பலரும் அதை ஒதுக்கி விடுகின்றனர். ஒரு சிலரோ அதைப் பற்றி அப்போதைக்கு சிந்திப்பர் பிறகு மறந்து விடுவர். ஒரு சிலரே அந்த வெறுமைக்கு காரணம் தேடி செல்ல முயல்கின்றனர். அந்த வெறுமை எதனால் உண்டாகிறது ? நம்மிடம்தான் அனைத்து வசதிகளும் உள்ளனவே ?? எதனால் இது ??? நாம் தேடுவது ஸ்தூலப் பொருட்களை. நாம் தேட வேண்டியதோ கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும் இறைவனையும் , அதனால் கிடைக்கும் பிறவாமையும்.

பிறவாமை வேண்டுமெனின் என்ன செய்யவேண்டும் ? சிறு பாவமும், அறியாமல் கூடப் பண்ணக் கூடாது. இது முதல் படி. அடுத்தது, பற்று என்பதே இருக்கக் கூடாது. எதன் மீதிலும் பற்று இருக்கக் கூடாது. இதற்க்கு ஒரு உதாரணக் கதை ஒன்று சொல்லுவர்.

யமுனையிலே வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது . ஒரு கரையில் கிருஷ்ணன் ருக்மணியிடம் பிரசாதத்தை கொடுத்து, மறுகரையில் இருக்கும் துர்வாசரிடம் கொடுத்த வர சொல்கிறார். ருக்மணிக்கோ எப்படி வெள்ளத்தை கடந்து அக்கரை செல்வது என்று கவலை . அதை கிருஷ்ணரிடமே கேட்க அதற்கு அவர் , யமுனை கரையில் சென்று "கிருஷ்ணன் நித்ய பிரம்மச்சாரி என்பது உண்மை எனில் எனக்கு வழி விடு" என்று சொல் என்று சொல்கிறார் . ருக்மணிக்கு மீண்டும் குழப்பம், என்னடா இது, நம்மை கல்யாணம் பண்ணிக்கிட்டு இருகார், அதுமட்டும் இல்லாமல் இன்னும் பலர் இருக்காங்க, அப்படி இருக்க இப்படி சொல்றாரே இவர். அவர்கிட்ட திருப்பி கேள்வி கீக முடியுமா ? அதனால் அமைதியாக யமுனை கரைக்கு சென்று கிருஷ்ணர் சொல்லியவாறு சொல்கிறாள். என்ன ஆச்சர்யம் !, யமுனையும் விலகி வழி விடுகிறது.

ஒரு வழியாக அக்கரைக்கு சென்று பிரசாதத்தை துர்வாசரிடம் கொடுக்கிறாள். அவரும் அதை வாங்கி உண்கிறார். இப்பொழுது திரும்பி செல்லவேண்டுமே . துர்வாசரிடம் கிருஷ்ணரிடம் கேட்ட கேள்வியை கேட்க, அவர் அதற்கு "துர்வாசர் நித்ய உபவாசி (உணவு உட்கொள்ளாமல் இருப்பவர்) என்பது உண்மையெனில் வழிவிடு " என்று சொல் என்கிறார். இப்பொழுதும் மறுபேச்சு பேச முடியவில்லை ருக்மணியால். அவர் சொன்ன வண்ணமே செய்ய ,யமுனை மீண்டும் வழி விடுகிறது.

மீண்டும் கிருஷ்ணரிடம் வந்த ருக்மணிக்கு இன்னும் குழப்பம் நீங்கவில்லை. அவன் எல்லாம் அறிந்த பரம் பொருள் அல்லவா ? அவரே விடை அளிக்கிறார் ," நான் பலரை மணந்தாலும் என் ஆத்மா அதில் ஈடுபடுவதில்லை . அதில் நான் பற்று வைப்பது இல்லை. எனவே நான் நித்ய பிரமச்சாரி. அதே போல் அவர் ஒவ்வொரு வேளையிலும் உணவருந்தினாலும், அவரும் அதில் பற்று வைப்பது இல்லை . எனவே அவர் நித்ய உபவாசி ". அப்பொழுதுதான் ருக்மணிக்கு விவரம் புரிந்தது.

இவ்வாறு பற்று அறுத்தல் என்பது பிறவாமைக்கு முக்கிய அடிப்படை செயல்.

தேடல் தொடரும்....

அன்புடன் எல்கே

செப்டம்பர் 11, 2010

விநாயகர் தின வாழ்த்துக்கள்

  பதிவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வினயாகர் தின வாழ்த்துக்கள். விக்னங்களை தீர்க்கும் விநாயகன் அனைவருக்கும் நல்லருள் புரிவார்.

அன்புடன் எல்கே

தேடல்


வாழ்வின்  அர்த்தம் என்ன ?? பிறந்தோம் படித்தோம், வளர்ந்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகளை பெற்றோம், அவர்களை வளர்த்து அவர்களுக்கு திருமணம் செய்தோம், பின் இறப்போம் .. இதுவா வாழ்க்கை ?? இதற்கா நாம் பிறப்பெடுத்தோம் ???

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது " என்ற தமிழ் பாட்டியின் வாக்கு இதற்கா சொல்லப் பட்டது ?? இப்படி ஒரு வாழ்க்கை வாழத்தான் பிறக்கிறோமா ?? மேலே சொன்னது வாழ்க்கையின் நோக்கம் இல்லையெனில், வேறு ஏது வாழ்வின் நோக்கம் ???  அந்த நோக்கத்தை அடைவது எவ்வாறு ???

இந்து சனாதன தர்மத்தின் ஒரு முக்கியப் பகுதி பிறவாமை. அதாவது மீள் பிறப்பு வேண்டாமை. நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப , நமது மறு பிறப்பு அமையும் என்பது இந்து மத நம்பிக்கையாளர்களின் கருத்து. முதலில் நான் என்பது யார் அல்லது ஏது ??? நான் என்பது இந்த உடலா ?? கண்டிப்பாக இந்த உடலாக இருக்க இயலாது . ஏன் என்றால், உடலில் இருந்து உயிர் பிரிந்துடன், உடல் எரிக்கப் பட்டோ இல்லை , புதைக்கப் பட்டோ அழிந்த விடுகிறது .

பின் "நான் " என்பது ஏது ?? இந்த உடலினுள் இருக்கும் ஆன்மாதான் அந்த நான். உடலில் இருந்து உயிர் பிரியும் வேளையில் இந்த ஆன்மாவும் அங்கிருந்து நீங்குகிறது. பின் , அந்த பிறப்பில் அது செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த உடல் கிடைக்கிறது. 

ஆக, அழியக் கூடிய இந்த உடலுக்கு நாம் செய்யும் அலங்காரங்கள்தான் எத்தனை ? இந்த உடலை திருப்தி படுத்த நாம் செய்யும் காரியங்கள்தான் எத்தனை ?? அதே வேளையில் , அழியாத ஆன்மாவை திருப்தி படுத்த என்ன செய்கிறோம் ??  குறைந்தபட்சம் அதற்க்குண்டான முயற்சியாவது எடுக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . 
மீண்டும் மீண்டும், பாவக் காரியங்கள் செய்து சிற்றின்பத்தில் ஈடுபாடு, பாவ மூடைகளை ஏற்றிக் கொண்டே இருக்கிறோம். அழியக் கூடிய உடலுக்கு மென்மேலும் சிருங்காரம் செய்து கொண்டே போகிறோம் . இதன் விளைவு , அடுத்தப் பிறவி. 

பிறவாமை வேண்டின் என்ன செய்ய வேண்டும். அடுத்த பகுதியில் தொடர்வோம். 

டிஸ்கி : இரண்டு நாள் தொடர்ச்சியாகப் பேருந்துப் பயணம். அப்பொழுது எனது மனதில் தோன்றிய தேடல் இது... உங்களுடைய கருத்துகளையும், ஐயங்களையும் கேளுங்கள். முடிந்த வரை நிவர்த்தி செய்ய முயல்கிறேன்.

அன்புடன் எல்கே

சொந்த மண் IV

செவ்வாய் பேட்டை , நான் பிறந்து வளர்ந்த இடம். குறுகலான தெருக்களும், ஓட்டு வீடுகளும் நிறைந்து, பழமைக்கு சாட்சியாய் இருக்கிறது. அடுக்கு மாடி வீடுகள் இன்னும் அதிகம் வரவில்லை. செவ்வாய் பேட்டை முழுவதுமே கடை வீதிதான். இதுவும், அருகே இருக்கும், லீ பஜாரும் , தமிழகத்தின் புகழ் பெற்ற மொத்த வியாபார இடங்களாகும்.
முக்கிய உணவுப் பொருட்களான பருப்பு, அரிசி போன்றவை மொத்த வியாபர அடிப்படையில் நடக்கும். இதனால் ஆலைகளில் இருந்து சரக்கை கொண்டு வரும் லாரிகளும், இங்கிருந்து விற்பனை ஆகி செல்கின்ற பொருட்களை ஏற்றி செல்கின்ற லாரிகளுமாய் வீதிகள் எப்பொழுதும் வண்டிகளால் நிறைந்திருக்கும் .குறிப்பாய், செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் வீதிகளில் நடக்கக் கூட இடம் இருக்காது. முழுவதும் லாரி மற்றும் மாட்டு வண்டிகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும். 

சேலம் நகரத்தில் இருந்து வரும் பொழுது , முதலில் நீங்கள் பாத்திரக் கடைகள் மற்றும் வெள்ளி கடைகளை தாண்டித்தான் செவ்வாய் பேட்டைக்கு வர இயலும். இங்குத் தயாராகும் வெள்ளி கொலுசுகள் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவை. தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கும் இங்குத் தயாராகும் கொலுசுகள் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன.  அடுத்த முறை கொலுசு வாங்கும் பொழுது செவ்வாய் பேட்டை உங்களுக்கு கண்டிப்பாக நினைவிற்கு வரும். 

வெள்ளி கடைகளை தாண்டினால், கடை வீதி ஆரம்பம். கடை வீதியில் இருந்து திரும்பும் இடத்தில் செவ்வாய் பேட்டை மாரியம்மன் கோவில் இருக்கிறது. ஆடி மாத பண்டிகையின் பொழுது கோவில் களை கட்டும். சேலத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு மாரியம்மனும் ஒரு சில விஷயங்களுக்கு புகழ் பெற்றவை. செவ்வாய் பேட்டை அம்மன் அலங்காரத்துக்கு புகழ் பெற்ற கோவில். வியாபாரிகள் அதிகம் இருக்கும் இடத்தின் காரணமாகவோ என்னவோ, அம்மன் நகைகளின் நடுவே ஜொலிப்பாள். பொதுவாக, மாரியம்மன் என்றால் முகம் மட்டும் தெரியும் வண்ணமே அமைக்கப் பட்டிருக்கும் மூலவர் சிலை. ஆனால் இங்கு அம்மன் பீடத்தின் மேல் ஒரு காலை மடக்கி, மறு காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பாள். கோவிலுக்கு உள்ளே கூட நுழைய வேண்டாம், வீதியில் இருந்து பார்த்தாலே அம்மனின் முகம் நன்கு தெரியும்.

அம்மனை தரிசித்து மேலே சென்றால், முதலில் நீங்கள் பார்ப்பது , பருப்பு பஜார், அதன் பின், அரிசி பஜார் பின் வெல்ல பஜார்.

 இவ்வளவு முக்கியமான இடமாக இருந்தாலும், இங்கு வந்து  செல்ல பேருந்து இல்லை என்பதுதான் வேதனையான விஷயம். புதிய பேருந்து நிலையம் செல்ல வேண்டும் என்றால், இங்கிருந்து முதலில், செவ்வாய் பேட்டை சரக்கு ரயில் நிலையத்தை கடந்து சென்று சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து நான்கு ரோடு சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து பிடிக்க வேண்டும். நான் பிறப்பதற்கு முன்பிருந்த நிலை என்று மாறுமோ தெரியவில்லை. 
புதிதாய் , சேலத்தில் இருந்து செவ்வாய் பேட்டை வழியாக சென்னைக்கு ரயில் பாதை வந்த பொழுது, சென்னை செல்ல இனி பிரச்சனை இல்லை என்று நினைத்தோம். ஆனால், இப்பொழுது அந்த சந்தோசம் இல்லை. அந்த ட்ரெயின் செவ்வாய்  பேட்டையில் நிற்பது இல்லை. 

இந்த விஷயத்தில் அரசாங்கமும், மாநகராட்சியும் செவ்வைப் பேட்டை ஒதுக்குவது ஏன் என்று புரியவில்லை. ஒரு நாளுக்கு பல கோடிகள் கை மாறும் இடம் இது. அதன் மூலம், அரசாங்கத்திற்கு வருவாய் அதிகம் கிடைக்கும். அப்படி இருந்தும் இந்த நிலை. 

செவ்வாய் பேட்டை அடுத்தப் பகுதியிலும் தொடரும்.....

அன்புடன் எல்கே

சொந்த மண் III

 முதலில் அதிக இடைவெளி விட்டு இதை எழுதுவற்கு மன்னிக்கவும்.

இனி,

சேலத்தில் பார்க்க வேண்டிய/செல்ல வேண்டிய சில இடங்கள்

ஏற்கனவே கோட்டை மாரியம்மன் கோவிலை பற்றி சொல்லி இருக்கிறேன். அங்கு இருந்து ஐந்த நிமிட நடையில், சுகவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. மிகப் பழமை வாய்ந்த கோவில் இது. இப்பொழுது இதை பற்றிய விவரங்கள் சரியாக நினைவில்லாதக் காரணத்தால் இதை பற்றி விரிவாக எழுத இயலவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். 


அண்ணா பூங்கா 

நகரத்திற்குள், மக்களின் பொழுது போக்கிற்கு என்று இருக்கும் ஒரே இடம் இது மட்டும்தான். ஒரு காலத்தில், பாழடைந்து கிடந்த இது, சரி செய்யப் பட்டு சிறுவர்கள் விளையாடும் வகையில்  பல பொழுது போக்கு அம்சங்களுடன் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், இப்பொழுது இது சென்னை மெரீனா பீச் போன்று மாறி விட்டது.  

சினிமா அரங்குகள் 

ஒரு காலத்தில் பல தரமான சினிமாக்கள் சேலத்தில் எடுக்கப் பட்டன. புகழ் பெற்ற மாடர்ன் பிலிம்ஸ் சேலத்தில்தான் இயங்கி வந்தது. ஒரு பத்து வருடம் முன்பு வரை சேலத்தில் நிறைய தியேட்டர்கள் இருந்தன. இன்று பெரும்பாலானவை இடிக்கப்பட்டு மண்டபமாக மாறி விட்டது. நகரப் பேருந்து நிலையத்தை ஒட்டிய கிச்சிப் பாளையம் பகுதிதான் தியேட்டர்களுக்கு புகழ் பெற்ற இடம்., இங்கு அருகருகே பத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்கள் இருந்தன. இப்பொழுது எண்ணிக்கை குறைந்துவிட்டது,. 

அழகாபுரம் 

அழகான தமிழ் பெயர் இருக்க , அதை பேர்லேண்ட்ஸ் என்று மாற்றி அழைக்கின்றனர் . ஏன் என்றுதான் புரியவில்லை. இது சேலத்தின் வசதியான மக்கள் வாழும் இடம். இங்குதான் சேலத்தில் அடுக்கு மாடி வீடுகள் முதலில் வந்ததாய் ஞாபகம். (சரியாக நினைவில்லை ). சேலத்தின் குறிப்பிடத்தக்க இரண்டு ஷாப்பிங்க மால்கள் இங்கு உள்ளன. அதேபோல் சேலத்தின் இரண்டு பெரிய கல்யாண மண்டபங்களும் இந்தப் பகுதியில்தான் அமைந்துள்ளது .

இப்பொழுது அரசு மருத்துவ மனை விரிவாக்கம் செய்யப்பட்டு புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது . ஆனால், அதை கட்டுவதற்காக பல மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டது வேதனையான ஒரு விஷயம். அது மட்டும் அல்லாது, பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிய வளாகம் கட்டிய பொழுதும் அதேதான் நடந்தது. என்று இவர்கள் உணர்வார்களோ மரங்களின் முக்கியத்துவத்தை. 

கடந்த கோடைகாலத்தில், வரலாறு காணாத அளவு இருந்தது வெய்யிலின் தாக்கம் சேலத்தில். அதற்கு இதுவும் ஒரு காரணம். 

அடுத்தப் பகுதியில் நான் பிறந்து வளர்ந்த செவ்வாய் பேட்டை பகுதியை பார்க்கலாம்.. 

 
அன்புடன் எல்கே