ஜனவரி 30, 2011

ஜகத்குரு 12-சந்த்ர ஷர்மா

"சாப விமோசனம் என்ன என்று அவரே சொன்னார். சாபத்தினாலே  பிரம்ம ராட்ஷஸ் ஆன கௌடர்  , வேத அத்யயனம் முடித்தவர்களை கேள்விக் கேட்டு பதில் பெற வேண்டும் . அவ்வாறு கேள்விக் கேட்கும் பொழுது அதிலே வியாகரணம் சம்பந்தமாகவும் கேள்விக் கேட்கப் படவேண்டும் ".

 "அப்படி யார் அந்தக் கேள்விக்கு சரியாக பதில் சொல்கிறார்களோ அப்பொழுது கௌடருக்கு சாப விமோசனம் கிடைக்கும் . மேலும்  சரியாக பதில் சொல்லும் அந்த நபருக்கு  மகா பாஷ்யம் முழுவதையும் கௌடர் சொல்லித் தரவேண்டும் . அதுமட்டுமல்லாது என்ன கேள்விக் கேட்க வேண்டுமென்றும் சொன்னார்.

"நீ கேள்வி கேட்டுப் பதில் சொல்லும் நபர்களில் எவருக்குப் “பச்” என்னும் தாதுவுக்கு நிஷ்டா ரூபம், “பக்தம்” என்று சொல்லாமல் “பக்வம்” எனச் சொல்லத் தெரிகின்றதோ அவருக்கு நீ மஹா பாஷ்யம் முழுதையும் கற்றுக் கொடு. பாத்திரம் அறிந்து வித்தையைக் கொடுத்த புண்ணியத்தினால் உன் சாபத்திற்கும் விமோசனம் ஏற்படும். ராக்ஷஸ உரு மறைந்து போய் உண்மையான உருவம் பெறுவாய். சரியாகப் பதில் சொல்கின்றவர் வரும் வரைக்கும், நீ மற்றவர்களை பிரம்ம ராக்ஷஸாக இருந்து அடித்துச் சாப்பிடத் தான் வேண்டும். சென்று வா" என்று அவரை அனுப்பி வைக்கிறார்.

அவரை வணங்கி அங்கிருந்து கிளம்பிய  கௌடர் பிரம்ம ராட்ஷஸ்  உருவெடுத்து நர்மதை நதிக் கரையில் ஒரு அரசமத்தின் மேல் அமர்ந்து கொண்டார். பின் அவ்வழியே வந்த வேத அத்யயனம் முடிதவர்களைக் கேள்வி கேட்டு பதில் சொல்லாதவர்களை அடித்து தின்னத் துவங்கினார்.

இந்நிலையில் வட திசையில் இருந்து தெற்கு நோக்கி வந்த ஒரு பிராமண இளைஞன் அந்த மரத்தின் அடியில் அமர்ந்தான். மிகுந்த  தேஜசுடன் இருந்த அவனைக் கண்ட கௌடரும் அனைவரிடமும் கேட்ட மற்றக் கேள்விகளைக் கேட்டுவிட்டு “பச்” சின் நிஷ்டா ரூபத்தையும் கேட்டார். மற்றவர்களைப் போலில்லாமல் பதற்றம் இல்லாமல் நிதானமாக பக்வம் என்ற பதிலை சொல்கிறான் அந்த இளைஞன். 

அவனின் சரியான பதிலால் பழைய உருவெடுத்த கௌடர் அவனின் பெயரை விசாரித்து அவன் பெயர் சந்திர ஷர்மா என்றுத் தெரிந்து கொண்டார். பின் அவனை தான் சொல்லுவதை  குறிபெடுத்துக் கொள்ள சொல்ல, அந்தக் காட்டில் ஓலை சுவடி இல்லாத சந்த்ர ஷர்மா , ஆலிலை எடுத்து தன் தொடையில் கீறி அந்த ரத்தத்தில் தொட்டு எழுத ஆரம்பித்தார்.

தான் கற்ற வித்தைகள் முழுவதும் அவருக்கு சொல்லித் தந்த கௌடர் பின்  வட திசை நோக்கி பிரயாணப்பட்டார். அங்கிருந்து கிளம்பிய சந்த்ர ஷர்மா அருகில் இருந்த நகரத்துக்கு சென்றார். சிறிது காலம் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு பின் துறவறம் பூண்டு "கோவிந்த பகவத் பாதர்" என்ற நாமம் கொண்டு தன்னைத் தேடி வரப் போகும் சீடருக்காய் காத்திருந்தார்.

-தொடரும்

அன்புடன் எல்கே

ஜனவரி 28, 2011

நினைவுகள் - 6

கேள்விக்கு பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்தவளின் கண்களை ஒரு கணம் நோக்கினான் ரமேஷ். மையிட்டு கறுத்த இமைகள் சிறிது படபடக்க புதிய பொருளை காணும் ஒரு குழந்தையின் ஆர்வம் அங்கே மின்னிக்கொண்டிருந்தது. சில வினாடிகள் மௌனித்தப் பின் தன்னிருக்கையில் சாய்ந்து அவளை மீண்டும் அளவெடுக்கத் துவங்கினான்.

அவள் நிறத்துக்கு பொருத்தமான க்ரீம் கலரில் டாப்சும் அதற்கு நேர் எதிரான அடர் நீலத்தில் ஜீன்சும் கனகச்சிதமாய் அவள் உடலை கவ்வி இருக்க , கூந்தல் பின்னப்படாமல் இருந்தாலும், அவள் நெற்றியில் அவ்வப்பொழுது தொட்டு சென்ற முடிகள் அழகாய்தான் இருந்தது. அவன் சொல்லத் துவங்கிய தருணத்தில் அவர்கள் ஆர்டர் செய்தவை வர , மௌனமாய் அதைப் பருகத் துவங்கினர்.

அவன் குடித்து முடிக்கும் வரை , தனது கோப்பையில் இருந்ததை பருகியப் படியே அவனை சிறிது ரசித்தாள் சாரு. ஜிம் செல்லும் உடம்பு என்று சொல்ல இயலாவிட்டாலும் தேவையற்ற சதைகள் இல்லாமல் பிட்டாகவே இருந்தான். கல்லூரி காலத்தில் மீசையுடன் இருந்தவன் , இப்பொழுது மீசை இன்றி வட இந்திய சினிமா நட்சத்திரங்கள் போல் பெண்களின் கண்களை கவர்பவனாகத்தான் தோன்றினான்.

அவன் பதிலை எதிர்பார்த்திருந்த சாரு, "என்னடா பதிலேக் காணோம் ? கேள்விக் கேட்டவுடன் அமைதி ஆய்ட்ட ??"

"ஒண்ணுமில்லை . சும்மாதான். என்ன சொல்லலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் "

மீண்டும் ஒரு முறை அவள் கண்களைப் பார்த்தவன் , அதில் தெரிவது என்ன என்று யோசித்தான் . சில நிமிடங்கள் யோசித்தும் ,முயற்சியில் தோற்றவன் பொதுவாய் "ஹ்ம்ம். நல்லாத்தான் இருக்கு " என்று சொல்லி வைத்தான். .

இந்தப் பதிலால் அவள் முகத்தில் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா என்று பார்த்தான். ஆனால் அவள் முகத்தில் எந்த வித வேறுபாடும் இல்லை. எப்பவும் போல் சாதாரணமாக "தேங்க்ஸ் " என்று புன்னகையுடன் வந்தப் பதிலால் அவன் முகத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

அவளின் இந்தப் போக்கு அவனுக்குப் பிடிபடவில்லை. கல்லூரியில் அதிகம் பேசாமல் அடுத்தவரின் கவனத்தை ஈர்க்காமல் இருந்தவளின் மாற்றம் ஒரு பக்கம் வியப்பளித்தது என்றால், அன்றைய அவளின் பேச்சும் , பின் இந்த பதிலும் எதோ குழப்பத்தையே அவனுக்கு உண்டாக்கியது. மனதிற்குள் இந்தப் பெண்களின் மனதை அறிய யாரால் இயலும் என்று நினைத்துக் கொண்டான்

குழப்பத்தை வெளிக்காட்டாமல் ,"நம்ம சீனியர் வெங்கட் இங்கதான் இருக்கார் . தெரியும்தானே ??"

ரமேஷ் திடீரென்று வெங்கட்டை பற்றி பேசுவான் என்று எதிர்பார்க்காத சாரு "ஹ்ம்ம். கேள்விப் பட்டேன் " என்று அசுவாரசியமாக சொன்னாள்.

ஓரளவு இந்தப் பதிலை எதிர்பார்த்த ரமேஷ் " ஏன்? அவர்கிட்ட டச் இல்லையா ?" என்றுக் கேட்டு முடிக்கும்முன் " ப்ளீஸ் வேற எதாவது பேசலாமே ?" முதல்முறையாக கோபம் தொனிக்கும் குரலில் சரஸ்வதி கூற, "ஓகே ஓகே ரிலாக்ஸ் எதுக்கு இவ்ளோ டென்சன் ?" , அவள் கோபத்தைக் குறைக்கும் வண்ணம் கூறி அந்தப் பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான்.,

வெங்கட்டை பற்றிய பேச்சின் விளைவாக இருவருக்கும் இடையே ஒரு மௌனம் நிலவ, மேற்கொண்டு எதுவும் பேசாமல் கேக்கை காலி செய்துவித்து பில் செட்டில் செய்த சமயம் சாரு கொஞ்சம் சமாதானமானவளாய் அவனின் அன்றைய மற்ற திட்டங்களை கேட்டாள். அவனுக்கு வேறு எங்கும் செல்ல வேண்டி இல்லாததால் இருவரும் சிறிது நேரம் பீச்சில் நேரத்தை கழிக்க முடிவு செய்தனர்.

சாரு ஸ்கூட்டியை ஓட்ட , பின் சீட்டில் அமர்ந்தான் ரமேஷ் . கடற்கரை நோக்கி செல்லும் ஆர் கே சாலையில் , சென்னை சிட்டி சென்டரை தாண்டியப் பிறகு , மாலை நேர கடல் காற்றில் அவளது கூந்தல் அலை பாய்ந்து அவனது முகத்தைத் தாக்க , சொல்ல இயலா உணர்ச்சிகளில் சிக்குண்டான் ரமேஷ்.

************************************************************************************
காலைப் பொழுதை கணிணி முன்பும் பின் உணவிற்குப் பிந்தையப் பொழுதை தொலைக்காட்சி முன்பும் செலவழித்த வெங்கட் , மாலை என்ன செய்யலாம் என்று யோசித்துப் பின் வெளியில் செல்ல முடிவெடுத்தான்.

தனது பைக்கில் கிளம்பியவன் , மனம் போன போக்கில் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் சுற்றிப் பின் கடற்கரை நோக்கி செல்லத் துவங்கினான்.

கடற்க்கரை உள்புற சாலையை அடைந்து வண்டியை நிறுத்தி அங்கே இருந்த கல் திட்டுகளில் ஒன்றில் அமர்ந்து இலக்கில்லாமல் கண்களை அலை பாயவிட்டான்.

காலையில் இருந்ததற்கு இப்பொழுது மனம் கொஞ்சம் தெளிவாக இருந்ததுபோல் தோன்றியது வெங்கட்டுக்கு. அவன் நிம்மதியை குலைக்கும் வண்ணம் , ஒரு ஸ்கூட்டி வந்து நிற்க, அந்த சப்தத்தில் திரும்பிப் பார்த்தவன் பின் திரும்பிக் கொண்டான்.

அந்த ஒரு கணத்தில் அவனைப் பார்த்த சாரு ,கண்டும் காணாதவள் போல் ரமேஷுடன் பேசிக் கொண்டே மணல் பரப்பில் இறங்கி நடக்கத் துவங்கினாள். தங்களை அவன் பார்ப்பான் என்று நம்பிய சாரு , வேண்டுமென்றே ரமேஷின் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

ரமேஷும் வெங்கட்டைப் பார்த்தாலும், அவனிடம் பேசவோ இல்லை அதைப் பற்றி சாருவிடம் பேசவோ யோசித்தான். மீண்டும் அவள் கோபித்துக் கொண்டால் என்ன செய்வது என்ற யோசனையில் அவனைக் காணாதவன் போல் அவளுடன் செல்ல ஆரம்பித்தான்.

- நினைவுகள் தொடரும்
அன்புடன் எல்கே

ஜனவரி 27, 2011

நினைவுகள் - 5

வார இறுதி திருமணம் ஆனவர்களுக்கும், நண்பர்கள் வட்டம் அதிகம் உடையவர்களுக்கும், உழைத்து சம்பாதித்ததைக் கொண்டாட்டத்தில் வீணடிப்பவர்களுக்கும் அளிக்கும் மகிழ்ச்சி மற்றவர்களுக்கு அளிப்பதில்லை. அவர்களுக்கு அது மற்றும் ஒரு நாளே. வெங்கட்டும் அந்த மற்றவர்களில் ஒருவன்.சில சமயங்களில் ஏன் வார இறுதி என்ற ஒன்று வருகிறது என்றே நினைப்பான்.


அதிகாலையில் எழும் பழக்கம் உடைய வெங்கட் அன்று முழிப்பு வந்தும் எழ மனமில்லாமல் இருந்தவனின் மனதில் முந்தைய நாளின் நிகழ்வுகள் ஓடின . தன் முடிவை சொன்னவுடன் அம்மாவின் மனம் வேதனைக்குள்ளானது அவள் முகத்தில் கண நேரம் தோன்றி மறைந்த வேதனைக் காட்டியது. தான் எடுத்த முடிவு சரியா என்று மீண்டும் ஒரு முறை யோசித்தான். பின் இதை இனி யோசித்துப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான். அன்றையப் பொழுதைக் கழிக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கினான்.

************************************************************************************
சனிக்கிழமை மாலை வேளைகளில் அந்த காபி டே எப்படியும் நிரம்பி வழிந்துக் கொண்டிருக்கும். விதவிதமாய் பருவ வயதினரும், சில மத்திய வயதினரும் கலவையாய் அமர்ந்திருக்க , சிப்பந்திகளோ நடக்காமல் பறந்து கொண்டிருந்தனர், மேஜைகளுக்கிடையே .

மூலையில் சாலையை பார்த்த வண்ணம் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தான் ரமேஷ். சாலையைப் பார்ப்பதும் பின் செல் போனை எடுத்து நேரம் பார்ப்பதுமாய். ஆர்டர் கேட்ட சிப்பந்திக்கு பிறகு வர சொல்லி மறுமொழி குடுத்த வண்ணம் செல்போனில் எண்களை ஒத்தினான். மறுமுனை ரிங் மட்டுமே செல்ல , குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு யாரும் கவனிக்கமால் ஓடிக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் கண் பதித்தான்.


அதே நேரம், அவசரமாய் உள்ளே வந்தாள் சரஸ்வதி. உள்ளே நுழைந்து அவன் எங்கிருக்கிறான் என்று தேடியவள், சில வினாடிகள் தாமதத்திற்குப் பிறகு அவன் இருந்த சோபாவை கண்டுக் கொண்டாள்.

ஓட்டமும் நடையுமாய் அங்கு சென்றவள் ,அவனது இருக்கைக்கு எதிர் புறம் அமர்ந்து சில வினாடிகள் பேசவில்லை. ஓட்டமாய் அவள் அங்கு வந்தது விடும் மூச்சினில் தெரிந்தது. அவளது கண்கள் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சுருங்கி விரிந்தது. சில நிமிடங்கள் அங்கு மௌனமே நிலவியது

மூன்று வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கும் ரமேஷிற்கு அவளிடம் இருந்த மாற்றங்கள் எளிதில் தெரிந்தது. கல்லூரியில் சுடி,புடவையை தவிர வேறு எதுவும் அணியாதவள் இன்று ஜீன்ஸிலும் டாப்சிலும் இருந்தது வியப்பளிக்காவிடினும் , அவளின் மேக்கப் அவனுக்கு சிறிது வியப்பளிக்கதான் செய்தது.

புருவங்கள் திருத்தப்பட்டு, செயற்கை பூச்சுகளுடனும், உறுத்தாத லிப் ஸ்டிக்குடனும் , வாரப்படாமல் விரிந்த கூந்தலுடனும் என்றும் அவளைக் கண்டதில்லை அவன். முன்புக்கு இப்பொழுது அவள் சற்று அழகுடன் இருப்பதாய் பட்டது அவனுக்கு.

அவளின் அழகில் மூழ்கியவனை, அவளது குரல் இந்த உலகுக்கு மீட்டது. ஒரு கணம் தன் செய்கையை நினைத்து வெட்கியவன் பின் சுதாரித்துக் கொண்டு பேசத் துவங்கினான்.

"எப்படி இருக்க சாரு?"

"எனக்கென்ன? நல்ல வேலை, தேவையான சம்பளம். பிரச்சனை இல்லாமல் போகுது . நீ எப்படி இருக்க ரமேஷ் ? அப்ப இருந்ததுக்கு இப்ப இன்னும் கொஞ்சம் சதை போட்ட மாதிரி இருக்கு ?"

"நானும் நல்லாத்தான் இருக்கேன் சாரு. நிம்மதியான வேலை . என்ன பெங்களுருவில் இருப்பதால் வீட்டை விட்டு பிரிந்து இருக்கும் கஷ்டம் மட்டும்தான் . வேற எந்த கஷ்டமும் இல்லை . "

"சரி என்ன சாப்பிடற? இப்ப சொன்னா கொண்டு வர எப்படியும் இன்னும் அரைமணி நேரம் பண்ணுவான் ?"

மெனுவை பார்த்து பிறகு அவனுக்கும் சேர்த்து இரண்டு காபிஸினோ அப்புறம் ஒரு ப்ளாக் பாரெஸ்ட் கேக் ஆர்டர் கொடுத்தாள்.

"நம்ம ப்ரெண்ட்ஸ்,சீனியர்ஸ் யாரவது டச்ல இருக்காங்களா ? "

"ரொம்பப் பேர் மெயில் பண்ணாக் கூட பதில் அனுப்பறது இல்லைடா. சோ நானும் கண்டுக்கறது இல்லை . "

"ஹ்ம்ம் எல்லா இடத்திலும் இதுதான். முதல் ஒரு வருஷம் பாசமா இருக்கறவங்க அப்புறம் எல்லாம் மறந்திடறாங்க."

"என்ன பண்ண? எல்லோருக்கும் வேலை, குடும்பம்னு ஆனப்புறம் நண்பர்களை மறக்கறது சகஜம்தானே ?"

"சரி அதை விடு என்ன திடீர்னு சென்னை விஜயம் ?"

"ஸ்பெசலா இல்லை. சும்மா வந்தேன். நம்ம மக்கள்கிட்ட கேட்டப்ப உன் நம்பர் மட்டும்தான் கிடைச்சது. சரி உன்னையாவது பார்க்கலாமேனு போன் பண்ணேன். பழைய சாருவா இருப்பேன்னு பார்த்தா ஆளே மாறி போயிருக்க. நெறைய மாறிட்ட நீ "

தான் வந்தவுடன் தன்னை அவன் ஆராய்ந்ததை அப்பொழுதே கவனித்த அவள் இப்பொழுது அவன் கண்கள் தன்னை மீண்டும் ஆராயத் துவங்கியதைக் கண்டு " இன்னும் நீ மாறவே இல்லையா ? கண்ணை வச்சிக்கிட்டு சும்மா இருக்கியா ? ஏன் இந்த டிரஸ் எனக்கு செட் ஆகலியா ?"

கேட்டவளின் கண்களில் அவனது பதிலை எதிர்பார்க்கும் ஆர்வம் மிதமிஞ்சித் தெரிந்தது.

-நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

ஜனவரி 26, 2011

வந்தே மாதரம்


வந்தே மாதரம்!

ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஸீதளாம்
ஸஸ்ய ஸ்யாமளாம் மாதரம்!
வந்தே மாதரம்!

ஸுப்ர ஜ்யோத்ஸ்னாம் புலகித யாமினீம்
புல்லகுஸுமித த்ருமதள சோபினீம்
ஸுஹாசினீம் ஸுமதுர பாஷினீம்
ஸுகதாம் வரதாம் மாதரம்!
வந்தே மாதரம்!

கோடி கோடி கண்டா கலகலநிநாத கராலே
கோடி கோடி புஜைந்திர்திரித கர கரவாலே
அபலா கேனோ மா எதோ பாலே
பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்
ரிபுதலவாரிணீம் மாதரம்!
வந்தே மாதரம்!

துமி வித்யா துமி தர்மா
துமி ஹ்ருதி துமி மர்மா
த்வம் ஹி ப்ராணா: ஷரீரே

பாஹுதே துமி மா சக்தி
ஹ்ருதயே தும் மா பக்தி
தொமார இ ப்ரதிமா கடி
மந்திரே மந்திரே!

த்வம் ஹி துர்கா தஷ ப்ரஹரணதாரிணீ
கமலா கமலதல விஹாரிணீ
வாணீ வித்யாதாயினீ நமாமி த்வாம்

நமாமி கமலாம் அமலாம் அதுலாம்
ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்!

ஸ்யாமளாம் சரளாம் சுஸ்மிதாம் பூஷிதாம்
தரணீம் பரணீம் மாதரம்!


தமிழில் 

தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்


வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்னகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்

தமிழாக்கம் : விக்கியில் இருந்து எடுத்தது . 
அன்புடன் எல்கே

ஜனவரி 25, 2011

நினைவுகள் -4

 மகனின் முடிவை எதிர்பார்த்திருந்த தாய், வந்தவனின் முகம் கண்டு எதுவும் பேசவில்லை. அமைதியாக சூடான காபி ஒன்று மட்டும் அவன் முன் வைக்கப் பட்டது. மனதில் சிந்தனைகள் பல ஓட, காப்பியை பருகியவனின் முகத்தில் குழப்ப ரேகைகள்.

சிந்திக்க சிந்திக்க மேலும் குழப்பம் அதிகரித்ததே தவிர , தெளிவுப் பிறக்கவில்லை. ஒரு பக்கம் தன் நிலையை நினைத்து சிரிப்பு வந்தது வெங்கட்டுக்கு . இருபத்து நான்கு மணி நேரத்திற்கு முன்பு வரை , இன்னும் சரியாக சொல்லப்போனால் பன்னிரண்டு மணி நேரத்திற்கு முன்பு வரைக்கூட அவளைப் பற்றிய சிந்தனைகள் இல்லை .ஒரே ஒரு போட்டோ தன்னை மாற்றிவிட்டது நினைத்து ஒரு பக்கம் கோபம் கூட வந்தது.

எதையோ நினைத்தவனாய், தனது அறைக்கு சென்று , கல்லூரி காலக்  குப்பைகளை கிளறிய பொழுது அவன் தேடியது கிடைத்தது. அதையும் , தற்பொழுது வந்த போட்டோவையும் இரு கைகளில் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கத் துவங்கினான்.

சிறிது நேரம் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தவனின் பார்வை ,பழைய படத்தின் மேல் நிலைத்தது. பின் , கணினியுடன் இருந்த ஸ்கேனரில் அதை வைத்தவன், ஸ்கேன் ஆகி கணிணியில் வந்தப் படத்தில் இவளது உருவத்தை மட்டும் வெட்டி தனியாக ஜூம் செய்து அதிலே தன்னை மறந்தான்.

அழகு நிலையங்களின் தாக்கம் முழு அளவில் வீசத் துவங்காத காலமது. ஒப்பனைகள் அதிகமின்றி பௌர்ணமி நிலவாய் அவள் முகம். சொக்க வைக்கும் அழகில்லை என்றாலும், வீதியில் செல்வோரை பார்க்க வைக்கும் அழகுதான். பருமனும் இல்லாமல் சைஸ் ஜீரோவும் இல்லாமல் உடல் வாகு. பார்ப்போர் கண்ணை உறுத்தாத உடைகள். எதிரில் இருப்போரை ஆழ்ந்து ஊடுருவும் கூறியப் பார்வை அவளுடையது. அவள் கண்களை பார்த்து பேசுவது வெங்கட்டுக்கு என்றுமே கடினமானக் காரியமாக இருந்தது  இப்பொழுது அவனுக்கு நினைவிற்கு வந்தது.

பல மணி நேரங்களுக்குப் பிறகு முகம் மேகமூட்டம் இல்லாத வானம் போல் தெளிவாய் இருந்தது. சிறிது நேரம் சிந்தித்தப் பிறகு முன்னறைக்கு  சென்று தன் அம்மாவிடம் பேசத் துவங்கினான்.

******************************************************************************************
வீட்டிற்கு வந்த சரஸ்வதிக்கு மனம் சிறிது அமைதியானது போல் தோன்றியது .
வெகு நாட்களுக்குப் பின் அழைத்த தன் வகுப்புத் தோழனும் அதற்கு ஒரு காரணம் என்று நினைத்துக்கொண்டாள் .

அவள் மனது மாற்றம் வேண்டும் என்று கூவிக் கொண்டிருந்தது. அடுத்த நாள் அவனை சந்திக்கப் போவதை நினைத்தாள். அடுத்த நாள் சந்திப்பிற்கு என்ன உடை அணியலாம் என்று யோசித்தவளுக்கு புதிதாய் வாங்கி அணியாமல் இருந்த ஜீன்ஸ் நினைவிற்கு வர, அதற்குப் பொருத்தமான டாப்ஸை தேடி கிரீம் கலரில் அவளுக்குப் பிடித்த சார்ட் டாப்ஸை எடுத்து வைத்தாள்.

வீட்டில் அவளுடன் தங்கும் மற்ற இருவரும் வார இறுதிக் காரணமாய் ஊருக்கு சென்று விட, எப்பொழுதும் தனிமை தரும் சோகம் இல்லாமல்மனதில் சிறிது மகிழ்ச்சி இருக்க , கணிணியில் புதுப் பாடல்களை ஒலிக்கவிட்டுவிட்டு  கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே ரசிக்கத் துவங்கினாள்.  அன்றைக்கு காலையில் நடந்த நிகழ்வுகள் நேரம் அறியாமல் அவள் மனதில் முகத்தில் மீண்டும் எரிச்சல் லேசாகத் தலை தூக்கியது. ஒரு கணத்தில் அதை மாற்றிய அவள், காலையில் பியூட்டி பார்லர் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது அலைபேசி சிணுங்கியது.

தந்தையின் பெயரை அதில் பார்த்தவள், என்ன கேள்வி வரும் என்று எதிர்பார்த்தவள் போல, "அப்பா ! எனக்குப்  பிடிக்கலை . இந்த இடம் வேண்டாம் . இன்னும் கொஞ்ச நாள் இந்த மாதிரி எதுவும் போட்டோலாம் அனுப்பாதீங்கன்னு அவள் சொல்லி முடிக்கும் முன் , அவள் தந்தையே " நீ இப்படி சொல்லுவேன்னு எனக்குத் தெரியும். ஆனால் உனக்கு முன்னாடியே அந்தப் பையன் வேண்டாம்னு சொல்லிட்டான். இப்பதான் போன் வந்துச்சி "

இந்த எதிர்பாராத திருப்பதால் திகைத்த அவள் வேறு எதுவும் பேச முடியாமல் பிறகு அழைக்கிறேன் என்று சொல்லி குழப்பத்துடன் யோசிக்கத் துவங்கினாள். ஒருபுறம் மனதிற்கு சிறிது நிம்மதியாய் இருந்தாலும் ,இன்னொருபுறம் அவன் எதனால் அப்படி சொன்னான் என்று குடைந்தது. அவனிடமே போன் செய்து கேட்போம் என்று அலைபேசியை எடுத்தவள் பின் அது நன்றாக இருக்காது என்று அந்த யோசனையை கைவிட்டாள்.

அப்பொழுது வந்த குறுஞ் செய்தியை படித்த அவள் முகத்தில் மீண்டும் புன்னகை .உடனடியாக அதற்கு மறுமொழி அனுப்பி விட்டு தனக்குப் பிடித்த பாட்டை முணுமுணுத்தவாறே வரும்பொழுதே வாங்கி வந்திருந்த ஹோட்டல் பார்சலைப் பிரித்து உண்ணத் துவங்கினாள்.

- நினைவுகள் தொடரும்

அன்புடன் எல்கே

ஜனவரி 24, 2011

ஜகத்குரு 11-கௌடர்

 பலவிதமான பாடங்கள், பலவிதமான மாணவருக்கு ஒரே சமயத்தில் எடுக்கவேண்டும். யோசித்தார்  பதஞ்சலி.  மாணவர்களுக்கும் ,அவருக்கும் இடையே ஒரு திரைப் போட்டார். ஆதிசேஷனாக உருமாறி திரைக்குப் பின் தன்னை மறைத்துக் கொண்டு பாடங்கள் எடுக்கத் துவங்கினார்.

பாடம் எடுக்கத் துவங்கும் முன்பு இரண்டு நிபந்தனைகளை விதித்தார். அவர் பாடம் எடுக்கும் பொழுது யாரும் வெளியே போகக் கூடாது. மீறி சென்றால் பிரம்மராட்சசனாக மாறிவிடுவீர்கள் என்று ஒரு சாபம் முன்னாடியே சொல்லி விட்டார். இரண்டாவது நிபந்தனை ,யாரும் எந்த நேரத்திலும் திரையை விளக்கிப் பார்க்கக் கூடாது.

கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் அனைவரும் சம்மதித்தனர். பாடங்களும் துவங்கின. அனைவருக்கும் தனித் தனியாக வகுப்புகள் போகின்றன. இந்த சமயத்தில் கொஞ்சம் அதிகப் பிரசங்கி மாணவனுக்கு திரையை விலக்கி பார்க்க முற்பட்டான். அவ்வளவுதான் , ஆதிஷேசனின் நஞ்சு அங்கிருந்த அனைவரையும் சாம்பலானார்கள்.

பதஞ்சலிக்கு வருத்தம். தன் சொன்னா பேச்சை கேட்காமல் இப்படி ஆகிவிட்டதே என்று. அப்பொழுது ஒரு மாணவர் வருகிறார். அந்த மாணவனோட பெயர் கௌடர்.  அவனிடம் பதஞ்சலி கேட்கிறார் "எங்கே சென்றாய் ?"

"இயற்கை உபாதைக்கு "

"எங்கும் செல்லக் கூடாது என்றல்லவா சொல்லியிருந்தேன்?"

"ஆமாம். ஆனால் என்னால் முடியவில்லை அதனால்தான் சென்றேன் ."

"ஒன்று செய்வதற்கு இல்லை. சாபம் நிச்சயம் பலிக்கும். அத்தனை பாடங்களையும் உனக்கே சொல்லித் தருகிறேன். "

பதஞ்சலி ஆதிசேஷன் அவதாரமாக இருந்தாலும், மனித ரூபத்தில், இந்த உலக நியதிக்கு ஏற்ப ஆசிரியராக அனைவருக்கும் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் எதிர்பாரா விதமாய் இப்பொழுது சிக்கல். எனவே வேறுவழியின்றி தனது திவ்ய  சக்தியை  உபயோகிக்க வேண்டிய தருணம். "தனக்கு தெரிந்தவை அனைத்தும் இவனுக்குத் தெரிய வேண்டும் " என்று அனுக்ரகனம் பண்ணினார்.

இப்ப அடுத்தப் பிரச்சனை. சாபம்னு ஒண்ணு இருந்தா சாப விமோசனம்னு ஒண்ணு இருக்கு, அதையும் சாபம் கொடுத்தவர்தான்  சொல்ல வேண்டும் .

-தொடரும்
அன்புடன் எல்கே

ஜனவரி 18, 2011

திவ்யாவும் ஸ்கூலும் II

முதல் மூன்று நாட்கள் பள்ளி செல்ல அடம்பிடித்த திவ்யா ,நான்காம் நாள் நான் கூடி சென்ற பொழுது அழாமல் உள்ளே சென்றுவிட்டாள். என் மனைவிக்கு ஆச்சர்யம். நான் ஒன்னும் பெருசா எதுவும் செய்யவில்லை. அங்கே மீன்தொட்டி இருந்தது. அதில் இருந்த மீனை காட்டி சிறிது நேரம் விளையாடிவிட்டு அப்படியே வகுப்பறையில் விட்டுவிட்டேன்.

************************************************************************************
அன்று மாலை ,நான் வீடு திரும்பியப் பின் "இன்னிக்கு ஸ்கூல்ல என்ன பண்ண?"
"விளையாடினேன் "
"ரைம்ஸ் சொல்லித் தந்தாங்களா ??"
"இல்லை "
"அப்புறம் வேற என்ன பண்ண ?"
"நான் டீச்சருக்கு ரைம்ஸ் சொல்லித் தந்தேன்"
"..............??"

என்ன சொல்ல இதுக்கு நான் ??

************************************************************************************
இன்றைக்கு பள்ளியில் விடும்பொழுது என் மனைவியிடம் திவ்யா
"அம்மா டாட்டா. "
"சரி அழாம சமத்தா இரு "
"சரி. நீ சீக்கிரமா வந்து என்னை கூட்டிகிட்டு போய்டு. இல்லாட்டி நான் அழுவேன் "

************************************************************************************
ஒரு வாரத்திலேயே அந்த சூழலுக்கு ஒத்துப் போய் விட்டாள். இப்பொழுது பள்ளி செல்ல அடம்பிடிப்பது இல்லை. இன்னும் மற்ற குழந்தைகளுடன் அதிகம் பழக ஆரம்பிக்கவில்லை. ஒன்றிரண்டு வாரங்களில் சரியாகிவிடும் என்று எண்ணுகிறேன்

அன்புடன் எல்கே

ஜனவரி 17, 2011

வலைச்சரம்

வணக்கம் நண்பர்களே. எல்லோரும் பொங்கலை மகிழ்ச்சியா கொண்டாடி இருப்பீங்க. கரும்பு பொங்கல் எல்லாம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படியே ஒரு டேர்ன் எடுத்து வலைச்சரத்துக்கு வந்திருங்க.

ஆமாங்க. இன்னும் ஒரு வாரம் அங்க நம்ம பதிவுதான். அன்பின் சீனா அய்யா அங்க எழுதக் கூப்பிட்டு இருக்கார்.

எனவே வர ஞாயிறு வரை, தினமும் அங்கு சந்திப்போம்.

அன்புடன் எல்கே

ஜனவரி 16, 2011

ஜகத்குரு -10 -கோவிந்த பாகவத் பாதர்


 "இவர் வெளியில் காத்திருப்பது போலவே, சிஷ்யனை எதிர்பார்த்து குருவும் காத்திருக்கிறார் உள்ளே. இருவரும் சந்திக்கிறார்கள். குருவைப் பார்த்தவுடன் மீண்டும் ஒருமுறை அவரை நமஸ்கரித்து எழுகிறார் சங்கரர்.

சங்கரரைப் பார்த்தவுடன் கோவிந்த பாகவத்பாதருக்கு அவர் யாரென்றும் எத்தகையவர் என்றும் தெரிந்துவிட்டது. இருந்தாலும் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா ? மெளனமாக அங்கே வீழ்ந்துக் கொண்டிருக்கும் நர்மதையைப் பார்க்கிறார் குரு. அவரது பார்வை சென்ற இடத்தைப் பார்த்தவுடன் சங்கரருக்கு தான் என்ன செய்யவேண்டும் என்பது புலனாகிறது.

தனது கமண்டலத்தை எடுத்து நீரினில் அமிழ்த்த, அவருக்குக் கட்டுப்பட்டது போல, நர்மதை அவரது கமண்டலத்தில் அடங்கியது. இதைக் கண்ட குரு புன்னகைக்க மீண்டும் சங்கரர் தனது கமண்டலத்தை கவிழ்த்த நர்மதை பழையப் படி ஓடத் துவங்குகிறது.

 சங்கரரை பார்த்து "யார் அங்கே ?" என்றுக் கம்பீரமானக் குரலில் கேட்கிறார். அதற்குப் பதிலாக சங்கரர் பத்து சுலோகங்களில் தன் இருப்பைத் தெரிவிக்கிறார்.

இதைக் கேட்டவுடன், குருவுக்குப் புரிந்துவிட்டது, தான் இவருக்கு சொல்லித் தர எதுவும் இல்லை. முறைப்படி நடக்கவேண்டும் என்பதற்காக இந்த விஷயங்கள் நடக்கிறது என்று."

"மாமா , கோவிந்த பகவத் பாதர் யாரு ? அவரைப் பற்றி சொல்லுங்களேன் "


"சரி சொல்றேன் கேளு. பதஞ்சலி முனிவர் பத்தி கேள்விப் பட்டு இருப்பாய் .

சிதம்பரத்திலே, நடராஜரின் நடனத்தைக் காணவே , ஆதி ஷேஷனாய் இருந்த அவர் பாதி மனித உடலும்,பாதி பாம்பின் உடலுமாய் பூலோகம் வந்தார். டமருகம் ஆட, சதங்கைகள் குலுங்க நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தைக் கண்டுக் களித்தார்.

அந்த சமயத்தில் பதஞ்சலி முனிவருக்கு ஆணை வருகிறது பரம்பொருளிடம் இருந்து. 'இந்த டமருகத்தின்  ஓசையில் இருந்துப் பிறந்தது வியாஹரணம் என்கிற இலக்கணம். அதற்கு நீர் விரிவுரை எழுதவேண்டும். மேலும் யோகப் பயிற்சி முறைகளை இந்த பூலோக வாசிகளுக்கு கற்றுத் தரவும் கட்டளை இட்டார்.

-தொடரும்

அன்புடன் எல்கே

ஜனவரி 13, 2011

நினைவுகள் -3

மேஜையில் இருந்தத் தொலைபேசியை எடுத்தவன் போட்டோவின் பின்பக்கம் எழுதி இருந்த எண்ணுக்கு அழைத்தான். எதிர்முனையில் ரிங் சென்றுகொண்டிருக்க காத்திருந்த அந்த நொடிகளில் என்றுமில்லா படபடப்புடன் அவனது இதயத்தின் துடிப்புக் கூடியது.

சில நொடிகளின் வீணடிப்புக்குப் பிறகு மறுமுனையில் இருந்து வந்த "ஹலோவை " கேட்டப் பின் வெங்கட்டின் பதட்டம் சிறிது கூடியது . வினாடி நேரத் தயக்கத்துக்குப் பிறகு

"நான் வெங்கட் பேசறேன்" .

"எந்த வெங்கட்?"

"நீ.....நீங்க சரஸ்வதிதான? "

"ஆமாம்."

"என்னை ஞாபகமில்லையா ? காலேஜில் உனக்கு சீனியர் வெங்கட் ."

"ம்ம். சொல்லுங்க. டக்குனு ஞாபகம் வரலை . இப்ப ஞாபகம் வந்திருச்சு " குரலில் இருந்த தடுமாற்றம் அவள் பொய் சொல்வதை வெளிக்காட்டியது.

எப்படி சொல்வது என்றக் குழப்பத்தில் கழிந்த கனத்த மௌனத்திற்குப் பிறகு "உனக்கு கல்யாண ஏற்பாடு நடக்குது போல " என்று தயங்கியக் குரலில் வந்த அவனது கேள்விக்கு சலிப்புடன் வந்த "ம்" என்ற ஒற்றைச் சொல்லே அவளின்
மனநிலையை வெளிப்படுத்தியது .

இதை ஒருவாறு ஏற்கனவே எதிர்பார்த்ததால் " இன்னும் பழசெல்லாம் மறக்கலியா நீ ?"

"எப்படி மறக்க சொல்றீங்க வெங்கட்? மறக்கக்கூடிய விஷயமா அது ?"

பதில் வந்த வேகத்திலும் ,அதில் இருந்த உஷ்ணத்திலும் அமைதியானவன் , "உன் முடிவு ...." வார்த்தையை முடிக்கும் முன் " கண்டிப்பா இது நடக்காது . இது தெரிஞ்சிருந்தும் ஏன் கால் பண்றீங்க ?" உஷ்ணமான வார்த்தைகளுடன் அழைப்புத் துண்டிக்கப் பட்டது .

அவள் கோபம் கொள்வாள் என்று எதிர்பார்த்திருந்தாலும் அவளது உஷ்ணமான வார்த்தைகளும் ,அழைப்பை துண்டித்ததும் அவனுக்கு ஆயாசத்தை உண்டு பண்ணியது . சலிப்புடன் அலுவலகத்தை விட்டு வெளிவந்தவன், வழக்கமான டீக்கடையில் சென்று டீ சொல்லிவிட்டு , ஒரு கிங்க்ஸ் பில்டருடன் பழைய நினைவுகளில் மூழ்கினான்.

பலருக்கும் இனிய நினைவுகளுடன் இருக்கும் கல்லூரிக் காலம் அவனுக்கு கொடுத்த வேதனைகளை மறக்க நினைத்தும் முடியவில்லை. " செய்யாத ஒன்றுக்கு எப்படி பொறுப்பானேன் நான் ?" பலமுறை சிந்தித்தும் அவனுக்கு விடை தெரியாத கேள்வி அது .

இவன் ஒருவிதமாய் சோகத்தில் இருக்க, அவளோ ஒருபுறம் கோபமும் மறுபுறம் மகிழ்ச்சியுமாய் இருந்தாள். அவனது அழைப்பும்,பேச்சும் கோபத்தை தூண்டினாலும், தன் செய்கை அவனை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் என்ற எண்ணமே அவளுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஒருபுறம் மனம் இவ்வாறு மகிழ்ந்தாலும், மனதின் ஒரு மூலையில் தான் செய்வது தவறோ என்ற ஒரு சின்ன சந்தேகமும் கூடவே உயிர்கொண்டது. ஒரு கணம்தான் அந்த எண்ணமும். பின் அதை அலட்சியப் படுத்தி தன் வேலையில் மூழ்கினாள்.

அப்பொழுது மீண்டும் அவளது அலைபேசி துடிக்கத் துவங்க, அதில் வந்தப் பெயரை பார்த்து அழைப்பை உயிர்ப்பித்தாள்.

-தொடரும்
அன்புடன் எல்கே

ஜனவரி 12, 2011

செல்போன் கம்பெனிகளின் புது கொள்ளை

செல்போன் இன்று நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது . சிக்னல் பிரச்சனை ,பில் பிரச்சனை என்று பல பிரச்சனைகள் இருந்தாலும் எதோ ஒரு கம்பெனியின் சிம் உபயோகித்து கொண்டுதான் இருக்கிறோம் அனைவரும்.

இதில் நம் பணத்தில் இருந்து பலவிதத்தில் கொள்ளையடிக்கும் கம்பெனிகள் உண்டு. ஏதாவது கட்டண சேவைக்கான மெசெஜ் வரும் , விவரம் தெரியாமல் அதை அழுத்திவிட்டால் சில பல தொகை உங்கள் கணக்கில் இருந்து காணாமல் போகும். மறுபடியும் அந்த சேவையை நீக்கணும்னா நீங்க வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு கால் செஞ்சாகனும். இந்த இடத்தில்தான் இப்ப செல்போன் கம்பெனிகள் புதியக் கொள்ளையை துவக்கி உள்ளனர்.

கொஞ்ச நாள் முன்பு வரை வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு நீங்க கால் செஞ்சா அது முற்றிலும் இலவசம். இப்ப அப்படி இல்லை. அதில் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டிருக்கும் விவரங்களை அறியக் கட்டணம் எதுவும் இல்லை. இதுவே உங்க பில்லிங் பிரச்சனை இல்லை வேற எதாவது பிரச்சனை என்று கஸ்டமர் கேர் பிரிவுக்கு பேச நினைத்தால் உங்களுக்கு அவங்க பில் பண்ண ஸ்டார்ட் பண்ணிடறாங்க.

ஆறு வருசமா உபயோகிச்சா ஏர்செல் நம்பரை சிக்னல் பிரச்சனையால் மாற்றினேன். புதுசா வாங்கின ஏர்டெல் நம்பருக்கு ஜீபிஆர்ஸ் சேவை வேண்டி மெசேஜ் அனுப்பினேன். அவர்களும் ஆக்டிவேட் பண்ணிட்டாங்க. ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. சரி கஸ்டமர் கேரில் அழைத்து பேசுவோம்னு கூப்பிட்டால் அப்பதான் இந்த புதிய விசயம் தெரிஞ்சது.

எனக்கு தெரிஞ்சு ஏர்செல்,ஏர்டெல் இரண்டிலும் இப்ப கஸ்டமர் கேரில் பேச காசு வாங்கறாங்க. வேறு எந்த எந்த கம்பெனிகள் இப்படி செய்கின்றது என்றுத் தெரியலை.

அவர்கள் அளிக்கும் சேவையில் எதோ ஒரு பிரச்சனை இருப்பதால்தான் அவர்களை அழைக்கிறோம். இப்படி அழைத்து பேசுவதற்கும் காசு கொடுக்கணும்னா என்ன பண்றது ? இது ட்ராய் விதிகளுக்கு உட்பட்டதா ?? இல்லை விதி மீறலா ??அன்புடன் எல்கே

ஜனவரி 11, 2011

நினைவுகள்- 2அலைபேசியை கையில் எடுத்தவள் வேகமாக அதில் எதோ ஒரு எண்ணைத் தேட ஆரம்பித்தாள்.  தேடிய எண் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த எண்ணுக்கு அழைக்க எதிர்முனையில் வந்த பதிவு செய்யப்பட்டத் தகவலைக் கேட்டு சற்று முன் இருந்த மகிழ்ச்சியை முற்றும் தொலைத்தவளாய் முகத்தில் ஒரு களைப்புடன் யோசிக்கத் துவங்கினாள்.

பின் மீண்டும் எதோ யோசனை தோன்ற, தன் அப்பாவின் எண்ணுக்கு கால் செய்தாள். மறுமுனையில் சிறிய இடைவெளிக்குப் பின் அவரது தந்தை லைனில் வர அவரிடம்  பேசிவிட்டு சிறிது நிம்மதியுடன் இணைப்பைத் துண்டித்துவிட்டு மீண்டும் யோசிக்கத் துவங்கினாள்.

பின் எதையோ நினைத்தவளாய் "அவனாக  இருக்கக் கூடாது " என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

******************************************************************************************
அலுவலகத்திற்கு செல்லும் காலை நேர அவசரத்தில் இருந்த வெங்கட்டிடம் அந்த போட்டோவை நீட்டினாள் அவனது அம்மா ஜெயம்.

"அம்மா! எத்தனை முறை சொல்றது ? நீ பார்த்து உனக்கு பிடிச்சிருந்தா போதும் . நீ பேச வேண்டியதை பேசிட்டு எனக்கு சொல்லு . பல முறை சொல்லியாச்சு. " சொல்லிக் கொண்டே போன வெங்கட்டை இடைமறித்த ஜெயம் " நல்லா இருக்குடா நீ சொல்றது . கல்யாணம் பண்ணிட்டு வாழப் போறது நீ. நான் இல்லை. இப்ப நீ பார்த்தப் போதும்னு சொல்லுவா. அப்புறம் பிரச்சனைன்னு வந்தா , நீ பார்த்த பொண்ணுதான்னு சொல்லி காமிப்பீங்க. எனக்கு எதுக்கு வம்பு ? போட்டோவை உன் லேப்டாப் பேகில் வச்சிடறேன். பார்த்து நைட் வீட்டுக்குவந்து நல்ல பதிலா சொல்லு . போட்டோவுக்கு பின்னாடி அந்தப் பொண்ணோட விவரம் எழுதி இருக்கு "


அலுவலகம் வந்து வழக்கமான வேலைகளில், எக்செல் டேட்டாக்களுடன் போராடத் துவங்கியவன் இந்த போட்டோவை சுத்தமாக மறந்தான். மதிய உணவிற்குப் பின் வேறு எதையோ எடுக்க தன் லேப்டாப் பேகை எடுக்கும் பொழுது போட்டோ தட்டுப் பட , அவனுக்குள் பலவித உணர்ச்சிகள் தோன்றத் துவங்கின.

பின் பக்கம் விவரங்கள் இருப்பதை அம்மா சொன்னது நினைவிற்கு வர ,போட்டோவை திருப்பியவன் தான் நினைத்தது சரிதான் என்ற முடிவுக்கு வந்தான். அதை உறுதிபடுத்திக் கொள்ளும்வண்ணம் , தனது லேப்டாப்பில் இருந்த பழையப் படங்களை தேடத் துவங்கினான்.

அரைமணி நேரம் லேப்டாப்பை தேடி சலித்தும் அவன் தேடியது கிடைக்கவில்லை. வேறு சிந்தனைகள் எதுவும் ஓடவில்லை. சிறிது நேரம் யோசித்துப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய், தன் மேஜையில் இருந்த போனை கையில் எடுத்தான் .


அன்புடன் எல்கே

ஜனவரி 10, 2011

ஜகத்குரு -9- குரு

விகிதா ந மயா விசதைககலா
ந ச கிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

***********************************************************************************************
வீட்டில் தாயிடம் முறைப்படி அனுமதிப் பெற்று அவரை வணங்கி கிளம்பிய சங்கரர், வடதிசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். தன் குரு எங்கே இருக்கிறார் , யார் அவர் ,அவரை சந்திக்க எப்பொழுது இயலும் இந்தக் கேள்விகள் மனதில் தொக்கி நிற்க பாதசாரியாய் பயணித்த சங்கரர் , நர்மதை நதிக் கரையை அடைகிறார்.

"மாமா ! சங்கரர் பிறவி ஞானின்னு சொல்றேள் . அப்புறம் எதுக்கு அவர் குருவை தேடி போகணும் ? அவருக்கே தெரியும் இல்லையா ??"

"அப்படி இல்லை வெங்கட் ! யாரை இருந்தாலும், துறவறம் மேற்கொள்ளனும்  என்றால் முறைப்படி ஒரு குருவை அணுகி அவர் அனுமதி வாங்க வேண்டும். குருவானவர் நீ துறவறம் வாங்க தகுதி உள்ளவன் தானா என்பதை சோதித்துப் பார்த்து பின் அதற்குண்டான விஷயங்களை போதித்து துறவறம் செல்ல அனுமதித் தருவார். "

"இந்தக் காலத்தில் எல்லா ஸ்லோகமும் சீடியில் கிடைக்குது. அதை போட்டு சொல்ல ஆரம்பிக்கிறோம் எல்லாரும். அது தப்பு. ஒரு சில ஸ்லோகங்கள் முறைப்படி யாரவது ஒரு குருவிடம் கற்றுக் கொண்டப் பிறகே சொல்லணும். குறிப்பா லலிதா சகஸ்ரநாமம் போன்றவை குருகிட்ட முறையா உச்சரிப்பு சுத்தமா கத்துகிட்டு சொல்லணும்."

"நமது மரபு அப்படி. எதுவாய் இருந்தாலும் குருமுகமாய் கற்றுக் கொள்ளவேண்டும். பிறவி ஞானியாய் இருந்தாலும், இந்தப் பாரம்பரியத்தை மரபை மாற்ற விரும்பவில்லை சங்கரர். நர்மதை நதிக் கரையில் அமர்ந்து த்யானிக்கிறார், தனக்கான குரு எங்கே இருக்கிறார் என்று மனதால் தேடுகிறார். "


 "அதே சமயத்தில் நர்மதைநதி வீழும் மலைச் சாரலில் உள்ள குகையில் இருந்து ஒருவித வெளிசாமும் ஈர்ப்பு சக்தியும் வர, அந்த குகையி நோக்கி நடக்கிறார். குகை வாசலை அடைந்த உடனே அவருக்கு மனதில் புரிந்து விட்டது ,நமது குரு இங்கேதான் உள்ளார் என்று. குகையை வலம் வந்து நெடுஞ்சாண்கிடையாய் தண்டனிட்டு வணங்கி ,குரு அழைக்கட்டும் என்று அங்கேயே காத்திருக்கிறார். 


"இந்து மதத்தில், குரு என்பவர் கடவுளுக்கும் மேலே. அதனால்தான் குருவுக்குப் பிறகே இறைவனை வைத்தார்கள் நமது முன்னோர்கள். கடவுள் கோபித்தால் குரு காப்பாற்றுவார். ஆனால் குரு கோபம் கொண்டால் யாராலும் காப்பாற்ற இயலாது. "

-தொடரும்

அன்புடன் எல்கே

ஜனவரி 08, 2011

ஜகத்குரு -8- துறவறம்

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேச்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணம் என அடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!**********************************************************************************************

"ஆர்யாம்பாளின் வாயில் இருந்து அந்த வார்த்தை வந்தவுடன் ,சங்கரரின் காலை பற்றியிருந்த முதலை விலகி மறைந்தது ."


"மாமா ! அவருடைய காலை பற்றியது இந்திரன்தான் என நான் கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்க வேற மாதிரி சொல்றேளே ?"

"ரெண்டு மூணு விதமா இதை சொல்லுவா. அந்த பரமேஸ்வரனே முதலையாய் வந்ததாவும் இருக்கு. கந்தர்வன் ஒருவன் சாப விமோஷனதிற்காக இப்படி முதலையாய் வந்ததாவும் இருக்கு. நீ சொல்ற மாதிரி இந்திரன் வந்ததாவும் இருக்கு . யார் முதலையாய் வந்தது என்பது முக்கியம் இல்லை . அந்த காரியம் நடந்துச்சா அதுதான் முக்கியம் .

இந்த இடத்தில் இன்னொரு விஷயம் கவனிக்கணும். அம்மாவோட அனுமதி இல்லாம சந்நியாசம் வாங்கக் கூடாது என்பது. சங்கரர் நினைத்திருந்தால் அவர் அனுமதி இல்லாமல் சந்நியாசம் வாங்கி இருக்க இயலும். ஆனால் எதையும் முறைப்படி செய்யவேண்டும் என்று தன் தாயின் அனுமதி பெற்றப் பிறகே சந்நியாசம் மேற்கொள்கிறார். "

"எனக்கு ஒரு சந்தேகம். பொதுவா, பிரம்மச்சரியம்,க்ரஹச்தாச்ரமம் என்று முடித்தப் பிறகுதானே சந்நியாசம் வாங்க வேண்டும். ஏன் சங்கரர் அதை செய்யவில்லை ?"

"நல்ல கேள்வி . நீ சொன்னது பொதுவான ஒரு விதி. ஆனால் சங்கரர் பிறவி ஞானி. அதுவும் இல்லாம அவர் வாழ்வின் நோக்கமே, சிதறுண்டு இருந்த இந்து மதத்தை சரி பண்றதுதான். ஒரு சில சிறப்புக் காரணங்கள் இருக்கும் பொழுது பொதுவான சில விதிகள் மீறப் படலாம். தவறில்லை ."


"சந்நியாசம் வாங்க அனுமதிக் கொடுத்தாலும், தாயின் மனது பிரிவை ஒத்துக் கொள்ள மறுக்குது."

" சங்கரா, நானும் உன்கூட வரேன். வேண்டாம்னு சொல்லாதப்பா. கடைசி காலத்தில் ,உன் கூட இருக்கணும்னு ஆசைப் படறேன். மறுக்காதே!"

"இல்லை அன்னையே ! துறவரம்னு வந்தப் பிறகு எந்தப் பாசங்களும் இருக்கக் கூடாது. காடு ,மலைகள்னு உன்னால் நடக்க முடியாது . நீ கூட வந்தால் உன் பாதுகாப்பே என் நோக்கமாய் போய் விடும். உன் இறுதி காலத்தில் நான் உன்னுடன் இருப்பேன். இது உறுதி ".

"இப்படி சொல்லி மறுத்துவிட்டு, சந்நியாசதிற்கு உரிய ஆடைகள் அணிந்துகொண்டு, வீட்டை விட்டு வெளியேறி வடக்கு நோக்கிப் பயணிக்கத் துவங்கினார்"

-தொடரும்

அன்புடன் எல்கே

ஜனவரி 06, 2011

நினைவுகள் -1

வீட்டில் நுழையும் பொழுது ஒலித்த அலைபேசியை சலிப்புடன் எடுத்து அதில் வந்த எண்ணை பார்த்து அழைப்பை உயிர்ப்பித்து " சொல்லுப்பா" என்றாள் சரஸ்வதி. பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்ப்பவள். சென்னையில் தன் நண்பிகளுடன் வீடு எடுத்து தங்கி வேலைபார்த்து வருகிறாள்.

வழக்கமான நலம் விசாரிப்புகளுக்கு பிறகு "உனக்கு கூரியரில் ஒரு பையனோட போட்டோ அனுப்பி இருக்கேன்மா . பார்த்து உன் முடிவை சொல்லுமா" சொன்னவரின் குரலில் தயக்கம் தேவைக்கு அதிகமாய்.

"மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிடீங்களா ? நான்தான் இப்ப கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்தான ?". கோபத்தில் பட்டாசாய் பொரிந்து தள்ளினாள் சரஸ்வதி .

"இல்லமா. பையன் நல்ல பையன். நல்ல வேலைல இருக்கான் . அதுதான் போட்டோ அனுப்பினேன். உனக்கு பிடிக்கலைனா விட்டுடலாம். எடுக்கும் ஒருமுறை போட்டோவை பார்த்து உன் முடிவை சொல்லு. வச்சிடறேன்" .

இவள் பதில் சொல்லும் முன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. அலுவலக வேலைச் சோர்வோடு ,இந்த எரிச்சலும் சேர்ந்து கொள்ள, சோர்வாய் , சோபாவில் விழுந்தாள்.

மறுநாள் மாலை, உற்சாகமாய் வீடு திரும்பியவளின் மனம் ,அந்த கூரியர் கவரை கண்டவுடன் ஒரு கணம் யோசித்தது. "பார்த்த முதல் நாளே" பாடலை முணுமுணுத்துக் கொண்டே ,கவரை கிழித்து உள்ளிருந்து போட்டோவை எடுத்தாள்.

போட்டோவை பார்த்தவளின் கண்கள் எதையோ யோசிப்பதை போல் சுருங்கத் துவங்க, சில நொடிகள் கழித்து தன் கண்ணை மூடி யோசிக்கத் துவங்கினாள்.

சிறிது நேர ஆழ்ந்த யோசனைக்கு பிறகு எதோ புலப்பட்டது போல் அவள் கண்கள் மின்னின. பரப்பரப்பாய், அந்தக் கவரை திறந்து அதற்குள் வேறு ஏதாவது உள்ளதா என்று பார்த்துப் பின் ஏமாற்றத்துடன் போட்டோவை மீண்டும் பார்க்க துவங்கினாள்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய், தன் அலைபேசியை எடுத்தாள்.

-தொடரும்


அன்புடன் எல்கே

திவ்யாவும் ஸ்கூலும்

திவ்யாவை நேரடியாக எல் கே ஜி தான் அனுப்ப வேண்டும் என்று இருந்தேன் . ஆனால் எங்களை பிரிந்து இருக்க அடம்பிடிப்பதால் ஒரு மூன்று மாதம் ப்ளே ஸ்கூல் செல்லட்டும் என்று கடந்த திங்கள் அன்று வீட்டின் அருகே உள்ள ஒரு சிறு ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டோம் .

 ஞாயிறு அன்று பள்ளி செல்லத் தயாராகி விட்டாள் திவ்யா. பை எடுத்து வைத்துக் கொள்ளுவதும், அனைவரிடமும் சொல்லிக் கொள்வதுமாய் அவள் ஒரு புதியதொரு உலகத்தை எதிர்பார்த்து.

எப்பவுமே காலை ஏழு மணிக்கு எழுந்துவிடுவாள். அதானால் காலையில் பள்ளி செல்ல எழுப்ப வேண்டும் என்ற பிரச்சனை இல்லை.  பள்ளிக்கூடம் போகும் வரை எல்லாம் சரியாதான் போச்சு. வருடத்தின் முதல் நாள் என்பதால் எனக்கு அலுவலகத்தில் லீவ் / பர்மிசன் கிடைக்கவில்லை. எனவே திவ்யாவும்,அம்மாவுமாய் சென்றார்கள்.


முதல் நாள் அதிகம் அழுகையோ இல்லை ஆர்பாட்டமோ இல்லை. சரி பிரச்சனை இல்லை  அப்படின்னு சந்தோசமா இருந்தேன். ரொம்ப சந்தோசப் படரன்னு அடுத்த நாளே நிரூபணம் பண்ணா. வழக்கம்போல ஸ்கூல் போறவரைக்கும் பிரச்சனை இல்லை. அங்க போய்தான் அழுகை ஆர்பாட்டம் எல்லாம்.

சாயங்காலம், வீட்டிற்கு வந்தப்புறம் அவகிட்ட
"நாளைக்கு ஸ்கூலுக்கு போய் அழுவியா" ?
" அழுவேன் " .
"எதுக்கு அழுவே ? "
"அம்மா வேணும்னு அழுவேன் ."

"சரி. ஸ்கூலுக்கு போகாம இருப்பியா ?"
"ஸ்கூலுக்கு போனும். அம்மாவும் வரணும் "

இதெப்படி இருக்குது ?? நேற்று கொஞ்சம் அழுகை குறைவு என்று சொன்னார்கள். பார்ப்போம். ஓரிரு வாரத்தில் நார்மலுக்கு வந்துவிடுவாள் என்றுத் தோணுகிறது.

அன்புடன் எல்கே

ஜனவரி 04, 2011

ஆஞ்சநேய ஜெயந்தி


மார்கழி மாதம் , மாதங்களில் மிகச் சிறந்தது. வைகுண்ட ஏகாதஷி,ஆருத்ரா தரிசனம் ,அதிகாலை நேர வழிபாடு இவற்றுடன் ராமதாசனின் பிறந்த நாளும் இந்த மாதத்தில்தான் வருகிறது.

மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆஞ்சநேயர். அஞ்சனை மற்றும் கேசரி தம்பதியருக்கு பிறந்த இவர் ருத்ராம்சம் வாய்ந்தவர் . தனக்கு மகனாய் ஈஸ்வரன் பிறக்கவேண்டும் என்று அஞ்சனை இருந்த தவத்திற்கு பலனை அவருடைய அம்சம் வாய்ந்த ஆஞ்சநேயர் பிறந்ததாய் சொல்லுவர்.

பொதுவாக, ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை, சிவன்,விஷ்ணு,அம்பாள்,முருகன் மட்டும் வணங்குபவர்கள் உண்டு. ஆனால், அந்த தெய்வத்தின் குறிப்பிட்ட ஒரு அவதாரத்தை மட்டும் வணங்குபவர்கள் உண்டா ?? இராமாயண அவதார நோக்கம் முடிந்து ராமன், வைகுண்டம் திரும்பும் நேரம், அனைவரும் அவருடன் செல்கின்றனர்,ஒருவரைத் தவிர.
ஆம் . ஆஞ்சநேயர் வைகுண்டம் செல்ல விரும்பவில்லை.

ராமரிடம் கேட்கிறார் அவர் "வைகுண்டத்தில் ராம நாமம் உண்டா ?,ராமர் இருப்பாரா ?"
"எப்படியப்பா முடியும்? வைகுண்டத்தில், விஷ்ணு மட்டுமே, அவரது நாமம்தான் அங்கே ." என்கிறார் ராமர்.

"ராம நாமம் இல்லாத இடம் எதுவாய் இருந்தாலும் அது எனக்குத் தேவை இல்லை . பூலோகத்தில் ராம நாமம் இருக்கிறது . இங்கேயே நான் இருக்கிறேன். " என்று பதிலுரைத்து பூலோகத்திலேயே சிரஞ்சீவியாய் நிலைத்து விட்டார் ஆஞ்சநேயர்.


மற்ற தெய்வங்களுக்கு அவர் அவர்களுக்கு உண்டான ஸ்லோகங்கள் சொல்லவேண்டும். ஆனால் இவருக்கோ "ராமா !" என்று சொன்னால் போதும். உங்கள் துயரைத் தீர்த்துவைப்பார்.

ஆஞ்சநேயருக்கு உண்டான காயத்ரி
"ஆஞ்சனேயாய வித்மகே !
வாயு புத்ராய தீமகி !
தன்னோ ஹனுமத் ப்ரசோதயாத் !"


ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி


அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

மேலும்  சில ஆஞ்சநேய சுலோகங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் .

அன்புடன் எல்கே

ஜனவரி 03, 2011

ஜகத்குரு -7- சந்நியாசம்

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அமிமாம்சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!

குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!


*********************************************************************************************
 "ஏன் பயப் படனும் . வேளை வந்தாசுனுதானே சொல்றா ? அது நல்லதுக்குதானே ?"


"அப்படி இல்லை. பொதுவா நல்ல வேளை வந்துடுச்சுன்னு சொன்னா நல்ல காரியங்கள் நடக்கும் . பொதுவா வேளை வந்துடுச்சுன்னு சொன்ன உடனே அந்தத் தாய்க்கு கவலை வந்துடுச்சி".


"சங்கரா! என்னப்பா இப்படி சொல்லிடு போறாளே ! என்ன அர்த்தம் இதுக்கு அப்படின்னு " சங்கரர் கிட்ட கேட்கிறாள் தாய்.

"அம்மா, அவர்களை கண்டால், வயதில் மூத்தோரை,ஞானம் அடைந்தவர்களாய் தோன்றுகிறார்கள் . அவர்கள் துன்பம் அடையும் வகையில் வார்த்தைகளை சொல்ல மாட்டார்கள். கவலை அடையவேண்டாம்" என்று தாய்க்கு ஆறுதல் சொல்கிறார்.


"பின் , வீட்டின் பின்புறம் உள்ள நதியில் குளிக்க செல்கிறார் சங்கரர். அவர் நதியில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருக்கிறார். தாயோ பூஜை பாத்திரங்களை கரையில் அமர்ந்து டுத்துக் கொண்டிருக்கிறார். சங்கரர், குளித்து கரையேற முயற்சித்த நேரம், அவரது காலை எதோ கவ்வி இழுக்க, சங்கரர் வலியில் அலறினார் ."

"தனயனின் அலறல் கேட்டா தாய்,பதறி அடித்து ஓடி வருகிறார்.நதியில் இறங்க போறா.

அப்ப சங்கரர் "அம்மா அப்படியே நில் .என்னை முதலை பிடித்திருக்கிறது. இங்கு வந்தால் உன்னையும் கடித்துவிடும் என்று நிறுத்தி விடுகிறார் "

தாய்க்கோ தவிப்பு, நதிக்கரை என்றால் யாரவது இருப்பர். இதுவோ அவர்களின் வீட்டின் பின்புறம். யாரும் உதவிக்கு இல்லாத இடம். என்ன செய்வதுதேன்று தாய்க்கு புரியவில்லை.

அந்த சமயத்தில் சங்கரரே வழி சொல்கிறார்.

"அம்மா, இதிலிருந்து நான் தப்பிக்க ஒரே வழிதான். என்னை இழந்தேன் என்று சொல் . என்னை முதலை விட்டுவிடும் ."

தாய்க்கோ துயரத்திலும் துயரம். கணவனை இழந்தவள், இப்பொழுது மகனும் இழந்துவிடு என்று சொல்கிறான் . அதை சங்கரரிடம் கேட்கிறாள் ,"என்னப்பா நியாயம் இது ?இருப்பது நீ ஒரே மகன். உன்னையும் இழந்தாள் ...."

சங்கரர் குறுக்கிட்டு "இழப்பது என்பது ஊருக்கு தத்தமாக  குடுப்பது என்று அர்த்தம் .என்னை சந்நியாசியாக போக அனுமதி கொடு " என்று இறைஞ்சுகிறார்.

தாய்க்கோ அதிர்ச்சி.

"சந்நியாசம் வாங்கி விட்டால் , என்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாயே . இந்த வயதான காலத்தில் எனக்கு யாரப்பாத் துணை ?  என்று புலம்புகிறாள் .

ஒரு கட்டத்தில் மனதை தேத்திக் கொண்டு , "சரி சங்கரா ! நீ உன் இஷ்டப்படி சந்நியாசம் வாங்கிக் கொள்" என்று அனுமதி அளித்தாள்.
-தொடரும் 

அன்புடன் எல்கே

ஜனவரி 01, 2011

2010 - ஒரு பார்வை

 2010 ஆம் வருட டைரி குறிப்பு எழுத சொல்லி சகோதரி ஆசியா உமர் அழைத்திருந்தார்கள். கல்லூரி காலத்தில் டைரி எழுத ஆரம்பித்து , கல்லூரி முடிக்கும் தருவாயில் அதனால் நடந்த பல பிரச்சனைகளால் அதற்குப் பிறகு டைரி எழுதுவது இல்லை என்று முடிவு  செய்துவிட்டேன்.

சென்ற வருடம் , பதிவுலகில் நான் அதிக நேரம் செலவளித்தேன். இந்த வருடம் அதை குறைத்துக் கொள்வது என்று தீர்மானித்துள்ளேன். பதிவுலகின் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். பல புதிய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் அவர்கள் மூலம். எனவே சென்ற வருடம் எனக்கு மீண்டும் ஒரு பள்ளிக்கூடம் போலத்தான்.

அலுவலக ரீதியில், பல புதிய ப்ராஜெக்ட்கள், அதன் மூலம் நான் கற்றுக் கொண்ட  விஷயங்கள் அதிகம். இந்தப் பணியில் நான் சேரும் பொழுது நான் ஒரு சிறிய குறிக்கோளை வைத்திருந்தேன். அது கிட்டத் தட்ட நிறைவேறும் நிலையில் உள்ளது. அந்த ஆண்டவன் அருளால் வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் அது நிறைவேறும் என்று எண்ணுகிறேன்.

குடும்பத்தை பொறுத்தவரை, திவ்யாவின் குறும்புகளுடனும்,விளையாட்டுகளுடனும் மகிழ்ச்சியாக போகின்றது. திங்கள் கிழமையில் இருந்து ப்ளே ஸ்கூல் செல்ல இருக்கிறாள். அவளது உலகம் இன்னும் விரியப் போகிறது. அலுவலக வேலையில் அலுத்து வீடு திரும்பும் பொழுது ,அலுப்பை போக்குவதாக, மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாய் வீட்டு சூழல் இருக்க வேண்டும். கடவுள் அருளால் அத்தகைய சூழல் எனக்கு அமைந்துள்ளது. அதற்கு இறைவனுக்கு நன்றி.


சென்ற வருட புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் ஒரு புத்தகம் இன்னும் முடிக்கப் படாமல் உள்ளது. அதை படித்துமுடிக்க வேண்டும். இந்த வருடம் இன்னும் சில நல்ல புத்தகங்களை வாங்கவேண்டும் .  பாரதியாரின் மனதில் உறுதி வேண்டும் பாட்டுடன் இந்த இடுகையை முடித்துக் கொள்கிறேன்.அன்புடன் எல்கே