ஜூலை 31, 2010

திவ்யாவின் பக்கம் III


முன்பெல்லாம், குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைப்பார்கள். இப்ப அது நேர்மாற இருக்கு. தினமும், திவ்யா சொல்ற கதையை கேட்ட பின்தான் தூக்கம் வருகிறது. அவள் சொல்லும் கதையை அவள் மொழியிலேயே சொல்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு ஆனை இருந்துச்சாம். அது ஜோ ஜோ பண்ண போச்சாம் . அப்புறம் என்ன ஆச்சாம் ?. அங்க ஒரு முதலை இருந்துச்சாம். அது ஆனை காலை லபக்குனு பிடிச்சிருச்சாம். அப்புறம் ஆனை என்ன பண்ணது ?(இது நான் ). ஆனை , உம்மாச்சிய கூப்டுசாம். எப்படி கூப்டது ?(இது என் மனைவி ). "ஆதி மூலமே நு கூப்டுச்சு.(இங்க இரண்டு கையையும் தலைக்கு மேல் தூக்கிப்பா ) அப்புறம் என்ன ஆச்சாம் , உம்மாச்சி வந்து ஆனைய காப்பாத்திடாராம் .

ஒரு ஆனை நடந்து போனுச்சாம். அப்பா, அது கால்ல முள் குத்திடுசாம். உவ்வா ஆய்டுச்சாம். அது அழுதுச்சாம் . அப்ப ஒரு கொங்கு (குரங்கு ) வந்து முள்ளை எடுத்து விட்டுசாம் . உடனே ஆனை, கொங்கை பாத்து " thank you my friend " சொன்னுச்சாம்.,

எப்படி இருந்தது திவ்யாவின் ஆனை கதை ??. இந்த மாதிரி இன்னும் ஒரு சில கதைகள் இருக்கு. தினமும் அனைத்து கதைகளையும், ஆக்சனுடன் சொன்ன பிறகே தூங்குவாள்


அன்புடன் எல்கே

ஜூலை 30, 2010

கால் சென்டர் VII

கொஞ்சம் பணி சுமை காரணமாக கொஞ்ச நாளாக கால் சென்டரைப் பற்றி எழுத இயலவில்லை. இனி தொடர்ந்து இதை பற்றி எழுத முயற்சிக்கிறேன்.

கால் சென்டர்களில் பணி புரிய விரும்புவர்களுக்கு கல்வித் தகுதி, மொழி தகுதியை விட மேலும் ஒரு தகுதி மிக மிக முக்கியமாய் தேவை. அந்தத் தகுதி இல்லையென்றால் உங்களால் கால் சென்டரில் பணி புரிய இயலாது. நம்ம முன்னோர்கள் சொன்ன மிக முக்கியமான ஒன்று அது , பொறுமை.

அன்னிக்கே சொல்லிட்டாங்க "பொறுமை கடலினும் பெரியது " என்று . நீங்கள் பலதரப்பட்ட வாடிகையாளர்களிடம் பேச வேண்டி வரும். ஒரு சிலர் பொறுமையாக பேசுவார்கள். ஒரு சிலர் எந்த ஒரு விசயத்தையும் மிக ஜாலியாக எடுத்துக் கொள்வர். ஒரு சிலர் ஒன்றுமில்லாத விசயங்களுக்கெல்லாம் கோபப் படுவர். சிலர் அழைத்த உடனேயே கத்த ஆரம்பிப்பார். ஆனால் நீங்கள் பொறுமை இழக்க கூடாது.

நீங்கள் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டியது , பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்களை திட்டுவது இல்லை,. நீங்கள் எந்த நிறுவனதிற்க்காக வேலை செய்கிறீர்களோ அந்த நிறுவனத்தையே திட்டுகின்றனர். அதனால், இவற்றை நீங்க தனிப் பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக் கூடாது . ஒரு சில சமயங்களில் , உங்களை தனிப்பட்ட முறையில் சிலர் திட்டுவர். மிக மோசமான வார்த்தைகளை அவர்கள் உபயோகித்தால் நீங்கள் அவருக்கு எச்சரிகைக் கொடுக்கலாம். பின் அழைப்பை துண்டிக்கலாம் (சில நிறுவனங்களில் வேறு சில வழிமுறை இருக்கலாம்). ஆனால் நீங்கள் எந்தக் காரணம் கொண்டும் வாடிக்கையாளர்களை திட்ட கூடாது. அவங்க என்ன சொன்னாலும் பொறுத்துக் கொண்டே ஆக வேண்டும். இதுதான் மிக முக்கியமான ஒன்று.

கடந்த ஆறு பகுதிகளிலும் சர்வதேச கால் சென்டர்களை பற்றி பார்த்தோம். இனி வரும் பகுதிகளில் இந்திய வாடிக்கையாளர்களுக்கான கால் சென்டர்களை பற்றிப் பார்க்கலாம் .
உங்களுக்கு கால் சென்டர் பற்றிய குறிப்பிட்ட எதாவது விவரம் தேவை எனில் , பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். என்னால் முடிந்த அளவு விவரம் அளிக்கிறேன் .

With Love LK

ஜூலை 29, 2010

இதுதான் காதலா?


நீ பேசும் பொழுது
நேரம் செல்வது
தெரியவில்லை
சென்ற பின்போ ஒரு 
கணமும் நாளாகிறது... 

சென்று வா என
அனுப்பினேன் - பின்
ஏன் சென்றாய் 
என வாடுகிறேன் ..தனிமையே இனிமையாய் 
கழித்த நாட்கள் 
பல - 
அந்தத் தனிமையே 
வெறுப்பாய் 
போனதேன் ?
.
.
இதுதான் காதலா?With Love LK

ஜூலை 28, 2010

பதிவுலகமும் நானும்


 இன்னிக்கு பதிவெழுத எந்த விசயமும் சிக்க வில்லை. என்ன செய்யலாம்னு யோசித்துக் கொண்டிருந்தப்ப, நம்ம அமைதி அக்காவோட பதிவு வந்துச்சு .சரின்னு பார்த்த கடைசியா நம்மளை தொடர் பதிவெழுத சொல்லிருந்தாங்க. ஆஹா, இதை இதை தான் எதிர் பார்த்தேன் அபப்டின்னு டக்குனு எழுதிட்டேன்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
   
எல்கே

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
என்னுடைய உண்மை பெயரின் சுருக்கமே எல்கே . அலுவலகத்தில் எனது தந்தையின் பெயரின் முதல் எழுத்தான எல் மற்றும்   எனது பெயரின்  முதல் எழுத்தான கே  இரண்டையும் இணைத்து எல்கே என்று அழைப்பார்கள். ஆர்குட் மற்றும் முகப்பக்கதிலும் நான் அந்தப் பெயரிலே இது வரை அறியப்பட்டுளேன். எனவே அந்தப் பெயரையே இங்கும் உபயோகிக்கறேன். 
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

எனக்கு தமிழ் பதிவுலகம் பற்றி எதுவும் தெரியாது. நான் என் மனதிற்கு பட்டதை ஆங்கிலத்திலும் ,தங்க்ளிஷிலும் எழுதிக் கொண்டு இருந்தேன். எனது நண்பர் வினோத் அவர்கள், வல்லியம்மாவின் நாச்சியார் பதிவிற்க்கான சுட்டியை தந்தார். பின் அங்கிருந்து துளசி டீச்சர் பதிவு, கீதா மாமி பதிவு என்று செல்ல ஆரம்பித்தேன். நான் தமிழில் எழுத காரணமாக இருந்தது இந்த மூவர் மற்றும் அமைதி சாரல். இவர்கள் சொன்னதற்கு பிறகே தமிழில் எழுத ஆரம்பித்தேன் 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

எல்லாரும் செய்யறதுதான். மேலே சொன்னவர்களின் பதிவிருக்கு சென்று பின்னூட்டம் இட்டேன். பின் தமிழ்மணம்,தமிழிஷ் போன்றவற்றில் இணைத்தேன். அவ்வளவே. மற்றபடி இந்தப் பிரபலமா இல்லையான்னு நான் கவலைப் படுவது இல்லை. இது ஒரு பரந்த வெளி. இங்கு அனைவருக்கும் இடம் உண்டு. நாம் எழுதுவது நன்றாக இருந்தால் படிப்பார்கள் இல்லையேல் கடைய காலி பண்ண வேண்டித்தான்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

 நிறைய சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். பெரிதாக எதுவும் விளைவுகள்  இல்லை.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

கண்டிப்பா எதுவும் சம்பாதிக்கவில்லை. (நல்ல நட்புக்களைத் தவிர) நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன், அவ்வளவுதான் .
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 மூன்று வலைப்பூக்கள் உள்ளன .
பாகீரதி - இந்தப் பதிவு,. இதுதான் முதன்மையானது 
photo blog - நான் எடுக்கும், ரசிக்கும் படங்களை பகிர்வதற்கு 
வேலை வாய்ப்பு - எனக்கு வரும் வேலை வாய்ப்பு செய்திகளை பகிர்ந்து கொள்ள. இது ஆங்கிலத்தில் இருக்கும் 
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

 ஒரு சிலரின் எழுத்துக்களை கண்டு பிரமித்து உள்ளேன். கோபம்,தேவை இல்லாமல் சண்டை போட்டுக் கொள்ளும் பதிவர்களின் மேல்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..      

தமிழ் பதிவுலகம் பற்றி நான் அறியாத காலத்தில் எனக்கு பின்னூட்டம் இட்ட பூஷா . அவரும் ஒரு பதிவரே. ஆனால் ஆங்கிலத்தில் எழுதுபவர். தமிழில் நான் எழுத ஆரம்பித்தப் பிறகு எனக்கு பின்னூட்டம் இட்டு  உற்சாகம் அளித்தவர்கள், அண்ணாமலையான், அமைதிச்சாரால், துளசி டீச்சர், கீதா மாமி, வல்லியம்மா , ஹரிணி, சின்ன அம்மிணி  ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.
    
 10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

என்னத்த சொல்ல ??? ஏற்கனவே ஓரளவுக்கு என்னை பற்றி தெரியும். இதுக்கு மேல சொல்லி டேமேஜ் ஆக விரும்பலை. 

இதை தொடர நான் அழைப்பது 

 கௌசல்யா
அமீரகப் போர்வாள் தேவா 
அப்பாவி தங்கமணி 
கீதா மாமி 
அபி அப்பா

  
அன்புடன் LK

ஜூலை 26, 2010

முடியுமா ???

வார்த்தைகளின் வீச்சை விட
மௌனத்தின் வீச்சு 
அதிகம் - உணர்ந்தேன்
இன்று ..

பெயரளவில்  கவிஞனாய் 
இருந்தேன் ...கவி பாட 
வைத்தது உன் நேசமே 

என்னை கவி பாட
வைத்து விட்டு - நீ
மௌனமானது ஏனோ ??

உயிருடன் இரண்டற
கலந்தாய் - பிரித்து
தர சொன்னால்
முடியுமா  ???

டிஸ்கி : கவிதையை மட்டும் ரசிக்கவும். இவை அனைத்தும் கல்லூரி நாட்களில் எழுதப்பட்டவை


With Love LK

ஜூலை 24, 2010

பெண்ணே

உனை
தென்றல் என்பேன்,,

தென்றல் மரத்தை
சாய்க்குமோ ?

 இல்லை காதல்
புகுந்ததால் நீயும்
புயலானாயோ ?

 என் மனது புயல்
அடித்த பூங்காவாய்
இப்பொழுது ...

தென்றலாய் வந்தாலே
எனைத் தருவேன்- புயலாய்
ஆக்ரோஷம் ஏனோ ???

 *********************************************************************************
 உன் அன்பை கண்டே
வந்தேன் உன்னிடம் 
பாதியில் திரும்ப 
சொன்னால் செல்ல 
இடம் ஏது ?

சாக சொல் 
செய்கிறேன்- திரும்ப சொல்லாதே 
முடியாது என்னால் ..

With Love LK

ஜூலை 20, 2010

கவிதைடிஸ்கி : இவை இரண்டும் கல்லூரி காலத்தில் எழுதியது 
பிறரிடம் பேசும்போது

ஒன்றும் தெரியவில்லை,
உரையாடல் நின்ற பின்பே 
வலி அதிகரிக்கிறது இதயத்தில்?!
புரிகிறது.....

என் மனதிற்கே பிடிக்கவில்லை
நான் பிறருடன் பேசுவது..

உன்னை மட்டுமே சொந்தமாக்கி 
மகிழும் என்  இதயத்திற்கு 
தெரியவில்லை... நீ
என் உடமை இல்லை என்று?
======================================================================கவிதையுடன் வருகிறேன் 
என்றாய்
காத்திருந்தேன் காலையும் 
வந்தது நீயும் 
வந்தாய் கவிதையின்றி 
நீயே கவிதையாய் ..With Love LK

ஜூலை 18, 2010

இந்திய இணைய உலவி

என்னடா கொஞ்ச நாள் வரமாட்டேன்னு சொல்லிட்டு போனான், ரெண்டு நாள் கூட ஆகல உடனே வந்துட்டான் அப்படின்னு உங்க மைன்ட் வாய்ஸ் சொல்றது எனக்கு கேக்குது. நான் இவ்வளவு சீக்கிரம் வரக் காரணம், தானை தலைவி கீதா மாமிதான்,. ஆமா, அவங்க எழுதினா பதிவை பார்த்தப் பிறகுதான்  நான் இந்த எபிக் பிரௌசர் உபயோகப் படுத்த ஆரம்பித்தேன். உடனடியா ரொம்பப் பிடிச்சி போச்சுங்க.

இதில, ஒரு சைட் பார் ஒண்ணு இருக்கு . அதில் பல தரப்பட்ட வசதிகள் இருக்கு. நீங்க பிரபல சோசியல் நெட்வொர்கிங் தளங்களான ஆர்குட், முகப்பக்கம், ட்விட்டர் போன்றவற்றை ஒரே கிளிக்கில் உபயோகிக்கலாம். மேலும் அவை உலவியின் முக்கிய இடமான வலது பக்கம் வருவதில்லை. இடது பக்கம்  சின்னதாக  வருகிறது. எனவே மற்றவர்களுக்கு தெரியாமல் ஆர்குட் போன்றவற்றை உபயோகிப்பவர்களுக்கு  இது ஒரு வசதி.

மேலும்,இந்த இணைய உலவியில் இருந்தே, நீங்கள் உங்க கணிப்பொறியில் இருக்கும் கோப்புகள் படங்களை உபயோகிக்கலாம். அதற்கு இதில் இருக்கும் my computer பட்டனை கிளிக்கினால் போதும்.

மேலும், இலவச இணைப்பாக , ஒரு ஆன்டி வைரஸ் கொடுத்துள்ளனர். இதை நீங்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இணைய உலவியில் இருந்தவாறே இதை இயக்கி, வைரஸ உள்ளதா எனக் கண்டறியலாம்.

மேலும், உலவியில் நீங்கள் பலதரப்பட்ட ஸ்கின்களை உபயோகித்துக் கொள்ளலாம். இந்தியாவை சேர்ந்த பல புகழ் பெற்ற நபர்களின் புகைப் படங்கள் உள்ளன.(திருவள்ளுவர் உட்பட). மேலும் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யும் வசதி இணைத்துள்ளனர். enable indic dropdown விருப்பத்தை தேர்வு செய்து விட்டாள், எல்லாத் தளங்களிலும் நீங்கள் விரும்பும் மொழியில் தட்டச்சு செய்துக் கொள்ளலாம். .


இதை நீங்கள் உபயோகிக்க விரும்பினால் நீங்கள் செல்ல வேண்டியத் தளம் http://www.epicbrowser.com

With Love LK

ஜூலை 16, 2010

டாட்டா

கடந்த நாலு மாசமா தொடர்ந்து குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு ஒரு பதிவு போட்டுக் கொண்டு இருந்தேன். இனி அடுத்த இரு வாரங்களுக்கு அதிகம் பதிவுகள் வராது. அலுவலகத்தில் புதிய ஆணிகள் வந்துள்ளன. எனவே அதை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும்.

இதில் கிளையன்ட் வருகை வேறு இன்றில் இருந்து ஆரம்பம். எனவே பதிவுலகம் பக்கம் அதிகம் வர இயலாது. உங்கள் பதிவுலகுக்கு பின்னூட்டம் கால தாமதமாக வரும். அதற்காக கோபப் படவேண்டாம்..

நடு நடுவே சில பதிவுகள் வீட்டில் இருந்து வரலாம். எனவே இந்தப் பக்கம் அடிக்கடி வந்து ஒரு பார்வை பாருங்கள் .

மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன்.


With Love LK

ஜூலை 15, 2010

சிஸ்டம் ரீஸ்டோர்

கணிப்பொறி சம்பந்தப்பட்ட  துறையில்  வேலை  செய்கிறோம் , அது  சம்பந்தமா  ஒரு   பதிவு  கூட போடவில்லை . நேத்து இரவு கனவில் கணிப்பொறி வந்து ரொம்ப கெஞ்சினது எனக்காக ஒரு பதிவு போடுன்னு, அதனால இன்னிக்கு ஒரு தொழில் நுட்ப பதிவு.

இப்ப நிறைய பேர் உபயோகிக்கறது விண்டோஸ் எக்ஸ்பி(Windows XP). இதில் உங்களுக்கு அதிகம் வரக்கூடிய ஒரு பிரச்சனை விண்டோஸ் லோட் ஆகாமல் பாதியில் நிற்பது. அப்படி பாதியில் நின்றால் , கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து , F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். உங்களுக்கு விண்டோஸ் பூட் மெனு வரும். அதில் கீழ்க்கண்டவை இருக்கும்.

1. safe Mode
2. Safe mode with Network
3. Safe mode with command prompt
4.Enable Boot Logging
5.Enable VGA Mode
6. Last Known Good Configuration(your most recent settings that worked)
7.Directory Services Restore Mode(Windows Domain Controllers only)
8.Debugging Mode
9.Disable Automatic System Restart on Failure
10.Start Windows Normally
11.Reboot
12.Return to OS Choices Menu

இப்படி ஒரு மெனு வரும். இப்பதான் முதல் முறையா உங்கள்ளுக்கு பிரச்சனை வருவதாக இருந்தால், ஆறாவது (6) ஆப்சனை தேர்வு செய்யவும். இது உங்கள் விண்டோஸ் பழுதடைவதற்க்கு முந்தைய நிலைக்கு உங்கள் கணிப்பொறியை கொண்டு செல்லும்.

இந்த முறையிலும், உங்கள் விண்டோஸ் லோட் ஆக வில்லையென்றால், திருபவும் கணிப்பொறியை ரீஸ்டார்ட் செய்து அதே போல்  F8 பட்டனை தொடர்ந்து தட்டவும். இப்பொழுது  முதல் விருப்பத்தை(safe Mode) தேர்வு செய்யவும் . இப்பொழுது
விண்டோஸ் லோட் ஆகி சேப் மோடில் வரும் . இப்ப உங்க விண்டோஸ் ஸ்க்ரீன்ல ஸ்டார்ட் பட்டன் இருக்கும் அதை கிளிக் பண்ணி பிறகு ப்ரோக்ராம்ஸ் கிளிக் பண்ணுங்க. இப்ப உங்க சிஸ்டம்ல இன்ஸ்டால் ஆகி இருக்கும் ப்ரோக்ராம் லிஸ்ட் வரும். அதில் அச்செச்சரீஸ்(accessories) கிளிக் பண்ணி சிஸ்டம் டூல்ஸ் உள்ள போங்க. அதில் சிஸ்டம் ரீச்டோர் (system restore) என்று ஒன்று இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க. இப்ப சிஸ்டம் ரீச்டோர் (system restore)  ஸ்க்ரீன் வரும். அதில் "restore my computer to an earlier time" செலக்ட் செய்து next பட்டனை அழுத்துங்கள்.

இப்ப ஒரு காலேண்டர் வரும் அதில், சில நாட்கள் மட்டும், போல்டாக (BOLD) இருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்து  next பட்டனை அழுத்துங்கள். உடனே நீங்க தேர்வு செய்ததை உறுதிப் படுத்த சொல்லி ஒரு ஸ்க்ரீன் வரும் ,next பட்டனை அழுத்துங்கள். நீங்கள் தேர்வு செய்த தேதிக்குப் பிறகு எதாவது புதிய மென்பொருள் இன்ஸ்டால் செய்திருந்தால் அவை போய் விடும். மற்றப்படி நீங்கள் எதாவது பைல்கள் உருவாக்கிருந்தால் அவை போகாது.

இப்பொழுது சிஸ்டம் ரீச்டோர் ரன் ஆகி பிறகு ரீஸ்டார்ட் ஆகும். உங்கள் விண்டோஸ் பிந்தைய தேதிக்கு ரீச்டோர் ஆகி இருந்தால் நல்லபடியாக சிஸ்டம் ரீஸ்டார்ட் ஆகி உங்கள் சிஸ்டம் ரீச்டோர் செய்யப் பட்டது என்ற தகவல் வரும். இல்லை விண்டோஸ் லோட் ஆகவில்லை என்றால் வேறு வழியில்லை, விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்வதுதான் ஒரே வழி.


With Love LK

ஜூலை 14, 2010

PiT போட்டி

இம்மாத PiT  போட்டிக்காக முதல் முறையாக நான் எடுத்த படங்களை அனுப்பலாம் என்று முடிவு செய்துள்ளேன்.(யாரை கேட்டு இந்த விபரீத யோசனைன்னு நீங்க கேக்கறது என் காதில விழல ). இதற்காக அவர்கள் கொடுத்துள்ள தலைப்பு வழிபாட்டு  தலங்கள்

இந்த மூன்றில் எந்தப் படத்தை அனுப்பலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்  (ஒண்ணு கூட தேறாதுன்னு சொல்லிடாதீங்க அப்பு ..அப்பாடி , எப்படியோ ஒரு பதிவு தேறிடுச்சு )


இன்று பிறந்தநாள் காணும் நமது சகப் பதிவர் , எல்லோராலும்   நேசிக்கப் படும் தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
With Love LK

ஜூலை 12, 2010

வெந்தய கீரை சப்பாத்தி

இதுதான் எனது முதல் பதிவு. தவறுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளவும். இதற்கான படம் நான் எடுத்தது அல்ல. இணையத்தில் இருந்து எடுத்தது.


தேவையான பொருட்கள்


கோதுமை மாவு : அரை கிலோ

வெந்தய கீரை : ஒரு கட்டு

உப்பு : தேவையான அளவு

மிளகாய் பொடி : ஒரு ஸ்பூன்

எண்ணை : தேவையான அளவுசெய்முறை :

கீரையை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். கோதுமை மாவையும் கீரையும் சேர்த்து பிசைந்த கொள்ளுங்கள். பிசைந்தப் பிறகு தண்ணீர் சேர்த்துகொள்ளுங்கள். (கீரை சேர்க்கும் முன் தண்ணி ஊற்ற வேண்டாம்). பிறகு உப்பு, எண்ணை, மிளகாய் பொடி சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். சிறிது நேரம் மாவை ஊற வைத்து பிறகு வழக்கமாக சப்பாத்தி செய்வதை போல் செய்யலாம்.

சுவையான, சத்தான சப்பாத்தி ரெடி. கீரையை தனியாக சாப்பிடாத குழந்தைகளை இவ்வாறு சாப்பிட வைக்கலாம் .
- திவ்யாம்மா


இவர்கள் யார் ???

சமீபத்தில் நிறைய பதிவுகள் தமிழ்மணம் வாசகர் பரிந்துரை பகுதியை பற்றி எழுதப்பட்டன. எனக்குத் தெரிந்து எல்லா திரட்டிகளிலும் இதுதான் நிலைமை. ஒரு சில விசயங்கள் எவ்வாறு நடக்கின்றன என்று புரியாதப் புதிராக இருக்கிறது .

ஒரு சிலர் ஓட்டு மட்டும் இட்டு செல்கின்றனர். அவர்கள் எந்தப் பின்னூட்டமும் இடுவது இல்லை. தமிளிஷில் ஓட்டு போட்டவர்கள் ஐடி பார்க்க இயலும். அவ்வாறு சென்று பார்த்தாள் அவர்கள் எந்தப் பதிவும் இடாதவர்களாக இருக்கிறார்கள். வெறும் ஓட்டு மட்டுமே போடுகிறார்கள். அதுவும் வெவ்வேறு நேரத்தில் அல்ல. அடுத்தடுத்து வருகிறது.

இது எதோ எனது பதிவில் மட்டும் நடக்கிறது என்று நினைத்தேன். பின்பு நமது அமீரக சிங்கம் தேவா கூட பேசினப் பிறகுதான் தெரியுது பலரது பதிவுகளில் இவர்கள் ஓட்டு இடுகிறார்கள் என்று. அதேப் போல் அடுத்ததுதான் இவர்கள் ஓட்டுகள் இருக்கும் .

 யார் அந்தப் புண்ணியவான் அல்லது புண்ணியவான்கள் ??  யாருக்காவது தெரியுமா ?? கொஞ்சம் கண்டுபிடிச்சி சொல்லுங்களேன் ப்ளீஸ். கண்டுபிடிச்சி தரவங்களுக்கு சிறந்த ஒற்றர் என்ற பட்டத்தை தரலாம்னு இருக்கேன்.
With Love LK

ஜூலை 11, 2010

எதிரெதிர் பதிவு

அப்பாவி தங்கமணி எழுதிய தங்க மணிக்கு பத்து கேள்விகள் - பதிவுக்கு எதிர்பதிவு....பதிவுக்கு எதிரெதிர் பதிவு இது

எதிர் பதிவு
எல்லாம் உங்களுக்கு தேவை பட்ற குப்பைக (!!!) தான். என்ன செய்ய? நீங்க கை வீசிட்டு வர்றப்ப நாங்களாச்சும் பொறுப்பா எல்லாத்தையும் கொண்டு வர வேண்டி இருக்கே...நல்லதுக்கு காலம் இல்ல... வேற என்ன சொல்ல

எதிரெதிர் பதிவு 
லிப்ஸ்டிக் , முகம் பார்க்கும் கண்ணாடி  (சின்னது) , அப்புறம் சில பல பில் (உபயோகம் இல்லாதது ) இதெல்லாம் எங்களுக்கு தேவையா? பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும் 

எதிர் பதிவு
ரூபாயை எப்படி பிடிக்கறோம்கறது முக்கியம் இல்ல பாஸ்... எப்படி பிடிச்சு வெக்கறோம்கறது (சிக்கனம்) தான் மேட்டர்.... அதுல ரங்கமணிகள விட தங்கமணிகள் எப்பவும் சூப்பர் தான்னு statistics சொல்லுது... போய் பாருங்க...ஹா ஹா ஹா

எதிரெதிர் பதிவு 

எப்படி? மடிச்சு வச்ச காசு எல்லாம் உபயோகப் படுத்த முடியாம அப்படியே வச்சுக்கறதா ?


எதிர் பதிவு
சட்னி அரைச்சு குடுக்கராங்கல்ல அவங்கள சொல்லணும்... வெறும் தேங்காய கடிச்சுட்டு சாப்பிடுங்கன்னு விட்டுட்டா இனிமே சரியா போகும்... என்ன நான் சொல்றது....? (தேவையா இது தேவையா...ஹா ஹா ஹா)

எதிரெதிர் பதிவு
 
அப்படியாவது ஒழுங்கா செய்வீங்களா? நீங்க சரியா செய்யறது இல்லைனுதான் , எல்லாம் பாக்கெட் ரெடிமேட் செஞ்சு விக்கறாங்க.


எதிர் பதிவு
என்ன செய்ய? வாய்ச்சது தான் இப்படி விதின்னு ஆகி போச்சு.... நாம பெத்ததாச்சும் நல்லபடியா இருக்கட்டும்னு நெனைக்கறது தப்பாங்ண்ணா... நேரடியா சொன்னா உங்க மனசு கஷ்டப்படும்னு சொல்லாம விட்டது தங்கமணி தப்பு .... (இப்ப என்ன சொல்லுவீங்க... இப்ப என்ன சொல்லுவீங்க...ஹா ஹா ஹா)

எதிரெதிர் பதிவு
ஏனுங்க இதுக்கும் அவர் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம்? இப்படி சம்பந்தம் இல்லமா பேசறதுதான் தங்கமணிகளோட வேலை ..

எதிர் பதிவு
அதுதாங்க மல்டி-டாஸ்கிங்.... ஓ... அப்படின்னா என்னனே ரங்க்ஸ்களுக்கு தெரியாதில்ல... அதாவது... ஒரு வேலை செய்யறப்பவே அவகாசம் கெடைச்சா பின்னாடி வேண்டியதையும் பாத்து வெச்சுக்கறது பெண்களுக்கே உரிய ஒரு குணம்... இல்லேனா உங்கள மாதிரி நூறு ரூபா பெறாத சட்டைய ஆயிரம் குடுத்து வாங்க வேண்டி வருமே பாஸ்... ஹே ஹே ஹே...

எதிரெதிர் பதிவு


 எப்படியும் அதை ரெண்டு மாசம்கழிச்சு இப்ப இது பேஷன் இல்லைன்னு சொல்லி வாங்க மாட்டீங்க? அப்புறம் எதுக்கு இப்ப தேவை இல்லாமா பார்த்து வைக்கணும் ??


எதிர் பதிவு
என்னங்க செய்ய? உங்கள மாதிரியா நாங்க... நாங்க உடுத்துற புடவை கூட உங்களுக்கும் பிடிச்சதா இருக்கணும்னு நெனக்கற நல்ல மனசு தங்கமணிகளுக்கு இருக்கே... (ஹா ஹா ஹா)

எதிரெதிர் பதிவு
எப்படி இருந்தாலும் , நாங்க சொல்றத வாங்க மாட்டீங்க ? அப்புறம் எதுக்கு இப்படி ஒரு சால்ஜாப்பு ???


எதிர் பதிவு
உங்கள போல கை வீசிட்டு கெளம்ப நாங்க என்ன நீங்களா? உங்களுக்கு கிளம்பறது ஒண்ணு தான் வேலை... எங்களுக்கு அதுவும் ஒரு வேலை... அதோட சமைக்கறது (நீங்க மேல சொன்னாப்ல அந்த நேரத்துல தானே உங்க சொந்த காரங்க கூட அரட்டை அடிச்சுட்டு நாங்க mixie போடறத வேற கிண்டல் பண்ணுவீங்க... பின்ன என்ன ஹெல்ப் பண்றதா போச்சு...), பிள்ளைகள கிளப்பறது, வீட்டை ஒழுங்கு பண்றது எல்லாமும் இருக்கே (கரெக்ட் தானே பாஸ்...)

எதிரெதிர் பதிவு
 இந்தப் போய்தான வேணாம்னு சொல்றது. சமைக்கரதுக்கும் வெளில போறதுக்கும் என்னங்க சம்பந்தம்?? எல்லா கேள்விக்கும் புத்திசாலித்தனமா குழப்பி சம்பந்தம் இல்லாதா பதிலா கொடுக்கறீங்க ??எதிர் பதிவு
//"போதை வஸ்துக்கள்"// உங்களுக்கு ஏங்ண்ணா எல்லாமும் இப்படியே தோணுது...? ஓ... நீங்க ரங்கமணி ஆச்சே... அப்படி தான் இருக்கும்... யூஸ் பண்றதெல்லாம் பிட் நோட்டீஸ் அடிச்சு சொல்லிட்டா பண்ண முடியும்... எல்லாம் பண்றது தான்..

எதிரெதிர் பதிவு
என்ன பதில் சொல்றதுன்னு தெரியாட்டி இப்படி ஒரு பதிலா சொல்றதா ???

எதிர் பதிவு
அந்த கடைல தான் மளிகை சாமான் நல்லா இருக்கும்னு தெரிஞ்சு வெச்சு இருக்கறதுக்கு பாராட்டறத விட்டுட்டு இதுக்குமா குத்தம்... ஆண்டவா காப்பாத்து...

எதிரெதிர் பதிவு
அதெப்படிங்க அந்தக் கடைலதான் நல்லா இருக்குனு சொல்லுவீங்க?? வேற கடையே தெரியாதா? இல்லை வேற கடையே இல்லையா ஊர்ல ? அங்கதான் வாங்கனும்னு அடம் வேற பிடிப்பீங்க .. முடியல


.With Love LK

ஜூலை 10, 2010

இவர்களும் பிரபலங்களே IV

சிறிது நாட்களாக இந்தப் பகுதியை தொடர இயலவில்லை. மீண்டும் தொடரும் முயற்சியில்.

ஜோதி 

       நெல்லைச் சிங்கம். இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்தாலும் , தனது முதல் பதிவிலேயே பதிவர்களுக்கு இன்றைக்கு மிகத் தேவையான அறிவுரையை கூறி உள்ளார். இவர் கூறுவதை அனவைரும் பின்பற்றினால் இன்று பதிவுலகில் நடக்கும் சண்டைகள் இருக்காது.

இவரது பதிவு http://jkjothi.blogspot.com/

காயத்ரி 

  அமீரகத்தில் இருந்து பதிவு எழுத துவங்கி இருக்கும் தங்கமணி. மிக நகைச்சுவையாக எழுதுகிறார். தான் தேர்வில் மிகக் குறைவாக மதிப்பெண் பெற்றதை கூட சாதனை என்று சொல்லுகிறார் ?? நீங்களும் பாருங்களேன் ...

இவரது பதிவு இதோ இங்கே http://funaroundus.blogspot.com

வில்சன் 

  ஏற்கனவே பதிவுலக தொடர் நாயகனாக இருக்கும் தேவாவின் நண்பர் இவர். இவரது எழுத்து நடை மிக அருமையாக உள்ளது. இப்பொழுதுதான் பதிவெழுத ஆரம்பித்தவர் போல் தோன்றவில்லை . மங்களூர் விமான விபத்தை மையமாக வைத்து ஒரு கதை எழுதி உள்ளார். படித்து பாருங்கள்.

இவரது எழுத்தை படிக்க http://tamilthalaimagan.blogspot.com

வழிப்போக்கன் 

 இவரும் ஒரு நகைச்சுவை பதிவரே. இவரது கவிதை மற்றும் எதிர் கவிதை படியுங்கள். அதாவது இவர் எழுதிய கவிதைக்கே இவர் எதிர் கவிதை எழுதி உள்ளார். இப்படி எல்லாரும் எழுத ஆரமிச்சா பதிவுலகில் சண்டை இருக்காதே (ஹிஹி)

இவரது எழுத்தை படிக்க http://thegoodstranger.blogspot.com

கோபி

 புதிதாய் கவிப் பாட வந்திருக்கும் கவினர் இவர். இப்பொழுதுதான் ஒரு பதிவு எழுதி உள்ளார்.  ஹைக்கூ போன்று எழுதுகிறார்.

இவரது கவிதைகளைப் படிக்க http://gopispages.blogspot.com/

நன்றி மீண்டும் சந்திப்போம் .

ஜூலை 09, 2010

கதம்பம்

எதிர்பார்க்காதே!

காதலியை எதிர்பார்த்தாய்
படிப்பை இழந்தாய்!

அரசாங்க வேலையை எதிர்பார்த்தாய்
த‌னியார் வேலையை இழந்தாய்!


தோழனே!
வாழ்வில் எதையும் எதிர்பார்க்காதே!

 *****************************************************************************
 தியாகம் 

மெழுகுவர்த்திக்கு உயிர்
கொடுக்க உயிர் விட்டது
தீக்குச்சி!

நினைத்து நினைத்து
உருகியது
மெழுகுவர்த்தி!!

*****************************************************************************
உனக்காக 

அழுது கொண்டே பிறந்தேன்
ஏன் இந்த பிறப்பு??

நீ வந்த பின்புதான் உணர்ந்தேன்
உன் அன்பிற்காக பல பிறப்பு
எடுக்கலாம் என....

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

With Love LK

ஜூலை 08, 2010

விடை சொல்லுகிறேன்


கேட்டு  வருவது 
நட்பல்ல ...


கேளாமல் உள்வருவது 
நட்பின் உரிமையில்..

வெளிகாயத்திற்க்குத்   
தேவை மருந்து - மனதிற்கு 
வார்த்தையே அருமருந்து...

மனமது பேசத் துவங்கினால்
தடையேது இங்கு ?? 

நட்பிற்கு தாளிட வழியிங்கு
ஏது??

 பி.கு : என் தோழி கேட்ட வினாவிற்கு இந்த பதில். 
  


With Love LK

ஜூலை 06, 2010

அப்பாவி ரங்கமணிகள் சங்கம்

 வர வர ரங்கமணிகளுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய் விட்டது. ஒருவர் என்னடான்னா, சமையல் பாத்திரங்களை கைப்பையில் கொண்டு சென்று தாக்குகிறார்.. இன்னொருவர், சமையல் செய்து தாக்குகிறார். எனவே அப்பாவிகளாக வாழ்கையை கழிக்கும் ரங்கமணிகளை பாதுகாக்க "அப்பாவி ரங்கமணிகள் சங்கம் " துவங்கப் படுகிறது

கடைசியாக, கனடாவில் இருக்கு ரங்கமணி, தன் தங்கமணி பிறந்தநாள் விருந்தாக இட்லியை செய்து கொடுமைப் படுத்தினார் என்றும், பெங்களுருவில் இருக்கும் ரங்கமணி ஒருவர் பாட்டு கூடப் பாடமுடியவில்லை எனவும் புலம்பியதன் விளைவே இந்த சங்கம் உடனடியாகத் துவங்கப் படுவதின் காரணம்.

ரங்கமணிகளை குறிவைத்து எழுதப் பதிவு எழுதும் தங்கமணிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று முதலில் முடிவு செய்யப் பட்டுள்ளது. குறைந்தப் பட்சமாக எதிர் பதிவு சங்கத்தின் சார்பாக எழுதித் தரப்படும்.  எதிர்பதிவு எழுதியும் மாறாத பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பதை சங்கத்தின் பொதுக்குழு தீர்மானிக்கும். ரங்கமணிகளை ஆதரிக்கும் சில  தங்கமணிகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தி விருது வழங்கப்படும்.

சங்கத்தின் தலைவராக, அபுதாபியில் , கஷ்டப்படும் ரங்கமணி தேர்வாகி உள்ளார். நான் பொருளாளராகவும், நமது அமீரக சிங்கம் தேவா செயலாளரகவும் இருப்பார்.உறுப்பினர் சேர்க்கை அதி தீவரமாக நடைபெறுகிறது. முதலில் சேரும் ஆயிரம் உறுப்பினர்களுக்கு ஆயுள் கால சந்தா இலவசம். விரைவில், அகில உலகமெங்கும் கிளைகள் திறக்கப்படும்.

விரைவில், கல்யாணம் செய்துகொண்டு ரங்கமணிகள் ஆகப் போகிறவர்கள் கூட இதில் உறுப்பினர் ஆகலாம். அவர்களுக்கு என்று சந்தாவில் தனி சலுகை குடுக்கப்படும். உறுப்பினர் ஆக விரும்புவர்கள்  தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி appavirangamanigal@gmail.com

சங்கத்தின் விலாசம்
அப்பாவி ரங்கமணிகள் சங்கம்,
அப்பாவி தெரு, ரங்கமணிகள் நகர், சென்னை.

இனி ரங்கமணிகள் மேல் தொடுக்கப் படும் தாக்குதல்கள் கடுமையாக எதிர்க்கப் படும்.

டிஸ்கி : இதற்கு எதிர் வினைகள் வந்தால், கடுமையாக பதில் வினைகள் தொடுக்கப்படும்
என்று அன்புடன் கூறிகொள்கிறேன்.

பி.கு பின்னூட்டம் இடுவதில் பிரச்சனை உள்ளதால் அனானி கமென்ட் அனுமதித்து உள்ளேன் .பின்னூட்டத்தில் உங்கள் பெயருடன் போடவும். நன்றி 


With Love LK

ஜூலை 04, 2010

கால் சென்டர் VI

வேலை நேரங்களை பற்றி ஹுசைனம்மா கேட்டிருந்தார்கள். அதை பத்தி எழுதலாம்னு  நினைச்சப்ப இரண்டு நாளா ஆணி ரொம்ப ஜாஸ்தியா போய்டுச்சு. அதுவும் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு கிளம்பும் பொழுது நேரம் இரவு ஒரு மணி. :(

கால் சென்டர்ல வேலை செய்யறவங்களுக்கு ஏற்படற பல பாதிப்புகளுக்கு முக்கியக் காரணம் சுழற்சி நேர வேலை. அதாவது, வாரம் ஒரு முறை நீங்கள் வேலை செய்யும் நேரம் மாறும். ஒரு உதாரணத்துக்கு , இந்த வாரம் மாலை 6.30-அதிகாலை 3.30 வரை உங்கள்பணி நேரம் என்றால், அடுத்த வாரமோ இல்லை இரு வாரங்கள் கழித்தோ உங்களது பணி நேரம் மாறும். அது  எப்படி  வேண்டுமானாலும்  இருக்கலாம். நள்ளிரவு 12.30 - காலை 9.30 அல்லது அதிகாலை 3.30 மணி - மதியம் 12.30 இப்படி எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம்.

இரவு நேரப் பணியின் நன்மைகள் 

இரவில் பணிக்கு செல்வதால், வங்கி மற்றும் அரசு அலுவலகங்கள் செல்வது போன்ற வேலைகளை முடிக்கலாம். இதற்கென்று விடுப்பு எடுக்கத் தேவையில்லை.

பகலில் தூங்கியது போக இருக்கும் நேரத்தில் எதாவது மேற்படிப்பு படிக்கலாம்.

அதிகப் படியான சம்பளம்

வீட்டிற்கே வந்து அழைத்துச் செல்லும் கார் வசதி.

இரவு நேரப் பணியின் பாதகங்கள் 

நமது உடல் அமைப்பானது இயற்கையாக இரவு உறங்கி பகலில் விழித்திருப்பதற்கு ஏற்ப உள்ளது. இரவு நேரம் வேலை செய்வதால் அதன் இயக்கம் பாதிக்கப் படும். முக்கியமாக பாதிப்புக்கு உள்ளாவது சாப்பிடும் நேரம் மற்றும் உணவு. 

கண்ட நேரத்திற்கு சாப்பிடுவதால் சரியாக செரிமானம் ஆகாமல், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்து அலுவலக காண்டீனில் இவர்கள் சாப்பிட செல்லும் நேரம் எதவும் இல்லை என்றால், கப் நூடுல்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதாலும் உடல்நலம் பாதிக்கப்படலாம்.

பகல் நேரத்தில் உறங்கிக் கொண்டிருப்பதால், நட்பு வட்டாரம் சுருங்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களிடமும் அதிகம் பழக வாய்ப்பு குறையும். இது மிகப் பெரிய பாதகம். வெளிவட்டாரத் தொடர்பே அற்றுப் போய்விடும்.

பொதுவாக, இரவு நேரப் பணியில் , பாதகங்கள் அதிகம் இருந்தாலும், அதில் கிடைக்கும் சம்பளம், விரைவான வளர்ச்சி அதை விரும்புவர் அதிகம். பலர் விரும்பி சேர்ந்தாலும், அதில் தாக்குப் பிடிக்க முடியாமல், இந்தத் துறைக்கே முழுக்குப் போட்டுவிட்டு செல்பவர்களும் உண்டு. நான் யாருக்கும் இந்தத் துறையை சிபாரிசு செய்ய மாட்டேன், குறிப்பாக பொறியியல் பட்டதாரிகளுக்கு.

கால் சென்டரில் பொதுவாக இரண்டு வகை போன்கள் உபயோகப் படுத்தப் படுகின்றன. நாம் உபயோகிக்கும் சாதரணமான போன்கள் அங்கு உபயோகிக்க இயலாது. அதற்கென்று IP போன்கள் உள்ளன. பல நிறுவனங்கள் இத்தகைய போன்களை தயாரித்தாலும், அதிகம் உபயோகிக்கப் படுவது Avaya மற்றும் Nortel நிறுவனத்தின் போன்களே.

வாடிக்கையாளர் அந்த நிறுவனத்தின் சேவை எண்ணை அழைத்தவுடன் , அவரது அழைப்பு, போன் செர்வரின் வழியாக  முதலில் IVR க்குப் போகும் . பின்பு அங்கு அவர் தேர்வு செய்யும் விருப்பத்தினை பொருத்து சம்பந்தப்பட்ட பிரிவில், யாரவது ஏஜெண்ட்ஸ் அழைப்புகள் இல்லாமல் இருக்கிறார்களா  என்று பார்க்கும், அப்படி யாரும் ப்ரீயாக இல்லாதப் பட்சத்தில், அவரது அழைப்பு, ஹோல்டில் இருக்கும். வாடிக்கையாளருக்கு, வெறும் சங்கீதம் ஒலிக்கும், எப்பொழுது அவரது அழைப்பு ஏஜெண்டுக்கு மாற்றப்படுகிறதோ  அப்பொழுது அந்த சங்கீதம்  நின்று விடும்.

இவ்வாறு  எத்தனை அழைப்புகள் வருகின்றன,அவற்றில் எத்தனை அழைப்புகள் ஏஜெண்டுக்கு வருமுன் துண்டிக்கப் படுகின்றன , எத்தனை அழைப்புகள் queue இல் உள்ளன போன்றவற்றை அதற்குண்டான போன் செர்வர் மென்பொருள் மூலம் பார்க்கலாம்.


With Love LK

ஜூலை 02, 2010

விடை சொல்

என் நீண்டநாள் தோழி ஒருவர் எங்கள் நட்பை பெருமை படுத்தும் விதமாய் எழுதிய கவிதையை இங்கே அவர் அனுமதியுடன் வெளியிடுகிறேன்எங்கிருந்து வந்தாய் ?
இப்படி பிடிவாதமாய் என்
மனதினுள் நுழைய எப்படி
முடிந்தது உன்னால் ?

இந்த  உரிமையை 
கேளாமல் எங்கிருந்து பெற்றாய் ?

உனக்காய் கவிதை 
எழுத வைத்த உன்னை
என்னவென்று அழைப்பது ?

தடுமாறாமல் விழுந்து 
கொண்டிருக்கிறேன் ஏன் ?

என் மனம் 
எண்ண தொடங்கும்முன் 
சொல்லிவிடுகிறாய் எவ்வாறு ?

மன காயம் மருந்தில்லாமல் 
உன் 
வார்த்தையால் ஆறுவதேன் ?

நட்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ் ?
கேள்வி என்னிடம், பதில் உன்னிடம் ?!!


With Love LK

ஜூலை 01, 2010

விருதுகள்


 நண்பர் ஜெய்லானி அவர்கள் இந்த தங்க மனிதன் விருதை எனக்கு அளித்திருக்கிறார். இது அவர் எனக்குத் தரும் இரண்டாவது விருது. அவருக்கு எனது  நன்றிகள் பல. கிட்டத் தட்ட எனக்கு தெரிந்த அனைவருக்கு அவர் இதை கொடுத்து விட்டார். அவர் கொடுக்காமல் விட்ட நபர்களுக்கு நான் தருகிறேன் .

இதை உங்கள் பதிவின் முகப்பில் மாறிக்கொண்டு தங்க மகன்/தங்க மகளாக ஜொலிக்கவும்kousalya , கீதா மாமி , Gayathri, தேவா, குந்தவை, சந்தியா, மாதங்கி,அருன்ப்ரசாத்,பத்மநாபன்,வெங்கட் நாகராஜ்,அபி அப்பா, சின்ன அம்மிணி ,அமைதிசாரல்.
       


With Love LK