மே 30, 2011

வியாபாரம் 9

போனையும் தன்னையும் மாற்றி மாற்றி பயந்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்த ராஜியைப் பார்த்த சேகர் "போனை எடுத்து பேசு " என்று காவல் துறைக்கே உண்டான அதிகாரத் தொனியில் சொன்னான்.
சேகரின் கட்டளையை ஏற்பதைத் தவிர வேறு வழி இல்லாததால் அழைப்பை ஏற்று போனை காதில் வைத்தவள் நடுங்கும் குரலுடன் "ஹலோ" என்றால் ,
மறுமுனையில் "உங்களுக்குப் பிடித்த பாடலை உங்கள் போனிற்கு டவுன்லோட் செய்ய ..." என்றுப் பதிவு செய்யப் பட்டக் குரலை கேட்டவுடன் அவளையும் அறியாமல் நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
"ஏர்டெல் கால் சார் " என்று ஒருவித சலிப்புடன் சேகரிடம் சொன்னாள்.
போன் அட்டென்ட் பண்ணும் பொழுது அவளிடம் இருந்த பயத்தையும் இப்பொழுது கொஞ்சம் பயம் நீங்கிய விதத்தையும் கவனித்த சேகர் " சரி சொல்லுங்க. அந்த ரமேஷை எவ்வளவு நாளா தெரியும் உங்களுக்கு "
"ஒரு வருஷத்துக்கு மேல தெரியும் சார் "
"எப்படி பழக்கம் ?"
"முன்ன செவ்வாய் பேட்டையில் கடையில் வேலை செஞ்சுகிட்டப்ப பழக்கம் சார். "
"உங்களுக்கும் அவருக்கு என்ன உறவு?"
இதற்கு ராஜியிடம் இருந்து பதில் வராமல் போனதால்
"நீங்க எதுக்கு உங்க அப்பா பேர்ல அவருக்கு சிம் கார்ட் வாங்கி தந்தீங்க ? உங்க அப்பா பேர்ல அவருக்கு சிம் வாங்கி தர அளவுக்கு என்ன உறவு ?" கேள்வியை சிறிது மாற்றிக் கேட்டான் .
இதற்கும் பதில் வராமல் போனதால் அவன் ஜெயாவைப் பார்த்தான்.அவன் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட ஜெயா 
"இங்கப் பாருமா, இங்கயே ஒழுங்கா பதில் சொல்லிடு. நீ பண்ணி இருக்கறதை ஒரு பையன் பண்ணியிருந்தா இந்நேரம் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய்தான் விசாரிச்சிருப்போம்.இப்ப நீ பேசாம இப்படியே இருந்தா ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போய் விசாரிக்க வேண்டி இருக்கும்."
ஜெயா அவளிடம் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், சேகர் ராஜியின் செல்போனில் அதுவரை வந்திருந்த அழைப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் அவர் எதிர்பார்த்த ஒரு எண் இருந்தது . பின் அந்த மொபைலில் அவன் போட்டோ ஏதாவது இருக்குமா  என்று பார்த்துக் கொண்டிருந்தவரின் கண்களில் ஒரு போட்டோ சிக்கியது. 
அதில் இருந்தது அன்றுக் காலை அவர் விசாரித்த அதே ஆள். 
"இந்த போட்டோவில் இருக்கறதுதான் ரமேஷா ?"
"ஆமாம் சார் "
"ஜெயா நீங்க கேட்டுகிட்டு இருந்த உடனே வரேன் "   என்று சொல்லிவிட்டு இரண்டு போன்களையும் எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியே வந்தான். சில நிமிடங்கள் யோசித்தவன் பின் கடைசியாக வந்த அழைப்புகளின் எண்களை பார்த்தான். ஒரே எண்ணில் இருந்து  வந்திருந்த இரண்டு மிஸ் கால்களைப் பார்த்துவிட்டு அந்த எண்ணுக்கு தனது போனில் இருந்து கால் செய்தான்.
மறுமுனையில் குரல்  கேட்டவுடன் "இது எந்த ஏரியா ? " என்று அவன் கேட்டதற்கு பதில் நக்கலாய் வந்தது .
"போலிஸ் டிபார்ட்மென்ட்ல  இருந்து கால் பண்றோம்" என்று சொன்னவுடன் மறுமுனையில் பணிவு உடனடியாய் தென்பட்டது. அவன் கேட்ட கேள்விகளுக்கு பதிலும் கிடைத்தது.
அவன் பேசிவிட்டு உள்ளே வரவும் , ஜெயா விஜியிடம் பேசி முடிக்கவும் சரியாக இருந்தது.
"என்ன ஏதாவது பேசினாளா ?"
"பேசினாள் சார். இந்தப் பொண்ணு அவனை விரும்பி  இருக்கு. அவன் கார்டு வேணும்னு சொன்னதால அவங்க அப்பா பேர்ல வாங்கித் தந்திருக்கு. மத்தபடி இந்தப் பொண்ணுக்கு வேற எந்த விஷயமும் தெரியலை சார் ."
அவள் சொல்லி முடிக்கவும் மீண்டும் விஜியின் போன் ஒளிரத் துவங்கியது.
"அனேகமா அவன்தான் பண்றான்னு நினைக்கிறேன் . போனை அட்டென்ட் பண்ணுங்க. அவனை பாக்கணும்னு சொல்லி இங்க வர சொல்லுங்க. நாங்க இங்க இருக்கறது அவனுக்குத் தெரியாதக் கூடாது.
அவர் சொன்னதற்கு பதில் சொல்லாமல் வெறும் தலையாட்டலின் மூலம் சம்மதத்தை சொன்ன விஜி , அழைப்பை உயிர்ப்பித்தாள்.
"ஏன்  காலை அட்டென்ட்  பண்ணலை  ? எதுக்கு கட் பண்ண ?"
சில கணம் என்ன சொல்வது என்று திகைத்த விஜி பின் நடுங்கும் குரலுடன் "இல்லை. கடையில கூட்டம் இருந்தது. அதான் எடுக்க முடியலை. இப்ப எங்க இருக்க ?"
"அங்கதான் இருக்கேன் ."
"இங்கயா ?" கேட்ட விஜியின் குரலில் சிறிது படப்படப்பு கூடி இருந்தது.
"ஆமாம் . வலசையூர் போற பஸ் இருக்கற இடத்தில இருக்கேன். இங்க வர முடியுமா?"
"இல்லை. இப்ப அங்க வந்தா மேனேஜர் சத்தம் போடுவார். நீ கடைகிட்ட இருக்கற ஜூஸ் கடைகிட்ட வா. நான் அங்க இருக்கேன்" 
"சரி" என்று ரமேஷ் சொல்லியவுடன் அழைப்பு கட் ஆனது.
"குட் . ஒழுங்கா பேசி இருக்க. இப்ப வெளில போய் அவனுக்காக வெய்ட் பண்ணு. "
"ஜெயா நீங்க இந்த பொண்ணு நிக்கற இதத்தை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்னு என்ன நடக்குதுன்னு பாருங்க. நான் இங்க இருக்கேன். என்னை  அவன் பார்த்திருக்கன். அதனால நான் அங்க இருந்தா அவன் தப்பிச்சிடுவான்."
அவன் சொல்லியவாறே இருவரும் கடையில் இருந்து வெளியே சென்று காத்திருந்தனர். விஜி கண்ணில் படுமாறு ஒரு மேஜையை செலெக்ட் பண்ணி அங்கே அமர்ந்தான் சேகர். விஜி படப்படக்கும் இதயமும் , பயந்த முகமுமாய் வெளியே நின்றுக் கொண்டிருந்தாள். 
வியாபாரம் தொடரும்  

மே 29, 2011

வியாபாரம் 8


ரமேஷ் அங்கிருந்து கிளம்பியவுடன் சிறிது யோசனையில் ஆழ்ந்த சேகர், பின் தன் செல்போனில் இருந்து யாரையோ அழைத்தான் .

"ஆமாம் ஜெய் . நேரா அங்க போய் அவர்கிட்ட கேட்டுப் பாரு . இருந்தா வாங்கிக்கோ. இல்லைனாலும் பிரச்சனை இல்லை. அட்ரஸ் இருக்கும் எப்படியும் அந்த ஏரியால போய் விசாரிச்சு பாரு. எவ்வளவு நேரத்தில் அப்டேட் பண்ற ?"

"ஒரு ரெண்டு மணி நேரத்துல நானே உங்க லைனுக்கு வரேன் சார். "

"அப்படியே அந்த கிருஷ்ணன் வீடு இருக்கற அதே ரோட் எண்ட்ல ஒரு கடை இருக்கும். அந்தக் கடை ஓனர் கிட்டயும் விசாரிக்கணும். "

"ஓகே சார் . பண்ணிடறேன். "

ஜெய் ,சேகரின் நம்பிக்கைக்குரிய சப் இன்ஸ்பெக்டர். ஜெய்யிடம் பேசிவிட்டு , மீண்டும் மற்றொரு எண்ணுக்கு அழைத்தார். 

"ஜெயா! உடனே கிளம்பி பழைய பஸ் ஸ்ட்டேன்ட்ல இருக்கற கார்பரேஷன் காம்ப்ளெக்ஸ் தெரியும்தானே ? அங்க வந்திருங்க. ஒரு பொண்ணை விசாரிக்கணும்."

"ஓகே சார். "
"முக்கியமான விஷயம். யூனிபார்ம்ல வர வேண்டாம். நார்மல் ட்ரெஸ்ல வாங்க."

"ஓகே சார். அரைமணி நேரத்துல வந்துடறேன் சார்."

தானும் இப்ப கிளம்பினா சரியா இருக்கும் என்று எண்ணியவன், காரை கமிஷனர் ஆபிசுக்கு எடுத்து செல்ல சொல்லிவிட்டு அவனும் பழைய பேருந்து நிலையத்தை நோக்கி வண்டியை செலுத்தினான். 

அதே நேரம் அங்கு விஜி, ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு முகத்தை அலம்பிவிட்டு கடையில் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தாள்.  ஜெயா அங்கு வந்து சேர்வதுக்கு முன்பே அங்கே வந்த சேகர் , கடைக்கு எதிர்புறம் நின்று கொண்டு கடையை ஆராய்ந்து கொண்டிருந்தான். 

அவன் அங்கு வந்து சிறிது நேரத்திலேயே அவனது அலைபேசி சிணுங்கியது. ஜெயாவின் நம்பரில் இருந்து போன் . அழைப்பை உயிர்ப்பித்து அவளை அந்தக் கடை அடையாளம் சொல்லி அங்கே வர சொன்னான் . 


"ஜெயா ! இந்தக் கடையில் வேலை செய்யற பொண்ணுதான் அந்த டிரைவருக்கு கார்ட் வாங்கி தந்திருக்கு. அந்த டிரைவர்தான் குற்றவாளியான்னு நமக்கு உறுதியாத்  தெரியாது. அதனால கடையில் வெச்சி விசாரிக்க வேண்டாம். அந்த பொண்ணுகிட்ட போய் பேசி வெளில கூட்டிகிட்டு வாங்க. நான் பக்கத்தில் இருக்கற ஜூஸ் ஷாப்ல இருக்கறேன். எப்படி பேசணும்னு தெரியும்தான?"

"அதை நான் பார்த்துக்கறேன் சார். அஞ்சு நிமிசத்தில் ஜூஸ் ஷாப்ல மீட் பண்றேன்" சொல்லிவிட்டு அந்த ம்யூசிக் ஷாப்பினுள் நுழைந்தாள் ஜெயா. 


கடைக்கு வந்த வாடிக்கையாளர் என்றே அவளை நினைத்த அவளை "வாங்க மேடம்! என்ன சிடி வேண்டும் உங்களுக்கு ?" என்று கடை மேற்பார்வையாளர் போல்  இருந்தவர் கேட்டார். 

"இல்லை . எனக்கு சி டி எதுவும் வேண்டாம். இங்க விஜின்னு ஒரு பொண்ணு வேலை செய்யுத்துள்ள , அந்த பொண்ணோட அக்கா நான். இந்தப் பக்கம் வந்தேன். அதான் பார்த்துட்டு போலாம்னு .."

"நீங்க விஜியோட அக்காவா ? இருங்க விஜிய கூப்பிடறேன்."
"விஜி விஜி இங்க வாம்மா. உன் அக்கா வந்திருக்காங்க பாரு ".


கடையின் மறு புறத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு எதையோ எடுத்துக் காட்டிக்கொண்டிருந்த விஜி திகைப்படைந்தாள். தனக்கு யாரும் அக்கா இல்லியே என்று யோசித்துக் கொண்டே "இதோ ஒரு நிமிஷம் , வரேன் சார்" என்று குரல் கொடுத்தாள்.

அவள் குரல் கொடுக்கவும் ஜெயா அந்த இடத்திற்கு வரவும் சரியாக இருந்தது. 

அவள் இருந்த கவுண்டரை நெருங்கிய ஜெயா மெல்லியக் குரலில் "போலிஸ் டிபார்ட்மென்ட்ல இருந்து வரேன். கொஞ்சம் என் கூட வா. உன் கிட்ட விசாரிக்க வேண்டி இருக்கு. அக்காகூட ஜூஸ் கடை வரைக்கும் போயிட்டு வரேன்னு சொல்லிட்டு வா. மறக்காம உன் செல் போனையும் எடுத்துக்கிட்டு வா ."

நடப்பவற்றை கண்டு குழப்பமடைந்த விஜி என்ன பதில் சொல்வது என்றுப் புரியாமல் பேயறைந்த முகத்துடன் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

மீண்டும் கடையின் முன்பக்கம் வந்த ஜெயா , கடை சூபர்வைசரிடம் "சார் ! பக்கத்தில் இருக்கற ஜூஸ் கடை வரை கூட்டிகிட்டு போயிட்டு வரேன் சார். "

"ரொம்ப லேட் பண்ணிடாதீங்க. சீக்கிரம் அனுப்பிடுங்க. கஸ்டமர் வர நேரம் இது "

"இல்லை சார். ரொம்ப லேட் ஆகாது சார். ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷத்தில் அனுப்பிடறேன் சார். "

"சரி சரி "

விஜியை அழைத்துக் கொண்டு கடையில் இருந்து வெளியே வந்த சமயம், விஜியின் கையில் இருந்த அலைபேசியின் திரை ஒளிரத் துவங்கியது  . கடையில் இருந்ததால் சைலெண்டில் போட்டு வைத்திருந்ததால் அழைப்போசை வரவில்லை. 

பக்கத்தில் ஜெயா இருந்ததாலும், திரையில் வந்த என்னும் புதியதாய் இருந்ததாலும் அந்த அழைப்பை ஏற்கலாமா வேண்டாமா என்று ஒரு கணம்  யோசித்துப்  பின் ஜெயா தன்னை கவனிக்கிறாளா என்று ஓர கண்ணால் பார்த்தாள். ஜெயா இவளைப் பார்த்த மாதிரி தோன்றவில்லை அவளுக்கு. அவள் தன்னை கவனிக்கவில்லை என்றுத் தெரிந்தவுடன் அந்த அழைப்பைத் துண்டித்தாள். ஆனால் அலைபேசி ஒளிரத் துவங்கியதுமே விஜி என்ன செய்யப் போகிறாள் என்று யோசித்துக் கொண்டிருந்த ஜெயா இவள் அழைப்பைத் துண்டித்ததை கவனித்து விட்டாள். ஆனால் அதை கவனியாது போல் ஆவலுடன் ஜூஸ் கடையினில் நுழைந்தாள்.கடையினில் நுழைந்து சேகர் இருந்த மேஜைக்கு சென்று அங்கிருந்த நாற்ககலியில் அமரவும் மீண்டும் அலைபேசி ஒளிரத் துவங்கியது. இந்த முறை சேகரும் கவனித்துவிட்டான். என்ன செய்வது என்றுப் புரியாமல் குழப்பமும் பயமும் கலந்த முகத்துடன் போனையும் சேகரின் முகத்தையும் மாறி மாறி  பார்த்துக் கொண்டிருந்தாள்
 
-வியாபாரம் தொடரும் 


அன்புடன் எல்கே

மே 16, 2011

வியாபாரம் 7

பழைய வியாபாரங்களைப் பார்க்க

மொபைலில் தெரிந்த எண் புதிதாய் இருந்ததால் எடுப்பதா வேண்டாமா என்றக் குழப்பத்தில் ஒரு கணம் யோசித்தாலும், பின் அழைப்பை உயிர்ப்பித்தாள்.

அழைப்பு இணைக்கப்பட்டவுடனேயே மறுமுனையில்  இருந்து
"விஜி ! நான்தான் பேசறேன் !"

தனக்கு பழக்கமான குரல் என்றவுடன் , மீண்டும் ஒருமுறை அது எந்த எண் என்றுப் பார்த்தாள். எதோ ஒரு தொலைபேசி எண் என்றுத் தெரிந்தவுடன் "என்ன லேன்ட்லைனில் இருந்து பண்ற ? மொபைல் என்னாச்சு எதுக்கு ஆப் பண்ணி வெச்சிருக்க ?"

"இல்லை ஒரு சின்ன பிரச்சனை . அதான் ஆப் பண்ணி வெச்சிருக்கேன் ."

"அது உனக்கு சின்ன பிரச்சனையா ? அந்த கார்டை வெச்சு என்ன பண்ண ? என்னை தேதி வீடு வரைக்கும் போலிஸ் வந்திருச்சி . கார்டை வெச்சிருக்கியா இல்லை என்ன பண்ண ?"

"போலிஸ் வந்துச்சா ? என்ன கேட்டாங்க ?"

"நீ என்ன பண்ண அதை முதல்ல சொல்லு ."

"அதை போன்ல சொல்ல முடியாது . நேர்ல வந்து சொல்றேன். போலிஸ் என்ன கேட்டாங்க அதை சொல்லு."

"நீ தப்பு பண்ணியா ? இல்லாட்டி அதை எதுக்கு திருப்பி திருப்பி கேட்கற ? இன்னும் என் கிட்ட எதுவும் கேட்கலை. வீட்டுக்கு போயிருக்காங்க. அனேகமா இங்க வருவாங்கான்னு நினைக்கிறேன்."

"சரி போலிஸ் கேட்டா, நீதான் வாங்கினே, ஆனா தொலைஞ்சு போச்சுன்னு சொல்லி சமாளி"

"ஆமாம் . அப்படியே நான் சொன்னா சரின்னு கேட்டுகிட்டு போய்டுவாங்க  பாரு . சொல்றதை சரியா சொல்லணும் . நீ என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. உடனே கிளம்பி இங்க வா. நேர்ல பேசியாகணும் உன்கிட்ட."

"நிலைமை புரியாம விளையாடறியே நீ."

"என் நிலைமையை பாரு. உனக்கு கார்ட் வாங்கி தந்தது மட்டும்தான் நான். ஆனால் இப்ப பிரச்சனை எனக்குதான். அதை கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டேங்கறியே நீ ."

இத்தனை நேரம் பொங்கி வந்துக்கொண்டிருந்த அழுகையை கட்டுபடுத்தி பேசிக்கொண்டிருந்த விஜி அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் அழத் துவங்கினாள்.

பெண்களின் கடைசி ஆயுதம் பிரயோகிக்கப் பட அதற்கு மேல் எந்த காரணமும் சொல்ல இயலாத ரமேஷ் , "சரி சரி அழாத. கொஞ்ச நேரத்தில வரேன். அங்க வந்துட்டு மறுபடியும் கூப்பிடறேன் " என்று சொன்னான் .

"ஏமாத்த மாட்டியே ? சீக்கிரம் வா " என்று கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்த வண்ணம் கூறி அழைப்பை துண்டித்தாள் விஜி.


அழைப்பு துண்டிக்கப்பட்டவுடன் குழப்பத்தில் ஆழ்ந்தான் ரமேஷ். இப்பொழுது அவளை சென்றுப் பார்ப்பதா இல்லை இருக்கும் ஆபத்தை சமாளிப்பதா என்று யோசிக்கத் துவங்கினான். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு , எப்படியும் அவளை பார்த்தாக வேண்டும் . போலிஸ் அவள் மூலம் நம்மை அணுகும் முன் இங்கிருந்து இடத்தையும் மாற்றியாக வேண்டும் . முதலில் காரை விட்டு வந்த  இடத்திற்கு சென்று அங்கிருக்கும் நிலையை ஆராய முடிவு செய்தான். பின் அடுத்து என்ன செய்வது என்ற முடிவுக்கு வருவோம் என்றெண்ணி நண்பனிடம் கடன் வாங்கி வந்திருந்த பைக்கை கிளப்பினான்.


காரை விட்ட இடத்திற்கு அருகில் வந்தவன் , அதன் எதிரே இருந்த டீக்கடையில் போலிஸ் இருப்பதை பார்த்துவிட்டு அங்கே நுழையாமல் அதன் அருகில் இருந்த ஒரு பொட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டு அதை பற்ற வைத்துக் கொண்டு டீக் கடையில் நடப்பவற்றை பார்க்க ஆரம்பித்தான்.

அங்கிருந்தவர்களை விசாரித்துக் கொண்டிருந்த சேகர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களையும் நோட்டம் விடுவதை பார்த்த ரமேஷ் மெதுவாக அங்கிருந்து கிளம்ப முயற்சித்தான்.

அவன் அங்கு வந்து நின்றது முதலே அவனை பார்த்துவிட்ட சேகர் , அவன் நழுவ முயன்றவுடனேயே துரத்திப் பிடித்தார்.


"சார் விடுங்க சார். எதுக்கு சார் என்னைப் பிடிக்கறீங்க ?"

"எதுக்கு இங்கிருந்து இவ்வளவு அவசரமா போகப் பார்த்த ?"

"எனக்கும் இதுக்கும் என்ன சார் சம்பந்தம்? போற வழில தம் அடிக்க நின்னேன். முடிச்சிட்டேன் . கிளம்பறேன். இங்க என்னப் பிரச்சனைன்னு கூட எனக்குத் தெரியாது. நான் எதுக்கு பயப் படனும்"

உள்ளுக்குள் பயமிருந்தாலும், வெளியே அதைக் காட்டாமல் மிகத் தெளிவாக உரத்து பேசினான்.

"உன் பேரு என்ன ?"

"ரமேஷ் "

"வண்டி யாருது ?"

"என் பிரெண்டோட வண்டி சார்."

"வண்டி ஆர் சி இருக்கா?"

"இருக்கு சார்."

 பெட்ரோல் டேங் மேலிருந்த கவரில் இருந்து ஆர்சி யை எடுத்துக் கொடுத்தான்

அதைப் பார்த்த சேகர் ,"சரி உன் பிரெண்ட கூட்டிகிட்டு வந்து வண்டியை ஸ்டேஷன்ல இருந்து எடுத்துக்க . இப்ப நீ கிளம்பு ."

"ஏன் சார் ? இப்ப என்ன பிரச்சனை ? எதுக்கு வண்டியை தரமாட்டேங்கறீங்க ?"

"வண்டி உன் பிரெண்டோட வண்டிதான?"

"ஆமாம்"

"அப்புறம் என்ன பிரச்சனை? அவனை கூட்டிகிட்டு வா . வண்டியை எடுத்துகிட்டு போலாம். "

இனி அவரிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று முடிவெடுத்த ரமேஷ் "சரி சார். அவனைக் கூட்டிகிட்டு வந்து வண்டியை எடுத்துக்கறேன்" என்று சொல்லி கிளம்ப எத்தனித்தான்.

"ரமேஷ் , ஒரு நிமிஷம் " என்று அவனை நிற்க சொன்ன சேகர் அங்கிருந்த கான்ஸ்டபிளை அழைத்தான்.

" இவரோட அட்ரஸ் அப்புறம் லைசென்சை வாங்கி வெச்சுகோங்க. அவர் பிரெண்டை கூட்டிகிட்டு வந்தப்புறம் விசாரிச்சிட்டு வண்டியை குடுங்க "

ஒரு வழியாய் அங்கிருந்து கிளம்பிய ரமேஷ் , உடனடியாய் விஜியை பார்க்க போவதா வேண்டாமா என்று யோசித்தான். தான் அங்கே செல்லும்பொழுது இந்த சேகர் அங்கு வந்தால் தான் வசமாக மாட்டிக் கொள்வோம் என்று நினைத்தான். எனவே இப்பொழுது தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எப்படி வெளியேறுவது என்ற வழியை முதலில் பார்ப்போம் என்று முடிவெடுத்தவனாய் தனக்கு தெரிந்த இன்னொரு நண்பனுக்கு அழைக்கத் துவங்கினான் . தன் நண்பனை அழைத்து காருக்கு ஏற்பாடு பண்ணியவன் மாலையில் வந்து காரை எடுத்துக் கொள்வதாகக் கூறினான்.

தாற்காலிகமாக அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த ரமேஷின் முகத்தில் தெரிந்த சோர்வை கண்ட சங்கர்

"என்னாச்சு ரமேஷ் ? எதாவது பிரச்சனையா ?"

"பிரச்சனையா ? நீ வேற . தப்பி வரதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன் . "

"என்னாச்சு ?"

"இவர் வீட்டுக்கு போன் பண்ணிட்டு , காரை விட்ட இடத்தில் நிலை எப்படி இருக்குதுன்னு பார்க்க போனேன் . இன்ஸ்பெக்டரிடம் மாட்டிக்கிட்டேன். எதோ சொல்லி தப்பிச்சிட்டேன்."

"சந்தேகப் படலையா ?"

"கொஞ்சம் சந்தேகம் இருக்கும்னு நினைக்கிறேன் ."

"எதுக்கும் ஈவ்னிங் இங்க இருந்து நாம கிளம்பிடறது நல்லது. "

"நைட் தான கிளம்பலாம்னு இருந்தோம்  "

"ஆமாம் . ஆனால் இங்க இருக்கறது அவ்ளோ நல்லது இல்லை. எவ்ளோ சீக்கிரம் கிளம்பரமோ அவ்ளோ நல்லது."

"சரி எந்த வழில இங்க இருந்து போகப் போறோம் ?"

"நீங்க ரெண்டு பேரும் இவரை கார்ல ஏத்திகிட்டு இங்க இருந்து அம்மாப்பேட்டை  வழியா அயோத்தியாபட்டினம் கேட்டுக்கு போய்டுங்க. அங்க இருந்து வலசையூர் போற வழி தெரியும்தானே ?"

"தெரியுமே . அங்க போய் ..."

"வலசையூர்ல இருந்து ஏற்காட்டுக்கு ஒரு வழி போகுது . அந்த ரூட் பிரச்சனை இருக்காது. பொதுவா அங்க எந்த செக் போஸ்ட்டும் இல்லை. அயோத்தியாப்பட்டினம் செக் போஸ்ட்ல எனக்குத் தெரிஞ்சு பத்துமணிக்கு மேலதான் போலிஸ் இருப்பாங்க,. அதுக்கு முன்னாடி நாம அதை க்ராஸ் பண்ணிடனும். உங்க கிட்ட காரை கொடுத்தப்புறம் நான் பஸ் பிடிச்சு ஏற்காடு வந்திடுவேன். உங்களுக்கு அந்த ரூட் தெரியும்தானே ?"

"ம்ம் தெரியும் ரெண்டு முறை போயிருக்கேன் ."

"அப்ப சரி. நான் மலைக்கு வந்தப்புறம் உங்களுக்கு கால் பண்றேன். "

- வியாபாரம் தொடரும் 

மே 09, 2011

வியாபாரம் 6


டென்சனில் என்ன பேசுவது என்றுப் புரியாமல் தவித்த விஜி , ஒரு வழியாய் எதோ ஒரு சமாதானம் சொல்லி அழைப்பை முடித்தாள். அதன் பின்னும் அவளுக்கு படப்படப்புக் குறையவில்லை என்பதை அவள் முகமே சொல்லியது . பின் எதோ நினைத்தவளாக , தன் அலைப்பேசியில் ஒரு எண்ணைத் தேடி அதற்கு அழைத்தாள். மறுமுனையில் அந்த எண் தொடர்புக் கொள்ளும் நிலையில் இல்லை என்ற மெசேஜ் வர சலிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள்.

சாதாரணமாக  செய்த உதவி தன்னை இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விடும் என்று அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. கோபம், பயம், குழப்பம் என்று அனைத்து உணர்ச்சிகளும் ஒரே சமயத்தில் கிட்டத் தட்ட அழுதுவிடுவது போல் இருந்தாள். அடுத்து என்ன செய்வது என்றுப் புரியாமல் குழம்பிய மனத்துடன் , எதிரே இருந்த பஸ்களைப் பார்த்தாவாறே நின்றிருந்தாள்

கண்ணின் ஓரத்தில் கண்ணீர்த் துளிகள் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்க அதே சமயத்தில் அவள் அலைபேசி அழைக்க அதில் இருந்த எண் புதிதாய் இருந்ததால் ஒரு கணம் யோசித்தாள். பின் அழைப்பை உயிர்ப்பிக்க மறுமுனையில் அவளுக்குப் பழக்கமானக் குரல் பேசத் துவங்கியது .

*****************************************************************************************************

"இன்னும் எவ்வளவு நேரம் நாம இங்க இருக்கணும் ?"

"இருட்டும் வரைக்கும் எங்கயும் போக முடியாது . சிட்டியை விட்டு எப்படி வெளிலப் போறதுன்னு முதல்ல யோசிக்கணும் . இருந்த காரும் ரிப்பேர் ஆகிடுச்சி."

"அதுக்குதான் ரமேஷ் போயிருக்கான். வேற கார் ஏற்பாடு பண்ணமுடியுமான்னு பார்த்துட்டு அப்படியே நாம அந்தக் காரை விட்டுட்டு வந்த இடத்தில் நிலைமை எப்படி இருக்குதுன்னு பார்க்கறேன்னு சொல்லி இருக்கான். "

"எப்ப வரேன்னு ஏதாவது சொன்னானா ?"

"போன் பண்றேன்னு சொல்லி இருக்கான்."

"ஹ்ம்ம் சரி . அவர் இன்னும் மயக்கதில்தானே இருக்கார்."

"ஆமாம். இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார்"

"அதுதான் நல்லது."

அதே நேரத்தில் செவ்வாய்ப்பேட்டை பஜாரில் ஸ்ரீனிவாச செட்டியார் காணமல் போன செய்தி வெளியே பரவ ஆரம்பிக்க , பஜார் முழுவதும் ஒருவித மெல்லியப் பரபரப்பு காணப்பட்டது. அவர்கள் குடும்பத்திற்கு நெருங்கியவர்கள், நேராக வீட்டிற்கு சென்று விசாரிக்கத் துவங்கினர். கிருஷ்ணனுக்கு போன் செய்ய நினைத்தவர்கள் அவன் காவல் துறையினரைப் பார்க்க சென்றிருக்கிறான் என்றவுடன் தங்கள் நினைப்பைக் கைவிட்டனர். இப்பொழுது போன் செய்தால் தங்களுக்கும் ஏதாவது பிரச்சனை வருமோ என்ற சுயநலத்தில் நழுவினர்.

********************************************************************************************************

கிருஷ்ணனிடம் அவருக்கு அழைப்பு வந்த எண்ணை வாங்கிய சேகர், அதை ஒரு நிமிடம் ஆராய்ந்தார். தனியார் தொலைப்பேசியின் எண் என்றுத் தெரிந்தது. ஒரு வேளை ஒரு ரூபாய் போட்டுப் பேசும் பொதுத் தொலைப்பேசியாய் இருக்குமோ என்று சந்தேகம். இருந்தாலும் எந்த ஏரியா என்பதுத் தெரிந்துவிடுமே என்று கண்ட்ரோல் ரூமுக்குத் தகவல் தந்து அந்த எண் எந்தப் பகுதியில் உள்ளது என்று விசாரிக்க சொன்னார். 


பின் அங்கிருந்த கான்ஸ்டபிளை அணுகியவர் , அந்தப் பகுதியைப் பற்றி விசாரிக்கத் துவங்கினார். அவரிடம் பேசியவாறே கார் இருந்தப் பகுதியை மீண்டும் பார்த்தவரின்  கண் புதிதாய் அங்கு எதையோ பார்த்தது போல் ஒரு நிமிடம் பிரகாசம் ஆனது. பின் அதைப் பார்த்தும் பார்க்காதவர் போல் எதிர்புறம் இருந்தக் கடைகளில் இருந்தவர்களை பார்த்தவர், மெதுவாக டீக்கடையை நோக்கி சென்றார். 

அவர் அங்கு நுழைந்ததுமே உள்ளிருந்தவர்களை ஒரு முறை பார்த்தவர் , போலீசைக் கண்டவுடன் வரும் சாதாரண பயமே அங்கிருந்தவர்கள் முகத்தில் இருப்பதைப் பார்த்து பின் கடை உரிமையாளரிடம் விசாரிக்கத் துவங்கினார். விசாரிக்கும் பொழுதே அவர் கண்கள் அக்கம் பக்கக் கடைகளிலும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது. 


இவர் பார்ப்பதைப் பார்த்தவுடன் , அங்கிருந்து ஒருவன் மெதுவாக நழுவ முற்பட்டான். அதைக் கண்ட அவர் , உடனடியாக அவனை நோக்கி விரைந்தார். 


- வியாபாரம் தொடர்ந்து நடக்கும்

மே 08, 2011

பயோடேட்டா அ(ட) ப்பாவி தங்கமணி

பெயர்                                : அப்பாவி தங்கமணி
இயற்பெயர்                       : புவனி 
தலைவி                              : குடும்பம் மற்றும் அவரது வலைப்பூவுக்கு 
துணைத்  தலைவர்            : எப்பவும் தலைவிதான்  
மேலும்
துணைத் தலைவர்கள் 
       : திரு கோவிந்த்

தொழில்                             : கதை எழுதுகிறேன் என்று தமிழ் வலைப்பூ வாசகர்களை படுத்துதல் 
பலம்                          :  அப்பாவி என்று பெயருக்கு முன் சேர்த்துக்கொண்டது 
பலவீனம்                     :  நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் உளறிக் கொட்டி மாட்டிக்கொள்வது 
நீண்ட கால சாதனைகள் :ரமணி சந்திரனின் பதிவுலக ஜெராக்ஸ் என்று அனைவரும் நம்புவது
சமீபத்திய சாதனைகள்   : வலைச்சர ஆசிரியராக இருந்தது
நீண்ட கால எரிச்சல்        :
ஐவர் பேரவை
சமீபத்திய எரிச்சல்         : ஐவர் பேரவை விரிவாக போவதை எண்ணி 
மக்கள்                            : பின்னூட்டம் போடுபவர்கள் மட்டும் 

நண்பர்கள்                       : எப்படி கதை எழுதினாலும் படிப்பவர்கள்

எதிரிகள்                          : எல்கே, அனாமிகா ,போர்க்கொடி, ப்ரியா அக்கா இன்னும் சிலர்
ஆசை                              : ரமணி சந்திரன் மாதிரி இதழ்களில் கதை எழுத
நிராசை                            : என்ன செய்தாலும் இட்லி சரியாமல் இருப்பது 
பாராட்டுக்குரியது           : அப்படி ஏதாவது இருக்கா ??
பயம்                               :  ஜில்லுனு ஒரு காதலை எப்படி முடிப்பது ???
கோபம்                           : அப்படினா ??
காணாமல் போனவை     : கடந்த செவ்வாய் அன்று போட வேண்டிய பதிவு


அன்புடன் எல்கே

மே 06, 2011

வியாபாரம் 5


பகல் நேரம் என்பதால் கணேஷ் மியூசிக் ஸ்டோரில் அதிகம் கூட்டம் இல்லை. , இரண்டு கஸ்டமர்கள் மட்டுமே உள்ளே இருந்தனர்.  டிவிடி ப்ளேயரில் எஸ்பிபி இளையராஜாவின் இசையில் தேனாய் குழைந்துக் கொண்டிருக்க , இருந்த இரண்டு வாடிக்கையாளர்களையும் வேறு ஒருப் பெண் கவனித்துக் கொண்டிருக்க , மீதம் இருந்த விஜியும், மற்றொரு பெண்ணும் அரட்டையில் மும்முரமாக இருந்தனர்.


எஸ்பிபியின் தேனோசையை குலைக்கும் விதமாக மொபைல் ஒன்று அலறத் துவங்கியது. கையிலே வைத்திருந்த போன் அலறத் துவங்கியவுடன் , நம்பரைப் பார்த்த விஜி, கேஷ் வாங்கும் இடத்தில் மேலாளர் போல் இருந்தவரிடம் சொல்லிவிட்டு , அழைப்பை உயிர்ப்பித்துக் கொண்டே கடையில் இருந்து வெளியே சென்று பேசத் துவங்கினாள்.


விஜி கொஞ்சம் கறுப்பென்றாலும் , பார்ப்பவரை தன் பக்கம் ஈர்க்கும் கறுப்பென்றே சொல்லலாம். இது கருமை நிறத்துக்கே உரிய விசேஷமாகும். இருபது வயதுக்கே உண்டான துடுக்குத் தனத்துடன் கொஞ்சம் வாயும் அதிகம். இது அவளைப் பற்றி அவளை சுற்றியுள்ளோரின் கணிப்பு . 


பள்ளிப்படிப்புக்கே குட்டிகர்ணம் அடித்ததால் , மேற்கொண்டுப் படிக்காமல், புத்தகத்துக்கு விடைகொடுத்தவள் விஜி. 

வீட்டில் வெட்டியாய் இருப்பதை விட, வேலைக்கு சென்றால் காசும் கிடைக்கும் பொழுதும் கழியும் என்றெண்ணி , முதலில் சிலக் கடைகளில் வேலை செய்தாள். அவை அவளுக்கு ஒத்து வராததால், ஒரு வருடத்திற்கு முன்பு இந்தக் கடையில் தன் தோழியின் மூலம் வேலைக்கு சேர்ந்தாள். இங்கு இடுப்பொடிக்கும் அளவிற்கு வேலை இல்லாததாலும், அவளுக்குப் பிடித்தப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதாலும் அங்கிருந்து விலகவில்லை. 

அந்த நேரத்தில் தன் வீட்டில் இருந்து எதற்கு போன் வரவேண்டும் என்று யோசித்துக் கொண்டே பேசத் துவங்கினாள். மறுமுனையில் அவள் தந்தை கோபத்துடன் திட்ட ஆரம்பிக்க, முதலில் இவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. பின் நடந்தவை முழுவதும் அவர் சொல்ல, பின்தான் அவளுக்கு முழுவதும் விளங்கியது. அவர் மறுமுனையில் பேச பேச இங்கு விஜிக்கு பயத்தில் நாக்கு உலர்ந்த, முகத்தில் வேர்வை முத்துக்கள் பூக்கத் துவங்கின. 

சேகர் காரை நெருங்கவும், கிருஷ்ணன் தனதுக் காரில் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. 

"சார் , இந்தக் கார் உங்களதுதானே ?"

"ஆமாம் சார். எங்கக் கார்தான். இங்க எப்படி சார்? டிரைவர் எங்க சார் ?"

"விடியற்காலையில்  காரை இங்க யாரோக் கொண்டுவந்து நிறுத்திவிட்டு போயிருக்காங்க. யார் அதை பண்ணினது என்றுத் தெரியலை. டிரைவரைப் பத்தியும் எந்தத் தகவலும் இல்லை. ஒண்ணா டிரைவரே உங்கப்பாவை எங்கையோ கடத்தி வெச்சிருக்கணும் இல்லை டிரைவரையும் சேர்த்து யாரோக் கடத்தியிருக்கணும். இதுல எது நடந்திருக்குன்னுதான் தெரியலை ."

"சரி உங்களுக்கு ஏதாவது அழைப்பு வந்துச்சா ?"

"இதுவரைக்கும் எதுவும் வரலை சார். " 

கிருஷ்ணன் சொல்லி முடிக்கவும் , அவரது அலைபேசி சிணுங்கத் துவங்க, அதை எடுத்து நம்பரைப் பார்த்தக் கிருஷ்ணன் , சேகரிடம் 

"எதோ புதிய நம்பரா இருக்கு சார் "

"போனை அட்டென்ட் பண்ணுங்க . உங்க நம்பருக்கு வரும்  கால்ஸ் எல்லாத்தையும் ட்ரேஸ் பண்ண சொல்லியிருக்கேன்."

அழைப்பை உயிர்ப்பித்து பேசத் துவங்கிய கிருஷ்ணன் முகத்தில் கவலை ரேகைகள் விழத் துவங்கின. நெற்றியில் வியர்வை ஓடத் துவங்க , இதயத் துடிப்பு அதிகரிக்கத் துவங்கியது .

இரண்டு  நிமிடமே நீடித்த அந்த அழைப்பு முடிந்தவுடன் ,

"யாருங்க கிருஷ்ணன் ? ஏன் உங்க முகம் இப்படி இருக்கு ?"


"யார்னு தெரியலை சார் . பேரு சொல்லலை. இப்ப அப்பா அவங்கக் கிட்டத்தான் இருக்காராம். அவர் உயிரோட வேணும்னா காசு வேணும்னு சொல்றாங்க ."

"எவ்வளவு கேக்கறாங்க ?"

"ஐம்பது லட்சம் ."

"மை குட்னஸ். பேசின குரல் உங்களுக்கு தெரிஞ்ச குரலா இருக்கா ?"

"தெரியலை சார். அந்த டென்சன்ல என்னால ஒன்னும் கவனிக்க முடியலை ." என்று சொன்னக் கிருஷ்ணனின் குரலில் இன்னமும் படப்படப்பு இருந்தது. 

"எந்த நம்பர்ல இருந்த கால் வந்துச்சு? அந்த நம்பரை சொல்லுங்க ."

கிருஷ்ணன் சொன்ன நம்பரை குறித்துக் கொண்ட சேகர், தன் வண்டியில் சொருகி வைத்திருந்த வயர்லஸ் போனை எடுத்து அதில் கண்ட்ரோல் ரூமை அழைத்தான். 


-வியாபாரம் தொடரும் 

பி கு : அடுத்தப் பகுதி ஞாயிறு அன்று வரும் 

அன்புடன் எல்கே

மே 03, 2011

வியாபாரம் 4

போலிப்பெயரில் அந்த கார்ட் வாங்கப் பட்டிருக்கும் என்று முன்னமே தெரிந்திருந்தாலும் , அங்கு கிடைத்த தகவல்கள் இந்த வழக்கில் இன்னும் சிலர் சம்பந்தப் பட்டிருப்பரோ என்று எண்ணத்தூண்டியது .

முகவரியில் குறிப்பிடப்பட்டிருந்த வீட்டை அணுகி , கதவைத் தட்டிவிட்டுக் காத்திருந்தான். சில நொடிகள் காத்திருத்தலுக்குப் பிறகு , நாற்பது வயதை ஒட்டியப் பெண்மணி ஒருவர் கதவைத் திறந்தார்.  காவல்துறைக்கே உரிய காக்கி உடையில் வராமல் சாதாரண உடையில் சேகர் வந்ததால் 

"யாருங்க ? யார் வேணும் உங்களுக்கு ?

" முத்து யாருங்க இங்க ."

"என் வீட்டுக்காரர்தான். நீங்க யாரு ? உங்களுக்கு என்ன வேணும் ?"

 நான் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்ல இருந்துவரேன். இப்ப சமீபத்தில் அவர் எதவாது மொபைல் கார்டு வாங்கினாரா ?

"எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. அவர் உள்ளதான் இருக்கார் . அவர்கிட்டயே கேட்டுகோங்க "

"ஏங்க கொஞ்சம் வாங்க " என்றுத் தன் கணவரை அழைத்தவாறே சேகரையும் உள்ளே வரசொன்னாள்.

"நீங்கதான் முத்துவா ?"

"ஆமா சார். என்ன விஷயம் ?"

"இப்ப சமீபத்தில எதவாது சிம் கார்ட் வாங்கினீங்களா ?"

" ஏன் சார் என்னாச்சு ?"

"கேட்டதுக்கு பதில் சொல்லுங்க "

"இல்லீங்களே . நான் ஒரு வருசத்துக்கு முன்னாடி வாங்கினேன் . அதுக்கப்புறம் எதுவும் நான் வாங்கலயே சார் ."

"அப்ப இந்த நம்பர் யாருது ? இந்த நம்பர் உங்க பேர்லதான் வாங்கி இருக்காங்க ?" என்று சொல்லி அந்த நம்பரை சொன்னான் .

"இல்லீங்களே . நான் எதுவும் இப்ப கார்ட் வாங்கலயே ."

"வேற யாருக்காவது வாங்கித் தந்தீங்களா ?"

"என் பொண்ணுதான் கார்ட் வாங்கனும்னு சொன்னா. ஆனா இந்த நம்பர் அவளோட நம்பர் இல்லையே ?"

"உங்க பொண்ணுக்கு நீங்க வாங்கிக் கொடுத்தீங்களா இல்லை வெறும் டாக்குமென்ட் மட்டும் கொடுத்தீங்களா ?"

"எதோ அட்ரஸ் ப்ரூப் வேணும்னு ரேஷன் கார்டு வாங்கிட்டு போச்சுங்க "

"உங்க பொண்ணு இப்ப எங்க ? வீட்ல இருந்தா கூப்பிடுங்க."

"இல்லீங்க வேலைக்கு போயிருக்கு . "

"எங்க வேலை செய்யறாங்க? அந்த அட்ரஸ் கொடுங்க ?"

"டவுன் பஸ் ஸ்டேன்ட்ல காம்ப்ளக்ஸ்ல கணேஷ் ம்யூசிக் ஸ்டோர்ல வேலை செய்யுதுங்க."

"உங்க பொண்ணு பேரு என்ன ? "

"விஜி "

"சரி நான் அங்க போய் விசாரிச்சுக்கறேன் "

"சார் எதாவது பிரச்சனையா ?"

"ஆமாம். உங்க பொண்ணு உங்க பேர்ல வேற ஒருத்தருக்கு சிம் கார்ட் வாங்கி தந்திருக்கு . அந்த ஆளை இப்ப வேற ஒரு கேஸ் விஷயமா தேடிகிட்டு இருக்கோம் ."

"என் பொண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் வராதே ?"

"அது உங்க பொண்ணு சொல்ற விஷயத்தை பொறுத்து இருக்கு . தேவைப்பட்டா  மறுபடியும் வரேன். "

அங்கிருந்து கிளம்பிய சேகர் பழைய பஸ் ஸ்டேண்டை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான். குகைப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது அவனது அலைபேசி மீண்டும் அலறத் துவங்கியது. 

"அப்படியா ?"

"பத்து நிமிஷத்தில் அங்க இருப்பேன் " என்று சொல்லியவாறே வண்டியைத் திருப்பியவன் எதோ நினைத்தவனாக வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி , முதல் நாள் தான் குறித்துக் கொண்ட கிருஷ்ணனின் எண்ணுக்கு அழைத்து உடனே கிளம்பி உடையாப்பட்டி பை பாஸில் இருந்து சீலநாயக்கன்பட்டி பை பாஸ் செல்லும் ரோட்டில் ஒரு இடத்தை சொல்லி அங்கு வருமாறு சொல்லிப் பின் தன் வண்டியை அங்கே விரட்டினான்.


 பதினைந்து நிமிடம் கழித்து அந்த இடத்திற்கு சென்றவன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே தன் வண்டியை நிறுத்தினான். பின் காரின் அருகே சென்று அதைப் பார்த்தவரே அங்கிருந்த காவல் துறையினரிடம் விசாரிக்க ஆரம்பித்தான்.

"எப்ப இருந்து இந்த கார் இங்க நிக்குது ? யார் முதலில் பார்த்தது ?"

"நேத்து நைட் ரெண்டு மணி வரைக்கும் இந்த கார் இங்க இல்லை சார் . அதுக்கு அப்புறம்தான் கொண்டுவந்து நிறுத்தி இருக்கணும்."

"அதெப்படி அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க ?"

"நைட் ரெண்டு மணிக்கு ஹைவே ரோந்து போலிஸ் வருவாங்க சார். அவங்க கண்ணில் பட்டிருந்தா அப்பவே விஷாரிச்சிருப்பங்க. "

"கார் லாக் ஆகி இருக்கா?"

"இல்லை சார். வண்டி சாவிக் கூட உள்ளதான் இருக்கு."

"யார் ரிப்போர்ட் பண்ணது?"

"எதிர்ல இருக்கற டீக்கடைக்காரர் தான் சொன்னார்."

"சரி வாங்க. கார் ஓனருக்கு சொல்லியிருக்கேன். அவர்  வரதுக்கு முன்னாடி அந்த டீக்கடைக்காரரை விஷாரிச்சிட்டு வருவோம் ."

"இந்தக் காரை எப்ப பார்த்த?"

"எப்பவும் காலையில் அஞ்சு மணிக்கு கடையை திறப்பேன். அப்பவே இந்தக் கார் இங்கதான் இருந்தது சார் "

"எத்தனை மணிக்கு போலிசுக்கு சொன்ன ?"

"இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ."

"ஏன் இவ்ளோ லேட் பண்ண ?"

"சில சமயம் யாரவது கார் ரிப்பேர் ஆகி இருந்தாலும் , இங்க விட்டுட்டு போயிட்டு காலையில் ஆளக் கூட்டிகிட்டு வந்து சரி பண்ணி எடுத்துக்கிட்டுப் போவாங்க. அந்த மாதிரி ஏதாவது இருக்கும்னுதான் சொல்லலைங்க. ரொம்ப நேரம் ஆகியும் யாரும் வரலை. அதான் போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணேன் ."

"சரி "

"கார் உள்ள தேடித் பார்த்தியா ?"

"இல்லை சார். உங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தேன் "

"சரி வா. உள்ள எதவாது இன்பார்மேஷன் கிடைக்குதான்னு பார்ப்போம் "
என்றவாறே காரை நோக்கி சேகர் போகவும், மற்றொரு காரில் கிருஷ்ணன் வந்திறங்கவும் சரியாக இருந்தது . 

- வியாபாரம் தொடரும் 

மே 02, 2011

கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே

தெருவோரத்தில் உண்டு, உறங்கியபடி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்ஜி., கல்லூரிகளில் படிக்கின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே படிக்கும் இம்மாணவர்கள் படிப்பைத் தொடர, உதவும் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பேரூர், செட்டிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்டது ஆறுமுகக்கவுண்டனூர். இங்கு நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள், படிப்பை தொடர நிதியின்றி பரிதவிக்கின்றனர்.

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பார்த்திபன், இந்துஸ்தான் கல்லூரியில் எம்.சி.ஏ., முதலாமாண்டு படிக்கிறார்; 83 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ள இவர் படிப்பதும், உறங்குவதும் தெருவில் தான்.சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் குடிசையில் இருந்த பொருட்கள் அடித்துச் செல்லப்பட, இரவில் ரோட்டோரத்தில் படுத்து இவரது குடும்பத்தினர் உறங்குகின்றனர். ஒரு முறை கல்லூரி பாடப் புத்தகங்களும் மழைவெள்ளத்தில் நனைந்து நாசமான சம்பவமும் நடந்திருக்கிறது. இரவு 12.00 மணிக்கு கடைகள் அடைக்கப்பட்டு, வாகனப்போக்குவரத்து குறைந்தபின்னர் பேரூர் ரோட்டோரங்களில் படுத்து உறங்குகின்றனர். பார்த்திபன் பி.சி.ஏ., பட்டப்படிப்பையும் தனியார் கல்லூரியில் முடித்திருக்கிறார். ஆனால், முதல் பட்டதாரிக்கான கல்வி உதவித்தொகை உட்பட எந்த கல்வி உதவித்தொகையும் இவருக்கு கிடைக்கவில்லை. படிப் பதற்கு புத்தகங்கள் வாங்க பணம் இல்லாததால், கல்லூரி நூலகத்தை பயன்படுத்திக் கொள்கிறார். எம்.சி. ஏ., படித்த போதும், லேப்டாப் இல்லை. இரவில் அண்டை வீடுகளில் கேட்டு, வாசலில் உள்ள மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கிறார். வங்கியில் கல்விக்கடன் வழங்கப்படுகிறது; ஆயினும் 1.7 லட்Œம் செலவாகி உள்ள நிலையில் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே கடனாக கிடைத்திருக்கிறது.

அதேபோன்று, மதன் என்ற மற்றொரு நரிக்குறவர் இன மாணவர், இன்டஸ் இன்ஜி., கல்லூரியில் பி.டெக்., தகவல் தொழில்நுட்பம் முதலாமாண்டு பயின்று வருகிறார். கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்திருக்கிறது. இவ ரும் கல்விக்கடன் பெற்றுள்ளார். இதுவரை, 56 ஆயிரம் ரூபாய் செலவாகி இருக்க, 26 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒரு ஆறுதலாக, முதல்பட்டதாரிக்கான உதவித்தொகை இவருக்கு வழங்கப்படுகிறது. இவரும், தெருவில் படுத்துறங்கி பக்கத்து வீட்டுவாசலில் உள்ள மின்விளக்குகள் மூலமே படித்து வருகிறார். கல்லூரி பஸ்சுக்கு ஆண்டுக்கு 5,000 ரூபாய்; கல்விக்கட்டணமாக 15,000 ரூபாய் செலவு ஏற்படுதாக கூறும் இவருக்கு "லேப்டாப்' இல்லை.நல்ல உடை இல்லை; கட்டாயம் ஷூ அணிந்து செல்ல வேண்டும், புத்தகங்களை நூலகத்தில் எடுத்து மட்டுமே படிக்க முடியும் என்ற போதும் மனம்தளராமல் படித்து வருகின்றனர். இருவருமே பிளஸ் 2வரை தமிழ்வழியில் படித்தவர்கள் என்பதால், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள, பயிற்சி வகுப்புக்குச் செல்ல விரும்புகின்றனர். கட்டணம் செலுத்த முடியாததால்செல்லவில்லை. தெருவில் உறங்கி தெருவிலேயே படிப்பதை விட, விடுதியில் தங்கிப் படிப்பது போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களால் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். பெற்றோர் ஊசி, பாசி விற்பதன் மூலம் ஈட்டும் வருவாய் அவர்களின் உணவுக்கே போதாத நிலையில், கல்விக்கு கூடுதலாக செலவிட நினைப்பது சிரமமே. சமூக, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய இரு மாணவர்கள், சுயமாக முன்னேறி இருக்கின்றனர். உதவும் உள்ளங்கள் 97506 70733 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

அன்புடன் எல்கே