ஆகஸ்ட் 07, 2016

மாறும் மனம்-2

என்னதான் இணை பிரியா நட்புகள் இருந்தாலும், பெற்ற தாயின் தோளில் சாய்ந்து  ஆறுதல் தேடுவது போல் வராது என்பதற்கு ஏற்ப, தாயிடம் பேசியதில் மனதில் இருந்த பாரம்  கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது. பின் குளித்து சாப்பிடவளின் மனதில் வெளியே சென்றால் இன்னும் கொஞ்சம் பாரம் குறையுமோ எனத் தோன்ற வெளியே செல்லத் தயாரானாள்.


வழக்கம் போல் கொஞ்சமாய் பவுடர் பூசி குங்குமம் வைத்தவளின் கை அனிச்சையாய் மீண்டும் கொஞ்சம் குங்குமத்தை எடுத்து வகிட்டில் இட செல்ல , கொஞ்சம் நேரம் அடங்கியிருந்த அவள் மனம் மீண்டும் விழித்துக் கொண்டது. அவளுக்குள் ஒரு சிறியப் போராட்டம் துவங்கியது. தான் வகிட்டில் போட்டு வைக்கலாமா வேண்டாமா ? வைப்பது சரியா தவறா . குழப்பத்தில் எடுத்த குங்குமத்தை மீண்டும் சிமிழில் வைத்தவள், அப்படியே அமர்ந்தாள்.


விஜயை வீட்டுக்கு அழைத்து வந்த வெங்கட் , அவனை விரட்டிக் கொண்டிருந்தான்.

"சொல்றதை கேளுடா !! இங்க வீட்டுக்குள்ள  உக்காரவா அங்க இருந்து கூட்டிகிட்டு வந்தேன் "

"ஒழுங்கா கிளம்பு !! கொஞ்சம் நால் ரோடு , பஸ் ஸ்டேண்ட்  எல்லாம் சுத்திட்டு வரலாம் . அப்படியே பசங்களையும்  பார்க்கலாம். . நீ இங்க வந்து ரொம்ப நாளாச்சு. "

"ஓகே ஓகே ! அரைமணி நேரம் டைம் குடு ! ரெடி ஆகிடுவேன் "

ஒரு வழியாய் மனப் போராட்டத்தை அடக்கியவள் , திருமணத்திற்கு பின் முதல் முறையாய் வகிட்டில் குங்குமம் இல்லாமல் வெளியே செல்லத் தயாரானாள். வெளியே வந்தவள் எங்கே செல்வது என யோசிக்கத் துவங்கினாள்...

பின் தீர்மானத்திற்கு வந்தவளாய் , ஜங்க்ஷன் பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் பேருந்து முன்னே செல்லத் துவங்க, இவள் நினைவுகள் பின்னே செல்லத் துவங்கின.

-தொடரும்