ஜூலை 31, 2016

மாறும் மனம் -1

 மாறும் மனம் - 1

வழக்கமான வாரயிறுதி போல் மனிதத் தலைகளால் நிரம்பி வழிந்தது மெரீனா. நண்பர் பட்டாளங்களுடன் வந்து கும்மாளமிட்டுக் கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளம்

தோழிகளுடன் வந்து அலையடிக்கும் இடத்தில் நின்று பெரும் அலை வரும் பொழுதெல்லாம் கூச்சல் எழுப்பி உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் இளம் பெண்கள் ஒரு புறம்

குழந்தைகளை அலையருகில் செல்லவிடாமல் போராடிக் கொண்டிருக்கும் கணவன் மனைவி ஒருபுறம், இவையெல்லாம் போக இந்தக் கூட்டத்தையும் சப்தத்தையும் பொருட்படுத்தாமல் காமத்தில் மூழ்கி இருக்கும் ஜோடிகள் ஒருபுறம் எனக் கலவையாய் அனைவருக்கும் இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டிருந்த மெரினாவில் , முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் விட்டேத்தியாய் கடலை வெறித்துக் கொண்டிருந்தான் விஜய்.

பளிச்சென்று சவரம் செய்த முகம்.மங்கத் துவங்கியிருந்த டீ ஷர்ட், வெளுத்துப் போன ஜீன்ஸ். கழட்டி விடப்பட்டிருந்த செருப்பு. முப்பதுக்கு மேல் சொல்ல முடியாத தோற்றம். ஆனால் முகத்தில் தீர்க்க இயலாத சோகத்தின் ரேகைகள் படர்ந்திருக்க , எதையோ நினைத்துக் கொண்டிருந்தவனை இவ்வுலகிற்கு இழுத்து வந்தது அலைப்பேசியின் அழைப்பு மணி.

விஜய்... ?”

எஸ் .. சொல்லு வெங்கட் ..”

என்ன சொல்ல . நானும் உன்னை சேலத்துக்கு வந்து கொஞ்ச நாள் ரெஸ்ட்ல இருன்னு, கூப்ட்டுகிட்டே இருக்கேன் . ஆனால் நீதான் எதுவும் பதில் சொல்ல மாட்டேங்கற ?
அங்க வந்தா  என்ன ஆகப் போகுது ? நடந்தது கனவாகப் போகுதா என்ன ?”

இடம் மாறினா மனம் மாறும் . அட்லீஸ்ட் ஒரு வாரமாவது வாயேன் ?”

சரி நான் ஆபிஸ்ல பேசிட்டு சொல்றேன்

குட்.சீக்கிரம் சொல்லு. “

வெங்கட், விஜயின் நெருங்கிய நண்பன். அதற்கும் மேல் அவனின் மைத்துனன். அப்படி என்ன விஜய்க்கு சோகம்.. மீள முடியாத சோகம்தான் . திருமணம் ஆகி நான்கு வருடங்களில் கட்டிய மனைவியையும் தங்க விக்ரகம் போன்றக் குழந்தையையும் ஒரு சேர பேருந்து விபத்தில் பறிகொடுத்தால் அந்த சோகத்திலிருந்து மீள இயலுமா ?

அத்தகைய சோகத்தில் இருந்த விஜயை மீண்டும் பழைய விஜயாக மாற்ற வெங்கட் முயன்றுக் கொண்டிருந்தான். விபத்து நடந்து ஆறு மாத காலம் ஆனாலும் இன்னும் பழைய நினைவுகளில் இருந்து விடுபட மறுத்து மனைவியின் நினைவுகளிலேயே சுற்றிக் கொண்டிருந்தான் விஜய். அலுவலகம் செல்வது நண்பர்களுடன் வெளியே செல்வது என இருந்தாலும் அவன் மனம் அவற்றில் முழுதாய் லயிக்கவில்லை.

பல முறை வெங்கட் கூப்பிட்டும் மறுத்திருந்த விஜய், இம்முறை ஏனோ சேலம் செல்ல முடிவெடுத்தான்.

வெங்கட்டுடன் பேசிய வாரத்திற்கு அடுத்த வெள்ளி இரவு , சேலம் செல்லும் ஏற்காடு எக்ஸ்ப்ரஸ் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் அசுவாரசியமாய் எதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவனின் நினைவுகள், திருமணமானப் புதிதில் மனைவி கவிதாவுடன் சேலம் சென்றதை அசைப் போட்டுக் கொண்டிருந்தன.

இதேப் போன்ற இரண்டாம் வகுப்புப் பெட்டியின் சைட்பெர்த்தில் விடிய விடிய இருவரும் அரட்டை அடித்துக் கொண்டு சென்றது நினைவுக்கு வர அனிச்சையாய் அவன் கண்களில் கண்ணீர். மற்றவர் பார்க்கும் முன் அதை துடைத்தவன், நினைவை மாற்ற எண்ணி,இரவு பத்து மணிக்கும் களேபரமாய் இருந்த சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைபாதைகளை மேயத் துவங்கினான். சிறிது நேரத்தில் ரயில் நகரத் துவங்க மற்றப் பயணிகளின் தூக்கம் இவனையும் தொற்றிக் கொண்டது.

அதிகாலை நேரத்தில் சேலம் ரயில் நிலையத்தில் இறங்கியவனை வரவேற்க வெங்கட் காத்திருந்தான். வெங்கட்டைக் கண்டவுடன் கொஞ்சம் உற்சாகம் அடைந்த விஜய், இன்னும் சற்று நேரத்தில் அவன் வாழ்வே மீண்டும் தடம் மாறப் போவதை அறியாமல் மகிழ்ச்சியுடனேயே பெட்டியில் இருந்து இறங்கினான்.

அவன் வந்திறங்கிய அதே ஏற்காடு எக்ஸ்ப்ரஸின் மற்றொரு பெட்டியில் இருந்து அவள் இறங்கினாள். தன்னை வரவேற்க யாரும் வரமாட்டார்கள் என்று அறிந்தவளாய் பெட்டியில் இருந்து இறங்கிய வேகத்தில் நுழைவு வாயிலை நோக்கி நடந்தாள்.

நடைமேடையில் இருந்த காபிக் கடையில் பேப்பர் கப்பில் ஒரு காபியில் வாங்கிக் கொண்டு திரும்பியவளின் கண்களில் விஜய் தென்பட, அனிச்சையாய் அவன் கூட வருவது யார் என அவள் கண்கள் தேட ஆரம்பித்தன. விஜய்யுடன் அவன் நண்பனை தவிர வேறு யாரையும் காணாத அவள் யோசனையுடன் , வந்துக் கொண்டிருந்த விஜயை மீண்டும் பார்த்தாள்

சிறிது தாடியுடன் , வழக்கத்திற்கு மாறாய் பொருந்தாத உடையுடனும் இருந்த விஜயை அங்கே சந்திக்க அவளுக்கு விருப்பமில்லை. சில நொடி யோசனைக்குப் பிறகு , கடையை நோக்கி திரும்பிக் கொண்டாள் ரூபிகா.

ரூபிகா இருப்பதையோ இல்லை அவள் தன்னைப் பார்ப்பதையோ கவனிக்காத விஜய் வெங்கட்டுடன் பேசியவாறு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறினான்.

வீட்டில் நுழைந்தவுடன் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்றெண்ணிக் கொண்டிருந்த ரூபிகாவிற்கு, வீடு அமைதியாய் இருந்தது ஆச்சர்யத்தை அளித்தது. எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசும் தங்கையும், ஒவ்வொருமுறை இங்கு வரும்பொழுதும் திட்டும் அம்மாவும்கூட வாய்மூடி மவுனமாய் இருந்ததைக் கண்டு அவளுக்கு திகைப்புத்தான் வந்தது. பின் அவர்களாய் கேட்கும் வரை தான் எதுவும் பேசுவதில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

சராசரியான உயரம், அடர்ந்த நீளமானக் கூந்தல் , யாரும் ஒரு கணம் நின்று பார்க்கக் கூடிய முகம், ரொம்பவம் சதைப் பற்றில்லாத அதே சமயம் ஒல்லி என்று சொல்லவும் இயலாத தேகம் இதுதான் ரூபிகா.

அவள் தங்கையும் அப்பாவும் வேலைக்குக் கிளம்பும் வரை மவுனம் காத்த அவளது அம்மா இவளை பலக் கேள்விகளோடு பார்க்க , இவளின் பலகீனமான புன்னகை, பல விஷயங்களை அந்தத் தாய்க்கு உணர்த்தியது.

அப்படின்னா ...?” துவங்கியக் கேள்வியை முடிக்க இயலவில்லை அந்தத் தாய்.
எல்லாம் முடிஞ்சு போச்சுமா . இனி நான் யாரோ அவன் யாரோ

கோர்ட் ஆர்டர் வந்தாச்சு. இனி நான் என் இஷ்டப்படி இருக்கலாம். அதான் கிளம்பி வந்துட்டேன்.”

அவளது அம்மா மெல்லிய விசும்பலுடன் அழத் துவங்க, அது வரை சோகத்தை அதிகம் வெளிக்காட்டாமல் பேசிய ரூபிகாவின் கண்களும் கலங்கத் துவங்கின.

எவ்வளவு நாளைக்குமா பொறுத்துகிட்டு இருக்கறது ? ஏற்கனவே சொன்னதுதானே , இதென்ன புதுசா, எதுக்கு இப்ப அழுகற ?”

என்னடி இப்படி சொல்ற ?? எல்லாம் முடிஞ்சு போச்சுனா? இனி உன் வாழ்க்கை ??”

“ஏன்மா இன்னும் அப்படியே இருக்க? அவன் இல்லாட்டி வாழ்க்கை அவ்ளோதானா? நான் படிச்சு வாங்கின டிகிரி இருக்கு...என்ன கொஞ்சம் டச் இல்லை .. மறுபடியும் படிக்கணும்... எத்தனையோ வேலை  இருக்கு .. “

“வேலைக்கு போனோமா சம்பாதிச்சமா நிம்மதியா இருக்கலாம்.. ஆனால் கொஞ்சம் டைம் வேணும். அதான் இங்க ஒரு மாசம் இருக்கலாம்னு  வந்தேன் “

“இருக்கலாமா ???”

அம்மாவின் கரங்கள் அணிச்சையாய் ரூபிகாவின் கைகளை பிடித்து அழுத்த, அவளின் மணிக்கட்டில்  விழுந்தது ரூபிகாவின் கண்ணீரா இல்லை தன்னுடையதா என அந்தத் தாய்க்குத் தெரியவில்லை.

-தொடரும்


அன்புடன் எல்கே

8 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

நல்ல ஆரம்பம். முடிக்கும்வரை தொடரவும்!!!!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதோர் ஆரம்பம்....

//முடிக்கும்வரை தொடரவும்// - ஸ்ரீராம்! :)))

துளசி கோபால் சொன்னது…

தொடர்கிறேன். இப்ப கருத்து ஒன்னும் சொல்றதுக்கில்லை. ஆரம்பம்தானே!

அப்பாவி தங்கமணி சொன்னது…

ஆரம்பமே அசத்தல், சூப்பர்ர்ர்ர்... அடுத்த எபிசோட் எப்போ? BTW, கேரக்டர்ஸ் பேர் செலக்சன் சூப்பர்

அப்பாவி தங்கமணி சொன்னது…

-

பரிவை சே.குமார் சொன்னது…

தொடர்கிறேன் அண்ணா...
தொடர்ந்து எழுதுங்கள்...

கோலா பூரி. சொன்னது…

inga commend poka matenguthe. ennmo kelvilam kekuthu...any way romba nall kazichu ezutha vanththu santhosham... nanunb blog paru mathiruken..))

கோலா பூரி. சொன்னது…

inga commend poka matenguthe. ennmo kelvilam kekuthu...any way romba nall kazichu ezutha vanththu santhosham... nanunb blog paru mathiruken..))