ஜூன் 27, 2011

பதிவுலகை விழுங்கும் கூகிள் பஸ்

வர வர நெறைய சீனியர் பதிவர்கள் பதிவு எழுதறதை குறைத்து விட்டார்கள் அல்லது எழுதுவதையே நிறுத்தி விட்டார்கள். ஆனால் காணாமல் போகவில்லை. இணையத்தில்தான் இருக்காங்க . இன்னும் எழுதறாங்க ஆனால் பதிவில் அல்ல ? அப்புறம் எங்க ? கூகிள் பஸ்ஸில். 

அதென்னயா கூகிள் பஸ் ? இன்னொரு சோசியல் நெட்வொர்கிங் தளம் என்று சொல்லலாம். இது எல்லோரயும் இழுத்த முக்கியக் காரணம், இதுக்காக தனி விண்டோ ஓபன் பண்ண வேண்டாம் . ஜிமெயிலில் இருந்து கொண்டே பஸ்ஸில் சுத்தலாம். பதிவு ரொம்பப் பெருசா இல்லை சின்னதா என்று எந்தக் கவலையும் வேண்டாம். ஒரே வரில கூட ஏதாவது சொல்லிவிட்டு நிறுத்திக்கலாம் . அதுக்கு உங்கள் நண்பர்கள் பின்னூட்டம் இடலாம். இப்ப பல பிரச்சனைகளில் சூடான விவாதக் களம் கூகிள் பஸ்தான். 

ஒரு சிலர் கூட மட்டும் ஏதாவது விவாதிக்கனுமா ? அதுக்கும் வழி இருக்கு. ப்ரைவேட் பஸ் விட்டுடலாம். அப்புறம் கமென்ட் வேண்டாமா ? அந்த விவாதத்துக்கு  மட்டும் பின்னூட்டத்தை க்ளோஸ் பண்ணி வெச்சிடலாம். யார் யார் உங்களை பாலோ பண்ணலாம் என்பது வரை உங்கள் கண்ட்ரோலில் இருக்கும் . அதனால இப்ப பாதி பதிவர்கள் அங்கதான் இருக்கோம் ,அடியேன் உட்பட. 

ஆனால், அதுவும் ஒரு நேரம் விழுங்கி என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. அங்கப் போனப்புறம் பதிவெழுதறது குறைஞ்சு போச்சு . அதே சமயத்தில் பலரின் புதிய நட்புகள் கிடைத்திருக்கிறது. ஆனால் முகநூல்/ஆர்குட்டை  விட இதில் ஆபத்து குறைவு . சில சமயங்களில் பஸ் ஓடும் ரூட்கள் ஆபத்தா இருந்தாலும், பல நாட்கள் ரூட் எல்லாம் ஜாலியாதான் இருக்கும் .

 இதில் இன்னொரு முக்கிய விஷயம் , பதிவுக்கு பின்னூட்டம் வரும் வேகத்தை விட இங்கு வரும் வேகம் அதிகம். உலகக் கோப்பையின் போது ,நேரடி வர்ணனை ஓடிக் கொண்டிருந்தது பஸ்ஸில். 

ஆனாலும் இதெல்லாம் ஒரு சங்கிலிப்  போன்றதோ என எண்ணுகிறேன். முதலில் ஆர்குட் அப்புறம் முக நூல் வந்தது அப்புறம் ட்விட்டர் இப்ப பஸ் அடுத்து ?? கொஞ்ச நாளில் இதில் மக்களின் ஆர்வம் குறையலாம்.பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.

பி.கு வியாபாரம் இன்னும் ஒரே ஒரு பதிவில் முடிந்துவிடும். அதுக்கப்புறம் ஒரு விடுமுறை எழுதுவதற்கு .....
அன்புடன் எல்கே

ஜூன் 26, 2011

திவ்யாவின் கதை

திவ்யாவை பற்றி எழுதி ரொம்ப நாள் ஆச்சு. கீழ திவ்யா சொன்ன கதையை அப்லோட் செய்த லிங்க் கொடுத்து இருக்கேன். மொபைலில் ரெகார்ட் செய்ததால் உங்கள் ஸ்பீக்கர் சவுண்ட் அதிகம் வைத்துக் கேட்கவும் . கதை அவுட்லைன் மட்டும்தான் எனக்கு புரிஞ்சது. இவ அவளோட பிரெண்ட் வீட்டுக்கு போயிட்டு வராலாம். அவ்ளோதான். உங்களுக்கு புரிஞ்சதை மத்தத சொல்லுங்க 


கேட்டுட்டு சொல்லுங்க 

அன்புடன் எல்கே

ஜூன் 22, 2011

ஏர்டெல்லும் நானும்

கால் சென்டரில் வேலை செய்யும் நான் , இன்னொரு கால் சென்டரைக் குறை சொல்லி ஒரு பதிவு எழுதுவேன்னு இதுவரைக்கும் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை. ஒரு சில கால் சென்டரில் பீட்பேக் கேட்பாங்க அப்பக் கூட நல்லபடியாதான் சொல்லுவேன். கஸ்டமர் கேரில் கஷ்டமர்களால் ஏற்ப்படும் பிரச்சனை நல்லா தெரியும் அதே போல் இந்த பீட்பேக் மூலம் அங்க வேலை செய்யறவன் வேலை பாதிக்கப்படக்கூடாது அப்படின்னு எப்பவும் பாசிடிவ் பீட்பெக்க்தான் தருவேன். ஆனால் நேற்று நெகடிவ் பீட்பேக் கொடுக்க வேண்டிய  நிலை ஏற்பட்டது, .

வீட்டில் ஏர்டெல் கனெக்க்ஷன் வைத்துள்ளேன். வீட்டில் இணையம் வேண்டாம் என்று முடிவெடுத்து கேன்சல் செய்வதற்கு பத்து நாட்களுக்கு முன்னால் அவர்களோட டோல் ப்ரீ எண்ணுக்கு கால் செய்தேன். அன்னிக்கே எரிச்சல் உண்டு பண்ணாங்க.

எனக்கு கனெக்க்ஷன் வேண்டாம் என்றுதானே கூப்பிடறேன். அந்த கோரிக்கையை எடுத்துக்கிட்டு என்ன செய்யணுமோ அதைப் பண்ணனும். அதைவிட்டுட்டு இந்த லைனை வேற யாருக்காவது மாத்தித் தரட்டுமா என்று கேட்டால் கோபம் வருமா வராதா ? இது என்ன பரிசுப் பொருளா பிரெண்டுக்கோ இல்லை அக்கா தம்பிக்கோ கொடுக்கறதுக்கு ? அவங்களுக்கு வேண்டுமென்றால் அவங்களே அப்ளை பண்ணி வாங்கிக்கப் போறாங்க . ஒருவழியா இதெல்லாம் வேண்டாம் , மொத்தமா ரத்து பண்ணுங்கன்னு சொன்னப்புறம், என்னோட பேரு, முகவரி, பிறந்த தேதி, ஈ மெயில் எல்லாம் வாங்கிட்டு ஒரு புகார் எண்ணை கொடுத்தாங்க. ஒருவாரத்தில் லைன் கட் ஆகிடும் என்று சொன்னார்கள்.

ஒரு வாரம் இல்லை பத்து நாள் ஆச்சி கட் ஆகலை. இது வேலைக்கு ஆகாதுன்னு ,நேற்று மாலை ஒரு ஏழரை மணிக்கு கஸ்டமர் கேருக்கு கால் பண்ணேன். மறுபடியும் முதல்ல இருந்து எல்லா விவரத்தையும் சொன்னேன் . ஒரு நிமிஷம் லைன்ல இருங்க ,செக் பண்ணிட்டு வரேன்னு போனவன்தான் வரவே இல்லை லைன் கட் பண்ணிட்டான். சரின்னு மறுபடியும் பேசினேன். அப்பவும் கோபப் படலை . அவனும் ஹோல்டில் போட்டு லைனை கட் பண்ணான்.

அப்பதான் கொஞ்சம் டென்ஷன் ஆக ஆரம்பித்தேன். மூணாவது முறை போன் பண்ணப்ப பாவம் அந்தப் பையன் அவன் பண்ணாத தப்புக்கு என்கிட்ட நல்லா வாங்கிக் கட்டினான். ஒரு வழியா அவனோட மேனஜர்கிட்ட பேசினேன். அங்கதான் திருப்பமே ...நான் போன் பண்ணி லைன கட் பண்ண சொன்னப்ப அவங்க அதுக்கு உண்டான கோரிக்கையை எடுதுக்கலையாம். அதுக்கு நான் தவறான விவரங்களை தந்ததுக் காரணமாம் .  என் பிறந்த தேதி, முகவரி தப்பா சொன்னேனான். என்னக் கொடுமை இது ??

அப்புறம் ஒரு வழியா , மறுபடியும் அந்தக் கோரிக்கையை எடுத்துகிட்டு இருக்காங்க . இந்தப் பதிவை டைப் செய்யறப்ப அவங்கக்கிட்ட இருந்து போனும் வந்தது . பார்ப்போம் என்ன பண்றாங்கன்னு .ஜூன் 19, 2011

தந்தையர் தின வாழ்த்துக்கள்நான் விழிக்கும் முன்
நீ
சென்றிருப்பாய் வேலைக்கு.

நீ திரும்பும் முன்
நான் உறக்கத்தில் ...

விடுமுறை நாள் அன்றே
நமது விளையாட்டு ...

நீ கல்லாதது எனைப்
பயில வைத்தாய் ..
இவ்வுலகை எனக்குப்
புரிய வைத்தாய். ..

சிறு வயதில் ஆசானாய்
வாலிப வயதில்
 தோழனாய்...

அந்நேரத்தில் புரியவில்லை
உனது வார்த்தைகள்- இன்றோ
எனது  தாரக மந்திரம்..

அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

அன்புடன் எல்கே

ஜூன் 14, 2011

வியாபாரம் 11


பழைய வியாபாரங்களைக் காண


இந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுக்கக் காரணமே அந்த வழியில் எங்கும் சோதனைச் சாவடி இருக்காது என்பதுதான். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு மாறாக, அவர்கள் அப்பாதையில் திரும்பிய உடனேயே அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு சோதனை சாவடி இருப்பது தெரிந்தது.  அதைக் கண்டவுடன் , வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன்  காரின் வேகத்தைக் குறைத்து
என்ன செய்யலாம் என்று , பின்னால் இருந்தவனிடம் கேட்டான்.

ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு  "இது நம்ம அப்பா. உடல் நிலை சரி இல்லை. அதான் தூங்கரார்னு சொல்லிடலாம். உன்கிட்ட லைசென்ஸ் இருக்கா ?"

"ம். இருக்கு. என்னிக்காவது உபயோகம் ஆகும்னு தெரியும் . "

"சரி நார்மல் ஸ்பீட்ல போ . ரொம்ப ஸ்லோ பண்ணாத அதேமாதிரி ரொம்ப பாஸ்ட்டாவும் போகாத ."

"சரி அதை நான் பார்த்துக்கறேன். உளராம பேசு அங்க ."

"லைட் போட்டு பார்த்தா என்ன பண்றது ?"

"பேசிக்கலாம். அவ்ளோ டீப்பா போகமாட்டாங்கன்னு நினைக்கிறேன் . பார்த்துப்போம் ."

அதன்பின் படப்படக்கும் இதயத்துடன் காரை செலுத்தினான் அவன். சோதனைச் சாவடியை நெருங்கவும் அங்கிருந்த போலீசார் , கைகாட்டி வண்டியை நிறுத்தவும் சரியாக இருந்தது .

 *********************************************************************************************************
கீழே விழுந்த ரமேஷ் சுதாரித்து எழுவதற்கும், சேகர் அங்கே வரவும் சரியாக இருந்தது. எழுந்தவேகத்தில் அங்கிருந்து ஓட முயன்ற ரமேஷை சேகர் பிடித்துவிட்டார். அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்று திமிறினான். ஆனால் அதற்குள் ரமேஷ் கீழே விழுந்ததைக் கண்ட ஜெயாவும் அங்கே வந்துவிட அவனால் தப்ப இயலவில்லை.

அங்கிருந்து ரமேஷை பைக்கில் கமிஷனர் அலுவலகம் அழைத்து செல்வது என்பது அவன் தப்பிக்க வழி வகுக்கும் என்றெண்ணிய சேகர் , ஜெயாவை கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுத்து ஜீப்பை வரவழிக்க சொல்லிவிட்டு, ரமேஷை அருகில் இருந்த போலிஸ் அவுட் போஸ்ட்டிற்கு அழைத்து சென்றான்.
 

ரமேஷை சேகர் இழுத்து செல்வதைப் பார்த்த விஜி தான் கடைக்கு வெளியே நிற்பதையும் மறந்து அழ ஆரம்பித்தாள். சேகரைத் தொடர்ந்து போக ஆரம்பித்த விஜியை ஜெயா தடுத்து நிறுத்தினாள்.

"எதுக்கு அவங்க பின்னாடி போற ?"

"இல்லை ..."

"தேவை இல்லாமல் இந்த கேஸ்ல நீ மாட்டிக்காத. இப்ப வரைக்கும் இந்த கேஸ்ல உன் பங்கு எதுவும் இல்லை. நீயா உள்ளார தலையை விட்டு வம்புல மாட்டிக்காத. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். முதல்ல போய் லீவ் சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிப் போ . தேவைப்பட்ட நாங்க உன்னை கூப்பிடறோம்."

"சரி..."

 *********************************************************************************************************
தன் காரில் யாரோ ஒருப் பெரியவரை இருவர் அழைத்து செல்வதைப் பார்த்த ராஜூ, ரமேஷுக்கு போன் செய்தும் அவன் எண் கிடைக்காததால் என்ன செய்வது என்று யோசித்தான். பின் காவல் நிலையத்தில் சென்று கார் தொலைந்துவிட்டது என்று புகார் தரலாம் என்றெண்ணி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான்.


அவன் வீட்டின் வாசலிலேயே ஒருவர் பைக்கில் காத்திருந்தார் .

"யார் வேணும் சார் உங்களுக்கு ?"

"நீங்கதானே ராஜு ?"

"ஆமாம். நீங்க?"

"நான் ஜெய். ஒரு கேஸ் விசயமா உங்களைப் பார்க்க வந்தேன்."

இதைக் கேட்டவுடன் ராஜுவின் மனதில் பயம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அப்போதைக்கு அதை வெளிக்காட்டாமல்

"நான் பாட்டுக்கு என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கேன். என்கிட்டே போய் கேஸ் அது இதுன்னு சொல்றீங்க ."

"அதை நாங்க முடிவு பண்றோம் ராஜு. ரமேஷ் உங்க பிரெண்ட்தான ?"

"ஆமாம் சார்."

"நல்ல க்ளோஸ் பிரெண்டா ?"

"ஆமாம் சார். சின்ன வயசில் இருந்து ஒரே ஏரியாதான். அதுவுமில்லாமல் ரெண்டு பேரும் ஒட்டுக்காதான் கார் ஓட்டக் கத்துக்கிட்டோம். ரெண்டு பேரும் இதே லைன்லதான் இருக்கோம். ஏன் சார் இப்ப அவனைப் பத்திக் கேக்கறீங்க ?"

"அதை அப்புறம் சொல்றேன். உன் கார் எங்க ?"

அவர் வார்த்தைகளில் மரியாதைக் குறைந்துவிட்டதைக் கண்ட ராஜு, அவருக்கு தன் மேல் சந்தேகம் வந்துவிட்டதோ என்று எண்ணினான்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் சார் , யாரோ அடிச்சிட்டு போய்ட்டாங்க. இப்பதான் ஸ்டேஷன்ல புகார் கொடுத்துட்டு வரேன்."

"அப்படியா ? சரி என் கூட வா. கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கு ."

"சார் அதான் நீங்கக் கேட்டதுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டேன்ல. அப்புறம் எதுக்கு கூப்பிடறீங்க ?"

"இன்னும் விசாரிக்க வேண்டி இருக்கு, நீயா வரியா ..?"


அதற்கு மேல் முரண்டுப் பிடிக்காமல் அவருடன் வர ராஜு ஒத்துக்கொண்டான். அங்கிருந்துக் கிளம்பும் முன் , சேகருக்கு போன் செய்ய அலைபேசியை ஜெய் எடுத்த அதே நேரத்தில் , சேகர் அவனுக்கு கால் செய்தான்.

"ஜெய் ! எங்க இருக்கீங்க ? உடனே கமிஷனர் ஆபிஸ்க்கு வாங்க "

"கிளம்பிட்டேன் சார். இன்னொரு விஷயம் ரமேஷோட பிரெண்ட் ராஜுவை கூட்டிட்டு வரேன். எனக்கு அவன் மேல கொஞ்சம் சந்தேகமா இருக்கு .:

"ஓகே குட் . ரமேஷும் மாட்டிக்கிட்டான்."

"சீக்கிரம் கிளம்பி வாங்க."

"எஸ் சார்."


 *********************************************************************************************************

போலீசார் சைகைக்கு இணங்கி வண்டி நின்றவுடன், அங்கிருந்த போலீசாரில் ஒருவர் வேகமாக வந்தார். அவர் வருவதைப் பார்த்து கொஞ்சம் பயத்துடனேயே காரில் இருவரும் இருந்தனர்.

காரை நெருங்கி வந்தவர் "எங்க போறீங்க ?"

"ஏற்காடுதான் சார் போயிட்டு இருக்கோம் ."

"உள்ள யார் யார் இருக்காங்க ?"

"நான், எங்க அப்பா, அண்ணன் சார் ."

"இந்த வழில இன்னிக்கு போக முடியாது. பாறை விழுந்து பாதை அடைச்சிருக்கு. இப்படியே திரும்பி போய் அஸ்தம்பட்டி வழியா போங்க."

"இன்னிக்கு கிளியர் ஆகாதா சார் ?"

"கஷ்டம். வெளிச்சம் வேற இல்லை. சுத்திக்கிட்டுதான் போகணும். வேற வழியில்லை. "

"சரி சார் "

எதிர்பாராத்  திருப்பமாய் இப்படி ஒரு சிக்கல் வர வேறு வழியில்லாமல் காரைத் திருப்பினார்கள். சோதனை சாவடியில் இருந்து சிறிது தூரம் சென்றப்பின்  வண்டியை நிறுத்தி என்ன செய்யலாம் என்று யோசிக்கத் துவங்கினார்கள். சிறிது யோசனைக்குப் பிறகு ரமேஷிற்கு போன் செய்துப் பேசலாம் என்று முடிவு செய்து அவன் எண்ணை அழைத்தார்கள் .

பி கு : கொஞ்சம் தாமதமாய் அப்டேட் செய்வதற்கு மன்னிக்கவும். இந்த வாரத்தில் கதையை முடிச்சிடறேன் .- வியாபாரம் தொடரும்ஜூன் 13, 2011

ராஜகுமாரி

அன்னை சுமந்தாள்
உன்னை  வயிற்றில் -மனதால்
நான் சுமந்தேன் ..

இவ்வுலகில் நீ வந்த
பின்னும் மாதம் ஒரு
முறையே என்றாகியது
உன் தரிசனம் ...

"ப்பா" உன் முதல்
உச்சரிப்பில் எனை
மறந்தேன்...

மாலையில் உன்
விளையாட்டில் அன்றைய
வேதனை மறந்தேன்...

வீட்டின் ராஜகுமாரியாய்
வலம் வருகிறாய் -உன் சொல்லே
எனக்கு வேதம் ...


உன்னுடன் இருக்கும்
நிமிடங்களே எனக்கு
சொர்க்கம்....


பி . கு : இன்று திவ்யாவின் பிறந்தநாள் 


அன்புடன் எல்கே

ஜூன் 06, 2011

என்னில் பாதி....என்னில் பாதியாய்
வாழ்வின்
மீதியாய் கலந்தாய்

என் வெற்றியில் நீ

மகிழ்ந்தாய் - தோல்வியில்
உற்சாகமூட்டினாய்.


கண்ணசைவில் சித்திரங்கள்
படைத்தாய் -  வாழ்வை
வசந்த கால சோலையாக்கினாய்...என் சுகமே உன்
விருப்பம் என்றாக்கிக்
கொண்டாய்..

கோபங்களையும் சிரிப்பால்
புன்னைகை ஆக்கினாய்..

உன் பாதியாய் அல்ல
முழுதுமாய் நானானாய் ...

என்ன பரிசு தர நான் - எனை
முழுதும் அளித்தாலும் அது தகுமோ ??

பி .கு : இன்று எனது பாதி சௌம்யாவின் பிறந்தநாள். 


அன்புடன் எல்கே

ஜூன் 05, 2011

வியாபாரம் 10அவள் மனதை பயம் கவ்வியிருந்ததை அவள் முகம் படம் போட்டுக் காட்டியது. நெற்றியில் ஆங்காங்கே தோன்றிய வியர்வை முத்துக்கள் அதற்கு சாட்சியம் கூறியது. அந்த கடையின் வெளியே நடைப்பாதையில் கடைக்கு எதிரே இருந்த இரும்பு தடுப்புக் கம்பிகளைப் பற்றி இருந்த அவளதுக் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவன் எப்பொழுது வருவான், வந்தால் அவனை எச்சரிப்பதா இல்லை வேண்டாமா என்று ஒரு போராட்டமும் அவள் மனதினுள் நடந்துக் கொண்டிருந்தது. சில நிமிட யோசனைக்குப் பிறகு , அவன் வரும்பொழுதே கண்ணால் சைகை செய்யலாம் என்று முடிவு செய்தாள். 

அவள் அப்படி முடிவு செய்யவும், அந்த தாழ்வாரத்தின் மறுபுறம் அவன் வரவும் சரியாக இருந்தது. ஆனால் நாம் நினைப்பது எல்லாம் நடந்துவிடுகிறதா என்ன ? நாம் நினைப்பது மட்டுமே நடந்தால் வாழ்வு நன்றாகத்தான் இருக்கும். 

ரமேஷ் நடந்து வரவும், சேகர் ஜூஸ் கடையில் இருந்து வெளியே வந்து போன் பேசிக் கொண்டே நடப்பவனைப் போல் ரமேஷை நோக்கி நடக்க ஆரம்பித்தான். 


**********************************************************************************
கிட்டத் தட்ட அதே நேரத்தில் ராஜு, ரமேஷின் நண்பர்கள் தங்கியிருந்த வீட்டை அடைந்து, ரமேஷ் கொடுத்த எண்ணுக்கு கால் செய்தான். 


"கார் ரெடி ."


"இவ்ளோ சீக்கிரமா ? ரமேஷ் எங்க ?"


"அவர் வேற ஒரு இடத்துக்கு போயிருக்கார். என்னை கொண்டுவந்து காரைக் கொடுக்க சொன்னார் ."


"சரி . எங்க இருக்கீங்க ?"


 "நீங்க இருக்கற வீட்டுக்கு எதிர்ல இருக்கறேன். "


"அப்படியே வண்டிய கொண்டுவந்து வீட்டுக்கு முன்னாடி விட்டுடுங்க. சாவியை ஜன்னல் வழியா உள்ள தூக்கி போட்டுடுங்க. "


"உங்களை உடனே இந்த இடல்தில் இருந்து கிளம்ப சொல்லி ரமேஷ் சொன்னார் ."


"எதவாது காரணம் சொன்னாரா அதுக்கு ?"
"அதெல்லாம் எதுவும் சொல்லலை. சீக்கிரம் கிளம்பசொல்லி சொன்னார். ஏற்காடுல ஏரிக்கு பக்கத்தில் உங்களை அவரோட நண்பர் மீட் பண்ணுவார்னு சொன்னார் "


"சரி ஓகே. வண்டியை கொண்டு வந்து நிறுத்திட்டு சாவியை தூக்கி உள்ள போடு "


மறுமுனையில் இருந்த குரல் சொல்லியவாறே வண்டியை நிறுத்திவிட்டு , சாவியையும் தூக்கி உள்ளே போட்டுவிட்டு அங்கிருந்து செல்லத் துவங்கினான். மனதிற்குள் நம் காரை இவர்களுக்குத் தருவதால் நமக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்று எண்ணமும் ஓடிக் கொண்டிருந்தது. ரமேஷ் அவனிடம், அவனோட நண்பர்கள் ஊரில் இருந்து வந்திருப்பதாகவும், ஏற்காடு போக கார் வேண்டும் என்றும் , டிரைவர் வேண்டாம், கார் மட்டும் கொடுத்தால் போதும் என்று சொல்லியிருந்தான். அதனால் வண்டியை விட்டுவிட்டு எதிரே இருந்த டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்துவிட்டு அங்கிருந்த பேப்பரை புரட்டத் துவங்கினான். 


"சார்! டீ எடுத்துக்கோங்க என்ற மாஸ்டரின் குரல் கேட்டு டீ கிளாசை வாங்கிக் கொண்டு திரும்பியவனின் கண்ணில் எதிர் வீட்டில் இருந்து வெளியே வந்தவர்கள் பட்டனர். ஒரு பெரியவரை தூக்கி வந்து உள்ளே வைத்து கதவை சார்த்தி வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்றனர்.


கண்டிப்பா இது எதோ பிரச்சனையான விவகாரம்தான் என்று நினைத்தவன் , தன் செல்லை எடுத்து ரமேஷை அழைத்தான். அவன் பல நிமிடங்கள் முயற்சி செய்தும் அவனது லைன் கிடைக்கவே இல்லை.


அவன் செய்வதறியாது முழித்தான். அவனை காரில் இருந்தவர்கள் சட்டைப் பண்ணியதாகவே தெரியவில்லை. அவன் தங்களைப் பார்ப்பதையே கண்டுக் கொள்ளாமல் வண்டியை வெகு வேகமாக சேலம் டவுன் ஏரியாவை நோக்கி செலுத்தினார்கள். ஏற்கனவே ரமேஷ் சொன்னவாறு அயோத்தியாப்பட்டினம் செல்லும் சாலையில் அந்த மாருதி ஆம்னி பறந்தது.


செக் போஸ்ட் அருகே வந்தவுடன் அவர்களுக்கு கொஞ்சம் நடுக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அந்த என்றதில் அங்கு எந்த வாகனத்தையும் சோதனை செய்யாதது அவர்களுக்கு நிம்மதியாய் இருந்தது.


அந்த சோதனை சாவடியைக் கடந்து வேறு எங்கும் நிற்காமல் ஏற்காட்டு மலைப்பாதைக்கு வண்டியை விரட்டினர். அந்த மலைப்பாதையில் நுழைந்து சில மீட்டர்களிலேயே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


**********************************************************************************


ரமேஷ் , எதிரே நடந்து வரும் சேகரைப் பார்த்து ஒரு கணம் திகைத்தாலும் உடனே சுதாரித்துக் கொண்டு அங்கிருத்து வெளியேற வேறு வழி இருக்கிறதா என்றுப் பார்த்தான். அவனுக்கு இருந்த ஒரே வழி, அவனது வலப்புறம் இருந்த தடுப்பைத் தாண்டி குதிப்பதுதான். ஆனால் அதுவே அவன் மாட்டிக் கொள்ளவும் வசதியான வழியாக அவனுக்குப் பட்டது.


சேகர் கடந்து செல்லும் வரை வேறு ஏதாவது கடையினுள் நுழைய வேண்டியதுதான் என்று எண்ணியவாறே இடது பக்கம் இருந்த புத்தகக் கடைக்குள் நுழைய முயன்றான். ஆனால் அதே நேரம் அவன் பின் பக்கம் இருந்து வந்த ஒரு நபர் அவன் மேல் மோத, தன் நிலைத் தடுமாறிக் கீழே விழுந்தான்.

அன்புடன் எல்கே