ஏப்ரல் 25, 2011

தலைப்பிடப்படாதவை I

கடந்த வாரம் வெள்ளி என்றெண்ணுகிறேன். காலை மணி எட்டரை இருக்கும். அன்று அதிகம் வெய்யிலும் இல்லை. காற்றும் லேசாக என்னைத்  தழுவி  செல்ல அன்றையக் காலை அற்புதமாக தெரிந்தது.

அலுவலகத்திலிருந்து வழக்கமாய் செல்லும் டீக்கடைக்கு நடந்து கொண்டிருந்தேன். புறாக்கூட்டம் ஒன்று எங்கிருந்தோ வந்தது. டீக் கடையில் நின்றுக் கொண்டு அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறகடித்து ஒலி எழுப்பியப் படி பறந்து கொண்டிருந்த புறாக்களில் ஒன்று திடீரென்று அங்கிருந்த ஹை வோல்டேஜ் ட்ரான்ச்பார்மரில்  அமர , அடுத்த நொடி அது தூக்கி எறியப் பட்டது. 

கீழே விழுந்த அந்தப் புறாவின் உடலில் உயிர் இருந்தால் காப்பாற்றலாம் என்று இரண்டு எட்டு எடுத்து வைப்பதற்கு முன் இதற்காகவே காத்திருந்தது போன்று அங்கு வந்த நாய் , அந்தப் புறாவைக் கவ்விக் கொண்டு சென்று விட்டது. 

அந்த சம்பவம் என் மனதில் வேறு சில அதிர்வலைகளை தூண்டி விட்டது. அவை இங்கே. 

காலை நேரம் என்பது நமது இளமைப் பருவம். இங்கு சிறகடித்துப் பறப்பது நாம்தான். 


ட்ரான்ச்பார்மரில் உட்காருவது என்பது நாம் செய்யும் தவறான காரியங்கள். அதன் உடனடி விளைவு கீழே விழுவது.  அங்கிருந்த புறாக்களில் ஒரு புறா மட்டும் ஏன் அங்கு வந்து அமரவேண்டும் ? அதற்க்கு என்ன காரணம் ? நம் நண்பர்கள் கூட்டத்தில் கண்டிப்பாக இளமையில் ஏதேனும் தவறு செய்து அதனால் பாதிக்கப்படும் நண்பர் ஒருவராவது இருப்பார்.

ஒரு தவறு செய்தால் ஏற்படும் தொடர் நிகழ்சிகள் அதனால் ஏற்படும் பாதிப்புகள்தான் அந்த நாய் புறாவை எடுத்து செல்வது. 

என்ன நான் சொல்லி இருப்பது சரியா நண்பர்களே ?

பி.கு : அப்பப்ப இந்த மாதிரி மனதில் வரும் எண்ணங்களை "தலைப்பிடப்படாதவை" என்றத் தலைப்பில் பகிரலாம் என்று இருக்கிறேன்.  
 
அன்புடன் எல்கே

ஏப்ரல் 24, 2011

கூட்டு 24.04.2011

ஸ்மார்ட் டிவி 

சாம்சங் புதிதாய் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தி உள்ளனர். கணினி , டிவி ரெண்டும் இணைந்ததுதான் இந்த ஸ்மார்ட் டிவி. நார்மலா டிவியும் பார்த்துக்கலாம். அதே சமயத்தில் இணையம் சென்று அங்கிருந்து வீடியோவும் பார்த்துக்கலாம்.வீடியோ பார்ப்பதோடு சாட் பண்ணலாம்.  மேலும் அவர்கள் கொடுத்துள்ள அப்ளிகேசன் மூலம் இன்னும் சில பயன்களைப் பெறலாம்.  இதுதான் இதோட சுருக்கமான விளக்கம். 


அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இது பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்தி இந்தியாவிலும் அறிமுகப் படுத்தி உள்ளனர். இதன் குறைந்தபட்ச விலை Rs 57000.

இதை பற்றி மேலும் விவரங்களை அறிய இங்கே செல்லவும்.பார்க்கிங் பிரச்சனை 

ரெயில்வே ஸ்டேசனில் இருக்கும் இரண்டு சக்கர வாகனம் நிறுத்தும் இடம்  ஆகட்டும் அல்லது அரசு பேருந்து நிலையங்களில் இருப்பதாகட்டும் , வண்டி நிறுத்துபவர்களுக்கு வசதியாக உள்ளதா ? குறிப்பாக சென்ட்ரலில் இருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும்  இடம். வருடா வருடம் டெண்டர் மூலம் அந்த ஸ்டேன்ட் நடத்துவதற்கு ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். எனக்குத் தெரிந்தவரை பல லட்சங்களுக்கு மேல் போகிறது அந்த டெண்டர். இதன் மூலம் ரெயில்வேக்கு நல்ல லாபம்தான். ஆனால் பொதுமக்களுக்கு வசதி எதுவும் இல்லை. 

வண்டி நிறுத்தும் இடம் முழுவதும் சேறும் சகதியுமாய் இருக்கிறது. போதாக்குறைக்கு , முட்களும் ,கல்லும் எப்பொழுது வண்டி டயரை பதம் பார்க்கலாம் என்று காத்திருக்கின்றன. ஒப்புக்கு ஒருகூரை. அதன் கீழ் இருபது வண்டிகளை மட்டுமே நிறுத்த முடியும் .

நல்ல லாபம் சம்பாதிக்கும் இடத்தில் பொதுமக்களுக்கு ஏன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது ?


டவுட்டு

தனியார் நடத்தும் மால்கள் ஆகட்டும், அரசாங்க இடத்தில் ஒப்பந்தக்காரர்கள் நடத்தும் பார்க்கிங் ஆகட்டும் அவர்கள் கொடுக்கும் டோக்கனில் "வண்டியை இங்கு உங்கள் சொந்த ரிஸ்கில் நிறுத்துகிறீர்கள். வண்டியில் உள்ள பொருளோ வண்டியின் பாகங்களோ தொலைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல " என்று எழுதி இருப்பார்கள். 

இவர்கள் பொறுப்பேற்க மாட்டேன் என்றால் எதற்காக கட்டணம் வசூலிக்க வேண்டும் ? இந்தமாதிரி பிரிண்ட் செய்திருப்பது சட்டப்படி சரியா ? சட்டம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். 

போக்குவரத்து விதிகள் 

சிக்னலில் காவல்துறை அதிகாரி இருக்கிறாரோ இல்லையோ சிக்னலை மதித்து நடக்கவேண்டியது ஒரு நல்ல குடிமகனின் கடமை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் எத்தனை பேர் அப்படி செய்கிறோம் ? குறிப்பா படிச்சவங்கதான் யாருமே இல்லையே ? எதுக்கு நிக்கணும் அப்படின்னு சிக்னலை மதிக்காம விதிமுறைகளை மீறுகிறார்கள்.  

இவர்கள் விதிமுறைகளை மீறிவிட்டு , பின் காவல்துறையினர் லஞ்சம் கேட்கின்றனர் என்று புலம்புகின்றனர். அதிகாரிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் நேர்மையை எதிர்பார்க்கும் நாம் நேர்மையா இருக்கிறோமா ? . யோசிக்க வேண்டிய விஷயம் இது. 

கீது ஜோஸ் 

கேரளாவை சேர்ந்து கீது ஜோஸ் என்கின்ற பேஸ்கட்பால் வீராங்கனை அமெரிக்கா சென்றுளார். இதில் என்ன விஷயம் இருக்கிறது என்கிறீர்களா ? அமெரிக்காவில் நடைபெறும் NBA மற்றும் WNBA தொழில் முறை கூடைபந்தாட்ட போட்டிகள் உலகப் புகழ் பெற்றவை. ஒரு வருடமாவது அதில் கலந்துக் கொண்டு விளையாடவேண்டும் என்பதுதான் பெரும்பாலான கூடைப்பந்தாட்ட வீரர்கள்/வீராங்கனைகளின் ஆசை .

அங்கு சென்று விளையாட கீதுவிற்கு வாய்ப்பு வந்துள்ளது. அங்குள்ள மூன்று அணிகளின் தகுதித் தேர்வுகளில் பங்கு பெற இப்பொழுது சென்றுள்ளார் கீது. அவர் தேர்வு செய்யப்படும் பட்சத்தில் NBA மற்றும் WNBA வில் விளையாடும் முதல் இந்தியர் என்றப் பெருமை கீதுவிற்கு கிடைக்கும். 

கீது தேர்வாக எனது வாழ்த்துக்கள். 


இந்தவாரப் பதிவர் 

எல்லாவற்றையும் நேசிப்போம் என்றப் பெயரில் வலைப் பூ வைத்துள்ள திரு வெங்கட்ராமன் முருகன். இவர்தான் இந்த வாரப் பதிவர். இவர் சிறுகதைகள் அதிகம் எழுதியுள்ளார். அவற்றில் எனக்குப் பிடித்தது "அப்பாச்சி ". கதைய்டாவ் சுருக்கம் இதுதான். நகரத்தில் பிறந்து வளரும் இந்தகால சிறுவனுக்கு பாட்டி மற்றும் அவர்களின் ஊர் பிடிக்கவில்லை. ஆனால் அங்கு சென்றாகவேண்டியக் கட்டாயம். அவன் அங்கு சென்று தன் மனதை மாற்றிக் கொண்டானா இல்லையா என்பதைப் படிக்க அவரது தளத்திற்கு செல்லுங்கள். டிஸ்கி : இந்த வாரம் கூட்டு எல்லோருக்கும் சரியா இருக்கும்னு நினைக்கிறேன். உங்க கருத்தை சொல்லுங்க.


அன்புடன் எல்கே

ஏப்ரல் 22, 2011

வியாபாரம் 3

பழைய வியாபாரங்களைப் படிக்க

சிலநொடிகள் ராமுவை உற்று நோக்கிய சேகர் பின் அங்கிருந்து கிளம்பி தன் அலுவலகத்தை அடைந்தான். அலுவலகம் வந்தவுடன், கார் டிரைவரின் எண்ணிற்கு அங்கிருந்த லேண்ட்லைன் போனில் இருந்து அழைத்தான். அவன் எதிர்பார்த்தவாறே சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட மெசேஜை பதிவுசெய்யப்பட்டக் குரல் ஒலிக்க அழைப்பைத் துண்டித்து அந்த எண் எந்த நிறுவனத்தின் எண் என்று ஆராய முற்பட்டான்.

ஏற்கனவே நேரம் ஆனதுடன் இன்னொரு சலிப்பும் சேர்ந்துக் கொண்டது அவனுக்கு. ஒரே எண்ணை வைத்து கம்பெனியை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி வந்தது நமக்குதான் தொல்லை என்று எண்ணியவாறே முதலில் பி எஸ் என் எல் அலுவலகத்திற்கு தொடர்புக் கொண்டான். அவன் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என்பது அவன் அழைப்பைத் துண்டித்து அடுத்த எண்ணை டையல் செய்தபொழுதே தெரிந்தது. இரண்டு மூன்று நிறுவனங்களை அழைத்தப்பின் அவனுக்குத் தேவையான விவரங்கள் கிடைத்தன.

அவர்களிடம் அவன் தனக்குத் தேவையான விவரங்களைக் கேட்டுப் பெற்றான். பின் அந்த நம்பருக்கு கடந்த இரு தினங்களில் வந்த அழைப்புகள்  மற்றும் அந்த நம்பரில் இருந்து செய்யப்பட்ட அழைப்புகள்  இந்த இரண்டு விவரங்களையும் அடுத்த நாள் காலைக்குள் தனக்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

பின் அவர்களிடம் இருந்து பெற்ற  விவரங்களை ஆராயத் துவங்கினான். அவர்கள் வீட்டில் சொன்ன டிரைவரின் பெயரும் கார்ட் வாங்கும் பொழுது கொடுக்கப்பட்டிருந்த பெயரும் வேறு வேறாக இருந்தது அவனுக்கு டிரைவரின் மேல் லேசாக சந்தேகம் வந்தது. எதற்கும் அதில் கொடுக்கப்பட்டிருந்த முகவரியில் சென்று விசாரிக்க முடிவு செய்து நேரத்தை பார்த்தான். மணி அப்பொழுதே பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த முகவரிக்கு செல்ல எப்படியும் அரைமணி நேரம் ஆகும். அந்த முகவரியும் உண்மைதானா என்று அவனுக்கு உறுதியாகத் தெரியவில்லை. இரவு நேரத்தில் சென்று அங்குத் தேடுவதை விட பகலில் செல்லலாம் என்று முடிவெடுத்தான்.

பின் தன் உயரதிகாரியை அலைப்பேசியில் அழைத்தவன், அவரிடம் நடந்ததை விவரித்து அடுத்த நாள் தான் செய்யவிருப்பதையும் சொன்னான்.


புதிய நபர் ஒருவர் தன் கடை வாசலில் வண்டியை நிறுத்தியவுடன் முதலில் கோபப்பட்டாலும் , உடனே அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்று அடையாளம் கண்டுக் கொண்டவுடன் அந்த நேரத்தில் அவருக்கு என்ன வேலை என்று சந்தேகம் வந்தது ராமுவிற்கு. பின் சேகர் , ஸ்ரீனிவாச செட்டியார் வீட்டிற்குள் சென்றதைப் பார்த்த ராமுவிற்கு வியப்பு ஏற்பட்டது.

இந்த நேரத்தில், காவல் துறையை சேர்ந்தவருக்கு அங்கு என்ன வேலை ? வியாபர சம்பந்தப்பட்ட எந்த சிக்கலானாலும் கடையில் வைத்தே தீர்ப்பதுதானே அவரது வழிமுறை. இன்று புதிதாய் எதோ நடக்கிறதே என்று எண்ணியவரின் மனதில் மதியத்தில் இருந்து செட்டியாரை பஜாரில் பார்க்காதது பற்றி சந்தேகம் உதித்தது.  பொதுவாய் ஒரு மணி நேரத்தில் மீண்டும் பஜாருக்கு திரும்பும் செட்டியார் அன்றுத் திரும்பி வந்ததை தான் பார்க்கவில்லை என்பது அப்பொழுதுதான் அவர் மனதில் உறைத்தது.

அவர் மனதில் இந்த சந்தேகம் உதித்தப்பின் அவரால் கடையில் அமைதியாக உட்கார இயலவில்லை. செட்டியாரின் வீட்டிற்கு சென்று
என்ன நடந்தது என்றுக் கேட்கவேண்டும் என்று எண்ணினார். ஆனால் போலிஸ் அங்கு இருக்கும்பொழுது தான் அங்கு செல்வது அவ்வளவு உசிதம் அல்ல என்று எண்ணியவர் சிறிது நேரம் பொறுமையாக இருந்தார் .

பின் பொறுமை இழந்தவராய் , அவரது வீட்டு எண்ணிற்கு அழைத்தார். கிருஷ்ணனே போனை எடுத்தது அவருக்கு வசதியாய் இருந்தது. கிருஷ்ணனும் அவரும் கிட்டத்தட்ட ஒரே வயது . அதனால் கொஞ்சம் நெருக்கமும் கூட. அவன் போனை எடுத்தவுடன் யார் என்று அறிந்துக் கொண்டு , தனக்கு மறுமொழி சொல்லாமல், அங்கு யாருக்கோ பதில் சொன்னதை வைத்தே , இன்னும் காவல்துறையை சேர்ந்தவர் அங்கிருப்பதை புரிந்துகொண்ட ராமு, அதிக நேரம் பேசாமல் அழைப்பை முடித்துக் கொண்டார். அவர் அழைப்பைத் துண்டிக்கவும் , சேகர் மீண்டும் தன் வண்டியை எடுக்க அவர் கடையருகே வரவும் சரியாக இருந்தது.

சேகர் அங்கிருந்து கிளம்பி அந்த வீதியைத் தாண்டி போகும் வரைக் காத்திருந்த ராமு, பின் தன் கடைப் பையனை கடையை அடைக்க சொல்லிவிட்டு, கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றார். கிருஷ்ணனிடம் பேசி விவரங்களைத் தெரிந்துக் கொண்டவர் , அவனுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்துக் கிளம்பினார்.


மறுநாள், அந்த கார்ட் வாங்கியபொழுது குடுக்கப்பட்டிருந்த விலாசத்திற்கு செல்லும் வழியில் செவ்வாய்பேட்டைக்குள் மீண்டும் நுழைந்த சேகர், பஜார் வழியாக சென்றான். அவன் வந்தது காலை நேரம் என்பதால் அதிகப் பரபரப்பு இன்றி வீதிகள் கொஞ்சம் அமைதியாய் இருந்தன. இந்நேரம் செட்டியார் இல்லாதது பற்றி ஏதேனும் செய்திகள் பரவி இருக்கோமோ என்று சிறிது சந்தேகமும் அவனுக்கு இருந்தது. நகரின் சிரியப் பகுதியில் ஒரு நபர் திடீரென்று காணவில்லை என்றால் செய்திகள் அதிவிரைவில் பரவும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். இந்த வழக்கை விரைவில் முடிக்கவேண்டும் என்ற எண்ணியவாறே வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

அலைபேசி நிறுவனத்தில் இருந்து அவன் பெற்ற முகவரி இருந்த ஏரியாவை அடைந்தவன், அதில் குறிப்பிடப் பட்டிருந்த வீதிக்கு வந்தான். நடுத்தரமக்கள் வசிக்கும் பகுதி போல் தோன்றிய அந்த வீதியை ஆராய்ந்தவன், தான் போகவேண்டிய வீட்டை அடைந்து விசாரிக்கத் துவங்கினான்.

தன் சொந்தப் பெயரில் கார்டை அந்த டிரைவர் வாங்கவில்லை என்று முதல் நாளிரவே தெரிந்துக் கொண்டவன், அந்த வீட்டில் விசாரித்தப் பின் அதிர்ச்சியே அடைந்தான்.

-வியாபராம் தொடரும்

ஏப்ரல் 18, 2011

மினி கூட்டு 18.04.2011


லோக்பால் மசோதா 

எப்பொழுதும் ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு சட்டத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் இருந்தால் , அந்த சட்டத்தை ஆதரிப்பது போல் ஆதரித்து, சட்டத்தை நீர்த்துப் போக என்ன செய்யவேண்டுமோ அந்த விஷயங்களை ஆளும்கட்சி பின்னணியில் செய்யும். அது இப்பொழுது லோக்பால் விஷயத்தில் நிரூபணம் ஆகி உள்ளது. ஒருபுறம் சோனியா , அன்னா ஹசாரேக்கு ஆதரவுத் தெரிவிக்கிறார். மறுபுறம், திக்விஜய்சிங்க் போன்ற காங்கிரஸ் கட்சியினர் அவரின் போராட்டத்தைப் பற்றி அவதூறு கிளப்பிக் கொண்டிருக்கின்றனர். 

எனக்குமே இந்த லோக்பால் சட்டத்தில் சில சந்தேகங்கள் இருந்தாலும், இவ்வலைப் பெரியப் போராட்டத்தை கையில் எடுத்ததற்காக அன்னா ஹசாரேயை பாராட்டத்தான் செய்வேன். இன்னும் இந்த மசோதா  உருபெற்று பாராளுமன்றத்தில் வெற்றிப் பெற்று சட்டமாக மாற என்ன என்ன சோதனைகளை சந்திக்கவேண்டுமோ தெரியவில்லை. 

தேர்தல் 

  எப்பொழுதும் இல்லாத அளவிற்கு அதிகபட்ச ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. அது யாருக்கு சாதகம் என்பதை அரசியல் கட்சியினர் கணித்துக் கொள்ளட்டும். இத்தனைப் பேர் வந்து ஓட்டுப் போட்டதே பெரிய சாதனைதான். அதற்காக தேர்தல் கமிஷனைப் பாராட்ட வேண்டும். அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தி உள்ளது.

மறுபடியும் கூட்டு பகுதி எழுத ஆரம்பித்தபொழுது நான் எழுதிய முதல் விஷயம் பிரச்சாரத்தால் ற்படும் போக்குவரத்து பாதிப்பு. எனக்குத் தெரிந்து சென்னையில் எங்குமே தேர்தலினால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.  இதுபோன்றுதான் இனி தேர்தல்கள் நடக்கவேண்டும். 

டவுட்டு 

மே மாதம் பத்தாம் தேதி வரை கருத்துக் கணிப்பு எதுவும் வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இது நமது வலைப்பதிவர்களுக்கும் , கூகிள் பஸ் ஓட்டுபவர்களுக்கும் பொருந்துமா ? 

இந்தவாரப் பதிவர் 

கீதமஞ்சரி என்றப் பெயரில் வலைப்பூ  வைத்திருக்கும் திருமதி கீதா (ஆஸ்ட்ரேலியா) அவர்கள்தான் இந்தவாரப் பதிவர். பெரும்பாலும் காதல் கவிதைகள்தான் எழுதுகிறார். அவர் எழுதியதில் எனக்குப் பிடித்தது 

மெய் தீண்டோம்...
அன்புடன் எல்கே

ஏப்ரல் 17, 2011

பெண் எழுத்து

திருமதி ராஜி அவர்கள் "பெண் எழுத்து " என்றத் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறார்கள். அநேகமாய் பெண் எழுத்தை பற்றி சிறிது நாட்களாய் சென்றுக் கொண்டிருக்கும் இந்த தொடர் பதிவில் எழுதப் போகும் முதல் ஆண் பதிவர் நான்தான் என்று எண்ணுகிறேன்.

இன்று எழுத்துலகில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் எழுதிக் கொண்டுதான் உள்ளனர். எல்லாவிதக் கருத்துகளையும் ,அனைத்து தலைப்புகளிலும் எழுதுகின்றனர். மாறுதல் என்பது ஒரே இரவில் வந்துவிடாது. சொல்லப்போனால் இந்த நிலை நடுவில் ஏற்ப்பட்ட சில மாற்றங்களால் வந்தது என்றே சொல்லலாம். சங்கக் காலத்தில் பெண் புலவர்கள் பலர் இருந்ததற்கு சான்றுகள் பல உள்ளன. இடைக்கலாதில் ஏற்ப்பட்ட அயலார் படையெடுப்பே பெண்கள் வீட்டிற்குள் முடங்குவதற்கு முதல் மற்றும் முக்கியக் காரணமாய் அமைந்தது. 


இன்று அந்நிலை மாறி பல பெண்கள் எழுத்துலகில் தங்களுக்கென்று ஒரு இடத்தைப் பிடித்துள்ளனர். அவ்வளவு ஏன் நமது தமிழ் பதிவுலகிலேயே பல பெண் பதிவர்கள் தங்கள் எழுத்துக்களால் தனி இடத்தைப் பிடித்துள்ளனர். துளசி டீச்சர், கீதா மாமி , வல்லியம்மா,  புதுகைத் தென்றல், விதூஷ், சித்ரா  இன்னும் இப்படி பலரை சொல்லிக் கொண்டேப் போகலாம்.


பெரும்பாலானோர் வைத்துள்ள குற்றச்சாட்டு அல்லது பெரும்பாலானோரின் கருத்து ஒரு சில விஷயங்களை பெண்கள் எழுத முடிவதில்லை என்பதே. ஒரு சில தலைப்பில் பெண்கள் எழுதும்பொழுது அதற்கு எழும் கருத்துக்கள் எழுதுபவர்களை குற்றம் சாட்டுகின்றன இல்லை காயப் படுத்துகின்றன என்று சொல்கிறார்கள். இதற்க்கு முதல் காரணம், தமிழ் எழுத்துலகில் குறைந்தபட்சம் இந்தப் பதிவுலகில் எழுதப் படும் கருத்துக்களை யார் எழுதுகிறார்கள் என்பதை வைத்தே மதிப்பீடு செய்கின்றனர். எழுதியவரைக் கருத்தில் கொள்ளாமால் எழுதப் படும் எழுத்தை மட்டும் ஆராய்வது என்பது இங்கு வெகு அரிதாக உள்ளது. எனவே அதை பெரிதாக யாரும் கருத வேண்டிய அவசியம் இல்லை. அந்த மாதிரி கருத்துக்களைப் புறம்தள்ள வேண்டும். 

எந்த மாற்றம் நிகழ்வதற்கும் சிறிது காலம் தேவைப் படும். அது நமது சூழலில் கொஞ்சம் அதிகம் தேவைப் படுகிறது, அவ்வளவே. 

எனக்குத் தெரிந்த வரையில் பெண் எழுத்தைப் பற்றி எழுதி உள்ளேன். இதைத் தொடர நான் அழைப்பதுபி. கு : சொல்ல மறந்தது. இது எனது முன்னூறாவது பதிவு 

அன்புடன் எல்கே

ஏப்ரல் 15, 2011

வியாபாரம் 2

வியாபாரம் 1


இரவு மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கமிஷனர் அலுவலகத்தில் இருந்துக் கிளம்பி அஸ்தம்பட்டியை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த சேகரின் அலைபேசி அலறத் துவங்கியது.  வண்டியை சாலை ஓரம் நிறுத்தி அலைபேசியில் காண்பித்த பெயரைப் பார்த்த சேகர் அதை உடனடியாக உயிர்ப்பித்து "எஸ் சார். சொல்லுங்க " என்று விறைப்பாக பதில் சொன்னான் .

"எங்கயா இருக்க ?"

"இப்பதான் செவன் ஆர்ட்சை தாண்டி போயிட்டு இருக்கேன் சார்."

 "சரி சரி . அப்படியே வண்டியைத் திருப்பி செவ்வாய்ப்பேட்டைக்கு போ. அங்க ஸ்ரீனிவாசன்னு கொஞ்சம் பெரிய ஆளு. அவரை காணோம்னு புகார் வந்திருக்கு. கொஞ்சம் பெரிய இடம். அதனாலதான் உன்னை நேரடியா அனுப்பறேன். என்னனு விசாரிச்சு சீக்கிரம் ரிப்போர்ட் பண்ணு "

"ஓகே சார் ".

சலிப்புடன் அழைப்பைத் துண்டித்தவன் வண்டியை திருப்பினான். மீண்டும் கமிசனர் அலுவலகத்தைக் கடந்து வலது பக்கம் திரும்பி சென்ட்ரல் இறக்கத்தில் வண்டியைப் பறக்கவிட்டான்.


அதே நேரத்தில் , செவ்வாய்ப்பேட்டையில் ஸ்ரீனிவாசின் வீடு பரபரப்பாய் இருந்தது. ஸ்ரீனிவாஸ் , எப்பொழுதும் மொட்டைத் தலையுடன் இருப்பதால் செவ்வாய்ப் பேட்டையில் மொட்டை செட்டியார் என்று பேசப்படுபவர். அந்தப் பகுதியின் பணக்காரர்களுள் பணக்காரர். தெய்வ பக்தியும், கருணை குணமும் கொண்டவர். அந்தப் பகுதியின் பலக்கோவில்களும் அவர் அளித்த நன்கொடையில் கட்டப்பட்டவையே . மிக எளிமையாய் , பெரும்பாலான நேரத்தில் வெள்ளை பனியனும், வேஷ்டியும் மட்டுமே அவரது உடை.


பால் மார்க்கெட்டை நெருங்கியவன் அதன் பின் எப்படி செல்லலாம் என்று ஒரு கணம் யோசித்துப் பின் பின்பக்க வழியிலே நுழையலாம் என்று முடிவெடுத்து பாலத்தை ஒட்டிய வழியிலே வண்டியைத் திருப்பினான்.


அவர்கள் வீடு இருந்த வீதிக்குள் நுழைந்தவன், வண்டியை அவர்கள் வீட்டின் முன் நிறுத்தாமல் சற்றுத் தள்ளி அந்த வீதியின் எதிரில் இருந்த ஒருக் கடையின் வாசலில் நிறுத்தினான். அவன் வண்டியை நிறுத்தியவுடன்,அந்தக் கடையில் இருந்தவர் அவனைப் பார்த்தவாறே

"யாருப்பா அது வண்டியைக் கடை முன்னாடி நிறுத்தறது ?"

கேள்விக் காதில் விழுந்தவுடன் , சேகர் திரும்பிப் பார்த்தப் பார்வையில் அவன் யார் என்பதை ராமு புரிந்துக் கொண்டான். இந்த நேரத்தில் போலீசிற்கு இந்தத் தெருவில் என்ன வேலை. போக்குவரத்து போலிசாக இருந்தாலும் காசு வாங்க மெயின் ரோட்டில் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, கடை வாசலில் வந்து நின்றுக் கொண்டு சேகர் எங்குப் போகிறான் என்று பார்த்தான்.

சீராக ஒரே வேகத்தில் நடந்துக் கொண்டிருந்த சேகர் , எங்கும் பார்க்காதது போல் தோன்றினாலும், அந்தத் தெருவின் அமைப்பை நன்கு தன் மூலையில் பதிய வைத்துக் கொண்டிருந்தான். எது எந்த சமயத்தில் உதவும் என்று சொல்ல முடியாது என்பது அவனுக்கு பால பாடம்.


ஸ்ரீனிவாசனின் வீட்டை அடைந்த சேகர், பூட்டாமல் இருந்த கேட்டைத் திறந்து பெல் அடித்தான். சில நொடித் தாமதத்திற்குப் பின் உள்கதவு திறக்கப்பட்டது.

"நீங்க ?"

"கமிஷனர் அனுப்பினார் ."

"உள்ள வாங்க"

வீட்டின் அமைப்பை ஆராய்ந்த வண்ணம் நுழைந்து அங்கிருந்த ஒரு சோபாவில் அமர்ந்தவன் "சொல்லுங்க சார் என்ன நடந்தது ?" அங்கிருந்தவர்களில் நடுத்தர வயதாக இருந்தவரைப் பார்த்துக் கேட்டான் .

"நான் அவர் மகன் கிருஷ்ணன். வழக்கம்போல மதியம் ஒரு மூணு மணிக்கு கடையில் இருந்து வீட்டுக்கு சாப்பிட வந்தார். வீட்டுக்கு வந்துட்டு வெளியில் போகிறேன் என்று சொல்லிக் கிளம்பியவர் இது வரைக்கும் வரலை சார் .'


"அவர் எங்க போறேன்னு சொன்னாரா ?"

"இல்லை சார். பொதுவா அவரே சொல்லிட்டு போவார். ஆனால் இன்னிக்கு அவர் எதுவும் சொல்லலை. "

"சரி அவர்கிட்ட செல்போன் இருக்கா ? அதுக்கு கால் பண்ணி பார்த்தீங்களா ?"

"இல்லை சார். அவர் செல்போன் யூஸ் பண்றது இல்லை. வெளியில் போறதா இருந்தா வண்டி டிரைவர் போனோ இல்லை கூட வர எங்க போனோ இருக்கும். "

"சரி அந்த டிரைவர் எங்க இப்ப ?"

"காரில் போனவரைத்தான் காணோம் சார். "

"டிரைவர் நம்பருக்கு ட்ரை பண்ணீங்களா ?"


"அதெல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு சார். மொபைல் ஆப் ஆகி இருக்கு ".


"உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா ?"

"ஏன் சார் இப்படிக் கேட்கறீங்க ?"

""எனக்கென்னவோ யாரோ உங்கப்பாவை கடத்தி இருக்கலாம் என்று தோணுது .உங்களுக்கு தொழில்ல போட்டி எதிரிகள் அப்படின்னு யாரும் இருக்காங்களா ?


"அப்படி யாரும் இல்லையே சார். இங்க கிட்டத்தட்ட  எல்லாருமே ஒரே ஜாதிதான் . இன்னும் சொல்லப்போனா நெறையப் பேரு சொந்தக்காரங்கக் கூட.யார் மேல சந்தேகப் படமுடியும் "


"அப்படி சொல்ல முடியாது . யார் வேண்டுமானாலும் செஞ்சிருக்கலாம் . பிரச்சனைன்னு வந்துட்டா எல்லாரையும் சந்தேகப் பட்டுதான் ஆகணும். வேற வழி இல்லை. "

"அவர் கார் நம்பர், ட்ரைவரோட செல் நம்பர் ரெண்டும் சொல்லுங்க. உங்களுக்கு எதாவது கால் வந்தா உடனடியா எனக்கு கால் பண்ணுங்க. உங்க போனுக்கு வர கால்ஸ் எல்லாம் ட்ரேஸ் பண்ண சொல்லிடறேன். "

தன் நம்பரைக் கொடுத்துவிட்டு அவர்களின் எண்ணை குறித்துக் கொண்டு அங்கிருந்து அவன் கிளம்பவும், அவர்கள் வீட்டு லேண்ட்லைன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

வாசல் வரை சென்றவன் மீண்டும் திரும்பினான். அதற்குள் போனை எடுத்த கிருஷ்ணன் அழைத்தவர் யார் என்று விசாரித்து , ஒரு கையால் ரீசிவரை மூடிக் கொண்டு "பஜார்ல இருந்து கூப்பிடறாங்க சார் ." என்று அவரிடம் சொல்லிவிட்டு போனில் தொடர்ந்தான்.


தான் எதிர்பார்த்த அழைப்பு இல்லை என்றுத் தெரிந்ததும், அங்கிருந்து கிளம்பினான் சேகர். மீண்டும் தான் பைக் நிறுத்தி இருந்த கடைக்கு வந்தவன் பைக்கில் கிளம்பும் முன் அந்தக் கடையில் இருந்தவரைப் பார்த்தான். அவர் பார்வையில் அவர் பதட்டமாய் இருந்தது போல் அவனுக்குத் தோன்றியது.-வியாபரம் தொடர்ந்து நடக்கும்


அன்புடன் எல்கே

ஏப்ரல் 14, 2011

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர்கள் anaivarukkum  இன்றுப் பிறக்கும் புதிய தமிழ் வருடமான "கர"  ஆண்டு வாழ்த்துக்கள். 

அன்புடன் எல்கே

ஏப்ரல் 12, 2011

ஸ்ரீராம நவமி ஸ்பெசல்

இன்று ஸ்ரீராம நவமி. அதையொட்டி திரு பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் இரண்டு பாடல்கள். இந்த வீடியோவில் ராமாயணக் காட்சிகள் முழுவதும் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டு பாடல்களும் கேட்டு முடிக்கும் பொழுது ராமாயணத்தையும் பார்த்து முடித்திருக்கலாம்.


 அனைவருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள். இராமனை வணங்குவோம். இன்று நாடுள்ள நிலையில் அவர்தான் நம்மை காக்க வேண்டும்.

அன்புடன் எல்கே

ஏப்ரல் 11, 2011

கூட்டு 11.04.2011

தேர்தலினால் நாம் கவனிக்கத் தவறியவை :
குமரி கடலில் முட்டம் கடியபட்டினத்தில் இருந்து சிறிது தொலைவில்
ஆடுமேய்ச்சான் பாறைக்கு  அருகில் உள்ள பாறையில் மோதி பனாமா கொடி கொண்ட
கப்பல் கடலில் கடந்த ஒரு வாரமாக மெதுவாக மூழ்கி கொண்டு இருக்கிறது.

நேற்று தான் சிங்கபூர் நாட்டில் இருந்து  மீட்பு கப்பல் வந்தது எண்ணெய் கசிந்து அந்த பகுதியில் உள்ள இயற்கை வளம் பாதிக்க படுவதை பலர் கவலையுடன் கவனித்து வருகின்றனர். இதைப் பற்றி எந்த சேனல்களிலும் செய்தி வரவில்லை. தமிழ் நாளிதழ்களிலும் செய்தி வரவில்லை. தி எகனாமிக் டைம்ஸ் இதழில் மட்டும் இதை பற்றிய செய்தி வந்துள்ளது. (நன்றி திரு ஒரிஸ்ஸா பாலு) ஓட்டு 

  "நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்பதை விட ஓட்டுப் போடவேண்டும் என்பது முக்கியமானது. எனவே நாளை மறுநாள் எந்த வேலை இருந்தாலும் முதலில் வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டுப் போட்டுவிட்டு பிறகு மற்றக் காரியங்களைப் பாருங்கள். இந்த முறை தேர்தல் கமிசனே பூத் ஸ்லிப் தந்து இருப்பதால் கட்சிக்காரர்களுக்கு வேலை மிச்சம். 


கல்யாண மண்டபங்கள்

புறாக் கூண்டு மாதிரியான மண்டபங்கள் இப்பொழுது அதிகரித்து வருவது நல்லது அல்ல. எதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் தப்பிப்பது கடினம். அரசாங்கம் இதற்கு ஒரு வழிமுறை செய்யுமா இல்லை வழக்கம்போல் எதாவது ஒரு பெரிய விபத்து நடந்தப் பிறகுதான் நடவடிக்கை எடுக்குமா ??

கேமராமேன்களின் தொல்லை


வரவர கல்யாணங்களில் யார் எங்கு நிற்க வேண்டும் என்பதை வீடியோ எடுப்பவர்கள்தான் முடிவு செய்கின்றனர். அவர்கள் போட்டோ எடுக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு மேடையில் செய்யப்பட வேண்டிய சடங்குகள். நீ இங்கே நிற்காதே அங்கே தள்ளி நில்லு என்று சொல்லுவதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. அதேபோல் கல்யானதிருக்கு முதல் நாள் வரவேற்ப்பு முடிந்த பின் , என்னமோ மாடலிங் போட்டோ ஆல்பம் போடுவது போல் மணமக்களை இப்படி திருப்பி அப்படித் திருப்பி வதைத்துக் கொண்டிருப்பார்கள். மணமக்கள் வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் புகைந்துக் கொண்டிருப்பார்கள்.
கல்யாணம் என்பது அவர்கள் வாழ்வில் வரும் ஒரு முக்கியமான நிகழ்வு. அதை அவர்கள் மகிழ்ச்சியோடு அனுபவிக்க வேண்டும். அவர்களை போட்டு வதைக்காதீர்கள்.

இந்தவாரப் பதிவர்

 புதிதாய் பதிவெழுத vanthirukkum திரு ராஜகோபால் அவர்கள் ஆயுத எழுத்து என்ற பெயரில் வலைப்பூ வைத்திருக்கிறார். மொத்தம் மூன்று பதிவுகளே எழுதி இருந்தாலும், அவரது அரசியல் பற்றிய பதிவு என்னைக் கவர்ந்தது. நீங்களும் படித்துப் பாருங்கள்.

http://arr27.blogspot.com


அன்புடன் எல்கே

ஏப்ரல் 07, 2011

வியாபாரம்-1

 இன்னும் சூரியன் உதிக்காத மார்கழி மாதக் காலையில், காற்றிலேக் கலந்து வந்த பனிக்காற்று உடலை ஊடுருவிக் கொண்டிருந்தது. கடைகள் திறக்க இன்னும் சில மணி நேரம் இருந்ததால் சாலை முழுவதும் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்க, வெளியூரில் இருந்து வந்த லாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றுக் கொண்டிருந்தன. 

வழக்கமான இந்தக் காட்சிகளைக் கண்டவாறே டீக்கடையை நோக்கி நடந்துக் கொண்டிருந்தான் ராமு. காலைப் பனியில் இப்படி நடப்பது அவனுக்கு ரொம்பப் பிடித்தமான ஒன்று. வாழ்வின் செயற்கைத் தனங்கள் இன்றி அந்த நேரம் இயற்கையின் ஆதிக்கம் முழுவதுமாய் இருப்பது போல் அவனுக்குத் தோன்றும். லேசாக நடுக்கம் இருந்தாலும் அந்தக் குளிர் அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.


 கடையில் நுழைந்தவன் ,"மாஸ்டர் ஸ்ட்ராங்கா ஒரு பில்டர் காபி" என்று மாஸ்டரிடம் சொல்லியவாறே அன்றைய நாளிதளைக் கையில் எடுத்தான்.

கடைப் பய்யன் கொண்டு வந்து வைத்த காபி டம்ப்ளரை ஒருக் கையில் எடுத்தவன் ,கல்லாவில் இருந்தவரை நோக்கி "என்ன முதலாளி ! என்ன விசேஷம். ஏதாவது ஸ்பெசல் நியுஸ் இருக்கா ?" என்றுக் கேட்டான். 


"ஒன்னும் பெருசா சொல்லிக்கற மாதிரி இல்லை அண்ணாச்சி" என்று சத்தமாகக் கூறிய கல்லாவில் இருந்த நபர் பின் தன் குரலைத் தாழ்த்தி "செட்டியாரைக் காணோமாம் . விஷயம் தெரியுமா ?"


அவர் குரலில் தெரிந்த மாற்றத்தைக் கண்ட ராமு ,இன்னும்  கல்லாவை நெருங்கினான். கடையில் அப்பொழுது யாரும் இல்லாமல் இருந்தது வசதியாக இருந்தது. 


 "எந்த செட்டியாரை சொல்றீங்க ? இங்க பாதி பேரு செட்டியார்தானே?"


"நம்ம மொட்டை செட்டியார்தான். "


"அவரா ? எப்ப இருந்துக் காணோம் ?"


 "நேத்து நைட்ல இருந்துக் காணோம்னு சொல்றாங்க. "

"என்னக் காரணம்னு தெரியுமா ?"

"எனக்கு என்ன அண்ணாச்சித்  தெரியும்? எதோ இது காதுல விழுந்துச்சு . உங்கக்கிட்டேன் சொன்னேன். அவ்ளோதான்"
"சரி சரி. விடுங்க"

அதற்கு மேல் அவனுக்கு கையில் வைத்திருந்த பேப்பரில் கவனம் செல்லவில்லை. காப்பியைக் குடித்து முடித்தவன் காசைக் கொடுத்து விட்டு அங்கிருந்துக் கிளம்பினான். 
அங்கிருந்துக் கிளம்பியவன், சாலையின் வலதுபுறத்தில் திரும்பி , மெயின் ரோட்டில் திரும்பி நடக்கத் துவங்கினான். ரோட்டில் எதிர்பட்டவர்களைப் புன்னகையுடன் பார்த்தாலும், அவன் மனது கடத்தப்பட்டவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. 

நேராக நடந்து ,மாரியம்மன் கோவிலை அடைந்தவன் , வெளியில் இருந்தவாறே ,அம்மனை வணங்கி விட்டு, நேராக வீடு நோக்கி நடக்கத் துவங்கினான். 

முதல் நாள் இரவு அவன் கடையை மூடும் முன் நடந்தது  அவனுக்கு நினைவிற்கு வந்தது. அவன் வழக்கமாக கடையை அடைக்கும் ஒன்பது மணி அளவில், அவன் கடை வாசலில் அந்த பைக் வந்து நின்றது. கடை அடைக்கும் சமயத்தில் யார் என்று எண்ணியவாறே அந்த பைக்கில் இறங்கியவரைப் பார்த்தான். 
-வியாபரம் தொடர்ந்து நடக்கும்

பி.கு : நான் பிறந்து வளர்ந்த செவ்வாய்ப் பேட்டையையும், செவ்வாய் பேட்டை பஜாரையும் மையமாக கொண்டக் கதை. வழக்கம் போல் உங்கள் ஆதரவு இருக்கும் என்று எண்ணுகிறேன்.

 அன்புடன் எல்கே

லஞ்சத்தை எதிர்த்து

காந்தீயவாதி அன்னா ஹஸாரே டெல்லியின் ஜந்தர் மந்தர் அருகே லஞ்சத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதை உற்சாகமான இளைஞர் கூட்டம் 'இரண்டாவது சுதந்திரப் போராட்டம்' என்று வர்ணிப்பதில் மறு கருத்து இருக்கமுடியாது.

இந்தப் போராட்டத்தை ஆதரிக்குமுகமாக இன்று (7 ஏப்ரல் 2011) மாலை 6.00 மணிக்கு மெரீனா கடற்கரையில் மெழுகுவர்த்திப் பேரணி ஒன்று நடக்க இருக்கிறது. அதுவும் காந்தி சிலை அருகே என்பதும் மிகப் பொருத்தம்தான். சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் பங்கேற்றுத் தமது ஆதரவை வெளிப்படுத்தலாம். இதை ஏற்பாடு செய்திருப்பவர் வழக்கறிஞர் கே. ரவி. இவர் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் மற்றும் பாரதிப் பற்றாளர். கூட்டத்தில் சொற்பொழிவுகள் கிடையாது என்று கூறியிருப்பது மிகவும் நிம்மதியைத் தருகிறது :-)

அங்கிருக்கும் நோட்டுப் புத்தகத்தில் கருத்துக்களை எழுதிக் கையெழுத்திடலாம். தமிழகத்தில் கட்சி வாரியாக நடத்தப்படும் சேனல்களும், பத்திரிகைகளும் இந்தக் கூட்டத்தை அசட்டை செய்துவிடவும், குறைத்துப் பேசவும் வாய்ப்பு அதிகம். நேரில் சென்று, பங்கேற்று, குறைந்தபட்சம் அநியாயத்துக்கு எதிர்ப்பைத் தெரிவிப்போம். பேரணி பெரும்பேரணியாக இருக்கட்டும்.

முடிந்தவர்கள் சென்று பங்கெடுத்து ஊழலுக்கு எதிரான போரில் நமதுக் கடமையை செய்வோம்.

பி.கு : இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது. சென்னை நண்பர்களின் கவனத்திற்காக பதிவிட்டேன்.


Overall rating
 

ஏப்ரல் 04, 2011

கூட்டு 04.04.2011

கேவலமான பிரச்சாரம் 

தமிழகத்தில் என்றுதான் அரசியல் சகிப்புத் தன்மையும் நாகரீகமும் வருமோ என்றுத் தெரியவில்லை. ஆளுங்கட்சி எதிர்கட்சித் தலைவர்களைத் தவறாகப் பேசுவதும், அதற்குப் பதிலாக எதிர்கட்சித் தலைவர்களும் அதே ரீதியில் பேசுவதும் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுமானாலும் பிடிக்காலம். ஆனால் கட்சி சார்பற்ற பொதுமக்களுக்கு இது பிடிக்காது. இந்த விஷயத்தில் வடஇந்திய அரசியல்வாதிகள்  பரவாயில்லை. என்னதான் திட்டிக் கொண்டாலும், மாற்றுக் கட்சியினரின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும் ,அவர்கள் வீடு விழாக்களுக்குப் போவதும் என்று அரசியலையும் ,மற்றவற்றையும் பிரித்தேப்பார்க்கின்றனர். அத்தகைய நிலை தமிழகத்தில் எப்பொழுது வருமோ ?


இன்று இரவு சனியை பார்க்கலாம்!
 
  எந்த ஒரு கிரகமும் சூரியனுக்கு நேர் எதிராக இருக்கும்போது அந்த கிரகம் சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு ஒளிரும். 

திங்கள்கிழமை சூரியன், பூமி, சனி ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று எதிராக ஒரே நேர்கோட்டில் வருகின்றன. திங்கள்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயம் வரை சனி கிரகத்தை அதன் வளையங்களுடன் வெறும் கண்களால் காணலாம்.

வானத்தின் கிழக்கில் ராசி மண்டலத்தின் 6-வது பகுதியான கன்னி ராசிப் பகுதியில் சனி கிரகம் மஞ்சள் நிறத்தில் தெரியும். இதை தொலைநோக்கிகள் மூலம் பார்த்தால் வளையங்கள் மிகத் தெளிவாகத் தெரியும்.

378.1 நாள்களுக்கு ஒரு முறை, சனி கிரகம் இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வரும். அதாவது 30 ஆண்டுகளில் 29 தடவை இவ்வாறு நேர்கோட்டில் வரும். அப்போதெல்லாம் நாம் சனியை வெறும் கண்களால் கண்டுகளிக்கலாம். இதற்கு முன் சென்ற ஆண்டு (2010) மார்ச் 22-ம் தேதி இவ்வாறு ஒரே நேர் கோட்டில் வந்தது இனி அடுத்த ஆண்டு (2012) ஏப்ரல் 15-ம் தேதி இவ்வாறு வரும்

ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டால் நுரையீரல் புற்றுநோய் 

கட்டடங்களின் கூரையாகப் போட பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் நுரையீரல் புற்றுநோயை உண்டாக்குகிறது என்பது உறுதியாகத் தெரிந்துள்ளதால் அதன் பயன்பாட்டை இந்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் நிபுணர்களும், அறிவியலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆஸ்பெஸ்டாஸ் என்றழைக்கப்படும் மிருதுவான, நார் போன்ற இப்பொருள் சிலிகேட் கனிமப் பொருள் வகையைச் சார்ந்தாகும். இதனை கிரைசோலைட் என்றும் அழைக்கின்றனர். இந்த ஆஸ்பெஸ்டாஸ் பெரும்பாலும் கட்டடங்களின் கூரையாகவே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கூரையாக போடப்படும் ஆஸ்பெஸ்டாஸில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறும் நார்கள் சுவாசத்தின்போது நுரையீரலிற்குச் சென்று தங்கிவிடுகிறது. இதுவே நுரையீரல் புற்றுநோய் ஏற்படக் காரணமாகிறது என்று மருத்துவ அறிவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆஸ்பெஸ்டாஸில் பல வகைகள் உள்ளன என்றாலும், அவை யாவும் ஆபத்தானவையே என்று கூறுகிறார் பேராசிரியர் எலிஹூ ரிச்டர். இவர் இஸ்ரேலின் ஹூப்ரூ பல்கலைக் கழகத்தின் மருத்துவத் துறை பேராசிரியராவார்.

மேலும் இதைப் பற்றிய விவரம் அறிய 

http://tamil.webdunia.com/miscellaneous/health/disease/1104/02/1110402058_1.htm

ஒவ்வொரு பவுண்டரிக்கும் 25 ஆயிரம் ரூபாய் 

உலக கோப்பை தொடரின் பைனலில் அடிக்கப்பட்ட ஒவ்வொரு பவுண்டரி, சிக்சருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இது உலகளவில் உள்ள, பின் தங்கிய குழந்தைகளின் படிப்புக்கு தேவையான, புத்தகங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

நல்ல விஷயம் நடந்து இருக்கு. இதற்காக வாழ்த்துக்கள்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்து தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களின் புத்தாண்டு தினம். அவர்களுக்கு எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .  இனிய உகாதி திருநாள் வாழ்த்துக்கள் நண்பர்களே.அன்புடன் எல்கே

ஏப்ரல் 01, 2011

பெற்றோர்களே எப்பொழுது திருந்துவீர்கள்

சென்ற வாரம் சனிக்கிழமை திவ்யா படிக்கும் ப்ளே ஸ்கூலில் ஆண்டு விழா . இதற்காக பள்ளி அருகில் ஒரு சிறிய ஹாலில் விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆண்டு இறுதி ஆதலால் எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனவே என் மனைவி மட்டுமே சென்றிருந்தார்கள் . அங்கு சிலப் பெற்றோர்கள் செய்த கூத்துகளைப் பிறகு எனக்கு சொன்னார்கள் . அதைக் கேட்டபொழுது எனக்குத் தோன்றியது "இவர்கள் திருந்தமாட்டார்களா ?"

ஆண்டு விழா நடப்பதற்கு இரண்டு வாரங்கள் முன்பே, பெற்றோர்களை அழைத்து ஒரு மீட்டிங் நடத்தினார்கள். அப்பொழுது சில விஷயங்கள் சொன்னார்கள். பெற்றோர்கள் ஆண்டு விழா அன்று என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய  வேண்டாம் என்று . அவர்கள் முக்கியமா சொன்னது உங்கள் குழந்தை விழா அன்று மேடை ஏற மறுத்துவிட்டால் விட்டுவிடுங்கள் . குழந்தை அப்படிதான் இருக்கும். அதை வற்புறுத்த வேண்டாம்  என்பதுதான். அதேபோல் யாரும் விழா அன்று கேமரா எடுத்து வந்து போட்டோ வீடியோ எடுக்க வேண்டாம். நாங்களே எடுத்து தருகிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.நீங்கள் எடுக்க வேண்டும் என்றால் வீட்டில் மேக்கப் போட்டவுடன் எடுத்துவிட்டு வாருங்கள். இங்கே வந்து மேடையின் முன் நின்று போட்டோ எடுக்க வேண்டாம் என்று சொல்லி இருந்தார்கள். 


 இப்ப விழா அன்னிக்கு என்ன நடந்ததுன்னு பார்ப்போம்.

 காலையில் திவ்யா ,திவ்யாம்மா இருவரையும் விழா நடந்த இடத்தில் விட சென்றப் பொழுதே கவனித்தேன். அங்கு வைத்திருந்த பெரும்பாலான பெற்றோர் கேமராவுடன் வந்திருந்தனர். நான் நினைத்தது போலவே, மேடையில் குழந்தைகள், ரைம்சிற்கு ஆட இவர்கள் மேடையின் முன் சென்று தங்கள் கேமராவில் படமெடுக்கத் துவங்கிவிட்டனர். இதனால் இரண்டு கஷ்டங்கள்


ஒன்று தங்கள் பெற்றோர் கீழே நிற்பதைப் பார்த்த சிலக் குழந்தைகள் மேடையில் இருந்து இறங்க முயற்சிக்க, ஆசிரியைகளுக்கு அந்தக் குழந்தைகளை சமாளிப்பதுக் கடினமாகி விட்டது .

இரண்டு பின் வரிசையில் அமர்ந்து இருந்தவர்களால் நிகழ்ச்சியைப் பார்க்க இயலவில்லை.

 பள்ளி நிர்வாகம் படம் மற்றும் வீடியோ அடங்கிய சீடியை தருவதாக சொல்லியும் இப்படி செய்யும் பெற்றோரை என்ன செய்வது ?

அடுத்த நிகழ்வைப் படியுங்கள்
 
ஒரு குழந்தை , திவ்யா வயதுதான் இருக்கும். மேடை ஏற மறுத்துவிட்டது. மாட்டேன்னு அடம் அழுகை. டீச்சர்களும் கூப்பிட்டு பார்த்தார்கள் , அந்தக் குழந்தையின் அம்மாவும் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அந்தக் குழந்தைக்கு எதோ பயமோ இல்லை வேற எத காரணமோ அலுத்து அடம் பிடித்து கீழேயே நின்று விட்டது. இது ஒரு பெரிய விஷயம் இல்லை. மூன்று வயதுக் குழந்தைகளிடம் இது ஒரு சகஜமான விஷயம்.

இதன் பின் அந்தக் குழந்தையின் தாயும் பாட்டியும் செய்ததுதான் கண்டனத்துக்குரியது. அந்தத் தாய் தொடர்ந்து அந்தக் குழந்தையை திட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் "சனியனே" என்றும் திட்டி இருக்கிறார். தாய் எதற்கு திட்டுகிறார் என்றுக் கூடப் புரியவில்லை அந்தக் குழந்தைக்கு. இவர்கள் திட்டத் துவங்கியவுடன் அழ ஆரம்பித்து விட்டது. அந்த அழுகைக்குப் பரிசாக இரண்டு அடி கிடைத்ததுதான் பரிதாபம்.  

ப்ளே ஸ்கூலில் குழந்தைகளை ஊக்குவிக்க ஒரு நிகழ்ச்சி . அவ்வளவுதான், எதற்கு பெற்றோர்கள் இப்படி நடக்கின்றனர் ? அந்த நிகழ்ச்சியில் ஆடாமல் போனால் என்ன ஆகப் போகிறது ? இத்தனைக்கும் அங்குப் படிக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசு உண்டு என்று சொல்லி இருந்தார்கள். அந்த வயதில் குழந்தைகளை கட்டாயப் படுத்துவதில் என்ன லாபம் ?

பெற்றோர்களே எப்பொழுது திருந்துவீர்கள் ??

அன்புடன் எல்கே