மார்ச் 31, 2011

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்றுப் பிறந்தநாள் காணும் சகோதரி காயத்ரிக்கு இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்


அன்புடன் எல்கே

மார்ச் 29, 2011

இது புதுசுக் கண்ணா புதுசு


பல வெளிநாடுகளில் இருந்து குறிப்பா ஆப்ரிக்காவில் இருக்கு நாடுகளில் இருந்து மெயில் வரும் . இவ்ளோ காசு உன் அக்கவுன்ட்டுக்கு மாத்தறேன், உன் அக்கவுன்ட் நம்பர் குடுன்னு கேட்டு வரும் மெயில்கள் இப்ப பழசு. இப்ப எல்லாம் புதுசு புதுசா ஏமாத்த ஆரம்பிச்சிட்டாங்க. 

இப்ப லேட்டஸ்ட் மோசடி எஸ் எம் எஸ் மூலம்தான் நடக்குது. நேற்று இரவு எனக்கு வந்த எஸ் எம் எஸ் 

congrats! you have been selected to get a natural pearl set of rs.2499/-/ For details SMS "W" to 9248094343. Valid for 48hours only T&C.


இதுதாங்க அந்த எஸ் எம் எஸ். நான் சமீபக் காலத்தில் எந்தப் போட்டியிலும் கலந்துக்கலை. அப்படி எதாவது ஒரு போட்டியில் கலந்துக்கிட்டு இருந்தாலும் சொல்லலாம் அதிர்ஷ்டம் நல்லா இருக்குனு. 

எப்படி எல்லாம் கிளம்பி வரங்கா பாருங்க நம்ம பணத்தை ஏமாத்த. இந்த மாதிரி எஸ் எம் எஸ்கள் மோசடியின் முதல் கட்டம். நீங்க விவரம் கேட்டு மெசேஜ் அனுப்பினால் நீங்கள் இவ்வளவு கட்ட வேண்டும் என்பது போன்ற கண்டிசன்கள் சொல்லப்படும்.  

பார்த்து ஜாக்கிரதையா இருந்துகோங்க அப்பு, அவ்வளவுதான் நான் சொல்லமுடியும்.

அன்புடன் எல்கே

மார்ச் 28, 2011

கூட்டு 28.03.2011

தேர்தல் பிரச்சாரக் கெடுபிடி 

இந்த முறை உண்மையிலேயே தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் ரொம்ப அதிகமாக இருக்கு. ஆளுங்கட்சியினர் இந்த அளவுக்கு புலம்பி நான் பார்த்தது இல்லை. குறிப்பா சுவர் விளம்பரங்கள் செய்வது, பணம் பட்டுவாடா செய்வது இந்த விஷயங்களில் அதிகப் பட்ச கெடுபிடிகள் இருக்கு .இதற்காகவே அவர்களைப் பாராட்டனும். வாழ்க தேர்தல் கமிஷன். 

டவுட்டு 

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலவசங்கள் தரப்போறாங்க. அதை எந்தப் பணத்தில் இருந்து தருவார்கள் ? நம்மோட வரிப்பணத்தில் இருந்துதானே ? நம்மகிட்ட காசு வாங்கி அதையே இலவசமா திருப்பி எதுக்குத் தரனும் ? பேசாம அவங்களுக்கு தரவேண்டிய வரியை நாம் தராமல் அதில் அந்தப் பொருட்களை நாமே வாங்கிக் கொள்ளலாமே ??


புத்தக வெளியீடு

நேற்று கேபிள் அவர்களின் "கொத்து பரோட்டா ", கே ஆர் பி செந்தில் அவர்களின் "பணம்" மற்றும் உலகநாதன் அவர்களின் புத்தகம் ஆக மொத்தம் மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா நடந்தது. வேறு சிலக் காரணங்களால் போக இயலவில்லை. புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள்.


2012 AFC சேலேஞ் கப் 
இந்தியக் கால்பந்து அணி 2012 AFC சேலேஞ் கப் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தப் பற்றி பெரும்பாலான நாளிதழ்களில் எந்த செய்தியும் வரவில்லை. இந்தியக் கால்பந்து அணிக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த வாரப் பதிவர் 

இவர் மூன்று வலைப்பூக்கள் வைத்துள்ளார். ஒன்று இசைக்கென்றே ஒதுக்கி உள்ளார். மற்றொன்றில் கதைகள் எழுதுகிறார். இன்னொன்று படங்களுக்காய். இவரது வலைப்ப்பூக்களை காண 


அறிவிப்பு   
  
ஒருப் பதிவரை ரொம்ப நாளாக் காணோம். கொலையைப் பற்றி விஷாரிச்சிட்டு வரேன்னு போனார் இன்னும் வரவே இல்லை. அவருக்கு என்ன ஆச்சோன்னு  கவலையா இருக்கு.  பொற்கொடி காணாமல் போய் கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு . சீக்கிரம் இவரைக் கண்டுப் பிடிச்சிக் கொடுக்கவும்.


அன்புடன் எல்கே

மார்ச் 24, 2011

நினைவுகள் 20

அவன் என்ன சொல்லப் போகிறான் என்று எண்ணிக்கொண்டே அமைதியாக ஜூஸைக் குடித்து முடித்தாள். அவளிடம் அதை எப்படி சொல்வது என்ற யோசனையுடன் ரமேஷ் மெதுவாகக் குடித்துக் கொண்டிருந்தான்.  கோப்பையில் இருந்த ஜூஸ் காலி ஆகியும் ஒரு சில நிமிடங்களுக்கு அங்கு அமைதியே நிலவியது. பின் ஒருவாறு தைரியைத்தை வரவழைத்துக்கொண்டவனாக  பேச ஆரம்பித்தான்.

"வெங்கட் கிட்ட அதைப் பத்தி சொன்னது சித்ரா இல்லை. "

"அப்புறம் வேற யாரு...?"

"....நான்தான் "

 அவன் சொன்னது அவளுக்கு அதிர்ச்சி அளித்தது என்பது அவள் முகத்தில் நன்றாகத் தெரிந்தது. சில நிமிடங்களுக்கு அவளால் எதுவும் பேச இயலவில்லை.

"அப்ப சித்ரா சொன்னதா வெங்கட் சொன்னது ...."

"அதுவும் உண்மைதான். முதலில் சொன்னது நாந்தான். விளையாட்டா எதோ பேசிட்டு இருந்தப்ப எதோ சொல்லப்போய் இதைப்பத்தி சொல்லிட்டேன் .அப்புறம்தான் அதைப் பத்தி சித்ராகிட்ட அவர் கேட்டு இருக்கணும். எனக்கு முழு விஷயமும் தெரியாதே.... சாரி சரஸ்வதி. என்னை மன்னிச்சிடு."

"ஹ்ம்ம். சரி விடு இனி அதைப் பத்தி பேசி பிரயோஜனம் இல்லை .."

 "இப்ப என்னப் பண்ணப் போற ? வெங்கட் அந்த விஷயத்தை மறந்துட்டார். "

"அது தெரியுமே . "

"உன் முடிவு என்ன ? என்ன முடிவு பண்ணி இருக்க ?"

"ஹ்ம்ம் இன்னும் எதுவும் யோசிக்கலை. "

"எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடு. அவசரப்படாத.  நான் நைட் ஊருக்கு கிளம்பறேன். எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு இன்பார்ம் பண்ணு ."

"ம். சரி கிளம்பலாமா ?"

அவன் மேல் கோபம் இல்லையென்று வாயால் சொன்னாலும், மனதினுள் ஒரு பக்கம் கோபம் இருந்தது. எனவே சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருந்தாள். பில் செட்டில் பண்ணிவிட்டு வெளியே வந்தவர்கள் நேரெதிர் திசைகளில் சென்றனர்.


உணவகத்தில் இருந்து வந்தவள் , மீண்டும் யோசிக்கத் துவங்கினாள். முதலில், ரமேஷ்,வெங்கட், சித்ரா என்று அனைவரின் மீதும் கோபம் வந்தாலும், யோசிக்க யோசிக்க தான் செய்தத் தவறு புரிந்தது அவளுக்கு .  நம்பிக் காதலித்தவனை சந்தேகப்பட்டது தவறென்றால் அதை மற்றவர்களிடம் கேட்டது அதைவிடப் பெரியத் தவறு . இப்படி தான் தவறு செய்துவிட்டு வெங்கட்டை குற்றம் சொல்வது தப்பு என்று உணர்ந்தவள் , அவனிடம் பேச முடிவெடுத்தாள்.

அலைபேசியைக் கையில் எடுத்தவள் , இரண்டு தினங்களுக்கு முன்பு தனக்கு வந்த அழைப்புகளில் இருந்த வெங்கட்டின் எண்ணை தேடி எடுத்து அழைத்தாள். மறுமுனையில் ரிங் மட்டுமே சென்றுக் கொண்டிருக்க, இவளுக்கு இதயம் துடிப்பு அதிகரித்துக் கொண்டிருந்தது. சில நொடிகள் காத்திருப்புக்குப் பின்

"ஹலோ !"

அவன் குரலைக் கேட்டவுடன், இவளால் பதிலுரைக்க முடியவில்லை. பொங்கி வரும் கண்ணீரை நிறுத்தக் கஷ்டப்பட்டாள்.ஒருவாறு சமாளித்துக் கொண்டு "நான் சரஸ்வதி பேசறேன்"

இவள் குரலைக் கேட்டவுடன் அவனுக்கு மனதில் இனம் புரியாத சந்தோசம் வந்தாலும், எதற்கு இப்பொழுது போன் செய்துள்ளாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

"உன் குரலை வெச்சே தெரிஞ்சிகிட்டேன். சொல்லு சாரு. என்ன விஷயம் ? ."

"உன்கிட்ட   கொஞ்சம் பேசணும் ."

"ம். போன்லய இல்லை நேர்லையா?"

"உன் இஷ்டம். நீ எப்படி சொன்னாலும் சரி. "

"சரி நேர்ல வரேன். எங்க வரட்டும் "

ஒரு கணம் யோசித்தவள்,

"நான் இப்ப தங்கி இருக்கற வீட்டுக்கு வர முடியுமா ? "

"நோ ப்ராப்ளம்.அட்ரஸ் சொல்லு "

அவள் அட்ரஸ் சொல்ல சொல்லக் குறித்துக் கொண்டவன்,அரை மணி நேரத்தில் அங்கு வருவதாக சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

அவன் போனைத் துண்டித்தவுடன், பரபரப்பானாள் சாரு. அவன் வரும் முன் தான் ரெடியாகவேண்டும் என்று நினைத்தவள் , குளித்து முடித்து என்ன உடை உடுக்கலாம் என்று யோசித்தாள். சில நிமிட யோசனைக்குப் பிறகு அவனுக்கு மிகப் பிடித்த சேலை அணிவது என்று முடிவெடுத்தாள்.

அவள் தயாராவதற்கும், வீட்டு அழைப்பு மணி ஒலிப்பதற்கும் சரியாக இருந்தது.

பரபரப்புடன் சென்று கதவைத் திறக்க அங்கு வழக்கமான புன்னகையுடன் நின்றுக் கொண்டிருந்தான் வெங்கட்.

சில நிமிடங்கள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரில் பார்ப்பதால், ஒருவர் மற்றொருவரை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.

"நீ மாறவே இல்லை வெங்கட் "

"எதை வெச்சி சொல்ற ?"

"இன்னும் அந்தக் குறும்ப சிரிப்பு அப்படியே இருக்கு "

"ம். சரி என்ன விஷயம் ?"

அவள் நேரில் அதுவும் வீட்டிற்கே வர சொன்னபொழுதே நல்ல விஷயமாகத்தான் இருக்கும் என்று நினைத்தாலும் அதை அவள் வாயால் கேட்க வேண்டும் என்று எண்ணினான் .

"என்னை மன்னிச்சிடு வெங்கட் . நான் நெறையத் தப்புப் பண்ணிட்டேன். தப்பெல்லாம் என் மேல வெச்சிகிட்டு உங்களை திட்டி தேவை இல்லாமல் சண்டைப் போட்டு பிரிஞ்சு, இத்தனை நடந்தப் பிறகும் அதை எல்லாம் மறந்து எனக்கு நீங்க போன் பண்ணப்பக் கூட உங்க கிட்ட ஒழுங்கா பேசலை நான் . என்னை மன்னிப்பீங்களா ?"

"முட்டாளா நீ ? உன்னை நான் மன்னிக்காம இருந்தா எதுக்கு உனக்கு அன்னிக்கு போன் பண்ணி இருக்கப் போறேன் ?'

இதுவரை தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டு பேசிய சாருவால் இதன் பின் தன்னை அடக்க இயலவில்லை. தன்னை மறந்து அழத் துவங்கினாள்.

" சாரு! என்னமா இது ? எதுக்கு இப்படி ? நடந்ததை ஒருக் கனவா எண்ணி மறந்திருவோம். இனி எல்லாம் நல்லபடியா நடக்கும் ஓகே?"

அழுது முடித்தப் பொழுதும் கண்ணில் இன்னும் ஒட்டி இருந்த கண்ணீர்த் துளிகளுடன் 'ம்ம் சரி" என்று சொல்லியவாறே அவன் தோளில் சாய்ந்தாள்.

அதே சமயம் வெங்கட்டின் போன் ஒலித்தது.  போனை எடுத்த வெங்கட் " சீக்கிரம் வந்திருவேன். ஆமா. ஒரு நல்ல விஷயம் காத்திருக்கு. வந்து சொல்றேன் " என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

பின் சாருவிடம் "அம்மாதான் போன்ல .  நான் வேற உன்கிட்ட கேட்காம சொல்லிட்டேன் . ஓகே சொல்லிடலாம்தானே இல்லை ..."

"உதை படுவ. ஒழுங்கா ஓகே சொல்லிடு அம்மாகிட்ட "

அப்பொழுதுதான் அவனுடைய உதட்டை அருகில் பார்த்தவள் "அடப்பாவி மறுபடியும் ஸ்டார்ட் பண்ணிட்டியா ? இனி பேசி பிரயோஜனம் இல்லை. இப்பவே உன் விரலை வெட்டப் போறேன் இரு ." என்று அவள் எழ , இவன் ஓட ஆரம்பித்தான்.

- நினைவுகள் முடிந்தது


பி. கு :இது வரைக்கும் இந்த தொடரை பொறுமையுடன் படித்த அனைவருக்கும் எனது நன்றிகள். காதலை மையமா வைத்து நான் எழுதுவது முதல் முறை. அப்பாவி அளவுக்கு எழுத முடியாட்டியும் ஓரளவு நல்லாவே எழுதி இருக்கேன்னு நினைக்கிறன். நான் சொல்றது சரியாத் தவறான்னு நீங்களே சொல்லுங்க.

அப்புறம் தொடர் முடிஞ்சிடுசேன்னு சிலர் சந்தோசப் படுவாங்க (நான் சத்தியமா அப்பாவியை சொல்லலை ) . அவங்களுக்காக நான் சொல்றது அடுத்தத் தொடர் மிக மிக விரைவில் துவங்கும் என்பதே. கண்டிப்பா அது காதலை அடிப்படையாக வைத்து அல்ல. நன்றி. 


அன்புடன் எல்கே

மார்ச் 22, 2011

கூட்டு 22.03.2011

போன வருடம் இந்தத் தலைப்பில் கலவையான பல விஷயங்களை வைத்து சில பதிவுகள் எழுதினேன். பிறகு நின்றுப் போய்விட்டது. தேர்தல் முடியும் வரை இனி இது வரும்.

தேர்தல்

இனி ஒரு மூணு வாரத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் இருக்கும். ஒழுங்கா யார் யாரு எந்தப் பகுதியில் பிரச்சாரம் பண்றாங்கன்னு பேப்பர்ல பார்த்து வச்சிக்கணும். அப்பத்தான் சரியான நேரத்துக்கு ஆபிசுக்கும், திரும்பி வீட்டுக்கும் வந்து சேர முடியும். இல்லையெனில் திருப்பிவிடப்பட்டு பல இடங்களில் சுற்ற வேண்டி இருக்கும். எனவே தினமும் கட்சிக்காரங்களை விட உன்னிப்பா பிரச்சார இடங்களை பார்த்து வைத்துக் கொள்ளவும்.


சந்தேகம் 

மத்திய அரசு ஊழியருக்கு மீண்டும் அகவிலைப் படி அதிகரிக்கப் போறாங்களாம். ஆறு மாநிலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் ஆகாதா ???


வலைப்பூக்களுக்குக் கட்டுப்பாடு

மத்திய அரசு , வலைப்பூக்களைக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இதுத் தொடர்பாக  ஏற்கனவே இருக்கும் சைபர் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி , நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எழுதும் தளங்கள் தடை செய்யப்படலாம். இதைப்பற்றி திரு காஷ்யபன் எழுதியுள்ளப் பதிவைப் பார்க்கவும் . பதிவர்களில் சட்ட வல்லுனர்கள் யாரவது இருந்தால் இதைப் பற்றிய விளக்கம் அளிக்கவும் .

ஜுரம்

தேர்தல் சுரமும், கிரிக்கெட் சுரமும் ஒரே நேரத்தில் தமிழகத்தைப் பிடித்திருக்கிறது. நாளை மறுநாள் காலிறுதியில் ஆஸ்த்ரேலியாவை எதிர்த்து இந்தியா ஆடுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் அறை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் ஆட வேண்டி வரலாம். இன்னும் இரு வாரத்துக்கு கிரிக்கெட் சுரம்தான் உச்சத்தில் இருக்கும் என்றெண்ணுகிறேன். அதற்குப் பிறகே தேர்தலின் தாக்கம் தெரியும்.

இந்த வாரப் பதிவர்

 முடிந்த வரை ஒரு புதுப் பதிவரை இந்தப் பகுதியில் அறிமுகப் படுத்த எண்ணுகிறேன் . அந்தவகையில் இந்த வாரப் பதிவர் சாகம்பரி. மகிழம்பூச்சரம் என்ற வலைப்பூவில் இவர் பல நல்ல ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை எழுதி வருகிறார். குறிப்பாக குடும்பம் ,பெண்கள் பற்றி எழுதி வருகிறார்.

இவருடைய வலைப்பூவிற்கான சுட்டி http://mahizhampoosaram.blogspot.com

உபுண்டு 

வீட்டில் விண்டோசில் இருந்து இலவச இயங்குத் தளமான உபுண்டுவிற்கு மாறிவிட்டேன். தமிழ் எழுத்துருப் பிரச்சனை இருந்ததால், இரண்டு நாட்களாக அதிகம் இணையம் பக்கம் வரவில்லை. விண்டோசை விட எளிதாக உள்ளது உபுண்டு . 

அன்புடன் எல்கே

மார்ச் 19, 2011

நினைவுகள் 19

ரமேஷை அழைத்து பாலிமர் உணவகத்துக்கு வர சொன்னவள், தன் உடை மாற்றிக் கொண்டு பாலிமர் சென்றாள். முதல் நாளே தான் தாமதமாய் போனதை நினைத்த சாரு, சிறிது வேகமாகவே வண்டியை ஓட்டிச் சென்றாள். பாலிமர் உணவகத்தின் உள்ளே நுழைந்து பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியவள், உணவகத்தின் உள்ளே செல்லாமல், வெளியே தோட்டத்தில் காலியாக இருந்த மேசைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு அமர்ந்தாள். பின் தன் அலைபேசியில் இருந்து ரமேஷை அழைத்தாள்.

"ரமேஷ் எங்க இருக்க ?"

"இதோ வந்துட்டேன் . அஞ்சே நிமிஷம். "

"சரி உள்ள நுழைஞ்ச உடனே ரைட் சைட்ல  இருக்கற கார்டன்ல லாஸ்ட் டேபிள் "

"ஓகே வரேன் "

ஆர்டர் எடுக்க வந்த சர்வரை சிறிது நேரம் கழித்து வர சொன்ன சாரு , ஒரு வாரத்தில் தன் வாழ்வில் நடந்த குழப்பங்களை மீண்டும் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளின் மன நிலைக்கு அவள் காத்திருந்த ஐந்து நிமிடங்கள் ஐம்பது நிமிடங்களாய் தோன்றியது. மீண்டும் அவனை அழைப்போமா என்று அவள் அலைப்பேசியை எடுப்பதற்கும் ரமேஷ் வருவதற்கும் சரியாக இருந்தது.

அவள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தவன், முதல் நாள் பார்த்த சாருவுக்கும், அவன் கண் முன் இருந்த சாருவுக்கும் சில மாற்றங்கள் இருப்பதை உணர்ந்தான். கண்கள் சிவந்து முகம் வாடி சோர்ந்திருந்தாள். முதல் நாள் உற்சாகத்துடன் வந்தவள் இன்று அதற்கு நேர் எதிராய் சோர்ந்து அமர்ந்து இருந்ததைப் புரிந்து கொண்டான்.

"நைட் ஒழுங்காத் தூங்கலியா ?"

"ம்."

"சரி என்ன சாப்பிடற. ஆர்டர் பண்ணிட்ட கொஞ்ச நேரத்துக்கு வரமாட்டான். "

"எனக்கு எதாவது ஒரு ஜூஸ் சொல்லு போதும் "

"ஓகே "

சர்வரை அழைத்த ரமேஷ் இருவருக்கும் ஜூஸ் ஆர்டர் செய்தான்.

"சொல்லு சரஸ்வதி. என்னப் பிரச்சனை ? எனக்கு தெரிஞ்சு காலேஜ் முடியறவரைக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லியே ?"

"ம் என்ன சொல்ல ? எல்லாம் விதி ."

"ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லு . விதிய மாத்த முடியுமா இல்லையான்னு பார்ப்போம் "

"சரி சொல்றேன். யார்கிட்டையாவது சொன்னாதான் மனசு கொஞ்சம் சரி ஆகும் ."

"முதல் வருஷம் ஒரு முறை உன்கிட்ட வெங்கட்டைப் பற்றி விசாரிச்சேன் ஞாபகம் இருக்கா ?"

"நல்லாவே நியாபகம் இருக்கு, பாதி கேட்ட . அப்புறம் வேற எதோ கேட்கனும்னு சொன்ன, ஆனா கடைசி வரை கேட்கவே இல்லை. "

"ம் ஆமாம். சித்ராவும் வெங்கட்டும் காதலிக்கறதா கேள்விப் பட்டேன்.  அதை எப்படி உன்கிட்ட கேட்கறதுன்னு தயங்கிட்டு இருந்தேன். அப்பதான் எதேச்சையா சித்ராவ பார்த்தேன். பேசாம நேரடியா அவகிட்டயே கேட்டுடலாம்னு அவளை விசாரிச்சேன்.
அப்புறம்தான் தெரிஞ்சது அவங்க க்ளோஸ் பிரெண்ட்ஸ் மட்டும்தான். அதுக்கு மேல எதுவும் இல்லைன்னு"

"சரி அதான் எதுவும் பிரச்சனை இல்லையே ? அப்புறம் என்னாச்சு "

"அதுக்கப்புறம் ஒன்றரை வருஷம் எந்தப் பிரச்சனையும் இல்லை. கடைசியா வெங்கட் சர்டிபிகேட் வாங்க வந்தப்பதான் பிரச்சனை ஆரம்பிச்சது.  வெங்கட் கிட்ட எதுவும் சொல்ல மாட்டேன்னு சொன்னா சித்ரா, நான் விசாரிச்சது பத்தி சொல்லிட்டா . அதை பத்தி என்கிட்டே வெங்கட் கேட்டார் .

"சித்ராகிட்ட என்ன கேட்ட நீ ?"

"ஒன்னும் கேட்கலை..."

"நிஜமா ஒன்னும் கேட்கலை. "

"ஒன்னே ஒண்ணுதான் கேட்டேன்..."

"அவ்வளவு நம்பிக்கை இல்லையே என் மேல உனக்கு. அதை என்கிட்டே கேட்டு இருக்கலாமே . அவகிட்ட ஏன் கேட்ட ?"

"நீங்க அன்னிக்கு வரலை. "

"ஆமாம் அப்படியே வராம போய்டுவேனா? மறுபடியும் காலேஜுக்கு வந்துதான ஆகணும் . அதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உனக்கு ?"

"சாரி ... மன்னிச்சுடு என்னை ...."

"மன்னிப்பாம் மண்ணாங்கட்டி. அவளுக்கு ஏற்கனவே நம்மளை பத்தித் தெரியும் அதனால எந்தப் பிரச்னையும் இல்லை. இதே அவளுக்கு நம்ம விஷயம் தெரியாம இருந்திருந்தா என்ன ஆகும் ? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாம் "

"அதான் சாரி கேட்டுட்டேன் இல்லை. "

"சரி ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் .  இதே சந்தேகம் எனக்கு உன் மேல வந்திருந்தா ...?"

"என்னடா சொல்ற ?"

"நீ என்ன சந்தேகப் பட்ட மாதிரி , நான் உன்னை சந்தேகப் பட்டிருந்தா ? நீ யாரையாவது , சரி ஒரு உதாரணத்துக்கு ரமேஷை லவ் பண்றேன்னு சந்தேகப்பட்டு அவன்கிட்டையோ  இல்லை உன் பிரெண்ட்ஸ் யார்கிட்டையோ கேட்டிருந்தா நீ என்னப் பண்ணி இருப்ப ?"

"டேய் லூசா நீ ? அப்படி வேற நினைப்பியா நீ ?"

"நீ மட்டும் நினைக்கலாம் . நான் நினைக்ககூடாதா ?"

சொல்லிக் கொண்டிருந்த பொழுதே அவள் விழிகளின் ஓரத்தில் கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது, அவளுக்கு வெங்கட்டின் மேல் மனதில் இன்னும் இருந்தக் காதலைக் காட்டியது.

இப்படி ஆரம்பிச்ச சண்டை ,கடைசியா ரெண்டு நாள்ல லவ் கட் ஆகர அளவுக்கு கொண்டு போய்டுச்சு. ரெண்டு மூணு முறை பேச முயற்சி செஞ்சார். ஆனால் எனக்கு அன்னிக்கு அவன் என்னை சந்தேகப்பட்டது ரொம்ப தப்பா தெரிஞ்சது. அதனால அவனை விட்டு விலக ஆரம்பிச்சேன்.

விதியோட விளையாட்டு, இப்ப என்னை பொண்ணு கேட்டு அவங்க வீட்ல இருந்து போட்டோ வந்து இருக்கு. அது விஷயமா அவன் போன் பண்ணப்பக் கூட எனக்கு அவன் மேல இருந்த கோபம் போகலை. இஷ்டம் இல்லைன்னு சொல்லிடு கட் பண்ணிட்டேன்.

"லூசா நீ ? நீ அவரை சந்தேகப் படலாம் . ஆனால் அவர் அந்த மாதிரி ஒரு கேள்விக் கூடக் கேட்கக்கூடாதா ? எந்த ஊரு நியாயம் இது ?"

"ஏன்டா நீயும் அவரை மாதிரியே பேசற ?"

"ஆமாம் பின்ன எப்படி பேசுவாங்கலாம்? நீ அவரை சந்தேகப்பட்டு வேற ஒருத்தர்கிட்ட போய் கேட்டு இருக்க. அவர் அப்படி பண்ணாரா ?"

"இல்லை."

"அப்புறம் என்ன ? சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு விஷயம் சொல்லணும் உன்கிட்ட முதல்ல. "

"என்னடா விஷயம் ?"

முதல்ல ஜூசைக் குடி. அப்புறம் சொல்றேன் ."


நினைவுகள் தொடரும்
மார்ச் 16, 2011

மாலை மாற்று

நம் முன்னோர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளத் தவறிய விஷயங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் "மாலை மாற்று ". 

ஆங்கிலத்தில் "பாலிண்ட்ரோம்" என்று ஒன்று உள்ளது. தமிழிலும் வார்த்தைகள் உண்டு. அதே போல் பாடல்களும் பல உண்டு. அந்த வகையில் திருஞான சம்பந்தர் ஒருப் பதிகம் எழுதி உள்ளார். "திருமாலை மாற்றுப் பதிகம்" என்ற அப்பதிகமும் அதன் உரையும் கீழே உள்ளது. 

மாலை மாற்று என்றால் என்ன?

"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அ·தாய் வருவதை மாலை மாற்றென மொழி"

 ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும்.  அது முன்னிலிருந்து வாசிக்கும் அதே வாசகமாக அமையவேண்டும்.

பாடல் எண் : 1

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

பொழிப்புரை :

ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.

பாடல் எண் : 2

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

பொழிப்புரை :

வேள்வி வடிவினனே. யாழ் வாசிப்பவனே. அடியார்கட்கு அருள வரும்பொழுது உருவத்திருமேனி கொள்பவனே. சங்கார கருத்தாவே. அனைத்துயிர்க்கும் தாயானவனே. ஆத்திப்பூ மாலை அணிந்துள்ளவனே. தாருகாவனத்து முனிபத்தினிகளாகிய மகளிர் கூட்டத்தை வேட்கையுறும்படி செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. துன்பங்கள் எவற்றினின்றும் எம்மைக் காப்பாயாக.

பாடல் எண் : 3

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

பொழிப்புரை :

அழியாத மூப்பிலாத தசகாரியத்தால் அடையும் பொருளாக உள்ளவனே. சீகாழி என்னும் திருத்தலத்து முதல்வனே. எல்லோரும் அஞ்சி நீங்குகின்ற சுடுகாட்டில் நள்ளிரவில் நடனமாடும் நாதனே. மாண்புமிக்கவனே. ஐராவணம் என்னும் யானையின் மேல் ஏறி வருபவனே. கொடையில் கடல் போன்றவனே. சாவினின்றும் எங்களைக் காத்தருள்வாயாக. ஒளியுடைய மாணிக்கம் போன்றவனே. வேண்டும் வரங்களைத் தந்தருள்வாயாக. எங்கள்முன் எழுந்தருள் வாயாக. முன்னைப் பழம்பொருளே. காற்று முதலான ஐம்பூதங்களின் வடிவானவனே!

பாடல் எண் : 4

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

பொழிப்புரை :

என்றும் மாறுதலில்லாத மெய்ப்பொருளானவனே. தாங்கிய வீணையை உடையவனே. கொடிய பிறவித் துன்பம் எங்களை அடையாவண்ணம் வந்து காத்தருள்வாயாக. விண்ணிலுள்ள தேவர்கள் துன்பம் அடையாதவாறு மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை அழித்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே, ஆகாய சொரூபியே! நீ விரைந்து வருவாயாக! அருள் புரிவாயாக.

பாடல் எண் : 5

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

பொழிப்புரை :

யாவற்றுக்கும் கால கர்த்தாவாக விளங்குபவனே. எப்பொருளிலும் எள்ளில் எண்ணெய் போன்று உள்ளும், புறம்பும் ஒத்து நிறைந்திருப்பவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! அறிவில் மேம்பாடு உடையவனே! அனைத் துயிர்கட்கும் தாயாகவும், உயிராகவும் உள்ளவனே! என்றும் அழிவில்லாதவனே! இன்குரல் எழுப்பும் கின்னரம் முதலிய பறவைகள் தன்னருகின் வந்து விழும்படி வீணைவாசிப்பவனே. யாங்கள் மேற்கொண்டு ஆவனவற்றிற்கு ஆராயாதவாறு எங்களைக் காத்தருள் வாயாக!.

பாடல் எண் : 6

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த காலனைக் கடுங்குரலால் கண்டித்தவரே. உம் திருவடியால் அவனை உதைத்து அக்காலனுக்குக் காலன் ஆகியவரே. பொருந்திய சனகர் முதலிய நால்வர்க்கும் சிவகுருவாகிக் கல்லால மரத்தின் கீழ் உபதேசித்து மெய்யுணர்வு பெறச் செய்தவரே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பரம்பொருளே. மேகத்தை வாகனமாகக் கொண்டருளியவரே. அடியேங்கள் உம் திருக்கூட்டத்தில் ஒருவர் போல் ஆவோம்.

பாடல் எண் : 7

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

பொழிப்புரை :

உன்னைவிட்டு நீங்குதலில்லாத உமாதேவியை உடையவனே! ஒப்பற்ற தாயானவனே! ஏழிசை வடிவானவனே! நீயே வலிய எழுந்தருளி எங்களைக் காத்தருள்வாயாக! பேரன்பு வாய்ந்த நெஞ்சத்தை இடமாக உடையவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும், வேதங்களை அருளிச்செய்து வேதங்களின் உட் பொருளாக விளங்குபவனே. எங்களைக் கொல்லவரும் துன்பங்களை நீ கொன்று அருள்செய்யாயோ

பாடல் எண் : 8

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

பொழிப்புரை :

இறைவரின் திருவடிகளில் பேரன்பு செலுத்தும் அடியவராம் பசுக்கள் தன்வயமற்றுக் கிடக்க, கட்டிய ஆசை என்று சொல்லப்படும் பெருங்கயிற்றைத் தண்ணளியால் அவிழ்த்தருள்பவரே. மிக வேகமாக ஓடும் மானின் தோலை அணிந்துள்ள பேரழகு வாய்ந்தவரே. பொறுக்கலாகாத் தீவினைத் துன்பங்கள் தாக்க வரும்போது காத்தருள்வீராக! மன்னித்தற்கரிய குற்றங்கள் எங்களின் சிறுமைத் தன்மையால் செய்தனவாகலின் அவற்றைப் பெரியவாகக் கொள்ளாது சிறியவாகக் கொண்டு பொறுத்தருள்வீராக! ஏழிசைவல்ல இராவணன் செருக்கினால் செய்த பெரும்பிழையைத் தேவரீர் மன்னித்து அருளினீர் அல்லவா? (அடியேம் சிறுமையால் செய்த பிழையையும் மன்னித்தருளும் என்பது குறிப்பு).


பாடல் எண் : 9

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

பொழிப்புரை :

காற்றாகி எங்கும் கலந்தருள்பவனே. மறைப் பாற்றலின் வழி எவ்வுயிர்க்கும் மயக்கம் செய்து பின் அருள் புரிபவனே. பூக்களில் சிறந்த தாமரைப்பூவில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும், முறையே திருமுடியையும், திருவடியையும் காணுதலை ஒழித்த வைரத் தன்மையுடையவனே! சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. எங்களைக் கடைக்கணித்தருள்வாயாக. உன் திருவடியைத் தந்தருளுவாயாக!.

பாடல் எண் : 10

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

பொழிப்புரை :

நறுமணமும், தெய்விக மணமும், பெருமையும், புதுமையும் கலந்து விளங்கும் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருள்பவனே! துன்பங்களை நீக்கி அருள்பவனே. பேரருள் உடையவனே. அதனை அள்ளிக்கொள்ளல் அகத்தவத்தாராகிய சிவயோகிகளின் செய்கையே . புத்தர், சமணர்களின் மொழிகளை எண்ணுதலையும், நண்ணுதலையும் ஒழித்தருள்வாயாக! இப்புறச் சமயத்தார் பன்னெறிகளில் புகாமல் காத்தருளும் திறம் நின் திருவடிக்கே உரியதாகும்.

பாடல் எண் : 11

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.

பொழிப்புரை :

நேர்மையை அகழ்ந்து எறிவதாகிய, நெஞ்சத்தில் நிலைத்து எவரையும் துன்புறுத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங்களையும் அழித்தருள வல்லவனே. உலகுக்கெல்லாம் தாயாம் தன்மையை ஏற்றருளத் தக்கவன், ஒப்பில்லாத நீ ஒருவனே. நன்மை புரிந்தருளுவதில் உயர்ந்தவனே! நாங்கள் தளர்ந்த இடத்து எங்களைக் காத்தருள்வாயாக! என்று நற்றமிழுக்கு உறைவிடமாகவுள்ள திருஞானசம்பந்தப் பெருமான் சிவபெருமானைப் போற்றி அருளிய, பாடுவோர்களையும், கேட்போர்களையும் உள்ளம் குழையச் செய்யும் இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்கு எந்தக் குறைவும் உண்டாகாது.

இந்தப் பாடல்களையும் விளக்கங்களையும் கீழ்க்கண்ட தளங்களில் இருந்து எடுத்தேன்.

அவர்களுக்கு என் நன்றி 

மார்ச் 15, 2011

நினைவுகள் 18

மறுநாள் கல்லூரிக்கு சென்றப் பிறகு , அவள் வகுப்புத் தோழிகள் எதோ ஒரு ஆல்பத்தை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அசுவாரசியமாக அதைப் பார்த்தவளிடம் " நம்ம சீனியர்ஸ் போன வருஷம் டூர் போனப்ப எடுத்த போட்டோ ஆல்பம் " என்ற விவரம் தெரிவிக்கப் பட்டதும் அவளிடம் ஒரு யோசனைத் தோன்றியது.

உடனடியாக அந்த ஆல்பத்தை அவர்களிடம் இருந்து வாங்கியவள் , வேகமாப் புரட்ட ஆரம்பித்தாள். புரட்டிக் கொண்டிருந்தவளின் கண்களில் அவள் எதிர்பார்த்த போட்டோக்கள் சிக்க, அதையே உற்றுப் பார்த்தவள் , "இந்த ஆல்பம் யார்கிட்ட இருந்து வாங்கினீங்க ? அவங்களை நான் பார்க்கணும் " என்றுக் கேட்டாள்.

"இது நம்ம சீனியர் சித்ரா . நீ எதுக்கு அவங்களைப் பார்க்கணும் இப்ப ?"

"அது உனக்கு தேவை இல்லாத ஒண்ணு. நான் கண்டிப்பா அவங்களைப் பார்த்தாகனும் ."

"ம். சரி ப்ரேக்ல வந்து ஆல்பம் திருப்பித் தரேன்னு சொல்லி இருக்கேன். அப்ப நீயும் வா ."

ப்ரேக் வரும்முன் இருந்த இரண்டு மணிநேரமும் முள்மேல் நிற்பது போல் இருந்தது சரஸ்வதிக்கு. அவள் கேள்விப்பட்டது உண்மை என்று நிரூபிப்பதைப் போல் அந்த போட்டோக்கள் இருந்தது அவளுக்கு அதிர்ச்சி அளித்தது. எதுவாய் இருந்தாலும் இன்னும் இரண்டு மணிநேரம்தானே. தெரிந்து விடப் போகிறது என்று கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

இடைவெளியில் படப்படக்கும் நெஞ்சத்துடன் சித்ராவைப் பார்க்க சென்றுக் கொண்டிருந்தாள் சாரு. அவள் உள்ளே நுழையும் பொழுதே முதல் நாள் லைப்ரரியில் பேசிக்கொண்டிருந்த இரண்டு மாணவிகள் அந்த வகுப்பில் இருப்பதைப் பார்த்துவிட்டாள். 
அவர்களைப் பார்த்தும் பார்க்காதது போல் தன் தோழியுடன் நேராக சித்ரா இருந்த இடத்திற்கு சென்றாள்.

சாருவின் தோழி அவளை அறிமுகப்படுதிவிட்டுக் காத்திருக்க சாரு அவளை கிளம்ப சொன்னாள். தான் கொஞ்சம் பேச வேண்டி இருப்பதாகவும் ,பேசிவிட்டு வருவதாகவும் சொன்னாள்.

சாருவைப் பார்த்தவுடன் அவள் யார் என்பதைப் புரிந்துகொண்ட சித்ரா , 

"வா , கேண்டீன் இல்லாட்டி வேற எங்கையாவது போய்டலாம். கிளாஸ்ல வேண்டாம்."

மௌனமாக சித்ராவைப் பின்தொடர்ந்தாள் சாரு.  முதலில் வெங்கட்டிடம் எந்த இடத்தில் தன் காதலை சொன்னாலோ அதே கூடைப்பந்து மைதானம். 

"சொல்லு சரஸ்வதி . என்ன கேட்கணும் உனக்கு ?"

"இல்லை அந்த போட்டோவைப் பார்த்தேன் . அதுல உங்க கூட இருக்கறது ....."

"ஆமாம் வெங்கட்தான். அதுல என்ன சந்தேகம் உனக்கு .?"

"இல்லை அதுல சந்தேகம் இல்லை ...."

"அப்புறம் வேற என்னப் பிரச்சனை உனக்கு ?"

"இல்லை .. போட்டோ ரொம்ப நெருக்கமா இருக்கற மாதிரி இருக்கு .. அதான் "

"ஷப்பா.. இப்ப என்ன உனக்கு வெங்கட்டும் நானும் காதலிக்கறோம்னு நினைக்கறியா?"

"ஆமாம்."

"முட்டாளா நீ ? ரெண்டு பேரும் க்ளோசா இருந்தா லவ் பண்றோம்னு அர்த்தமா ? அவன் எனக்கு நல்ல க்ளோஸ் பிரெண்ட் . அவ்ளோதான். ஆனால் அதை வெச்சு இங்க நெறையப் பேரு பல வதந்திகளைப் பரப்பி விட்டுகிட்டு இருக்காங்க. அதையெல்லாம் நீ நம்பாத . நீ அவனை காதலிக்கறேன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதை அப்பவே அவன் என்கிட்ட சொல்லிட்டான். 

தேவை இல்லாமல் அவனை சந்தேகப் படாத. ஆல் தி பெஸ்ட் ."

"என்னை மன்னிச்சிருங்க சித்ரா. நான்தான் அவசரப் பட்டுட்டேன். இதை அவர்கிட்ட..."

"கவலைப்படாத நான் சொல்லமாட்டேன். நீயும் எதுவும் சொல்லவேண்டாம். இதை இப்படியே விடு ."


இரண்டு நாட்களுக்குப் பிறகு வெங்கட் கல்லூரிக்கு வந்தான். காய்ச்சலினால் சிறிது மெலிந்தது போல் தோன்றினாலும், அவன் முகத்தில் இருந்த புன்னகை மாறவில்லை. இந்த இடைப்பட்ட இரண்டு நாட்களில் ரமேஷை சமாளிப்பது பேரு தலைவலியாக இருந்தது. மிகக் கஷ்டப்பட்டு எதோ ஒரு காரணத்தைக் கூறி அவனை ஒரு வழியாக சமாளித்தாள். 

அவன் திரும்பி வந்த அன்று வழக்கம்போல் கூடைப்பந்து மைதானத்தில் சந்தித்த அவனைப் பார்த்த பொழுது, அவளையும் அறியாமல், கண்களில் கண்ணீர் பெருகியது. அவள் வெகு நாள் பார்க்காததால் அழுகிறாள் என்று எண்ணிய வெங்கட் , அவள் விழிகளில் வழிந்த நீரைத் துடைத்தவாறே

 " ஏய் எதுக்கு இப்படி ? என்ன ஆச்சு இப்ப. அதுதான் வந்துட்டேன் இல்ல? இதுக்கே இப்படின்னா, நான் உனக்கு முன்னாடி காலேஜ் முடிச்சிடுவேன், அப்புறம் வேலைக்கோ,மேற்படிப்புக்கோ போயிட்டா இப்படி தினமுமா பார்க்க முடியும்?"

"பேசாத. அதைப்பத்தி நினைச்சாலே பயமா இருக்கு ."

"இருந்துதானே ஆகணும். கொஞ்சம் பொறுமை வேணும் இல்லையா ?"

"புத்திக்குத் தெரியுது ஆனால் மனசுக்குத் தெரியலையே "

"ஹ்ம்ம். அதெப்படித் தெரியாம போகும். மனசுக்குப் புரிய வை .."

"முயற்சிப் பண்றேன்."

அவன் கையை தன் கையுடன் சேர்த்து வைத்துக் கொண்டவள் அன்று வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தாள் அவனிடம். 


 மனமெனும் வாகனத்தில் ஏறி காலத்தில் பின்னோக்கி சென்றவள் நிகழ் காலத்திற்குத் திரும்பினாள். தூக்கம் வராமல் இருக்கவே, தன் அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தவள் நேரம் நடு இரவைத் தாண்டியிருப்பதைக் கண்டு சிறிதேனும் உறங்க முற்பட்டாள். அடுத்தநாள் மீண்டும் ரமேஷை சந்திப்பதாய் சொல்லி இருந்ததும் அவளுக்கு ஞாபகம் வர , வலுக்கட்டாயமாய் தூங்க முயற்சித்து வெற்றியும் பெற்றாள்.

முதல் நாளிரவு தூங்க வெகு நேரமானதால் காலையில் ஒன்பது மணிக்குப் பிறகே எழுந்தாள். பின் தன் வழக்கமான வேலைகளை முடித்தவள், அன்று என்ன உடை அணியலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். முந்தைய நாள் நிகழ்வுகளால் மிகவும் அலைக்கழிக்கப்பட்டிருந்ததால் சாதாரணமான ஒரு டி சர்ட்டையும் , ஜீன்சையும் தேர்ந்தெடுத்தவள் , பின் ரமேஷை போனில் அழைத்து , சேத்துப்பட்டில் இருந்த பாலிமர் உணவகத்துக்கு வர சொன்னாள்.

அவனிடம் பேசிவிட்டு அவளும் கிளம்பத் தயாரானாள்.- நினைவுகள் தொடரும் 


டிஸ்கி : விரைவில் நினைவுகள் முடியும் 

மார்ச் 14, 2011

அம்மா


சக்தி இல்லாமல் சிவன் இல்லை.இது மற்றவர்கள் வீட்டில் எந்த அளவிற்கு உண்மையோ தெரியாது. எங்கள் வீட்டில் நூறு சதவீதம் உண்மை. என் அப்பாவின் வெற்றிக்குப் பின் அல்ல , அப்பாவின் வெற்றியின் சரி பாதி என் அம்மாவால்தான். 1975 இல் பள்ளி இறுதி முடித்த உடன் திருமணம் ஆகிவிட்டது அம்மாவிற்கு. அதிகம் போனால் பதினேழு வயதிருக்கும் அப்பொழுது. 

திருமணம் ஆகி புகுந்த வீட்டிற்கு வந்தால் , ராட்சசதனமான வேலைகள் காத்திருந்தது . ஆமாம், அந்தக் காலத்தில் கிரைண்டர்கள் இல்லை எங்கள் வீட்டில். எனவே மாவு அரைப்பதில் இருந்து , பொட்டுக்கடலை உரலில் இடித்து பின் சட்னி அரைப்பது வரை எல்லாம் கையினால்தான் செய்தாகவேண்டும். என் பாட்டியும்(அப்பாவின் அம்மா ) உதவுவார்கள் . 

இப்ப மாதிரி சுவிட்ச் போட்டா தண்ணி கொட்டற வசதி இல்லை. வீட்டில் அடிபைப்பில் அடிக்கவேண்டும், இல்லையேல் தெருவில் பொதுக் குழாயில் தண்ணிப் பிடிக்கணும்.   எந்த நேரத்துக்கு தண்ணி வரும்னு சொல்ல இயலாது. சென்னை அல்லது பெரு நகர மக்களுக்கு இதுப் பத்தி தெரியாமல் இருக்கலாம். ஊர்ல எல்லாம் இன்னிக்கும் இதே மாதிரிதான் தண்ணீர் விநியோகம். இரண்டுநாளோ இல்லை சில சமயம் ஐந்து நாளோ கழித்துதான் தண்ணீர் வரும். அதுவும் இந்த நேரம்தான் வரும்னு சொல்ல இயலாது. சில சமயம் அர்த்த ராத்திரியிலும் வரும். எப்ப வருதோ அப்பப் பிடிச்சு வெச்சிக்கணும். இதுதான் இன்னிக்கு வரைக்கும் நிலைமை. இப்பவே இப்படி இருந்தால், தண்ணீர் சப்ளை அவ்வளவாக சீரடையாத நிலையில் எப்படி இருந்திருக்கும் ? வீட்டில் கிணறு இருந்தது. சுற்றி இருந்த இடங்களில் போர் போடப் போட , அந்த கங்கை சென்ற பாதாளம் வரைக்கும் வாளி சென்றால்தான் தண்ணீர் வரும் நிலை. 

கோடைக்காலத்தில் தண்ணீர் சப்ளை இன்னும் மோசமாக இருக்கும். கிணற்றிலும் தண்ணீர் இருக்காது. அந்த நேரங்களில் பஜார் ரோட்டைக் கடந்து சென்று கோவில் கிணற்றில் தண்ணீர் எடுத்து வரவேண்டும். மற்றவர்கள் வீட்டை விட எங்களுக்கு தண்ணீர் அதிக அளவில் செலவாகும். ஏனென்றால் கடைக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களும் தயாராவது வீட்டில்தான். எனவே அதிக அளவில் தண்ணீர் தேவை இருந்துக்கொண்டே இருக்கும். 

வீட்டில் சமையல் வேலை மட்டும் அம்மாவிற்கு குறைவுதான்.  மதியம் ஒரு வேளைக்கு மட்டும் சமைத்தால் போதும். காலை ,இரவு கடையில் இருந்து டிபன் வந்துவிடும். அந்த மட்டில் பிழைத்தார்கள். இல்லையென்றால் இன்னும் ரொம்ப கஷ்டமாகி இருக்கும் . 

எங்கள் வீட்டில் இருந்து என் பாட்டியின் வீடு (அம்மாவின் அம்மா வீடு ) மிஞ்சிப்போனால் அரைமணி நேரத்தில் சென்று விடும் தூரத்தில்தான் உள்ளது. இருந்தும் எனக்குத் தெரிந்து பண்டிகை ,விஷேசம் இல்லாத நாட்களில் அம்மா வீட்டிற்கு சென்ற நாட்கள் மிக மிகக் குறைவு. அப்படி எதாவது விசேஷம் என்று சென்றாலும், காலை பத்து மணிக்கு  சென்றுவிட்டு மதியம் இரண்டு மணிக்குள் வந்துவிடுவார்கள். ஒரு விஷயம் இங்க சொல்லணும் என் அம்மா அங்குப் போகக்கூடாது என்று என் அப்பா என்றும் சொன்னது இல்லை. எனக்குத் தெரிந்து தன் தாய் இறந்தப் பிறகு, என் பாட்டியை (அம்மாவின் அம்மாவை) தனது தாயாக மதித்தார் என் அப்பா. வீட்டில் எந்த முடிவெடுக்கும் முன்னரும் அவர்களிடம் கேட்காமல் செய்யமாட்டார். இதை சொல்லுவதற்கு காரணம் உண்டு. இதை சொல்லாவிட்டால் என் அப்பா , அம்மாவை அவர்கள் பிறந்தகம் அனுப்பாமல் தடை செய்துவிட்டார் என்று இன்றைய பெண்கள் நினைக்கலாம். அதற்குதான் இதை சொன்னேன். 

அன்றிலிருந்து இன்று வரை மாறாத ஒரே ஒரு விஷயம் மின்சாரப் பிரச்சனை. முன்பெல்லாம் மின்சாரம் இருக்கும் ஆனால் கிரைண்டர் போட இயலாது. லோ வோல்டேஜ் காரணமாக பல்ப் எரிந்தாலே பெரிய விஷயம் இதில் கிரைண்டர் போடுவது எப்படி ? இன்றைக்கும் சேலத்தில் பெரிய மாற்றமில்லை. அன்றைக்கு லோ வோல்டேஜ் இன்றைக்கு நோ வோல்டேஜ் . தினமும் இரண்டு மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. மாதம் ஒரு நாள் பாரமரிப்புக்காக நாள் முழுவதும் மின்வெட்டு. இதுப் போக அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் பல. அப்பவும் சரி இப்பவும் சரி மின்சாரம் இல்லாமல் போனால் ஆட்டுக்கல்லில் தான் அரைக்க வேண்டும். ரொம்ப முன்னாடியே அரைத்து வைத்தால் மாவு புளித்துவிடும் . தோசையில் ருசி இருக்காது. குளிர்சாதனப் பெட்டி உபயோகப்படுத்துவதில் எங்கள் வீட்டில் யாருக்கும் (என்னையும் சேர்த்து ) விருப்பம் இல்லை. அதில் மாவு வைத்து உபயோகித்தால் வழக்கமான ருசி இருப்பதில்லை. எங்களுக்கு திருப்தி இல்லாத ஒன்றை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்படித் தர இயலும் ? 

அம்மா பள்ளி இறுதி வரை மட்டுமே படித்திருந்தாலும், எங்கள் இருவரின் படிப்பில் அதிகம் அக்கறை செலுத்தினார்கள். அப்பா வீட்டிற்கு வர ஒன்பது மணி ஆகிவிடும். எனவே இவர்தான் எங்களை கவனித்தாக வேண்டும். நான் கல்லூரிக்கு சென்றப் பிறகும் , தினமும் அவர்களிடம் நான் அன்று என்ன நடந்தது , பரீட்சை விவகாரங்கள், மார்க் ,பிறகு அசைன்மென்ட் போன்றவற்றை சொல்லவேண்டும். இல்லையென்றால் விடமாட்டார்கள். பள்ளி இறுதிவரை நான் ட்யூசன் சென்றது இல்லை. 

என் அக்காவின் திருமணத்திற்கு ஒரு வருடம் முன்பு வீட்டை இடித்து கட்டினோம். அந்த சமயத்தில் ,வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, கட்டிடம் கட்டும் இடத்திற்கு சென்று அவர்களை மேற்பார்வை இட்டு அவர்களை வேலை வாங்கினார். அப்பாவிற்கு கடைவேலையே சரியாக இருக்கும். 

படித்து முடித்து சென்னையில் வேலைக்கு சேர்ந்தப் பிறகு , கஷ்டப் படுகிறார்களே என்று வாஷிங் மெஷின் வாங்கித் தருகிறேன் என்றேன். ஒரே வார்த்தை வேண்டாம். மீறி வாங்கினால் உபயோகிக்க மாட்டேன். அதுல போடற காசை ஏன் கையில் கொடுத்துவிடு  என்றுதான் சொல்வார்கள். இன்றுவரை கையில்தான் தோய்ப்பது என்று கொள்கை உள்ளவர்கள். கேட்டால் எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிடுவார்கள் அதனால் புதிதாய் எதாவது வாங்கித் தரவேண்டும் என்றால் அவர்களிடம் எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொடுத்துவிடுவேன். பிறகு உபயோகப்படுத்திதானே ஆக வேண்டும். 

எங்களைப் படிக்கவைத்து ஆளாக்கியதற்கு என்ன கைம்மாறு செய்ய இயலும்? எங்களால் ஆன கைமாறாய் 2006 இல் என் பெற்றோருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி செய்து பார்த்தோம். அடுத்து பீமரத சாந்தி செய்ய பேத்தி வந்தாகிவிட்டது. 

சிறுவயதில் நான் செய்த தொந்தரவுகள் அதிகம். அவர்களை விட்டு எங்கும் செல்லமாட்டேன். அவர்களும் எங்கும் செல்லக்கூடாது என்று அடம்பிடிப்பேன். ஒரு முறை வீட்டில் மின்சாரம் இல்லை. எனக்கும் எதோ கொஞ்சம் உடல் நலக்குறைவு என்று ஞாபகம். பசிக்கிறது ஏதாவது டிபன் பண்ணிக்கொடுக்குமாறு அடம்பிடித்தேன். கடையில் சென்று வாங்கிவர விடவில்லை. அரைகுறை வெளிச்சத்தில் ஏதோப் பொருளைத் தேடப் போக என் அம்மாவை தேள் கொட்டிவிட்டது. அப்பவும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் சுண்ணாம்பு வாங்கி கொட்டிய இடத்தில் வைத்துவிட்டு அதை வைத்துவிட்டு அந்த வலியிலும் எனக்கு டிபன் செய்துக் கொடுத்துவிட்டு பின்புதான் மருத்துவமனைக்கு சென்றார்கள். 


இத்துணை வருடம் கஷ்டப் பட்டுவிட்டீர்கள் இப்பொழுது சென்னைக்கு எங்களுடன் வந்து விடுங்கள் என்று என் மனைவி கல்யாணம் ஆன புதிதில் இருந்து அழைத்துக் கொண்டிருக்கிறாள். அவர்கள்தான் கேட்பதாகத் தெரியவில்லை. மாதம் ஒருமுறையோ இல்லை இருமாதத்திற்கு ஒருமுறையோ வந்து பேத்தியுடன் இருந்துவிட்டு செல்கிறார்கள். அவர்கள் எப்பொழுது இங்கு வந்து  எங்களுடன் இருக்கப் போகிறார்கள் என்றுத் தெரியவில்லை. 


என் அம்மாவை விட்டு விலகாமல் இருந்த நான் , அவர்களை விட்டு சென்னைக்கு வந்து   எட்டு வருடங்கள் ஆகி விட்டது. இங்கு வந்தப் பிறகு ஊர்ருக்கு போன் செய்தால் கூட அப்பாவிடம்தான் அதிகம் பேசுவேன். அம்மாவிடம் ஒரு சில வார்த்தைகள்தான் இன்றுவரை. அது ஏன் அப்படி என்று கேட்காதீர்கள். எனக்கே இதற்கு விடை தெரியவில்லை . பலமுறை என்னையே நான் கேள்விக் கேட்டும் இதற்கு பதில் தெரியவில்லை. 

உங்களுக்கு யாருக்காவது இதற்கு விடை தெரியுமா ??

மார்ச் 13, 2011

நினைவுகள் 17கேட்கிறேன் என்று சொன்னாளேத் தவிர அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வருவதை தெரியவில்லை. கண்கள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்க , அவள் கைகள் டேபிளில் வைத்திருந்த அவளின் நோட்டை புரட்டிக் கொண்டிருந்தது. இன்னுமே அவளது மனதில் ரமேஷிடம் இதைக் கேட்கலாமா வேண்டாமா என்று சந்தேகம் ஓடிக் கொண்டே இருந்தது. 

சொல்கிறேன் என்று சொல்லியும் சில நிமிடங்கள் அவள் எதுவும் பேசாமல் இருந்ததால் ரமேஷ் 

"சரஸ்வதி ! என்ன ஆச்சு ? அப்படி என்ன கேக்கணும் ?  என் கிட்ட கேட்கறதுல உனக்கு எதாவது பிரச்சனைனா வேண்டாம். விட்டுடு. யோசிக்கரதப் பார்த்தா அப்படிதான் தெரியுது. "

"இல்லை ரமேஷ் . அப்படிலாம் எதுவும் இல்லை. நான்தானே கேட்கனும்னு வந்தேன். எப்படி ஆரம்பிக்கரதுருன்னு தெரியலை. அதுதான் அமைதியா இருக்கேன்."


"புரியுது . ஒரு நிமிஷம் இரு ஒரு காபி வாங்கிட்டு வரேன். குடிச்சிட்டு அப்புறம் தெம்பா பேசலாம் . ஓகேவா ?"

 அவன் அங்கிருந்து சென்றால் தான் கொஞ்சம் யோசித்து பிறகு அவன் வந்தவுடன் கேட்க முடியும் என்று நினைத்தாள்.


"ம். வேண்டாம்னா விடப் போறியா ? போய் வாங்கிட்டு வா ."

ரமேஷ் காபி வாங்கி வர சென்றப் பின் , தன் முகத்தை ஒரு முறை கைக்குட்டையால் துடைத்தவள் தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக் கொள்ள முனைந்தாள். அவள் ஓரளவு நார்மலுக்கு வருவதற்கும் ரமேஷ் இரண்டு காபியுடன் வருவதற்கும் சரியாக இருந்தது.


அவள் காபி குடித்து முடிக்கும் வரை அமைதியாய் இருந்த ரமேஷ் , " இப்ப சொல்லு சரஸ்வதி."

அவள் பதில் சொல்ல வாய் திறப்பதற்கும் , அவள் தோழிகள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அவர்கள் வருவதைப் பார்த்த சரஸ்வதி " இப்ப வேண்டாம். நான் அப்புறம் பேசறேன் உன்கிட்ட." என்று பேசிக் கொண்டிருந்த விஷயத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டாள்.


இவர்கள் இருவரும்  அமர்ந்திருப்பதைப் பார்த்த அவள் தோழிகள் அங்கே வந்தனர். 

"உன்னை காலேஜ் முழுக்க தேடிக்கிட்டு இருந்தா இங்க உக்காந்து ....." அவள் முடிக்கும் முன்னரே பேசத்துவங்கிய சாரு 

"இரு இரு. விட்டா பேசிட்டே போவ . தலைவலிக்குதுன்னு காபி குடிக்கலாம்னு கேண்டீன் வந்தேன். அப்ப ரமேஷும் வந்தார். அப்படியே பேசிட்டு இருக்கோம் அவ்ளோதான். "

என்ன இருந்தாலும் தன் தோழிகள் முன் தன் காதலனை பற்றி ரமேஷிடம் விசாரிக்க விரும்பவில்லை. அவர்கள் முன் விசாரித்தால் எப்படியும் அது வெளியில் பரவி விடும் என்று அவளுக்குத் தெரியும். எனவே பேச்சை மாற்றினாள். 


சிறிது பேசிக் கொண்டிருந்து விட்டு ரமேஷ் கிளம்பினான். அவன் கிளம்பும் பொழுது "ரமேஷ் , புக் வேணும்னு சொன்னியே . மறந்துட்டியா ?" என்று சொல்லியவாறே தன்னிடம் இருந்த ஒரு புத்தகத்தை அவனிடம் கொடுத்தாள்.
ஒரு கணம் யோசித்தாலும் பின் சுதாரித்துக் கொண்ட ரமேஷ் "சாரி. மறந்தே போச்சு . தேங்க்ஸ் " என்று சொல்லியவாறு அதை வாங்கிக் கொண்டான்.

புத்தகத்துடன் கேண்டீனை விட்டு வெளியில் வந்தவன், யோசனையுடன் அதைப் பிரித்தான், அதனுள் ஒரு பக்கத்தில் "யாரிடமும் சொல்ல வேண்டாம். பிறகுப் பேசுகிறேன்" என்று எழுதி இருந்தது.

அதைப் படித்தப் பிறகு சிறுப்புன்னகையுடன் ஒரு முறை திரும்பி கேண்டீனுள் இருந்த சரஸ்வதியைப் பார்த்தான்.

அங்கோ மாத்திரை உண்டதின் விளைவாய் காய்ச்சல் விட்டுவிட்டதால், கல்லூரிக்கு கிளம்பி விடலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தான் வெங்கட்.  உடல்நிலை கொஞ்சம் சரியானதால், அங்கு இருப்புக்கொள்ளவில்லை வெங்கட்டுக்கு.


மதியம் சரஸ்வதி போன் செய்ததால் தான் இப்பொழுது அவசரமாய் கல்லூரிக்கு கிளம்பினால் கண்டிப்பாக அம்மாவிற்கு சந்தேகம் வரும் என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அந்த யோசனையை கைவிட்டான்.

என்னதான் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நேரத்தை பார்த்தான். மாலை ஐந்து மணியை தாண்டியிருந்தது. அநேகமாய் ரமேஷ் வந்திருப்பான். போன் பண்ணலாம் என்றவாறே அவன் எழவும், அவன் அம்மா வெளியில் கடைக்கு போகவும் சரியாக இருந்தது. அது ஒரு வகையில் நிம்மதியாக  இருந்தது.


அவள் வெளியில் சென்று இரண்டு நிமிடத்திற்குப் பிறகு ரமேஷிற்கு போன் செய்தான்.

"ரமேஷ் ! நான்தான் வெங்கட் பேசறேன் "

"சொல்லுங்க தல . என்ன விஷயம் ? ஏன் வரலை இன்னிக்கு ?"

"இல்லடா உடம்பு கொஞ்சம் சரி இல்லை. அதான் வரலை."

"சரி .சரி. இப்ப எப்படி இருக்கு உடம்பு ? பரவாயில்லையா ?"

"ஹ்ம்ம் இப்ப கொஞ்சம் ஓகே . சரி அங்க வேற என்ன விஷேசம் ? எதாவது முக்கிய விஷயம் இருக்கா ?"

இந்தக் கேள்வியை ஒருவாறு எதிர்பார்த்த ரமேஷ் , என்ன சொல்வது என்று யோசித்தான் . பின் ,

"எதுவும் இல்லை தல . எல்லாம் வழக்கம் போலத்தான் போயிட்டு இருக்கு ".


"சரி . நான் எப்படியும் ரெண்டு நாளில் வந்திருவேன். யாராது கேட்டா சொல்லிடு. ஒன்னும் பிரச்சனை இல்லை . 

"சரி தல. உடம்பை பார்த்துகோங்க "

சரஸ்வதி தன்னிடம் பேசியதையும் கேட்டதையும் சொல்லலாமா என்று நினைத்தவன், பின் அதை மாற்றிக் கொண்டான். தான் எதாவது சொல்லி பின் அதனால் எதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று அந்த நினைப்பை கைவிட்டு பொய் சொன்னான் அவனிடம் .

வெங்கட்டுக்கோ ஏமாற்றமாய் இருந்தது. சாரு எதாவது ரமேஷிடம் கேட்டு இருப்பாள் என்று எதிர்பார்த்தான். அப்படி எதுவும் அவன் சொல்லாதது அவனுக்கு ஏமாற்றம் அளித்தது. அதே சமயம் வேறு எதுவும் பிரச்சனை இல்லை. தான் வராததால் தான் சாரு போன் செய்திருக்கிறாள் என்றெண்ணி சந்தோசம் அடைந்தான்.

அங்கோ தனது வீட்டில் தனது தோழிகளை மனதில் திட்டியவாறே உக்காந்திருந்தாள் சாரு. தான் கேக்கவந்ததை கேக்கும் தருணத்தில் வந்து காரியத்தை கெடுத்துவிட்டார்களே என்று அவளுக்கு ஆதங்கம்.

தெளிவாய் இருந்த குளத்தில் கல் எறிந்தால் எப்படி ஆகுமோ அப்படி இருந்தது அவள் மனம். ஏன்தான் காதலிக்க தொடங்கினமோ என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டிருந்தாள்.அதே சமயம், இப்பொழுது வெங்கட் என்ன செய்துக் கொண்டிருப்பானோ என்று நினைக்கவும் செய்தது அவள் மனது.


டிஸ்கி : படம் சகப் பதிவர் ப்ரியா அவர்களின் தளத்தில் இருந்து எடுத்தது. நன்றி ப்ரியா.

-நினைவுகள் தொடரும்


அன்புடன் எல்கே

மார்ச் 10, 2011

நினைவுகள் 16

அப்படி என்ன அவசரம்னு தெரியலையே என்று யோசித்துக் கொண்டே படுத்துக்கொண்டிருந்தான். ஒருவேளை அவளோட வீட்ல கல்யாணம் பண்ண முடிவு பண்ணி இருப்பாங்களோ அதுதான் அவசரமா கூப்பிட்டு பேச முயற்சி பண்ணி இருக்காளோன்னு என்று கூட யோசித்துக் கொண்டிருந்தான் .  பிறகு எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் போன் பண்ணா விஷயம் தெரியப் போகுது . எதுக்கு இப்படி தேவையில்லாமல் குழம்பனும் என்றுத் தெளிவடைந்து கொஞ்சம் நிம்மதி ஆனான்.


இவன் இங்கே நிம்மதியாய் படுத்துக் கொண்டிருக்க, அங்கே சாரு குழப்பம் பாதி , கோபம் பாதி என்ற இரண்டும் கலந்த மனநிலையில் இருந்தாள். அவள் காதில் விழுந்த செய்தி எந்த அளவுக்கு உண்மை என்றுத் தெரியாவிட்டாலும், தான் கல்லூரி வந்தே ஆறு மாதம்தானே ஆகிறது. அதற்கு முன்னால் நடந்தது தெரியாதே ? உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டாள். 


முழுவதும் அறியாமல் காதலிச்சது தவறோ? அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சிகிட்டு சொல்லி இருக்கலாமோ ? அவசரப்பட்டுட்டோமோ ?


யாரிடம் கேட்பது ? அப்படியே யாரிடமாவது கேட்டு ,அவள் கேள்விப்பட்ட விஷயம் பொய்யாக இருந்தால், தான் சந்தேகப்பட்டு விசாரிச்சது  வெங்கட் காதுக்கு போனா அவன் தன்னை பத்தி தப்பா நினைப்பானே ? அப்படி அவன் தப்பா நினைச்சா என்ன பண்றது ? முன்னமே விசாரிச்சு காதலிக்கறது எப்படி ? அப்படியே விசாரிச்சாலும் உண்மைத் தெரிஞ்சிருக்குமா ??


அவள் இருந்த மனநிலையில் பலவிதமாக எண்ணி தன்னைத்தானே குழப்பிக் கொண்டிருந்தாள். ஒருவேளை அவளிடத்தில் யார் இருந்தாலும் இப்படிதான் இருந்திருப்பார்களோ ??


பல நிமிடங்கள் யோசித்தப் பிறகு , மத்தவங்கக்கிட்ட பேசறதை விட வெங்கட்டுக்கே போன் பண்ணி பேசுவோம்னு ,கல்லூரி கேண்டீனில் இருந்த ஒரு ரூபாய் போனில் இருந்து அவன் வீட்டு எண்ணுக்கு அழைத்தாள். எதிர்ப்பாராமல் அவனுடைய அம்மா எடுத்துவிட, திக்கித் திணறி அவன் அன்று ஏன் வரலைன்னு கேக்கறதுக்குதான் போன் பண்ணியதாக சமாளித்து போனை வைத்துவிட்டாள்.

போன் பண்ணி முடித்தவுடன் புதிதாய் வேறு ஒரு குழப்பமும் சேர்ந்துக் கொண்டது. தான் போன் பண்ணியது தவறோ இதனால் அவனுக்கு ஏதாவது பிரச்சனை வருமோ என்றுக் குழம்பியவாறு எதுவும் சாப்பிடக் கூடத் தோணாமல் இருந்தாள். 


அப்பொழுது அங்கு வந்த ரமேஷ் , சாரு அங்கு இருந்ததைப் பார்த்துவிட்டு , அவள் இருந்த டேபிளுக்கே சென்று அமர்ந்தான். 


"என்னப் பிரச்சனை சரஸ்வதி ? காலையில் இருந்து நீங்க நார்மலா இல்லையே "


"அப்படிலாம் ஒன்னும் இல்லை ரமேஷ். கொஞ்சம் தலைவலி அதுதான் டல் ."


"உண்மையாகவா ? பார்த்தா அப்படித் தெரியலையே "

ஒரு பக்கம் இப்படி போட்டு குடையரானே, பேசமா திட்டிடலாமா என்று நினைத்தாள். இன்னொருபுறமோ, இவன்கிட்ட கேட்டுப்பார்ப்போமா , எப்படியும் இவனுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சு போச்சு . அதனால் இனி முழுக்கத் தெரிஞ்சா ஒன்னும் பிரச்சனை இல்லை. இவன்கிட்டத் தான் கேட்க முடியும் இப்போதைக்கு .

"ரமேஷ் ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும். முடியுமா ?"

"என்ன ஹெல்ப் ? சொல்லு சரஸ்வதி "


"முதலில் பண்ணுவீங்களா மாட்டீங்களான்னு சொல்லுங்க . அப்புறம் என்ன விஷயம்னு சொல்றேன் ."


"சரி என்னால முடிஞ்சா பண்றேன்."

"இந்த விஷயம் நமக்குள்ள இருக்கணும்,. வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது."

"சரி ஓகே "

அவளிடம் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே என்ன உதவியாய் இருக்கும் ? ஒரு வேலை வெங்கட்டை இவ லவ் பண்றாளோ அதை அவர்கிட்ட சொல்லணுமோ அதுக்குதான் ஹெல்ப் கேக்கராளோ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.


"வெங்கட்டை  பத்தி உனக்கு என்னத் தெரியும் ? அவரைப் பத்தி கொஞ்சம் விவரம் வேணும் எனக்கு ."


"இப்ப வெங்கட்டை பத்தி எதுக்கு கேட்கற . காலைல உன் பிரெண்ட் கேட்டா . இப்ப நீ கேட்கற ? என்ன விஷயம் ?"


"இப்ப அதை பத்தி உனக்கென்ன ? கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு ."


"அப்ப என்னனு சொல்ல மாட்ட? அப்ப நானும் பதில் சொல்ல முடியாது ."

மனதிற்குள் பழி  வாங்குறானே என்று திட்டினாலும் வெளியில் "அப்ப எதுக்குன்னு தெரிஞ்சாதான் சொல்லுவியா ?"

"ஆமாம். தெரிஞ்சாதான் சொல்லுவேன் ."


மனதில் இருந்த எரிச்சலை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மெல்லியக் குரலில் " நான் வெங்கட்டை லவ் பண்றேன் "


"நினைச்சேன் . அதான் இப்படி சி பி ஐ விசாரணை நடத்தறியா?"


"அதான் பதில் சொல்லிட்டேன் தானே. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு ."


"ம்ம் சொல்றேன். எனக்கும் ஆறு மாசமாத்தான் அவரைத் தெரியும். பக்கத்து அறையில் தங்கி இருக்கார். அதனால ஒரு ஜூனியரா இல்லாமல்  கொஞ்சம் அதிகமாவே அவர்கிட்ட பழகி இருக்கேன். ரொம்ப நல்ல மனுஷன். எல்லார்கிட்டயும் ஜாலியா பேசுவார் நல்லா பழகுவார். 

எனக்குத் தெரிஞ்சு அவர்கிட்ட இருக்கற ஒரே கெட்டப் பழக்கம் தம் அடிக்கறது மட்டும்தான். அவர் தண்ணி அடிச்சு கூட நான் பார்த்தது இல்லை. 


"ஹ்ம்ம் இதெல்லாம் எனக்கேத் தெரியும். மேல சொல்லு "


"வேற என்ன சொல்ல இருக்கு . ஓரளவு நல்லாவே படிப்பார்." 

அவள் வேறு என்ன எதிர்பார்க்கிறாள் என்றுப் புரியாமல் விழித்தான் ரமேஷ். தானாக இதை எப்படி ரமேஷிடம் கேட்பது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் சாரு. 


"இல்லை.. வந்து.. வேற ஒண்ணு தெரியனும். எப்படி கேக்கறதுன்னு தெரியலை "


"கேக்க தெரியாட்டி விட்டுடு. எப்படியும் அவர் நாளைக்கு வந்திருவார்னு நினைக்கிறேன். நேரடியா அவர்கிட்டயே கேட்டுக்கோ . 


"அவர்கிட்ட இதை கேட்க முடியாது. சரி கேக்கறேன் இரு. "-நினைவுகள் தொடரும் 


மார்ச் 09, 2011

நினைவுகள் 15


விடுமுறை முடிந்து கல்லூரித் திரும்பிய சாரு , பேருந்திலும் கல்லூரியிலும் அவனைக் காணாது திகைத்தாள். அவன் வழக்கமாய் இருக்கும் கேண்டீனிலும் இல்லாமல் போகவே லைப்ரரி பக்கம் சென்று தேடினாள். அவன் எங்கும் தென்படவில்லை. அவனைக் காணாத அவள் முகம்வாடி , வகுப்பறைக்கு சென்றாள்.

பாடங்களில் கவனம் செலுத்தாது , தங்களிடமும் பேசாது அமர்ந்து இருந்தவளைப் பார்த்த அவள் தோழி ," ஏண்டி என்ன ஆச்சு உனக்கு, வரப்ப நல்லாதானே இருந்த ? இப்ப ஏன் இப்படி எதையோ தொலைச்சவ மாதிரி உக்காந்து இருக்க ? என்று கேட்டாள்.

"கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு அமைதியா இருக்கியா ? நானே அவனைக் பாக்க முடியலைன்னு கடுப்புல இருக்கேன். இதுல சும்மா போட்டு குடைஞ்சிகிட்டு இருக்க ."

"இவ்வளவுதான் விஷயமா ? கொஞ்சம் இரு. " என்று சொன்னவள் ,அவர்கள் வகுப்பில் படிக்கும் ரமேஷை கூப்பிட்டாள்.

"ரமேஷ் இங்க வா."

"என்ன சொல்லு ?"

"நீ சீனியர்லாம் இருக்கற அதே மேன்சன்லதான தங்கி இருக்க ?"

"ஆமாம் . ஏன் என்ன விஷயம் ?"

"உனக்கு வெங்கட்டை தெரியுமா ?"

"தெரியாம என்ன . அடுத்த ரூம்தானே "

"அப்ப வசதியா போச்சு . அவர் ஊர்ல இருந்து வந்துட்டாரா ?"

"ஹ்ம்ம் எனக்குத் தெரிஞ்சு வரலை. காலையில் நான் கிளம்பினப்பக் கூட அவர் ரூம் பூட்டிதான் இருந்தது. மெஸ்ல கூட ஆளக் காணோம்னு கேட்டாங்க. ஊர்ல இருந்தே இன்னும் அவர் வரலைன்னு நினைக்கிறேன் "

"சரி அதெல்லாம் இருக்கட்டும். அவரைப் பத்தி எதுக்கு இப்ப நீ கேட்கற." இதைக் கேட்கும் பொழுதே இவர்கள் உரையாடலில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த சரஸ்வதியின் பக்கம் அவன் பார்வை சென்றது. இவன் பார்ப்பதை கவனித்த சாரு தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

"இல்லை .. சும்மாதான்....." அவள் ராகம் இழுக்க, இவன் விஷயத்தை புரிந்துகொண்டவன் போல் சரஸ்வதியைப் பார்த்து ஒரு குறும்பு புன்னகை மட்டும் செலுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தான். 

எப்படியும் அன்று வெங்கட் வரப்போவதில்லை என்று நினைத்த சாரு , வகுப்பறையில் இருந்து லைப்ரரி வந்து அமர்ந்தாள். பெயருக்கு எதோ ஒரு புத்தகத்தை எடுத்தவள் , அதில் கவனம் செலுத்தாமல், முதலில் அவனிடம் பேசியது ,தன் காதலை சொல்லியது போன்றவற்றை நினைத்துப் பார்க்கத் துவங்கினாள். 

முதல் நாளே அவனிடம் சண்டைப் போட்டதை நினைத்தவள், இந்த விடுமுறையில் அவன் மீண்டும் சிகரெட் அடித்திருப்பானோ என்று சந்தேகமும் கொண்டாள். பின் தன்னைத்தானே "எதற்கு தேவையற்ற சந்தேகம் ?". என்றுத் திட்டிக் கொண்டாள்.

இருக்கும் பொழுது சண்டைப் போடுவதும், இல்லாதபொழுது ஏங்குவதும் தான் காதலா என்று நினைத்துக் கொண்டே , வேறு ஒரு புத்தகத்தை எடுக்க புத்தக வரிசை அருகே சென்றாள்.

புத்தக வரிசையின் மறுபுறம் இரண்டு பேரு பேசிக்கொண்டிருந்தது இவள் காதில் விழ, அதைக் கேட்ட சாரு திகைத்து நின்றுவிட்டாள். அவர்கள் அங்கிருந்து அகன்றப் பிறகும் சில நிமிடங்கள் அங்கே நின்றுக் கொண்டிருந்த சாரு, மெள்ள தான் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள்.

தன் காதில் விழுந்த விஷயங்களை நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள். 

அதே நேரம் ஊரில் காய்ச்சலுடன் படுத்துக் கொண்டிருந்தான் வெங்கட். கல்லூரிக்குத் திரும்ப ஒருநாளே இருந்த சமயத்தில் ,காய்ச்சல் வந்துவிட வீட்டில் இருப்பவர்களை மீறி காய்ச்சலுடன் அவனால் பயணிக்க இயலவில்லை. 

காய்ச்சலுடன் ஊருக்குத் திரும்பி சென்று சாருவை பார்க்க இயலாத சோகமும் சேர , சோர்வுடன் படுத்துக் கொண்டிருந்தான். மருத்துவரின் அறிவுரைப் படி இரண்டு நாட்கள் கழித்துதான் அனுப்புவோம் என்று அவன் தாய் சொல்லிவிட என்ன செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு , "மேன்சனுக்கு போன் செய்யும் ஐடியா வந்தது. எப்படியும் மாலையில்தான் நண்பர்கள் மேன்சனுக்குத் திரும்புவார்கள் அதற்குப் பிறகு பேசலாம் என்றெண்ணி கொஞ்சம் உறங்க முற்பட்டான். 

மாத்திரை தந்த மயக்கத்தில் சில மணி நேரங்கள் உறங்கி இருப்பான். அவன் உறக்கத்தில் இருந்து எழுந்தவுடன் அவன் அம்மா "என்னடா புதுசா என்னவோ நடக்குது ?"

"என்னமா நானே இப்பதான் தூங்கி எழுந்தேன். இப்படி புதிர் போடறீங்க ?"

"யார்டா அந்தப் பொண்ணு ? என்னிக்கும் இல்லாத திருநாளா உன்னை விசாரிச்சு போன்லாம் வருது . என்ன விஷயம் ?" குரலில் கோபம் தொனிக்க கேட்டாள்.

அவள் சொல்லுவதை கேட்டவன் , யார் போன் செய்து இருப்பார்கள் என்று உடனடியாகப் புரிந்துகொண்டான். 

"இல்லமா. இன்னிக்கு காலேஜ் முதல் நாள் இல்லை, அதான் கூடப் படிக்கறவங்க யாரவது போன் பண்ணி இருப்பாங்க "

இவன் பதிலால் அவன் அம்மா திருப்தி அடைந்தமாதிரி தெரியவில்லை என்றாலும் , அந்த சமயத்தில் மேற்கொண்டு பேச விரும்பாத அவன் அம்மா "ஒழுங்கா இருந்துக்கோ . அவ்ளோதான் நான் சொல்லுவேன் " என்று எச்சரித்துவிட்டு சென்றாள்.

மிக அவசரமான , முக்கியாமான விஷயம் இருந்தால் மட்டுமே போன் செய்ய சொல்லி இருந்தான் சாருவை. இப்ப எதுக்கு இவ போன் பண்ணி இருப்பா என்று நினைத்தவன், உடனடியாக எதுவும் செய்ய முடியாது , எதற்கும் மாலையில் மேன்சனுக்கு போன் செய்து ரமேஷிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்.

-நினைவுகள் தொடரும் மார்ச் 08, 2011

பெண்ணுரிமைவாதிகளே ஒரு நிமிஷம்....

நேற்று இரவில் இருந்தே பதிவுலகில் பெண்ணுரிமை பதிவுகள்தான் அதிகமாக வந்துக் கொண்டிருந்தது. காலையில் நண்பர் கருணாகரசு அவர்களின் பதிவைப் படிக்க நேர்ந்தது. இதில் அவர் எழுதி இருந்த முதல் பத்தியே தூக்கி வாரிப் போட்டது. அப்படி அவர் எழுதி இருந்தது என்ன ?

"சீதை 
ஆணாதிக்கத்தால்
அக்னியில் குளித்தெழுந்த
அனிச்சம். "


இதுதான் அவர் எழுதி இருந்த முதல் பத்தி. நடந்த சம்பவத்தை இன்றையத் தலைமுறையினரில் பெரும்பாலானோர் எப்படித் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. நம்மில் பெரும்பாலானோர் ஏன் சில சமயம் நானே செய்யும் தவறு, கடந்த காலங்களில் நடந்த நிகழ்வை இன்றையக் கண்ணை வைத்து பார்த்தல். அன்றைய சமூகச் சூழல்கள், அன்றைய மக்களின் மனநிலை இப்படி எதையும் கணக்கில் கொள்ளாமல், அவன் செய்தது தவறு என்று பேசுவது எத்தகைய நியாயம் ?

ராமாயணம் படித்த பொழுது நான் மிகவும் யோசித்த இடங்கள் இரண்டு. இரண்டும் சீதை  சம்பந்தப் பட்டது. முதல் இடம், ராவண வதம் முடிந்து சீதை அசோகவனத்தில் இருந்து வரும் இடம் , இரண்டாவது , அயோத்தியில் இருந்து சீதை வெளியே செல்லும் இடம். 

முதலில் இலங்கையில் நடந்த சம்பவத்தை பற்றிப் பார்ப்போம். ராவணன் மாண்டுவிட்டான், விபீஷணன் ராஜாவாக பட்டம் சூட்டிக்கொண்டாயிற்று. அடுத்தக் கட்டளை என்ன என்று ஹனுமான் கேட்கிறான் ராமனிடம். "மன்னர் விபீஷணன் அனுமதி பெற்று சீதையை அழைத்துவா என்று சொல்லுகிறான் ராமன்.  ஹனுமனும் அதை சிரமேற்கொண்டு செய்கிறான்.

சீதை ராமனை காண வரும்பொழுது ராமனுக்கு உதவிய வானர சேனை , தாயாரை காணும் ஆவலில் முட்டித் தள்ளுகிறது. அவற்றி விலக்க முற்படும் சுக்ரீவன் போன்றோரை ராமன் தடுக்கிறான். இதன்பின் சீதையிடம் பேசும் ராமன் "தான் தன் கடமையை நிறைவேற்றி விட்டதாகக் கூறுகிறான் . சீதை மீண்டு வந்ததற்கு உண்டான மகிழ்ச்சியின் அறிகுறி முகத்தில் இல்லை என்பதாக பல ஆசிரியர்களும் எழுதி வைத்துள்ளனர். 

இதன் பின் சீதை தீக்குளிக்கிறாள் . அதை ராமன் தடுக்கவும் இல்லை ,ஆதரிக்கவும் இல்லை. இதனால் நம் சமகால பெண்ணுரிமைவாதிகள் ராமன் ஆணாதிக்கவாதி என்று கூறுகின்றனர்.  

அந்தக் காலத்தில் சமுதாய சூழல் எப்படி இருந்தது ? அந்தக் காலத்தில் பொதுவாக பெண்கள் மாற்றான் வீட்டுக்கு தனியாக  சென்று தங்க மாட்டார்கள் .  ராமர் எதிரில் யாரும் எதுவும் பேசாவிட்டாலும் ,அவரின் பின்னால் என்ன பேசுவார்கள் ? சீதையின் மேல் உள்ள மயக்கத்தால் இவ்வாறு செய்தார் ராமர் என்றே பேசுவார்கள் மக்கள். மக்களின் வார்த்தைக்கு அவ்வளவு மதிப்பு தர வேண்டுமா என்று நீங்கள் கேட்டால் , அன்றைய மன்னர்கள் மக்களுக்கு உதாரணமாய் வாழத் தான் விரும்பினார்கள். "மன்னா எவ்வழியோ மக்கள் அவ்வழி " என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இது ஒரு காரணம். 

இன்னொன்று , ராமன், சீதை போன்ற மனமொத்த தம்பதியினரை பார்ப்பது கடினம். திருமணம் முடிந்து வந்த சில காலத்தில் காடு செல்லவேண்டும். கணவன் நீ வர வேண்டாம் என்கிறான், மனைவியோ அதை ஏற்கவில்லை , அப்பொழுது சீதை ராமனை திட்டியது பன்று இன்றைய பெண்கள் கூட திட்டமாட்டார்கள். இவர்கள் சொல்வது போன்று ஆணாதிக்கவாதியாய் ராமன் இருந்திருந்தால் , அவ்வளவு சிரமேற்கொண்டு சீதையை அவர் காப்பாற்ற வேண்டிய அவசியமே இல்லை. வேறு ஒரு திருமணம் செய்து கொண்டிருக்கலாம். அப்படியா செய்தார் ராமர் ? அவருக்குத் தெரியாதா தன் மனைவியைப் பற்றி ? இன்றைக்கு வேண்டுமானால் நாம் சமூகத்தை பற்றி கவலை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அன்று அப்படி இருக்க இயலாது. மற்றவர்களும் சீதையின் தூய்மையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றே இதை செய்தார். இதில் என்ன ஆணாதிக்கம் இருக்கிறது என்று புரியவில்லை எனக்கு . 

இதற்க்கு அடுத்த கட்டம், சீதை அயோத்தியில் இருந்தபொழுது , இரவில் ராமர் நகர்வலம் வரும் சமயம் யாரோ இருவர் பேசிக்கொள்வதை கேட்க நேருகிறது. அப்பொழுது அந்த இடத்தில், ராமர் என்ன நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அதேதான் நடக்கிறது. சீதையை பற்றிய அவதூறு காதில் விழுகிறது. இந்த சமயத்தில் ராமன் மிகுந்த மனக் குழப்பங்களுக்குப் பிறகே சீதையை அயோத்தியில் இருந்து செல்லுமாறு கூறுகிறான். 

ராமனே இப்படி செய்யலாமா என்று கேட்பவர்களுக்கு ராமனால் மட்டும்தான் இப்படி செய்ய இயலும். அன்றையக்  கால கட்ட தர்மங்களை , அதன் வழியில் இருந்து பிறழாமல் காப்பவனாகவே ராமர் இருந்திருக்கிறார். இந்த முறை தன்னை சந்தேகப்பட்டதுக்கு சீதை வருந்தினாளா ?

இதற்கு உண்டான பதில் ரா. கணபதி அவர்கள் எழுதிய "ஹனுமான் " என்ற புத்தகத்தில் எனக்குக்  கிடைத்தது. அதில் சீதை அயோத்தியில் இருந்து வெளியேறியப் பிறகு , ஹனுமான் அவரைக் காண செல்கிறார். அப்பொழுது சீதை அழுதுக்கொண்டிருக்கிறாள். ஹனுமனும் சீதையை அயோத்தியில் இருந்து அனுப்பியதற்காக ராமன் மேல் கோபம் கொண்டிருந்தார். அதுவே அவரது வார்த்தையில் வெளிப்படுகிறது. 

அப்பொழுது சீதை"அஞ்சனை புத்ரா ! நீயுமா அவரைப் புரிந்துக் கொள்ளவில்லை. நான் இப்பொழுது அழுவது எனக்காக இல்லை. அசோகவனத்தில் நான் இருந்தபொழுது வேண்டுமளவுக்கு எனக்காக அழுது தீர்த்துவிட்டேன். இப்பொழுது நான் அழுவது அவருக்காகத் தான். ஆம், மனைவியை பிரிந்திருப்பது எவ்வளவு கடினம் ? அதுவும் பல காலம் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் பிரிவது என்பது எத்தகைய வருத்தத்தை தரும் . அந்த வருத்தத்தையும் தாங்கிக் கொண்டு , கட்டிய மனைவியை காட்டுக்கு அனுப்பி விட்டான் என்ற பழிச்சொல்லையும் ஏற்றுக் கொண்டிருக்கிறாரே அவருக்காகத் தான் அழுகிறேன் " என்று சொல்லுவாள். 

இந்தப் புத்தகம் என்னிடம் இப்பொழுது இல்லை. கிடைத்தவுடன் இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவுப் போடுகிறேன். ராமரை மட்டுமல்ல, பழைய நிகழ்வுகள் பலவற்றையும் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறோம். பழையக் கால நிகழ்வுகளை அலசும் பொழுது இன்றையக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம். உங்களுக்கு உதாரணம் சொல்ல வேண்டுமானால் சரியாகப் புரிந்து கொண்டு சொல்லுங்கள் இல்லையேல் விட்டுவிடுங்கள்.
மார்ச் 07, 2011

பயமுறுத்தும் சென்னை மெட்ரோ ரயில்இந்தியாவை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ஊழல்களின் வரிசையில் அடுத்து விரைவில் இடம்பெறப் போவது மெட்ரோ ரயில் ஊழல். இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் வேலைகளை நிறைவேற்றிய மாஸ்மெட் ரோஸ்ட்ராய் என்ற நிறுவனத்துடன் தான் சென்னையில் மெட்ரோ ரயில் அமைக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே டில்லியிலும்,ஹைதராபாத்திலும் கட்டுமான சமயத்தில் அவர்கள் சரியாக செயல்படவில்லை அதனால் மூன்று வருடங்களில் ஏழு பேர் பலி ஆகி உள்ளனர் எனவும் இன்னும் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறுகின்றனர். இந்த நிறுவனத்துக்கு அரசாங்க கட்டுமானப் பணிகள் வழங்கக் கூடாது என்றும்  இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்றும் பாரளுமன்றத்தில் பிரச்சனை வந்த பொழுது ,அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளதாக ஜெயபால் ரெட்டி கூறினார். 

"தவறான டிசைன்கள் காரணமாகத்தான் விபத்துகள் ஏற்பட்டது. ஆனால்  நாங்கள்தான் சரியாக எல்லா பணிகளையும் முடித்து தந்துள்ளோம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் 23.02.11 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த விபத்துகளை பற்றி அவர் எந்த வித விளக்கமும் இது வரை அளிக்கவில்லை. இந்த நிறுவனத்தை தடை செய்யவேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள அரசாங்க பொறியியல் வல்லுனர்களும் ஆதாரத்துடன் அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். 

இத்தகைய எதிர்ப்பு இருக்கையில்  எதற்கு அந்த நிறுவனத்திற்கு இந்த காண்ட்ராக்ட்டை அளிக்கவேண்டும் ??? இதன் பின்னணி என்ன ??

மாஸ்மெட் ரோஸ்ட்ராய் என்ற ரஷ்ய நிறுவனம் மெட்ரோ ரயில் கட்டுமானத் துறையில் என்பது ஆண்டு அனுபவம் உள்ளது என்பது இவர்கள் அளிக்கும் விளக்கம். ஆனால் அந்த நிறுவனம் இப்பொழுது ரஷ்ய அரசு நிறுவனம் அல்ல அதை சென்ற வருடமே தனியாருக்கு விற்றுவிட்டனர். இதை வாங்கியவர்கள் ரஷ்ய  மாபியா கும்பல்கள் என்று மாஸ்கோவில்  சொல்கின்றனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட  கான்ட்ராக்ட்டின் மதிப்பு 1947 கோடி. இந்த ஒப்பந்தத்தின் லாபம் 20 சதவீதம்  எனவும் ,லாபத்தில் சரிபாதி ரஷ்ய அமைப்புக்கு போகிறது எனவும் சொல்கின்றனர். கிட்டத்தட்ட அது 200 கோடி வரும். இது சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான லாபம் மட்டுமே. இன்னும் டெல்லி,ஹைதராபாத் போன்றவை உள்ளன. 

விஷயம் அறிந்தவர்கள் ரஷ்யா இந்தியக் கட்டுமானத் துறையை மெள்ள விழுங்கப் பார்க்கிறது என்று சொல்கிறார்கள். . இங்கு இருப்பவர்களோ அதை எதுவும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். வரைப்படங்கள் சரியாக இருக்கிறதா என்றுத் தெரியாமல் அல்லது கவனிக்காமல் கட்டுமானத்தை ஆரம்பித்து அதனால் பல உயிர்களை காவு வாங்கிய நிறுவனத்துடன் மீண்டும் ஒரு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசின் உள்நோக்கம் என்ன ??

(நன்றி :  9.3.2011, துக்ளக்கில்  வந்த பயமுறுத்தும் சென்னை மெட்ரோ ரயில் கான்ட்ராக்ட்)
 


அன்புடன் எல்கே

மார்ச் 04, 2011

இப்படி ஒரு பிரதமர் தேவையா ??

* காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் 

 * ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு 

*  ஊழல் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரையே "மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக நியமித்தது 

*  ஆதர்ஷ் ஊழல் 

* சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயரை வெளியிட மறுப்பது 


இதெல்லாம் இது வரை மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள். இன்னும் நெறைய இருக்கும். ஆனால் இது வரை வெளியில் வந்தது இவ்வளவு தான். வெளில வராம எவ்வளவு இருக்கோ தெரியலை.

ஒவ்வொருமுறையும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டப் பிறகுதான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்குது . அப்புறம் மத்திய அரசாங்கம் எதுக்கு ,ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தேர்தல்  எதுக்கு ? வெட்டி செலவு பண்ணிக்கிட்டு .

அப்புறம் பிரதமர்னு ஒருத்தர் இருக்கார் பாருங்க. அவர் சொல்றதைலாம் கேட்டா ரொம்ப அப்பாவியோன்னு தோணும் . ஆனால் பாருங்க, அதெல்லாம் வெறும் நடிப்பு . நாட்டின் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு கமிஷனரா ஒருத்தரை நியமிக்கறாங்க. அவர் மேல ஏற்கனவே ஊழல குற்றசாட்டு இருக்குனு எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சொல்றாங்க. அப்ப பிரதமரா இவர் என்ன பண்ணியிருக்கணும் ? வேற யாரையாவது நியமிச்சு இருக்கணும். சரி விடுங்க இவருக்குதான் அமைச்சர்கள் என்ன பண்றாங்கன்னு கூட தெரியாதே . இவர் நியமனத்தை எதிர்த்து கோர்ட்டில் கேஸ் போடறாங்க . அப்பவாது ,பதவி விலக சொல்லி இருக்கலாம் . அப்பவும் பண்ணலை. இப்ப கடைசியா கோர்ட் சொல்லிடுச்சி , தாமஸ் பதவி  நியமனம் செல்லாதுன்னு . இப்ப வேற வழி இல்லை . அவர் பதவியை விட்டு இறங்கியாகனும். 

அடுத்தது கருப்பு பண விவகாரம். நேத்து சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை பார்த்து நாக்கை புடுங்கற மாதிரி கேள்வியை கேட்டு இருக்கு . இப்பவும் இவர் அமைதியா இருக்கார் . நமக்கு இப்படி ஒரு பிரதமர் தேவையா ?? 

இதைவிடக் கொடுமை, காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் குற்றசாட்டுக்கு ஆளான கல்மாடி இன்னும் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரா தொடர்கிறார் .  எதிக்கட்சிகள் வாயை அடைக்க வேண்டும் என்று அவரிடம் இருந்த ஒரு பதவியை மட்டும் பிடுங்கி விட்டார்கள். இதில் பொருட்கள் சப்ளை செய்த சில கம்பெனிகளுக்கு பல கோடி ரூபாய் தரவேண்டி உள்ளது. 

இதெல்லாம் பிரதமரிடம் கேட்டால், எனக்கு எதுமே தெரியாதுன்னு அப்பாவி மாதிரி பதில் சொல்லுவார். எதுமே தெரியலைன்னா பதவி விலகிட்டு போகவேண்டிதானே , எதுக்கு பிரதமரா இருக்கார் ? இது வரை பிரதமராக இருந்தவர்களில் இவர் அளவுக்கு அந்தப் பதவியை அவமானப்படுத்தியவர்கள் எவரும் இல்லை. இதுவரை ஜனாதிபதி பதவி மட்டுமே ரப்பர் ஸ்டாம்ப் பதவியா இருந்தது., ஆனால் ,இவரோ இல்லை இவருக்கு பதில் வேறு யாரவது காங்கிரஸ் எம்பியோ இந்தப் பதவியில் இருந்தால் இந்தியப் பிரதமர் பதவியும் ரப்பர் ஸ்டாம்ப் பதவியாகி விடும். 

 தேர்தல் வருகிறது. சிந்தியுங்கள் இப்படிப்பட்ட கொள்ளைக்காரர்களுக்கும், அது தெரிந்தும் எதையும் செய்யாமல் கள்ளமௌனம் சாதிக்கும் நபர்களுக்குமா ஓட்டுப் போடப் போகிறீர்கள் ?? இது நாடாளுமன்றத் தேர்தல் இல்லைதான். ஆனால் இப்பொழுது இவர்களுக்கு அடி விழுந்தால்தான் இனியாவது ஒழுங்காக இருப்பார்கள். சிந்தித்து ஓட்டுப் போடுங்கள் .டிஸ்கி : இந்தப் பதிவுக்கு மட்டுறுத்தல் உண்டு.  பின்னூட்டம் போடுபவர்களுக்கு ஒரு விஷயம்.இங்கு ஊழல்தான் விஷயம். அதைப் பற்றி மட்டும் பேசவும். தேவை இல்லாத விஷயங்களில் நுழைத்து பின்னூட்டம் இட்டால் அது வெளியிடப்படாது.

அன்புடன் எல்கே 

மார்ச் 02, 2011

நினைவுகள் 14

நினைவுகள் இதுவரை 
சரஸ்வதிக்கு வரன் தேடும் சமயம் அவளுடன் படித்த வெங்கட்டின் போட்டோவும்,ஜாதகமும் வருகிறது. ஆனால், அவள் வேண்டாம் என்று அதை நிராகரிக்க வெங்கட் சோகமடைகிறான். அதே சமயத்தில்,அவளுடைய கல்லூரித் தோழன் ரமேஷ் அவளை சந்திக்க, அந்த சந்திப்பில் வெங்கட்டைப் பற்றிய பழைய நினைவுகள் அவள் மனதில் ஓட ஆரம்பிக்கின்றன. இனி ...


மறுநாள் கல்லூரிக்கு செல்ல அவள் செல்லும் பேருந்திலேயே அவனும் ஏற, அவனைப் பார்த்தும் பார்க்காதவள் போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். அவளின் இந்தப் புறக்கணிப்பு ஏன் என்று புரியாமல் முழித்தாலும், பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்தமையால் அவளிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை. கல்லூரி நிறுத்தத்தில் இறங்கியவன், ஒரு கணம் டீக்கடைக்கு செல்வதா இல்லை கல்லூரியின் உள்ளே செல்வதா என்று யோசித்து ,ஏற்கனவே கோபத்தில் இருப்பவளை இன்னும் கோபப்படுத்தவேண்டாம் என்று எண்ணியவனாய் அவளைத் தொடர்ந்து கல்லூரியின் உள்ளே நடந்தான்.

அவன் இறங்கியப் பின் பேருந்தில் இருந்து இறங்கியவள், டீக்கடைக்கு செல்லாமல், கல்லூரியினுள்ளே செல்லும் வெங்கட்டைப் பார்த்தவுடன் அவளை அறியாமல், புன்னகை பூத்தாள். அன்று முழுவதும் வெங்கட் அவளை பார்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அவளை கேண்டீனில் அவனைத் தேடியபொழுதும் கண்ணில் சிக்கவில்லை. 

டிசம்பர் மாத காலையில் படர்ந்திருக்கும் பனியைப் போல் அவள் மனதில் லேசான சோகம் படரத் துவங்கியது. எப்படியும் மாலைப் பேருந்தில் அவனைப் பார்த்து விட முடியும் என்ற நம்பிக்கை அவளின் உள்ளே இருந்தாலும், அப்பொழுதும் வராவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருந்தது. நேற்று அவனிடம் அதிக உரிமை எடுத்துக் கொண்டு கண்டித்து விட்டோமோ என்று ஒரு புறமும் ,   அவன் செய்தத் தவறைத் தானே சொன்னேன் இதில் ஏன் மேல் என்ன தப்பு இருக்கிறது என்று இன்னொருபுறமும் பலவாறாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதைப் பற்றி யோசித்து யோசித்து தலை வலிக்கத் துவங்கியது. 

மாலையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுக் கொண்டிருந்தவனைப் பார்த்தவுடன்தான் அவள் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. அவனருகில் சென்று நின்றவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள். காலையில் இருந்து அவனைப் பார்க்கவிட்டாலும், அவனே பேசட்டும், நான் எதற்கு முதலில் பேச வேண்டும் என்ற வீம்புடன் நிற்பதுபோல் தோன்றியது. 


அவள் வருவதை முன்பே பார்த்விட்ட வெங்கட், அருகில் வந்து நின்றப் பின்னும் பேசாமல் நிற்பதைக் கண்டு , இந்தப் பெண்கள் எல்லோருமே இப்படித் தானா , இல்லாதபொழுது தவிப்பது, இருக்கும்பொழுது வீம்புக்கு சண்டைப்போடுவது என்று மனதில் எண்ணிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் அமைதியாய் இருந்தவன், பின் இது வேலைக்காகாது என்று எண்ணி அவனேப் பேச்சைத் துவங்கினான். 

"என்ன ஏன் மேல கோபமா ? அதுதான் விடறேன்னு சொன்னேன்தான?"

"ஹ்ம்ம். எல்லாம் வெறும் வாய் வார்த்தைதான்."

"இல்லை நான்தான் கண்டிப்பா விட்டுடறேன்னு சொன்னேனே?"

"பேசாத . அதை சொல்லி அரைமணிநேரம் கூட ஆகலை. நான் அந்தப் பக்கம் போனவுடனே  இந்தப் பக்கம் எடுத்து கொளுத்தியாச்சு. நான் சொன்னமாதிரி உன் விரலை கட் பண்ணி இருக்கணும் அப்பவே அங்க வந்து. அதை செய்யாததுதான் என் தப்பு."

அவள் வார்த்தைகளை சொல்ல சொல்ல இவன் முகம் மாறியது .

"அடிப்பாவி! நேத்து போற மாதிரி போயிடு இந்தப் பக்கம் வந்த வேவுப் பார்த்தியா?"

"அப்படி பார்த்ததால்தான் உன் வாக்குறுதியோட லட்சணம் தெரிஞ்சது ."

"நான் என்ன உடனே விடறேன்னா சொன்னேன் . கொஞ்சம் கொஞ்சமா விடறேன்னு தானே சொன்னேன் "

"ஹ்ம்ம். நீ மாறமாட்ட. நான் இருக்கறப்ப அடிக்க மாட்ட. என் தலை அந்தப் பக்கம் மறைந்தபின் ஊதிக்கிட்டு இருப்ப . "

"சரி சரி. இனி அடிக்கமாட்டேன் போதுமா ? கொஞ்சம் கோபத்தை விடேன்."

"ஓகே சொல்லு. "

"சனிக்கிழமை படத்துக்கு போலாமா ?"

"படத்துக்கு போறது ரொம்ப அவசியமா ?? யாராவது தெரிஞ்சவங்க பார்த்தா ??"

"எதுக்கு சுடிதார் துப்பட்டா இருக்கு ? முகத்தை மூடிக்க வேண்டித்தானே ?"

"அதெல்லாம் எனக்குப் பிடிக்காது . அப்படி பயந்து  ஒளிஞ்சுகிட்டு போய் என்ன சாதிக்கப் போறோம் ?"

அவளின் பதில் அவன் மனதில் அவளைப் பற்றிய மதிப்பை உயர்த்தியது. 

"ஹ்ம்ம் சரிதான்.. ஓகே பஸ் வருது போலாம் வா. "


கல்லூரி நிறுத்தமும்,லைப்ரரியும், மைதானமும் அவர்கள் சந்திக்கும் இடமாக , அவர்கள் காதல் மெல்ல  வளர்ந்தது. இடையில் செமெஸ்டர் தேர்வுகளும் முடிந்து ,விடுமுறைக்கு வெங்கட் ஊருக்கு செல்ல , இங்கோ சாரு சோகத்தில் ஆழ்ந்தாள். 
விடுமுறை முடிந்து முதல் நாள் கல்லூரிக்கு சென்றவள் ஆவலுடன் அவனைத் தேட அவன் அன்றும் அவள் கண்ணில் சிக்கவில்லை. நினைவுகள் தொடரும் மார்ச் 01, 2011

ஜகத்குரு 14- மனீஷா பஞ்சகம்

ஆதி சங்கரரின் காலத்தில் , தீண்டாமை எனும் கொடுமை மிக அதிக அளவில் இருந்தது. இதில் சங்கரருக்கு துளியும் சம்மதம் இல்லை என்றாலும், வெறும் வாக்காக சொன்னால் யாரும் கேட்கப் போவது இல்லையே, எப்படி இவர்களை திருத்துவது என்ற எண்ணத்திலே காத்திருந்தார். அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. காசியிலே அவர் தனது அத்வைத கொள்கைளை மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த காலம் அது.

அவர் மனதிலே தீண்டாமை இல்லை எனினும் ,அவரை சுற்றி இருந்தவர்கள் மனதில் ஆழ பதிந்திருந்தது அது. ஒருநாள் தன் சீடர்கள் புடைசூழ, கங்கையில் குளிக்க சென்றுக் கொண்டிருந்தார். காசியின் வீதிகள் பொதுவாக மிகக் குறுகலாகத் தான் இருக்கும். அப்படி பட்ட ஒரு வீதியின் வழியே சென்றுக் கொண்டிருந்தபொழுது , எதிரே ஒரு சண்டாளன்,தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் கையிலோ மதுக் குடம். 

அவனைக் கண்டவுடன், இவருடன் இருந்தவர்கள் முகம்  சுருங்கியது. சங்கரர்  அவனைப் பார்த்து "விலகிச் செல் சண்டாளனே! (தூரம் அபசரரே சண்டாள:) என்றுக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அந்த சண்டாளன் முகத்தில் புன்னகைப் பூக்க "யாரை விலகச் சொல்கிறீர்கள் ? இந்த உடலையா இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா ? எதை விலகச் சொல்கிறீர்கள்?"  என்றுப் பொருள்படும் வகையில் கேள்விக் கேட்கிறான்.

 இதைக் கேட்டவுடன் , சங்கரர் அந்தச் சண்டாளனுக்கு சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி "நீர் யார் அதை சொல்வீராக "என்றுக் கேட்க சிவபெருமான் பார்வதியுடன் அவருக்குக் காட்சி அளிக்கிறார். அவருடன் வந்த நாய்கள் நான்கு வேதங்கள்,பார்வதி வைத்திருந்தது அமிர்தக் குடம். 

இதைத் தொடர்ந்து சங்கரர் இயற்றியதுதான் மனீஷா பஞ்சகம். மனிஷா என்றால் ஒப்புதல் என்று அர்த்தம். பஞ்சகம் என்றால் ஐந்து. சண்டாள வடிவத்தில் வந்த சிவபெருமான் எழுப்பியக் கேள்விகளையும்,அவற்றில் பொதிந்துள்ள கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு சங்கரர் பாடியது. அந்த மனிஷா பஞ்சகம் கீழே. 

அன்னமயாத் அன்னமயம் அதவா
சைதன்யமேவ சைதன்யாத்|
யதிவர துரீக்ருதம் வாஞ்சஸி
கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி||

விலகுவில கென்னும் அறிஞர் தலைவ விருப்பமோ யாது மொழிக-உடலோ
உடலிடத்து அன்றி உயிரோ உயிரிடத்து சொல்வாய் உறவேண்டும் விலக்கு?

ஆதிசங்கரரைப் பார்த்து சண்டாளர் உருவில் வந்த சிவபெருமான் இவ்விதம் கேட்கிறார்; யதிகள் என்று அழைக்கப்படும் அறிஞர்கள், முனிவர்கள் ஆகியோருக் கெல்லாம் தலைவரைப் போன்று விளங்குபவரே! விலகிச் செல் என்று என்னை நோக்கிக் கூறினீரே? அன்னமயத்தால்ஆன இந்த உடல், மற்றொரு உடலில் இருந்து விலகிச்செல்ல வேண்டுமா? அன்றி அதனுள் உறைகின்ற அறிவு மயமாகிய (சைதன்ய ரூபமான) உயிர், அதாவது , ஜீவாத்மா மற்றொரு உயிரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டுமா? எந்த அர்த்தத்தில் விலகிச் செல் என்று கூறினீர்? அழிந்து விடக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம்
கொடுத்து, அதன் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பவன் ஆன்மீக வாதியாக மாட்டான். அப்படியானால், ஒரு ஜீவனை விட மற்றொரு ஜீவன் உயர்ந்தது என்று கூறமுடியுமா?
முடியாது. ஏனெனில் எல்லா உயிர் இனங்களிலும் ஒரே ஆன்மாதான் (பரமாத்மா தான்
வீற்றுள்ளது. அதனால்தான் இந்த இடத்தில் உயிரினங்களில் உள்ள உயிர் என்ற கருத்தைக் குறிப்பிட ஆன்மா என்ற சொல்லைக்கூட பயன்படுத்தாமல் சைதன்யம் (அதாவது பிரக்ஞை, அறிவு) என்ற வார்த்தையை சிவபெருமான் உபயோகித்துளார்.
ஏனெனில், அத்வைத சித்தாந்தப்படி, அனைத்து உயிரினங்களிலும் உறைகின்ற ஏக
பரமாத்மா, அதனதன் பிரகிருதிக்குத் தக்கபடி அதனதன் சைதன்யமாகப் பிரதிபலிக்கிறார். ஆகையால், ஓரே உயிரே அனைத்திலும் உறைவதால் அதனை விலகிச் செல் என்று எவ்விதம் கூற முடியும்? அடுத்ததாக, நேரடியாகவே அத்வைத சித்தாந்தத்தின்
அடிப்படையில் மேலும் சில கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

ப்ரத்யேக்வஸ்துனி நிஸ்தரங்க
ஸஹஜானந்தாவ போதாம்புதௌ|
விப்ரோ அயம் ஸ்சபவோ அயமித்யபி
மஹான்கோ அயம் விபேதப்ரம||

அலையில்லா நீர்நிலையில் ஆதவன் பிம்பம்போல் ஆனபொருள் யாவினிலும் ஆண்டவன் வீற்றுள்ளான் பார்ப்பானோ வேற்றானோ யாராம் உயர்வென்ற பாகுபாடும் ஐயமும் ஏன்? அலை அடிக்காததால், கலங்காமல் இருக்கும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரிகின்றது. அது போன்று உலகில் தோன்றியுள்ள அனைத்துப் பொருள்களிலும் அந்த ஏக இறைவனே (சிவபரமாத்மாவே)
வீற்றுள்ளார். இங்கு அலையில்லா நீர்நிலையென்று ஏன் சொல்ல வேண்டும்? அலையடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த நீரில் சூரியனின் பிம்பம் மூழுமையாக, சரிவரத் தோன்றாது. அது போல், பல சித்தாந்த குழப்பங்களும், சந்தேகங்களும்
எழுந்துகொண்டிருக்கும் மனத்தில் அந்த ஏக இறைவன் சரியாகத் தென்படமாட்டார். ஆகையால், கலங்காத நீரில் தெரியும் கதிரவன் பிம்பம் போல், அத்வைத சாதகன் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான்.அப்படியிருக்க, இவன் அறிவு நிறைந்த பிராமணன் (விப்ர) என்றும், இவன் ஒதுக்கதக்க வேறு ஆள் என்று பாகுபடுத்திப்
பார்ப்பதற்கும், இவர்களில் யார் உயர்ந்தவன், யார் தாழ்ந்தவன் என்று சந்தேகம்
கொண்டு நோக்குவதற்கும் என்ன அவசியம் நேர்ந்தது.?

கிம் கங்காம்புனி பிம்பிதே
அம்பரமணௌ சாண்டாளவீதீபய:|
பூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி
ம்ருத்கும்பயோர்வா அம்பரே||

கங்கையின் நீரினிலும் குட்டையின் நீரினிலும் காண்கின்ற சூரியனில் வேற்றுமை
உண்டோ?பாத்திரம் மண்ணோ கனகமோ பிம்பத்தின் தோற்றத்தில் மாற்றமுமுண் டோ?
புனித நதி என்று போற்றப்படுகின்ற கங்கை நதியின் நீராக இருந்தாலும் சரி அல்லது
சேரிகளில் தேங்கி நிற்கின்ற குட்டையில் உள்ள நீராக இருந்தாலும் சரி, அந்தத் தண்ணிரில் பிரதிபலிக்கின்ற சூரியனில் ஏதாவது வேற்றுமை தென்படுகிறதா? கங்கை
நதியில் தோற்றம் அளிக்கின்ற சூரியன் உய்ர்ந்தது என்றும்,சேரிப் புறத்து நீரில்
தெரிகின்ற சூரியன் தாழ்ந்தது என்றும் கூறமுடியுமா? மேலும், தண்ணீரைத் தாங்கி
நிற்பது மட்பாண்டமாக இருந்தாலும் சரி, பொற்குடமாக இருந்தாலும் சரி, அதில்
தெரியும் சூரியனின் பிம்பதில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அது
போல், எந்த உயிரினமாக இருந்தால் என்ன? எந்த மனிதராக இருந்தால் என்ன? அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே அன்றோ? என்று
சிவபெருமான் கேட்கின்றார்.

இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளின் உட்பொருளை உணர்ந்த ஆதிசங்கரர் தன் முன்னே சண்டாள வடிவிலே ஞானம் போதிக்கும் சிவபெருமானைச் சரணடைகிறார். எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அனுபூதியை அடைந்த ஒருவர், எந்தச் சாதியை
சேர்ந்தவராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், தன்னால் குரு என ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதை ஒப்புக் கொண்டு ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் போன்று
ஐந்து ஸ்லோகங்களை ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார். 

ஒப்புதல் ஐந்து.

ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு
ஸ்புடதரா யா
ஸம்விதுஜ்ஜ்ரும்பதே
யா ப்ரஹ்மாதி
பிபிளிகாந்ததனுஷு ப்ரோதா
ஜகத்ஸாக்ஷிணி|
ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி
த்ருடப்ரக்ஞாபி யஸ்யாதி சேச்
சண்டாளோs ஸ்து ஸ து
த்விஜோஸ்துகுருரித்யேஷா:
மணீஷா மம ||

விழிப்பு கனவுதூக்கம் மூநிலையில் பத்மனாதி சிற்றெறும்பாய் விரிந்து தோற்றம்கொள்
பேரியக்கம் காணாமல் கண்டிருக்கும் பேருண்மை நானென்ற நம்பிக்கை கொண்டோன் பஞ்சமனோ பார்ப்பானோ ஒப்புகிறேன் எந்தன் குரு...................(1)

விழிப்பு (ஜாக்ரதா), கனவு (ஸ்வப்பனம்), மற்றும் உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று
நிலைகளிலும் அந்த ஒரே ஆன்மாதான் (சிவ பரமாத்மன்) படைப்புக் கடவுள்ஆன பிரம்மா
முதல் (பத்மம் எனப்படும் தாமரையில் வீற்றிருப்பதால் பிரும்மாவுக்கு பதுமன், பத்மன் என்ற பெயர்கள் உண்டு.)சின்னஞ்சிறிய எறும்பு வரையான பல்வேறு உயிரினங்களாகத் தோற்றம் காண்கின்றன. அந்த ஏக ஆன்மாதான் பிரபஞ்சத்தின் இயக்கமாக விளங்குகிறது. (நம்மால்) அதனை நேரடியாகக் காணமுடியாது ஆனால், உலகின் செயல்பாடுகள்
அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற சாட்சியாக அந்த ஏக ஆன்மா
திகழ்கிறது. அப்படிப்பட்ட பேருண்மையான சிவமே (ஏக ஆன்மாவே) நான் என்பதில் (
அதாவது அந்தப் பரமாத்வே தன்னுள் உறைவதாக எவன் ஒருவன் நம்பிக்கை கொள்கிறானோ, அப்படிப்பட்டவன் சாதியில் பஞ்சமனாக இருந்தாலும்) சரி, அல்லது கற்பிதமான இந்தச் சாதிமுறையில் உயர்ந்தவனாகக் கருதப்படும் பிராமணனாக
இருந்தாலும் சரி, அவரை எனது குருவாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்
ஸ்ரீஆதிசங்கரர்.

பிரஹ்மோவாஹமிதம் ஜக்ச்ச ஸகலம்
சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா
திரிகுண்யாs சேஷம் மயா
கல்பிதம்|
இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே
நித்யேபரே நிர்மலே
சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து
குருரித்யேஷா மனிஷா மம||

அறியாமை முக்குணத்தால்
வேற்றுமை தென்படினும்
ஆனதெல்லாம்
அஃதொன்றின் தோற்றங்களே அத்தகு
நித்ய நிர்மல
பேருண்மை நானென்ற நம்பிக்கை
கொண்டோன் பஞ்சமனோ
பார்ப்பானோ ஒப்புகிறேன்
எந்தன்குரு...... (2)

உலகில் தோன்றிய அனைத்துமே அந்த பரப்பிரம்மத்தின் பரிமாணங்களே. அதாவது உலகில் காணப்படும் அனைத்து வஸ்துகளும் உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின்
வெளிப்பாடுகளே. பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றேதான் வேறு வேறு அல்ல.
இதைத்தான் சின்முத்திரையாக (கட்டை விரலும் ஆட்காட்டிவிரலும் இணைந்த
வட்டமாக) இறைவன் உணர்த்துகிறார். ஆனால், சத்வம், ரஜோ, தமோ ஆகிய
முக்குணங்களால் தோன்றிய பிருகிருதியயின் கூட்டால், அந்த பரமபுருஷ தத்துவத்தை
உணர்ந்துகொள்ள முடியாத வேற்றுமைகள் தென்படுகின்றன. அதாவது வெளிப் பார்வைக்கு நம்மால் பாகுபடுத்திப் பார்க்கப்படும் பல்வேறு உயிர் இனங்கள் மற்றும் பொருள்களின் அடிப்படையாகத் திகழும் ஜீவரசம் , ஆற்றல் ஒன்றுதான். ஆகவே பரபிரும்மம், சிவபரமாத்மா, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய நித்தியமாய், எவ்வித களங்கமோ குறைகளோ இல்லாத நிர்மலமாய் திகழ்கின்ற அந்தப் பேருண்மை
நான் என்பதை உணர்ந்து, அதில் திளைப்பவர் பஞ்சமரோ, பிராமணரோ அவரே எந்தன் குரு என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்


ச்சச்வன்ன ச்வரமேவ
விச்வமகிலம் நிச்சித்ய வாசா
குரோர்
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம்
விம்ருசதா
நிர்வ்யாஜசாந்தாத்மனா|
பூதம் பாதி ச துஷ்க்ருதம்
ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்பிதம்
ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம||

நிலையில்லா மாயை பிரபஞ்சம்
வந்துற்ற பிறப்பும்
நிரந்தர நிச்சயத்தை எண்ணவாம்
ஐயமற-அத்தவமாம்
தீயில் பிறவித் துயர் பொசுக்க
என்றாசான் செப்பியதை
அப்படியே திண்னமுற
ஒப்புகிறேன் நான். ............(3)

விரிந்து பரந்துள்ள இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையில்லாத மாயை ஆகும். இங்கு
ஒரு விஷயத்தை விளக்க வேண்டியிருக்கிறது. மாயை என்பது பொய்யன்று. உண்மையும் அன்று. குறிப்பிட்ட காலத்துக்கு உண்மை போலத் தோற்றம் அளிப்பதே மாயை. உண்மை என்பது 'உள்' என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது.அதாவது உள்ளதென்று பொருள். ஆக, உண்மை என்பது எக்காலத்திலும் உள்ளதாக
இருத்தல் வேண்டும். எல்லாம் வல்ல இறையாற்றல் ஒன்றுதான் எப்போதும் இருக்கக் கூடிய உண்மை. (சாஸ்வதமான சத்தியம்). ஆனால், இந்தப் பிரபஞ்சமானது குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே இருக்கக் கூடியது. ஆகையால், ஒருவகையில் உண்மை. ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்ததும் பிரபஞ்சம் அழிந்து, இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் பொய்யாகவும் முடிகிறது. அதே போல்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள
எல்லா வஸ்துகளும், குறிப்பிட்ட காலம் வரை இருந்து மறைகின்றன. இதற்குப் பெயர்தான் மாயை. இதனை 'கயற்றரவு' என்ற வார்த்தையால் மகாகவி பாரதி விளக்குவார். அதாவது காற்றில் அசையும் கயறு, தூரத்தில் நின்று பார்க்கையில் அரவம்
போல்(பாம்பு) அசையும். அந்தக் காற்று நின்றுவிட்டால் அது வெறும் கயறு என்பது தெரியும். அதுபோல், பிராணன் என்று காற்று இருக்கும் வரை உயிரினங்கள் அசைகின்றன. பின்னர் மடிந்து விடுகின்றன. ஆகையால் இவையெல்லாம் மாயை.
நிரந்தனமான நிச்சயம் அந்த ஏக ஆத்மாவான சிவம் மட்டுமே. அந்த
உண்மையை ஐயமின்றி உணர்ந்து கொள்வதற்காகத்தான் மிக உயர்ந்த பிறப்பான மானுடப் பிறப்பு வாய்த்திருக்கிறது. ஆகையால், இப்பிறவியில் அந்த ஏக ஆன்ம
ரூபத்தை அறிந்து,தியானித்து ஞான நிலைபெற்று, இனிமேலும் பிறவி எடுக்காமல்
இருக்கும் தவத்தை மேற்கொள்ளவேண்டும். தவம் என்பதற்கு ஒரு விஷயத்தில்
உறுதியாக நிற்றல், தொடர்ந்து மேற்கொள்ளுதல் என்று பொருள். ஆக, அழிவில்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, என்றுமே மாறாத, எல்லாவற்றிலும் வியாபித்து நிற்கும் அந்த பரமாத்மாவே அனைத்து உயிரினங்களிலும் உறைகிறார் என்ற இடைவிடாத எண்ணமே தவம் ஆகும். குருவாக வந்து அந்த இறைவனே உபதேசித்த இந்த அரிய தத்துவத்தை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

யா திர்யங்நர
தேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா
க்ருஹ்யதே யத்பாஸா
ஹ்ருதயாக்ஷதேகவிஷயா
பாந்தி ஸ்வதோs சேதனா:|

தாம் பாஸ்யை:
பிஹிதார்கமண்டலநிபாம்
ஸ்பூர்தி ஸதா பாவயன்
யோகீ நிவ்ருதமானஸோ ஹி
குருரித்யேஷா மணீஷா மம||

சூரியன் ஜோதியை மேகம்
மறைத்தாற்போல் உண்மையைச்
சூழ்ந்திடும் ஈனமதி நீங்கி
அனைத்தும் இயக்குகிற
ஆண்டவன் தன்னிருப்பும்
தன்மையும் தன்னுள் அறிபவர்
யோகியென்றே திண்ணமுற
ஒப்புகிறேன் நான்......(4).

ஆண்டவன் அனைத்திலும் வியாபித்துள்ளார். அவர் இல்லாத வஸ்து என்று எதுவுமில்லை. அவரே அனைத்தின் இயங்கு சக்தியகவும் விளங்குகிறார்.நம் மூலமாக அனைத்து செயல்களையும் செய்பவர் அவரே. ஆனால், சூரியனின் பிரகாசத்தை
மேகம் மறைப்பது போல, அந்த ஆண்டவன் குறித்த உண்மையை அறிய இயலாமல் நமது அறியாமை மறைத்துள்ளது. அந்த அவித்தை நீங்கி, ஆண்டவனின் இருப்பையும் தன்மையையும் தனக்குள்ளேயே உணர்ந்து அறிந்துகொள்பவர் மாபெரும் யோகி ஆவார். இதனை ஐயமின்றி, உறுதியுடன் நான் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

யதிஸௌக்கியாம்புதிலேசலேதத
இமே சக்ரதயோ நிர்வ்ருதா
யச்சித்தே நிதராம்
ப்ரசாந்தகலனே லப்தவா
முனிர்நிர்வ்ருத: |
யஸ்மின்னித்யஸுகாம்புதௌ
கலிததீர்ப்ரஹ்மைவ ந
ப்ரம்ஹவித்
ய: கச்சித்ஸ
ஸுரேந்த்ரவந்திதபதோ நூனம்
மணீஷா மம ||

தேவர்கோ தெய்வங்கள் எல்லோரும்
பூசிக்கும் போதிலும்
தன்னுள் அமைதியாய்
தானிருக்கும் பேரொளியைத்
தன்னுள்
லயித்திடுவோன் தானறிவான்
அப்பிரும்மம் அம்மட்டோ
அப்பிரும்மம்
ஆயிடுவான் திண்ணமுற
ஒப்புகிறேன் நான்.....(5)

எவனொருவன், தேவர்களின் தலைவனான இந்திரனும், மற்ற தேவதைகளும் தனது தவ வலிமையால் தன்னைப் போற்றித் துதிக்கின்ற உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட
போதிலும், அதனால் மனம் பிசகாமல், ஆணவம் அடையாமல், ஆர்ப்பரிக்காமல், அமைதியாக இருந்து, தனக்குள் அமைதியாய், அன்பே வடிவாய் வீற்றிருக்கும் அந்தச் சிவப்பேரொளியில் லயித்து, அதனை தியானிக்கிறானோ அந்த மனிதன், பிரும்ம சொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மாவை முழுமையாக உணர்ந்து கொள்கிறான். அது மட்டுமின்றி, அந்த பிரும்மம் ஆகவும் அவன் ஆகிவிடுகிறான். அதாவது அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, மீண்டும் பிறந்திறவாத அமரத் தன்மையை அடைகிறான்
என்பதை உறுதியாக ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். எவ்வாறெனில்,
பிரும்மம் என்பது அனைத்திலும் ஆதாரசக்தி. அனைத்து வஸ்துக்களிலும் அந்த ஆதார
சக்தியே உறைகிறது. ஆக, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் உயிர்சக்திதான் பிரும்மம்.
அது முழுமையானது. ஆகையால், அஹம்பிரும்மாஸ்மி, த்வம்பிரம்மாஸ்மி, சர்வம்
ப்ரும்மாம: அதாவது நானும் பிரும்மம், நீயும் பிரும்மம், யாவையும் பிரும்மம். இந்த
உண்மையை உணர்ந்து கொள்வதால்,அறிவு மயக்கம் அடைந்துவிடாமல் அமைதியாக
இருப்பவனே அந்த பிரும்மத்தில் ஐக்கியம் ஆகிறான்.இவ்வாறு ஐந்து ஸ்லோகங்களைக்கூறி, அனைத்திலும் ஆண்டவன் இருப்பதால்,
மனிதருக்குள் உயர்வு தாழ்வு இல்லை. பிரும்மத்தை உணர்ந்தவன் எந்தச் சாதியைச்
சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் வணக்கத்திற்குரிய ஆசாரியான், அவன்
மதிப்பிற்குரிய யோகி, எல்லாவற்றையும்விட போற்றுதலுக்குரிய பிரும்மமாகவும் அவன்
ஆகிறான் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் அருமையாக எடுத்துரைத்துள்ளார்.

நிறைவுச் செய்யுள்.
தாஸமஸ்தேs ஹம் தேஹத்ருஷ்யாs
ஸ்மி சம்போ ஜாதஸ்தேம்s ஸோ
ஜீவத்ருஷ்யா
த்ரித்ருஷ்டே|
ஸர்வஸ்யாs s
த்மன்னாத்மத்ருஷ்யா
த்வமேவேத்யேவம் மே
தீர்நிச்சிதா
ஸர்வசாஸ்த்ரை:||


நன்றி : (தமிழ் அர்த்தம்) http://detroit-satsangam.com/viewtopic.php?f=5&t=46
தொடரும்