டிசம்பர் 31, 2010

புத்தாண்டு வாழ்த்துக்களும் விருதுகளும்

 இந்த வருடம் எனக்கு மிகச் சிறந்த வருடமாக அமைந்தது. எந்த ஒரு வருடமும் முழுவதும் கசப்பாகவோ முழுவதும் இனிப்பாகவோ இருக்காது. கலந்துதான் இருக்கும். அதுபோல் நான் மறக்கவிரும்பும் ஒரு சில நிகழ்வுகளும் இருந்தது. ஆனால் பொதுவாக இந்த வருடம் நன்றாகவே இருந்தது.

வருட இறுதியில் இரண்டு விருதுகள். முதல் விருது  நண்பர் "ஆஹா பக்கங்கள்" அப்துல் காதர் அளித்த ஆஹா விருது . மிக்க நன்றி அப்துல்.


அடுத்தது ஜலீலாக்கா  அவர்கள்  தந்துள்ள "circle of friends" விருது . நன்றி ஜலீலக்கா .பதிவுலக நண்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


அன்புடன் எல்கே

டிசம்பர் 30, 2010

பாடாப் படுத்தற

சில நாட்களில் அவளுக்கு கணிணி வேண்டும் என்றால் "அப்பா ! நீ ஆபிஸ் போலையா? டைம் ஆச்சு . ரைம்ஸ் வேணும் எனக்கு " என்று என்னை ஆபிசுக்கு துரத்துவாள், இரவு நேரங்களில் கூட!!!

அதுவே சில நாட்கள், காலை அலுவலகம் கிளம்பும் நேரத்தில் "இன்னிக்கு ஆபிஸ் போ வேண்டாம்பா . பாப்பா கூடவே இரு " என்று கொஞ்சுவாள். அந்த நாட்களில் ,வண்டியில் ஒரு ரவுண்ட் கூடி சென்று வந்துவிட்டு நான் ஆபிஸ் செல்வேன்.

கடந்த ஞாயிறு மாலை , திவ்யா "அம்மா , சமையல் ரூம்ல சாக்லேட் இக்கு. எடுத்து தா " என்று கேட்டாள். அதற்கு என் மனைவி "சாக்லேட் இல்லை. அப்புறம் வாங்கி தரேன்" என்று பதில் சொல்ல , திவ்யாவின் பதில் " ஏம்மா இப்படி என்னை பாடாப் படுத்தற . சாக்லேட் இக்குல, கொடு " என்றாள். என் மனைவியிடம் பதில் இல்லை.

இந்த மாதிரி அடிக்கடி திடுக்கிட வைக்கும் பேச்சுகளை பேசுவாள். இப்பொழுதே என் அம்மாவின் நகைகள் அனைத்திற்கும் உரிமை கொண்டாட ஆரம்பித்து விட்டாள். வேறு யாருக்கும் இல்லையாம்.

இன்னும் ஐந்து மாதங்களே . பிறகு பள்ளிக்கூடம் அனுப்பவேண்டும் அவளை .


அன்புடன் எல்கே

டிசம்பர் 26, 2010

ஜகத்குரு -6- நதிஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சனலாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ஆஹா, தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் பராதீனனாக, ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!
*********************************************************************************************
தாயுடன் கழிந்த நாட்களில், அவளுக்கு புரியும் படியான எளிதான வகையில் தத்துவங்களை சொல்லி கொடுத்து வந்தார் சங்கரர். இப்படி இருக்கையில் ஒரு நாள், அவரது தாய் தூங்குகையில் அவரது கனவில் சங்கரர் சந்நியாசம் பெற்றுப் போவது போல் ஒரு நிகழ்வு வந்தது.

அதில் இருந்து அவர் மனம் சஞ்சலம் அடைந்தவாறு இருந்தது. இத்தகைய சஞ்சலத்துடன் அவர் ஒரு நாள் குளிக்க செல்லுகையில் சேற்றில் கால் வைத்து விழுந்து காலில் பலத்த அடி பட்டுவிட்டது.

"இதனால் இனி ஆற்றில் குளிக்கவும் செல்ல முடியாதே என்று சங்கரனிடம் புலம்பினாள்."

தன் தாய் மனம் கலங்குவதை கண்ட சங்கரர் நதியை வணங்கி ,மனதினால் தன் வீட்டருகே ஓடுமாறு வேண்டினார்.

அடுத்த நாள் விடியலில் , பூர்ணா நதி சங்கரரின் வீட்டு கொல்லைப்புறம் வழியாக தன் போக்கை மாற்றி ஓட ஆரம்பித்தது. இதையும் தன் தாயிடம் தான் வேண்டியதாக சொல்லாமல், அவளின் பக்திக்கும் இறை வெளிப்பாட்டுக்கும் கிடைத்த பரிசாகத்தான் சங்கரர் கூறுகிறார்.

இந்த நிலையில் காலடிக்கு புதிதாய் மூன்று பிராமணர்கள் வருகிறார்கள். அவர்கள், சங்கரரின் வீட்டை விசாரித்து வந்து அவரை காண வருகிறார்கள். அப்பொழுது சங்கரர் த்யானத்தில் இருக்கிறார். அவரைக் கண்ட அந்தப் பிராமணர்கள் தங்களுக்குள் "வேலை வந்துவிட்டது " என்று பேசிக் கொள்கிறார்கள்.

அதைக் கேட்டத் தாயின் மனம் திடுக்கிடுகிறது.

-தொடரும்

பி.கு : தோடகாஷ்டகம் தரவிறக்கம் செய்யும் லிங்க் ஸ்ரீராம் அண்ணா கேட்டிருந்தார். அவருக்காக இந்த லிங்க்


அன்புடன் எல்கே

டிசம்பர் 24, 2010

ஜகத்குரு -5- விளக்கம்


தோடகாஷ்டகம்

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தாங்களே அந்த சாட்சாத் பரமேச்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!
*********************************************************************************************
"இந்த ஸ்தோத்திரத்தை பாடி விட்டு அவர் நிக்கக் கூட இல்லை. அங்கிருந்து அவர் கிளம்பி விட்டார் ."

"மாமா எனக்கு ஒரு சந்தேகம் . இதை சொன்னால் ஸ்வர்ண மழை பெய்யும் என்றால் எல்லோரும் சொல்லி எல்லோரும் பணக்காரர் ஆகிடலாமே ?"

"நல்ல கேள்விதான். இதில நீ ஒண்ணு கவனிச்சியோ, சங்கரர் அவருக்காக இதைப் பாடலை. வேற ஒரு கஷ்டப்படற குடும்பத்துக்காக பாடினார். அதே மாதிரி அந்தக் குடும்பத் தலைவியும் இவர்கிட்ட நாங்க கஷ்டப்படறோம் நீங்க உதவி பண்ணுங்கோன்னு இவர்கிட்ட கேட்கலை.  ஏற்கனவே நான் சொன்னமாதிரி அந்தக் காலத்தில் பிராமணன் இன்னொருத்தர்கிட்ட போய் கையேந்த மாட்டா. அடுத்தவா அவாளுக்கு தட்சணையா எண்ணத் தராலோ  அதை மட்டும்தான் வாங்கிப்பா .

பொதுவா சுயநலத்தோட செய்யற எந்த வேண்டுகோளும் நடக்காது. தான் மட்டும் பணக்காரன் ஆகணும்னு நினைத்தால் அது எப்படி சரியாகும் ??

இவர் மட்டும் இல்லை, இன்னொருத்தரும் இதே மாதிரி ஸ்வர்ண மழை பொழிய வச்சிருக்கார். விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவ ஹரிஹரன் என்பவருக்கு உதவியா இருந்த வித்யாரண்யர் கேள்விப்ப்பட்டு இருப்ப தான? அவரும் இதே மாதிரி ஸ்வர்ண மழை பொழிய வைத்தார்னு ஒரு கதை இருக்கு ."

இப்பவும் ஆத்மார்த்த பக்தியோட, இந்த ஸ்தோத்திரத்தை தொடர்ந்து படித்து(உச்சரிப்பு பிழை இன்றி ) வந்தால் கண்டிப்பா அதற்குண்டான பலன் உண்டு. அது சர்வ நிச்சயம். "

"இதற்குப் பிறகு நேராக வீட்டுக்கு வரார். அவருடைய தாய்க்கு மகனை கண்டவுடன் அளவில்லா மகிழ்ச்சி. ஒரு வருஷத்திற்குப் பிறகு இப்பதான் மகனை பார்க்கிறாள். அவரை தூக்கிவச்சி ஆடாத குறைதான். "ஊருக்கே ராஜாவானாலும் தாய்க்கு மகன் தான?"


தாய்க்கு தேவையான உதவிகளை செய்துகொண்டு , வேதப் பாராயணத்தையும் செய்து வந்தார் சங்கரர்.  தன் மகன் படித்து சிறந்து இருப்பதை காண தன் கணவன் இல்லையே என்று தாய் வருந்தும் பொழுதெல்லாம், தேவையான ஆறுதல் மட்டுமல்லாமல் சில தத்துவங்களையும் சொல்லி கொடுக்கிறார். அவருக்கு புரியற மாதிரியான தத்துவங்கள் எளிமையா சொல்றார்."

அப்ப ஒரு நாள்...

-தொடரும்

அன்புடன் எல்கே

டிசம்பர் 23, 2010

டிசம்பர் கச்சேரி ஸ்பெசல்

 டிசம்பர் மாதம் சென்னையில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் களைகட்டும். அனைத்து சபாக்களும் பிசி. கூடவே அங்குள்ள கேன்டீன்களும். இந்தக் கச்சேரிகளுக்கு செல்ல முடியாதவர்களுக்காக இந்தப் பதிவு.

நேற்று திருவாதிரை. எனவே ஆர்வீஎஸ் அவருடையப் பதிவில் போ சம்போ  சிவா சம்போ ,சுதா ரகுநாதன் பாடியிருந்த காணொளியை போட்டிருந்தார். நித்யஸ்ரீ  ரசிகர்களுக்காக அவர் பாடிய இந்தக் காணொளி. இந்தப் பாடல் மகாராஜபுரம் அவர்களுக்கே மிகப் பொருத்தமாக இருக்கும். அதற்கடுத்து நித்யஸ்ரீஎந்தரோ மகானுபாவுலு

த்யாகராஜர் இயற்றிய பஞ்சரத்தின கீர்த்தனைகளில் ஒன்றான எந்தரோ மகானுபாவுலு  பாலமுரளி கிருஷ்ணாவின் குரலில் . இந்தப் பாட்டிற்கு இவர்தான் மிகப் பொருத்தமாக தோன்றுகின்றார்.புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

தமிழில் கண்ணன் மேல் பாடப் பட்ட பாடல்களில் கண்ணதாசன் அவர்கள் இயற்றிய "கிருஷ்ண கானம் " தொகுப்பு மிகப் புகழ்பெற்றது. அதில் இருந்து திரு டி.எம்.எஸ் அவர்கள் பாடிய "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ".ஹரிவராசனம்

இது அய்யப்பா சீசன். அய்யப்ப பக்தர்களுக்காக திரு ஜேசுதாஸ் அவர்களின் குரலில்அன்புடன் எல்கே

டிசம்பர் 21, 2010

வெங்காயம்


முதல் நபர் : ஏன் இந்த சம்பந்தம் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ??

பெண்ணின் தந்தை : ரொம்ப அதிகம் எதிர் பாக்கறாங்க .
முதல் நபர் : அப்படி என்ன கேட்டாங்க ?
பெண்ணின் தந்தை : அஞ்சு மூட்டை வெங்காயம் வேண்டுமாம். அப்புறம், கல்யாணத்தில், வெங்காய சாம்பார், வெங்காய பக்கோடா இதெல்லாம் போடணுமாம். நடக்கற காரியமா ?அதான் வேண்டான்னு சொல்லிட்டேன்

************************************************************************************************
மனைவி : என்னங்க இந்த கருப்பு பைல?
கணவன் : உஷ். சத்தம் போடாத. பிருச்சி பாரு.வெங்காயப் பக்கோடா இருக்கு. நீ பாட்டுக்கு யார்கிட்டயும் சொல்லிடாத. வெங்காயப் பக்கோடா சாப்பிடற  அளவுக்கு அவனுக்கு வசதி ஜாச்தியானு பொறாமை படுவாங்க
மனைவி :ஆமாங்க நீங்க சொல்றது சரிதான்.
************************************************************************************************
வெங்காயத்தை
நறுக்கினால் கண்ணீர் - வெங்காய
விலையை நினைத்தாலே
கண்ணீர்தான்  இப்பொழுது


************************************************************************************************
பத்து  வருடங்களுக்கு முன்பு என்று எண்ணுகிறேன் . ஒரு ஆட்சி கவிழ காரணமாய் இருந்தது வெங்காய விலையேற்றம். மீண்டும் இப்பொழுது முன்பு எப்பொழுதும் இல்லாத அளவு வெங்காய விலை உயர்ந்துள்ளது. நேற்றைய சென்னை நிலவரம் கிலோ 80 ரூபாய் .

இந்த ரீதியில் போனாள், மேலே நான் எழுதி உள்ளவாறுதான் நடக்கும். சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக அனைத்து காய்கறிகளுமே விலை உயர்ந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினால் சமாளிக்க முடியாத வண்ணம் விலையேற்றம் உள்ளது. இதற்காக கவலைப் படவேண்டிய முதல்வரோ அடுத்து எங்கே ரெய்டு யார் கைது என்றக் கவலையில்.

போராடவேண்டிய பிரதான எதிர்கட்சித் தலைவியோ கொடநாட்டில். மருத்துவர் அய்யாவோ யார் அடுத்து கூட்டணிக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில்.  மக்களோ கவலையில் .

அன்புடன் எல்கே

டிசம்பர் 20, 2010

ஜகத்குரு -4-கனகதார ஸ்தோத்திரம்

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!

பொருள்  :

தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

*********************************************************************************************
"எவ்வளவு நாள் அவர் குருகுலத்தில் இருந்தார் ?  எத்தனை வருடம் குருகுல வாசம் கட்டாயம் ?"

"பொதுவா குருகுல வாசம் முடிக்க பல வருடங்கள் ஆகும். குருகுலம் முடிச்சு ஒருவர் திரும்பினால் அடுத்து உடனடியா அவனுக்குத் திருமணம் செய்து வச்சிடுவா அந்த காலத்தில். ஆனால் ,சங்கரர் குருகுலத்தில் இருந்தது ஒரே ஒருவருடம்தான். கத்துக்க வேண்டிய அனைத்தையும் கத்துண்டார் . பிறவி ஞானி அல்லவா அவர் ? "

"முடிச்சிட்டு வர வழில மதிய உணவுக்கு வழக்கம் போல ஒரு வீட்டில் பிக்ஷை கேக்கறார். அது ஒரு ஏழை பிராமணரோட வீடு. அவாளே சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கா. இந்த நிலைல இவர் போய் எனக்கு பிக்ஷை  குடுன்னு கேட்கிறார்.இப்ப மாதிரி அந்த காலத்தில் வீட்டில் எதுவும் இல்லைன்னு சொல்லமாட்டா . இருக்கறதுல கொஞ்சம் பகிர்ந்து கொடுப்பா. வீட்டுக்கு ஒரு பிரம்மச்சாரி வந்து பிக்ஷை கேட்டா கண்டிப்பா கொடுக்கணும்.

இதனால் வீட்டில் இருந்த அந்த அம்மாக்கு என்ன பண்றதுன்னு புரியலை. எதாவது இருக்கான்னு தேடறாங்க. கடைசியா ஒரே ஒரு நெல்லிக் கனி  மட்டும் இருக்கு. இதுவாது இருக்கேன்னு ஒரு பக்கம் சந்தோசம், இதையா கொடுப்பது என்று தயக்கம் ஒரு பக்கம். ஒருமாதிரி மனதை தேத்திக்கிட்டு , வாசலுக்கு போய் அங்க நிக்கற சங்கரனின் பிக்ஷை வோட்டில் அந்த நெல்லிக்கனியை இடுகிறார்.

அந்த அம்மாவைப் பார்க்கிறார் . அவருடைய உடையும்,அவர் கொடுத்த நெல்லிக்கனியும் அவர்களது ஏழ்மையை சங்கரருக்கு உணர்த்துகிறது. பொதுவா அந்த காலத்தில் பிராமணர்கள் யாரிடமும் சென்று எனக்கு பொருள் இல்லியோ. உதவி பண்ணுங்கன்னு கேட்கமாட்டாங்க. அவர்கள் யாரிடமும் சம்பளத்திற்கு வேலையும் செய்யமாட்டார்கள். வேத பாராயணமே அவர்கள் வேலை. அதற்கு சன்மானம் யாரவது கொடுத்தல் பெற்றுக் கொள்வார்கள். அவர்களை சென்று எனக்கு இவ்வளவு கொடு என்று கேட்க மாட்டார்கள்.
இந்த ஏழை பிராமணனும் அப்படிப்பட்ட ஒருவரே.

சங்கரருக்கு மனசு கேட்கலை. வேதப் பாராயணம் பண்றவர் வீட்டில் இப்படி ஒரு நிலையா என்று ? உடனே அங்கே லக்ஷ்மியை மனசில எண்ணி லக்ஷ்மியை வேண்டி "கனகதார ஸ்தோத்திரம்" பாடுகிறார். அவர் பாடிய உடனே தங்க நெல்லிக் கனிகளாய் வானில் இருந்து விழுகிறது"

கனகதார ஸ்தோத்திரம்

அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
மங்கல தேவதாயா:

மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தரும் மரத்தைப் பொன்வண்டு மொய்த்துக் கொண்டு இருப்பதைப் போல, பரந்தாமனின் அழகிய மார்பை உள்ளம் மகிழ மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் அருட்கண்கள் சகல மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்."

-தொடரும்
அன்புடன் எல்கே

டிசம்பர் 19, 2010

பாரதியார் பாடல்கள்

காலத்தால் அழிக்க  முடியாத பாரதியார் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒரு சிலப் பாடல்களின் காணொளியை இங்கு இணைத்திருக்கிறேன். இது கடந்த வாரமே வந்திருக்கவேண்டியது. ஊரில் இல்லாததால் இன்று பதிவிடுகிறேன்.

ஆசை முகம் மறந்து போச்சே


ஆசை முகம் மறந்து போச்சே -இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - எனில்
நினைவு முகம் மறக்கலாமோ

சுட்டும் விழி சுடர் தான்


சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்ட கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ


வந்தே மாதரம் என்போம்

இதற்கு இரண்டு காணொளிகளை இணைத்துள்ளேன். முதலாவது பாரதியாரின் குடும்ப உறுப்பினர்கள் பாடியது. இரண்டாவது, பதிவுலக பெரியவர்கள் ஆர்வீஎஸ்,ஸ்ரீராம்,பத்மநாபன், தக்குடு ஆகியோரின் பேவரைட் நித்யஸ்ரீ அவர்கள் பாடியது.ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்


தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு


 முப்பதுகோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.


அன்புடன் எல்கே

டிசம்பர் 18, 2010

மக்களே உஷார் VIII

இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பல ஹோட்டல்களும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. விடிய விடிய ஆட்டமும் பாட்டமும் நடைபெறப் போகிறது. கொண்டாட்டம் என்றாலே மதுவுடனே என்று ஆகிவிட்டது. இந்நிலையில் ,புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்கப் போகும் பெண்கள் சிறிது கவனமாக இருத்தல் அவசியம்.

புத்தாண்டு கொண்டாட்டங்களின் பொழுது மது ஆறாய் ஓடும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்பொழுது பெண்களும் மது அருந்த துவங்கிவிட்டனர். இதை தங்களுக்கு சாதகமாக உபயோகிக்கின்றனர் சிலர். பெண்கள் அருந்தும் மதுவில் மயக்கம் தரும் கேட்டமின் போன்ற மாத்திரைகளை கலக்கின்றனர். இது மயக்கம் மட்டுமில்லாமல் வேறு பல பக்கவிளைவுகளையும் தருகிறது. ஒரு பெண்ணை மயக்கத்தில் ஆழ்த்திய பின் என்ன நடக்கும் என்று நான் சொல்லவேண்டியது இல்லை .

நீங்கள் பாதிப்படைய வேண்டாம் என்று நினைத்தால்

1. புதிய நபர் தரும் எந்தப் பானங்களையும் தவிர்த்து விடுங்கள்

2. நீங்கள் மதுபானம் குடிப்பவராக இருந்தால் ,அதை ஹோட்டலில் உள்ள ஸ்டாலுக்கு சென்று அங்கேயே வாங்கவும்

3. புதிய நபர்களுடன் அன்று வெளியில் செல்வதை தவிர்க்கவும்

இதை எல்லாம் விட சுலபமான வழி , புத்தாண்டை உங்கள் குடும்பத்தாருடன் கொண்டாடுங்கள். வரும் முன் காப்பது என்றும் சால சிறந்தது .

(இதை பற்றி நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா பேப்பரிலும் செய்தி வந்தது )

அன்புடன் எல்கே

டிசம்பர் 17, 2010

ஜகத்குரு -3-குருகுலம்

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

பொருள் (நன்றி கீதா சாம்பசிவம் )

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்!
கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். என்னை ஞாநவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

************************************************************************************************

"குருகுலம் பத்தி சொல்றேள்னு சொன்னீங்க . குருகுலம்னா இப்ப இருக்கற ரெசிடென்சியல் பள்ளிக்கூடம் மாதிரியா ?"

"அங்கேயே தங்கி படிக்கணும் என்பதைத் தவிர இரண்டுக்கும் வேற எந்த ஒற்றுமையும் இல்லை . குருகுலத்தில் வெறும் படிப்பு மட்டும் சொல்லித் தரலை. வாழ்க்கைக்கு வேணும்கற விஷயங்கள் எல்லாம் சொல்லப்பட்டு இருக்கு.

படிக்கற நேரம் தவிர மத்த நேரத்தில் சில வேலைகளும் செஞ்சாகனும். எனவே குருகுலத்தை முடிச்சிட்டு வர ஒரு மாணவன், வாழ்க்கையில் போராட தேவையான தகுதி பெற்று இருப்பான் . சொகுசான படுக்கைகள் போன்ற விஷயங்கள் இருக்காது. அது ராஜகுமாரனா இருந்தாலும் சரி, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவனா இருந்தாலும் சரி எல்லோரும் ஒரே மாதிரித்தான் இருந்தாகணும். இப்ப புரிஞ்சதா ரெண்டுக்கும் வித்யாசம் ?"

"ஓரளவு புரிஞ்சது . நீங்க மேலே சொல்லுங்க "

"என்னதான் மகன் குருகுலம் போய்தான் ஆகனும்னு இருந்தாலும் ,ஒரே மகனா இருந்ததால் தாய்க்கு மனசில்லை அனுப்ப. தாயை சமாதானப் படுத்தி பிறகு குருகுலம் போனார் சங்கரர் "

"குருகுலத்திற்கு சென்ற சங்கரர், முறைப்படி கற்க வேண்டிய பாடங்களையும், வேதங்களையும் கற்றார் ."

"குருகுலம் முடிஞ்சு தன் வீட்டிற்கு திரும்பும் நாளும் வந்ததது .இப்ப இருக்கற மாதிரி வாகன வசதிகள் எல்லாம் இல்லை. கால்நடையாக
திரும்பி வந்தார். பிரம்மச்சாரிகள் பிக்ஷை எடுத்தே உண்ண வேண்டும் என்ற நியதிக்கு ஏற்ப எப்ப தேவையோ அப்ப பிக்ஷை எடுக்கிறார்.

இதுல ஒரு விஷயம் . அந்த வேளைக்கு என்னத்தேவையோ அதை மட்டுமே பிக்ஷை எடுக்க வேண்டும். தேவைக்கு அதிகமா எதையும் வாங்கக் கூடாது ."

அந்த மாதிரி ஒரு சமயத்தில்....


அன்புடன் எல்கே

டிசம்பர் 16, 2010

பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...

பெண் குரலில் ஒலித்த பத்துப் பாடல்களில் எனக்குப் பிடித்தப் பத்து பாடல்களை வரிசைப் படுத்துமாறு  "அருண் பிரசாத் " அழைத்திருந்தார்.  இதோ எனது பத்து 

"எவனோ ஒருவன் வாசிக்கிறான் " 

அலைப்பாயுதே படத்தில் வைரமுத்துவின் வரிகளுக்கு உயிர் ஊட்டியவர் மறைந்த பாடகி சுவர்ணலதா. என்ன ஒரு குரல். அவரது பாடலை அருகில் இருந்து கேட்கத்தான் இறைவன் அவரை சீக்கிரம் அழைத்துக் கொண்டானோ ?? காதலனை பிரிந்த காதலியின் மனநிலையை பிரதிபலிக்கும் அருமையான பாடல் . இதில் எனக்குப் பிடித்த வரிகள்

"புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்"

நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்

"அக்னி நட்சத்திரம்", மணிரத்தினத்தின் இந்தப் படத்தில், இந்தப் பாடலை பாடி இருப்பவர் சின்னக் குயில் சித்ரா. தன் காதலை காதலனிடம் சொல்வதாக அமைந்திருக்கும் இந்தப் பாடல். எனக்குப் பிடித்த வரிகள் ,

"உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க
தொட்டுப் பார் கட்டிப் பார் தேகம் வேர்க்க"

யமுனை ஆற்றிலே
"தளபதி" இன்னுமொரு மணிரத்தினத்தின் படம். இதில் வரும் அனைத்துப் பாடல்களுமே அருமை என்றாலும். மிதாளி பாடிய "யமுனை ஆற்றிலே " என்றுத் துவங்கும் இந்தப் பாடல் மனதை வருடி செல்லும் தென்றலாய் இருக்கும். எனக்குப் பிடித்த வரிகள் 

"ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்பு தெல்லையோ..."

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

"பட்டணத்தில் பூதம்" என்றப் படத்தில் கவியரசரின் வரிகளுக்கு உயிர் குடுத்து இருப்பவர் சுசிலா அம்மா. தன்னை திருமண செய்ய சீக்கிரம் நாள் குறிக்க காதலனை வேண்டுகிறாள் காதலி. நான் ரசித்த வரிகள் 

"நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை"

இந்தப் பாடலுக்கு வேறு ஒரு சிறப்பு உண்டு. அதை யாரவது சரியாக சொல்கிறார்களா என்று பார்ப்போம். 
காற்றில் எந்தன் கீதம்

 ஜானகி அம்மாவின் மிக சிறந்தப் பாடல்களில் ஒன்று. ஜானி படத்திற்காக இவர் படிய இந்தப் பாடலில் எனக்குப் பிடித்தது என்று எந்த ஒரு குறிப்பிட்ட வரிகளையும் சொல்வது மிகக் கடினம். பாட்டு முழுவதுமே பிடிக்கும்.

கண்ணா... கருமை நிறக் கண்ணா

கவியரசரின் மற்றொரு முத்தான படைப்பு. நிறத்தால் தன்னை ஒதுக்குவர்களை என்னை எத்தனையில் கடவுளிடம் முறையிடுவதாய் அமைந்த பாடல் .சுசிலா அம்மாவை தவிர வேறு  யார் இந்தப் பாடலை இவ்வளவு பொருத்தமாகப் பாட இயலும் ??

"மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா"

 வாராய் என் தோழி வாராயோ

 அண்ணன் தங்கை பாசத்திற்கு திரை உலகில் இன்றும் உதாரணமாய் சொல்லப்படும் பாசமலர் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல். திருமணத்தின் பொழுது பாடப் படுவதாய்.

"மலராத பெண்மை மலரும் முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும் முன்பு விளங்காத கேள்வி விளங்கும்" . ஆழமான அர்த்தம் உள்ள வரிகளுக்கு சொந்தக்காரார் நமது கவியரசர். 

யாருக்கு மாப்பிள்ளை யாரோ

 இந்தப் பாடல் இடம் பெற்றப் படம் "பார்த்தாலே பசி தீரும் " சுசிலா அம்மாவின் தேன் குரலில், கவியரசரின் பாடல் .

 "கட்டவிழ்ந்து கண் மயங்குவாரோ
அதில் கைகலந்து காதல் புரிவாரோ"

காதோடு தான் நான் பாடுவேன்

எல்.ஆர் ஈஸ்வரி அவர்களின் குரலில் இந்தப் பாடல் இடம் பெற்றப் படம் வெள்ளி விழா. அந்தக் குரலில் உள்ள காதலை கவனியுங்கள். இனி இந்த மாதிரி பாடகிகள் யாரும் கிடைப்பார்களா ??

"காதோடு தான் நான் பாடுவேன் மனதோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன் உன் மடி மீது தான் கண் மூடுவேன்"

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

தன் குழந்தையை தூங்க வைக்க தாலாட்டு பாடும் தாயின் வரிகளாக அமைந்தப் பாடல். சிப்பிக்குள் முத்து படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை பாடியிருப்பவர் சுசிலா அம்மா. எனக்கு இதன் மலையாள பதிப்பை ரொம்பப் பிடிக்கும். தமிழ் வரிகளை விட  மலையாள  வரிகள் நன்றாக இருக்கும் 

இதை தொடர நான் அழைப்பது அமைதி சாரல், ஆர்வீ எஸ் மற்றும் நம்ம தக்குடு  
 
அன்புடன் எல்கே

டிசம்பர் 15, 2010

ஷேரிங் பட்டன்களை நீக்குதல்

  பதிவு திருட்டை பற்றிய பதிவில், மனோ சாமிநாதன் அம்மா அவர்கள், வலைப்பூவில்   வரும் ஷேரிங் பட்டன்களை எப்படி நீக்குவது என்று கேட்டிருந்தார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவு. இதை நீக்குவது எப்படி என்று பார்க்கும் முன் ஒரு விஷயத்தை  சொல்லிவிடுகிறேன்.

ஷேரிங் பட்டன்களை நீக்கியப் பிறகு, உங்கள் பதிவை படிப்பவர்கள் அதை தங்களின் கூகிள் பஸ், ட்விட்டர், பேஸ்புக் போன்றவற்றில் பகிர விரும்பினால் அவ்வாறு செய்ய இயலாது. அதற்குண்டான பட்டன்கள் இருக்காது. உங்கள் பதிவை நீங்கள் மட்டுமே பகிர இயலும். இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

முதலில் உங்கள் வலைப்பூவின் டேஷ்போர்டில் இருந்து , டிசைன் டேப் கிளிக் செய்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மூன்று டேப் இருக்கும் . அதில் "பேஜ் எலிமென்ட்ஸ் " டேபில் 
"blog post"  என்று ஒரு கட்டம் இருக்கும். அதில் "edit " பட்டனை கிளிக் பண்ணுங்கள்.

இப்பொழுது புதியதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். அதில் " Show Email Post Links" மற்றும் " Show Share Buttons" அருகில் இருக்கும் டிக் மார்க் ரீமூவ் செய்துவிட்டு , "save " பட்டனை கிளிக் செய்து நீங்கள் செய்த மாற்றத்தை சேவ் பண்ணவும்.

இப்பொழுது மீண்டும் ""பேஜ் எலிமென்ட்ஸ்" வந்து விடுவீர்கள் .இங்கும் மீண்டும் ஒரு முறை சேவ் செய்துவிட்டு, உங்கள்  பதிவை பாருங்கள். இப்பொழுது ஷேரிங் பட்டன்கள் இருக்காது.


அன்புடன் எல்கே

டிசம்பர் 10, 2010

அறிவிப்புகள்

அறிவிப்பு 1

தமிழ்மணம் நடத்தும் விருதுகள் 2010 போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்துவிட்டேன். பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் களத்தில் நானும் இறங்கியுள்ளேன். நான் போட்டிக்கு அனுப்பி உள்ள இடுகைகள் உங்களுக்கும் பிடித்து இருக்கும் பட்சத்தில் தமிழ்மணம் விருதிற்கான ஓட்டெடுப்பை நடத்தும் பொழுது ஓட்டளியுங்கள். நான் சமர்பித்துள்ள மூன்று இடுகைகளின் விவரம் கீழே

 எதிரெதிர் பதிவு
சிஸ்டம் ரீஸ்டோர்  
நான் இறந்துப் போயிருந்தேன். 


அறிவிப்பு 2

ஜகத்குரு அடுத்த பகுதி அடுத்த வாரம் புதனுக்குப் பிறகுதான் வரும். இரண்டு நாட்களாக அலுவலகத்தில் ஆணி அதிகம் . மேலும் மாலையில் திருமணத்திற்காக  ஊருக்கு செல்கிறேன். மீண்டும் புதன் அன்றே வருவேன். அதுவரை எந்தப்  பதிவுகளும் இருக்காது.


புதன்கிழமை சந்திப்போம் . நன்றி
 

அன்புடன் எல்கே

டிசம்பர் 09, 2010

பதிவு திருட்டை தடுக்க

முன் குறிப்பு :

தங்கள் பதிவு திருடுபோவதை தடுக்க விரும்புவர்கள் மட்டும் படிக்கவும்.தடுக்க இது ஒரு வழி. ஆனால் இதன் மூலம் மட்டுமே தடுக்க இயலாது. முற்றிலும் ஒழிக்க  இன்னும் வழிகள் வரவில்லை.

நேற்றையப் பதிவில் நமது பதிவில் இருந்து திருடி தங்கள் பதிவில் போட்டவர்களின் தளங்களை கூகிளுக்கு ரிப்போர்ட் செய்யும் வழியை சொல்லி இருந்தேன். ஆனால் பின்னூட்டத்தில் பலர் காப்பி செய்வதையே தடை செய்ய இயலுமா என்று கேட்டிருந்தனர்.

நமது கூகிள் ஆண்டவர் இருக்க எதற்கு கவலை என்று இணையத்தில் தேடிய பொழுது ஒரு நான்கு அல்லது ஐந்து முறைகள் கொடுக்கப்பட்டு இருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக சரிபார்த்து கடைசியாக இந்தத் தளத்தில் இருந்த முறை சரியாக வேலை செய்தது .

நான் முதலில் என் அலுவலகக் கணிணியில் இருந்து சரி பார்த்தேன். பிறகு, நமது பதிவுலக நபர்கள் வெங்கட் நாகராஜ், பிரியமுடன் ரமேஷ் ஆகியோரையும் சரிபார்க்க சொன்னேன். க்ரோம்,இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ,பயர்  பாக்ஸ் ,எபிக் ஆகிய நான்கு உலவிகளிலும் சோதித்து பார்த்துவிட்டேன். இங்கு கொடுத்துள்ள  எச் டி எம் எல் கோடை உங்கள் வலைப்பூவில் சேர்த்து விட்டால் அதற்கு பின் உங்கள் தளத்தில் இருந்து காப்பி செய்வதை தடுக்கலாம்.ஒழிக்கலாம் என்று சொல்லவில்லை,காரணம் இதிலும் ஒரு குறைபாடு உள்ளது. அதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை  . இங்கே அதை சொன்னால்,வீட்டை பூட்டி சாவியை திருடன் கையில் கொடுத்த கதை ஆகி விடும்.
எப்படி இதை உங்கள் தளத்தில் சேர்ப்பது என்று பார்ப்போம் .

1.முதலில் உங்கள் வலைப்பூவிற்கு சென்று டாஷ்போர்ட் செல்லுங்கள். பிறகு டிசைன் . அதன் பிறகு எடிட் ஹெச் டி எம் எல் செல்லுங்கள்.

2. பின் அங்கு இருக்கும் edit HTML template என்று கொடுத்து இருக்கும் . அதன் கீழ் உள்ள பெட்டியில் கிளிக்  செய்தவிட்டு <head> எங்கிருக்கிறது என்று தேடுங்கள். அதன் கீழ் நான் கொடுத்துள்ள கோடை(code ) காப்பி பேஸ்ட் செய்ய வேண்டும் .

இருங்க இருங்க, நீங்க கேக்கறது புரியுது. என் பதிவில் இருந்து அதை  காப்பி பேஸ்ட் செய்ய இயலாது. எனவே அதை இந்த லிங்கில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

இது மட்டும் செய்தால் போதாது. 

இப்படி காப்பி செய்வதை தடுத்தாலும் வேறு ஒரு வகையில் காப்பி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் பதிவின் கீழ் சில பட்டன்களை நீங்கள் கொடுத்து இருப்பீர்கள். இது  உங்கள் பதிவை அப்படியே மெயில் செய்ய உதவும். 

அதை நீக்க ,
1. முதலில் டேஷ்போர்டில் இருந்து செட்டிங்க்ஸ் செல்லுங்கள். பின்பு "basic settings" இன் கீழ் Show Email Post links? ஏன்டா ஆப்ஷனுக்கு அடுத்து "no" என்பதை  தேர்வு  செய்யுங்கள் .

2.புதிதாய் கூகிள் கொடுத்த வசதியான "share buttons" அதையும் நீக்குங்கள் 


என்னை மாதிரி மொக்கை பதிவர்களுக்கு இது உபயோகப் படாது. உபயோகம் உள்ள கவிதை, விழிப்புணர்வு,சமையல் பதிவு எழுதும் நண்பர்களுக்கு இது  மிகவும் உதவும். 


அன்புடன் எல் கே

டிசம்பர் 08, 2010

பதிவுத் திருட்டு

தமிழ் பதிவுலகம் வளர  வளர , பதிவுத் திருட்டும் வளர ஆரம்பித்துள்ளது. சென்ற மாதத்தில் சகோதரி ஜலீலா அவர்களின் பதிவு திருடப்பட்டுள்ளது என்று போட்டிருந்தார்.எனதுக் கவிதைகள் சிலது கூட திருடப்பட்டு இருந்தது.  இப்பொழுது நிலா ரசிகனின் கவிதைகள் . சமீபத்தில்தான் இவரது கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த செயல் கண்டிப்பாக அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நம் பதிவை படிக்கும் நண்பர்கள் அதை பல இடங்களில், கூகிள் பஸ் ,குழுமங்கள் மற்றும் மெயில் மூலம் பலரிடம் பகிர்ந்துக் கொள்கின்றனர். ஆரம்பத்தில் பதிவின் லின்கோடு செல்லும் மெயில் எதோ ஒரு இடத்தில் லிங்க் துண்டிக்கப்பட்டு அதில் உள்ள தகவல்கள் மட்டும் மேலும் பலருக்கு செல்கின்றன. இது இந்த மாதிரி திருடுவோருக்கு வசதியாக போகிறது. நீங்கள் கேட்டால் ஒரே வார்த்தையில்  மெயிலில் வந்தது என்று சொல்லிவிடுவர். இதை நாம் தவிர்க்க இயலாது .

இந்திய இணைய பாதுகாப்பு சட்டம் , இந்த மாதிரி விஷயங்களில் என்ன சொல்கின்றன என்று சட்ட வல்லுனர்கள் யாராவது  ஒரு பதிவு போட்டால் பரவாயில்லை . மேலை நாடுகளில் இது மிகப் பெரிய குற்றம். இங்கு இன்னும் இத்தகைய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை. அடுத்தவர்களின் உழைப்பை திருடுவது தவறு என்று பலருக்கும் தெரிவது இல்லை. பலரும் இந்த மாதிரி வேறு ஒரு பதிவில் இருப்பதை எடுத்து போடுவது தவறு, எளிதில் கண்டுபிடிக்கமுடியும் என்பதை உணர்வது இல்லை. அதுதான் முதல் காரணம்.


உங்கள் பதிவில் இருக்கும் தகவல்களை உங்கள் பதிவிற்கு லிங்க் கொடுக்காமல் தனது சொன்ன பதிவு என்று சொல்லி கொள்வோரிடம் முதலில் பின்னூட்டம் மூலமோ இல்லை மெயில் மூலமோ சொல்லிபாருங்கள். அப்பொழுதும் அவர்கள் கேட்கவில்லை என்றால் நீங்கள் கூகிளிடம் புகார் செய்யலாம். அதற்கு கீழ்க்கண்ட சுட்டிக்கு செல்லவேண்டும். அதில் கேட்டிருக்கும் தகவல்களை நிரப்பி சப்மிட் செய்தால், கூகிள் தகவல்களை சரிபார்த்து தேவையான நடவடிக்கையை எடுக்கும். அதற்கான சுட்டி  கீழே உள்ளது. இதை அந்தந்த பதிவின் உரிமையாளரே செய்ய முடியும்.


http://www.google.com/support/blogger/bin/request.py?contact_type=blogger_dmca_infringment

 இந்திய இணைய பாதுகாப்பு சட்டம் என்ன சொல்கின்றது என்று தெரிந்தப் பின் அதை பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.


பி .கு : இப்பொழுது சோதனை முயற்சியாக எனது பதிவில் காப்பி பேஸ்ட் செய்வதை தடை செய்யும் ஒரு கோட் சேர்த்துள்ளேன். நண்பர்கள் எனதுப் பதிவில் காப்பி செய்ய முடிகிறாதா என்று பார்த்து சொல்லவும் அதை வீட்டில் ஒரு முறை சோதனை செய்து பார்த்துவிட்டு நாளை பதிவில் இடுகிறேன்

அன்புடன் எல்கே

டிசம்பர் 07, 2010

சிரிக்க மட்டும்தான்...

ரொம்ப நாளைக்கு முன்னாடி நம்ம பதிவர்களின் வலைப்பூ பெயர்களை வைத்து  ஒரு பதிவு போட்டேன். அதுக்கப்புறம் அந்த மாதிரி போட வாய்ப்பு கிடைக்கலை .இப்ப  அடுத்த ரவுண்டு போக வேண்டிதான்....யார்கிட்ட இருந்து ஸ்டார்ட் பண்ணலாம் ???இவன் ஜெயிக்கப் பிறந்தவன்

 அப்ப மத்தவங்க ???

சங்கரியின் செய்திகள்         

அட ! நாங்க இன்றைய செய்திகள்னு நினச்சு வந்தா, உங்க செய்திகளை சொல்றீங்களே

குட்டிச்  சுவர்க்கம்

அப்ப பெரிய சுவர்க்கம் எங்க ??

சாதாரணமானவள்

அப்ப, மத்தவங்க எல்லாம் அசாதாரணமானவங்களா ? இதெல்லாம் யாரும் கேட்க மாட்டீங்களா??

தீராத விளையாட்டு பிள்ளை

கல்யாணம் ஆய்டுச்சா ??? எதுக்கும் உங்க தங்கமணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிவைக்கணும், தீராத விளையாட்டு பிள்ளையாம்...

நிலா அது வானத்து மேலே

நிலா வந்து மேலதாங்க இருக்கும். வேற எங்க இருக்கணும்னு சொல்றீங்க ??

பக்கோடா பேப்பர்கள்

அப்ப மிக்சர் ,காராபூந்தி பேப்பர்லாம் ???

மாப்ள ஹரிஸ்

அப்ப மச்சான் ஹரிஸ் யாரு ???

சூரியனின் வலை வாசல்

அப்ப சந்திரனின் வலை வாசல் எங்க ??

அப்பாவி தங்கமணி

இதற்கு பேர்தான் முரண் நகையோ ???


சிரிப்பு போலிஸ்

அப்ப தமிழ்நாட்டில் இருக்கற மத்த போலீஸ்லாம் சீரியஸ் போலீசா ??

கோமாளி

உண்மையை  ஒத்துகிட்டதற்க்கு நன்றி

டிஸ்கி : மக்களே, பிடிச்சு  இருந்தா பாராட்டுங்க. இல்லை அடி உதை குடுக்கறது, ஆட்டோ  அனுப்பறது இப்படி எல்லாம் ஐடியா இருந்த, அதை எல்லாம் அப்படியே அமீரகத்திற்கு அனுப்பிடுங்க. இந்தப் பதிவிற்கு ஐடியா கொடுத்தவர் அங்கதான் இருக்காருங்கோ....


அன்புடன் எல்கே

டிசம்பர் 06, 2010

ஜகத்குரு -2. பிறப்பு


தோடகாஷ்டகம்
 
விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

பொருள் (நன்றி கீதா சாம்பசிவம்

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும், ஆன அந்தப்பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி
*******************************************************************************************
 அடுத்த நாள் மதியம் உணவுக்குப் பிறகு , "மாமா , சங்கரர் பத்தி சொல்றேன்னு சொன்னீங்க!"

"ஒரு விஷயத்தை முழுசா தெரிஞ்சிக்கற வரைக்கும் விட மாட்டியே. சரி உக்காரு சொல்றேன் "

கேரளாவில் காலடின்னு ஒரு சின்ன கிராமம். அந்த ஊரில் சிவகுரு ஆர்யாம்பா தம்பதிகள். சிவகுரு பரம சிவபக்தர் . கல்யாணத்திற்கு பிறகு குழந்தை வேண்டி திருச்சூரில் இருக்கும் வடுகநாதரை பிரார்த்தித்து ஒரு மண்டலம் விரதம் இருந்தாங்க. அந்த ஒரு மண்டல விரதத்தின் பயனாய், கி.பி. 788 ஆம் ஆண்டு வைசாக சுக்ல பக்ஷ திருவாதிரை நட்சரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. என்ன ஒரு பொருத்தம் பார்த்தியா வெங்கட் ?  திருவாதிரைக்கு உரியவன் அந்த சிவன்.அவருடைய நட்சரத்தில் சங்கரர் பிறந்தார்.  "சங்கரன்" என்றப் பெயரை சூட்டினர் அவர்கள். சங்கரன் என்றால் எல்லா நலன்களும் அளிப்பவன் என்று பொருள்.

சங்கரர் பிறந்த வருடங்களை மாற்றி சொல்பவர்களும் உண்டு. அவர் வாழ்ந்தது இன்னும் பழைய காலத்தில் என்று சொல்கிறார்கள். ஆனால் ஸ்ருங்கேரி மடத்தில் உள்ள கணக்குகளின் படி அவர் பிறந்தது  இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் வருடம்தான் என்று நிரூபணம் ஆகிறது "

சங்கரர் பிறந்து சில வருடங்களில் சிவகுரு பரம்பதம் அடைந்தார். எந்த ஒரு காலத்திலும், சிறு வயதில் தந்தையை இழப்பது என்பது மிக கொடுமையான ஒரு விஷயம். தந்தைதான் அனைவருக்கும் முதல் குரு. மேலும், ஒரு குடும்பம் நல்லபடி நடக்க ஒரு தலைவன் வேண்டும்.

ஆனால், காலடியில் இருந்த மக்கள், சங்கரர் தனது தந்தை இழந்த வருத்தம் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். அந்த காலத்தில், ஒருத்தருக்கு எதாவது பிரச்சனை என்றால், அருகில் வசிக்கும் மக்கள் உதவி செய்வார்கள். இப்ப இருக்கற மாதிரி பக்கத்து வீட்டில் இருப்பது யாருன்னு கூட தெரியாம இருக்க மாட்டாங்க.

சங்கரருக்கு அடிப்படை அக்ஷரப்யாசம் போன்றவை செய்ய அந்த கிராமத்தில் இருந்த அந்தணர்களே உதவிப் புரிந்தனர். அதுமட்டுமிலாமல், சங்கரரது குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்தனர்.

அடிப்படை கல்வி ஓரளவு அங்கு முடிந்தாலும், அந்த கால முறைப்படி குருகுலத்தில் முறைப்படி பயிலனுமே. அதற்காக சங்கரர் முதன்முறையாக காலடியை விட்டு குருகுலத்திற்கு சென்றார்."

"மிச்சத்தை நாளைக்கு பார்ப்போம்டா வெங்கட் "

பி.கு : மேலே நான் பதிவு செய்துள்ளது தோடகர் எழுதிய "தோடகாஷ்டகம்" . தோடகம் என்ற விருத்தத்தில் அமைந்த அஷ்டகம். இது சங்கரர் பற்றி அவரது சீடர் பாடியது. தமிழில் இதன் பொருளை எனக்குத் தந்தது கீதா சாம்பசிவம் அவர்கள். அவர்களுக்கு என் நன்றி.


அன்புடன் எல்கே

டிசம்பர் 05, 2010

நான் ரசித்த சிலப் பாடல்கள்

1. விஷமக்கார கண்ணன் 
ஒரு சிலப் பாடல்கள் , வரிகளுக்காகப் பிடிக்கும். ஒரு சிலப் பாடல்கள் அதை பாடியவர்களுக்காகப் பிடிக்கும்.ஊத்துக்காடு அவர்களின் செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த   இந்தப் பாடல் வரிகளுக்காகவும் இதை பாடிய அருணா சாய்ராம் அவர்களுக்காகவும் பிடிக்கும். பலர் இந்தப் பாடலை பாடியிருந்தாலும், அருணாவின் மேனரிசம் நம்மை இந்தப் பாட்டோடு ஒன்ற வைத்து விடும். கண்ணனின் குறும்புத்தனங்களை அழகாக விவரிக்கும் இந்தப் பாடல், அருணா சாய்ராமின் குரலில் 2 . மாடு மேய்க்கும் கண்ணே

மாடு மேய்க்க செல்லும் கண்ணனை தடுக்கும் யசோதைக்கும் கண்ணனுக்கும் நடக்கும் விவாதமாய் இந்தப் பாட்டு. நம் கண்முன்னே கண்ணனையும் ,யசோதையும் கொண்டு வந்து நிறுத்திவிடுவார் அருணா. இந்தப் பாடலை இயற்றியவர் யார் என்று யாரவது சொல்லுங்களேன்3 . குறை ஒன்றும் இல்லை

ஒரு சிலப் பாடல்கள் ஒரு சிலரின் குரலில் மட்டுமே கேட்கப் பிடிக்கும். அப்படி பட்ட ஒரு சிலப் பாடல்களில் ஒன்று  குறை ஒன்றும் இல்லை . ராஜாஜி அவர்கள் எழுதிய ராகமாலிகா ராகத்தில் அமைந்த இந்தப் பாடல், மறைந்த எம்.எஸ் அவர்களின் குரலில் மட்டுமே கேட்கப் பிடிக்கும். என்ன ஒரு குரல் .... 4 . கல்யாணப் பாடல்கள்

இந்த வாரும் ஒரு கல்யாணம் சென்ற பொழுது கேட்டது. உடனே தேடி பிடித்தேன். எதிர்பார்க்காமல் இன்னொரு பாட்டும் இணைத்து கிடைத்தது. இரண்டாவது பாடலை மறக்காமல் கேளுங்கள். கண்டிப்பா எல்லோருக்கும் பிடிக்கும் பி.கு . இந்த முறை சென்னையில் திருவையாறு விழாவில் எஸ்.பி.பி. கர்நாடக கச்சேரி செய்யப் போகிறார்.

அன்புடன் எல்கே

டிசம்பர் 03, 2010

ஜகத்குரு -1 காலநிலை

கணபதி வணக்கம்

"கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்

யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்"

குரு வந்தனம்

குரவே சர்வ லோகானாம் பீஷஜே பவ ரோகினாம்
நிதயே சர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நமஹ!

அனைத்துலகங்களுக்கு குருவானவரும், அஞ்ஞான நோய்களுக்கு மருந்தானவரும் சகல வித்தைகள் நிறைந்த நிதி புதையலும் ஆனவரான தென்திசை நோக்கி அமர்ந்தவரே உம்மை வணங்குகின்றேன் .சுந்தரம் , அரசு வேலையில் இருந்து ஓய்வுப் பெற்று சென்னையின் புறநகர் பகுதியில் வசித்து வந்தார். திருமணம் ஆகி சில வருடங்களிலேயே மனைவி இறந்தப் பின், மறுமணம் செய்துக் கொள்ளாமல் ஆன்மீகத்தில் கவனம் செலுத்த துவங்கினார். வயதின் காரணமாய் உதவிக்கு தன் தூரத்து உறவினன் ஆன வெங்கட்டை வீட்டில் உதவிக்கு வைத்துள்ளார். வெங்கட் இன்றைய தலைமுறையை சேர்ந்தவன் ஆனாலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவன். எனவே தனக்கு வரும் சந்தேகங்களை சுந்தரத்திடம் கேட்டு தெளிவு பெறுவான் . அப்படிதான் அன்றும் .

"மாமா ! இப்ப நடக்கறதெல்லாம் பார்த்தால் எங்கே நமது பழமையான ஹிந்து மதம் கொஞ்சம் கொஞ்சமா அழிவு அடைந்து வருதோன்னு பயமா இருக்கு . இதை மாற்ற முடியாதா ?"

"வெங்கட், இப்படி நீ பயப்படறது அனாவசியம். யாரால் தோற்றுவிக்கப் பட்டது என்று அறியப்படாத அளவு தொன்மை உடைய ஹிந்து மதத்தை அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது . அழியவும் அழியாது. சில சமயம் ஹிந்து மதத்திற்கு நெருக்கடி அதிகமாக இருப்பது போல இருக்கும். அந்த மாதிரி சமயத்தில் எல்லாம், புத்தணர்ச்சி பெற்று மீண்டும் பழையப் பொலிவோடு மீண்டு வந்திருக்கிறது.

ஆதி சங்கரர் பிறக்கறதுக்கு முன்னாடி , இப்படித்தான் ஹிந்து மதம் தனது செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்துகிட்டு இருந்துச்சி . அவர் வந்ததுக்குப் பின்னாடிதான் இதை மாற்றினார் "

"மாமா ! கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன் . அப்ப என்ன மாதிரி பிரச்சனைகள் இருந்தது. இப்ப இருக்கற மாதிரி அப்பவும் நாத்திகம் பேசறவா இருந்தாளா ?"

"நாத்திகம் பேசறவா எல்லா காலத்திலும் இருக்கறாங்க. சொல்லப் போனா ராமர் காலத்திலும் ஜாபாலி என்பவர் நாத்திகம் பேசி இருக்கார். எல்லா விதக் கருத்துக்களை கொண்டவர்களையும் அரவணைச்சு போவதுதான் ஹிந்து மதத்தின் சிறப்பு . இன்னும் விரிவா சொல்றேன் கேளு "


"பண்டைய காலத்தில் சிறப்போடு இருந்த ஹிந்து மதம், நடுவில் வந்த சில குழப்பங்களால் தனது பெருமையை இழக்க ஆரம்பித்தது. அதே சமயத்தில் பவுத்தமும், சமணமும் புகழ் பெற்று விளங்கியது. அதே போல், ஹிந்து மதத்தின் பிரிவுகளாக காளாமுகமும்,காபாளிகமும் புகழ் பெற துவங்கியது "

"மாமா, இந்த காளாமுகம், காபாலிகம் இதெல்லாம் என்ன ? இதுவரைக்கும் நான் கேள்விப் பட்டது இல்லையே ?"

"சுருக்கமா சொல்லனும்னா, இவை இரண்டும் வாழ்வு நிலையில்லாதது என்று சொல்லி, இறைவனை அடைய நரபலி கொடுத்தாலும் தவறில்லை என்று சொன்னவை. இவர்கள் பெரும்பாலும் சிவனை தங்களது இஷ்ட தெய்வமாகக் கொண்டு பல வகை தாந்த்ரீக வெளிப்பாடுகளை மேற்கொண்டவர்கள் . இந்த காளாமுகம்,காபாலிகம் போன்றவற்றின் வருகையும், அவர்களது வழிபாடு முறையும் மக்களை ஹிந்து மதத்தில் இருந்து சமண,பவுத்த மதங்களின் பக்கம் திருப்பியது. ஏறக் குறைய இந்தக் காலகட்டத்தில்தான் சங்கரர் பிறந்தார். ஹிந்து மத கோட்பாடுகளில் முக்கியமான அத்வைத சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். "

"மாமா, முதலில் அத்வைதம்,த்வைதம், விசிஷ்டாத்வைதம் பத்தி சொல்லுங்கோ "

த்வைதம் மத்வரால் உபதேசிக்கப் பட்டது. துவி என்றால் இரண்டு. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வெவ்வேறு எனது இவரது கருத்து.

அத்வைதம் சங்கரால் உபதேசிக்கப் பட்டது. அ + துவைதம் = இரண்டற்றது. அதாவது ஜீவாத்மா ,பரமாத்மா இரண்டும் இரண்டல்ல , ஒன்றுதான் .

விசிஷ்டாத்வைதம், ராமானுஜரால் உபதேசிக்கப் பட்டது. அதாவது, ஜீவாத்மா, பரமாத்வாவில் இருந்து பிறந்தது. பரமாத்மாவே நிலையானது என்பது இதன் கருத்து."

"ஓ ! இப்ப புரிஞ்சது . சரி சங்கரரை பற்றி சொல்லுங்கோ."

"இன்னிக்கு இது போதும். ஒரே நாள்ல எல்லாம் சொன்னா நீ புரிஞ்சிகிறது கஷ்டம். மீதம் அப்புறம் சொல்றேன் "

- தொடரும்

டிசம்பர் 02, 2010

திவ்யாவின் பக்கம் IX

மரியாதையா நான் சொல்றத கேட்கப் போறியா இல்லையா # திவ்யாவின் மிரட்டல்

இதுவரை அவளிடம் எங்களால் மாற்ற முடியாத ஒரே பழக்கம் வாயில் விரல் போடுவது. யாரவது நல்ல ஐடியா கொடுங்கள். இப்பொழுது இரண்டரை வயது ஆகிறது. இப்படியே தொடர்ந்தால் பற்கள் பாதிக்கப்படும் என்பது எனது பயம்.

தமிழ் மாதங்கள், நட்சத்திரங்கள் பெயர் சரியாக சொல்கிறாள். அதே போல், ஆங்கில எழுத்துக்கள் முழுவதும். தமிழ் ரைம்ஸ் நன்றாக  பாடுவாள். அதேபோல் பாரதியார் பாடியுள்ள பாட்டுக்களும்.


"நீ யாரோட செல்லம் ?" இது திவ்யாவின் அத்தை .
"நான் பாப்பாவோட செல்லம் " இது திவ்யா
"அப்பா/அம்மா செல்லம் இல்லையா நீ ?" அத்தை
"இல்லை " இது திவ்யா . # எவ்வளவு விவரம் ...


பல வார்த்தைகள்  தெளிவாக பேசினாலும், ஒரு சில சமயம் அவள் என்ன பேசுகிறாள் என்று அந்த மழலையில் புரிவது இல்லை. அப்படிப்பட்ட சில வார்த்தைகள், மேடம் கோபத்தில் இருக்கும் பொழுது பேசப்படுபவை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று.


இப்பொழுதே, அவளுடைய சைக்கிளில் அமர்ந்து கொண்டு, "ஸ்கூலுக்கு போயிடு வரேன் என்று ஹாலில் இருந்து ரூம் வரை வந்து விட்டு ,திரும்பி வந்து "ஸ்கூலில் இருந்து வந்தாச்சு " என்று கூறுகிறாள். ஆனால் ஸ்கூலில் சேர்த்தப் பிறகு எத்தனை நாள் அழுது ஆர்பாட்டம் பண்ணப் போகிறாள் என்றுத் தெரியவில்லை .அன்புடன் எல்கே