அக்டோபர் 31, 2010

கிளீன் அப் - இலவச மென்பொருள்

நாம் கணிணியில் இருந்து இணையத்தில் உலவும் பொழுது இரண்டு வகையான பைல்கள் உங்கள் கணிணியில் சேமிக்கப் படும் . ஒன்று குக்கீஸ் மற்றொன்று தற்காலிக பைல்கள் (temp files) .

உங்கள் கணிணியில் எளிதில் மால்வேர் போன்றவை தாக்க  இவை வழிவகுக்கும். அதனால் இவற்றை அவ்வப்பொழுது அழித்து அந்த போல்டர்கள் காலியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்லது. இதை நீங்க இணைய உலவி மூலமே செய்யலாம்.

 இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7  அல்லது அதற்கு மேற்ப்பட்ட வெர்சனுக்கு


  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை ஓபன் செய்து அதில் வலது பக்கம் மூன்று ஐகான்கள் இருக்கும். அதில் பற்சக்கரம் போன்று இருக்கும் ஐக்கானை கிளிக் செய்தால் இன்டர்நெட் ஆப்சன் வரும் அதை கிளிக் செய்யுங்கள்.  இப்பொழுது புதிய விண்டோ ஒன்று ஓபன் ஆகும், அதில் browsing history என்ற ஆப்சன் இருக்கும் .அதற்கு கீழ் "delete all brosing history on exit" என்று கொடுக்கப் பட்டிருக்கும். அதன் பக்கத்தில் ஒரு டிக் மார்க் போட்டுவிட்டால் நீங்கள் ஒவ்வொரு முறை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை மூடும் பொழுதும், குக்கீஸ்,நீங்கள் எந்த தளத்திற்கு சென்றீர்கள் என்ற விவரங்கள் அழிந்து விடும்.

அதன் பக்கத்தில் delete என்ற பட்டன் இருக்கும். அதை கிளிக்கினால் நீங்கள் எந்த எந்த விவரங்களை அழிக்க விரும்புகிறீர்கள் என்று செலக்ட் செய்துக் கொள்ளலாம்.கூகிள் க்ரோம்

கூகிள் க்ரோமில் வலது பக்கம் ஒரு ஸ்பேனர் போன்ற ஐக்கான் இருக்கும். அதை கிளிக் செய்து வரும் மெனுவில் options தேர்வு செய்யுங்கள். பின் வரும் விண்டோவில் "under the hood" டேபை கிளிக் பண்ணவும். பின் "clear browsing data" என்ற ஆப்சனை தேர்வு செய்தால் நீங்கள் பிரௌசிங் ஹிஸ்டரியை அழிக்க முடியும்.

நீங்கள்  ஒரே ஒரு உலவியை மட்டும் பயன்படுத்துபவராக இருந்தால் பிரச்சனை இல்லை. இல்லையெனில் ஒவ்வொரு உலவியையும் ஓபன் செய்து இதை செய்ய வேண்டும். அதே போல், உங்கள் கணிணியில் உள்ள  ரீசைக்கிள் பின் அடிக்கடி காலி செய்யப் பட வேண்டிய ஒன்று. இதை எல்லாம் சேர்த்து செய்ய இலவச மென்பொருள் உள்ளது.

cleanup என்றப் பெயருடைய இந்த மென்பொருளை உபயோகப் படுத்தி, உங்கள் ரீசைக்கிள் பின்னில் உள்ள பைல்கள், குக்கீஸ் போன்ற அனைத்தையும் ஒரே ஒரு கிளிக் மூலம் சுத்தம் செய்யலாம்.

நீங்கள் எதை எதை அழிக்க விரும்புகிறீர்கள் என்பதை "option" இல் சென்று "custom cleanup"
மூலம் தேர்வு செய்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருள் முற்றிலும் இலவச மென்பொருளாகும்.

இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்அன்புடன் எல்கே

அக்டோபர் 30, 2010

சொந்த மண் XII

மேட்டூர் இந்தப் பெயரை கேட்டவுடன் நமக்கு ஞாபகம் வருவது அணை மட்டுமே. சேலத்தில் இருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அமைத்திருக்கிறது. சேலம், ஈரோடு, தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைத்திருக்கிறது. 

ஒகேனக்கலில் தமிழகத்தில் நுழையும் காவிரி அன்னை இங்கே அணையினால் தடுத்து நிறுத்தப் படுகிறாள். மேட்டூர் அணையின் தண்ணீரை நம்பி கிட்ட தட்ட 271000 ஏக்கர் நிலங்கள் உள்ளன. 1934 ஆம் ஆண்டு கட்டப் பட்ட அணையின் பெயர் ஸ்டான்லி அணைக்கட்டு என்பதே. பின் பேச்சு வழக்கில் மேட்டூர் அணை என்று அழைக்கப் ப்பட்டு, இப்பொழுது அதன் உண்மையானப் பெயர் மறந்து போய்விட்டது என்றே சொல்லலாம். மேட்டூர் அணையின் நீளம் 1700 மீட்டர் , அதிகப் பட்சம் 120 அடி வரை நீரை நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது. 

அணைகட்டபட்ட பொழுது அருகில் இருந்த சில கிராமங்கள் மூழ்கின. அங்கு இருந்த சிவன் கோவில், சர்ச் போன்றவை இன்றும் அணையின் நீர்மட்டம் குறையும் பொழுது வெளியில் தோன்றும்.(இப்பொழுது நந்தி சிலை நன்றாகத் தெரியும் அளவு தண்ணீர்  குறைந்து விட்டது )

அணைக்கட்டை ஒட்டிய பூங்கா காண வேண்டிய ஒன்று . அதே போல் அருகில் இருக்கும் நெரிஞ்சிப் பேட்டை ,பன்னவாடி போன்றப் பகுதிகளில் இருந்து பரிசல் போக்குவரத்தும் உண்டு.  ஒரு காலத்தில், மேட்டுரை ஒட்டிய காடுகளின் வழியாகத்தான் வீரப்பன் தப்பி சென்றான் என்பது வரலாறு இப்பொழுது. 

 மேட்டூர் ஒரு தொழில் நகரம். தமிழகத்தில் அதிகம் மாசுபட்ட நகரங்களில் இதுவும் ஒன்று என்பது அதிர்ச்சி அளிக்கும் ஒன்று. ஆம், மேட்டூர் கெமிக்கல்ஸ்,மால்கோ ,சிச்கோல் போன்ற நிறுவனங்களால் இங்கு சுற்றுப்புற சூழல் பெருமளவு மாசடைந்து உள்ளது. 

வெகு சமீபத்தில்தான், இங்கிருந்து சென்னைக்கு ரயில் வசதி வந்துள்ளது. இங்கிருந்து கிளம்பும் ரயில் சேலம் சென்று , பின் சென்னை எக்மோரை அடைகிறது. 


அடுத்தப் பகுதியில் சேலம் உருக்காலை பற்றிப் பார்ப்போம் 

அக்டோபர் 29, 2010

கால் சென்டர் IX

சென்ற பதிவில் சொல்லி இருக்க வேண்டியது. மறந்து விட்டேன். இப்பொழுது முதலில் அதைப் பார்ப்போம் . வெளிநாட்டு கால்சென்டர்களில் வேலை செய்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொண்டாலும் , ஒரு முக்கியமான விஷயம் அவர்களுக்கு ஆதரவானது. கணிணியில் பிரச்சனை என்று அழைக்கும் வாடிக்கையாளர் ,இவர் சொல்லும் விஷயங்களை அங்கு செய்வார். ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழ் . பெரும்பாலான வாடிக்கையாளர்கள், நாங்கள் சொல்லும் வழிகளை பின்பற்ற தயாராக இருப்பது இல்லை.

ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு ரிமோட் மூலம் நாங்களே அதை சரி செய்வதாக சொன்னாலும் ,அவர்கள் அதற்கு தயாராக இருப்பது இல்லை. தங்கள் வீட்டிற்க்கு எஞ்சினியர் வந்து சரி செய்ய வேண்டும் அல்லது உடனடியாக தங்கள் பழுதடைந்த பொருள் மாற்றப் படவேண்டும் என்று எண்ணுகின்றனர்.ஆனால் எல்லா நிறுவனங்களும் அத்தகைய வாரண்டி அளிப்பது இல்லை. பொதுவாக ரிப்பேர் வாரன்டியே அதிகம். ஒரு பொருளை வாங்கும் பொழுதே வாரன்டியை பார்த்தால் பின் பிரச்சனை இல்லை. கால் சென்டர்களில் இருப்பவரிடம் சண்டை போட்டு உபயோகம் இல்லை.

இங்கு சில சமயம் சில வேடிக்கையான அழைப்புகள் வரும். உதாரணத்திற்கு , கேரளாவில் இருந்து கேஸ் வரவில்லை என்று அடிக்கடி அழைப்பு வரும். எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாத பொழுது எப்படி இத்தகைய அழைப்புகள் வருகிறது என்று குழம்பினோம்.

இதே போல், இலவச அழைப்புதானே என்று சும்மாவே அழைத்து யாரவது பெண்கள் லைனில் வந்தால் அவர்களிடம் வழியும் விடும் நபர்களும் உண்டு. இந்த மாதிரி நபர்களை சில முறை எச்சரிப்போம். பொதுவாக அதிலேயே அடங்கிவிடுபவர்கள் உண்டு. மீறி மீண்டும் மீண்டும் அழைத்தால், காவல் துறையிடம் புகார் போகும்.

பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து கால்சென்டர்களும் 1-800 என்று துவங்கும். இவ்வாறு துவங்கும் எங்களுக்கு நீங்கள் அழைத்தால் உங்களுக்கு எந்த செலவும் இல்லை. சில கால் சென்டர்கள் 1-860 என்றுத் துவங்கும். இவை இலவச சேவை எண்கள் அல்ல. சாதாரணமான அழைப்பை போலவே இவை கருதப்படும். உங்கள் அழைப்பு கட்டண அழைப்பே .

ஒரு வருடம் முன்பு வரை, ஒரு தொலைத் தொடர்பு நிறுவனம் கொடுக்கும் இலவச எண்ணை மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தொலைபேசியில் இருந்து அழைக்க முடியாது. கொஞ்சம் விளக்கமாக சொல்வதாக இருந்தால், 1-800-425-4535 இது பி எஸ் என் எல் எண். இதை ஏர்டெல் ,ரிலையன்ஸ் போன்ற நிறுவன போன்களில் இருந்தும், அலைபேசிகளில் இருந்தும் தொடர்புக் கொள்ள முடியாத நிலை இருந்தது. இப்பொழுது அவை சரிசெய்யப் பட்டுவிட்டது. எந்த அலைப் பேசியில் இருந்தும் எந்த கால் சென்டரையும் (1-800) அழைக்கலாம் என்ற நிலை உள்ளது இப்பொழுது.

தொடரும் ....

அன்புடன் எல்கே

அக்டோபர் 28, 2010

கால் சென்டர் VIII

வெகு நாட்கள் கழித்து மீண்டும் இந்தத் தொடர் தொடர்கிறது. இந்தியாவிற்கான கால் சென்டர்களுக்கும், வெளிநாட்டு மக்களுக்காக இயங்கும் கால் சென்டர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மலைக்கும் மடுவுக்கும் போல.

முதல் வேறுபாடு, சம்பளம். அங்கு ஐந்து இலக்கத்தில் தொடக்க சம்பளம் இருந்தால், இங்கு நான்கு இலக்க சம்பளமே தொடக்கத்தில் கிடைக்கும். அது போலவே , வருடம் தோறும் நடக்கும் அப்ரைசல்களும்.

அடுத்து, இங்கு உங்கள் வீட்டிற்கே வந்தெல்லாம் அழைத்து வர மாட்டார்கள். உங்கள் செலவில்தான் செல்லவேண்டும். ஏனென்றால், பெரும்பாலான நிறுவனங்கள் பகல் நேரத்தில் மட்டும் இயங்குவை.

மூன்றாவது, பணி சூழல். இங்கு அந்த நிறுவனங்களை போல் பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இருக்காது. தங்கள் வேலை டென்சனை குறைக்க வழிகள் கம்மி. அதேபோல், அங்கு ஒரு நாளுக்கு அதிகப் பட்சம் எடுக்க வேண்டிய அழைப்புகள் என்றும், சராசரியாக ஒருவர் எவ்வளவு அழைப்புகள் பேசவேண்டும் என்றும் அளவுகோல் உண்டு. பெரும்பாலான இந்திய கால் சென்டர்களில் அவை பின்பற்றப் படுவது இல்லை. இப்பொழுது நான்  இருக்கும் நிறுவனத்தில், ஆரம்பத்தில் ஒரு நாளுக்கு 150 அழைப்புகளுக்கும் மேல் பேசி உள்ளேன்.

அடுத்தது, இந்திய கால் சென்டர்களில் பணிபுரிய ஆங்கிலம் மட்டும் போதாது. ஹிந்தி அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் நல்ல சம்பளம் கிடைக்கும். (என் நிறுவனத்தில் ஹிந்தி தெரியாவிட்டால் நேர்முகத் இன்டர்வியுவிர்க்கு அழைக்க மாட்டோம் ). காரணம், பொதுவாக வடஇந்திய அழைப்புகள் அதிகம். முதலில் நான் இங்கு சேர்ந்தபொழுது ஹிந்தி தெரியாது. வெளிநாட்டு கால் சென்டரில் வேலை செய்த அனுபவத்தில் இங்கு வேலை கிடைத்தது. இப்பொழுது வாடிக்கையாளர்களிடம் பேசி பேசி ஓரளவு கற்றுக் கொண்டு விட்டேன் .

அடுத்து அங்கு வாரம் ஐந்து நாட்கள் வேலை என்றால், இங்கு ஆறு நாட்கள் வேலை கட்டாயம். இரண்டாவது சனிக்கிழமை என்பது நீங்கள் எந்த நிறுவனத்திற்கு சப்போர்ட் கொடுக்கிறீர்களோ அவர்கள் விருப்பமே. பெரும்பாலும் அன்றும் வேலை உண்டு.

தொடரும்..

அன்புடன் எல்கே

அக்டோபர் 27, 2010

சொந்த மண் XI

 நாமக்கல் ஆஞ்சநேயர் அளவிற்கு, லாரி தொழிலுக்கும் புகழ் பெற்றது. நகரத்தில் நுழையும்பொழுதே, லாரி ஆபிஸ்களும், லாரி ரிப்பேர் செய்ய பட்டறைகளும்தான் உங்களை வரவேற்கும்.

நாமக்கல்லில் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களைத் தவிர்த்து மலை கோவில் ஒன்றும் உள்ளது. இப்பொழுது அதிகம் பேர் போவது இல்லை. மற்ற நகரங்களை போல் காதலர் சந்திக்கும் இடமாகி விட்டது அது.

அரை நாளில் நாமக்கலில் இரண்டு கோவில்களையும் தரிசித்து விடலாம். இங்கிருந்து அடுத்து நாம் போகபோவது திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து நாற்பது கிலோமீட்டர்கள் மட்டுமே. இது திருக் கொடிமடசெங்குன்றூர் என்றும்  பழைய காலத்தில் அழைக்கப்பட்டு இருக்கிறது.திருச்செங்கோட்டில் உள்ள செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரியில்தான் மூன்று வருடம் படித்தேன். அதனால் அங்கு உள்ள ஒவ்வொரு இடமும் நன்கு ஞாபகம் உள்ளது.

இங்கு குன்றின் மேல் கோவில் கொண்டுள்ள சிவன் உமையொரு பாகனாய் வீற்றிருக்கிறார் .இந்த ஊரில் நாம் பார்க்கவேண்டிய இடம் இதுதான். முக்கியப் பண்டிகை வைகாசி விசாகம் தான். இரண்டு வாரங்களுக்கு மிகக் கோலாகலமாய் நடக்கும். இதைத் தவிர இங்கு பெரிதாய் வேறு ஒன்றும் இல்லை. (மூன்று வருடத்தில் இரண்டு முறைதான் கோவிலுக்கு சென்று இருக்கிறேன் ).

இங்கு முக்கியத் தொழில் கைத்தறி மற்றும் பவர் லூம்கள். இது மட்டும் இல்லாது, போர் போடும் லாரிகள் இங்கு அதிகம் . அதேப் போல் , லாரி கட்டும் தொழிலும் உண்டு. விவசாயம் பெரிய அளவில் இல்லை. இவர்கள் குடிநீருக்காக நம்பி இருப்பது ஈரோடு வழியாக செல்லும் காவேரி ஆற்றையே .

இங்கிருந்து கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சங்ககிரி. ஊருக்குள் நுழையும் பொழுதே நம்மை வரவேற்பது மலைதான். விஜயநகர சாம்ராஜ்யத்தின் பொழுது இங்கு வலுமிகுந்த கோட்டை கட்டப் பட்டது. பின் திப்புசுல்தானும்  அதற்குப் பின் ஆங்கிலேயர்களும் இதை உபயோகப் படுத்தினர். இது மிக வலிமை மிகுந்த கோட்டையாகக் கருதினர். காரணம் இதன் ஒருபுறம் மட்டுமே ஏற முடியும், மற்ற பகுதிகள் மிக செங்குத்தாக ஏற முடியாத வண்ணம் உள்ளது. நிதானமாக ஏறினால் அரை நாள் ஆகும் மேலே ஏற. கல்லூரி இறுதியாண்டில், என் வகுப்பு  நண்பர்கள் அனைவரும் சேர்ந்து இங்கு வந்து ஒரு சிலர் ஏற முடியாமல் அவதிப் பட்டது இன்னும் நினைவிருக்கிறது.இதைத் தவிர்த்து, இங்கு சிமென்ட் ஆலை ஒன்றும் உள்ளது.

அடுத்தப் பகுதியில், மேட்டூர் சென்று பின் சேலம் திரும்புவோம்.

டிஸ்கி : படங்கள் உதவி கூகிள்

அன்புடன் எல்கே

அக்டோபர் 26, 2010

உதவுவோம் வாருங்கள்

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி... இருவரும் சகோதரிகள். Muscular Dystrophy என்ற தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். எல்லா மனிதர்களுக்கும் உடலில் இருக்கும் செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. உடம்பின் தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத துயரம் நிரம்பிய இந்த நோய்க்கு எந்த மருந்தும் கிடையாது. தசைச் சிதைவு நோய்க்கான மருந்து இன்னமும் ஆராய்ச்சி மட்டத்தில்தான் இருக்கிறது.

மாதேவியும் வல்லபியும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக இந்த நோயோடு வாழ்கின்றனர். மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வுபெற்ற இளங்கோ-கலையரசி தம்பதியரின் மகள்கள் இவர்கள்.

குழந்தைச் சிரிப்புடன் பேச ஆரம்பிக்கிறார் அக்கா மாதேவி. "எங்களுக்குச் சொந்த ஊர் சேலம். எனக்கு இப்போ 30 வயசு. 10 வயசு வரைக்கும் துறுதுறுன்னு இருப்பேன். ஓட்டப் பந்தயத்தில் பரிசுகூட ஜெயிச்சிருக்கேன். அஞ்சாம் கிளாஸ் போக ஆரம்பிக்கும்போதுதான் உடம்புல சின்னச் சின்ன மாற்றங்கள். கெண்டக்கால் சதை இறுக ஆரம் பிச்சது. நடக்க முடியாம அடிக்கடி கால் தடுமாறிக் கீழே விழுந்தேன். மெள்ள மெள்ள இது அதிகமாகி, பள்ளிக்கூடம் போயிட்டு வர்றதுக்குள் 10 இடங்களிலாவது விழுவேன். உட்கார்ந்தா எழ முடியாது. பாத்ரூம், டாய்லெட் போறது ரொம்பக் கொடுமையானதா மாறுச்சு.

டாக்டர்கிட்ட போனதும் முதல் பரிசோதனையிலேயே என்ன நோய்னு தெரிஞ்சுடுச்சு. எனக்கு இந்தப் பிரச்னை வந்து ரெண்டாவது வருஷத்தில், என் தங்கச்சிக்கும் அதே வியாதி தாக்குச்சு. 'இப்படி உடம்பு சரியில்லாத புள்ளையை எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு அனுப்பணும்?'னு அப்பா, அம்மாவை எல்லாரும் திட்டுவாங்க. அவங்களும் 'ஸ்கூல் போக வேண்டாம்'னு சொல்லிப் பார்த்தாங்க. ஆனா, கீழே விழுந்து எழுந்திரிச்சே டென்த் வரை படிச்சோம். பிறகு, வீட்டில் இருந்தே ப்ளஸ் டூ பாஸ் பண்ணி, அஞ்சல் வழியில் டி.சி.ஏ. படிச்சோம். வீட்டுக்குள்ளேயே ஒரு பிளாஸ்டிக் நாற்காலியைப் பிடிச்சுக்கிட்டு, அதை நகர்த்திக்கிட்டேதான் நடக்க முடிஞ்சது. நாலஞ்சு வருஷத்தில் ரெண்டு பேரும் முழு செயல்பாடுகளையும் இழந்துட்டோம்.

எந்தச் செயலையும் தன்னிச்சையா செய்ய முடியாது. இடது கையைத் தூக்கி இந்த வீல் சேர் மேல வைக்கணும்னா, வலது கையை மெள்ள மெள்ள நகர்த்திட்டு வந்து, அதோட துணையோட இடது கையைத் தூக்கணும். செல்போனை யாராவது எடுத்து எங்க காதுல வெச்சாதான் பேச முடியும். பேசிட்டு இருக்கும்போதே, கழுத்து சாய்ஞ்சு தலை பின் பக்கமாப் போயிடும். சாய்ஞ்ச தலையை நிமிர்த்த இன்னொருத்தர் உதவி தேவை. இப்படி உடம்போட எல்லாத் தசைகளும் தங்களோட செயல்பாட்டை நிறுத்திட்டே வருது. இப்போ புரியுதா?"- மாறாத சிரிப்புடன் கேட்கிறார் வானவன் மாதேவி.

இயல் இசை வல்லபி முகத்தில் சின்னப் புன்னகை. "உடல் பிரச்னைகளால் சோர்ந்து போன சமயத்தில், பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது புத்தகங்கள்தான். எங்க அத்தை நிறையப் புத்தகம் படிப்பாங்க. எங்களுக்கு இப்படி தமிழ்ப் பெயர்களா வெச்சதும் அவங்கதான். இந்த நோய் தாக்கினா, அதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு டாக்டர்கள் சொன்னாங்க. எனக்கு 27 வயசு. இவளுக்கு 30 வயசு. கிட்டத்தட்ட நோய் தாக்கி 20 வருஷமா நாங்க இன்னும் இருக்கோம். எங்க வாழ்நாள் முடிவதற்குள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு!" - தீர்க்கமும் தெளிவுமாக வருகின்றன சொற்கள்.

"இந்த நோய்... ஜீன்களில் ஏற்படும் மாற்றத்தின் பாதிப்பு. அதுக்குக் காரணம், சுற்றுச்சூழல் பாதிப்பு. அதனால்தான், எங்களால் முடிஞ்ச வரை சுற்றுச்சூழலுக்கு ஆதரவான போராட்டங்களில் எங்களை இணைச்சுக்கிறோம். பி.டி. கத்தரிக் காய்க்கு எதிராக, எங்க பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர் என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான போராட்டங்களில் கலந்துக் கிட்டோம்.

சேலத்தில் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டவங்க 200 பேர் இருக்காங்க. அரசு ஒரு முழுமையான கணக்கெடுப்பு நடத்தினா, தமிழ்நாடு முழுக்கக் குறைஞ்சது 50 ஆயிரம் பேராச்சும் இருப்பாங்க. இவங்க எல்லாருக்கும் சேர்த்து அரசு ஏதாவது திட்டம் தீட்டணும். நாங்க எங்களால் முடிந்த முயற்சியா, 'ஆதவ்'ங் கிற பெயரில் ஓர் அறக்கட்டளை ஆரம் பிச்சிருக்கோம். வட மாநிலத்தைச் சேர்ந்த 'ஆதவ்' என்ற சின்னப் பையன் ஒருத்தன், இந்த வியாதியால் பாதிக்கப் பட்டு இறந்துபோனதை பேப்பரில் படிச்சோம். அதான் அந்தப் பெயரிலேயே அறக்கட்டளை ஆரம்பிச்சோம். எங்க ளோட இப்போதைய நோக்கம், மஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவங்களைப் பாதுகாத்துப் பராமரிக்க ஒரு மருத்துவமனையும் ஹாஸ்டலும் அமைக்கணும் என்பதுதான். அதை நாங்க இருக்கும்போதே செய்ய ஆசைப்படுறோம்!"- சகோதரிகளின் கண்களில் கனவுகள் மின்னுகின்றன.

அவர்கள் பேசுவதையே கவனித்துக்கொண்டு இருந்த சமூக நல வாரியத் தலைவி சல்மா, "முழு ஆரோக்கியத்தோடு இருக்கிறவங்களே சுயநலமா இருக்கும் இந்தக் காலத்தில், இவ்வளவு பெரிய பிரச்னையோடு இந்தப் பிள்ளைகள் எவ்வளவு பொதுநலத்தோடு இருக்காங்க... இத்தனை எனர்ஜியோடு சமீபத்தில் யாரையும் நான் சந்தித்தது இல்லை" என்றார்.

மாறாத புன்னகையுடன் மறுபடியும் பேசத் தொடங்குகின்றனர் சகோதரிகள். "எங்க உடம்பில் நிகழும் படிப்படியான மாற்றங்களை நாங்கள் உணர்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்களில் எங்களின் கண் இமைகள், இமைப்பதை நிறுத்திக்கொள்ளும். தூங்க முடியாது. சிறுநீரகம் செயல் இழக்கத் தொடங்கும். கடைசியாக இதயம் துடிப்பதை நிறுத்தும். நாங்கள் விடைபெறுவோம். ஆனால், இன்னும் 200 வருடங்கள் கழித்துப் பிறக் கும் ஒரு குழந்தைக்குக்கூட இந்த வியாதி இருக்காது. ஏனெனில், அந்த வலி முழுவதையும் நாங்களே ஏந்திக்கொள்கிறோம்!"

என்ன சொல்வது எனத் தெரியவில்லை... எப்படியேனும் இந்தப் பிள்ளைகளை பிழைத்திருக்கச் செய்ய வழி இல்லையா?
தொடர்புக்கு:
ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust
கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,
எழில் நகர், போடிநாயக்கன்பட்டி,
சேலம் - 636005,
அலைபேசி : 9976399409

விஜி அவர்களின் பஸ்ஸில் இதை பார்த்தேன். உடனே பகிர வேண்டும் என்றுத் தோணியது. நம்மால் ஆன உதவி செய்வோம் . அந்த சகோதரிகளுக்கு என் வணக்கம்.

அன்புடன் எல்கே

சொந்த மண் X

சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த நாமக்கல் இன்று நாமக்கல் மாவட்டத்தின் தலைமை இடமாய் இருக்கிறது. சேலத்தில் இருந்து திருச்சி செல்லும் வழியில் 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சென்னையில் இருந்து செல்வதாய் இருந்தால் ,சேலம் அல்லது ஈரோடு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் நாமக்கல்லை அடையலாம். சென்னையில் இருந்து நேரடி ரயில் வசதி இல்லை.


நாமக்கல் லாரி போக்குவரத்திற்கும், கோழி பண்ணைகளுக்கும் புகழ் பெற்றது. அதேபோல் இங்குள்ள நரசிம்மர் கோவிலும் ஆஞ்சநேயர் கோவிலும் மிகப் புகழ் பெற்றவை.

கோவிலுக்கு செல்ல, சேலம் ரோட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஐந்து நிமிட நடையில் கோவிலை அடையலாம். நரசிம்மர் கோவில், பல்லவர் கால சிற்பக் கலைக்கு மிக சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.நரசிம்மரை வழிபாடும் முன் நாமகிரித் தாயாரை வணங்கித்தான் செல்லவேண்டும். கணிதமேதை ராமானுஜர் நாமகிரித் தாயாரின் பரம பக்தர். இங்கு தாயாருக்கு ஒரு காலத்தில் மூக்குத்திக் காணிக்கை அதிக அளவில் வருமாம்(இது என் தந்தை சொல்லி கேட்டது ).

அதேபோல் மனநலன் குன்றியவர்கள் தொடர்ந்து தாயாரை வழிபட்டால் அவர்களது மனநலன் சரியாகும் என்றும் சொல்லுகிறார்கள். தாயாரின் முக அழகு காண கண்கோடி வேண்டும். தாயாரை வணங்கி உள்ளே சென்றால் நரசிம்மர் ஹிரண்ய கசிபுவை வதம் பண்ணிய கோலத்தில் அமர்ந்து இருக்கிறார். இந்த சிலையை மூலவரை செதுக்கிய சிற்பியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவரது விரல்களில் ரத்தம் தொய்ந்து இருப்பது போன்று மிக தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார். முன்பு மின்சார விளக்குகள், கருவறைகளில் உபயோகிக்கும் முன், விளக்கொளியில் நரசிம்மரை பார்த்தாலே பயமாக இருக்கும். அப்படி ஒரு சிற்பக் கலை அற்புதம் இந்தக் கோவில்.

நரசிம்மர் கோவிலுக்கு நேர் எதிரே, அவரை சேவித்துக் கொண்டு நின்று கொண்டு நமக்கு அருள்பாலிப்பவர் ஆஞ்சநேயர். இரு கரம் குவித்து நரசிம்மரை வணங்கியப் படி தனக்கு மேல் எந்த வித கூரையும் இல்லாமல், வானமே கூரையை வீற்று இருக்கிறார். மேல் கூரை கட்ட எடுத்த முயற்சிகள் வீணாக போய்விட்டன. இருமுறை முயற்சித்து கட்டியும் அவை இடிந்து விழுந்து விட்டன. எனவே பின் முயற்சி எடுக்கவில்லை.

சேலத்தில் இருந்த வரை, ஒவ்வொரு தமிழ் மாத முதல் ஞாயிறும் இங்குதான் இருப்பேன். அன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ அபிஷேகம் பூஜை இருக்கும்.

நாமக்கல் எனக்கு மிகப் பிடிக்கும் . அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று எனது இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயர் கோவில் இங்கு உள்ளது. இரண்டு இது எனது தந்தை பிறந்த மண். அவர் பிறந்த சமயத்தில் சேலத்தில் ப்ளேக் நோய் அதிக அளவில் இருந்ததால் நாமக்கல்லில் இருந்த  உறவினர் வீட்டில் பிறந்தார்.

டிஸ்கி : படங்கள் உதவி கூகிள்

அன்புடன் எல்கே

அக்டோபர் 25, 2010

பகல் கொள்ளை


பண்டிகை நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு போவோர் அதிகம். சிலருக்கு முன்கூட்டியே விடுமுறை எடுக்க முடியும் அதற்கேற்றார் போல் பஸ்ஸோ,ரயிலோ முன்பதிவு செய்து செல்ல இயலும். சிலருக்கு கிடைக்கும் ஆனால் கிடைக்காது என்பது போன்ற சூழ்நிலை நிலவும். இவர்கள் பாடு திண்டாட்டம்தான்.  முன்கூட்டியே எதுவும் திட்டமிட முடியாது. என் அலுவலகத்திலும் இது போன்ற சூழல் தான். இதுவரை எனக்கு தீபாவளிக்கு முதல்நாள் லீவ் அனுமதி கிடைக்கவில்லை.

வீட்டு தங்கமணியும், ஜூனியரும் இந்தவாரமே செல்வதால், எனக்கு மட்டுமே டிக்கெட் புக் பண்ண வேண்டும். வழக்கம்போல் இணையம் வழியாகப் பண்ணலாம் என்று ரெட்பஸ் தளத்திற்கு சென்றேன். எந்தப் பேருந்திலும் இடம் இல்லை என்று சொன்னது. சரி நேரடியா போய்டலாம் என்று , தனியார் பேருந்து நிலையத்திற்கு சென்றேன். ஒவ்வொரு கம்பெனியாக கேட்டேன். பெரும்பாலானோர் இல்லை என்று சொன்னார்கள். ஒரு தனியார் பேருந்தில் அவர்கள் சொன்ன கட்டணத்தை கேட்டு எனக்கு தலை சுத்தி விட்டது. ரொம்ப கம்மியாதான் கட்டணம் சொன்னார்கள். சாதாரண செமி ஸ்லீப்பர் பஸ் கட்டணம் ரூபாய் 1350. ஏற்காடு  எக்ஸ்ப்ரஸில் முதல் வகுப்புக் கட்டணம் கூட ஆயிரத்துக்கு குறைவுதான்.

சேலத்துக்கு இவ்வளவு கட்டணம் என்றால், எப்பொழுதும் அதிகம் பேர் செல்லும், திருச்சி, மதுரை, கோவை கட்டணம் ??? கண்ணை கட்டுது . என்னதான் அவர்கள் , மற்ற நாட்களில் நஷ்டத்திற்கு ஒட்டுகிறேன் என்று சொன்னாலும் இந்த அளவுக் கட்டணம் ரொம்ப ரொம்ப அதிகம் . அரசாங்க பேருந்தில் சரியான வசதிகள் இல்லை. எப்பொழுது எங்கு நிற்கும் என்றுத் தெரியாத நிலை  . இதனால்தான் மக்கள், தனியார் பேருந்தை நாடுகிறார்கள். அது அவர்களுக்கு வசதியாகப் போகிறது . அரசாங்கம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதா?

பி,கு : தெரிஞ்ச ஒரு பேருந்து ஓட்டுனர் மூலம் நார்மல் ரேட்டுக்கு டிக்கெட் எடுத்து விட்டேன்


அன்புடன் எல்கே

அக்டோபர் 24, 2010

சொந்த மண் IX

 ஏரியை அடுத்து நீங்கள் பார்க்க வேண்டிய இடம் அண்ணா பார்க். ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் இருக்கும் அளவிற்கு பெரிய பூங்கா இல்லை இது. அதிகபட்சம் அரை மணிநேரத்தில் சுற்றி விடலாம். மே மாதத்தில் இங்கு மலர் கண்காட்சி நடக்கும். இந்தப் பூங்காவினுள் உள்ள ஜப்பான் பூங்கா பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இதேப் போல், ஏரியை சுற்றி அமைந்துள்ள பூங்காவும் பார்க்க வேண்டிய ஒன்று.பக்கோடா பாய்ண்ட்:

ஏற்காட்டில் இருக்கும் ஆதிவாசிகள் உருவாக்கி இருக்கும்ஒரு வகையான பாறைகளின் அமைப்பு பக்கோடா போன்று இருப்பதால் இதற்க்கு இந்தப் பெயர். இங்கிருந்து பார்த்தால் ஆத்தூர் மற்றும் அயோத்தியாப்பட்டினம் போன்ற இடங்களை காண முடியும். இது ஏற்காட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

லேடீஸ் சீட் :

இந்த இடத்தில் இயற்கையாகவே சீட் போன்ற அமைப்பு உள்ளது. இங்கிருந்து பார்த்தல் சேலம் நகரம் நன்றாக தெரியும். இங்கு டெலஸ்கோப் வசதி உள்ளது. வானம் மூட்டம் இல்லாமல் இருந்தால், மேட்டூர் அணை தெரியும். இரவு நேரத்தில் இங்கிருந்து மின்னொளியில் மிளிரும் சேலம் நகரத்தை பார்ப்பது கண்கொள்ளா காட்சியாகும்.

கிளியூர் அருவி :

மிக சமீபகாலமாகவே அனைவரும் செல்லும் ஒரு இடம். காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை,இங்கு செல்லும் பாதை மிகவும் மோசமாகவும், சமூக விரோதிகளின் இறிப்பிடமாகவும் இருந்தது. பின் திரு ராதா கிருஷ்ணன் சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த பொழுது பாதையை சீர்படுத்தி அனைவரும் சென்றுவரும் வண்ணம் மாற்றினார். அவசியம் போக வேண்டிய ஒரு இடம்.


சேர்வராயன்  கோவில் :

மலையின் உச்சியில் அமமிந்துள்ள கோவில், இங்கிருந்து ஏற்காடு முழுவதும் பார்க்க இயலும். மே மாதம் நடக்கும் விழாவில், ஏற்காட்டில் உள்ள பழங்குடியினர் அனைவரும் கலந்துக் கொள்ளுவர். சமீப காலங்களில் மிகுந்த சர்ச்சைக்குள்ளான கோவிலும் இதுதான்.

எனக்கு நினைவில் இருப்பதைஎழுதி விட்டேன். சிலது விடுபட்டு இருக்கலாம் . காரணம் ஒரு சில இடங்களை பற்றிய முழு விவரங்கள் இல்லை. அடுத்தப் பகுதியில் , ஒரு காலத்தில் சேலம் மாவட்டத்தில் இருந்து இன்று பிரிந்த நகரம் .


அன்புடன் எல்கே

அக்டோபர் 23, 2010

மனித நேயம் ?????

நம் இந்திய நாடு மனித நேயம் மிக்கது. அடுத்தவர்களுக்கு உதவி புரிவதற்கு அதுவும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி புரிவதில் தயங்கமாட்டார்கள் . இந்த விஷயத்தில் தமிழக மக்கள் மற்றவர்களுக்கு முன்னோடி என்று இரு நாட்கள் முன்வரை எண்ணி கொண்டிருந்தேன். ஆனால் இந்த இரண்டு நாட்களில் நான் கண்ட இரண்டு சம்பவங்கள் நான் எண்ணுவது தவறோ என்று எண்ண வைக்கிறது .

சம்பவம் 1:
நேரம் : வியாழன் மாலை 6 .30
இடம் : வள்ளுவர்கோட்டத்தில்  இருந்து சுருதி மியூசிக் சிக்னல் வரை


வள்ளுவர் கோட்டத்தில் சிக்னலுக்கு நின்றிருந்த பொழுது அவசரமாக ஆம்புலன்ஸ் அங்கு வந்தது. பலமுறை ஹாரன் அடித்தும் முன் உள்ளோர் கொஞ்சம் கூட நகருவதாய் இல்லை. இத்தனைக்கும் அவர்கள் சுழல் விளக்கை போட்டிருந்தனர். அதுவும் கத்திக் கொண்டிருந்தது. குறிப்பாக சொந்தமாக கார் வைத்திருக்கும் மக்கள். கொஞ்சம் இடது புறம் நகர்ந்து வழி விட்டு இருக்கலாம். ஒரு வழியாக ஊர்ந்து ஊர்ந்து சுருதி மியூசிக் சிக்னல் அருகே வந்த சேர்ந்தது அந்த ஆம்புலன்ஸ் . அங்கு சிகப்பு விளக்கு  போட்டிருந்தது . பலமுறை ஹாரன் அடித்தும் போலீசார் தற்காலிகமாக போக்குவரத்தை நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்த முயலக் கூட வில்லை.

அதில் இருந்த நோயாளிக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டு,இந்த போக்குவரத்து நெரிசல்களினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால்அதற்கு யார் பொறுப்பு ??
சம்பவம் 2:
நேரம் : வெள்ளி காலை 8 .15
இடம் : கோடம்பாக்கம் பாலம் முடியும் இடம்

கோடம்பாக்கம் பாலத்தில் இருந்து  இறங்கும் இடம் . ஆறாவது இல்லை ஏழாவது  படிக்கும் மாணவி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டாள். ஒரு பைக் தட்டி விட்டு சென்று விட்டது. நல்லவேளை அந்த சிறுமிக்கு எந்த வித அடியும் படவில்லை. அந்த சிறுமியின்  பின் வந்து கொண்டிருந்த கார்கார ஒருவர். வண்டியை ஓரம் கட்டி நிறுத்தி விட்டு, அந்த சிறுமியை சமாதனப் படுத்தி ,கீழே விழுந்த அவளது பொருட்களை எடுத்து கொடுப்பதற்குள், நமது மக்களுக்கு பொறுக்கவில்லை, ஹாரன் அடித்துக் கொண்டும், கத்திக் கொண்டும். ஏன் ஒரு நாள் ஐந்த நிமிடம் தாமதம் ஆனால் என்ன ?

எத்தனையோ அரசியல் தலைவர்கள் செல்லும் பொழுது பொறுமையாக நிற்கும் மக்களுக்கு ஒரு விபத்தின் சமயத்தில் ஏன் அந்த பொறுமை காணமல் போகிறது ???
இப்பொழுது சொல்லுங்கள் நான் எண்ணியது சரிதானே ??


அன்புடன் எல்கே

அக்டோபர் 21, 2010

திவ்யாவின் பக்கம் VII

காலை அலுவலகம் செல்லும்பொழுது டாட்டாவுடன் "பார்த்து பத்திரமா போயிட்டு வாப்பா " என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறாள். அதே போல் வீடு திரும்பியவுடன், "பத்திரமா வந்துடியானு " விசாரிப்பும் ...

குழந்தைகள் இருக்கும் வீட்டில் கொலு வைக்க யோசிப்பார், குழந்தைகள் பொம்மைகளை எடுத்து விடுமோ என்று. ஆனால் எனக்கு அந்த கவலை இல்லை, அந்தப் பக்கமே இவள் செல்ல மாட்டாள். உம்மாச்சி இருக்குனு வணங்கி விட்டு வந்து விடுவாள்.

அவளுக்கு எல்லாமே பிடித்திருக்கிறது, இரண்டு விஷயங்களைத் தவிர. ஒன்று சாப்பிடுவது, இரண்டு தூங்குவது. இந்த இரண்டும் அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இரவு பதினொன்று ஆகாமல் தூங்குவது இல்லை, அதேபோல் காலையில் ஏழு மணிக்கு எழுந்துவிடுவாள் .
திவ்யா பயப்படற ஒரே ஒரு விஷயம் குக்கர் விசில். மற்ற எதற்கும் யாருக்கும் பயப் படாத அவள், குக்கர் விசில் வந்தாள் அழ ஆரம்பித்துவிடுவாள். எப்படி மாற்றுவது என்றுத் தெரியவில்லை ???


கடந்த ஞாயிறு அன்று முறைப்படி அவளுக்கு எழுதக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். நெல்லில் எழுத வேண்டும் என்றார்கள். நெல் கிடைக்கவில்லை அதனால் அரிசியில் அவள் கைப்பிடித்து எழுத கற்றுக் கொடுத்தேன். ஏற்கனவே ,அவளுக்கு ரைம்ஸ் ,எழுத்துக்கள் போன்றவை சொல்லிக் கொடுத்து இருந்தாலும், முறையாக ஆரம்பித்தது இப்பொழுதுதான்.

ஒரு வழியா, ஒன்றுக்குப் பிறகு இரண்டு பின்தான் மூன்று என்று ஒத்துக் கொண்டிருக்கிறாள். பத்து வரை சரியாக சொல்ல ஆரம்பித்து இருக்கிறாள்.

நெறைய பேர் பள்ளியில் இப்பொழுதே சேர்க்க சொன்னாலும், எங்களுக்கு விருப்பம் இல்லை. பள்ளி செல்ல ஆரம்பித்தாள், பின் கல்லூரி முடிக்கும்வரை பாடங்கள்தான் திரும்பத் திரும்ப. எனவே இன்னும் ஒரு ஆறு மாதம் சுதந்திரமாய், சுற்றித் திரியட்டும். இந்த வயதில், பள்ளியில் என்ன சொல்லித் தருவார்களோ அதை வீட்டிலேயே சொல்லித் தர நாங்கள் இருக்கிறோம். மகளுக்கு சொல்லித் தருவதை விட தாய்க்கு ஆனந்தம் தருவது வேறு எது ???

அன்புடன் எல்கே

அக்டோபர் 20, 2010

சொந்த மண் VIII

இன்று நாம் ஏற்காட்டை சுற்றிப் பார்ப்போம்.  "ஏழைகளின் ஊட்டி " என்றும் இது அழைக்கப் படுகிறது.


கடல் மட்டத்தில் இருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சேலத்தில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. சேலம் புதியப் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்துகள் ஒரு மணி நேரத்துக்கு ஒன்று என்ற அளவில் இயக்கப் படுகின்றன. எனக்குத் தெரிந்து அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப் படுவது இல்லை. இப்பொழுது எவ்வாறு உள்ளது என்று தெரியாது . ஏரியை சுற்றி அமைந்த காடு என்ற பொருள்வரும் ஏரிகாடு என்பதே பின்பு திரிந்து ஏற்காடு என்று ஆகி விட்டது . சேர்வராயன் மலைத்தொடரின் மத்தியில் ஏற்காடு அமைந்துள்ளது. இங்கு சேர்வராயன் கோவில் ஒன்று , மலைவாழ் மக்கள் வழிபாடும் இடம் உள்ளது. அதுதான் இங்கு மிக உயரமான இடம் என்று சொல்கிறார்கள்.

காப்பிக் கொட்டைகள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் பயிரிடுதல்தான் இங்கு முக்கியத் தொழில், சுற்றுலாவைத் தவிர்த்து. ஏராளமான காபித் தோட்டங்கள்  இங்கு உள்ளன. இங்கு உள்ள கிளைமேட் , அதிக குளிரும் இல்லாமல், வெப்பமும் இல்லாமல் இருப்பதால், பெரும்பாலானோரால் விரும்பப் படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் ஏற்காடு செல்ல தகுந்த நேரம்.

சேலத்தில் இருந்து வாரம் ஒருமுறை வந்து செல்லும் நபர்கள் உண்டு. அதிகபட்சம் ஒரு மணி நேரம் எடுக்கும் அடிவாரத்தில் இருந்து மலை மேல் செல்ல. 

 ஏற்காடு ஏரி :
  
   ஏற்காட்டில் நீங்கள் நுழைந்துடன் உங்களை வரவேற்பது ஏற்காடு ஏரி தான். மிகப் பெரிய ஏரி இல்லை என்றாலும், ஆபத்தான ஒன்றாகும். படர் தாமரை செடிகள் கரையோரம் அதிகம் இருப்பதால், தவறி நீரில் விழுந்தால் அந்த செடிகளில் சிக்குண்டு மரணிக்க நேரலாம். சில வருடங்களுக்கு முன்பு மிக மோசமான நிலையில், படகுகளே செல்ல இயலாத வண்ணம் இருந்த ஏரியை, திரு ராதாக்ருஷ்ணன் அவர்கள் மாவட்ட ஆட்சியராக இருந்தப் பொழுது சீர் செய்தார். இப்பொழுது வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் படகு ஓட்ட இயலும்.


 சேலத்தில் நான் இருந்த வரை, நண்பர்களுடன் பைக்கில் மாதம் ஒரு முறை ஏற்காடு சென்று விடுவேன். மாலை வரை சுற்றிவிட்டு இருட்ட துவங்கும் நேரத்தில்தான் கிளம்புவோம். அந்த சமயத்தில் மலைப் பாதையில் பாதையில் வண்டி ஓட்டுவது ஒரு சுகம். லேசாக குளிர் தரும் காற்று, அந்தி மயங்கும் வேலை, ஹெட் போனில் இளையராஜா பாட்டு  அந்த சுகமே தனிதான்.

ஏற்காடு தொடரும் .....

அன்புடன் எல்கே

அக்டோபர் 19, 2010

காமென்வெல்த் விளையாட்டு போட்டிகள் - ஒரு பார்வை

ஒரு வழியா காமென்வெல்த் விளையாட்டு போட்டிகள் முடிஞ்சிடிச்சு. ஆரம்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மிக அருமையாக நடந்தது . அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் , ஒரு சில நிகழ்வுகள் இந்த மாதிரியான போட்டிகளை நடத்த இந்தியா தயாராக உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றன .அவை என்ன என்பதை பார்ப்போம்.

எந்த ஒரு விளையாட்டுப் போட்டியாய் இருந்தாலும் , நேரில் பார்ப்போரை விட தொலைக்காட்சியில் பார்ப்போர் இன்று அதிகம். அவர்களுக்கு நல்ல ஒளிபரப்பு கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். தூர்தர்ஷனின் அனுபவின்மை நன்றாக வெளிப்பட்டது. பல போட்டிகள் நடந்துகொண்டிருந்த பொழுதே நடுவில் வேறு போட்டிகளுக்கு மாறுவது, சரியான வர்ணிப்பாளர் இல்லாதது போன்றவை நன்றாக தெரிந்தது. தூர்தர்ஷனுக்கு பல சேனல்கள் உள்ளன, அவற்றை சரியாக உபயோகித்து இருக்கலாம்.

அடுத்தது, இன்று ஆன்லைனில் போட்டிகளின் நிலவரத்தை பார்ப்போரும் அதிகம். ஆனால், இந்தப் போட்டிகளுக்கான அதிகாரப் பூர்வ இணையத்தளம், தூங்கி வழிந்தது . முதல் நாள் மதியம் நடைப்பெற்ற போட்டிக்கான முடிவுகள் அடுத்தநாள் மதியமே அங்கு பதியப் பட்டது. மேலும்,ஸ்கோர் நிலவரம் சரியாக அப்டேட் பண்ணப் படவில்லை. உதாரணத்திற்கு ,சமீபத்தில் நடைபெற்ற டேவிஸ் கப் போட்டிகளின் ஸ்கோரை நான் அதன் இணையத் தளத்தில்தான் பார்த்துக் கொண்டிருதேன். ஆனால் காமன்வெல்த் போட்டிகளின் பொழுது அவ்வாறு எந்த ஒரு விளையாட்டுக்கும் பார்க்க இயலவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு ஏற்பாட்டையே , போட்டி அமைப்பாளர்கள் செய்யவில்லை. இத்தனைக்கும், தகவல் தொழில் நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது .


அடுத்தது, போட்டிகளில் வாலண்டியர்களாக பங்கேற்றியவர்கள் செய்த கூத்துகள். வாலண்டியராக பணியாற்ற விருப்பம் தெரிவித்தப் பல நபர்கள், அதற்குண்டான, சான்றிதல்களை பெற்றுக் கொண்டு ,போட்டிகள் நடக்கும் இடத்தின் அருகே கூட வரவில்லையாம். வந்தவர்களும், விளையாட்டு வீரர்கள் கிளம்பியவுடன் அங்கிருந்து நழுவி விடுவார்களம். அடுத்த நாள் போட்டிகள் நடத்த அரங்கை சரிப்படுத்த எந்த வித உதவியும் செய்யவில்லையாம். அதேப் போல் எங்கு எந்த போட்டி நடக்கிறது, அங்கு எப்படி செல்வது போன்ற எந்த வித விவரமும் அவர்களிடம் இல்லை. நல்லவேளை, அங்கு காவல் பணியில் இருந்த போலீசார் வந்த ரசிகர்களுக்கு உதவி இருக்கின்றனர்.

இதில்,இந்தியா ஒலிம்பிக் போட்டிகள் நடத்த உரிமை கோரப் போகின்றதாம்.


அன்புடன் எல்கே

அக்டோபர் 16, 2010

மக்களே உஷார் VII

 ஏற்கனவே உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் அனுப்பினால் , உங்கள் கணக்கிற்கு இத்தனை மில்லியன் டாலர்கள் மாற்றுவோம் என்று மெயில் வருவது அனைவருக்கும் தெரியும். அதேப் போல் உங்கள் மெயில் ஐடி இவ்வளவு டாலர் லாட்டரி வென்று இருக்கிறது என்றும் மெயில் வந்துப் பார்த்து இருப்பீர்கள். சமீபத்தில் இதே போல் ஒரு மெயில் வந்து கொண்டு இருக்கிறது. இது எத்தனை பேருக்கு வந்துள்ளது என்று தெரியவில்லை.

 எனக்கு சமீபத்தில், இந்தியாவின் முன்னணி வீட்டு உபயோகப் பொருட்கள் (house hold appliances) தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரில் ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதில் சொல்லப் பட்டத்தின் சாராம்சம் "உங்களை நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஏற்பட்டுள்ள காலி இடத்தை நிரப்புவதற்கு உண்டான நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்துள்ளோம். மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதில் அதிகப் பட்சம் 50 பேரை வேலைக்கு எடுப்பது உறுதி. நீங்கள் செய்யவேண்டியது , கீழ் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கில் உடனடியாக ருபாய் 15000  செலுத்தவும். அவ்வாறு வங்கி கணக்கில் பணம் செலுத்தியவுடன், எங்களுக்கு தெரிவித்தால் உங்களுக்கு உடனடியாக டெல்லி வந்து  செல்ல விமான டிக்கெட் அனுப்பி வைக்கப் படும். மேலும் இந்தப் பணம் நீங்கள் வேலைக்கு தேர்வானவுடன் திருப்பிக் கொடுக்கப்படும். "

மேலோட்டமாகப் பார்த்தல் , இந்த மெயிலில் எந்த விவகாரமும் தெரியாது. சம்பந்தப் பட்ட நிறுவனம், எங்கள் நிறுவனத்தின் கிளையன்ட். அதனால் எனக்கு சிறிது சந்தேகம் வந்தது. உடனடியாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் பேசினேன். அவர்கள் இவ்வாறு எந்த மெயிலும் யாருக்கும் அனுப்பவில்லை என்று உறுதி செய்தனர்.

வித விதமா மோசடி பண்றாங்க . கொஞ்சம் உஷாரா இருங்க. எந்த ஒரு நிறுவனமும் இதை போன்று பணம் கேட்டு மெயில் செய்ய மாட்டார்கள். இவ்வாறு மெயில் வந்தால் உடனடியாக ஸ்பேம் என்று மார்க் செய்யவும்அன்புடன் எல்கே

அக்டோபர் 15, 2010

நண்பர்கள்

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நடந்த சிலப் பிரச்சனைகளால் இந்த தளத்தில் நான் தொடர்ந்து எழுத வில்லை. கவிச்சோலை மட்டும் வந்துக் கொண்டிருந்தது. இந்த வாரம் அதையும் நிறுத்தி இருந்தேன். இனி தொடர்ந்து எழுத வேண்டாம் என்றும் முடிவு பண்ணி இருந்தேன். காரணம் சொல்லாமல் நிறுத்தியது தவறோ என்று மனதில் பட்டது. அதனால்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். இந்தப் பதிவின் காரணமாக சிலரின் நட்பு நின்று போகலாம், சிலருடன் சண்டை வரலாம். அதை பற்றி நான் கவலைப் படும் நிலையில் இல்லை.

நான் கடந்த ஆறு மாதமாகத்தான் அதிகம் எழுதுகிறேன் . பொதுவாக என் மனதில் என்னத் தோன்றுகிறதோ அதை அப்படியே எழுதி விடுவேன். இது எனது பழக்கம். இதில் மட்டுமல்ல எந்த விஷயமாக இருந்தாலும், அது நண்பராக இருந்தாலும், என் மனதில் எது சரி என்றுப் படுகிறதோ அதைத்தான் செய்வேன் சொல்லுவேன். நண்பர் என்பதற்காக நான் அவர்கள் சொல்வது எல்லாம் சரி என்று சொல்ல மாட்டேன். இதனால் நான் இழந்த நட்புகள் அதிகம். அதை பற்றி நான் கவலைப் படுவது இல்லை.

ஆர்குட்டில் ஏற்ப்பட்ட ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அங்கு நான் செல்வது இல்லை. சிறிது நேரம் கிடைக்கும் பொழுது முகப்புத்தகம்(facebook) செல்வேன். பொதுவாக இந்த மாதிரி சோசியல் நெட்வொர்கிங் பக்கம் செல்வது வாழ்வின் ஓட்டத்தில் சிறிது நேரம் இளைப்பாறுவது போன்றது. ஆனால் , அங்கு நான் என்ன செய்கிறேன் என்ன பேசுகிறேன் யாரிடம் பேசுகிறேன் என்பதை சிலர் பார்த்து அதை தங்கள் நண்பர்களிடம் வேறு மாதிரி பேசுகிறார்கள் என்று எனக்குத் தெரிய வந்த பொழுது மனம் வேதனைகுள்ளானது. அதுவும் அவ்வாறு பேசுவது எனக்கு பழக்கமான நபர்களே என்றபொழுது அதிர்ச்சிகுள்ளானேன்.

இந்தக் காரணத்தால்தான் தொடர்ந்து எழுத வேண்டுமா , இந்த பதிவுலகம், சோசியல் நெட்வொர்கிங் இவையெல்லாம் தேவையா என்ற கேள்வி எழுந்தது. இதைத் தொடர்ந்தே எனது வலைப் பூக்களையும் நீக்கினேன். அந்த சமயத்தில் என் மனதில் எழுந்த கோபம், அதிர்ச்சி போன்றவையே இதற்குக் காரணம். இந்த விஷயங்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களிடம் சொல்லவில்லை.

எல்லோரிடமும் நட்பாக பழக எண்ணுபவன் நான். ஆனால் அதையே தவறாக திரித்து காரணம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர். இந்த விஷயத்தை சட்டத்தின் பார்வைக்கு கொண்டு செல்லலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சைபர் கிரைம் பற்றி அறிந்தவர்களிடம் பேசிக் கொண்டுள்ளேன். மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை இன்னும் சில நாட்களில் முடிவு செய்யப் போகிறேன்.

சம்பந்தப் பட்டவர்களின் பெயர்களை நான் இங்கு சொல்லாததற்கு காரணம் ,அவர்கள் இதைப் படித்து திருந்துவார்கள், மீண்டும் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையே.

அன்புடன் எல்கே

அக்டோபர் 07, 2010

இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் இனிய நண்பர் தேவாவிற்கு இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . அவர் நீடுழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 

அக்டோபர் 04, 2010

குழு மனப்பான்மை

இப்பொழுதெல்லாம் தனியார் நிறுவனங்களில் குழுவாக சேர்ந்து வேலை செய்வதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். குழுவாக செய்யும் பொழுது எளிதாக இலக்கை அடையலாம் என்பதே அதற்குக் காரணம்.

ஆனால், குழுவாக வேலை செய்வது இங்கே பதிவுலகின் முன்னேற்றத்துக்கு ஒரு பெரிய எதிரியாக இருக்கிறது. தனது நண்பர்களின் பதிவிற்கு சென்று அங்கு ஓட்டு போட்டும், கருத்து தெரிவித்தும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் நண்பர்கள் , புதிதாய் நல்ல கருத்துக்களை சொல்லும் பதிவுகளுக்கு ஏன் ஆதரவு தெரிவிப்பது இல்லை ?? தாங்களும் ஒரு நாள் புதிய பதிவராய் ஆதரவு இல்லாமல் இருந்தோம் என்பதை ஏன் மறந்தார்கள்???(இல்லை , வரப்பவே இங்க அவங்களுக்கு ஒரு க்ரூப் இருந்ததா ??)


மொக்கை பதிவுகள், நகைச்சுவை பதிவுகள் தேவைதான், இல்லை என்று சொல்லவில்லை. அதே சமயம் , நல்ல விஷயங்கள் உள்ள பதிவுகளும் தேவை. ஒரே விஷயமே திருப்பி திருப்பி செய்யப் பட்டால் , நாளடைவில் சலித்து விடும் . அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதை யாரும் மறக்கக் கூடாது.

அடுத்து நான் சொல்ல விரும்புவது , எதாவது ஒரு பதிவிலோ, பின்னூட்டத்திலோ உங்கள் நண்பரை பற்றி எதாவது சொல்லப் பட்டு இருந்தால் முதலில் விஷயம் என்னவென்பதை பாருங்கள். விஷயத்தை அல்லது குறிப்பிட விவகாரத்தை முழுமையாக படிக்காமல் அல்லது புரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு உங்கள் நண்பருக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்துங்கள்.

கொஞ்சம் விவகாரமான விஷயங்களில், எதிர் பதிவுகள் போடுவதை நிறுத்தினாலே பதிவுலகில் பாதி சண்டைகள் குறைந்து விடும் அல்லது சண்டையே இருக்காது. இரு பதிவர்களுக்கு இடையில் பிரச்சனை என்றால் அவர்களே அதை சரி செய்து கொள்ளுவார்கள். அதை விட்டுவிட்டு பஞ்சாயத்து செய்கிறேன் என்று சொல்லி நடுவில் நுழைந்து பிரச்சனையை பெரிது பண்ணாதீர்கள்.

குழுவாக சேர்ந்து செயல்படுவதால் நன்மைகள் பல உண்டு, மறுக்கவில்லை. அதை நாம் சரியாகப் பயன்படுத்துவோம்.


அன்புடன் எல்கே

அக்டோபர் 03, 2010

முதல் முறையாக

என் பதிவுலக வரலாற்றிலே முதல் முறையாக ஒரு படத்தைப் பற்றி எழுதினேன் என்றால் அது எந்திரன்  தான்.உள்ளூர ஒரு பயம் இருந்து கொண்டுதான் இருந்தது. எங்கே அவர்கள் மெள்ள வசதியாக படம் தோற்று விடுமோ என்று ? அன்று புறக்கணிப்போம் என்று கூவியவர்களின் வாயை அடைப்பது போல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது ...

படத்தின் கதையை எல்லோரும் அக்கு வேறு ஆணி வேற பிரிச்சி மேஞ்சிட்டாங்க  . இதுல நான் இன்னும் தனியா என்ன சொல்ல இருக்கு ?? படத்தில் அவர்கள் குறை என்று சொல்வது அந்த பிரசவக் காட்சி ,கட்டிடம் தீப்பிடித்து எரியும் இடம் போன்றவை. தீப்பிடிக்கும் காட்சியில் அப்பட்டமாக கிராபிக்ஸ் என்று தெரிகிறது. அதை கொஞ்சம் சரி செய்து இருக்கலாம். சரி விடுங்க. எதாவது ஒரு குறை இருக்கட்டும்.

அடுத்து படத்தின் இரண்டாவது பகுதி கொஞ்சம் போர் அடிக்கிறது, குழந்தைகள் படம் போல உள்ளது என்று எனது நண்பர்கள் சிலர் முகப் புத்தகத்தில் சொல்லி இருந்தனர். இதே கிராபிக்ஸ் வைத்து படம் முழுதும் கிராபிக்ஸ் மட்டுமே இருக்கும் ஆங்கில படங்களை ஆகா ஓஹோ என்று புகழும் நீங்கள் தமிழில் அத்தகைய முயற்சிகளை ஏன் வரவேற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள் ???

 அதேப் போல் இந்தப் படத்தில் மறைந்து இருக்கும் ஒரு செய்தி "படைத்தல் கடவுளின்  வேலை. அதில் மனிதன் தலையிட்டால் விபரீதமே நிகழும் ". இதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.


எனக்குத் தெரிந்து படம் ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் தொய்வு அடைவதாகத் தெரியவில்லை. அதுவும் இரண்டாம் பகுதிதான் படத்தின் முக்கியப் பகுதி. சிட்டி வில்லனாக மாறி வரும் இடங்களில் பழைய தலைவரை காண முடிகிறது. க்ளைமாக்ஸ் சண்டை அதகளம் பண்ணி இருக்கிறார்கள்.  கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவேண்டிய படம் இது dot தலைவரின் படத்திற்கு சென்று சிறிது சோகத்துடன் திரும்பியது இதுவே முதல் முறை. காரணம்  இறுதிக் காட்சி..பார்க்காதவர்கள் சென்று பாருங்கள் புரியும்.

குடும்பத்துடன் நேற்று காசி தியேட்டரில் மதிய காட்சி பார்த்தேன். திவ்யா ஆரம்பம் முதல் இறுதி வரை மிக ரசித்துப் பார்த்தாள். காதல் அணுக்கள் பாட்டு மட்டும் பிடிக்கவில்லை, அப்பொழுது கொஞ்சம் கலாட்டா இங்கும் அங்கும் இடம் மாறி. மற்றப் படி ஆரம்பம் முதல் இறுதி வரை அவள் மிகவும் ரசித்துப் பார்த்தாள்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ரஜினி வர , உடனே திவ்யா "சூப்பர் ஸ்டார் " என ஒரு சத்தம் போட, எனது தங்கமணியின் அருகில் அமர்ந்த இருந்த கல்லூரி மாணவிகள் ஆச்சர்யத்துடன் திவ்யாவை பார்த்தனர்.

தலைவரின் அடுத்த தலைமுறை ரசிகர்கள் வந்துவிட்டனர்.


அன்புடன் எல்கே

அக்டோபர் 02, 2010

சொந்த மண் VII

  இது வரை சேலம் நகரின் சில பகுதிகளையும் அங்கு உள்ள கோவில்கள், கல்வி நிலையங்களையும் பார்த்தோம். நகரின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான தொழில்கள் மேற்கொள்ளப் படுகின்றன.


செவ்வாய்ப்பேட்டை பகுதி பொதுவாக வியாபரம் நடக்கும் பகுதி. இங்கு பெரிய அலுவலகமோ, நிறுவனமோ இருக்காது. எல்லாம் கடைகள்தான். பரம்பரை பரம்பரையாக நடத்தப் பட்டு வருபவை.இந்தப் பகுதியில்தான் எங்களது கடையும் உள்ளது. செவ்வாய்ப்பேட்டையில் மூன்று தலைமுறையாக சிறிய ஹோட்டல் வைத்துள்ளோம். எனது தாத்தாவின் மாமா, பிறகு எனது தாத்தா , இப்பொழுது எனது தந்தை. அதிகப் பட்சம் இன்னும் ஒரு வருடம் பிறகு அதை நிறுத்த முடிவெடுத்துள்ளோம்.

இதைப் போல் அம்மாப்பேட்டை,தில்லை நகர், குகை  போன்றப் பகுதிகள் கைத்தறி நெசவாளர்கள் நிறைந்தப் பகுதி. ஒரு காலத்தில் தில்லை நகருக்கு அதிகாலையில் சென்றால், வீதி முழுக்க கைத்தறி நெசவாளர்கள் அந்த நூற்களை காய வைத்துக் கொண்டும் அது சம்பந்தமான பிற வேலைகளில்  ஈடுபட்டு இருப்பர்.  விசைத் தறிகள் வந்தப் பிறகு இவர்களது வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப் பட்டுள்ளது. முன்பு கல்யாணத்திற்கு வேண்டிய வேட்டிகள், புடவைகள் இங்கு உள்ள நெசவாளர்களிடம் முன்கூட்டியே ஆர்டர் கொடுத்து செய்யப் படும். இப்பொழுதோ விவாஹாவும், சாமுத்ரிகாவும் இவர்களது வாழ்வை பாழ்படுத்திவிட்டன.

சேலத்தில், சௌராஷ்டிரா மக்கள் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களது   முக்கியத் தொழில் வெள்ளி மற்றும் பட்டு நூல். அதுமட்டும் இல்லாமல், கந்து வட்டிக்கு  காசு கொடுக்கும் தொழிலில் இருக்கின்றனர் இவர்கள்.

மற்றப் பகுதிகளில் பொதுவாக வேலைக்கு செல்பவர்களே அதிகம். அதனால் அதை பற்றி நாம் அதிகம் கவனிக்க வேண்டியது இல்லை.இனி வரும் பகுதிகளில், சேலத்தின் புகழ் பெற்ற சேலம் ஸ்டீல் பிளான்ட், ஏற்காடு பகுதிகளுக்கு செல்வோம்.


அன்புடன் எல்கே