ஆகஸ்ட் 22, 2010

நண்பர்களே செய்வீர்களா ?

இதை இந்தப் பதிவில் படித்தேன்.

பூஜா என்ற இளந்தளிரை ஒரு கொடூரன் கடத்தி வந்து பிச்சை எடுக்க வைத்திருக்கின்றான்.  நாம் பல பேருந்து நிலையங்களில் பார்த்திருப்போம். குழந்தைகள் பிச்சையெடுப்பதை , கையில் தட்டினை வைத்துகொண்டு அவர்கள் கெஞ்சும்போது விழும் தட்டில் தானாகவே காசும் கண்ணீரும்..

பூஜாவை வைத்து பிச்சை எடுக்கும்போது அவன் கேரளா போலீசிடம் சிக்கியுள்ளான்.

பூஜா தற்போது திருவனந்தப்புரத்தில்  உள்ள நிர்மலா சிசு பவனில் சேர்க்கப்பட்டுள்ளாள்
போலீசார் அந்த பிச்சைகாரன் மூலம் குழந்தையின் இருப்பிடத்தை
கண்டறியலாம் என அவனிடம் விசாரிக்கும்போது , குழந்தையின் துரதிர்ஷ்டம்
அந்த பிச்சைக் காரனுக்கு வாயும் பேச முடியாதாம் காதும் கேட்காதாம்....

அந்த குழந்தை மழலை மொழியில் சொன்ன விபரங்கள்.:

தந்தை பெயர் : ராஜு  , தாயின் பெயர் : முன்னிதேவி ,
பிறந்த இடம் நாகலுப்பி ,
தனக்கு ஒரு அக்காவும் தம்பியும் இருப்பதாக கூறியுள்ளாள்.
விசாரித்துப் பார்த்ததில் அதுபோன்ற ஒரு இடம் யாரும்
கேள்விப் பட்டதாகவே தெரியவில்லை...

யாருக்கேனும் இந்த குழந்தைப் பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ.அல்லது குழந்தையைத் தேடும் பெற்றோர் பற்றி தெரிந்திருந்தாலும் கேரளாவில் உள்ள நிர்மலா சிசு பவனுக்கு தெரிவிக்கலாம்.
  தொலைபேசி  எண்   0471 - 2307434
  இதைப் படிப்பவர்கள் தங்களால் முடிந்த வரை தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரியப் படுத்துங்கள்.

பிரபல பதிவர்கள் அனைவரும் இதனை ஒரு இடுகையாக  இடலாமே...

இதன் மூலம் நிறைய  பேரை இந்தச் செய்தி சென்றடையும் என்று ஓர் நம்பிக்கை..

இதைப் படிப்பவர்கள் யாரும் அலட்சியப் படுத்த வேண்டாம். எத்தனையோ தொடர் பதிவுகளைப் போடுகிறோம். ஒரு நல்ல காரியாத்துக்கு இதை செய்வோமே ?? இதனை forward  செய்ய எதுவும் நீங்கள் செலவழிக்க போவதில்லை.
உங்கள் நல்ல மனது மட்டுமே போதும்...

செய்வீர்களா நண்பர்களே.!!!!


அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 17, 2010

திவ்யாவின் பக்கம் IV

திவ்யா ஒரு சில புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டு இருக்கிறாள் .கடந்த வாரம், உறவினர் வீட்டிற்க்கு சென்றோம். அப்பொழுது அங்கு இருந்த சாமி படத்தை பார்த்த அவள், கீழே விழுந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக் கொண்டு "எல்லோரும் ஷேமமாய் இருக்கணும் " என்றாள். இந்த வார்த்தை நாங்கள் சொல்லி தந்தது இல்லை. ஊருக்கு சென்ற பொழுது என் அம்மாவிடம் கற்றாலோ   இல்லை என் மனைவியின் அம்மாவிடம் இருந்து கற்றாலோ தெரியவில்லை.

ஏற்க்கனவே திவ்யா மூன்றை விரும்புவதை பற்றி சொல்லி இருந்தேன். இப்பொழுது அது இன்னும் அதிகம் ஆகி விட்டது. தண்ணீர் கொடுத்தால், மூணு டம்ப்ளர் கொடு என்கிறாள். ஆனால் இரண்டு டம்ப்ளர் கொடுத்தல் அமைதி ஆகி விடுகிறாள். இது ஏனென்று புரியவில்லை. உங்கள் யாருக்காவது புரிந்தால் சொல்லுங்களேன் .

என் மனைவியிடம்  ராமாயணம் பயின்று வருகிறாள். அதில் வரும் நபர்களை சரியாக சொல்லும் அளவிற்கு கற்றுக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு இஷ்ட தெய்வம் ராமரும், ஆஞ்சநேயரும்தான். கொசுக் கொடித்தால் கூட "ராமா, கொசு கடிக்குது , சீக்கிரம் வா " என்று சொல்கிறாள்.

அதேபோல், கிருஷ்ணரை நண்பனாகத்தான் நினைக்கிறாள். உனக்கு குறும்பு பண்ண யார் சொல்லி தந்தார்கள் என்று கேட்டால் "கிச்சா" சொல்லித் தந்தான். இதுதான் அவளின் பதில் . அதே போல், கிருஷ்ணர் படம் அருகில் சென்று, சீக்கிரம் போய் சாப்பிடு, இல்லாட்டி அம்மா திட்டுவா , இது என் மனைவி அவளை திட்டிய பொழுது நடந்தது.

வர வர வீட்டில் சமாளிக்க இயலவில்லை. அவ்வளவு குறும்புகள். என் மனைவி , சைக்கிள் ஓட்டலாம் வா என்றாள், வேண்டாம், அப்பா வந்து கத்து தருவா என்று பதில் வருகிறது. நான் மாலையில் வீட்டிற்கு சென்றால் என்ன நடந்து இருக்கும் என்று சொல்ல வேண்டுமா ???

மீண்டும் திவ்யாவின் பக்கத்தில் விரைவில் சந்திப்போம்

அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 13, 2010

சொந்த மண் II

இதன் முதல் பகுதியை  படிக்க சொந்த மண் I


முன் குறிப்பு :

என் கவிதைகளுக்கென புதிய வலைப்பூ துவங்கி உள்ளேன். இனி எனது கவிதைகளைப் படிக்க நீங்கள் வரவேண்டியது  கவிசோலைக்கு.

முதலில் சேலத்தை பற்றி  பல வருடங்களாக இருந்து வரும் விஷயத்தை பார்ப்போம். சேலம் என்றாலே பலருக்கும் மாம்பழம்தான் நினைவுக்கு வரும். சேலம் மாம்பழம் என்றே சொல்லுவார்கள் . ஆனால், அது தவறு. கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலத்துடன் இணைந்து இருந்த பொழுது இந்த புகழ் சேலத்துக்கு கிடைத்தது. பின் அவை பிரிந்த பின்னும் இது பிரியவில்லை.

எனவே இனி சேலத்துகாரர்களை மாம்பழம் கேட்க வேண்டாம் ..  சேலத்தை பற்றி தொடருவோம் ..
 

தங்கும் வசதி :

சேலம் சென்று இறங்கியவுடன் முதலில் நாம் இளைப்பாற இடம் வேண்டும் . ரயில்வே ஸ்டேசன் அருகில் நல்ல ஹோட்டல் இல்லை. அங்கிருந்து  ஐந்து ரோடு , புதிய பேருந்து நிலையம் வந்து விட்டால் நல்ல தரமான பல ஹோட்டல்கள் உள்ளன. உங்கள் வசதி விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துக் கொள்ளலாம்.  நல்ல தரமான உணவகங்கள் உள்ளதால் சாப்பாட்டை பற்றிய கவலை வேண்டாம்.

நகரத்திற்குள் எங்கு செல்வதாய் இருந்தாலும், நகரப் பேருந்துகளை உபயோகிப்பது நல்லது. இங்கு ஆட்டோ கட்டணம் மிக அதிகம். நகரத்திற்குள் எந்தப் பகுதிக்கு செல்லவும் பேருந்துகள் எந்த நேரத்திலும் எளிதில் கிடைக்கும்.


ராஜகணபதி கோவில்

சேலத்தில் முதலில் பார்க்க வேண்டிய கோவில் , பிள்ளையாரின் கோவில். சேலம் டவுன் பகுதியில், மார்க்கெட் அருகே உள்ளது. பிள்ளையார் சந்நிதி மட்டும்தான் உள்ளது. சேலத்தில் பிரபலமான கோவில்களில் இதுவும் ஒன்று. பண்டிகை தினங்களில் அதிகாலையிலேயே கோவிலில் கூட்டம் கூடி விடும். முக்கிய தினங்களில் சந்தன காப்பு அலங்காரம் செய்வர்.

டவுன் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட நடையில் உள்ளது இந்தக் கோவில். கடை வீதியும், மார்க்கெட்டும் சந்திக்கும் இடத்தில் இது அமைந்துள்ளது. கண்டிப்பாக பார்க்க  வேண்டிய விநாயகர் இவர்.

கடை வீதி :

நகரப் பேருந்து நிலையத்தை மையமாக வைத்தே , சேலத்தின் முக்கிய கடை வீதிகள் அமைந்துள்ளன. துணிகள் வாங்க முதல் அக்ராஹாரம் என்று சொல்லப்படும் வீதிக்கு செல்லவேண்டும், நகை வாங்க வேண்டுமா , அப்படியே அந்த வீதிக்கு பின்புறம் அமைந்துள்ள சின்னக் கடை வீதி வந்தால் போதும். நகைகள் வாங்கி விடலாம். சேலம் வெள்ளி கொலுசு அகில இந்திய அளவில் புகழ் பெற்றது.

கடைவீதி அருகே காய்கறி மார்க்கெட்டும், மற்றொரு புறம் பூ மற்றும் பழ மார்க்கெட்டும் அமைந்துள்ளதால், நாள் முழுவதும் எப்பொழுதும் இந்தப் பகுதியில் மக்கள் நெரிசல் அதிகமாக இருக்கும் .

கோட்டை மாரியம்மன்

நகரப் பேருந்து நிலையத்தை ஒட்டியே அமைந்துள்ள கோவில். மிக சக்தி வாய்ந்த அம்மன் என்று மக்களால் நம்பப்படும் இந்த அம்மன், சுற்றி இருக்கும் எட்டு ஊர் மாரியம்மன் கோவில்களின் தலைமை பீடம்(இதை பற்றி பின்னால் பார்ப்போம் )  போன்றது. முகம் மட்டும் பார்க்கும் அளவில், மிகத் தாழ்வாக இருக்கும் கருவறை. ஆடி மாதப் பண்டிகை சமயம், பல மணி நேரம் வரிசையில் நின்று வழிப் படவேண்டி இருக்கும். இப்பொழுது ஆடி பண்டிகை நடந்து வருகிறது. இன்று சேலத்தில் தேர்த் திருவிழா.  மிக கோலாகலமாக இருக்கும். ஆடி மாதப்  பண்டிகையும் , தேர்த் திருவிழாவும் சேலம் மக்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப் படும்  ஒன்றாகும்.

 சேலம் நகர வளர்ச்சி பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்ததோ என்று எண்ணும் அளவுக்கு பேருந்து நிலையத்தை ஒட்டியப் பகுதிகளின் வளர்ச்சி உள்ளது .  இருபது வருடத்திற்கு முன்பு வரை வெளியூர் செல்லும் பேருந்துகளும் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்தே கிளம்பின. அப்பொழுது நகரம் அதை சுற்றியே வளர்ந்தது,.

இப்பொழுது நகரத்தின் வளர்ச்சி புதியப் பேருந்து நிலையம் பகுதியை சுற்றியே அமைந்துள்ளது.

புதியப் பேருந்து நிலையம் எவ்வாறு திறக்கப் பட்டது என்பதே ஒரு கதை என்று என் தந்தை கூறுவார்கள். பேருந்து நிலையம் கட்டி முடிக்கப் பட்டு, திறந்து வைக்கப் பட்ட பின்னும், எந்த தனியார் பேருந்து நிறுவனத்தினரும் இங்கிருந்து பேருந்துகளை இயக்கவில்லை, கோர்ட்டுக்கு சென்று இடைக்கால தடை வாங்கிய வண்ணம் இருந்தனர். இந்நிலையில், எதோ ஒரு பண்டிகை சமயம், மூன்று நான்கு நாட்கள் கோர்ட் விடுமுறை. அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர், இரவோடு இரவாக, அரசுப் பேருந்துகளை, புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றினார். புதிய பேருந்து நிலையத்திற்கு வராத தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்று கூறி உள்ளார். வேறு வழி இல்லாத தனியார் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கே மாறின என்று கூறுவார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியாது . இது செவி வழி செய்தியே .டிஸ்கி : நான் சேலத்திற்கு சென்று ஒரு வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. எனவே சில விஷயங்கள் மாறி இருக்கலாம். அவ்வாறு மாறி இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 11, 2010

கடவுளும் நானும்


எச்சரிக்கை : இந்தப் பதிவு கடவுளை பற்றிய எனது எண்ணங்கள். கடவுள் இருக்கிறாரா என்ற தேடலோ இல்லை அதை நிரூபிக்கும் முயற்சியோ அல்ல. ஏனென்றால் . இருக்கின்ற ஒன்றை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகவரிகள் இல்லாதோர் இங்கு பின்னூட்டம் இட இயலாது. விவாதம் செய்ய விருப்பம் இருந்தால் முகவரியுடன் வரவும் .

 பதிவுலத்தில் எனக்குக் கிடைத்த அக்கா அப்பாவி தங்கமணி இந்த பதிவை எழுத அழைத்தார். அவருக்கு ஒரு நன்றி .

முதலில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம். எனது அக்கா சென்னைக்கு வந்து நங்கநல்லூரில் வசித்த சமயம். கல்லூரி விடுமுறையில் இங்கு வந்த நான், எனது இஷ்ட தெய்வமான ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றேன். மாலை நேரம். வழக்கம் போல் கோவிலில் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. வலம்வந்து ஆஞ்சநேயரை வணங்கியப்பின் , அங்கு இருந்த ஆஞ்சநேயர் படத்திற்கு முன் தியானம் செய்ய அமர்ந்தேன். கண்மூடி அமர்ந்த சிறிது நேரத்தில் , யாரோ இராமாயணத்தில் வரும் முக்கிய பகுதியான சுந்தர காண்டத்தை சொல்வது போல் உணர்ந்தேன். மிகத் தெளிவாக , எந்த விதமான ஓசைகளும் இல்லாமல் , அந்த சுந்தரகாண்டம் மட்டுமே காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த சமயம் , கோவிலில் எந்த விதப் பாராயணமும் நடை பெறவில்லை, அருகிலும் யாரும் இல்லை. நான் தியானம் செய்த பொழுது ஒலித்த குரல் யாருடையது ?? ஏன் அந்த சமயம் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும். இதற்குப் பிறகு இன்று வரை இத்தகைய அனுபவம் எனக்கு நேரவில்லை. மீண்டும் ஒரு நாள் நேரலாம். அதற்கு அந்த ஆண்டவன் அருள் வேண்டும்.

எப்பொழுது கடவுளை வணங்க ஆரம்பித்தேன் ?? சிறு வயதில் எனது தாயார்தான் எனக்கு முதலில் சிறு ஸ்லோகங்களை சொல்லித் தந்தார். பிறகு, தினமும் எனது தந்தை வீட்டில் செய்யும் பூஜைகள் மூலம் இறை வழிபாடு பயின்றேன் . எனது தாய் வழி தாத்தா இந்த பூஜை விஷயங்களில் மிகக் கண்டிப்பானவர். விடுமுறைகளில் அவரிடம் பயின்றது அதிகம் . எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், ராமரை வணங்கி விட்டு செய்வது எனது பாட்டியின் பழக்கம்(அம்மாவின் அம்மா ). மேலும், எனது பெரிய தாத்தா வீட்டில் வருடா வருடம் நடைபெறும் சீதாக் கல்யாண உற்சவம் மற்றும் ராதாக் கல்யாண உற்சவங்கள் என்னை ஈர்த்தன . அப்பொழுது அவை ஒரு விழா என்ற அளவிலே எனைக் கவர்ந்தாலும் , போகப் போக அவற்றின் உண்மையான தத்துவம் பிடிபட ஆரம்பித்தது. இதற்கு எனது மாமா உதவினார். இப்படி ஒரு சூழலில் இருந்ததால், எனக்கு இயல்பாகவே கடவுளிடம் பிடிப்பு அதிகம்.

எல்லோருக்கும் பிள்ளையாரை பிடிக்கும். எனக்கும் அவரை பிடிக்கும். எனது இஷ்ட தெய்வம் என்று கேட்டால் , ஆஞ்சநேயர்தான். பள்ளி காலத்தில் இருந்தே இராமதாசனிடம் எனக்கு பக்தி அதிகம். நான் வளர வளர, அதுவும் வளர்ந்து , அவர் ஒரு நண்பன் போல் இன்று இருக்கிறார். மிகக் குழப்பமான சமயங்களில் அவரிடம் ஒரு நண்பனிடம் புலம்புவது போல் புலம்புவேன். பிறகு மனது ஒரு தெளிவு பெறும். இன்று வரை கடவுளிடம், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்டதில்லை.
படைத்தவனுக்குத் தெரியாதா எதை எப்பொழுது தர வேண்டும் என்று ? .


வேலைகிடைக்கும் முன் வீட்டில் இருந்த தருணம், இறை வழிபாட்டின் வேறு ஒரு அங்கத்தையும் கற்றேன். கோவிலில் இறைவனை பூஜை  செய்ய வாய்ப்பு கிடைத்த தருணம் அது. எனத்து தந்தை தர்மகர்த்தாவாக இருந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்த சில நாட்களில், அப்பொழுது இருந்த அர்ச்சகர்கள் சில காரணங்களால் பூஜை செய்ய இயலாத நிலை. எனவே அந்த காலத்தில் கோவிலில் பூஜை செய்தேன். இது எனக்கு கிடைத்த அரும் வாய்ப்பு என்றுதான் சொல்வேன்.  அதன் மூலம் ஒரு சில நல்ல உணர்வு பூர்வமான அனுபவங்கள் கிடைத்தன.

இப்பொழுது நேரம் கிடைத்தால் கோவிலுக்கு செல்கிறேன். இல்லையேல் வாயிலில் நின்று வணங்கி விட்டு சென்றுவிடுவேன். மற்றபடி தினமும் காலையில் செய்யும் பூஜை மட்டும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஏற்கனவே பல தொடர் பதிவுகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. இதை தொடர நான் யாரையும் அழைக்கவில்லை. யாருக்கு விருப்பம் இருந்தாலும் தொடரலாம்.

பின்குறிப்பு : தம்பி சௌந்தர் சில விஷயங்களை அவரது பதிவில் கேட்டிருந்தார். அதை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒன்றுகொன்று சங்கிலியாக செல்லும் என்று தோணியதால் அதை இங்கு எழுதவில்லை. சந்தர்ப்பமும், இறைவன் அருளும் இருந்தால் பிறிதொரு தருணத்தில் அதை பகிர்வேன்.


என்னடா இவன் சிறிது காலம் என்று சொல்லி விட்டு ஒரு வாரத்திற்குள் வந்து விட்டானே என்று நினைக்கிறீர்களா ? தேடிய வீடு கிடைத்து விட்டது. இன்னும் இரு வாரத்தில் அங்கு குடி போவேன் . அந்த சமயம் மீண்டும் ஒரு விடுமுறை உண்டு.


அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 06, 2010

விடுப்பு

தொடர்ந்து ஆறு மாதமாக எழுதி கொண்டு இருக்கிறேன். இப்பொழுது எனக்கு ஒரு விடுப்பு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றி உள்ளது.. வீடு மாற்றும் வேலை வேறு இருப்பதால் அதனுடன் இணைந்து சில காலம்  இந்தப் பக்கம் வர வேண்டாம் என்று முடிவெடுத்து உள்ளேன். எனவே எனது அடுத்தப் பதிவு இப்போதைக்கு வராது ..

அதுக்காக என்னை மறந்து விடாதீர்கள்..


இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..


அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 05, 2010

சுழற்சி
இயற்கையை மறந்தோம்
விஞ்ஞானம் வளர்த்தோம்

கண்ணீர்விட்டாள் அன்னை
காணவில்லை நாம் ..
கதறினாள் - செவி மடுக்கவில்லை..

புயலாய் மாறினாள் - நடுங்கினோம்
எரிமலையாய் வெடித்தாள்- புலம்புகிறோம்
நாம் ..
அனலாய் கொதிக்கிறாள் - செய்வதறியாமல்
நிற்கிறோம்...


 பி.கு : விலைவாசியை பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை கழுகில் வெளிவந்துள்ளது. அதைப் படிக்கஇங்கே சொடுக்கவும் .


அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 04, 2010

இவர்களும் பிரபலங்களே V

இந்த பகுதியில் பதிவுகள் மட்டும் அல்லாமல் வேறு ஒன்றையும் அறிமுகப் படுத்த உள்ளேன். அதை பற்றி பதிவின் இறுதியில் பார்ப்போம். முதலில் சில புதிய பதிவுகளும், பதிவர்களும்..கௌசல்யா

 ஏற்கனவே இந்தப் பகுதியில் அறிமுகமானவர்தான். இந்த முறை இவரது பல்கலை பக்கமான இவரது வாசல் தளத்திற்கு. இவரது வித்யாசமான, நல்ல அருமையான கவிதைகளை படிக்க நீங்கள் செல்ல வேண்டியது இவரது வாசலுக்கு


சுடர்விழி 

 வெகு நாட்களாய் பதிவுகள் எழுதி வருகிறார். இருந்தும் குறைவான பதிவுகளே இருக்கின்றன. என்னக் காரணமோ தெரியவில்லை, படிப்பவர்களும் குறைவாக உள்ளனர், இவரது பதிவிற்கு செல்ல எண்ணச் சிறகுகள்


கோவை குமரன்

 சிங்கை வாசியான இவர், குற்றாலம் என்றப் பெயரில் கவிதைகளை, குற்றால அருவியாய் பொழிகிறார். இவரது கவிதை சாரலில் நனைய செல்ல வேண்டிய இடம் குற்றாலம்

சௌம்யா கார்த்திக் 


இப்படி மத்தவங்களை அறிமுகப் படுத்தி விட்டு, புதிதாய் எழுத வந்திருக்கும் எனது மனைவியை அறிமுகப் படுத்தாவிட்டால் அப்புறம் என்ன ஆகும்னு நான் சொல்ல வேண்டாம் . அவரது தளத்திற்கான முகவரி திவ்யாம்மா.

சரி இப்ப முன்னாடி சொன்ன புது விஷயம்., கோவையில் கல்லூரி மாணவர்கள் இணைந்து "மாற்றங்களுக்கான விதை " என்ற அமைப்பை உருவாகியுள்ளனர். மக்களிடையே விழிப்புணர்ச்சியை பரப்புவது இதன் நோக்கம். இதை பற்றி மேலதிக விவரங்கள் தெரிந்துடன் தனி பதிவாக போடுகிறேன்.


அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 03, 2010

சொந்த மண் I

இன்றைய இயந்திர உலகில், பலரும் தாங்கள் பிறந்த மண்ணை விட்டு வேறு ஒரு இடத்தில்தான் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருக்கிறோம். அவசரமான இந்த உலகில் , பிறந்த ஊருக்கு செல்லவும் நேரம் இன்றி இருப்பவர்கள் பலர். இதில் திருமணமான பெண்களில் நிலை இன்னும் கடினம். பிறந்தது ஒரு ஊர், கணவனின் சொந்த ஊர் வேறு, இப்பொழுது இருப்பது வேறு ஒரு ஊர். விடுமுறை வந்தால் எங்கு செல்வது என்பதே பாதி வீடுகளில் சண்டைக்கு காரணமாக அமைகிறது.

பிறந்த ஊர் எவ்வளவுதான் சிறிய ஊராக  இருந்தாலும், சொந்த ஊரின் பெருமையை பேசாத மனிதர்கள் ரொம்பக் குறைவு. நான் பிறந்து வளர்ந்த ஊராகிய சேலத்தை பற்றிய இந்த சொந்த மண் தொடரில் பேச இருக்கிறேன்.என்னடா இவன் இப்ப திடீர்னு சொந்த மண்ணை பற்றி எழுதறான்னு யோசிக்கறவங்களுக்கு , கடந்த ஞாயிறு நகர் வலம் போயிருந்தப்ப (வீடு தேட அலைஞ்சப்ப ) ஒரு இரண்டு அல்லது மூன்று மாரியம்மன் கோவில்களையும், விழாக்களையும் பார்க்க நேர்ந்தது .

ஆடி மாதம், மாரியம்மன் பண்டிகைக்கு பெயர் பெற்றது  சேலம். முதலில் பண்டிகையை பற்றி மட்டும்தான் எழுத நினச்சேன். அப்புறம்தான் , ஏன் சேலத்தை பற்றி விரிவா எழுதக் கூடாது நு யோசிச்சேன். அதுதான் இந்த தொடர் .( நீ எழுது ராசா .நாங்கதான கக்ஷ்டப் படப் போறது ---யாருப்பா அது??  )

.

அமைவிடம் :

தமிழகத்தின் வடக்கு மட்டும் கிழக்குப் பகுதிகளில் இருந்து கொங்கு மண்டலத்தில் நுழையும் நுழைவாயிலாக அமைந்துள்ளது சேலம்.

மலைகளால் சூழப்பட்ட இடம் என்ற பொருள் வரும் "சைலம் " என்பதே இதன் பெயராக இருந்து பின்பு "சேலம்" என்று மருவிவிட்டதாக கூறுவர். ஆம், சுற்றிலும், நகரமலை, சேர்வராயன் மலை, ஜருகு மலை ,கஞ்ச மலை போன்றவை இருக்க நடுவினில் சேலம் இருக்கிறது.

ஒரு காலத்தில் தமிழகத்தின் மிகப் பெரிய மாவட்டமாகவும், பல பெருமைகளுக்கு சொந்தமாகவும் இருந்த சேலம் இப்பொழுது அளவில் சுருங்கி விட்டது. இன்றைய கிருஷ்ணகிரி, தர்மபுரி,நாமக்கல் மாவட்டங்கள் சேலத்தை சேர்ந்தவையே. பின், நிறைவாக வசதிக்காகவும், ஓட்டுக்காகவும் அவை சேலத்தில் இருந்து பிரிக்கப் பட்டன


சென்னையில் இருந்து சாலை அரசுப் பேருந்தில் வழியே 7 அல்லது 8 மணி  நேரம்  ஆகும் சேலம் சென்றடைய. தனியார் பேருந்தில் ஆறு மணி நேரத்தில் சென்றடையலாம். சென்னையில் இருந்து சேலம் செல்ல மிக சுலபமான வழி , சென்னை பெங்களூரு பை பாஸ் சாலையில் வேலூர் வரை சென்று அங்கிருந்து ஊத்தங்கரை வழியாக செல்வதே.

ட்ரெயினில் செல்வது என்றால், சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் சிறந்தது. இரவு ஏறினால், அதிகாலை சேலம் சென்றடைய முடியும்.


இப்பொழுது வான்வழியாக செல்வது இல்லை. விமான நிலையம் இருந்தாலும், வர்த்தக ரீதியான விமானப் போக்குவரத்து இன்னும் இல்லை. கூடிய விரைவில் அதுவும் வரும் என்று நம்பிக்கொண்டு  இருக்கிறோம் .

நீங்கள் எத்தனை மணிக்கு சென்று இறங்கினாலும் (ட்ரெயின் அல்லது பேருந்து ) , நகரத்தின் எந்தப் பகுதிக்கும் நகரப் பேருந்துகள் மூலம் செல்ல இயலும். நாள் முழுவதும் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கும். அரசு பேருந்துகள் மட்டும் அல்லாமல், தனியார் பேருந்துகளும் இருப்பதால், நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்ல முடியும் .

சேலம் போக வழிகளை பார்த்தோம், அடுத்த பகுதியில் சேலம் நகரை கொஞ்சம் சுத்தி பார்ப்போம்.

அன்புடன் எல்கே

ஆகஸ்ட் 02, 2010

பிரிவு


நேரங்கள் நீள்கின்றன..
ஒரு நொடியும்
பல மணி நேரமாய் ..

உலகமே இருண்ட
தோற்றம்..
யாரும் இல்லா
உணர்வு ..

கண நேர பிரிவே
கொல்லும் எனில்
இது ....?

யாருமற்ற நீள் 
வெளியில் என் 
பயணம் இனி...
உன் நினைவுகள் 
உடன்வர...  


அன்புடன் எல்கே