பிப்ரவரி 24, 2010

மேடை நாடகம்

நாடகம் என்றாலே மெகா தொடர்கள் மட்டுமே தற்போதைய தலைமுறைக்கு நினைவு வரும். ஆனால் உண்மையில் நாடகம் என்றால் மேடை நாடகமே . அதுதான் சினிமாவுக்கு முன்னோடி . மேடை நாடகத்தின் பரிணாம வளர்ச்சியே சினிமா .

சினிமாவில் நடிப்பதை விட நாடகத்தில் நடிப்பது மிக கடினம். இது கிரிக்கெட் போட்டி மாதிரி லைவ் டெலிகாஸ்ட் , பதிவு செய்யப்பட்டு பின்பு ஒளிபரப்ப படுபவை அல்ல. சினிமா உலகில் கொடிகட்டி பரந்த பலரும் மேடை நாடகத்தில் பட்டை தீட்டப்பட்டவர்களே. பல உதாரணங்கள் உள்ளன, சிவாஜி கணேசன்,கே பாலசந்தர் , YG மகேந்திரன் இன்னும் பலர் உள்ளனர் . ஆனால் இன்று மேடை நாடகம் என்றல் என்ன என்றே தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அந்த கலையும் மெதுவாக அழிந்து கொண்டு வருகிறது என்றே சொல்ல வேண்டும். இருந்தாலும், இந்த மேடை நாடக கலை முற்றிலும் அழியாமல் இருக்க காரணம் ஒரு சிலர் இன்றளவும் நாடகங்களை தொடர்ந்து நடத்தி கொண்டு இருப்பதே ..

'ரயில் பிரியா' கடந்த 16 வருடங்களாக தொடர்ந்து நாடகங்களை நடத்தி கொண்டு வருகிறது, 1994 ஆம் வருடம் இதை வெங்கட் (ரயில் வெங்கட்) என்பவர் தொடங்கினார். இதுநாள் வரை கிட்டத்தட்ட 1000 மேடைகளை கண்டிருக்கிறது . இப்பொழுது இந்த குழு நடத்தும் நாட்களுக்கு கதை வசனம் எழுதுவது என்னுடய நண்பர் திரு அனந்த் அவர்கள் . இவர் 1996இல் இருந்து இதை செய்து வருகிறார்.

இதில் நான் முக்கிமாக குறிப்பிட விரும்புவது , நாடகம் இவர்களோட வருமானம் அல்ல. இதை இவர்கள் மேடை நாடகத்தின் மீதுள்ள பற்றினால் தொடர்ந்து நடத்தி கொண்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் பல அலுவலகங்களில் வேலை செய்பவர்களே.

திரு அனந்த் அவர்களுடய நாடகங்களில் நகைசுவையே பிரதானமாக இருக்கும். அதற்காக கதைக்கு ஒட்டாத நகைச்சுவை அல்ல. கதையை தழுவி செல்லும் மிக அழகான ஒன்றாக இருக்கும். சமீபத்தில் இவர்களுடைய 16 ஆம்
ஆண்டு விழாவுக்கு வருகை தந்த நாடக உலக பிதாமகர் என்று போற்றப்படும் பலச்சனரின் பாராட்டே இதற்கு சான்று.

16 ஆம் ஆண்டு விழா வெறும் விழா மட்டும் அல்ல ஒரு சாதனை களமும் கூட. தொடர்ந்து 27 மணி நேரம் நாடகங்கள் அரங்கேறின. எல்லாவற்றிலும் அதே நடிகர் நடிகைகளே நடித்தனர் என்பதே சிறப்பு. அப்பொழுது அந்த விழாவுக்கு வந்த பொழுதான் KB அவர்கள் அனந்த் அவர்களின் நடிப்பு மற்றும் கதை வசனத்தை பாராட்டி உள்ளார்.

இவர்கள் மட்டும் அல்ல , இவர்களை போன்று இன்னும் சிலரும் கலை அழிந்து விட கூடாது என்று தொடரந்து பாடுபட்டு கொண்டு இருக்கின்றனர். நம்மால் ஆனா உதவி இவர்களின் நாடகங்களுக்கு சென்று அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதே .

பிப்ரவரி 12, 2010

கல்லூரி நினைவுகள்

நமது இளமை பருவத்து நினைவுகளை மீண்டும் நினைத்து பார்ப்பதில் என்றும் ஒரு ஆனந்தம் ...நண்பர்களிடம் போட்ட சண்டைகள், அவர்களுடன் நாம் இருந்த அந்த தருணங்கள், கல்லூரியில் நாம் செய்த சிற்சில கலாட்டக்கள் .. இதை இங்கே பகிர்ந்து கொள்ள அழைத்த அமைதிசாரலுக்கு நன்றி...

நான் +2 படிக்கும் போதே முடிவும் பண்ணிட்டேன் பொறி இயல் படிப்பது இல்லை என்று .. அதுக்கப்புறம் +2 முடிச்சு ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் வந்துச்சு . ஒரு வழியா திருசெங்கோட்ல இருக்கற செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரில சேர்ந்தாச்சு .. தினமும் 100 கிலோ மீட்டர் பேருந்து பயணம். விடுதில சேர்க்க வேண்டாம்னு என்னோட உடன்பிறப்பு பண்ண சிபாரிசினால தினமும் பயணம் ...ஒரு கடுப்போடதான் இதுக்கு சம்மதிச்சேன் . ஆனால் அதுவே ஒரு சுகமாக மாறும்னு நினைக்க வில்லை ( உடனே பஸ்சில் ஒரு பொண்ணை பார்த்து டெய்லி காதல்னு முடிவு கட்டினா நான் பொறுப்பு இல்லை :D )

முதல் நாள் கல்லூரி போக சேலம் பஸ் ஸ்டாண்ட்ல பஸ் ஏற போனா, அந்த நேரத்துக்கு ஒரு தனியார் பேருந்துதான் . வேற வழி இல்லாம அதில ஏறினா என்னோட சீனியர்ஸ் எல்லாரும் உள்ளார இருக்காங்க.. அப்புறம்தான் விஷயம் தெரிஞ்சது. அந்த பேருந்து எங்க கல்லோரியோட அதிகாரபூர்வமற்ற கல்லூரி பேருந்துன்னு. மற்ற பயணிகளைவிட எங்களுக்கு கட்டணம் கம்மி.(அதுக்கே பாதி நேரம் டிக்கெட் எடுக்க மாட்டோம்) நான் பயந்தபடி பெருசா ராகிங்லாம் இல்லை. நான் கல்லூரியில் படித்த 3 வருடமும் எனக்கு என்னோட சீனியர்ஸ்தான் நெருங்கிய நண்பர்கள் ... வருடாவருடம் பெப்ரவரி 14 காதலர் தினம், ஆனால் எங்களுக்கோ அன்றுதான் பஸ் டே .அன்று தினமும் வரும் பிரயாணிகளுக்கு (regular customers ) டிக்கெட் இல்ல. (ஆனா பஸ் டே செலவுக்குன்னு ஒரு அமௌன்ட் வாங்கிடுவோம் :D) . ஓட்டுனர் , நடத்துனற்கு அன்று புது ஆடை மற்றும் ஒரு பரிசு உண்டு.( நாங்க பஸ்ல பண்ற அட்டகாசத்தை கண்டு கொள்ளாமல் இருக்க :D)

நான் படிச்சது இருபாலரும் பயிலும் கல்லூரியா இருந்தாலும் ஈசியா பொண்ணுங்ககிட்ட பேச முடியாது.. அப்படி ஒரு விதிமுறை அங்க.. (இப்ப எப்படின்னு தெரியாது).. வகுப்பறைல பேசலாம் அதுவும் தமிழ் இல்லை ஆங்கில வகுப்புனா முடியாது மற்றபடி கணிபொறி வகுப்புனா பிரச்சனை இல்லை..

மத்தபடி பிரதி பௌர்ணமி அன்று நடைபெறும் கவியரங்கம்தான் , கல்லூரில நம்ம சாகசத்தை கட்ட ஒரே வாய்ப்பு . அப்ப எழுதின கவிதைகள் இன்றும் பசுமையாக பல டைரிகளில் தூங்கி கொண்டு இருக்கிறது.. கல்லூரி காலத்தில் நாங்கள் செய்த சிலவற்றில் ஆலமர பஞ்சாயத்துகள் மறக்கமுடியாது. ஏற்கனவே சொன்ன மாதிரி நாம சீனியர்கூட சுத்திக்கிட்டு இருப்போம் . இதனாலயே நம்மள கண்ட பொண்ணுங்க எஸ்கேப் ஆய்டும் ..

கல்லூரியின் கடைசி நாள் என்னால மறக்க முடியாது . ஏன்னா , 6 மாசமா என்கிட்டே பேசாம இருந்த ஒரு நண்பன் அன்று பேசினான் ...

தொடர் பதிவு எழுத என்னை அழைத்த அமைதிசாரலுக்கு மீண்டும் ஒரு நன்றி

பிப்ரவரி 04, 2010

தமிழக கோவில்களின் நிலைமை

ஒரு சக பதிவர் (கீதா மேடம் ) அவருடைய பயணத்தில் பார்த்த கோவில்களின் நிலைமை பற்றி எழுதி இருந்தார். பல கோவில்களுக்கு நிறைய நிலங்கள் ,சொத்துகள் உண்டு. ஆனாலும் அவை மிக மோசமான நிலையில் இருக்கின்றன. என்ன காரணம்? எங்கே தவறு?

கோவில்களுக்கு சொத்து இருக்கிறது . அதில் கடைகள் இருக்கின்றன அல்லது விவசாயம் நடக்கிறது. அனால் அந்த வருமானம் கோவிலை சென்று அடைகிறதா? சென்று அடைந்தாலும் அதை கோவிலின் நலனுக்காக உபயோகபடுத்த முடிகிறதா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில்.

கோவிலின் மொத்த வருமானத்தில் இத்தனை சதவீதம் மட்டுமே சம்பளமாக தரப்படவேண்டும் என்று ஒரு சட்டம் இருக்கிறது . எத்தனை கோவில்களுக்கு சொத்துகளில் இருந்து அதிக வருமானம் வருகிறது? பெரிய கோவில்களின் சொத்துகளுக்கே வருமானம் வருவதில்லை . காரணம் மக்களின் அலட்சிய போக்கு . கோவில் இடம்தானே? அதற்கு எதுக்கு ஒழுங்காக வாடகை தர வேண்டும்? மிக பெரிய இடமாக இருக்கும் அதற்கு வாடகை மிக மிக சொற்பமாக தருவார்கள். அதை ஏற்றினாலும் அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு பெறுகிறார்கள். அரசாங்கமும் போதிய கவனம் செலுத்துவது இல்லை.

கோவிலை சீரமைக்கவும் கோவிலுக்கு என்று இருக்கும் பணத்தை எடுக்க இயலாது . அதற்கு என்று ஒரு குழு அமைத்து பொது மக்களிடம் வசூல் செய்துதான்செய்ய வேண்டும்,. கோவில் பணத்தில் இருந்து மிக மிக சிறிய தொகை மட்டுமே கிடைக்கும் . அதற்கும் பல இடங்களில் பெட்டி தரப்படவேண்டும்.

சிவன் சொத்து குல நாசம் என்று சொல்வார்கள். அதை மக்கள் உணர வேண்டும். நாம் சொந்தமாக ஒரு கட்டிடம் கட்டி அதை வாடகைக்கு விட்டால் என்ன வாடகை கேப்போமோ அதை தர முன்வரவேண்டும். புதிய கோவில்கள் கட்டுவதை விட மோசமான நிலையில் இருக்கும் பழைய புராதன கோவில்களை சீரமைக்க முயற்சி எடுக்க வேண்டும்.

எனது தந்தை கோவில் தர்மகர்த்தாவாக இருப்பதினால் ஒரு கோவிலை நிர்வகிப்பதும் அதை சீரமைத்து கட்டுவதும் எவ்வளவு கடினம் என்று நேரில் பார்த்து இருக்கிறேன், மேலும் தாம்பரம் அருகில் உள்ள மணிமங்கலத்தில் உள்ள ஒரு சிவன் கோவில் சீரமைப்பிலும் மேற்கூறிய சிரமங்களை அனுபவித்தோம் .

அரசாங்கம் கோவில் சீரமைப்பு தொடர்பான விதிகளை மாற்றி அமைக்க வேண்டும். மக்களும் கோவில் தொடர்பான விசயங்களில் உதவ வேண்டும்